Tnpsc

தேசியச் சின்னங்கள் Notes 6th Social Science

6th Social Science Lesson 13 Notes in Tamil

13] தேசியச் சின்னங்கள்

நுழையும் முன்:

இப்பாடம் இந்தியாவின் இயற்கை தேசியச் சின்னங்கள் மற்றும் பிற தேசியச் சின்னங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. தேசிய விழாக்களை விவரிக்கிறது.

ஒரு காட்டின் மையஅச்சு புலிதான் என்றாலும், எண்ணற்ற பறவைகள், பூச்சிகள், ஊர்வன, நீர் – நிலம் இரண்டிலும் வாழும் இருவாழ்விகள் எனப் பலவும் சேர்ந்ததுதான் ஒரு காடு. புலியைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் காட்டில் தென்படும் உயிரினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் பார்க்கலாம்.

தாமரையில் பல வகைகள் உண்டு. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள தாமரையை செந்தாமரை என்கிறோம். தனித்தன்மை மிகுந்த வடிவமைப்பைக் கொண்டது தாமரை மலர்.

மழை வந்தால் மயில் தோகை விரித்து ஆடும் என்பது உண்மைதான். மயில் தோகை விரித்து ஆடுவதைக் கண்ட குறுநில மன்னன் ஒருவர் மயில் குளிருக்கு நடுங்குகிறதோ எனக் கருதி தன் போர்வையைக் கொடையாக அளித்தார். இவர் பெருமை வாய்ந்த சங்ககால தமிழகத்தைச் சேர்ந்தவரும், கடையெழு வள்ளல்களுள் மதிப்பிற்குரிய ஒருவருமான பேகன் என்னும் குறுநில மன்னன் ஆவார். மயில் நம் தேசியப் பறவை. நும் பாரம்பரியத்திலும் கலைகளிலும் மயிலுக்கு நீண்ட காலமாக இடம் இருந்திருக்கு. அழகும் கம்பீரமும் நிறைந்த அந்தப் பறவை நாடு முழுவதும் காணப்படுவதே, அது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம்.

நம் நாட்டில் ஆற்று ஓங்கில்களும் வாழ்கின்றன. தொலைவிலிருந்து பார்க்கும்போது, நீருக்கு வெளியே நீண்டிருக்கும் அதன் நீண்ட வாயும் கரியால் முதலையின் வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால், இரண்டும் வேறுவேறு. வெளவால்களைப் போலவே இந்த ஓங்கில்களும் மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் பார்வைத்திறன் குறைவு.

கங்கை நதிப்புரத்து கோதுமைப்பண்டம். பிரம்மபுத்திரா 3,848 கி.மீ நீளமுடையது என்றாலும் அது இந்தியாவில் பாயும் தொலைவு குறைவுதான்.

இமாம்பசந்த் – முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள்.

முதல் விஷயம், காட்டில் எந்த உயிரினத்துக்கும் நாம் தொந்தரவு கொடுக்கக் கூடாது. காடு உயிரினங்களின் வீடு. அதுக்கப்புறம், நம்மை பாதுகாப்பா வைச்சுக்கிட்டு உயிரினங்களை ரசிக்கலாம். அவசர காலத்தில் அறிவுபூர்வமாகவும் சாதுர்யமாகவும் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கணும்னு தெரிஞ்சிருக்கணும். அதுக்காகத்தான் காட்டுக்குள் போகும்போது காடுகளிலேயே காலம்காலமா வாழ்ந்துவரும் பழங்குடி வழிகாட்டிகளைப் பயன்படுத்துகிறோம்.

கருநாகத்தின் கூடு:

உலகிலேயே கூடு கட்டி, அதில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை. அதேபோல ரொம்ப சாதாரணமா 18 அடி நீளம் வளரும். நஞ்சு கொண்ட பாம்புகளில் உலகிலேயே நீளமானது இது.

இயற்கை தேசிய சின்னங்கள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிற தேசியச் சின்னங்கள்:

தேசியக்கொடி:

மூவண்ணக்கொடி நமது தேசியக் கொடியாகும். மூன்று வண்ணங்களும் சம அளவில் கிடைமட்டமாக அமைந்துள்ளன. மேல் பகுதியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. கீழ்ப்பகுதியில் உள்ள பச்சை நிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது. இடையில் உள்ள வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. நடுவில் கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டுள்ளது.

தேசிய இலச்சினை:

சுhரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்பகுதியில் “சத்யமேவ ஜெயதே” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. “வாய்மையே வெல்லும்” என்பதே இதன் பொருளாகும். தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருத்தியிருக்குமாறு வட்டவடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இலச்சினையில் மூன்று சிங்க உருவங்களை மட்டுமே காண இயலும்.

அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது. இந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவு சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய கீதம்:

“ஜன கண மன…” நமது தேசிய கீதமாகும். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாடும்போது பின்பற்ற வேண்டியன:

  • இக்கீதத்தை சுமார் 52 வினாடிகளில் பாட/இசைக்க வேண்டும்.
  • பாடும்போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

தேசியப் பாடல் – வந்தே மாதரம்:

வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது. இதன் காரணமாக, தேசிய கீதத்துக்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத் தலைவருமான ராஜேந்திர பிரசாத் அறிவித்தார். இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.

தேசிய உறுதிமொழி:

“இந்தியா எனது தாய்நாடு…” எனத் தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.

தேசிய நுண்ணுயிரி:

நாம் அன்றாடம் சாப்பிடும் தயிர் பாலிலிருந்து உருவாகப் பயன்படுவது லாக்டோபேசில்லஸ் டெல்பரூக்கி எனும் நுண்ணுயிர். 2012-ம் ஆண்டில் இது தேசிய நுண்ணுயிராக அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பாக்டீரியா

வேதிவினை புரிந்து பாலில் இருக்கும் புரதத்தை மாற்றுவதால் தயிர் கிடைக்கிறது. தயிர் செரிமானத்துக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும், குளிர்ச்சி தருவதற்கும் அறியப்பட்டது.

இந்திய நாணயம் (INR) :

இந்தியாவின் அதிகார பூர்வ பணத்தின் பெயர் ரூபாய். 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு “ருபியா” என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது. ரூபாய்க்கான சின்னம் இந்தச் சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார்.

தேசிய நாட்காட்டி:

பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கி.பி.(பொ.ஆ) 78-ல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகல்-இரவு நாளான மார்ச் 22 அன்று அந்த ஆண்டு தொடங்குகிறது. லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும். சக ஆண்டு முறையையே நமது தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது. பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்திய மக்களிடையே நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்த்தெடுப்பதில் தேசிய சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தேசிய நாட்கள்:

சுதந்திர நாள்:

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய சுதந்திர நாள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற நாள் அது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு உதித்த நாளாகவும் கருதப்படுகிறது.

நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே” என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர் மறைந்த கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள். சுதந்திர நாள் இன்றைக்கும் நாடெங்கும் கோலாகலமாக அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைக்கு நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது முக்கிய நிகழ்வு ஆகும்.

குடியரசு நாள்:

1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளே, குடியரசு நாள். 1947-லேயே நாடு விடுதலை பெற்றுவிட்டாலும், அதற்குப் பிறகும் பிரிட்டன் அரசியே இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார். குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசு நாளில் அவரே செங்கோட்டையில் கொடியேற்றுவார்.

காந்தி ஜெயந்தி:

“தேசத் தந்தை” மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, தேசிய நாட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. காந்தியின் பிறந்த நாளைச், “சர்வதேச அகிம்சை நாள்” ஆக 2007-ல் அங்கீகரித்து ஐ.நா.சபை கொண்டாடி வருகிறது.

கலைச்சொற்கள்:

  • கரியால் முதலை – கங்கை முதலை.
  • ஆற்று ஓங்கில் – கங்கையில் வாழும் டால்பின்.
  • மீயொலி – கேளா ஒலி அலைகள்.

மீள்பார்வை:

  • புலி, யானை, டால்பின், மயில், கருநாகம், ஆலமரம், மாம்பழம், கங்கை, தாமரை ஆகியவை இயற்கை தேசியச் சின்னங்களாகும்.
  • இந்திய அரசியலமைப்புச் சபை 1947, ஜீலை 22இல் மூவண்ணக்கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது.
  • தேசியக்கொடி, தேசிய இலச்சினை, தேசிய கீதம், தேசியப்பாடல் போன்றவை பிற தேசியச் சின்னங்களாகும்.
  • விடுதலை நாள், குடியரசு நாள், காந்திஜெயந்தி போன்றவை முக்கிய தேசிய விழாக்களாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள்

மாநில விலங்கு வரையாடு
மாநிலப் பறவை மரகதப் புறா
மாநில மலர் செங்காந்தள் மலர்
மாநில மரம் பனை மரம்
  • இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்.
  • விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது.
  • இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
  • இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொடி காத்த குமரன்:

திருப்பூர்க் குமரன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னி மலையில் பிறந்தார். இளவயதிலிருந்தே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932இல் காந்தியடிகளைக் கைது செய்ததைக் கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றன. காந்தியை விடுதலை செய்யக்கோரி நடந்த போரட்டத்தில் திருப்பூர்க் குமரன் கலந்து கொண்டார். காவல் துறையினரின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு உயிர் துறந்தார். போராட்டக்களத்தில் உயிர் நீத்த போதும் மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை. இதனால் திருப்பூhக் குமரன் “கொடி காத்த குமரன்” என அழைக்கப்படுகிறார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைநந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

1911, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.

இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29, அன்று “பாசறைக்கு திரும்புதல்” என்ற விழா சிறப்பாக நடைபெறும். அந்நாளில் தரைப்படை, கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!