Tnpsc

சாலைப் பாதுகாப்பு Notes 7th Social Science Lesson 22 Notes in Tamil

7th Social Science Lesson 22 Notes in Tamil

22] சாலைப் பாதுகாப்பு

அறிமுகம்:

புரட்சிகர கண்டுபிடிப்பான சக்கரமானது போக்குவரத்து முதல் இயந்திரம் வரை பலவித தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இது நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல அடிப்படை கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். சக்கரத்தின் கண்டுபிடிப்பு புரியாத புதிராக இருப்பினும், வாகனங்களின் வரலாற்றில் மனிதனின் அறிவுத் திறமையை நிரூபிக்கிறது. இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வையகத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

சாலை பாதுகாப்பு:

ஒவ்வொரு நாளும் நாம் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கோ சாலைவழியே பயணிக்கிறோம். சாலையில் பயணிக்கும்போது, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது, சாலையைப் பயன்படுத்துவோர் உயிரிழப்பு மற்றும் கடுமையாகக் காயப்படுவதை தடுக்கும் முறைகள் மற்றும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.

சாலைப்பாதுகாப்பின் தேவை:

உலகத்திலேயே, அதிகமான சாலை விபத்துகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றன என்பது மிகவும் வருத்ததக்கச் செய்தியாகும். உலகளவில் 10% சாலை விபத்துகளுக்கு இநதியா பொறுப்பாகிறது. சாலை விபத்துகள், இந்திய மக்களின் வாழ்வு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன.

சாலை விபத்திற்கான காரணங்கள் வாகனம் இயக்கும் போது ஏற்படும் கவனச்சிதறல்:

வாகனம் இயக்கும் போது ஏற்படும் கவனச்சிதறலே, சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணமாக விளங்குகிறது. ஓட்டுநர் வாகனத்தை இயக்கும்போது, வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபடுவதால், கவனச்சிதறல் ஏற்படுகிறது. வாகனம் இயக்கும்போது, கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ, மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனச்சிதறலுக்கு வழிவகுக்கிறது.

கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்களை இயக்குதல்:

கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்களை இயக்குதல் என்பது ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறும் செயலாகும். ஓட்டுநர் வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்கும் மனநிலையாகும்.

இரவில் வாகனங்களை இயக்குதல்:

இரவு நேரத்தில் வாகனம் இயக்கும்போது அதிகமான கவனம் தேவைப்படுகிறது. கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு மற்றும் சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவையே கோரமான சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

வாகனங்களுக்கிடையே இடைவெளி இல்லாதிருத்தல்:

ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தம் வாகனத்திற்கும் தமக்கு முன்னால் போகும் வாகனத்திற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாது இயக்குவதேயாகும். இந்நிலையில், முன்னால் செல்லும் வாகனம் திடீரென நிறுத்தப்படும்போது, பின்னால் செல்லும் வாகனம் அதன் மீது மோதிகிறது.

போக்குவரத்து நெரிசல்:

வாகனங்களின் அதிக எண்ணிக்கையால் சாலையில் போக்குவரத்து நெரிசலும், மாசுபாடும் அதிகரிக்கிறது.

சாலையின் நிலை:

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவிற்குச் சாலைகளின் விரிவாக்கம் இல்லாமல் மிகவும் குறைவாகவே உள்ளது.

பாதுகாப்பு கவசங்களை தவிர்த்தல்:

இருசக்கர வாகனங்கள் இயக்கும்போது, தலைக்கவசம் அணியாமல் இருப்பது, நான்கு சக்கரவாகனம் இயக்கும் போது இருக்கைப் பட்டை அணியாமல் இருப்பது விபத்து காயங்களை தீவிரமாக்குகிறது.

பாதசாரிகளின் பொறுமை இன்மை:

சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் பொறுமையின்மையும், சாலைவிதிகளைப் புறக்கணித்தலுமே விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

இதர காரணங்கள்:

மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து குறியீடுகளை மதிக்காமல் இருத்தல், அதிவேகமாக இயக்குதல், ஆளில்லா இருப்புப்பாதை பகுதிகளில் கவனமில்லாது கடப்பது போன்ற செயல்களால் உயிர்ச்சேம் அதிகரிக்கிறது. இதனால், பல குடும்பங்கள் வருமானம் ஈட்டும் தம் நபரை இழந்து வாடுகின்றன.

சாலைப்பாதுகாப்பு விதிகள்:

ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களின் நலன்கருதி, சாலைப்போக்குவரத்து விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வகுத்துள்ளது. இந்தியாவும் சாலைகளைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி விபத்தோ, காயமோ ஏற்படா வண்ணம் சாலைப் பாதுகாப்பு விதிகளை வகுத்துள்ளது.

இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும். வாகனம் இயக்கும் போது கைப்பேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை அல்லது பள்ளி வளாகம் அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடைசெய்யப்ட்டுள்ளது.

இருசக்கர வாகனம் இயக்கும்போது, தரமான தலைக்கவசம் அணியவேண்டும். வாகனத்தில் ஏறம் முன்பே அதனைப் பொருத்திக் கொள்ள வேண்டும். மகிழுந்தில் பயணிக்கும் போது ஓட்டுநரும் அவர் அருகில் இருப்பவரும் இருக்கை வார் பட்டையைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தை இயக்கும் போது அதிகமான பளுவை ஏற்றக்கூடாது. இரு சக்கர வாகனம் இயக்குபவர், தம் பின்னால் ஒருவரை மட்டுமே அமர்த்திச் செல்ல வேண்டும். குடும்பம் முழுவதையும் ஏற்றக் கூடாது. ஓட்டுநர் ஒவ்வொருவரும் தமக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்குப் போதுமான பாதுகாப்பான இடைவெளி விட்டுத்தான் இயக்க வேண்டும். வளைவுகளில், திருப்பங்களில் முக்கியமாக மலைப்பிரதேசங்களில் வேகத்தைக் குறைத்தே இயக்க வேண்டும். சாலை போக்குவரத்துச் சட்டம், பாராளுமன்றத்தால் 1988இல் ஏற்படுத்தப்பட்டு, 1989இல் நாடு முழுவதிற்குமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.

தடுப்பு நடவடிக்கைகள்: அரசாங்கம்:

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வாயிலாக, நமது இந்திய அரசாங்கம் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

  1. அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.

  1. போக்குவரத்துக் குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன.
  2. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களின் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல்.
  3. அதிவேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்துதல்.
  4. சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல்.
  5. சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைபடுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தனிமனிதன்:

ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர், தற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வாகன இயக்குபவர்கள், எப்போதும் தம்முடைய ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், வாகனவரி கட்டியதற்கான சான்றிதழ், அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்

வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால், பயங்கரமான விபத்துகள் நேர்ந்து விடுகின்றன, எனவே, வாகனம் நல்ல நிலையில் இருப்பதும், தகுந்த இடைவெளிக் காலங்களில் வாகனங்களை பழுதுநீக்கி இயக்குவது அவசியமாகிறது.

சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் மேடுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுத்திட வாகனங்களில் ரக்க்ஷா பாதுகாப்பு கருவி பொருத்தப்படுவதால், சாலையில் உள்ள மேடுகள் பற்றிய முன்னெச்சரிக்கையையும் மோசமான நிலையில் உள்ள சாலை பற்றியும், வேகத்தை மீறும்போதும் ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்கிறது.

கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்றுமாசுபாடும் குறைகிறது. சக மனிதர்களை நன்கு புரிந்து கொள்ளவும் இணக்கமான உறவுமுறை ஏற்படவும் வழிவகுக்கிறது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்:

இளம் வயதினருக்கு, சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர். ஒரு பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது, அந்தக் குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும். எனவே பெரியவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து முன் மாதிரியாளர்களாக விளங்க வேண்டும். குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள் காண்பதையோ, விளiயாடுவதையோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அவ்விளையாட்டுகள் பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடையே ஏற்படுத்திவிடும். எனவே அரசு இத்தகைய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.

போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள், சரியான குறியீட்டிற்காகக் காத்திருந்து, பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையைக் கடத்திட அறிவுறுத்துங்கள். சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதைக் கூறி எச்சரிக்கை செய்யுங்கள். சாலைகளில் நடந்து செல்லும்போது நடைபாதையை பயன்படுத்த வேண்டும என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்றுத் தர வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்துக் கல்வி இணைக்கப்பட வேண்டும். கலைத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்பு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். வாசகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுதல், படம வரைதல் போன்ற செயல்களால் சாலைப்பாதுகாப்பினை வலுபெறச் செய்யலாம்.

ஊடகம்:

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு, சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது

சச்சின் டென்டுல்கரின் 45ஆவது பிறந்த நாளையொட்டி மும்பை காவல்துறை, மோட்டார் வாகனம் ஓட்டுபவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘தலைக்கவசம் அணிந்து சிறந்த சாதனைகளைச் செய்துள்ள இவரைப்பாருங்கள்! நாமும் இவரைப் பின்பற்றுவோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது’.

போக்குவரத்துக் குறியீடுகள்:

போக்குவரத்துக் குறியீடுகள், சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செயல்படுகின்றன. ‘நில்’ வேகத்தடை, ‘வலப்புறம் திரும்பு’ ‘இடப்புறம் திரும்பாதே’ போன்ற சில குறியீடுகள் கட்டாயக் குறியீடுகள் ஆகும்.

குறியீடுகள் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தருவதால், எச்சரிக்கை குறியீடுகள் ஆகின்றன. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், இளைப்பாறும் இடம், வாகனம் நிறுத்துமிடம், நிறுத்தக்கூடாத இடம் போன்றவை தகவல்களைத் தருவதால் தகவல் குறியீடுகள் என்றழைக்கப்படுகின்றன.

சாலைப் பாதுகாப்பு வாரம்:

பொது மக்களிடையே போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பு வாரம் தேசிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகிறது. சாலை பாதுகாப்பு தொடர்பான பலவித நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த பேனர்கள், போஸ்டர்கள் சுவரொட்டிகள், கையடக்க விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. இந்திய அரசாங்கம், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில், சாலைப்பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கிறது.

பரிந்துரைகள்:

  • 1 கி.மீ அல்லது 2 கி.மீ தூரமெனில் நடந்து செல்வது மற்றும் மிதிவண்டியில் செல்வது நல்லதொரு பயிற்சியாகவும் கருதப்படுகிறது.
  • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்டாத வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
  • தடுப்பு இல்லாத இருப்புப்பாதை வழிகளில் கட்டைகளை ஊன்றி வைக்கலாம்.
  • மிதிவண்டியில் செல்வோர்க்கான தனிவழியைச் சாலைகளில் அமைத்தால், சாலை விபத்துகளைக் குறைத்து பல நன்மைகளை அடையலாம்.
  • மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதாகவும் அமைகிறது.
  • வாகன உற்பத்தியாளர்கள் இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே அதிகபட்ச வேகமாக 50 கி.மீ/மணிக்குமேல் செல்லாதபடி வடிவமைக்க வேண்டும்.
  • உண்மை நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறியோ, காணொலி மூலமாகவே விழிப்புணர்வை ஏற்டுத்துவது அவசியமாகிறது.

பாடச்சுருக்கம்:

  • சாலைப்பாதுகாப்பு என்பது, சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் வாகனம் பயன்படுத்துவோரைக் கோர விபத்துகள் மற்றும் பெரும் காயங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் ஆகும். சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்காததால் ஏற்படும் சாலை விபத்துகள் ஒரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
  • போக்குவரத்துக் குறியீடுகள் சாலையில் சத்தமில்லா நடத்துநராக அனைவரையும் வழிநடத்துகின்றன.
  • ஒவ்வொரு நாடும் சாலைப் பாதுகாப்பு வாரத்தைக் கொண்டாடுகிறது.
  • நாம் சாலை பாதுகாப்பிற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து நமது நாட்டைப் பாதுகாப்பபோம்.

சொற்களஞ்சியம்:

பாதசாரிகள் Pedestrians Persons walking on the road
விபத்தால் ஏற்படும் இழப்பு Fatalities Deaths due to accident
குடும்பத்திற்காக சம்பாதிப்பவர் Breadwinner One who earns money to support the family
மிகவும் கடுமையான Stringent Severe
மோதல் Collision Crash
திருத்தம் Rectirfication Correction
பாதையில் உள்ள குழிகள் Potholes Holes in a roa surface
கட்டாயம் Mandatory Compulsory
கட்டை தூண்கள் Bollards Short concrete posts used to prevent vehicles on the road
இருசக்கர வாகன பின் இருக்கை Pillion Seat behind in a two wheeler

தெரியுமா உங்களுக்கு?

கார்பூலிங் ஒவ்வொருவரும் ஒரு இடத்திற்கு வழக்கமாக மகிழுந்தில் செல்லும்போது அந்த இடத்திற்கு அதிகமான மகிழுந்து செலுத்தப்படுகிறது. இதை தவிர்க்க மகிழுந்தில் பயணப் பகிர்வு மேற்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அதிக மகிழுந்து செல்வதை தடுத்தல்.

ஒரே பகுதியிலிருந்தோ அல்லது ஒரே வழித்தடத்தில் தினந்தோறும் மகிழுந்து அல்லது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதே இடத்திற்கோ அல்லது அதே தடத்தில் செல்பவர்களை உடன் அழைத்துச் செல்வதே கார்பூலிங் ஆகும்.

ரக்க்ஷா பாதுகாப்பான வாகன இயக்கம். ரக்க்ஷா ஒரு தானியங்கி கருவி. இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்கு உள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!