Science Notes

வெப்பம் மற்றும் வெப்பநிலை Notes 7th Science Lesson 7 Notes in Tamil

7th Science Lesson 7 Notes in Tamil

7] வெப்பம் மற்றும் வெப்பநிலை

அறிமுகம்:

வெளிப்புறம் குளிர்ச்சியாக உள்ளபோது நமது உடல் குளிரால் நடுங்குகிறது. இதேபோல் வெளிப்புறம் வெப்பமாக உள்ளபோது நமக்கு வியர்க்கிறது. இக்குளிர்ச்சியினையும் வெப்பத்தினையும் நீங்கள் எவ்வாறு துல்லியமாக அளவீடுவீர்கள்?

நமது அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகளில் வெப்பநிலையானது முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை மற்றும் உணவு சமைத்தல் போன்ற பல நிகழ்வுகள் வெப்பநிலையினை பொருத்து மாறுபடுகின்றன. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.

ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பே வெப்பநிலை ஆகும். வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்பதோடு தொடர்புடையதாகும்.

வெப்பநிலையின் அலகுகள்:

வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை: செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் ஆகும்.

செல்சியஸ்:

செல்சியஸ் அலகானது oC என எழுதப்படுகிறது. உதாரணமாக 20oC. இது இருபது டிகிரி செல்சியஸ் என படிக்கப்படுகிறது. செல்சியஸ் அலகானது சென்டிகிரேட் எனவும் அழைக்கப்படுகிறது.

பாரன்ஹீட்:

பாரன்ஹீட் அலகானது oF என எழுதப்படுகிறது. உதாரணமாக 25 oF. இது இருபத்தைந்து டிகிரி பாரன்ஹீட் என படிக்கப்படுகிறது.

கெல்வின்:

கெல்வின் அலகானது K என எழுதப்படுகிறது. உதாரணமாக 100 K. இது நூறு கெல்வின் என படிக்கப்படுகிறது. வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K) ஆகும்.

வெப்பநிலையினை அளவிடுதல்:

ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும். அதாவது ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் அதிக வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆனால் இங்கு கேள்வி என்னவெனில் வெப்பநிலையினை எவ்வாறு அளப்பது என்பதாகும்? எந்தவொரு பொருளின் மூலக்கூறுகளும் மிகச் சிறியவையாகும். எனவே அவற்றினை பகுப்பாய்வு செய்து, இயக்கத்தினை (இயக்க ஆற்றல்) கணக்கிட்டு அதன் மூலம் வெப்பநிலையினை அளப்பது கடினமான ஒன்றாகும். எனவே நாம் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தி மட்டுமே ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலினை அளக்க இயலும். திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை விரிவடையும் என நாம் முன்னரே அறிந்துள்ளோம். அதே போல் திரவமும் வெப்பத்தினால் விரிவடையும். கீழ்க்கண்ட செயல்பாட்டின் மூலம் அதனை அறிந்துக்கொள்ளலாம். வெப்பநிலைமானியில் உள்ள திரவமானது வெப்பப்படுத்தும் போது விரிவடைகிறது. குளிர்ச்சி அடையும் போது சுருங்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலையானது அளவிடப்படுகிறது. திண்மம் மற்றும் திரவங்களில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் வாயுக்களிலும் காணமுடியும்.

வெப்பநிலைமானி:

வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும். பலவகையான வெப்பநிலைமானிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில வெப்பநிலைமானிகள் குறிப்பிட்ட வகை திரவம் நிரப்பப்பட்ட மெல்லிய கண்ணாடி குழலினைக் கொண்டுள்ளன.

ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்ப நிலைமானிகளில் பயன்படுத்தப்படுகின்றது?

பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றன. ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன. மேலும் சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடும் அத்திரவங்களின் கனஅளவில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

வெப்ப நிலைமானியில் உள்ள திரவங்களின் கனஅளவில் ஏற்படும் இம்மாற்றத்தினை அளப்பதன் மூலம் நாம் வெப்பநிலையினை அளவிடுகிறோம்.

பாதரசத்தின் பண்புகள்:

  • பாதரசம் சீராக விரிவடைகிறது. (ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.)
  • இது ஒளி ஊடுருவாதது மற்றும், பளபளப்பானது.
  • இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.
  • இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.
  • இது அதிக கொதிநிலையும் (357oC) குறைந்த உறைநிலையும் (-39oC)கொண்டது. எனவே அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.

ஆல்கஹாலின் பண்புகள்:

  • ஆல்கஹால் – 100oC க்கும் குறைவான உறை நிலையை கொண்டுள்ளது. எனவே மிகக் குறைந்த வெப்ப நிலைகளை அளக்க பயன்படுகிறது.
  • ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும்.
  • இதனை அதிக அளவிற்கு வண்ணமூட்ட முடியும். ஆதலால், கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.

வெப்பநிலைமானியின் வகைகள்:

காற்று, உடல் வெப்பநிலை, உணவு மற்றும் பல பொருள்களின் வெப்ப நிலைகளை அளக்க நாம் பல்வேறு வகையான வெப்ப நிலைமானிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் மருத்துவ வெப்பநிலைமானியும், ஆய்வக வெப்பநிலைமானியும் பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்ப நிலைமானிகளாகும்.

மருத்துவ வெப்பநிலைமானி:

இவ்வகை வெப்ப நிலைமானியானது வீடுகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மனித உடலின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது. மருத்துவ வெப்பநிலைமானிகளின் குழாயினில் ஒரு குறுகிய வளைவு காணப்படுகிறது. இக்குறுகிய வளைவானது வெப்ப நிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது. எனவே நம்மால் வெப்பநிலையை எளிதாக குறித்துக் கொள்ள இயலும். பாதரச இழைக்கு இருபுறமும் இரண்டு வெப்பநிலை அளவுகோல்கள் காணப்படுகின்றன, அவற்றில் ஒன்று செல்சியஸ் அளவுகோல் மற்றொன்று பாரன்ஹீட் அளவுகோலாகும். பாரன்ஹீட் அளவீடானது செல்சியஸ் அளவீட்டினை விட நுட்பமானது என்ற காரணத்தினால் உடலின் வெப்பநிலையானது F (பாரன்ஹீட்)ல் அளக்கப்படுகிறது. மருத்துவ வெப்பநிலைமானியது குறைந்தபட்ச வெப்ப நிலையாக 35oC அல்லது 94oF வெப்ப நிலையையும் அதிகபட்ச வெப்பநிலையாக 42oC அல்லது 108oF. வெப்பநிலையும் அளக்கக்கூடியது.

மருத்துவ வெப்ப நிலைமானியினை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

  • வெப்ப நிலைமானியினைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும்.
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்ப நிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
  • அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது 35oC அல்லது 94oF கீழ் இருக்க வேண்டும்.
  • வெப்ப நிலைமானியின் குமிழ் பகுதியில் வெப்ப நிலைமானியை பிடிக்கக் கூடாது.
  • உங்கள் கண்ணிற்கு நேராக பாதரச மட்டத்தினை வைத்து பிறகு அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • வெப்ப நிலைமானியினைக் கவனமாக கையாள வேண்டும். கடினமான பரப்பில் வெப்ப நிலைமானி மோதினால் அது உடைந்துவிடக்கூடும்.
  • வெப்ப நிலைமானியினை எரியக்கூடிய பொருள்களுக்கு அருகிலோ அல்லது நேரடியாக சூரிய ஒளியின் கீழோ வைக்கக் கூடாது.

ஆய்வக வெப்பநிலைமானி:

ஆய்வக வெப்ப நிலைமானியானது பள்ளியில் அல்லது பிற ஆய்வகங்களில் அறிவியல் ஆய்வுகளுக்காக வெப்ப நிலையினை அளக்க பயன்படுகிறது. தொழிற்சாலைகளிலும் ஆய்வக வெப்பநிலைமானி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ வெப்ப நிலைமானியைக் காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட வெப்ப நிலையினை அளக்க இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை வெப்ப நிலைமானியின் கண்ணாடி தண்டும், குமிழும் மருத்துவ வெப்ப நிலைமானியைக் காட்டிலும் பெரியதாகும். மேலும் இதில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை. ஆய்வக வெப்பநிலைமானியானது – 10oC முதல் 110oC வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.

ஆய்வக வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,

  • வெப்பநிலையினை அளவிடும்போது வெப்ப நிலைமானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்.

மருத்துவ வெப்பநிலைமானிக்கும் ஆய்வக வெப்பநிலைமானிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்

மருத்துவ வெப்ப நிலைமானி ஆய்வக வெப்ப நிலைமானி
மருத்துவ வெப்ப நிலைமானியானது 35oC முதல் 42oC வரை அல்லது 94oF முதல் 108 oF வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது. ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக – 10oC முதல் 110oC வரை அளவிடப்பட்டிருக்கும்.
பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்காது. அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது. குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது தானாகவே கீழ் இறங்கிவிடும்.
கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்ப நிலைமானியினை எடுத்த பிறகு அளவீடானது எடுக்கப்படுகிறது. வெப்ப நிலைமானியானது வெப்ப மூலத்தில் இருக்கும் நிலையிலேயே அளவீடானது எடுக்கப்படுகிறது. எ.கா: திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள்
பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்ப நிலைமானியினை உதற வேண்டும். பாதரச மட்டத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலைமானியினை உதற வேண்டியதில்லை.
இது உடல் வெப்ப நிலையினை அளக்க பயன்படுகிறது. இது ஆய்வகத்தில் பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது.
  • எப்பொருளின் வெப்பநிலையினை அளக்க வேண்டுமோ அப்பொருளானது முழுவதும் வெப்ப நிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களிலும் சூழ்ந்து உள்ளபோது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும்.

டிஜிட்டல் வெப்பநிலைமானி:

பாதரச வெப்பநிலைமானியினை பயன்படுத்துவதில் நடைமுறையில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. பாதரசம் நச்சுத் தன்மை வாய்ந்தது. மேலும் வெப்ப நிலைமானியானது உடைந்துவிட்டால் பாதரசத்தினை அப்புறப்படுத்துவதும் கடினமாகும். இன்றைய காலகட்டங்களில் பாதரசத்தினை பயன்படுத்தாத டிஜிட்டல் வெப்பநிலைமானியானது பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தினை நேரடியாக அளக்கக்கூடிய ஓர் உணர்வியினை கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் உடலின் வெப்பநிலையினை அளக்க முடியும்.

கவனிக்கவும்:

அருண் சூடான பாலின் வெப்பநிலையினை மருத்துவ வெப்ப நிலைமானியை பயன்படுத்தி அளந்தறிய முயற்சி செய்தான். அவனது ஆசிரியர் அவ்வாறு செய்வது கூடாது என தடுத்துவிட்டார்.

மருத்துவ வெப்ப நிலைமானியினை நாம் மனிதர்களின் வெப்ப நிலையினை தவிர பிற பொருள்களின் வெப்ப நிலையினை அளக்க பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்துகிறோம். மேலும் அதனை வெளிச்சத்தில் படும்படி அல்லது எரியும் பொருள்களுக்கு அருகிலோ வைக்க கூடாது என கூறுகிறோம். ஏன்? ஏனென்றால் பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்ப நிலைமானியானது உடைந்துவிடக்கூடும்.

வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் அளவீடுகள்:

செல்சியஸ் அளவீட்டு முறை:

சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ் என்பவரின் பெயரினால் 1742 முதல் இந்த அலகீட்டு முறையானது செல்சியஸ் என அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் இந்த அளவீட்டு முறை சென்டிகிரேடு என அழைக்கப்பட்டது. இவ்வகை வெப்ப நிலைமானியின் அளவுகோலானது நீரின் உறைநிலை வெப்ப நிலையினை (0oC) ஆரம்ப மதிப்பாகவும் நீரின் கொதிநிலை வெப்பநிலையினை (100oC) இறுதி மதிப்பாகவும் கொண்டு அளவிடப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பினையும் கிரேடஸ் என்பது படிகள் என்பதனையும் குறிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளும் இணைந்து சென்டிகிரேடு என்ற வார்த்தை உருவானது.

பாரன்ஹீட் அளவீட்டு முறை:

மனித உடலின் வெப்பநிலையினை அளக்க பாரன்ஹீட் அளவீட்டு முறை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மன் மருத்துவர் டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை 32oF மற்றும் நீரின் கொதிநிலை 212oF என எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே பாரன்ஹீட் வெப்பநிலைமானியின் அளவுகோலானது 32oF லிருந்து 212oF வரை அளவிடப்பட்டுள்ளது.

கெல்வின் அளவீட்டு முறை:

வில்லியம் லார்டு கெல்வின் என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. இது வெப்ப நிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறையாகும். இந்த அலகு முறையானது K என்ற எழுத்தினால் குறிக்கப்படுகிறது. தனிச்சுழி வெப்ப நிலையில் இருந்து இதன் அளவீட்டு முறையின் மதிப்புகள் தொடங்குவதால் தனிச்சுழி வெப்ப நிலைமானி எனவும் அழைக்கப்படுகிறது.

செல்சியஸ் அலகு முறையில் உள்ள வெப்ப நிலையின் மதிப்பினை பாரன்ஹீட் அலகு முறைக்கும் கெல்வின் அலகுமுறைக்கும் சுலபமாக மாற்ற இயலும்.

6 எண் கணக்கீடுகள் தீர்க்கப்பட்ட கணக்குகள்:

  1. 68oF வெப்ப நிலை மதிப்பினை செல்சியஸ் மற்றும் கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக:

கொடுக்கப்பட்டுள்ளவை:

வெப்ப நிலையின் மதிப்பானது பாரன்ஹீட்டில் = F 68, செல்சியஸ் அளவீட்டு முறையில் வெப்பநிலையின் மதிப்பு = C = ?

கெல்வின் அளவீட்டு முறையில் வெப்ப நிலையின் மதிப்பு = K = ?

(F-32) / 9 = C / 5

(68-32) / 9 = C / 5

C = 5 x 36 / 9 = 20oC

K = C + 273.15 = 20 + 273.15 = 293.15

பாரன்ஹீட் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும், கெல்வின் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(F-32) / 9 = C / 5, K = 273.15 + C

மூன்று முதன்மையான வெப்ப நிலை அளவீட்டு முறைகளில் சில பொருள்களின் வெப்ப நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெப்பநிலை செல்சியஸ் அளவீடு பாரன்ஹீட் அளவீடு கெல்வின் அளவீடு
அளவிடும் முறை (K) அளவிடும் முறை (oC) அளவிடும் முறை (oF)
நீரின் கொதிநிலை 100 212 373.15
நீரின் உறைநிலை 0 23 273.15
மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 98.6 310.15
அறை வெப்பநிலை (சராசரி) 72 23 296.15

எனவே செல்சியஸ் மதிப்பில் வெப்பநிலை = 20oC.

கெல்வின் வெப்ப நிலை = 293.15 K

  1. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும்.

கொடுக்கப்பட்டுள்ளவை:

செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் மதிப்புகள் சமமாகும். அதாவது

F = C. (F-32) / 9 = C / 5

(or)

(C-32) / 9 = C / 5

(C-32) x 5 = C x 9

5C – 160 = 9 C

4C = – 160

C = F = – 40

செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீட்டில் சமமான வெப்ப நிலையின் மதிப்பு = – 40

  1. கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலைகளை மாற்றி அமைக்கவும்.
  2. 45oC = …………. oF 2) 20 oC = ……… oF

3) 68 oF = ………….. oC 4) 185 oF = ………….. oC

5) 0 oC = …………. K 6) -20 oC = …………. K

7) 100 K = ………… oC 8) 272.15 K = ……….. oC

நினைவில் கொள்க:

  1. ஒரு பொருளின் வெப்பத்தினையும் குளிர்ச்சியையும் அளவிடுவதையே நாம் வெப்பநிலை என அழைக்கிறோம்.
  2. வெப்ப நிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை: டிகிரி செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் ஆகும்.
  3. வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K) ஆகும்.
  4. வெப்பநிலைமானியில் உள்ள திரவமானது வெப்பப்படுத்தும்போது விரிவடைகிறது, குளிர்ச்சி அடையும்போது சுருங்குகிறது. திரவத்தின் இப்பண்பானது வெப்பநிலைமானியில் வெப்பநிலையினை அளக்கப் பயன்படுகிறது.
  5. பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு

(F-32) / 9 = C / 5

K = 273.15 + C

உங்களுக்கு தெரியுமா?

  • மனிதர்கள் வெவ்வேறு உடல் வெப்ப நிலையினை பெற்றுள்ள போதிலும் அவர்களின் சராசரி உடல் வெப்பநிலை 37oC (98.6 oF) ஆகும். மேலும் ஒவ்வொருவரும் ஒரே மதிப்பிலான வெப்ப நிலையினை நாள் முழுவதும் பெற்று இருப்பதில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்பவும் புற சூழலுக்கு ஏற்றாற் போலவும் நமது உடல் வெப்பநிலையானது நாள் முழுவதும் சிறிது உயர்வதும் தாழ்வதுமாக உள்ளது.
  • பெரும சிறும வெப்ப நிலைமானி ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்ப நிலைமானியானது பெரும சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது..
  • உலகின் பெரும்பான்மையான மனிதர்கள் அன்றாட வாழ்வில் வெப்பநிலைகளை அளக்க செல்சியஸ் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். கெல்வின் அளவீட்டு முறையானது தனிச்சுழி அளவீட்டு முறை மட்டும் அல்ல. 1oC வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1 K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ நாம் மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு (கெல்வின்) முறைக்கு மாற்றிக்கொள்ள இயலும். ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லை.

இதனை சரிசெய்ய அவர்கள் ரான்கீன் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ரான்கீன் 1859 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப்படுத்தினார். இது தனிச்சுழி அளவீட்டு முறையாகும். மேலும் 1 oR ல் ஏற்படும் மாற்றம் 1 oF க்கு சமமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் அவர்கள் R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை எளிமையாக மாற்றிக்கொள்ள இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!