Samacheer NotesTnpsc

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் Notes 7th Social Science Lesson 23 Notes in Tamil

7th Social Science Lesson 23 Notes in Tamil

23] வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

அறிமுகம்:

அரசு, சமூக நலத்திற்காகப் பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறது. அவற்றை நிறைவேற்றுவதற்கு வருவாய் தேவைப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வளங்கள் அரசிடம் உள்ளன. அவற்றுள் முதன்மையாகக் கருதப்படுபவை: வரிகள், கட்டணங்கள், விலைகள், குறிப்பிட்ட மதிப்புகள், ராஃபில் திட்டம் போன்றவை. மற்ற நாடுகளைப் போலவே, இந்திய நாட்டிலும் வருவாய் ஈட்டுவதில் வரிகள் இன்றியமையாத இடம் பெறுகின்றன.

வரி விதிப்பு:

வழக்கமாக அரசால் விதிக்கப்படும் வரியையே ‘வரிவிதிப்பு’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம். வரி விதிப்பு என்பது வருமானம், முதலீட்டால் பெறும் ஆதாயம், சொத்து போன்ற அனைத்து வகைக்கும் விதிக்கப்படும் வரியைக் குறிக்கும். வரி விதிப்பு என்பது, பெயராகவோ செயலாகவோ இருக்கலாம். ஆயினும், அது செயல்பாட்டையே குறிக்கிறது. அச்செயலால் விளையும் வருவாயையே நாம் ‘வரிகள்’என்கிறோம்.

வரிகள்:

வரி செலுத்துவோர், எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும். பேராசிரியர் சேலிக்மனின் கூற்றுப்படி “வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும். இதில், பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை. இப்பங்களிப்பின் மூலம், பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வரிகள் விதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு, வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள். வரியாகச் செலுத்தப்படும் மொத்தத் தொகையும் அரசுக் கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவுசெலவுத் திட்டத்தை எவ்வாறு நிருணயிப்பது என்பதையும் அரசே தீர்மானிக்கிறது. வரி செலுத்துவது என்பது, ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அன்று. மாறாக, ஒருவர் தாம் ஈட்டும் வருமானம், வருமான வரம்பிற்கு உட்பட்டதாயின் வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துதல், ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.

வரி விதிப்புக் கோட்பாடு:

வரி விதிப்புக் கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிக் கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.

  1. சமத்துவ விதி:

மக்கள் தத்தமது வசதிக்கேற்ற வகையில் செலுத்துவதற்காக அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்ற, சமத்துவ விதியாகும். இதனால், அனைவரும் சமமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று மாறாக, மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதையே இவ்விதியே விளக்குகிறது.

  1. உறுதிப்பாட்டு விதி:

வசூலிக்கப்படும் வரியின் மூலம், வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை, இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், இவ்விதியின் மூலம், பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

  1. வசதி விதி:

வரி செலுத்தவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில், வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர், தாம் செலுத்தும் வரியின் மூலம், குறைந்த பட்ச அளவிலேயே துன்பப்படுவர் என்பதை எப்போதும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

  1. சிக்கன விதி:

வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும். வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

வரி விதிப்பு வகைகள்:

வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவையாவன:

  1. விகிதாச்சார வரி (Propostional Tax).
  2. வளர் வீத வரி (Progressive Tax).
  3. தேய்வு வீத வரி (Regressive Tax).

விகிதாச்சார வரி:

வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரி விதிப்பது, விகிதாச்சார வரி ஆகும். வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.

எடுத்துக்காட்டாக, வருமானத்திற்கு 5% வரி விகிதம் விதிக்கப்படுகிறது. ஒருவர், ரூபாய் 1000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவர் ரூபாய் 50/- செலுத்த வேண்டும். மற்றொருவர், ரூபாய் 5000 வருமானம் ஈட்டுகிறார் எனில், அவரும் ரூபாய் 50/- செலுத்த வேண்டும். சுருங்கக் கூறின், விகிதாச்சார வரி என்பது, வரி செலுத்துபவர்களின் வருமான வரி விகிதத்தை மாற்றாமல் விட்டுவிடுகிறது.

வளர்வீத வரி:

ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதிமும் அதிகரிப்பது, வளர்வீத வரி ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில், அதற்கான வரி விகிதம் 10% ஆகவே, அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும். இதனைப் போலவே, மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25% அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2,500/- வேறொருவர் ரூபாய் 100,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50% எனில், அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000/- ஆகவே, வளர்வீத வரியானது, வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க வரி விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை விளக்குகிறது.

தேய்வு வீத வரி:

அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி, தேய்வு வீத வரியாகும். இதனால், அதிக அளவு வருமானம் ஈட்டுபவர்களைக் காட்டிலும், குறைந்த அளவு வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரி விகிதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய தேய்வு வீத வரியானது, வளர்வீத வரிக்கு எதிரானதாக உள்ளது.

வரியின் முக்கியத்துவம்:

வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது, அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் பின்வரும் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

  1. நலவாழ்வு:

சுகாதார நலவாழ்வுக்காக செலவழிக்கப்படும் தொகை, வரிப்பணத்தில் இருந்தே பெறப்படுகிறது. வரிகள் இல்லையெனில், இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம். சமூக நலவாழ்வு, மருத்துவ ஆய்வு, சமூக நலப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது.

  1. கல்வி:

அரசுக்குச் செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக அளவிலான தொகை, கல்விக்காச் செலவிடப்படுகிறது. மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.

  1. ஆட்சி நிர்வாகம்:

அரசின் நிர்வாக அமைப்புகள் நன்முறையில் இயங்கினால்தான், ஆட்சியும் நன்முறையில் இயங்கும். நிர்வாக அமைப்புகள் சரியாக இயங்கவில்லையெனில், பொருளாதார வளர்ச்சியில் அவை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, நன்முறையில் நிர்வகிக்கும் ஓர் அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தை, நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

  1. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள்:

அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது. இது மட்டுமின்றி, மக்கள் நலன் காக்கும் வகையில் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்குகிறது.

மேலும் ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான ஊக்கத்தொகை, குழந்தைப் பாதுகாப்பு போன்றவற்றிற்காகவும் நிதி ஒதுக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையின் மீது வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, வரிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குத் (GDP) தம் பங்களிப்பை வழங்குகின்றன.

ஓய்வூதியம் வேலையின்மை சலுகைகள் குழந்தை பராமரிப்பு போன்ற நிதி திட்டங்களுக்கும் சிறுது பணம் செலுத்தப்படுகிறது. வரி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலையை பாதிக்கும். வரி பொதுவாக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பங்களிக்கிறது.

அறிவியல் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு

வரியின் வகைகள்:

இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி.
  2. மறைமுக வரி

நேர்முக வரி

நேர்முக வரி என்பது தனியாளோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார். எடுத்துக்காட்டாக, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்துவரி, வருமான வரி அல்லது உறுதிமொழிப் பத்திரங்களின் மீதான வரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வருமான வரி

பிற நேர்முக வரிகள் பின்வருமாறு:

நிறுவன வரி:

நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே நிறுவன வரியாகும். காப்புரிமை, வட்டி, இந்தியாவிலுள்ள மூலதனச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம், தொழில் நுட்பப் பணிகளுக்காகவும் பங்கீடுக்காகவும் (ஈவுத்தொகை) பெறப்படும் கட்டணங்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது.

நிறும வரி

சொத்து வரி:

ஒருவர் வைத்துள்ள சொத்துகளின் மதிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி, சொத்து வரி ஆகும். ஒவ்வோர் ஆண்டும் நடைமுறையிலுள்ள சந்தை மதிப்புகளைப் பொருத்து, அதே அளவில் வரி வசூலிக்கப்படுகிறது.

அன்பளிப்பு வரி:

ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாகப் பெறும் பொருள்களின் மதிப்க்புகேற்ப விதிக்கப்படும் வரி, அன்பளிப்பு வரியாகும்.

சொத்து வரி:

முன்னோர்கள் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி, சொத்து வரியாகும். இத்தகைய வரிகளை அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதில்லை. அரசுக்கு நேரடியாக வரி செலுத்தும் ஒருவரின் வருமானம் அல்லது சொத்துகளின் மீது, இவ்வரி விதிக்கப்படுகிறது.

மறைமுக வரி:

தொடக்கத்தில், ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை, மற்றொருவர் மீது மாற்ற இயலும் முறையையே மறைமுக வரி என்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை (மகிழுந்து/இரு சக்கர வண்டி போன்றவை) விற்பனை செய்யும் விற்பனையாளர், தொடக்கத்தில் அந்தப் பொருளுக்கான வரிச்சுமையை ஏற்கிறார். அவரிடமிருந்து, அந்தப் பொருளை யார் வாங்குகிறார்களோ, அவர்களே பின்னர் அந்தப் பொருளுக்கான வரிச்சுமை முழுவதையும் ஏற்கிறார்கள். ஆகவே, மறைமுகவரி என்பது, ஒருவரின் வரிச்சுமை மற்றொருவர் மீது சுமத்தப்படுவதைக் குறிக்கிறது. மறைமுக வரிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

சேவை வரி:

சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது, சேவை வரியாகும். சேவையைப் பெறுபவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு, மத்திய அரசுக்குச் செலுத்தப்படுகிறது.

விற்பனை வரி அல்லது (VAT):

விற்பனை செய்யப்படும் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி, விற்பனை வரி. இஃது ஒரு மறைமுக வரியாகும். ஏனெனில், பொருள் விற்பனை செய்பவர் செலுத்த வேண்டிய வரிச்சுமை, அந்தப் பொருளை வாங்குபவர் மீது சுமத்தப்படுகிறது. இதனால், பொருள் விற்பனை செய்பவர், தாம் விற்கும் பொருளின் விலையோடு அதற்குரிய வரியையும் சேர்த்தே விற்பனை செய்கிறார்.

கலால் (ஆயத்தீர்வை) வரி:

மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் பொருள்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டியவரி, கலால் வரியாகும். இந்தியாவில், இந்த வரியானது மத்திய அரசால் சுமத்தப்படுகிறது.

பொழுதுபோக்கு வரி:

மாநில அரசுகளால், பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி, பொழுதுபோக்கு வரியாகும். எடுத்துக்காட்டாக, திரைப்படங்களுக்கான கட்டணங்கள், காணொலி விளையாட்டுகள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், விளையாட்டு தொடர்பான செயல்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST):

பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது, பொருள் மற்றும் சேவை வரியாகும். தேசிய அளவில், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை மீது விதிக்கப்படும் மறைமுக வரிக்கு மாற்றாக, மத்திய, மாநில அரசுகளால் இவ்வரியானது சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது.

நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையிலான வேறுபாடுகள்:

நேர்முக வரி மறைமுக வரி
வரி செலுத்துவோர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாது ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும்
தனியாள் மற்றும் நிறுவனங்கள் பெறும் வருமானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரி விதிக்கப்படுகிறது
பணவீக்க அழுத்தம் இல்லை பணவீக்க அழுத்தம் உண்டு
வரித்தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன
நெகிழ்வுத் தன்மை குறைவு நெகிழ்வுத்தன்மை அதிகம்

வரித்தேவையும் மக்கள் நலத் தேவையும்:

நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும். நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது. நிதி நிருவாக வரலாற்றில், மாநிலங்கள் வரி விதிப்பின் மூலமாகவே பல செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

போக்குவரத்து சுகாதாரம், பொது மக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி, கலையும் பண்பாடும், பொதுப்பணி, பொதுக்காப்பீடு மேலும் பல பொருளாதார உள்கட்டமைப்புகளுக்காகவும் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஓர் அரசின் திறனுக்கேற்ப, வரிகளை உயர்த்துவது, அதன் ‘நிதத் திறன்’ என்றழைக்கப்படுகிறது.

செலவுகள், வரி வருவாயைவிட அதிகமாகும்போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது. வாராக் கடன்களைத் திரட்டுவதற்கு, வரிகளிலிருந்து ஒருபகுதியும் செலவழிக்கப்படலாம். மேலும், நலவாழ்வுக்கும் பொதுப் பணிகளுக்கும் தேவைப்படும் நிதிகளுக்கு வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது. கல்வித் திட்டங்கள், வயதானவர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள், வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான ஊக்கத் தொகைகள், பொதுப் போக்குவரத்துகள், ஆற்றல், நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுகளுக்கு உரியவை அனைத்தும் பொதுப் பணிகளுக்குள் அடங்கும்.

பண உருவாக்கக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒப்புறுதிப் பணம் அளிப்பதற்கு அரசு கேள்வி கேட்கும்வரை, அரசின் வருவாய்க்கு வரிகள் தேவைப்படா. நாணய மதிப்பைத் தக்க வைத்தல், சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அல்லது சமூகப் பாதுகாப்பு போன்ற தனிப்பட்ட வகையில் நன்மை தருவன ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல் போன்றவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்.

சுருக்கம்:

  • ஒரு வரி விதிக்கும் அதிகாரம் அதாவது அரசாங்கம் வரி விதிப்பதை “வரி விதிப்பு” என்கிறோம் வருமானம் முதல் மூலதன ஆதாயங்கள் மற்றும் சொத்துவரி வரை அனைத்து வகையான தன்னிச்சையான வரி விதிப்புகளும் “வரி விதிப்பு” என்ற சொல்லிற்கு பொருந்தும்.
  • வரி செலுத்துவோருக்கு நேரடி அல்லது திரும்பப் பெறக் கூடிய வாய்ப்பு அல்லது நன்மை என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசாங்கத்திற்குக் கட்டாய செலுத்துகைகள் ஆகும்.
  • இந்த முறையில் வருமான அளவைப் பொருட்படுத்தாமல் வரி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும்.
  • நாட்டு விவகாரங்களைச் சீராக நடத்துவதில் ஆட்சி முறை முக்கியமான அங்கமாகும்.
  • ஒரு நேர்முக வரி என்பது அதன் சுமையை நேரடியாக சுமத்தப்படும் நபரால் சுமக்கப்படும் வரி, அதாவது, அதன் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
  • பரம்பரைச் சொத்தின் வாரிசுகளிடமிருந்து சொத்து அல்லது பண்ணை வரி வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவதைத் தவிர்ப்பது விரும்பத்தக்கதன்று.
  • மறைமுக வரி என்பது ஒரு வரி, அதன் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியும்.
  • இந்தியாவில் கலால் வரி மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.
  • சரக்கு மற்றும் சேவை வரி என்பது பொருள்கள் மற்றும் சேவைகளின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் ஒரு வகையான வரி.

சொற்களஞ்சியம்

சமத்துவம் சம வாய்ப்புகள் Equality
வசதி சிரமமின்றி எதையாவது தொடரக்கூடிய நிலை Convenience
விகிதாச்சார சமமான Proportional
பிற்போக்கு வரி குறைந்த வருமானம் உள்ளவர்களிடமிருந்து விகிதாச்சாரமாக அதிக தொகையை வசூலிப்பது Regressive
மரபுரிமை இதற்கு முன் வைத்திருப்பவர் இறப்பிற்கு பின் வாரிசுதாரர் பெறுவது Inherited
குவிக்க ஒன்றுசேர Accumulate
மானியம் பங்களிக்க Subsidize
துன்புறத்தல், அடக்குமுறை ஒரு நபர் அல்லது ஒரு குழுவை நியாயமற்ற முறையில் நடத்துவது குறிப்பாக அவர்களின் சமய அல்லது அரசியல் நம்பிக்கைகள் காரணமாக Persecution

தெரியுமா உங்களுக்கு?

மத்திய வருமானச் சட்டம் 1963இன் கீழ் ‘நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்’ என்னும் பெயரில் தனி வாரியம் (CBDT) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி – ஓர் அறிமுகம்:

முந்தைய மறைமுக வரி கட்டமைப்பு மற்றும் அதன் சிரமங்கள் இந்திய வரிவிதிப்பு வரலாறு பண்டைய காலத்திற்குச் செல்கிறது. கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் கூற்றுப்படி, பண்டைய காலங்களில் வரி விதிக்கப்பட்டு ரொக்கமாகவும், வேறு வகையாகவும் சேகரிக்கப்பட்டது. மறைமுக வரிகளின் நவீன வரலாறு 20ஆம் நூற்றாண்டின் முறப்பகுதியில் இருந்து உப்பு, சர்க்கரை, வாகன எரிபொருள் போன்றவற்றறுக்கு மத்திய கலால் வரி விதிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. படிப்படியாகக் கலால் வரிகளின் அடிப்படை விரிவுபடுத்தப்பட்டது. சுதந்திரம் பெற்ற நேரத்தில், தேசிய அளவில் மத்திய கலால் வரி மற்றும் மாநில அளவில் விற்பனை வரி ஆகியவை நடைமுறையில் இருந்தன நீண்ட கால முயற்சிகள் மற்றும் திருத்தங்களுக்கு பிறகு, 2003ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான ஹரியானாவில் முதன்முதலில் மதிப்பு கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பஞ்சாப், சண்டிகர், இமாச்சாலப்பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 2005 இல் மதிப்பு கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிப்புக் கூட்டு வரி முன்பு இருந்த விற்பனை வரியை விடப்பெரிய வளர்ச்சியாக இருந்திருந்தாலும். சரக்கு மற்றும் சேவை வரி உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும். மேலும், நாட்டின் வரி விதிப்பு அமைப்பில் முழுமையை உணர்ந்து கொள்வதற்கான தர்க்க அடிப்படையிலான படியாகும் ஆரம்பத்தில் ஒரு முனை மற்றும் தேசிய அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி (GST) இருக்கும் என்று முன்மொழியப்பட்டது. இருப்பினும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதி இறுதியாக 2017 ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒரு பொருளாதார அமைப்பு ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது நாம் வாங்கும் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி. இது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இது ஒரு வெளிப்படையான வரி. நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான ரசீது கிடைத்தால், பின்வரும் தகவல்களை காண்பீர்கள்:

தயாரிப்பு மதிப்பு = ரூ.100 SGST 9% ரூ9

CGST = ரூ.9 மொத்தம் ரூ.118.

மசோதாவில், GST 18% அது சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது மத்திய மற்றும் மாநிலத்திற்கும் தனித்தனியாக ரூ.9க்கு 9% எனவே ரூ.9 மாநில அரசுக்கும், மேலும் ரூ.9. மத்திய அரசுக்கும் செல்லும்.

தமிழ்நாட்டில் ஒரு விற்பனையாளர் ஒரு பொருளை வேறுமாநிலத்தில் வாங்குபவருக்கு விற்றால் (எடுத்துகாட்டாக கர்நாடகா), அது மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையிலான வர்த்தகத்தை பொருத்தவரை. மசோதா கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் மதிப்பு = ரூ.100

IGST 18% = ரூ.18.

மொத்தம் = ரூ.118.

ரூ.18 மத்திய அரசுக்குச் செல்லும். மத்திய அரசு ரூ.9 எடுத்து கர்நாடக அரசுக்கு மேலும் ரூ.9. அனுப்பும் வரி 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. GST மத்திய அரசால் வசூலிக்கப்பட்டாலும், பெட்ரோலியப் பொருள்கள், ஆல்கஹால், மின்சாரம் ஆகியவற்றின் மீதான வரி தனித்தனியாக மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது மற்றும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அத்தியாவசிய பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

சுங்க வரியும், சாலை வரியும்:

அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும். எடுத்துக்காட்டாக, நாம் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றைக் கூறலாம். சாலை/பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும் குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் இவ்வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

தூய்மை பாரத வரி:

இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது. தூய்மை பாரதத்தின் பெயரால் வசூலிக்கப்படும் இவ்வரி, 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் தொடங்கப்பட்டது. இஃது அனைத்து வகையான வரிச் சேவைகளுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!