Samacheer NotesTnpsc

வானிலையும் காலநிலையும் Notes 8th Social Science Lesson 6 Notes in Tamil

8th Social Science Lesson 6 Notes in Tamil

6. வானிலையும் காலநிலையும்

அறிமுகம்

  • காலநிலை இயற்கைச் சூழ்நிலையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். இது நிலத்தோற்றம், மண்வகைகள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • காலநிலையும் வானிலையும் மனிதனுடைய செயல்பாடுகள், உணவு வகைகள், ஆடைமுறைகள், வசிக்கும் வீடு, செய்யும் தொழில்கள், வேளாண்மை, கடல் பயணம், மீன் பிடித்தல், நவீன போக்குவரத்து மற்றும் நாம் விளையாடும் நேரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • புவியின் வளி மண்டலமானது வாயுக்களால் ஆன பல அடுக்குகளைக் கொண்டதாகும். இது புவியைச் சூழ்ந்துள்ளது. புவியின் ஈர்ப்பு விசையினால் வாயுக்களைப் புவியில் தக்க வைத்துக் கொள்கிறது. இதில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், 0.97% ஆர்கானும், 0.03% கார்பன் டை ஆக்ஸைடும், 0.04% மற்ற வாயுக்களும் மற்றும் நீராவியும் உள்ளன.
  • “Climate” என்ற சொல் கிளைமா என்ற பண்டைய கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்.
  • கிளைமோ “Klimo” என்றால் தமிழில் சாய்வுகோணம் (Inclination) என்று பொருள்.

வானிலை (Weather)

  • வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின்திசை, காற்றழுத்தம் , ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிறகூறுகளின் தன்மைகளைக் குறிப்பதாகும்.
  • வானிலை குறுகிய காலமான ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நடக்கக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும். மேலும் இது நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாறக்கூடியது.
  • காலையில் வானிலை தெளிவான வானத்துடன் வெப்பமாகவும் மாலை நேரத்தில், மேகமூட்டத்துடன் கூடிய மழையாகவும் இருக்கக்கூடும். இதேபோல் வானிலை குளிர்காலத்தில் குளிராகவும் , கோடைக்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.
  • நம்மில் சிலர் அடிக்கடி “இன்றைய காலநிலை மிகவும் நன்றாக உள்ளது” அல்லது “மோசமாக உள்ளது” என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அக்கூற்று தவறானது. அதற்குப் பதிலாக “இன்றைய வானிலை நன்றாக உள்ளது அல்லது மோசமாக உள்ளது” என்றே கூறவேண்டும். தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்கள் இன்றைய “வானிலை அறிக்கை” என்று கூறுகின்றார்கள். ஆனால் கால நிலை அறிக்கை என்று கூறுவதில்லை.

(எ.கா) இன்றைய மட்டைப்பந்து விளையாட்டு மோசமான வானிலையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை (Climate)

  • காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளிமண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.
  • காலநிலையின் கூறுகளும் மற்றும் வானிலையின் கூறுகளும் ஒன்றே ஆகும். வானிலையைப் போன்று காலநிலை அடிக்கடி மாறக்கூடியது அல்ல.

காலநிலையையும் வானிலையையும் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள்

  • சூரியக்கதிர்களின் படுகோணம், சூரிய ஒளிப்படும் நேரம், உயரம், நிலம் மற்றும் நீர் பரவல், அமைவிடம், மலைத்தொடர்களின் திசை அமைவு, காற்றழுத்தம் , காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவை ஓரிடத்தின்/ பகுதியின்/ பிரதேசத்தின் காலநிலையையும், வானிலையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.
  • புவி கோள வடிவமானது. ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக் கதிர்கள் ஒரே சீராக விழுவது இல்லை.
  • புவியின் துருவப்பகுதிகள் சூரியனுடைய சாய்வான கதிர்களைப் பெறுகின்றன. அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகக் கடும் குளிர் நிலவுகிறது.
  • பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது.
  • வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே நீரோட்டத்திற்கும், காற்றோட்டத்திற்கும் காரணமாக உள்ளன..
  • வெப்பக் காற்று வளிமண்டலத்தில் மேல் நோக்கிச் செல்வதால் அவ்விடத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக உள்ளது. அதனால் குளிர்காற்று புவிக்கு அருகிலேயே தங்கிவிடுகின்றது.
  • வளியியல் என்பது வானிலையின் அறிவியல் பிரிவாகும். காலநிலையியல் என்பது காலநிலையின் அறிவியல் பிரிவாகும்.

காலநிலை மற்றும் வானிலையின் முக்கியக்கூறுகள்

  • வெப்பநிலை, மழை வீழ்ச்சி, காற்றழுத்தம், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை காலநிலை மற்றும் வானிலையின் முக்கியக் கூறுகளாகும்.

வெப்பநிலை (Temperature)

  • வெப்ப நிலை என்பது, வானிலை மற்றும் காலநிலையின் முக்கியமான கூறு ஆகும்.
  • புவியும் அதன் வளி மண்டலமும் சூரியனின் வெப்ப கதிர்வீசலால் வெப்ப அடைகின்றன.
  • வெப்ப நிலை என்பது காற்றில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும். காற்றிலுள்ள வெப்பமானது சூரிய கதிர்வீசலால் மட்டுமின்றி நிறையையும் சிறிதளவு சார்ந்துள்ளது.
  • வெப்பமானது புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொறுத்தும் புவி வெப்பகதிர்வீசலின் அளவை பொறுத்தும் வெப்பம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதற்கு காரணம் புவியின் இயக்கங்கள் ,தன்சுழற்சி, சூரியனை வலம் வருதல் மற்றும் புவி அச்சின் சாய்வுத் தன்மை ஆகியனவாகும்.
  • வெப்ப நிலை, ஈரப்பதத்தின் அளவு, ஆவியாதல், திரவமாதல், பொழிவு ஆகியவற்றின் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • சூரிய கதிர்வீச்சுகளிலிருந்து பெறப்படும் ஆற்றல் மூன்று வழிமுறைகளில் புவியை வந்தடைகிறது. அவை வெப்பக் கதிர் வீச்சு, வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் ஆகும்.
  • புவியின் வளிமண்டலம், சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் தான் அதிக வெப்பம் அழைகிறது.
  • வெப்பநிலை செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.50C என்ற அளசில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்பகுறைவு வீதம் என்று அழைப்பர்.

வெப்பப்பரலை தீர்மானிக்கும் காரணிகள்

  • அட்சரேகை, உயரம், நிலத்தின் தன்மை, கடல் நீரோட்டம், வீசும் காற்று, சரிவு, இருப்பிடம், கடலிலிருந்து தூரம் , இயற்கைத் தாவரங்கள், மண் ஆகியவை வெப்பப்பரவலை பாதிக்கும் முக்கியக் காரணிகளாகும்.
  • நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக் கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது. சம அளவுக் கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும். இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஐசோதெர்ம் (Isotherm) சமவெப்பக் கோடு
ஐசோக்ரைம் (Isocryme) சராசரி சமவெப்பநிலைக்கோடு
ஐசோகெல் (Isohel) சம சூரிய வெளிச்சக்கோடு
ஐசெல்லோபார் (Isollobar) சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு
ஐசோபார் (Isobar) சம காற்றழுத்தக் கோடு
ஐசோஹைட்ஸ் (Isohytes) சம மழையளவுக் கோடு

வெப்பநிலையை அளவிடுதல்

  • வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது. இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.
  • வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்தபட்ச –அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.
  • சூரியக் கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.
  • வளிமண்டலம் புவிகதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

வெப்பநிலை வீச்சு (Mean Temperature)

  • ஓர் இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரியே வெப்பநிலை வீச்சு ஆகும்.
  • [(870 F + 730F)/2 = 800F] ஒரு நாளில் அமையும் உச்ச வெப்பநிலைக்கும் மற்றும் நீச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு தின வெப்பவியாப்தி அல்லது தினசரி வெப்பநிலை வீச்சு எனப்படும்.
  • ஒரு ஆண்டின் அதிகவெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த வெப்பமான சராசரி மாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு ஆண்டு வெப்பவியாப்தி என்று பெயர்.
  • வெப்பநிலை பரவலைச் சமவெப்ப கோடுகள் மூலம் காணலாம். சம அளவு வெப்பநிலைக் கொண்ட இடங்களை இணைத்து வரையப்படும் கற்பனைக் கோடுகள் சமவெப்ப கோடுகள் ஆகும்.

புவியின் வெப்ப மண்டலங்கள்

புவியின் கோள வடிவமே வெவ்வேறு இடங்களில் வெப்பநிலையைப் பெறுவதற்கு காரணமாக அமைகிறது. அதனை அடிப்படையாக கொண்டு புவி மூன்று வெப்ப மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. வெப்ப மண்டலம் (Torrid zone)

இப்பகுதி கடக ரேகைக்கும், மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இது சூரியமிடமிருந்து செங்குத்தான கதிர்களைப் பெறுவதால் அதிகபட்சமான வெப்பத்தைப் பெறுகிறது. இம்மண்டலம் வெப்பமண்டலம் அல்லது அயனமண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது.

2. மித வெப்ப மண்டலம் (Temperate zone)

வடஅரைக்கோளத்தில் கடகரேகைக்கும், ஆர்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகவும், தென்அரை கோளத்தில் மகரரேகைக்கும் அண்டார்டிக்கா வட்டத்திற்கும் இடைப்பட்டப் பகுதியாக அமைந்துள்ளது. இது சூரியனின் சாய்வானக் கதிர்களைப் பெறுவதாலும் சூரிய கதிர்களின் படுகோணம் துருவத்தை நோக்கிச் செல்லச்செல்ல குறைகிறது. எனவே இம்மண்டலம் மித வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

3. குளிர் மண்டலம் ( உறைப்பனி மண்டலம்) (Frigid zone)

உறைப்பனி மண்டலம் ஆர்ட்டிக் வட்டத்திற்கும், வட துருவப்பகுதிக்கு இடையேயும், அண்டார்ட்டிக் வட்டத்திற்கும் தென்துருவப்பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பத்தைப் பெறுவதால் இப்பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதி துருவ மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலை / குறைவான வெப்பநிலை

  • புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை 56.70C (1340F). இது 1913 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதிவாகியுள்ளது.
  • இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (-89.20C) (128.60 F 184.0K) இது 1983ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் அண்டார்டிக்காவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

மழைப்பொழிவு (Rain fall)

  • வளிமண்டல நீராவி நீர் சுருங்குதல் மூலம் பூரித நிலையை அடைந்து புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் திரவ நீரே மழை பொழிவு எனப்படும்.
  • நீர்சுழற்சியின் முக்கிய கூறு மழையாகும். இது புவியில் நன்னீரை உருவாக்குகின்றது. மழைநீரே எல்லாவகையான நீருக்கும் முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது.
  • வெப்ப நிலை மற்றும் மழைபரவலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. பொதுவாக மழைப்பொழிவு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அதிகமாகவும், துருவப்பகுதிகளை நோக்கிச் செல்லச்செல்ல மழையின் அளவு குறைகிறது. மழைப்பொழிவு மழை மானியால் அளவிடப்படுகிறது.

காற்றின் அழுத்தம் (Air Pressure)

  • புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள உள்ள காற்றின் எடையே வளிமண்டல அழுத்தம் அல்லது காற்றழுத்தம் எனப்படும்.
  • காற்றின் அழுத்தம் காற்றழுத்த மானியால் அளவிடப்படுகிறது.
  • கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு 1013.25 மில்லி பார் ஆகும்.
  • பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு 1.03 கிலோ/ச.செ.மீ ஆகும்.
  • நிலையான வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் காற்றழுத்தம் கிடையாகவும் செங்குத்தாகவும் காணப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு காற்றின் அழுத்தத்தை குறைந்த காற்றழுத்த மண்டலம் என்றும், அதிக காற்றழுத்த மண்டலம் என்றும் வகைப்படுத்துகின்றனர்.
  • குறைந்த காற்றழுத்தப் பகுதி என்பது வளி மண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளை விட அழுத்தம் குறைவாக இருக்கும். இப்பகுதியை நோக்கி அழுத்தம் அதிகமுள்ள பகுதியில் இருந்து காற்று வீசும்.
  • அதிக காற்றழுத்தம் என்பது வளிமண்டலப் பகுதிகளில் சுற்றியுள்ள பகுதிகளைவிட அழுத்தம் அதிகமாக இருக்கும். காற்று இங்கிருந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கி வீசும்.
  • குறைவான காற்றழுத்த மண்டலம் “L” என்ற எழுத்தலும் அதிக காற்றழுத்த மண்டலத்தை “H” என்ற எழுத்தாலும் வானிலை வரைப்படத்தில் குறிக்கப்படுகிறது.
  • குறைந்த அழுத்த மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றும், சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது. அதிக அழுத்த மண்டலம் எதிர் சூறாவளி காற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.
  • குறைந்த அழுத்த மண்டலம் மேக மூட்டத்தையும், காற்றையும், மழைப் பொழிவையும் உருவாக்குகிறது.
  • அதிக அழுத்த மண்டலம் அமைதியான வானிலையைத் தருகிறது. சமஅழுத்தக்கோடு (ஐசோபார்) சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காணப்பயன்படுகிறது.
  • மனிதர்கள் சிறிய அளவு காற்றழுத்த வேறுபாட்டால் பொதுவாக பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சிறிய காற்றழுத்த வேறுபாடு மிகப்பெரிய அளவில் உள்ள போது புவியின் காற்றமைப்பையும் , புயல் காற்றையும் தீர்மானிக்கிறது.
  • வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் உயரம், வளிமண்டல வெப்பநிலை, காற்று சுழற்சி, பூமியின் தன்சுழற்சி, நீராவி மற்றும் வளிமண்டலப் புயல்கள் போன்றவையாகும்.
  • உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் 1083 mb, 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள “அகாட்” என்ற இடத்தில் கடல் மட்டத்தில் பதிவானது.
  • உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் 870 mb 19329 டிசம்பர் 12ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகில் உள்ள “குவாம்” என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானதாகும்.

காற்றழுத்தத்தை அளவிடுதல்

  • வானிலை ஆய்வாளர்கள் காற்றழுத்தத்தை காற்றழுத்தமானி அல்லது அனிராய்டு காற்றழுத்தமானி மூலம் அளக்கின்றனர்.
  • வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாகப் பதிவு செய்ய காற்றழுத்தப் பதிவுத்தாள் (Barograms) பயன்படுகிறது.

நமது காதுகள் ஏன் உயரே செல்லும்போது அடைத்துக் கொள்கின்றன?

நாம் விமானத்தில் மேலே செல்லும்பொழுது வளிமண்டல அழுத்தமானது நம்முடைய காதுகளில் உள்ள காற்றின் அழுத்தத்தை விட குறைவாக உள்ளது. ஆதலால் காதுகள் இவ்விரண்டையும் சமப்படுத்தும் பொழுது அடைத்துக் கொள்கின்றன. இந்நிகழ்வு விமானத்தில் இருந்து கீழே இறங்கும்பொழுதும் நிகழ்கின்றன.

ஈரப்பதம் (Humidity)

  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் என அழைக்கப்படுகிறது. இது வளிமண்டலத்தின் தொகுதியில் 0-5% வரை இருக்கும்.
  • ஈரப்பதம் வளிமண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
  • வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது. அதனால் ஈரப்பதத்தின் அளவு நிலநடுக்கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லும்போது குரைகிரது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிட பல்வேறு அளவீட்டு முறைகள் உள்ளன.

சுய ஈரப்பதம் (Specific Humidity):

ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிழுள்ள நீராவியின் எடை ஈரப்பதம் எனப்படும், பொதுவாக கிராம் நீராவி/ கிலோகிராம் காற்று எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

உண்மையான ஈரப்பதம் (Absolute Humidity):

ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் உள்ள நீராவியின் எடைக்கு உண்மையான ஈரப்பதம் என்று பெயர். இது ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கிராம் நீராவி உள்ளது எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity)

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள காற்றில் எவ்வளவு நீராவி இருக்க முடியுமோ அந்த அளவிற்கும், அதேசமயம் அக்காற்றில் தற்போது எவ்வளவு நீராவி உள்ளதோ அந்த அளவிற்கும் உள்ள விகிதம் ஒப்பு ஈரப்பதம் எனப்படும், இது சராசரி சதவிகித முறையில் காணப்படுகிறது.

ஈரப்பதத்தை அளத்தல் (Measurement of Humidity)

  • ஈரநிலைமானி (ஹைக்ரோ மீட்டர்) கொண்டு காற்றின் ஈரப்பதத்தை அளக்கலாம். (ஸ்வன்சன் திரையில் வறண்ட மற்றும் ஈரக்குமிழ் கட்டுகள் ஒவ்வொன்றாக அடுக்கப்பட்டதாகும்).
  • பொதுவாக வெப்பகாற்று குளிர்காற்றைவிட அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும்.
  • காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது காற்று பூரித நிலையை அடையும். இந்தப் பூரித நிலையையில் வெப்பநிலை பனிப்புள்ளி நிலைக்குச் சென்று விடும். இந்த நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருக்கமாகி மேகங்கள் மற்றும் மழைக்கு வித்திடுகிறது.
  • ஒப்பு ஈரப்பதம் மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிக மற்றும் குறைந்த ஈரப்பதம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது பல்வேறு பொருட்கள், கட்டடங்கள், மின்சாதன பொருட்களின் நிலைத்தன்மையைப் பாதிக்கும்.
  • காற்றின் அழுத்தம் குறைவதனால் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவும் குறைகிறது. மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்சிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது (அதனால் மனிதர்கள் அங்கு இறக்கக் கூடும்).
  • மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் சிறிது கால அவகாசம் எடுத்துக்கொண்டு அதிக உயரங்களுக்குத் தம்மை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். ஏனெனில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படும். விமானங்களில் செயற்கை அழுத்தத்தை உருவாக்கி பயணிகளை வசதியாக சுவாகிக்கும்படி அமைத்துள்ளனர்.

காற்று

  • கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
  • காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கிவீசும்.
  • காற்றால் உருவாக்கப்படும் சுழல் காற்று மற்றும் கடும் காற்றை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது.
  • காற்றை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது. காற்று எத்திசையிலிருந்து வீசுகிறதோ அதே பெயரில் அழைக்கப்படுகிறது. எ.கா. தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்றிற்கு தென்மேற்குப் பருவக்காற்று என்று பெயர்.
  • காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன.

1. கோள் காற்றுகள் அல்லது நிரந்தர காற்றுகள் (Planetary Winds)

2. பருவக் காலக் காற்றுகள் மற்றும் (Seasonal Winds)

3. தலக் காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் (Local winds)

  • உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை அல் – பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் அரேபியாநாட்டு பயணிகளிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்.

கோள் காற்றுகள்

  • ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.

எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

  • பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.
  • தலக்காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று.
  • பியோபோர்டு அளவை என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது. இது இப்பொழுது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது.
  • இக்கருவி 1805ஆம் ஆண்டு இராயல் கப்பற்படை அதிகாரியான பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கருவியை முதன் முதலில் எச்.எம்.எஸ். பீகாலால் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது.
  • பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. ஆப்ரிக்காவின் காபான், காங்கோ மற்றும் DR காங்கோ, சுமத்ரா, இந்தோனேசியா மலேசியா ஆகியவை பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதியாகும்.

காற்றின் திசை மற்றும் வேகத்தை அளவிடல்

  • வானிலை வல்லுநர்கள் காற்றின் திசையை அளவிட காற்றுமானி அல்லது காற்று திசைக்காட்டி என்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • காற்றின் வேகத்தை அளக்க அனிமாமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது
  • விண்ட்ரோஸ் என்பது காற்றின் திசையையும், வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் ஒரு வரைபடம்.
  • மீட்டிரோகிராப் அல்லது டிரிபில் ரிஜிஸ்டர் என்ற கருவி காற்றின் திசை, வேகம் சூரிய வெளிச்சம், மழை ஆகிய வானிலைக் கூறுகளை வரைகோட்டுப்படத்தின் மூலம் பதிவு செய்யும் கருவியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!