முகலாயப் பேரரசு Notes 11th History
11th History Lesson 9 Notes in Tamil
9. முகலாயப் பேரரசு
அறிமுகம்
இந்தியாவின் மீது மேற்கு, வடமேற்குத் திசைகளிலிருந்து மகா அலெக்ஸாண்டர் காலம் தொடங்கி நூற்றாண்டுகளின் ஊடாகப் பலமுறை படையெடுப்புகள் நடைபெற்றுள்ளன. வடஇந்தியாவின் பல பகுதிகள் இந்தோ-கிரேக்கர்கள், சாகர், குஷாணர், ஆப்கானியர் போன்ற அந்நியர்களால் ஆளப்பட்டுள்ளன. மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்களான முகலாயர் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவினார். அப்பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது. ஆனால் அவர்களை நாம் அந்நிய தேசங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களாகக் கருதவில்லை; மாறாக நம் நாட்டைச் சேர்ந்த அரச வம்சாவளியினராகவே கருதுகிறோம்.
முகலாயப் பேரரசை நிறுவியர் பாபர். இப்பேரரசு 1526இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்தபின் நிறுவப்பட்டது. இவ்வாறு இந்தியாவில், ஒரு புதிய சகாப்தம் , ஒரு புதிய பேரரசு தொடங்கி 1526 முதல் 1857 வரை நீடித்தது. முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்களான பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் ஆகியோர் இந்திய வரலாற்றில் தங்கள் தடங்களைப் பதித்தனர். 1707இல் ஔரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து பேரரசு வீழ்ச்சியடைந்தது. என்றாலும் 1707 முதல் 1857 வரை முகலாயர் அரசு பெயரளவுக்கு ஓர் அரசாக இயங்கி வந்தது. ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1857ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சிக்குப் பின் அரசியல் அதிகாரம் ஆங்கிலேய அரசியாரின் கைவசமானபோது ஆட்சி ஆங்கிலேயரின் கைகளுக்குச் சென்றது. முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரையிலும், காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரையிலும் பரந்து விரிந்திருந்தது. இந்தியா முழுவதிலும் மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினர். முகலாயர்கள், குறிப்பாக அக்பர், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒரே நாட்டினராக ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுத் தேசிய அடையாள அரசியலை உருவாக்கினார். மேலும் இந்தியாவைச் செழுமைப்படுத்திய மகத்தான கலை கட்டடக்கலை, இலக்கிய, பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றனர்.
ஜாகிருதீன் முகமது பாபர் (1526 – 1530)
- மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் (துருக்கிய இனக்குழு); சபாவி (ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர்; ஷியா முஸ்லீம் பிரிவை ஆதரித்தவர்கள்); உதுமானியத் துருக்கியர் (சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரிடையே நடைபெற்ற மேலாதிக்கத்திற்கான போட்டி, சாமர்கண்ட் பகுதியின் அரசரான பாபரை, தனது வாழ்க்கை வளத்துக்கான வாய்ப்புகளை வேறு இடங்களில் தேடிச் செல்லக் கட்டாயப்படுத்தியது. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம் அவர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தேவையான தகவல்களை அவருக்கு வழங்கியது.
- ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்னர் தைமூர் செய்தததை மீண்டும் செய்ய வேண்டுமெனக் கனவு கண்டுகொண்டிருந்த பாபர், தில்லி சுல்தானியம் அரசியல் ரீதியாகச் சிதைவுற்றதைத் தொடர்ந்து 1526இல் தில்லியைத் தலைநகராகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவுவதில் வெற்றி பெற்றார்.
- பாபர் பதினோரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை (தற்போது உஸ்பெக்கிஸ்தானிலுள்ள ஒரு நகரம்) மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார். எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் அரியணையை இழந்த அவர் விரைவில் அதை மீட்டார்.
- ஆனால் ஈரானில் வலிமைவாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடத்தினாலும், மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில்தான் அமைக்க முடியுமென உணர்ந்தார்.
- தைமூர் வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகையால் பஞ்சாப் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. ஏனெனில் முன்பு பஞ்சாபின் ஒரு பகுதி தைமூரின் ஆளுமைக்குள் இருந்திருக்கிறது.
- 1519க்கும் 1524க்கும் இடையே அவர் பேரா, சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்து இந்துஸ்தானை கைப்பற்றும் உறுதியான எண்ணத்தை வெளிக்காட்டினார். இந்துஸ்தானின் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது.
- காபூல் , கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் சிந்து நதியைக் கடந்து ஒரு சிறிய அரசை ஏற்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுப்பதற்கான காலமும் கனிந்தது. லோடி வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தான் இப்ராகிம் லோடி தன் நாட்டை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஆப்கானியர், ராஜபுத்திரர் ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுக்களை பாபர் சந்தித்தார்.
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, முதலில் தனக்கு உதவி செய்வதாக உறுதிகூறி பின்னர் பின்வாங்கிய தௌலத்கான் லோடியின் படைகளை லாகூரில் வென்றார்.
முதலாம் பானிப்பட் போர் (ஏப்ரல் 21, 1526)
- இதன் பின்னர் பாபர் லோடியால் ஆளப்பட்ட பஞ்சாப்பை நோக்கித் திரும்பினார். பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கையில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது. தில்லியையும் ஆக்ராவையும் பாபர் கைப்பற்றினாலும் ஆப்கானியர்களையும் ரஜபுத்திரர்களையும் அடக்க வேண்டிய அவசியமிருந்தது.
- பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு artillery ஆகும். இதை இடம் விட்டு இடம் கொண்டு செல்லலாம். பொதுவாக ஒருவருக்கும் மேற்பட்ட நபர்களால் இவை இயக்கப்படும். வெடிமருந்து முதன்முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது. பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இது துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது. பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
கான்வா போர் 1527
- அடுத்தபடியாக பாபர் மேவாரின் அரசனும் ராஜஸ்தான் மாளவம் ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சித்தூரின் ராணா சங்காவை போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தீர்மானித்தார். தவிர்க்கமுடியாத அம்மோதலுக்குச் சாதகமான களமாக ஆக்ராவுக்கு அருகேயுள்ள கான்வா என்னுமிடத்தைத் தேர்வு செய்தார்.
- தன்னுடைய அச்சமூட்டக் கூடிய பெரும்படையோடும் அதற்கு வலுச்சேர்த்த ஆப்கான் முஸ்லீம்கள், இப்ராகிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி ஆகியோரின் உதவியோடு ஆவேசமாக அணிவகுத்து வந்த ராணா சங்காவின் படைகள் பாபரின் படைகளை எதிர்கொண்டன.
- மீண்டும் ராணுவ தந்திரத்தாலும், பீரங்கிப்படைகளைத் திறம்பட பயன்படுத்தியதாலும் பாபர் ராணா சங்காவின் படைகளைத் தோற்கடித்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது பாபரின் நிலைக்கு மேலும் வலுவூட்டியது.
சந்தேரிப் போர் 1528
அடுத்து சிறப்பு வாய்ந்த மாளவப் பகுதியின் மீது பாபரின் மேலாதிக்கத்தை உறுதி செய்தது சந்தேரியில் மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போராகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்துவரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.
காக்ரா போர் 1529
ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும். சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர். ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். கங்கை நதியின் துணை நதியாக காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார். ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530இல் காலமானார்.
- பாபரின் இறப்பைப் பற்றி ஒரு கதையுள்ளது. அவருடைய மகன் ஹூமாயூன் நோய் வாய்ப்பட்டிருந்தார். மகன் மீது கொண்டிருந்த பாசத்தால் மகன் உடல்நலம் பெற்றால் தனதுயிரை ஈவதாக பாபர் பிராத்தனை செய்தார். ஹூமாயூன் நோயிலிருந்து மீண்டார்.
பாபரைப் பற்றிய மதிப்பீடு
- முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை பெற்றவராவார். தனது வாழ்க்கையைப் பற்றிய பாபரின் நினைவுக் குறிப்புகளான துசுக்-இ-பாபுரி (பாபர் நாமா) உலகச் செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
- ஒரு சில காலம் இந்தியாவை ஆண்ட ஆப்கானியரைப் பற்றியோ அல்லது அவர்களால் ஆளப்பட்ட பெரும்பான்மை மக்களைப் பற்றியோ வியந்து பாராட்டும் அளவிற்கு பாபர் எதையும் பார்க்கவில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிய அவருடைய சில கருத்துக்கள் சுவாரசியமாக உள்ளன.
- இந்தியா எதைப் பெற்றிருந்தது என்பதை பாபர் பின்வருமாறு விவரிக்கிறார்: இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது.
- இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
- காந்தகாரில் தொடங்கி வங்காளத்தின் எல்லை வரையிலான பாபருக்குச் சொந்தமான பகுதிகள் தற்போது பாதுகாப்பாய் இருந்தன. இருந்தபோதிலும் ரஜபுத்திரர்களின் விரிந்து பரந்த பாலைவனப் பகுதிகளிலும் ராந்தம்பூர், குவாலியர், சந்தேரி ஆகியவற்றிலும், ரஜபுத்திரத் தலைவர்கள் தங்களிடையே சண்டைகளிட்டுக் கொண்டிருந்ததால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகம் என்பதில்லை. பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டுச் சென்றார்.
ஹூமாயூன் (1530 – 1540 ; 1555 – 1556)
- ஹூமாயூன் பண்பாடும் கல்வியறிவும் மிக்கவர். ஆனால் தனது தந்தையைப் போல் பெரும் வீரர் அல்ல. பலவீனமான பொருளாதார முறை, கொள்ளையடிக்கும் இயல்புடைய ஆப்கானியர், ஆகிய இரண்டு சிக்கல்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.
- குஜராத் அரசரான பகதூர்ஷா அச்சத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். காபூல், காந்தகார் பகுதிகளுக்குப் பொறிப்பு வகித்த ஹூமாயூனின் சகோதரர் கம்ரான் தன்னுடைய அதிகாரத்தைப் பஞ்சாப் வரை நீட்டித்தார்
- பாபர் மரணமுறும் தருவாயில் சகோதரர்களை அன்புடன் நடத்துவேன் பாபருக்குக் கொடுத்த சத்தியவாக்கை நினைவில் நிறுத்திய ஹூமாயூன் பஞ்சாப் மீதான கம்ரானின் ஆட்சியதிகாரத்தை ஓர் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காக ஏற்றுக்கொண்டார்.
- பீகார், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷெர்கான் (பின்னர் ஷெர்ஷா) என்பவரின் தலைமையில் வளர்ந்துவரும் ஆப்கானியரின் அதிகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹூமாயூனைத் தூண்டின.
- 1532இல் தௌரா என்னுமிடத்தில் ஆப்கானியரைத் தோற்கடித்த ஹூமாயூன், பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார். நான்கு மாதங்களுக்குப் பின்னர் முகலாயருக்கு விசுவாசமாக இருப்பேன் எனப் பொய்யாக வாக்குறுதியளித்த ஷெர்ஷாவின் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முறுகையைக் கைவிட்டார். ஹூமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
- பின்னர் வந்த ஆண்டுகளில் அவருடைய எதிரிகள் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இவர் தில்லியில் ‘தீன்பனா’ என்னும் புதிய நகரை உருவாக்குவதில் கழித்தார்.
- இதே சமயத்தில் பகதூர்ஷா ராஜஸ்தானைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டதோடு முகலாயர்களுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தூண்டியும் விட்டார்.
- வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த ஹூமாயூன் பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரரான அஸ்காரியின் பொறுப்பில் விட்டார்.
- குஜராத் மக்களின் கலகங்களை அடக்க இயலாத நிலையில் அஸ்காரி ஆக்ரா செல்லத் தீர்மானித்தார். அஸ்காரி ஆக்ராவைக் கைப்பற்றி தனதாக்கிக் கொள்வார் என்ற அச்சத்தில் மாண்டுவில் தங்கியிருந்த ஹூமாயுன் குஜராத்தையும் மாளவத்தையும் கைவிட்டுவிட்டுப் படைகளோடு சகோதரரைப் பின் தொடர்ந்தார். ராஜஸ்தானில் சந்தித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் சமாதானமாயினர்.
- பகதூர்ஷா தொடர்பான போர் நிகழ்வுகளில் ஹூமாயூன், முழுமையாக ஈடுபட்டிருந்த வேளையில் ஷெர்கான் வங்காள ஆட்சியாளரைத் தோற்கடுத்து தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
- வங்காளத்திலுள்ள கோட்டையும் ரோக்தா கோட்டையும் அவரால் கைப்பற்றப்பட்டன. சுனார் கோட்டையைக் கைப்பற்றிய ஹூமாயூன் ஷெர்கானை எதிர் கொள்வதற்காக வங்காளம் நோக்கிப் புறப்பட்டார். இடையே கவுர் அல்லது கௌடா என்ற இடத்தை ஹூமாயூன் அடைந்தபோது அவருடைய மற்றொரு சகோதரரான ஹிண்டால் கிளர்ச்சி செய்வதாக தகவல் வந்தது.
- ஆகவே ஹூமாயூன் அதை அடக்குவதற்காக ஆக்ரா நோக்கிப் புறப்பட்டார். அதுவரையில் அமைதி காத்த ஷெர்கான் இப்போது ஹூமாயூனின் படைகளைத் தாக்கத் தொடங்கினார். மிகப்பெரும் இடர்பாடுகளுக்குப் பின்னர் ஹூமாயூன் சௌசா என்னுமிடத்தை அடைந்தபோது ஒரு முழுமையான போரே ஏற்பட்டது.
சௌசாப் போர் (1539)
ஷெர்கான் தனது மேலான, அரசியல், ராணுவத் திறமைகளால் இப்போரில் வெற்றி பெற்றார். ஹூமாயூன் பெருந்தோல்வியைச் சந்தித்தார். இப்போரில் 7000 முகலாயப் பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர். தன்னுயிரைக் காத்துக் கோள்ளத் தப்பியோடிய ஹூமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்தார். ஆக்ராவை சென்றடைந்த அவர் சகோதரர்கள் அஸ்காரி, ஹிண்டால் ஆகியோரின் உதவியோடு ஷெர்கானை எதிர்கொள்ள படையொன்றைத் திரட்டினார். இறுதி மோதல் கன்னோசியில் நடைபெற்றது.
கன்னோசிப் போர் (1540)
கன்னோசி போரில் ஹூமாயூனின் படைகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. அவர் நாடற்ற அரசரானார்.
ஷெர்ஷாவும் சூர் வம்சமும்
- ஹூமாயூன் கன்னோசி போரில் தோல்வியடைந்து தனது அரியணையை இழந்த பின்னர் மீண்டும் 1555இல் தில்லியைக் கைப்பற்றித் தனது அதிகாரத்தை மீட்பதற்கு இடைப்பட்ட காலப்பகுதில் சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவால் தில்லி ஆளப்பட்டது.
- ஒரு ஜாகீர்தாரின் குடும்பத்தில் பிறந்து பரித் என்றழைக்கப்பட்ட இவர் ஒரு புலியைக் (ஹிந்தியின் ஷெர்) கொன்றதனால் ஷெர்கான் என்னும் பெயரைப் பெற்றார். அரியணை ஏறிய பின் ஷெர்ஷா என்றழைக்கப்பட்டார்.
- தன் திறமையினாலும் ஆற்றலினாலும் இந்தியாவிலிருந்த ஆப்கானியரின் தலைவரானார். அவருடைய இராணுவ மதிநுட்பமும் அரசியல் செயல்திறனும் ஹூமாயூனுக்கு எதிராகவும் ஏனைய ரஜபுத்திர அரசுகளுக்கு எதிராகவும் அவருக்கு வெற்றிகளை ஈந்தன.
- மாளவம் போரொடாமலேயே அவரிடம் வீழ்ந்தது. மேவாரின் உதய்சிங் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் சரணடைந்தார். கலிஞ்சாரைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது அடுத்த முயற்சியில் அவர் தோல்விக்கண்டார்.
- வெடிகுண்டு விபத்தின் காரணமாக 1545இல் அவர் உயிரிழந்தார். அவருக்குப்பின் பதவியேற்ற அவருடைய இரண்டாவது மகன் இஸ்லாம்ஷா 1553 வரை ஆட்சி புரிந்தார். சிறு வயதிலேயே அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து வாரிசுரிமை பற்றிய குழப்பம் நிலவியது. இச்சூழ்நிலையை ஹூமாயூன் பயன்படுத்தி தில்லியையும் ஆக்ராவையும் சூர்வம்ச அரசர்களிடமிருந்து மீட்டார்.
ஷெர்ஷாவின் சீர்திருத்தங்கள்
- ஹீமாயூனைப் பின்தொடர்ந்த ஷெர்ஷா அதற்கு முன்னர் கிசிர்கான் என்பவரை வங்காளத்தின் ஆளுநராக நியமித்திருந்தார் கிசிர்கான் வங்காளத்தின் முன்னாள் ஆட்சியரான சுல்தான் மகமுதுவின் மகளை மணந்தவர். அவர் சுதந்திர அரசரைப்போல் செயல்படத் துவங்கினார்.
- ஊர் திரும்பியவுடன் அவரைக் கைது செய்ய ஷெர்ஷா உத்தரவிட்டார். பிராந்திய அரசுகளின் கீழ்ப்படியாமையைக் குறித்து நன்கு அறிந்திருந்த ஷெர்ஷா, ஒரு வலிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குவதே பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனக் கருதினார்.
- எனவே அவர் தனது அரசை மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார் தில்லி சுல்தானியத்தின் உள்ளாட்சித் துறை நிர்வாகக் கட்டமைப்பு ஒரு நில மாற்றங்களோடு பின்பற்றப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களில் களவு போகும் பொருட்களுக்கு கிராமத்தலைவரே பொறுப்பு என்றானவுடன் கிராமத் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடக்கினர்.
- ‘விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்” என ஷெர்ஷா நம்பினார். படைகள் ஓரிடம் விட்டு வேறிடங்களுக்குச் செல்கையில் பயிர்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதில் ஷெர்ஷா தனிக்கவனம் செலுத்தினார். நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
- நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது.
- ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார். வணிகத்தை ஊக்குவிப்ப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
- நுழைவு வரி, விற்பனை வரி ஆகியவை மட்டுமே வசூலிக்கப்பட்டன. தங்க, வெள்ளி, செப்புக் காசுகளில் இடம் பெறும் உலோகங்களின் தரஅளவு வரையறை செய்யப்பட்டது வணிகத்திற்கு வசதி செய்து கொடுத்தது.
- அவருடைய நாணயமுறையானது முகலாயர் காலம் முழுவதும் அப்படியே பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கும் அடித்தளமானது.
- வணிகத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பாராமரித்தார். பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன. சிந்துப் பகுதியிலிருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கியப் பெருவழியைச் செப்பனிட்டதோடு குஜராத் கடற்கரைத் துறைமுகங்களை ஆக்ராவோடும் ஜோத்பூரோடும் இணைக்கும் புதிய சாலைகளையும் அமைத்தார்.
- லாகூர் முல்தான் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய சாலை அமைக்கப்பட்டது. அனைத்துச் சாலைகளிலும் ‘சராய்’ எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப்பட்டன.
- இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்ரவாதம் அளித்தன. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் ஊறுதி செய்தன.
- ஷெர்ஷா பெருமளவில் நற்தொண்டுகளைச் செய்தார். ஆதரவற்றோர்க்குச் செய்தார். ஆதரவற்றோர்க்குக் கருவூலத்திலிருந்து உதவித்தொகை வழங்கினார். ஷெர்ஷா இரு வைதீக சன்னி முஸ்லீம் ஆவார். பாரபட்சமில்லாமல் நீதி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் பிரபுக்களாயிருந்தாலும் தனது உறவினர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தவறவில்லை. கலக மனப்பாங்கு கொண்ட ஜமீந்தார்கள், பிரபுக்கள், கொள்ளையர் , திருடர்கள் ஆகியோரை கடுமையான தண்டனைகள் மூலம் ஒடுக்கி பேரரசில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.
- மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும். ஷெர்ஷாவுக்குப் புதிய நகரங்களை நிர்மாணிக்கவோ கட்டடங்களைக் கட்டவோ போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.
- தில்லியில் கோட்டைச் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார். பின்னர் அது புராண கிலா (Old Fort) என அழைக்கப்பட்டது. தன்னுடைய கல்லறை மாடத்தை சசாரம் என்னுமிடத்தில் கட்டினார்.
ஜாகீர்தாரி முறை
இது ஒரு நில உடைமை முறையாகும். தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை, வளர்ச்சி பெற்றது. இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கிற அதிகாரமும் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
ஜமீன்தாரி
இச்சொல் மற்றொரு நில உடைமை முறையைக் குறிப்பதாகும். பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள். முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தோரே ஜமீன்தார்களாக இருந்தனர். அக்பர் பிரபுக்களுக்கும் முந்தைய அரச குடும்பங்களின் வழித்தோன்றல்களுக்கும் நிலங்களை வழங்கி அவற்றை பரம்பரையாக அனுபவிக்கும் உரிமையையும் வழங்கினார்.
ஜமீன்தார்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரி வசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தினர்.
ஹூமாயூன் மீண்டு வருதல்
- ஷெர்ஷா 1545இல் காலமான பின்னர் அவருக்குப் பின்வந்த வலிமை குன்றிய அரசர்கள் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். கன்னோசி போரில் தோற்றுத் தப்பியோடிய ஹூமாயூன் பாரசீகத்தில் தஞ்சம் புகுந்தார்.
- பின்னர் பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹூமாயூன் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார். . ஆனால் அவரிடைய சகோதரர் கம்ரான் அவர் கைப்பற்றிய பகுதிகளை அமைதியாக ஆட்சி புரிய ஹூமாயூன் அனுமதிக்கவில்லை.
- சகோதரர்களுக்கு இடையிலான போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானத்தில் முடிந்தது. இதனிடையே சூர் பேரரசு பல துண்டுகளாகச் சிதைவடைந்தது. எனவே ஹூமாயூனின் படையெடுப்பு எளிதானது.
- முகலாயரின் வருகையைக் கண்ட பஞ்சாபிலிருந்த ஆப்கானியப் படைகள் தப்பியோடத் தொடங்கின. ஹூமாயூன் மீண்டும் பேரரசர் ஆனார். ஆனால் மிக விரைவிலேயே தில்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுது ஹூமாயூன் இறந்து போனார்.
- ஸ்டேன்லி லேன்பூலின் பொருள் பொதிந்த வார்த்தைகளில் சொல்வதென்றால் “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுது இறந்தார்”.
அக்பர் (1556 – 1605)
- ரஜபுதனத்துப் பாலைவனங்களில் ஹூமாயூன் அலைந்து திரிந்தபோது அவருடைய மனைவி 1542இல் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அந்த ஆண் மகனே ஜலாலுதீன் என்று அறியப்பட்ட அக்பர்.
- பதினான்காவது வயதில் அவருக்கு முடிசூட்டப்பட்டது. அக்பர் அரியணை ஏறியபோது இன்னும் வலிமையாக இருந்த ஆப்கானியரும் ரஜபுத்திரரும் பெரும் சவாலாகத் திகழ்ந்தனர். இருந்தபோதிலும் அக்பர், பைராம்கான் என்ற தலைசிறந்த பாதுகாவலரைப் பெற்றிருந்தார்.
இரண்டாம் பானிப்பட் போர் (1556)
- தில்லியில் வீற்றிருந்த ஷெர்ஷாவின் வழிவந்த ஆப்கானிய அரசன் அடில்ஷாவின் இந்து படைத்தளபதியான ஹெமு, முகலாயருக்கு எதிராக ஆப்கானியர் படைகளுக்குத் தான் தலைமையேற்றுச் செல்ல அனுமதிக்குமாறு அரசனைக் கேட்டுக்கொண்டார்.
- அரசர் ஊக்கம் தரவே ஹெமு முதலில் குவாலியரைக் கைப்பற்றி அதன் முகலாய ஆளுநரை வெளியேற்றினார். அடுத்து எவ்வித எதிர்ப்புமின்றி ஆக்ராவைக் கைப்பற்றினார். ஹெமுவின் தாராளத் தன்மை தில்லியைக் கைப்பற்றும்போது பலம் வாய்ந்த எதிரிகளை வெல்ல உதவியது.
- அக்பர் 1556 நவம்பர் மாதம் தில்லியை நோக்கிப் புறப்பட்டு ஹெமுவை இரண்டாம் பானிப்பட் போரில் சந்தித்தார். போர் ஹெமுவுக்குச் சாதகமாக முடியவிருந்த தருவாயில் அவர் கண்ணில் அம்பொன்று பாய மயக்கமுற்று கீழே விழுந்தார்.
- தலைமை இல்லாத ஆப்கானியப் படைகளை முகலாயப் படைகள் வெற்றி பெற்றன. ஹெமு கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இவ்வெற்றி அக்பரை ஆக்ரா மற்றும் தில்லியின் அதிபதி ஆக்கியது. முகலாயப் பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.
அக்பரும் பைராம்கானும்
- அக்பர் ஒரு வெற்றியாளராக வட இந்தியா முழுவதையும் வாகை சூடி வலம் வந்தார். அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் பகர ஆளுந்ர பைராம்கானின் கீழ், நாடு குவாலியர், அஜ்மீர் உட்பட காபூலிலிருந்து ஜான்பூர் வரை விரிவடைந்தது.
- தன் சாதனைகளின் காரணமாய் பைரம்கான் தன்போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்துகொள்ளத் துவங்கினார். இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதைச் சாதுர்யமாகக் கையாண்டார். இறுதியில் அக்பர் முன் ஒப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார். செல்லும் வழியில் ஆப்கானியன் ஒருவனால் கொல்லப்பட்டார். பைராம்கானின் குடும்பம் தில்லிக்கு அழைத்துவரப்பட்டது.
- பைரம்கானின் மகன் அப்துர் ரகீம் அறிவுக் கூர்மை மிக்க மேதையாக கான் –இ-கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிந்தார்.
அக்பரின் படையெடுப்புகள்
- அக்பர் மிகப்பெரும் வெற்றிப் படையெடுப்புகள் மூலம் மகத்தானதொரு பேரரசுக்கான அடிக்கல்லை நாட்டினார். 1562இல் மாளவம் பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார்.
- 1564இல் இந்தியாவின் மையப்பகுதியிலிருந்த கோண்டுவானா அதன் ராணி துர்காதேவி அவ்வம்மையாரின் மகன் வீர்நாராயணன் ஆகியோருடனான கடும் போருக்குப்பின் கைப்பற்றப்பட்டது.
- மேவார் அரசரான ராணா உதய்சிங் சித்தூரை இழப்பதற்கு முன்னர் கடுமையாகப் போரிட்டார். ஆறுமாதகால முற்றுகைக்குப் பின்னர் சித்தூர் கைப்பற்றப்பட்டது.
- ராணா உதய்சிங் குன்றுகளுக்குள் பின்வாங்க அவரின் தளபதிகளான ஜெய்மால், பட்டா ஆகியோர் போரைத் தொடந்து நடத்தினர். இவ்வொருவர் உட்பட 30,000 ரஜபுத்திர வீரர்கள் இப்போரில் கொல்லப்பட்டனர்.
- ஜெய்மால், பட்டா ஆகியோரின் துணிச்சலைக் கண்டு பெரும் வியப்படைந்த அக்பர் அவர்களின் நினைவாகவும் அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் ஆக்ரா கோட்டையின் முக்கிய நுழைவாயிலில் அவர்களின் சிலைகளை நிறுவினார்.
- சித்தூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ரஜபுத்திர அரசுகளான ராந்தம்பூர், கலிஞ்சார், பிக்கானீர், ஜோத்பூர், ஜெய்சால்மர் ஆகியவை சரணடைந்தன.
- மத்திய இந்தியப் பகுதிகளைக் கீழ்படிய வைத்த பின்னர் அக்பர் தனது கவனத்தை செல்வச்செழிப்புமிக்க, கடல்சார் வணிகத்திற்குப் புகழ்பெற்ற குஜராத் மீது செலுத்தினார்.
- அதன் அரசன் முசாபர்ஷாவிடமிருந்து 1573இல் குஜராத்தைக் கைப்பற்றினார். குஜராத் தக்காணத்தைக் கைப்பற்றுவதற்கான ஏவுதளமானது. பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்கான் அக்பரால் தோற்கடிக்கப்பட்டு அவ்விரு பகுதிகளும் 1576இல் முகலாயப் பேரரசோடு இணைக்கப்பட்டன.
- ராஜா மான்சிங், பகவந்தாஸ் ஆகியோரின் உதவியுடன் அக்பர் காபூலைச் சேர்ந்த மிர்சா ஹக்கீமைத் தோற்கடித்தார். காஷ்மீரையும் (1586) சிந்துவையும் (1591) அக்பர் கைப்பற்றியது வடமேற்கில் அவருடைய பேரரசை வலுப்படுத்தியது.
- வட இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்த பின்னர் அக்பர் தக்காணத்தின் மீது கவம் கோண்டார். அக்பருடைய படைகள் 1591இல் காண்டேஷ் பகுதியைக் கைப்பற்றின. 1596இல் சாந்த்பீபியிடமிருந்து பெரார் கைப்பற்றப்பட்டது.
- இவ்வம்மையார் அகமதுநகரின் நிஜாம் சாகி வம்சத்தை சேர்ந்த தன் உடன்பிறப்பின் அமகதுநகரைத் தாக்கிய முகலாயப்படைகளை எதிர்த்து வீரத்தோடு போராடினார்.
- 1600இல் அகமதுநகர் அரசின் ஒரு சில பகுதிகள் முகலாயர் படைகளின் கைவசமானது. 1604இல் செப்டம்பர் மாதம் அக்பர் நோய்வாய்ப்பட்டு 1605 அக்டோபர் மாதம் 27ஆம் நாள் இயற்கை எய்தினார்.
ரஜபுத்திரக் கொள்கை
- இந்துக்களுடைய நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அக்பர் மனமார்ந்த முயற்சிகளை மேற்கொண்டார். முஸ்லீம் அல்லாத மக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும் (தலை வரி) இந்து புனித யாத்திரைகளின் மீதி விதிக்கப்பட்டிருந்த வரியையும் நீக்கினார்.
- போர்க்கைதிகளை அடிமைகளாக்கும் நடைமுறையும் வைவிடப்பட்டது. இந்து விதவைகள் பின்பற்றிய உடன்கட்டை ஏறும் முறையும் ஒழிக்கப்பட்டது. அவருடைய இணக்கமான ரஜபுத்திரக் கொள்கையானது ரஜபுத்திர அரச குடும்பங்களோடு திருமண உறவை மேற்கொள்ளுதல், அரசவையில் உயர்ந்த பதவிகளில் அவர்களை அமர்த்துதல் ஆகியவற்றை உள்ள்டக்கியதாகும்.
- சகிப்புத்தன்மை கொண்ட மதக் கொள்கையானது பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் மக்கள் ஒருங்கிணைவதை உறுதி செய்தது. அக்பருக்கு முன்னரே பல முஸ்லீம் அரசர்கள் ரஜபுத்திர இளவரசிகளைத் திருமணம் செய்திருந்தனர். ஆனால் அக்பர் பரந்த மனப்பான்மையோடு இக்குடும்பங்களோடு நெருக்கமான உறவினை மேற்கொண்டு இத்திருமணங்கள் இருவேறு பண்பாடுகளை இணைக்கின்ற சக்தியாக மாறுவதற்குக் காரணமாக இருந்தார்.
- அக்பர் ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மல் (பீகாரிமால் என்று அறியப்பட்டவரின்) மகளான ஹர்க்கா பாயை மணந்தார். இந்த ஹர்க்காபாய் பின்னாளில் ஜோதா அக்பர் என்று அழைக்கப்பட்டார்.
- மேலும் பிக்கானீர், ஜெய்சால்மர் ஆகிய ரஜபுத்திர அரசுகளின் இளவரசிகளையும் திருமணம் செய்து கொண்டார். ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் சலீம் பின்னர் ராஜா பகவன்தாஸின் மகளைக் கரம்பற்றினார்.
- ராஜா பகவன்தாஸின் மகனான ராஜா மான்சிங் அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியானார். திருமண உறவு மேற்கொள்ளக்கூடாது என நினைத்த ரஜபுத்திரர்களும் அக்பரின் அரசவையில் உயரிய மரியாதை பெற்றனர்.
- அக்பரின் ரஜபுத்திரக் கொள்கை மிகச் சிறந்த ராணுவத் தளபதிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் பேரரசுக்கு வழங்கியது. வருவாய்த்துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய ராஜா தோடர்மால் திவானாக பதவி உயர்த்தப்பட்டார்.
- ராஜா பீர்பால் அக்பரால் பெரிதும் விரும்பப்பட்ட நண்பராவார். மேவார், மார்வார் ஆகியவை முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ரஜபுத்திர அரசுகளாகும்.
- ராணா உதய்சிங்கின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் ராணா பிரதாப்சிங் அக்பரின் அதிகாரத்தை ஏற்காமல் 1597 இல் தனது மரணம் வரை தொடர்ந்து போரிட்டார்.
- 1576இல் நடைபெற்ற ஹால்டிகாட் போரே முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் சிங்குக்குமிடையே நடைபெற்ற நேரடிப்போராகும். மார்வாரில் (ஜோத்பூர்) மால்தியோ ராத்தோரின் மகனான அரசர் சந்திரா சென் 1581 இல் தான் இறக்கும்வரை முகலாயரை எதிர்த்தார். ஆனால் அவருடைய சகோதரர்கள் முகலாயர் பக்கமிருந்து போரிட்டனர்.
- தொடக்கத்தில் ஆக்ரா அக்பரின் தலைநகராக இருந்தது. பின்னாளில் பதேபூர்சிக்ரி என்னும் புதிய தலைநகரை அக்பர் உருவாக்கினார். தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அது அழகான மசூதிகளோடும் உன்னதமான புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டடங்களோடும் திகழ்கிறது.
மன்சப்தாரி முறை
- அக்பர் ஒரு முறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட நிர்வாக் முறையை உருவாக்கினார். அம்முறை பேரரசின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றியது. அவர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
- பிரபுக்கள், குடிமைப் பணிசார்ந்த இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபடுத்தப்பட்டு ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
- ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப்பட்டது. ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கைடை நிர்ணயம் செய்வதாகும் அவ்வெண்ணிக்கை 10 முதல் 10,000 வீரர்கள்வரை ஆனதாகும்.
- சவார் என்பது மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் ஒரு மன்சப்தாரின் உயர்வும் தாழ்வும் நிர்ணயம் செய்யப்பட்டன.
- மன்சப்தாரி முறையானது பிரபுக்களின் இனக்குழுத் தளத்தை பல்வகைப்பட்டதாக மாற்றியமைத்தது.
- அக்பரின் தொடக்க காலங்களில் பிரபுக்கள் முற்றிலுமாக மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவும் பாரசீகத்தைச் சார்ந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ஆனால் மன்சப்தாரி முறை அறிமுகமான பின்னர் ரஜபுத்திரரும் ஷேக்சதா என்றழைக்கப்பட்ட இந்திய முஸ்லீம்களுக்கு பிரபுக்கள் வரிசையில் இடம் பெறலாயினர்.
- மன்சப்தார்களின் ஊதியம் பணமாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கு மாறாக அவர்களுக்கு நிலங்கள் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன. (தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு மன்சப்தார் பணம் வசூலித்துக்கொள்ளலாம்.) இந்த ஜாகீர்கள் அடிக்கடி மாற்றப்பட்டன.
- மன்சப்தார் பதவியானது பரம்பரை உரிமை சார்ந்ததல்ல ஒரு மன்சப்தார் மரணமடைந்துவிட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாகக் கையகப்படுத்தும்.
அக்பரின் மதக் கொள்கை
- அக்பர் ஒரு வைதீக முஸ்லீமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஓர் இணக்கமான போக்கை மேற்கொண்டார்.
- ஏனைய மதங்கள் தொடர்பான கோட்பாடுகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட அவர் அனைவருக்கும் அமைதி (சுல்-இ-குல்) என்னும் தத்துவத்தைப் பரப்புரை செய்தார்.
- மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது வெறுப்புக் கொண்ட சமகால விவாதங்கள் மீது வெறுப்புக் கொண்ட சமகால வரலாற்று அறிஞரான பதானி அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் எனக் குற்றம் சாட்டினார்.
- அக்பர் இபாதத் கானா எனும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவினார். தொடக்கத்தில் இஸ்லாமிய றிஞர்கள் இங்கு கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் இந்துக்களையும் கிறித்தவர்களையும் ஜொராஸ்திரியர்களையும் சமணர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் இவ்விவாதங்களில் பங்கேற்க வரவெஏற்றார்.
- இபாதத் கானாவில் நடைபெற்ற விவாதங்கள் மதங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியதால் 1852இல் அக்பர் அவற்றை நிறுத்தினார். ஆனால் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியை அவர் கைவிடவில்லை. அக்பர் பல்வேறு மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஞானிகளோடு எடுத்துக்காட்டாக புருசோத்தம் . தேவி (இந்துமதம்), மெகர்ஜிராணா (ஜொராஸ்திரிய மதம்), அக்வாவிவா, மான்சரட் எனும் போர்த்துக்கீசியர் (கிறித்தவ மதம்), ஹிர விஜய சூரி (சமண மதம்), அக்வாவியா , மான்சரட் எனும் போர்த்துக்கீசியர் (கிறித்தவ மதம்), ஹிர விஜய சூரி (சமண மதம்) ஆகியோரை தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொண்டு உண்மை எதுவென அறிய முயன்றார்.
- இத்தகைய விவாதங்களின் விளைவாகப் பல்வகைப்பட்ட இப்பெயர்களுக்குப் பின்னே ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அவர் உணர்ந்தார். அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சரியான சொல் ‘தௌகித்-இ-இலாகி’ (தீன் இலாகி) என்பதாகும். தௌகித்-இ-இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.
- இது ஒரு புதிய மதமல்ல. ஆனால் இதை சூபி மரபின் ஒரு வகைமுறையாகக் கருதலாம். அக்பர் இப்பிரிவின் பீர் (மத குரு) என்ற முறையில் அவர் சீடர்களைச் (முரிக்கள் சூபி சீடர்கள்) சேர்த்திருந்தார்.
- இச்சீடர்கள் குரு முன்வைக்கும் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். பல்லாயிரக் கணக்காகோர் அக்பரின் சீடர்களாகச் சேர்ந்தனர். அக்பரின் உண்மையாக நோக்கம் மதச் சார்பற்ற கோட்பாடுகளை, பல்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்தவர்களுக்குச் சரி சமமான சகிப்புத் தன்மையையும் சம மதிப்பையும் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசை உருவாக்குவதாகும்.
- சமஸ்கிருத, அராபிய, கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்கத் துறையை அக்பர் உருவாக்கினார்.
- இராமாயணம் , மகாபாரதம், அதர்வவேதம், விவிலியம், குரான் ஆகியவை அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தௌகித்-இ-இலாகி (தீன் இலாகி) அக்பருக்குப் பின்னர் இல்லாமல் போனது.
ஜஹாங்கீர் (1605 – 1627)
- அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். இவர் அரசரானதை எதிர்த்து இவருடைய மூத்தமகன் இளவரசர் குஸ்ரு சீக்கிய குரு அர்ஜுன் தேவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார்.
- கலகம் ஒடுக்கப்பட்டு இளவரசர் குஸ்ரு கைது செய்யப்பட்டு விழிகள் அகற்றப்பட்டன. கலகத்தைத் தூண்டியதாக குரு அர்ஜுன் தேவ் கொல்லப்பட்டார். வங்காளத்தில் தனக்கெதிராகக் கலகம் செய்த ஆப்கானியரான உஸ்மான் கான் என்பவரை ஜஹாங்கீர் பணிய வைத்தார்.
- ராணா உதய்சிங், ராணா பிரதாப்சிங் ஆகியோர் காலத்தில் முகலாயருக்கு அடிபணிய மறுத்த மேவார் ராணா உதய்சிங்கின் பேரன் ராணா அமர்சிங்கிற்கு எதிராகத் தனது மகன் இளவரசர் குர்ரம் (பின்னாளில் பேரரசரான ஷாஜகான்) தலைமையில் படையெடுப்பு நடத்தி ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டது.
- பின்னர் அவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமர்சிங் ஜஹாங்கீரின் மேலதிகாரத்தை ஏற்றுக் கொண்ட அரசராகத் தனது பகுதிகளை ஆண்டார். 1608இல் தக்காண அரசான அகமது நகர் மாலிக் ஆம்பரின் தலைமையின் கீழ் தன்னைச் சுதந்திர அரசாக அறிவித்தது.
- அகமதுநகரை இளவரசர் குர்ரம் கைப்பற்ற மேற்கொண்ட பல முயற்சிகள் கடைசியில் தோல்வியில் முடிந்தன. 14 மாத கால முற்றுகைக்குப் பின்னர் காங்ரா கோட்டையைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
- 1595இல் பாரசீகர்களிடமிருந்து அக்பரால் கைப்பற்றப்பட்ட காந்தகாரை 1622இல் பாரசீக அரசர் ஷா அப்பாஸ் மீட்டிருந்தார். ஜஹாங்கீர் அதை மீண்டும் கைப்பற்ற விரும்பினார்.
- ஆனால் இளவரசர் குர்ரம் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாக அதை அவரால் செய்ய இயலவில்லை. ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமானது.
- இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை முதலாமவரால் பெற இயலவில்லை. ஆனால் தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய்ச் சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை பேரரசரிடம் பெறுவதில் வெற்றி பெற்றார்.
- ஜஹாங்கீர் அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை, ஓவியம், தோட்டம், மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா (ஜஹாங்கீரால் நூர்ஜகான் எனப் பெயரிடப்பட்டவர்) அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
- நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி மகபத்கான் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார்.
- பின்னர் நூர்ஜகானின் சதி நடவடிக்கைகளின் காரணமாக மகபத்கான் கலகத்தில் இறங்க, அக்கலகம் நூர்ஜகானால் திறமையுடம் கையாளப்பட்டதால் மகபத்கானும் தக்காணம் சென்று குர்ரமுடன் கைகோத்தார். ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் தன் மருமகன் ஷாரியர் என்பவருக்கு மணிமுடி சூட்ட முயன்றார்.
- ஆனால் நூர்ஜகானின் சகோதரரும் குர்ரமின் மாமனாருமான ஆசப்கான் மெஏற்கொண்ட முயற்சிகளால் குர்ரம் ஷாஜகான் என்ற பெயருடன் அடுத்த முகலாய அரசராக அரியணை ஏறினார். பத்து ஆண்டுகள் நாட்டையாண்ட நூர்ஜகான், 1627இல் ஜஹாங்கீரின் இறப்புக்குப் பின்னர் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தார்.
மாலிக் ஆம்பர்
எத்தியோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாகக் கொண்டுவரப்பட்ட மாலிக் ஆம்பர், பல இடங்கள் மாறி இறுதியாக அகமதுநகர் அரசின் பிரத மந்திரியான செங்கிஸ்கானிடம் வந்து சேர்ந்தார். மாலிக் ஆம்பர் அரசியல் விவேகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை செங்கிஸ்கானிடமிருந்து கற்றுக்கொண்டார். செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மனைவி மாலிக் ஆம்பரை சுதந்தர மனிதராக்கினார். கடுமையான உழைப்பின் மூலம் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இறுதியாகத் தென்னிந்தியச் சுல்தானியங்கள் ஒன்றின் இராணுவத் தளபதியாகவும் பகர ஆளுநராகவும் ஆனார்.
தக்காணத்தில் முஸ்லீம்களும் மராத்தியர்களும் தங்கள் அரசியல் மற்றும் வட்டாரத் தனித்தன்மைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து முகலாயரின் மேலாதிக்கத்தை எதிர்த்தனர். இம்முயற்சியின் பின்னே மூளையாகச் செயல்பட்டவர் மாலிக் ஆம்பர். 1626, மே 14இல் மாலிக் ஆம்பர் தன்னுடைய 78ஆம் வயதில் மரணமடைந்தபோது அவரால் பயிற்றுவிக்கப்பட்ட மராத்தியர்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாறினர்.
ஷாஜகான் (1627 – 1658)
- ஷாஜகான் ஆக்ராவில் அரியணை ஏறியபோது அவருடைய நிலை பாதுகாப்பானதாகவும் சவால்களற்றதாகவும் இருந்தது. இருந்தபோதிலும் பேரரசின் நடப்பு நிகழ்வுகள் கவனத்தைக் கோரின.
- தெற்குப் பிராந்தியங்களின் ஆளுநராக இருந்த கான்ஜகான் எனும் பட்டப் பெயர் கொண்ட ஆப்கானிய பிர்லோடி பகைமை பாராட்டினார். தக்காண அரசிலிருந்து அவரை இடமாற்றம் செய்து ஷாஜகான் ஆணை பிறப்பித்திருந்தும் அவர் அகமதுநகர் சுல்தானான இரண்டாம் மூர்தசா நிஜாம்ஷாவுடன் இணைந்து ஷாஜகானுக்கு எதிராகச் சதிகளில் ஈடுபட்டார்.
- நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் தானே நேரடியாகத் தக்காணத்திற்கு விரைந்தார். புதிதாகப் பதவியில் அமர்த்தப்பட்டத் தக்காண ஆளுநர் ஆசம்கான் எனும் பட்டத்தைப் பெற்ற இராதத்கான் பேரரசின் படைகளுக்குத் தலைமையேற்று பால்காட் பகுதியைத் தக்கினார்.
- பேரரசின் படைகளால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்ட மூர்தசா காஞகானுடான தனது போக்கை மாற்றிக் கொண்டார். இதனால் கன்ஜகான் தௌலதாபாத்திலிருந்து தப்பி மாளவம் சென்றார். ஆனால் முடிவில் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- தக்காணத்தில் அமைதி திரும்பியது. ஷாஜகான் தக்காணத்தை விட்டுச் செல்லுன் முன்பாக அப்பகுதியைத் தௌலதாபாத் உள்ளிட்ட அகமதுநகர், காண்டேஷ், பெரார், தெலுங்கானா என நான்கு மாநிலங்களாகப் பிரித்தார். அந்நான்கு மாநிலங்களாகப் பிரித்தார். அந்நான்கு மாநிலங்களுக்கும் ஆளுநராகப் பதினெட்டே வயது நிரம்பிய தனது மகன் ஔரங்கசீப்பை நியமித்தார்.
- தக்காணம் இவ்வாறாக ஷாஜகான் காலத்தில் முகலாயப் பேரரசின் ஆற்றல்மிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. முகலாயருக்கு வலுவான போட்டியாளராகத் திகழ்ந்த அகமதுநகர் மாலிக் ஆம்பரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பேரரசோடு இணைக்கப்பட்டது.
- 1636இல் ஷாஜகான் மகபத்கானின் உதவியோடு அகமது நகரின் நிஜாம் ஷாஹி அரசர்களைப் பணியச் செய்தார். ஷியா பிரிவைச் சேர்ந்த கோல்கொண்டாவின் சுல்தான் தன் அமைச்சர் மீர்ஹூம்லாவைச் சிறையில் அடைத்ததைக் காரணம் காட்டி ஔரங்கசீப் கோல்கொண்டாவின் மீது படையெடுத்தார். உடன்படிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குதுப்ஷாகி அரசர் முகலாயப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசரானார்.
- 1638இல் ஷாஜகான் பாரசீகப் பேரரசில் அரங்க்ரேறிய அரசியல் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, அக்பரால் கைப்பற்றப்பட்டு ஜஹாங்கீரால் இழக்கப்பட்ட காந்தகாரைக் கைப்பற்றி இணைத்துக்கொண்டார்.
- போர்த்துகீசியர் கோவாவில் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும் வங்காளத்தில் தங்களது குடியிருப்புகளைத் தொலைதூரத்திலிருந்த ஹுக்ளியில் பெற்றிருந்தனர்.
- ஷாஜகான் இப்போர்த்துகீசியரை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து துரத்தும்படி வங்காள ஆளுநருக்கு உத்தரவிட்டார். ஹுக்ளியிலிருந்த 200 போர்த்துகீசியர் 600 இந்திய அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தனர்.
- அவர்களில் பலரைப் போர்த்துகீசியர் கட்டாய மதமாற்றம் செய்து கிறித்தவர்களாக்கினர். மேலும் கோவாவிலிருந்த போர்த்துக்கீசியர் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் வீரமாகப் போராடினாலும் முகலாயப் படைகளால் எளிதாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1641இல் ஷாஜகானின் அமைச்சரும் மாமனாருமான ஆசப்கான் மரணமடைந்தார். ஆசப்கானின் தமக்கையும் ஷாஜகானின் முன்னாள் எதிரியுமான நூர்ஜகான் 1645 டிசம்பர் வரை உயிரோடிருந்தார். ஓய்வு பெற்றபின் அவர் வேறு பிரச்சனைகள் எதையும் ஏற்படுத்தவில்லை.
- பிரான்ஸ் அரசன் XIV லூயியின் சமகாலத்து அரசனான ஷாஜகான் முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய காலத்தில்தான் அரசருக்காகப் புகழ்பெற்ற மயிலாசனம் செய்யப்பட்டது.
- பெர்னியர் (பிரெஞ்சு மருத்துவர், பயணி), தாவர்னியர் (பிரெஞ்சு வைர வியாபாரி, பயணி), மான்டெல்சோ (ஜெர்மன் பயணி மறும் துணிச்சல் வீரர்), பீட்டர்முன்டி , (இங்கிலாந்து வணிகர்), மனுச்சி (இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி) ஆகிய ஐரோப்பியர்கள் ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா குறித்த விரிவான விவரங்களை எழுதிச் சென்றனர்.
- ஷாஜகானின் இறுதி நாட்களில் அவரது நான்கு மகன்களிடையே அரியணைக்கான போட்டி ஏற்பட்டது. மூத்த மகன் தாராஷூகோ அரசனாவதை ஷாஜகான் விரும்பினார்.
- தாராஷூகோ பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்டதால் மற்ற சகோதரர்கள் வெறுப்புக் கொண்டனர். மூன்றாவது மகனான ஔரங்கசீப், மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சரியாக எடைபோடுபவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தார்.
- தாராஷூகோ சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்களின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். ஷாஜகானின் நான்கு மகண்களிடையே நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் மூன்றாவது மகன் ஔரங்கசீப் வெற்றி பெற்றார்.
- ஷாஜகானை வீட்டுச் சிறையிலடைத்த ஔரங்கசீப் முகலாயப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டனர். மனம் உடைந்துபோன ஷாஜகான் ஒரு அரண்மனைக் கைதியாகவே 1666 ஜனவரி மாதம் மரணமடைந்தார். தாஜ்மஹாலில் அவரது மனைவியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள்
போர்த்துகீசியர் : 1510இல் அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி அதைக் கீழ்த்திசை போர்த்துகீசியப் பேரரசின் தலைநகராக்கினார். தொடர்ந்து மேற்குக் கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய் ஆகிய இடங்களிலும், கிழக்குக் கடற்கரையில் சென்னைக்கு அருகே சாந்தோம், வங்காளத்தில் ஹுக்ளி ஆகிய இடங்களிலும் போர்த்துகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
டச்சுக்காரர் : டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினம் (1605), புலிக்காட் (பழவேற்காடு 1610), சூரத் (1616). பிமிலிபட்டினம் (1641), காரைக்கால் (1645) சின்சுரா (1653), காசிம்பஜார் , பாராநகர், பாட்னா, பாலசோர், நாகப்பட்டினம் (அனைத்தும் 1658), கொச்சி(1663) ஆகிய இடங்களில் தங்களது வணிகநிலையங்களை ஏற்படுத்தினர்.
டேனியர்: டென்மார்க் நாட்டினரும் இந்தியாவில் வணிகக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் 1620இல் குடியேற்றத்தை நிறுவினர். வங்காளத்தில் செராம்பூர் அவர்களின் தலைமையிடமாக இருந்தது.
பிரெஞ்சுக்காரர் : சூரத் (1668), மசூலிப்பட்டினம் (1669), அப்போது சிறுகிராமமாக இருந்த புதுச்சேரி (1673), வங்காளத்தின் சந்தன்நகர் (1690) ஆகியவை பிரெஞ்சுக்காரரின் தொடக்ககாலக் குடியேற்றங்களாகும். பின்னர் மலபாரில் உள்ள மாஹி, சோழமண்டலக் கடற்கரையில் ஏனாம் (இரண்டும் 1725இல்), காரைக்கால் (1739) ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர்: முதலில் கம்பெனி சூரத்தில் ஒரு வணிகச்சாவடியை நிறுவியது (1612இல் அங்கு ஒரு வணிக நிறுவனம்/ பண்டகசாலை அமைக்கப்பட்டது). பின்னர் சென்னை (1639), பம்பாய் (1668), கல்கத்தா(1690) ஆகியவற்றைப் பெற்றது. கம்பெனி பல வணிகக் குடியேற்றங்களைப் பெற்றிருந்தாலும் கல்கத்தா வில்லியம் கோட்டையும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும், பம்பாயிலுள்ள மாளிகையும் ஆங்கிலேயரின் மிக முக்கியமான வணிகக் குடியேற்றங்களாகும்.
தாஜ்மஹால்
தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும். அது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும். 1612இல் திருமணமானதில் தொடங்கி 1631இல் குழந்தைப்பேறின் போது மரணமடையும் வரை இணைபிரியாமல் உற்ற துணையாய் இருந்த தனது மனைவி மும்தாஜுக்கு அழியாப் புகழை அளிப்பதற்காக ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார். பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த இந்தியராகிய உஸ்தத் அகமத் லாஹாவ்ரி என்பவர் தலைமைக் கட்டடக்கலை நிபுணராக இருந்தாலும் இவ்வளாகத்திற்கான வரைபடத்தைத் தயாரித்த பெருமை இக்காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்களைச் சாரும். இவ்வளாகம் தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்) ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது. 1632இல் கட்டிட வேலைகள் தொடங்கின. இந்தியா, பாரசீகம் , உதுமானியப் பேரரசு , ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல்லறை மாடப்பணியை 1638 -39 இல் முடிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டனர். அருகிலுள்ள ஏனைய கட்டடங்கள் 1643இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்தது.
- தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஔரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷூகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார். பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கு இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்தார். சமஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
ஔரங்கசீப் (1658 – 1707)
- ஔரங்கசீப் ஆலம்கீர் (உலகை வெல்பவர்) வாரிசுரிமைப் போரில் அரியணைக்காகத் தன்னோடு போட்டியிட்ட தாராஷூகோ, ஷுஜா, முராத் ஆகியோரை வெற்றி கொண்டு 1658இல் அரியணை ஏறினார்.
- அவருடைய ஐம்பது ஆண்டுகால ஆட்சியைச் சரிபாதியாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வட இந்திய அரசியலில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார்.
- தக்காணப் பகுதி அவருடைய ஆளுநர்களின் கைகளில் விடப்பட்டிருந்தன. 1681 இல் அவருடைய மகன்களில் ஒருவரான இளவரசர் அக்பர் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாய் அவர் தக்காணம் செல்ல நேர்ந்தது. மீண்டும் அவர் தில்லிக்குத் திரும்பவேயில்லை. ஏமாற்றமடைந்த மனநிலையில் 1707-இல் அவர் அகமதுநகரில் காலமானார்.
- முகலாயப் பேரரசின் எல்லைகளை விரிவடையச் செய்வதற்காகப் பல படையெடுப்புகளை ஔரங்கசீப் மேற்கொண்டார். வடமேற்கிலும் வடகிழக்கிலும் அவர் மேற்கொண்ட போர்களால் கருவூலம் வறண்டு போனது.
- இவருடைய தந்தையார் காலத்திலேயே நிலவரியானது விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு என்ற நிலையிலிருந்து சரிபாதி என உயர்த்தப்பட்டது. ஔரங்கசீப் மேற்கொண்ட நீடித்தப் போர் நடவடிக்கைகள், விவசாயிகளின் மீது அதிகமான வரிகளைச் சுமத்தும் தேவையை ஏற்படுத்தின.
- தொடக்கத்தில் ஷாஜகானாபாத் அவரின் தலைநகராக அமைந்தது. ஆனால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தனது நீண்ட படையெடுப்புகளின்போது ஔரங்கசீப் எங்கெல்லாம் முகாமிட்டாரோ அவ்விடங்களுக்குத் தலைநகர் மாறியது.
- வட இந்தியாவில் ஔரங்கசீப்பிற்கு எதிராக மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள் அரங்கேறின. ஜாட் (மதுரா மாவட்டம்), சத்னாமியர் (ஹரியானா பகுதி), சீக்கியர் ஆகியோர் கலகம் செய்தனர்.
- ஜஹாங்கீர் , ஷாஜகான் காலத்திலேயே தொடர்ந்து கலகம் செய்யும் இயல்பினைக் கொண்ட ஜாட்டுகளின் 1669ஆம் ஆண்டுக் காலம் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டாலும் ஔரங்கசீப்பின் இறப்பிற்குப் பின்னரும் அவர்கள் கட்டுக்கடங்காதவர்களாகவே இருந்தனர்.
- சத்னாமியரின் கிளர்ச்சியானது உள்ளூர் இந்து ஜமீன்தார்களின் உதவியோடு ஒடுக்கப்பட்டது. சீக்கியர் கலகமானது, அதிகாரப்பூர்வமாக சீக்கிய குரு என்ற பதவியை வகித்து வந்த சீக்கிய குரு தேஜ்பகதூருக்கு எதிராக அப்பதவியின்மீது உரிமை பாராட்டிய ராம்ராய் மேற்கொண்ட சூழ்ச்சிகளின் காரணமாய் வெடுத்தது. இறுதியில் சீக்கியரின் ஒன்பதாவது குருவான தேஜ்பகதூர் கொல்லப்பட்டதோடு கிளர்ச்சி முடிவுற்றது.
- அனைத்து வகைகளைச் சேர்ந்த இந்துக்களின் மீதும் ஜிஸியா வரி விதிக்கப்பட வேண்டுமென ஔரங்கசீப் மேற்கொண்ட முடிவு, அதுவரைப் பேரரசிற்கு விசுவாசத்துடன் சேவை செய்துவந்த ராஜஸ்தானத்து தலைவர்களிடையே கிளர்ச்சி மனநிலையை உருவாக்கியது.
- மார்வாரில் ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து வாரிசுரிமைச் சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலில் ஔரங்கசீப் தலையிட்டு ஜஸ்வந்த் சீங்கின் பேரனான இந்திரசிங் என்பவரைப் பெயரளவிற்கு அரச பதவியில் அமர்த்த மேற்கொண்ட முயற்சியை ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ராணி ஹாடி வெறுத்தார்.
- இது தொடர்பான, ராத்தோர் ரஜபுத்திரரின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. மார்வார் அரசியலில் ஔரங்கசீப் தலையிட்டதால் வெறுப்புக் கொண்ட மேவாரின் ராணாவான ராஜ்சிங் கலகத்தில் ஈடுபட்டார். இக்கிளர்ச்சியை ஔரங்கசீப்பின் மகன் இளவரசர் அக்பர் ஆதரித்தார்.
- இருந்தபோதிலும் முகலாயப் படைகளுக்கு ராணா இணையானவர் அல்ல என்பதால் கொரில்லா போர்முறையைக் கையாண்டு 1680இல் தான் மரணமடையும் வரை ராணா போராடினார். 1681இல் மேவாரின் புதிய ராணாவாகப் பதவியேற்ற ராணா ஜெய்சிங் ஔரங்கசீப்புடன் ஒரு அமைதி உடன்படுக்கையில் கையெழுத்திட்டார்.
ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை
- ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கையானது வளர்ந்துவந்த மராத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது, ஷியா பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தானியங்களானக் கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகியவற்றின் கிளர்ச்சிப் போக்கிற்கு அணைபோடுவது, தக்காணத்தைப் புகலிடமாகக் கொண்ட தனது மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது ஆகியவற்றை நோக்கமாய்க் கொண்டிருந்தது. ஔரங்கசீப் 1682இல் தக்காணம் வந்தார்.
- 1707இல் தனது மரணம் வரை தக்கானத்திலேயே தங்கியிருந்தார். பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் அடில்ஷா ஔரங்கசீப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றார்.
- ஔரங்கசீப் 1685 இல் தனது மகன் ஆசாம் ஷாவை அனுப்பிவைத்ததில் பயனேதுமில்லை. பின்னர் மற்றொரு மகன் ஷாஆலமை பீஜப்பூரைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார். ஷியா முஸ்லீமான பீஜப்பூர் சுல்தான் திறமையுடன் கோட்டையைப் பாதுகாத்தார். ஆனால் ஔரங்கசீப்பே நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி இறுதிவரை போரிடும்படி தனது படிஅகளுக்கு உற்சாகம் அளித்ததால் பீஜப்பூர் சுல்தான் தோல்வியடைந்தார். கொல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் 1687இல் தோற்கடிக்கப்பட்டு கோல்கொண்டா கைப்பற்றப்பட்டது.
மராத்தியருக்கு எதிராக ஔரங்கசீப்பின் நடவடிக்கைகள்
- சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் ஔரங்கசீப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தனர். ஔரங்கசீப் தனது ஒரு முக்கியத் தளபதிகளான செயிஷ்டகான் , ஜெய்சிங் ஆகியோரை அருவருக்குப் பின் ஒருவராக சிவாஜியைக் கைதுசெய்ய அனுப்பி அவைத்தார்.
- ஜெய்சிங் சிவாஜியைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கிருந்து தப்பிய சிவாஜி மீண்டும் தக்காணத்தை அடைந்தார். சிவாஜி கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றி 1680இல் 53வது வயதில் , தான் மரணமடையும் வரை முகலாயப் படைகளை எதிர்த்துப் போர் செய்தார். சிவாஜியின் மகன்களும் தொடர்ந்து எதிர்த்து 1707இல் ஔரங்கசீப் மரணமடையும்வரை அவரைப் பெரும் சோதனைக்கு உள்ளாக்கினர்.
- 1707இல் ஔரங்கசீப் காலமானது இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும் ஏனெனில் அடுத்த 150 ஆண்டுகளுக்கு வலிமைகுன்றிய வழித்தோன்றல்களால் அது ஆளப்பட்டபோதும் ஔரங்கசீப் மரணமடைந்தபோதே முகலாயப் பேரரசும் முடிவுக்கு வந்துவிட்டது.
கோல்கும்பாஸ்
1480 முதல் 1686வரை ஆட்சி செலுத்திய அடில் ஷாஹி மரபின் தலைநகர் பீஜப்பூர் ஆகும். இது கண்கவர் கட்டடங்அளைடும் மசூதிகளையும் தன்னகத்தே கொண்டது. இவ்வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளரான் அமுகமது அடில்ஷாவின் (1627-1656) மிடுக்கான கல்லறையே கோல்கும்பாஸ் (வட்டவடிவக் குவிமாடம்) ஆகும். அடில் ஷா இதனைத் தனது வாழ்நாளிலேயேக் கட்டினார். இது அடர் சாம்பல் நிறக் கற்களால் கட்டப்பட்டு மேற்பூச்சு பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் சாதாரணமாயும் ஆனால் அழகுறவும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் நான்கு வெளிமூலைகளிலும் எண்கோணக் கவிகைமாடம் உள்ளது. ஒவ்வொரு கவிகைமாடமும் ஏழு அடுக்குகளையும் ஒவ்வொரு அடுக்கும் பல சாளரங்களையும் கொண்டு பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ரோமின் புனித பீட்டர் தேவாலயத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் இதுவேயாகும். இதன் உட்சுவற்றின் நீளம் 135 அடி; உயரம் 178 அடி . இங்கு சற்று உயர்த்தப்பட்ட மேடையில் முகமது அடில்ஷா அவர் மனைவி அருஸ்பீபி, அவர் மகள், பேரன், பேரனின் பிரிய மனைவி ரம்பா ஆகிய ஐவரின் கல்லறைகள் உள்ளன.
ஔரங்கசீப்பின் பிற நடவடிக்கைகள்
- அரியணைப் போட்டியில் தனக்கு எதிரான முக்கியப் போட்டியாளரான தனது சகோதரர் தாராஷூகோவுக்குச் சீக்கியர் உதவினார் என்ற காரணத்திற்காக அவர்களின் மீது ஔரங்கசீப் வெறுப்புக் கொண்டார். ஔரங்கசீப்பின் உத்தரவின்படியே குரு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.
- இந்நிலையில் ரஜபுத்திர அரசர்கள் தங்களை சுதந்திர அரசுகளாகப் பிரகடனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக ஔரங்கசீப்பின் மகனான இளவரசர் அக்பரின் தலைமையில் பெரும்படையொன்று அனுப்பப்பட்டது.
- மகனுடையத் துரோகக் குணத்தை ஒருவேளை அறிந்திராமலே ஔரங்கசீப் இந்த முடிவை எடுத்திருக்கலாம். எப்படியிருந்தபோதிலும் இளவரசர் தன்னை முகலாயப் பேரரசராகப் பிரகடனம் செய்து கொண்டார்.
- தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவரைத் தக்காணத்திற்குத் துரத்தின. அங்கு அவர் சிவாஜியின் மகன் சாம்பாஜியின் உதவியைப் பெற்றார்.
- ஔரங்கசீப் நேரடியாகக் களத்தில் இறங்கவே பாரசீகத்திற்குத் தப்பிச் சென்ற இளவரசர் அக்பர் அங்கிருந்து திரும்பவேயில்லை. 1689இல் சாம்பாஜி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தானியங்கள் முற்றிலுமாகச் சரணடையும் அளவுக்குத் தள்ளப்பட்டன.
- ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பேரரசு சிதைவடையத் தொடங்கியது. ஔரங்கசீப்பின் இறப்பிற்கு பின் “பின் தோன்றிய அரசுகளால்” பேரரசின் சிதைவு விரைவுபடுத்தப்பட்டது.
- பேரரசு எளிதில் கையாள முடியாத அளவிற்கு விரிந்தது. பேரரசின் தொலைதூரப் பகுதிகளை மேலாண்மை செய்யக் கூடிய அளவுக்குப் போதுமான நம்பிக்கைக்குரிய நபர்களை ஔரங்கசீப் பெற்றிருக்கவில்லை.
- அவருடைய அரசியல் எதிரிகள் பலர் முகலாயர் ஆதிக்கத்தை மிஈறி சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்தனர். தக்காண விவகாரங்களில் ஔரங்கசீப் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது பேரரசின் ஏனைய பகுதிகளில் தோன்றிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளவிடாமல் அவரைத் தடுத்தது.
- ஔரங்கசீப் மரணமடைந்த சிறிது காலத்திலேயே இந்திய அரசியலில் முகலாயப் பேரரசு ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக இல்லாமல் மறைந்தது.
- ஔரங்கசீப் ‘ஜிஸியா’ வரியை மீண்டும் விதித்தார். புதிய கோவில்கள் கட்டப்படக் கூடாதெனவும் ஆணைகள் பிறப்பித்தார். ஆனால் பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன.
- இந்நடவடிக்கைகள் அவருடைய மத நம்பிக்கைகளில் மட்டும் வேர்கொண்டு இருக்கவில்லை; மாறாக அரசியல் நிர்பந்தங்களிலும் அவை வேர்கொண்டிருந்தன.
- ஆனால் ஓர் உண்மையான மூஸ்லீமாக, வழக்காமக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட ‘அப்வாப்’ என்னும் வரிவசூலை, அது ஷரியத் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தினார்.
- அதைப் போலவே கோவில்கள் தொடர்பான அவருடைய சட்டங்களும் பழமையானவை. இச்சட்டங்கள் அரசியல் பகைமையிருந்த பகுதிகளில் மட்டும் நடையில் இருந்தன. எங்கே அரசியல் பகைமையில்லாமல் கீழ்ப்படுயும் நிலையிருந்ததோ அங்கெல்லாம் கோவில்கள் கட்டுவதற்கு ஔரங்கசீப் கொடைகளை அளித்துள்ளார்.
- ஷாஜகானுடைய ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்து அதிகாரிகள் அதிகமான எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினார் என்பது இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய செய்தியாகும்.
முகலாயர்காலச் சமுதாயம்
- இந்திய மக்கள் தொகை 16ஆம் நூற்றாண்டில் 15 கோடியாகவும் 18ஆம் நூற்றாண்டில் 20 கோடியாகவும் இருந்திருக்கலாமென மதிப்பீடு செய்யப்படுகிறது.
- நிலப்பரப்பின் பெரும்பகுதி காடுகளாக இருந்ததால் வேளாண்மை நிலங்கள் அளவில் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். சமூகத்தின் மிக முக்கியத் தொழில் வேளாண்மை என்பதால், சமூக அமைப்பில் கிராமச்சமூகமே முதன்மை நிறுவனமாகும்.
- கிராமத்தின் இயல்புகள், உட்கூறுகள், ஆட்சி முறைகள் ஆகியவற்றில் இடத்திற்கிடம் வேறுபாடுகள் இருந்தபோதிலும் கிராம நிர்வாகத்தில் சில பொதுத்தன்மைகள் இருந்தன.
- முக்காடம் என்றழைக்கப்பட்டக் கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினார். கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதும் இப்பஞ்சாயத்தின் பொறுப்பாகும்.
- பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாத நிலங்களைக் கிராமக் கைவினைஞர்கள், கடைநிலை ஊழியர்கள், சேவை செய்வோர் ஆகியோருக்கு அவர்கள் செய்யும் சேவைகளுக்குக் கைமாறாக இப்பஞ்சாயத்து வழங்கியது.
- சமூகத்தின் நடுத்தர வர்க்கமானது சிறிய மன்சப்தார்கள், சிறு கடைகள் வைத்திருப்போர், ஹக்கீம் (மருத்துவர்கள்), இசைக் கலைஞர்கள், ஏனைய கலைஞர்கள், முகலாய நிர்வாகத்தின் கீழ்நிலை அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டிருந்தது.
- ஊதியம் பெறும் ஒரு வர்க்கமும் இருந்தது. இவர்கள் ‘மதாத்-இ-மாஷ்’ எனப்பட்ட மானியத்தை முகலாயப் பேரரசரிடமிரிந்தும் , உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்தும் பெற்றனர்.
- இவர்கள் கிராமத்து மேன்மக்களின் ஒரு பகுதியாக மாறி கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கின்ற கண்ணிகளாய் இருந்தனர். தில்லி, ஆக்ரா, பதேப்பூர் சிக்ரி, லாகூர், அகமதுநகர், டாக்கா, முல்தான் ஆகியன பேரரசின் முக்கியமான நகரங்களாகும். அவை சமகால ஐரோப்பிய நகரங்களான லண்டன், பாரிஸ் போன்றவற்றிற்கு இணையாகக் கருதத்தக்க நிலையிலிருந்தன.
- சிறப்பு உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் பெற்றிருந்த வர்க்கத்தாருக்கும் அவற்றைப் பெற்றிராத வர்க்கத்தாருக்கு இடையே வாழ்க்கைத் தரத்திலிருந்த சமத்துவமின்மை தெளிவாகத் தெரிந்தது.
- சமுகத்தின் அடிமட்டத்திலிருந்த மக்களின் ஆண்கள் ‘லங்கோடு’ எனப்பட்ட கோவணத்தையும் பெண்கள் சேலையையும் அணிந்தனர். ஏழைமக்கள் மண் வீடுகளில் வசித்தனர். அவர்களுடைய உணவு கோதுமை சப்பாத்தி, பருப்புகள், காய்கறி ஆகியன.
- முகலாய சமூகத்தில் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்த ஜமீன்தார்களையும், பிரபுக்களையும் கொண்டிருந்த வர்க்கம் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.
- மன்சப்தாரிகளான பிரபுக்கள் ஜாகீர்களை (நிலமானியங்களை) தங்கள் தகுதிக்கேற்ற ஊதியமாகப் பெற்றிருந்தனர். இவர்கள் அடக்குமுறை , சுரண்டும் இயல்புகளைக் கொண்டிருந்தனர்.
- பிரபுக்கள் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களையும் குதிரைகளையும் யானைகளையும் மற்றவறையும் பெற்றிருந்தனர். அவர்கள் கனிமரங்களைக் கொண்ட தோட்டங்களையும், நீரோடைகளையும் கொண்டிருந்த அழகிய வீடுகளிலும் வசித்தனர். நேர்த்தியான ஆடைகளை அணிந்தனர்.
- ஆதிக்க இனங்களௌயும் சாதிகளையும் சேர்ந்த ஜமீன்தார்கள் ஆயுதம் ஏந்திய படைகளோடு நிலத்தின்மீதும் விவசாயிகளின் மீதும் ஆதிக்க செலுத்தக் கூடிய சலுகைகளைப் பெற்றவர்களாய் விளங்கினர்.
- அபுல் பாசல் தன்னுடைய அய்னி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத் தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார். பெரும்பாலும் இந்து மேல் சாதிகளைச் சேர்ந்தோரும் ரஜபுத்திரர்களும் ஜமீன்தார்களாக இருந்தனர். சில பகுதிகளில் முஸ்லீம்களும் ஜமீன்தார்களாக இருந்துள்ளனர்.
- ஜமீன்தார்கள் குத்தகைப் பணத்தை முறையாகச் செலுத்தத் தவறிய விவசாயிகளை நிலைத்தைவிட்டு வெளியேற்றும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
- முகலாயச் சமூகக் கட்டமைப்பில் பிரபுக்களாக அங்கம் வகித்தவர்களில் பெரும்பாலோர் மத்திய ஆசியா மற்றும் ஈரானிலிருந்து வந்தவர்களாவர். ஆப்கானியர், இந்திய முஸ்லீம்கள் (ஷேயிக்சதாஸ் என்றழைக்கப்பட்டனர்), ரஜபுத்திரர்கள், மராத்தியர் ஆகியோரும் பிரபுக்கள் என்னும் சமூக மேன்மைநிலையைப் பெற்றிருந்தனர்.
- அக்பருடைய ஆட்சிக் காலத்தில் 15 விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால் ஆகியோர் அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்களாவர்.
- ரஜபுத்திரர்கள் அரசு நிர்வாகத்திலிருந்த பல்வேறு பணியிடங்களுக்குக் காயஸ்தர், கத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமித்தனர். ஜஹாங்கீர், ஷாஜகான் ,ஔரங்கசீப் ஆகியோர் மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர். எடுத்துக்காட்டாக சிவாஜியின் தந்தை ஷாஜி சில காலம் ஷாஜகானிடம் பணியாற்றினார்.
- வாழ்க்கையில் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகம் இருந்ததால் மத்திய ஆசியாவிலிருந்து தொடர்ந்து புலம்பெயர்தல் நடைபெற்றது. இப்புலம் பெயர்தல் பல்வகைப்பட்டக் கூறுகள் ஒருங்கிணைவதற்கு வழிவகுத்துப் பண்பாட்டிற்குச் செழுமை சேர்த்தது.
- பிரபுக்கள் இன அடிப்படையில் பிரிந்திருந்தாலும் அவர்கள் கூட்டிணைந்த வர்க்கமாக, பாரசீக இந்திய ஓவியர்களையும் இசைக்கலைஞர்களையும் ஆதரித்ததன் மூலம் ஒரு சமரசம் சார்ந்த பண்பாட்டை முன்னெடுத்தனர்.
- சாதிமுறை ஒரு மேலாதிக்க நிறுவனமாக இருந்தது. கீழ்நிலைச் சாதிகள் அதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாயினர்.
- சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகப் பக்தி இயக்கம் புரட்சிக்கொடியை உயர்த்தினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வறுமையில் வாடிய, நிலமற்ற விவசாயிகள் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
- மரபு வழிச் சொத்துக்களில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்ச உரிமையே பெண்களுக்கு இருந்தது. உயர் சாதிப் பெண்களிடையில் விதவை மறுமணம் தடைசெய்யப்பட்டிருந்தது.
- அன்றாட வீட்டுவேலைகளோடு பெண்கள் நூல்நூற்றனர். வேளாண் பணிகளிலும் உதவி செய்தனர். முகலாய நிர்வாகம் மேல்சாதிச் சமூகங்களிடையே நிலவிய உடன்கட்டை ஏறும் பழக்கத்ய்தை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது. முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது ‘மகர்’ எனும் பணப்பரிசை (மணமகன் மணமகளுக்குக் கட்டாயம் தர வேண்டிய பணம்) பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தனர். மேலும் பரம்பரைச் சொத்துக்களில் குடும்பத்திலுள்ள ஆண்களுக்குச் சமமாக இல்லாவிட்டாலும் பெண்களுக்கு ஓரளவு பங்குபெறும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
பொருளாதாரம்
- முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும். காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
- தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சு சாயம் தயாரிப்போர் ஆகியோர்க்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன. நூல் நூற்போருக்கும் நெசவு செய்வோருக்கும் கச்சாப்பட்டினை வழங்கியது.
- இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது. ஆகவே உற்பத்தியாளர்களுக்கும் காடுகளுக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது.
- கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம், சொத்துக்கள் வைத்துள்ள உரிமை மறுக்கப்பட்ட, நிலமற்ற ஏழை விவசாயிகள் மக்கள் தொகையில் ஏறத்தாழக் கால் பங்கிருந்தனர்.
- ஜமீந்தார்களும் கிராமத் தலைவர்களும் ஏராளமான நிலங்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாதவோ வழங்கப்பட்டது. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
- ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்டப் பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது.
- புகையிலையும் மக்காச்சோளமும் பதினேழாம் நூற்றாண்டில் அறிமுகமாயின. அதற்குப் பின்னரே மிளகாயும் வேர்க்கடலையும் அறிமுகமாயின. அன்னாசிப்பழம் பதினாறாம் நூற்றாண்டில் அறிமுகமானது. ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்த்துகீசியர் வளர்த்தார்கள்.
- உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா ஆகியவை பின்னர் வந்தன. அவுரி மற்றுமொரு முகலாயர் கால முக்கிய வணிகப் பயிராகும்.
- பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்று உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் தலைமைப் பட்டு உற்பத்தி மையமாயிற்று.
- விவசாயிகள் நிலவரியைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதால் அவர்கள் தங்கள் உபரியைச் சந்தையில் விற்றாக வேண்டியதிருந்தது. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு நிலவரியே மிக முக்கியமான வருவாயாகும்.
- அது விளைச்சலில் கிடைக்கும் ஒரு பங்காகும். அரசு நிர்வாகம் நிலத்தின் உற்பத்தித் திறனை மதிப்பிட்டு, நிலத்தை அளவை செய்து , மொத்த அளவை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்தது.
- அக்பர் ஜப்தி முறையை (தோடர்மாலால் அறிமுகம் செய்யப்பட்ட முறை) பிரகடனம் செய்தார். நிலத்தின் அளவு, விளைவிக்கப்பட்ட பயிர் ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயி பணமாகச் செலுத்த வேண்டிய வரி நிர்ணயிக்கப்பட்டது.
- பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய இவ்வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் தஸ்தர் என அழைக்கப்பட்டன.
- நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற் கூடங்களைச் சார்ந்திருந்தது. பஞ்சடித்துப்பட்டை இடுபவர், நூல்நூற்போர், நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப் பதிப்போர், சலவைச் செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பருத்தியிழைத் தொழிற் கூடங்கள் பணிகளில் அமர்த்திக் கொண்டன.
- இரும்பு, தாமிர, வைரச்சுரங்கங்கள் அமைத்தல், துப்பாக்கி தயாரித்தல் போன்றவை ஏனைய முக்கியத் தொழில்களாகும். “கர்கானா” என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
- அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன. கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர் மற்றும் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
வர்த்தகமும் வாணிகமும்
- நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும் திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்த்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின. உபரியானது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளிலும் , ஒட்டக வண்டிகளிலும் சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
- பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலைதூரப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்தது. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
- சோழமண்டலக் கடற்கரை, தனது பருத்தித் துணி உற்பத்திக்காகப் புகழ் பெற்றிருந்தது. காஷ்மீர் சால்வைகளும் தரைவிரிப்புகளும் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்றிருந்த லாகூரிலிருந்து விநியோகமாகின.
- பொருட்கள் இடம் விட்டும் இடம் செல்வதற்கு ‘உண்டி’ என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் உதவின. ஒருங்கிணைக்கப்பட்டிருந்த “சராய்கள்” (ஓய்வு விடுதிகள்) வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன.
- இந்து, முஸ்லீம், சமணம் போன்ற அனைத்து மதங்களையும் சார்ந்த வணிகர்கள் இருந்தனர். குஜராத்தைச் சேர்ந்த போராமுஸ்லீம்கள், ரஜபுதனத்து மார்வாரிகள், சோழமண்டலக் கடற்கரைசார்ந்த செட்டியார்கள், மலபார் முஸ்லீம்கள் ஆகியோர் புகழ்பெற்ற வணிக சமூகத்தினர் ஆவர்.
- மேற்கு ஆசியா ஐரோப்பியநாடுகள் ஆகியவற்றுடனான வணிகத்தை ஐரோப்பியரே கட்டுப்படுத்தினர். இந்திய வணிகர்களின் பங்கேற்பை அவர்கள் கட்டுப்படுத்தினர்.
- மேலும் பெருமளவிலான வளங்களையும், மிகப்பெரும் ராணுவத்தையும் கொண்டிருந்தபோதிலும் முகலாய அரசு ஒரு கடற்படையைக் கொண்ட சக்தியாக இல்லை. தாங்கள் ஒரு பலம் பொருந்திய கடற்படைச் சகாப்தத்தில் வாழ்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
- ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்கள், சாயங்கள், வங்காளப் பட்டு, மஸ்லின், சொரசொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தித் துணி ஆகியவற்றை இங்கும் கொள்முதல் செய்தனர்.
- இதற்கு மாறாக இந்தியா பெருமளவில் தங்கத்தையும் வெள்ளியையும் இறக்குமதி செய்தது. முகலாயரின் வெள்ளி நாணய முறை வெள்ளிக்கான தேவையை அதிகரித்தது.
மதம்
- முகலாயர் காலம் புராண மரபுகளின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதற்குச் சாட்சியாய் இருந்தது. எண்ணிலடங்கா நம்பிக்கைகளும் அதிக எண்ணிக்கையிலான மரபுகளும் நடைமுறைகளும் வழக்கத்தில் இருந்ததால் இந்து மதத்தை ஒரு கோட்பாட்டுத் தொகுப்பெனச் சொல்வது கடினமானது என்றாலும் பரஸ்பர பரிமாற்றம், பெரும்பாலுமான பகுதிகளில் சமஸ்கிருத மொழியில் வெளிப்பாடாகி , இந்து மதத்தின் பல பிரிவுகள் ஒரே மாதிரியான மரபுத் தொடர்புகளையும் ஒரே மாதிரியான தெய்வங்களையும் கொண்டிருந்தன.
- பதினாறு, பதினேழு ஆகிய நூற்றாண்டுகள் வைணவ மதத்தின் நூற்றாண்டுகளாகும். இராமர் வழிபாட்டு மரபைத் தனது புகழ்பெற்ற பக்திப் பாடல்கள் வழி முன்மொழிந்த துளசிதாசர் (ராமசரிதமனஸ்) இராமரைக் கடவுளின் அவதாரகாச் சித்தரித்தார்.
- பக்தியின் இலக்கு விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணரானபோது பக்தியின் வெளிப்பாடு மேலும் உணர்ச்சிகரமாயிற்று.
- இக்காலகட்டத்தில் பக்தி இயக்கம் பெரும் வளர்ச்ச் பெற்றது. கவிஞர்களும் இறையடியார்களும் நாட்டின் பல பகுதிகளில் தோன்றினர். சடங்குகளையும் சாதிமுறையையும் அவர்கள் விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்கினர்.
- தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தாமல் மக்களின் மொழியைப் பயன்படுத்தினர். அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழிநடையில் இசையோடு பாடப்பட்டபோது அவை மக்களிடையே பிரபலமாயின.
- வல்லபாச்சாரியார் அவருடைய மகன் வித்தால்நாத் ஆகியோர் கிருஷ்ண வழிபாட்டைப் பரப்புரை செய்தனர். இப்பிரிவைப் பின்பற்றிய சூர்தாஸ் சூர்-சராவளி என்னும் இலக்கியத்தை உள்ளூர் மொழியில் எழுதினார்.
- ஏகநாதர், துக்காராம் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்தி இயக்கக் கவிஞர்களாவர். வியாசராயரால் பிரபலப்படுத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கமான ‘தசருதா’ இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரின் இயக்கமாக மாறியது.
- பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார். நெசவுக் குடும்பத்தைச் சார்ந்த இவர் முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தார். உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் சாதிமுறையையும் கண்டித்தார். எளிய மொழி நடையில் எழுதப்பட்ட இவரின் பாடல்கள் வாய்மொழியாகவே வடஇந்தியாவின் பெரும் பகுதிகளில் பரவின.
- பக்தி இயக்கப் புலவர்களைப் பற்றி ஆர்வமூட்டக் கூடிய செய்தி யாதெனில் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் கைவினைஞர்களாகவும் சேவை செய்யும் சமூகப் பிரிவினராகவும் இருந்தனர் என்பதே.
- கபீர் ஒரு நெசவாளர். ரவிதாஸ் தோல் பதனிடும் தொழிலாளி. சைன் என்பவர் சிகையலங்காரத் தொழில் செய்தவர். தாது பருத்தியைச் சுத்தம் செய்பவராவார், ஹரியானாவைச் சேர்ந்த சத்னாமி சமூகத்தவர் தங்களைக் கபீர் மற்றும் அவருடைய போதனைகளின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவதில் பெருமை கொள்கின்றனர்.
- சமஸ்கிருந்தமும் பாரசீகமும் நிர்வாக, அறிவுலக நடவடிக்கைகளின் மொழிகளாக இருக்கையில் பிராந்திய மொழிகள் தங்கள் உயிர்த்துடிப்பு மிக்க இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தின.
சீக்கிய மதம்
- சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை முன்னெடுத்த இயக்கமாகத் தோற்றம் பெற்று பின்னர் அங்கீகரிக்கப்பட்ட உலக மதங்களில் ஒன்றாகப் பரிணமித்தது.
- சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த சாகிப் இஸ்லாமிய மத குருவான ஷேக் பரித், பக்தி இயக்கப் புலவர்களாக நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகியோரின்போதனைகளை உள்ளடக்கமாய்க் கொண்டுள்ளது.
- “கடவுள் ஒருவரே” என குரு நானக் நம்பினார். அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் எனக் கூறினார். உருவ வழிபாட்டையும் மதச் சடங்குகளையும் அவர் கண்டனம் செய்தார்.
- அனைத்து மக்களின் மீதும் அன்பு செலுத்துதல், நன்னெறியைக் கடைப்பிடித்தல் , ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றும்படி வற்புறுத்திக் கூறினார். சாதிமுறையைக் கண்டம் செய்தார்.
சூபியிஸம்
- சூபியிஸம் என்பது இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் ஒரு மதக் கோட்பாடாகும். ஈரானில் உதயமான இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
- வைதீக முஸ்லீம் இறையியலாளர்களுக்கு ஷரியத் முன் வைக்கும் கட்டுப்பாடுகளை சூபியிஸம் நிறைவேற்றுகின்ற வரை அது ஏற்புடையதாகவே இருந்தது.
கிறித்தவம்
- ஐரோப்பிய வணிகர்களின் வருகையோடு பிரான்ஸிஸ் சேவியர், ராபர்ட்-டி-நோபிலி போன்ற கிறித்தவச் மதப் பரப்பாளர்களும் இந்தியா வந்தனர்.
- தொடக்ககாலக் கிறித்தவ மதப் பரப்பாளர்கள் கத்தோலிக்கர்களாவர். டேனியர்களின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மதப் பரப்பாளர்கள் 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தனர்.
- அவர்களில் ஒருவரான சீகன்பால்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை 1714இல் தமிழில் மொழியாக்கம் செய்தார். வெகுவிரைவில் பழைய ஏற்பாடும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
அறிவியலும் தொழில்நுட்பமும்
- முஸ்லீம் கல்வி நிறுவனங்களான மதரஸாக்கள் முஸ்லீம் இறையியலின் மீதே அதிகக் கவனம் செலுத்தியது. வாரணாசி போன்ற மிகச் சிறந்த கல்வி மையங்களில் ஜோதிடம் கற்றுத்தரப்பட்டது.
- ஐரோப்பாவிலிருந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லையென பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர் குறிப்பிடுகிறார். இதனால் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பது இயலாத நிலையில் இருந்தது.
- இருந்தபோதிலும் கணிதம், வானியல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. அக்பரின் அவைக்களைப் புலவரான பெய்சி பாஸ்கரச்சாரியாரின் புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிபெயர்த்தார்.
- முகலாயர் காலத்தில் ஐரோப்பியர் இந்தியாவில் இருந்தாலும் இந்தியச் சமூகத்தின் மீது அவர்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை.
- நீர் இறைப்பதற்காகப் பல பீப்பாய்கள் இணைக்கப்பட்டச் சக்கரமான பாரசீகச் சக்கரம் பாபர் காலத்தில் அறிமுகமானது. வரிசையாக விசைச் சக்கரங்கள் பொருத்தப்பட்டச் சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்ரியில் நிறுவப்பட்டது.
- வெடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் மூறையைப் பரவலாக்கிய பெருமை அக்பரைச் சாரும். கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழ்ப்படுகின்றார்.
- இத்தொழில் நுட்பத்தின்படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களைக் கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது.
- ஒருசில இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை இறுக்கமாக இணைப்பதற்கான திருகாணிகள், உடல் உழைப்பாலும் வார்களாலும் இயக்கப்படும் தூளைப்பான், வைரத்தை பட்டை தீட்டும் கருவி போன்றவை பயன்பாட்டில் இருந்தன.
- வேளாண் கருவிகள் முன்னர் இருந்தததைப் போலவே தொடர்ந்தன. அவை பெரும்பாலும் மரத்தாலானவை. உலோகவியலைப் பொருத்தமட்டிலும் வார்ப்பு இரும்பை உற்பத்தி செய்ய இயலாமல்போனது பெரும் பின்னடைவாகும்.
- வரலாற்றறிஞர் இர்பான் ஹபீப் இந்தியாவின் பின்தங்கிய நிலையைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார். தொழில் நுட்பத்தில் இந்தியாவின் பின்தங்கிய நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியப் படைகளில் மேட்ச் லாக் எனப்படும் பழைய பாணியிலானத் துப்பாக்கிகள் அதிகமான பயன்பாட்டில் இருந்தபோது ஐரோப்பாவில் பிளின்ட்லாக் எனப்படும் நவீனத் துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
- செலவு மிக்க செம்பினாலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தபோது ஐரோப்பாவில் முன்னதாகவே அவை பயன்பாட்டிலிருந்து நீங்கிவிட்டன. இதற்குக் காரணம் பதினேழாம் நூற்றாண்டில்கூட இந்தியாவால் வார்ப்பிரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனதேயாகும்.
கட்டடக்கலை
- முகலாயர் காலத்தில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக் கலையில் குறிப்பிடத்தக்கக் கட்டமாகும். கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும் படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகலாயக் கட்டடங்கள் பெயர் பெற்றவையாகும்.
- பாபர் , ஹுமாயூன் காலங்களில் கட்டப்பட்ட மசூதிகள் கட்டடக்கலை ரீதியாக முக்கியத்துவம் உடையவையல்ல. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோரின் கல்லறைகள் போன்ற கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
- புராணகிலாவில் உயர் அரண் படியடுக்கு நடைமேடையில் கட்டடப்பட்டுள்ள கல்லறைகள், நாற்புறமும் சூழ்ந்துள்ள நீர் நிலைகள் ஆகியன நவீனக் கூறுகளாகும்.
- அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹுமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்தது.
- மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. அக்பரின் புதிய தலைநகரான பதேபூர் சிக்ரி கோட்டைகளால் சூழப்பட்ட எழுச்சியூட்டும் பல கட்டடங்களைக் கொண்டுள்ளது.
- பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற்பகுதியும் , அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாசாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
- ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை மாடம் சில பௌத்த கட்டடக்கலைக் கூறுகளையும் கொண்டுள்ளது. இது அக்பரின் கல்லறை மாடம் சில பௌத்த காட்டடக்கலைக் கூறுகளையும் கொண்டுள்ளது. இது அக்பரின் காலத்தில் தொடங்கப்பட்டு ஜஹாங்கீரின் காலத்தில் நிறைவு பெற்றது.
- ஜஹாங்கீர் நூர்ஜகானின் தந்தையான இதிமத் உத் தௌலாவுக்காக எழுப்பிய கல்லறையே முழுவதும் வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் முகலாயர் கட்டிய முதல் கட்டடமாகும்.
- ஷாஜகான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது. தாஜ்மஹால் முழுவதும் பளிங்குக் கற்களால் உயர்த்தப்பட்ட தளத்தின் மீது கட்டப்பட்டதாகும்.
- மையத்தில் பின்னொதுங்கிய வாயிலுக்கு மேல் குமிழ்வடிவக் கவிகை மாடத்தையும் அதைச் சுற்றி நான்கு ஸ்தூபி மாடங்களையும் நான்கு மூலைகளிலும் நான்கு தனித்தனியான கோபுரங்களையும் (மினார்) கொண்டு அமைந்த இந்நினைவிடம் உலகப்புகழ் பெற்றுள்ளது.
- திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹுரமஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டடங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.
- ஆக்ரா கோட்டையிலிருக்கும் மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கற்களாலனது. தில்லியிலுள்ள கம்பீரமான வாயிற் பகுதியில் வரிசையான கவிகைமாடங்கள், உயரமான மெலிதான் கோபுரங்கள் (மினார்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஜும்மா மசூதி ஆகியன ஷாஜகானால் கட்டடப்பட்ட முக்கிய மசூதிகளாகும்.
- ஷாஜகான் , ஷாஜகானாபாத் என்ற பெயரில் ஒரு நகரத்தையே (இன்றைய பழைய தில்லி) உருவாக்கினார். இங்குதன செங்கோட்டையும் ஜும்மா மசூதியும் அமைந்துள்ளன. ஔரங்கசீப் காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது. மேலும் ஔரங்காபாத்தில் ரபீயா உத் தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது. இக்கல்லறை பீபிமக்பாரா(பெண்ணின் கல்லறை) என்றழைக்கப்படுகிறது.
- ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோர் உருவக்கிய ஷாலிமர் தோட்டங்கள் இந்தியத் தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவை ஆகும். மிகப்பெரும் கட்டிடகளைத் தவிரப் பொதுப்பயன்பாட்டிற்காகவும் பல கட்டுமானப் பணிகளை முகலாயர் மேற்கொண்டனர்.
- அவற்றுள் மகத்தானது ஜான்பூரில் கோமதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளப் பாலமாகும். முகலாயரின் மிகவும் போற்றத்தக்கச் சாதனை தில்லிக்கு நீர் கொண்டுவரும் மெஏற்கு யமுனா கால்வாயைக் கட்டியதாகும்.
- முகலாயக் கட்டடக்கலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில் கட்டுமானங்களின் மீதும் செல்வக்குச் செலுத்தியது. மதுராவுக்கு அருகே பிருந்தாவனத்தில் உள்ள கோவிந்தேவ் கோவிலிலும் , மத்தியப்பிரதேசம் ஓரிசாவிற்கு அருகேயுள்ள சதுர்டிஜ் என்னும் இடத்திலுள்ள பீர்சிங் கோவிலிலும் முகலாயக் கட்டிடக்கலையின் தக்கத்தைக் காணலாம்.
ஓவியம்
- முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. முகலாயரின் நுண் ஓவியங்கள் உலகத்தின் பல அருங்காட்சியகங்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.
- குஜராத், மாளவம் ஆகிய பகுதிகளில் உயிர்ப்புடன் செயல்பாட்டிலிருந்த இந்திய ஓவிய மரபுகள் , மேற்காசிய ஓவிய மரபுகளின் செல்வாக்கோடுஇணைந்து ஓவிய மரபுகளின் செல்வாக்கோடு இணைந்து ஓவியக் கலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
- மத்திய ஆசியாவிலிருந்து ஹூமாயுனோடு இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்த்ய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.
- இலக்கிய நூல்களை விளக்கும் பொருட்டே ஓவியங்கள் பெரிதும் வரையப்பட்டன.. பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகாபாரதத்திலும், அய்னி அக்பரியிலும் பல ஓவியங்கள் இடம் பெற்றுள்ளான.
- தஷ்வந்த், பசவன் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர். ஐரோப்பிய ஓவியங்கள் போர்த்துக்கீசியப் பாதிரிமார்களால் அக்பரின் அவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
- ஜஹாங்கீர் காலத்தில் உருவப் படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றன. இத்துறையில் மன்சூர் பெரிதும் அறியப்பட்டவராவார். முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. ஷாஜகான் ஓவிய மரபைத் தொடர்ந்தார். ஆனால் ஔரங்கசீப்பின் அலட்சியத்தால் ஓவியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கலைந்து சென்றதன் மூலம் பிராந்திய அளவில் ஓவியக்கலை வளர்ந்தது.
இசையும் நடனமும்
- பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான்சென் ஏனைய இசைக் கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டவர் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது.
- ஜஹாங்கீரும் ஷாஜகானும் இசையை ஆதரித்தவர்களே. ஔரங்கசீப் இசைக்கு எதிரானவர் என்ற பொதுக் கருத்தொன்று நிலவுகிறது. ஆனால் அவருடைய காலத்தில்தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன.
- அவருடைய அரசிகளும் இளவரசிகளும் பிரபுக்களும் தொடர்ந்து இடைக்கு ஆதரவு தந்தனர். பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா இசைத்துறையில் முக்கிய வளர்ச்சிகள் ஏற்படக் காரணமாக இருந்தார். பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இடைக்கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இலக்கியம்
- பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தன. முகலாயப் பேரரசிலும் தக்காண அரசுகளிலும் பாரசீக மொழியே நிர்வாக மொழியால இருந்தது.
- ரஜபுத்திர அரசுகளின் மீதும் அம்மொழி தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவற்றின் நிர்வாகத்தில் பல பாரசீகச் சொற்கள் இடம் பெற்றன. ‘அக்பர் நாமா’ என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார்.
- முகலாய நிர்வாகத்தைப்பற்றி அவர் அய்னி அக்பரியில் விவரித்துள்ளார். அறிவியல், புள்ளியியல், புவியியல் , பண்பாடு ஆகியவற்றின் மீது ‘அய்னி அக்பரி’ கொண்டுள்ள அக்கறைக்காகவே அது பாராட்டப்பட வேண்டும்.
- அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறான ‘பாதுஷா நாமா’ அய்னி அக்பரியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டதே.
- ஔரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி ஆலம்கீர் நாமா என்னும் நூலை எழுதிய முகமது காஸிம் இதே முறையைத்தான் பின்பற்றினார்.
- பாபரின் , சகதாய் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை அப்துல் ரகீம் கானி-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.
- தபிஸ்தான் என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள் , அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்துப் பாராபட்சமற்ற விபரங்களைக் கொண்டுள்ளது.
- சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்ததால் பாரசீக மொழி வளம் பெற்றது. அக்பரின் அவைக்களப் புலவரும் அபுல்பாசலின் சகோதரருமான அபுல் பெய்சியின் மேற்பார்வயில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
- தாராஷூகோவால் உபநிடதங்கள் ‘சர்-இ-அக்பர்’ (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக்கும். அபுல் பெய்சியின் மஸ்னாவி, உத்வி, நசிரி ஆகியன இந்தியாவில் பாரசீகக் கவிதைகளுக்கு வளம் சேர்த்தன.
- முகலாயர் காலத்தில் படைக்கப்பட்ட சமஸ்கிருத நூல்கள் வியக்கத்தக்கவையாகும். இக்காலச் சமஸ்கிருத இலக்கியம் காவியம் என்றழைக்கப்படும் வரலாற்றுக் கவிதைகள் வடிவில் எழுதும் பாங்கிற்கு பெயர் பெற்றதாகும்.
- கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய ‘ராஜவலிபதகா’ எனும் நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் பிரக்ஞபட்டாரால் தொகுக்கப்பட்டது.
- பாரசீக மொழி நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் கிரேக்க, அராபியப் புலமையானது இந்தியா வந்தடைந்தது. அக்பரின் வானியலறிஞரான நீலகண்டர், தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தார். ஷாஜகானின் அவைக்களப் புலவரான ஜெகநாத பண்டிதர் ‘ரசகங்காதரா’ எனும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.
- முகலாயர் காலத்தில் இலக்கியத் துறைக்குச் செய்யப்பட்ட பெரும் பங்களிப்பு பல்வேறு மொழிகளைப் பேசி வந்த மக்களிடையே உருது ஒரு பொதுவான தொடர்பு மொழியாக வளர்ச்சியடைந்ததாகும்.
- இக்காலத்தில் பிராந்திய மொழிகளும் வலுப்பெற்று முழுமையான வளர்ச்சி பெற்றன. செய்யுள் முறையிலான தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற மிகச் சிறந்த பாடல்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன.
- அப்துர் ரகீம் காநி-கானான் என்பவர் வாழ்க்கை கூறித்த, மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப் பாடல்களை இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார்.
- கிழக்கு உத்திரப் பிரதேசத்து மக்கள் பேசிய இந்தி மொழியின் வட்டார மொழியான அவதியில் துளசிதாசர் எழுதிஉஅ பாடல்கள் அவற்றின் பக்திச் சிந்தனைகளுக்காகப் பிரபலமாயின.
- இக்காலத்தில் ஏகநாதர், துக்காராம், ராம்தாஸ், முக்தீஸ்வர் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளால் மராத்திய இலக்கியம் எழுச்சி பெற்றது. ஏனைய மொழிகளின் மீதான சமஸ்கிருதத்தின் மேலாதிக்கத்தை ஏக்நாத் கேள்விக்குள்ளாக்கினார்.
- துக்காராமின் பாடல்கள் ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டியது. முக்தீஸ்வர் மகாபாரத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார்.
- விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் தனது ‘ஆமுக்தமால்யதா’ (ஆண்டாளைப் பற்றிய காவியம்) மூலமாகவும் , அவருடைய அவைக்களப்புலவரான அல்லசானி பெத்தண்னா தனது ‘மனுசரித்திரா’ எனும் நூலின் மூலமாகவும் தெலுங்கு இலக்கியத்தின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றனர்.
- இக்காலத்தில் தமிழிலிருந்து தனியாகப் பிரிந்த மலையாளம் இலக்கிய நிலை பெற்றது. இராமாயணமும் மகாபாரதமும் மலையாள மொழியில் எழுதப்பட்டன.
- அஸ்ஸாமிய மொழியில் பக்திப் பாடலை முன்மாதிரியாகக் கொண்டு சங்கரதேவர் ஒரு புதிய இலக்கியமரபை உருவாக்கினார்.
- அஸ்ஸாமிய மொழியில் வானியல், கணிதம், யானைகள் மற்றும் குதிரைகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்த நூல்கள் படைக்கப்பட்டன. இராமாயணமும் மகாபாரதமும் அஸ்ஸாமிய மொழியில் எழுதப்பட்டன.
- கிருஷ்ணருக்கும் ராதைக்குமான காதலைச் சித்தரிக்கும் கவிதைகளைக் கொண்ட சைதன்ய வழிபாட்டு முறை வங்காள இலக்கியத்தை மேம்படுத்தியது.
- குரு அர்ஜுன் சிங் தொகுத்த சீக்கியரின் புனித நூலான குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்ட சீக்கிய குருக்கள், ஷேக்பரித் ஆகியோரின் பாடல்கள் பஞ்சாபி மொழியின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய அடையாளங்களாகும்.
- இதே காலப் பகுதியில் தமிழ் இலக்கியப்படப்பில் சைவ, வைணவ இலக்கியங்கள் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன. மாபெரும் சைவப் புலவரான குமரகுருபரர், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதி நெறிவிளக்கம் ஆகிய முக்கிய இலக்கியங்களை இயற்றினார்.
- தாயுமானவர் சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை உள்ளடக்கியப் பக்திப்பாடல்களை இயற்றினார். கிறித்தவ மதப் பரப்பாளர்களான ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) ஆகியோர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தொடங்கியிருந்தனர்.
- தேசிய அளவில் முகலாயர் உருவாக்கிய பேரரசு, ஆற்றல் மிகுந்த மையப்படுத்தப்பட்ட நிர்வாகமுறையின் சிறப்பான உதவியோடு பல துண்டுகளாகப்பிரிந்து கிடந்தவற்றை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து ஒன்றாக்கியதன் மூலம் இந்தியாவின் மீது என்றுமழியாத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செயல்பாட்டில் பன்முகப்பட்ட அடையாளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதால் தனித்தன்மை வாய்ந்த ஒரு இந்தியப் பண்பாடு பரிணமித்தது.
உலகத்தின் ஏனைய பகுதிகளில்
அக்பரின் காலமான 1556 முதல் 1605 வரி மாபெரும் அரசர்களின் காலமாகும். அவருக்கு மிக அருகேயிருந்த சமகாலத்தவர் இங்கிலாந்தின் பேரரசியார் எலிசபெத் ஆவர். இக்காலப் பகுதியில்தான் ஷேக்ஸ்பியரும் வாழ்ந்தார். இதே காலத்தில்தான் பிரான்சை போர்பார்ன் வம்சத்தின் முதல் அரசர் நான்காம் ஹென்றியும், பாரசீகத்தை சாபாவி அரசவம்சத்தின் மாபெரும் வலிமைமிக்க அரசனான மகாஅப்பாஸும் ஆண்டுவந்தனர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக நெதர்லாந்தின் கிளர்ச்சி இக்காலத்தில் தொடங்கி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் தொடர்ந்து 1648இல் முடிவடைந்தது.