முகலாயப் பேரரசு Notes 7th Social Science Lesson 10 Notes in Tamil
7th Social Science Lesson 10 Notes in Tamil
10] முகலாயப் பேரரசு
அறிமுகம்:
பாபருடைய வருகையுடன் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவின் குறுகிய கால ஆட்சி தவிர்த்து முகலாயர் ஆட்சி கி.பி.(பொ.ஆ) 1526 முதல் 1707 வரை நடைபெற்றது. இந்த ஆண்டுகளில்தான் முகலாயப் பேரரசர்களின் புகழ் ஆசியா, ஐரோப்பா முழுவதிலும் பரவியது. மேற்கண்ட படத்தில் இடம்பெற்றுள்ள மிகச் சிறந்த ஆறு முகலாயப் பேரரசர்களுக்குப் பின்னர் பேரரசு சிதையத் தொடங்கியது.
பாபர்-1526-1530:
மூதாதையரும் அவர்களின் தொடக்ககால பணிகளும்:
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் ஜாகிருதீன் முகமது பாபர் ஆவார். முகல் என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம். தம் தந்தையார் வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார். தாய் வழியில் அவருடைய தாத்தா, தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார். இவர் மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார் பாபர். 1483 பிப்ரவரி 14இல் பிறந்தார். அவருக்கு ஜாகிருதீன் (நம்பிக்கையைக் காப்பவர்) முகமது எனப் பெயரிடப்பட்டது. தமது பன்னிரண்டாவது வயதில் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார். ஆனால், மிக விரைவிலேயே அங்கிருந்து உஸ்பெக்குகளால் துரத்தியடிக்கப்பட்டார். துயரம் நிறைந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர், பாபர் காபூலின் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
பாபர்
முகலாயப் போரரசுக்கான அடித்தளம்:
பாபர் காபூலில் இருந்தபோது, தைமூரின் இந்தியப் படையெடுப்பின் நினைவுகளால் தூண்டப்பட்டுக் கிழக்கு நோக்கித் தமது பார்வையைத் திருப்பினார். 1505இல் காபூலைக் கைப்பற்றிய பாபர், அதே ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது முதற்படையெடுப்பை மேற்கொண்டார். இருந்தபோதிலும், மத்திய ஆசிய பகுதிகளிலும் அவர் கவனம் செலுத்த நேர்ந்தது. 1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து அவர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் மிகச் சிறந்த வாய்ப்பு தேடி வந்தது. தௌலத்கான் லோடியின் மகன் திலாவார்கான், டெல்லிசுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர். டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க, பாபரின் உதவி கேட்டே அவர்கள் வந்திருந்தனர். 1526இல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார். இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது.
பாபரின் இராணுவ ஆக்கிரமிப்புகள்:
பாபர் 1527இல் ராணா சங்காவையும் அவருடைய ஆதரவாளர்களையும் கன்வா என்னுமிடத்தில் தோற்கடித்தார். 1528இல் சந்தேரித் தலைவருக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பாபர் 1529இல் வங்காளம், பீகார் ஆகியவற்றைச் சேர்ந்த ஆப்கானியத் தலைவர்களை வெற்றி கொண்டார். ஆனால், தமது வெற்றிகளை ஒருங்கிணைக்கும் முன்னரே 1530இல் பாபர் இயற்கை எய்தினார். பாபர் துருக்கிய, பாரசீக மொழிகளில் புலமை பெற்றவராவார். துசுக்-இ-பாபரி என்ற தம் சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துகளையும், விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார். செங்கிஸ்கான் தம்முடைய மகன்களில் யார் தகுதியுடையவரோ அவரைத் தமது வாரிசாக அறிவித்திருந்தார். அம்மரபைப் பின்பற்றிப் பாபரும் தமக்குப் பிடித்த தன் மூத்த மகன் ஹீமாயுனைத் தம் வாரிசாக அறிவித்தார்.
ராணா சங்கா
ஹீமாயூன் (1530-1540, 1555-1556):
ஹீமாயூன் அரசபதவி ஏற்றவுடன் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்கத் தாம் பெற்ற நாட்டைப் பிரித்துச் சகோதரர்களுக்குக் கொடுத்தார். அதன் படி அவருடைய சகோதரர்கள் கம்ரான், ஹின்டல், அஸ்காரி ஆகிய மூவரும் ஒவ்வொரு பகுதியைப் பெற்றனர். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் டெல்லி அரியணையின் மீது ஆசை இருந்தது. இவர்களைத் தவிர ஹீமாயூனுக்கு வேறு சில போட்டியாளர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்து வந்த ஆப்கானியரான ஷெர்ஷா சூர் என்பவராவார். ஷெர்ஷா 1539இல் சௌசா என்ற இடத்திலும், 1540இல் கன்னோஜிலும் ஹீமாயூனைத் தோற்கடித்தார். அரியணையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹீமாயூன் ஈரானுக்குத் தப்பியோட நேர்ந்தது. பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். ஆனால், 1556இல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த ஹீமாயூன் மரணத்தைத் தழுவினார்.
ஹீமாயூன் கல்லறை
ஷெர்ஷா (1540-1545):
ஷெர்ஷா, பீகாரில் சசாரம் பகுதியை ஆண்டு வந்த ஹசன்சூரி என்னும் ஆப்கானியப்பிரபுவின் மகனாவார். ஹீமாயூனை ஆட்சியிழக்கச் செய்த பின்னர், ஷெர்ஷா ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார். தமது குறுகிய கால ஆட்சியில் வங்காளம் முதல் சிந்துவரை (காஷ்மீர் நீங்கலாக) பரவியிருந்த ஒரு பேரரசை உருவாக்கினார். நல்ல பயனைத் தரும் ஒரு நிலவருவாய் முறையினையும் அறிமுகம் செய்தார். ஷெர்ஷா பல சாலைகளை அமைத்தார். நாணயங்களையும் நிறுத்தல், முகத்தல் அளவுகளையும் தர அளவுப்படுத்தினார்.
ஷெர்ஷா
அக்பர் (1556-1605) அரியணை ஏறுதல்:
1556இல் ஹீமாயூன் இயற்கை எய்திய பின்னர், அவருடைய பதினான்கு வயது மகன் அக்பர் அரசராக முடிசூட்டப் பெற்றார். அக்பர் சிறுவனாக இருந்ததால், பைராம்கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார். ஆனால், சூர் வம்சத்தைச் சேர்ந்த ஹெமு என்னும் தளபதி 1556இல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார். அதே ஆண்டில் பைராம்கான் பானிப்பட் போர்க்களத்தில் (இரண்டாம் பானிப்பட் போர் 1556) ஹெமுவைத் தோற்கடித்துக் கொன்றார். நாட்டின் அன்றாட ஆட்சி விவகாரங்களில் பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவருடைய தூண்டுதலின் காரணமாக பைராம்கான் குஜராத்தில் கொல்லப்பட்டார். இதனால், அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
அக்பர்
பெண் ஆட்சியாளர்கள் மீது படையெடுப்பு:
அக்பர் மாளவத்தையும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றினார். மத்திய இந்தியப் பகுதியைச் சேர்ந்த ராணி துர்க்காவதியை பாபர் தோற்கடித்தார். இதனை, மற்றவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், அவர் அக்பருக்குத் தீங்கேதும் செய்யவில்லை இருந்தபோதிலும் பேரரசை உருவாக்கும் ஆசையால் உந்தப்பட்ட அக்பர், ராணியாரின் நல்லியல்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதைப்போலவே, தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சந்த் பீவியின் மீதும் அக்பர் படையெடுத்தார். ராணியார் காட்டிய வலுவான எதிர்ப்பால் பெரிதும் வியந்துபோன முகலாயப்படை, அவ்வம்மையார்க்குச் சாதகமாக அமைதி உடன்படிக்கை செய்து கொண்டது.
ராணி துர்காவதி
ஹால்டிகாட் போர்:
மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து 1568இல் சித்தூரையும் 1569இல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார். 1576இல் உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றி கொண்டார். தோல்வியுற்ற போதிலும் சேத்தக் என்னும் தமது குதிரையில் தப்பிய பிரதாப்சிங் காட்டில் இருந்தவாறே போரைத் தொடர்ந்தார். துணிச்சல் மிகுந்த இந்த ரஜபுத்திரர்களின் நினைவுகள் ராஜபுதனத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது அவரைப் பற்றிப் பல கதைகள் உள்ளன.
ராணா பிரதாப்
அரேபியா, தென்கிழக்காசியா, சீனாவுடன் வாணிகத் தொடர்பு:
குஜராத்தை அக்பர் கைப்பற்றிய நிகழ்வு, குஜராத் கடல்பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவர உதவியது. கிழக்கே வங்காளம், பீகார், ஒடிசா ஆகியவை மீது அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகள் தென்கிழக்கு ஆசியாவுடனும் சீனாவுடனும் தொடர்பு ஏற்பட உதவியது.
வடமேற்குப் படையெடுப்புகள்:
நாடுகளைக் கைப்பற்றும் நோக்கில் அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகளில் முக்கியமானவை வடமேற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதன் மூலம் அக்பர் காண்டகார், காஷ்மீர், காபூல் ஆகியவற்றைப் பேரரசுடன் இணைத்தார். தக்காணத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள் பீரார், காண்டேஷ், அகமது நகரின் சில பகுதிகள் இணைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. வடக்கே காஷ்மீர், தெற்கே கோதாவரி, மேற்கே காண்டகார், கிழக்கே வங்காளம் ஆகியவற்றுக்கிடையே முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.
1605இல் அக்பர் இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அக்பரின் கொள்கை:
வாள் வலிமையின் மூலம் பெறப்படும் ஆதாயங்களைக் காட்டிலும் அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்திருந்தார். எனவே இந்து பிரபுக்கள் மற்றும் இந்து மக்களின் திரளின் நம்பிக்கையைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும், இந்துப் பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளையும் நீக்கினார். ரஜபுத்திர உயர்குடிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், தன் மகனுக்கும் ரஜபுத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். பேரரசின் உயர் பதவிகளில் ரஜபுத்திரப் பிரபுக்களைப் பணியமர்த்தினார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டார்.
அக்பர் அனைத்து மதங்களைச் சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார். சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தனர். குரு ராம்தாசுக்கு அமிர்தசரசில் அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில் தான் பின்னர் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது. புதிய நகரான பதேப்பூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பெற்ற இபாதத்கானா என்னும் மண்டபத்தில் அனைத்து மதங்களின் அறிஞர்களும் ஒன்று கூடி உரையாடினர்.
பண்பாட்டுப் பங்களிப்பு:
அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துகளையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார். அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான்-இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்தனர். பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென் ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
ஜஹாங்கீர் (1605-1627):
அக்பருக்குப் பின்னர், அவருடைய ரஜபுத்திர மனைவிக்குப் பிறந்த இளவரசர் சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் கைப்பற்றியவர்) என்ற பெயரில் மகுடம் சூடினார். அரசாட்சியைக் காட்டிலும் கலைகள், ஓவியம், தோட்டங்கள், மலர்கள் ஆகியவற்றின் மீது அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் ஜஹாங்கீரின் மனைவியார், நூர்ஜகான் என அறியப்பட்ட மெகருன்னிசா உண்மையான அதிகாரத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையாரின் மரபுகளை ஓரளவு ஜஹாங்கீர் பின்பற்றினார். அக்பர் காலத்துச் சமய சகிப்புத் தன்மை ஜஹாங்கீர் காலத்திலும் தொடர்ந்தது.
ஆனாலும், தமக்கு எதிராக அரியணையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு கலகம் விளைவித்த தமது மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜீன் சிங்கைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார். இதன் விளைவாக முகலாயருக்கும் சீக்கியருக்கும் இடையே நெடுநாள் போர்கள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கான வணிகப் பாதைகளின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை முகலாயர் இழக்க நேர்ந்தது. காண்டகாரை முகலாயர் இழந்தது வடமேற்கிலிருந்து வரும் படையெடுப்புகளுக்கு இந்தியாவைத் திறந்து வைத்தது போன்றதாகியது. ஜஹாங்கீர் அகமது நகரைக் கைப்பற்றிய போதிலும், அது அவருடைய ஆட்சிக் காலம் முழுவதும் பிரச்சனைக்குரியதாகவே இருந்தது.
ஜஹாங்கீர்
ஜஹாங்கீர் போர்த்துகீசியருக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமைகளை வழங்கினார். இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியான தாமஸ்ரோ ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார். மேலும், அவரின் அனுமதி பெற்றும் தங்கள் முதல் வணிக மையத்தை சூரத்தில் நிறுவினார்.
நூர்ஜகான்
ஷாஜகான் (1627-1658):
ஜஹாங்கீரைத் தொடர்ந்து, இளவரசர் குர்ரம் ஒரு அதிகாரப் போராட்டத்திற்குப் பின்னர் ஷாஜகான் (உலகத்தின் அரசர்) என்ற பெயருடன் அரசராக ஆட்சிப் பொறுப்பெற்றார். அகமது நகருக்கு எதிராகப் படையெடுத்த அவர் 1632இல் அதை இணைத்துக் கொண்டார். பீஜப்பூரும் கோல்கொண்டாவும் கைப்பற்றப்பட்டன. இச்சமயத்தில் சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே (சிவாஜியின் தந்தை) போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மராத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர். இதனால், தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது. சமய விடயங்களில் ஷாஜகான் சகிப்புத்தன்மை அற்றவராக விளங்கினார். இவருடைய ஆட்சிக் காலத்தில் முகலாயரின் புகழ் அதன் உச்சத்தை எட்டியது. அது பாடத்தின் அடுத்த பகுதியில் விரிவாகக் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
1657இல் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய நான்கு மைந்தர்களுக்குள் வாரிசு உரிமைப்போர் வெடித்தது. தம்முடைய மூன்று சகோதரர்களான தாரா, சூஜா, முராத் ஆகியோரைக் கொன்று ஒளரங்கசீப் வெற்றி பெற்றார். தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை ஷாஜகான் ஒரு கைதியாக ஆக்ரா கோட்டையிலுள்ள ஷாபர்ஜ் அரண்மனையில் கழித்தார்.
ஷாஜகான்
ஓளரங்கசீப் (1658-1707):
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஒளரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார். ஆலம்கிர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார். இவர் தம் தாத்தா ஜஹாங்கீரைப்போல கலைகளின் மீது ஆர்வம் கொண்டவராகவோ தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டங்கொண்டவராகவோ இல்லை. தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை. இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார். இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார். 1658க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவிலிருந்து ஒளரங்கசீப் பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் சாத்னாமியர்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார். வடகிழக்கில் அவர் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் காமரூபாவைச் (அஸ்ஸாம்) சேர்ந்த ஆகோம் அரசுடன் போர் ஏற்படக் காரணமாயிற்று. இவ்வரசு முகலாயர்களால் பலமுறை தாக்கப்பட்டாலும் அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
ஓளரங்கசீப்
ரஜபுத்திரர் மற்றும் மராத்தியருடன் கொண்டிருந்த உறவு:
ஒளரங்கசீப் ரஜபுத்திரர்களின் மீது கொண்டிருந்த பகைமை அவர்களுடன் நெடுங்காலப் போருக்கு வழிவகுத்தது. நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அவருடைய மகன் இளவரசர் அக்பர் அவருக்கு எதிராக கலகம் செய்ததோடு ரஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு இடையூறு விளைவித்தார். தக்காணத்தில் இளவரசர் அக்பர் சிவாஜியின் மகன் சாம்பஜியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இதனால் 1689இல் ஒளரங்கசீப் தக்காணம் செல்ல நேர்ந்தது.
தக்காணத்தில் ஒளரங்கசீப் பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளைப் பணிய வைத்தார். தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட சிவாஜி, 1674இல் தம்மை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்தார். தென்மேற்கில் சிவாஜியின் எழுச்சியை ஒளரங்கசீப்பால் தடுக்க இயலவில்லை. ஆனால் அவரால் சிவாஜியின் மைந்தரான, பட்டத்து இளவரசர் சாம்பாஜியைக் கைது செய்து சித்திரவதை செய்து கொல்ல முடிந்தது. தம்முடைய தொண்ணூறாவது வயதில் 1707இல் மரணத்தைத் தழுவுகின்றவரை ஒளரங்கசீப் தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.
ஒளரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் மதராஸ் (சென்னை), கல்கத்தா (கொல்கத்தா), பம்பாய் (மும்பை) ஆகிய இடங்களில் தங்கள் வணிக மையங்களை வலுவாக நிறுவினார். பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தைப் பாண்டிச்சேரியில் நிறுவினர்.
முகலாயர் நிர்வாகம்:
மைய நிர்வாகம்:
இந்தியாவின் பெரும் பகுதியில் ஓர் உறுதியான நிர்வாகத்தை முகலாயர்கள் ஏற்படுத்தியிருந்தனர். முகலாய நிர்வாகக் கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர் பேரரசரே ஆவார். சட்டங்களை இயற்றுபவரும் அவரே; அவற்றைச் செயல்படுத்துபவரும் அவரே ஆவார். அவரே படைகளின் தலைமைத் தளபதி, அவரே நீதி வழங்குபவரும் ஆவார். அவருக்கு அமைச்சர் குழுவொன்று உதவியது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு: வக்கீல் (பிரதம மந்திரி) வஜீர் அல்லது திவான் (வருவாய்த் துறை மற்றும் செலவுகள்) மீர்பாக்க்ஷி இராணுவத்துறை அமைச்சராவார். மீர்சமான் அரண்மனை நிர்வாகத்தை கவனித்தார். குவாஜி தலைமை நீதிபதியாவார். சதா-உஸ்-சுதூர் இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப்படுத்தினார்.
மாகாண நிர்வாகம்:
பேரரசு பல சுபாக்களாகப் (மாகாணங்கள்/மாநிலங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுபாவும் ‘சுபேதார்’ என்னும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒவ்வொரு சுபாவும் பல சர்க்கார்களாகப் (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவே பர்கானாவாகும்.
உள்ளாட்சி நிர்வாகம்:
நகரங்களும் பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன. கொத்தவால் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தார். கிராம நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்துகளிடம் (முறைப்படுத்தப்படாத கிராம அளவிலான நீதி வழங்கும் அமைப்புகள்) வழங்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.
படை நிர்வாகம்:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன. அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.
மன்சப்தாரி முறை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார். மன்சப்தார் சாட், சவார் எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன. சாட், என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும். சவார் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரைவீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகளின் எண்ணிக்கையைப் (10 முதல் 10,000 வரை) பொறுத்திருந்தது. பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார். ஊதியம் பெறுவதற்கு முன்னர் நடைபெறும் மேற்பார்வையின்போது, மன்சப்தார் தமது குதிரை வீரர்களைக் காட்சிப்படுத்த வேண்டும். திருட்டைத் தவிர்ப்பதற்காகக் குதிரைகளுக்கு முத்திரையிடும் முறை பின்பற்றப்பட்டது. மன்சப்தாரால் பராமரிக்கப்படும் படைகளை அரசர் தமது விருப்பத்தின்படி பயன்படுத்தலாம் அக்பருடைய ஆட்சிக் காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக இல்லை. அவருக்குப் பின்னர், அது பரம்பரை உரிமை சார்ந்த பணியானது.
நிலவருவாய் நிர்வாகம்:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர்செய்தார். தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன. பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3) அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர். இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளத்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய தற்போதைய பெயர் ஜாகீர்தார் ஆகும். தங்களது ஊதியத்தைப் பணமாகப் பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார். ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார் ஆவார். அவருக்குப் பொட்டாதார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணை நிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.
ஜமீன்தாரி முறை:
நில உரிமையாளர்களிடமிருந்து நிலவரியை வசூலிக்கப் பணியமர்த்தப்பட்டவர்களே ஜமீன்தார்கள் ஆவர். ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர். சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர். உள்ளுர் அளவிலான தலைவர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால், பதினாராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார்களுக்குத் தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது. வரிவசூல் பணிகளைச் செய்வதற்காகப் படைகளை வைத்துக்கொள்ளும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறிஞர்களுக்கும், இறைப்பணியில் ஈடுபட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் அரசர் நிலங்களை வழங்கினார். வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.
சமயக்கொள்கை:
முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர். தம்முடைய சமயக் கொள்கையில் அக்பர் மிகவும் முற்போக்காளராகவும், தாராள மனப்பாங்கு கொண்டவராகவும் இருந்தார். அக்பரின் அவையில் போர்த்துகீசிய கிறித்துவப் பாதிரியார்கள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்துள்ளனர். அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்துத் தீன்-இலாகி (தெய்வீக மதம்) என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார். அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர். ஒளரங்கசீப் தம்முடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். முன்னரே குறிப்பிடப்பட்டது போல இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், பயணிகளின் மீதான வரியையும் மீண்டும் விதித்தார். ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.
கலை, கட்டடக்கலை:
பாபர், பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஆக்ரா, ப்யானா, டோலாப்பூர், குவாலியர் மற்றும் க்யூல் (அலிகார்) போன்ற பகுதிகளில் கட்டங்களைக் கட்டுவித்தார். ஆனால், அவற்றில் சில கட்டடங்கள் மட்டுமே தற்போது உள்ளன. ஹீமாயூனின் டெல்லி அரண்மனை, ‘தீன்-இ-பானா’. இது பின்னாளில் ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது. அவ்விடத்தில் ஷெர்சா, புரான கிலாவைக் கட்டினார். ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான நினைவுச் சின்னம் பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடமாகும்.
திவான்-இ-காஸ், திவான்-இ-ஆம், பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடம்) ரங் மஹால், சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டவையாகும். சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைவு செய்தார். மேலும், ஆக்ராவில் நூர்ஜகானின் தந்தையான இம்மத்-உத்-தௌலாவின் கல்லறயையும் கட்டினார்.
புராண கிலா
முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினத் கற்கள் பதிக்கப்பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது. யமுனை நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது. மேலும், ஆக்ராவிலுள்ள முத்து மசூதி (மோதி மசூதி) டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
புலந்தர்வாசா
ஓளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை. ஆனாலும், ஒளரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷாவால் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில் ஒளரங்கபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கதாகும்.
திவானி காஸ்
திவானி ஆம்
பாடச்சுருக்கம்:
- பானிப்பட் போரில் (1526) இப்ராகிம் லோடி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாபர் 1526இல் முகலாயப் பேரரசை நிறுவினார். ஹீமாயூனின் உறுதியற்ற இயல்பும் கன்னோஜ் போரில் ஷெர்சா அவரை வெற்றி கொண்டதும் ஷெர்ஷாவின் திறன் மிகுந்த நில வருவாய் நிர்வாகமும் நிறுத்தல், முகத்தல் அளவுகளை அவர் தர அளவுப்படுத்தியதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
- ஹீமாயூன் பேரரசை மீட்டல், அவரின் தீடீர் மரணம், பைராம்கானைப் பகர ஆளுநராகக் கொண்டு அக்பர் அரியணை ஏறுதல், சூர்வம்சத்தின் சிறந்த தளபதியான ஹெமுவை பானிப்பட் போரில் (1556) தோற்கடித்தல் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.
- அக்பருடைய இராணுவப் படையெடுப்புகளும், அவருடைய சமயக் கொள்கையும் விவரிக்கப்பட்டுள்ளன.
- அரசு நிர்வாகத்தில் ஜஹாங்கீரின் அக்கறையற்ற போக்கு முகலாய அரசவையில் அவருடைய மனைவி நூர்ஜகானின் மேலாதிக்கம் ஏற்படக் காரணமாக இருந்தது விளக்கப்பட்டுள்ளது.
- முகலாயர் ஆட்சியை ஷாஜகான் தக்காணப் பகுதிக்கு விரிவுபடுத்தியதும் அதன் விளைவாக மராத்தியரோடு ஏற்பட்ட மோதலும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.
- ஒளரங்கசீப்பின் படையெடுப்புகள் முகலாயப் பேரரசின் விரிவாக்கத்திற்கு உதவிய போதிலும், ரஜபுத்திரர், மராத்தியர், சீக்கியர் ஆகியோருக்கு எதிராக அவர் பின்பற்றிய கொள்கைகள் அவர்களின் எதிர்ப்பைத் தூண்டி பேரரசின் சரிவுக்கு இட்டுச் சென்றது விவரிக்கப்பட்டுள்ளது.
- முகலாய நிர்வாகத்திற்கு அரசர் தலைமையேற்றதும் அவருக்கு உதவிய பல அதிகாரிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அக்பருடைய மன்சப்தாரி முறையும், ஜப்த் முறையின்படி ராஜா தோடர்மால் தமது நிலவருவாய் கொள்கையை வடிவமைத்ததும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பண்பாட்டு வளர்ச்சிக்கான முகலாயரின் பங்களிப்பு குறிப்பாகக் கலை, கட்டடக் கலைக்கான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சொற்களஞ்சியம்:
1 | போர்ப்பயணம் | Expedition | A journey undertaken with the purpose of war |
2 | நீண்ட | Prolonged | Lengthy |
3 | அடக்குதல் | Subdued | Conquered |
4 | கலகக்கார | Rebellious | Showing a desire to resist authority |
5 | மதிப்பளித்தல் | Bestowed | Awarded |
6 | பாரம்பரிய | Hereditary | Inheritance of a title, office, or right |
7 | நீடித்த / நீடித்த காலம் | Enduring | Lasting over a period of time |
செங்கோட்டை:
லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள “செங்கோட்டை” முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும். இது 1639இல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும், இக்கோட்டை சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.