மாநில அரசு Notes 7th Social Science Lesson 14 Notes in Tamil
7th Social Science Lesson 14 Notes in Tamil
14] மாநில அரசு
சட்ட மன்ற உறுப்பினர்:
சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிறோம். சட்ட மன்றப் பேரவை கோட்டை சென்னையில் உள்ளது. இதுதான் ஆங்கிலேயர்களால், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை ஆகும். இந்த கோட்டையின் பெயர் புனித ஜார்ஜ் கோட்டை. தற்போது, இந்தக் கோட்டையில் தமிழகச் சட்ட மன்றப் பேரைவையும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ளன. சட்டமன்றத்திலுள்ள கீழவையில்தான், மாநிலத்தின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதிப்பர்.
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தனித்தனியாக நிருவாக அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களுள் இந்திய நாட்டின தலைநகரான புதுதில்லியும் இதில் அடங்கும். இந்திய நாடு இருவகையான அரசாங்கங்களைக் கொண்டுள்ளது.
புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசு, மற்றொன்று அந்தந்த மாநில அரசுகள். ஆகவே மத்திய அரசு, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படுவதையே கூட்டாட்சி முறை என்கிறோம்.
நம் இந்திய நாடு, நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் நல்ல முறையில் நடைபெறுவதற்காக, இந்தியக் குடியரசுத் தலைவரும் இந்தியாவின் பிரதம மந்திரியும் அந்தந்த மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களும் பொறுப்புடன் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையைத் தான் மத்திய அரசாங்கம் என்கிறோம்.
தனி அரசாங்கம்:
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தனித்தனியாக அரசாங்க அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர். பாராளுமன்றப் பேரவையில் உள்ளவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர் (பா.உ) எனவும், சட்டமன்றப் பேரவையில் உள்ளவர்களைச் சட்ட மன்ற உறுப்பினர்கள் (ச.ம.உ) எனவும் கூறுகிறோம். ஆகவே, நம் இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசம், மாநில அரசுகளும் இணைந்தே செயல்படுகின்றன.
சட்ட மன்ற உறுப்பினர்களை யாரும் நியமிப்பதில்லை. அவர்கள், பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்டுகிறார்கள். அரசியல் கட்சிகள்தாம், தேர்தலில் குறிப்பிடத் தக்க அளவில் பங்காற்றுகின்றன. தேர்தலுக்காக நாடு, மக்கள் தொகையைப் பொருத்துப் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் தங்களுடைய வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. அந்தத் தொகுதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுகிறார். அவ்வாறு வெற்றி பெற்றவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கிறோம். தேர்தல்களை நடத்துவதும், அவற்றைக் கண்காணிப்பதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பணியாகும்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், எந்தக் கட்சியில் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தக் கட்சியே பெரும்பான்மைக் கட்சியாக உருவாகிறது. ஆளுநர், அந்தப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து, மாநில அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுப்பார். பாதிக்குமேல் உள்ள தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மைக் கட்சியே மாநிலத்தில் ஆளும் கட்சியாக உருவாகிறது. பெரும்பான்மைக் கட்சியே மாநிலத்தில் ஆளும் கட்சியாக உருவாகிறது. பெரும்பான்மைக் கட்சிக்கு அடுத்த நிலையில், எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்ட மன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது. ஆளும் கட்சியைச் சேராத வேறு பல கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் என அழைக்கப்படுவர்.
மாநில அரசாங்கம்:
ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இருப்பர். இந்தியக் குடியரசுத் தலைவர், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆளுநரை நியமிப்பார். அந்த ஆளுநர், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார். ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்துத் தம் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சரவையை (மந்திரி சபையை) உருவாக்குவார். அந்த அமைச்சரவை, மாநிலத்தில் ஐந்தாண்டு ஆட்சிபுரியும்.
ஆளுநர்:
ஆளுநராக வர விரும்பினால், முதலில் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். இவை மட்டுமல்ல, எவ்வித வருவாய் தரும் எந்த ஒரு அரச பதவியிலும் இருக்கக் கூடாது. முதலமைச்சராக ஆக விரும்பினால், 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சட்ட மன்ற உறுப்பினராக (ச.ம.உ) இருக்க வேண்டும் ஒருவேளை, சட்ட மேலவை உறுப்பினராக (ச.மே.உ) ஆக விரும்பினால், 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
சட்ட மேலவை:
மாநிலச் சட்ட மன்றத்தில் சட்ட சபையில் வழக்கமாக இரு அவைகள் இடம் பெற்றிருக்கும். ஒன்று, மேலவை. மற்றொன்று கீழவை. இதனை ஈரவைச் சட்டமன்றம் சட்ட சபை என்று அழைப்பர். சட்ட மன்ற மேலவை என்பது, சட்ட மன்ற சபை. இதன் உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. கீழவை என்பது, சட்ட மன்ற சபை இதன் உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களாவர். சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள சில மாநில சட்ட மன்றங்களில் மேலவை, கீழவை என்னும் ஈரவை அமைப்பு உள்ளது. ஆனால், நம் தமிழ்நாட்டில் கீழவை மட்டுமே உள்ளது இதனை ஓரவை சட்ட மன்றம் என்பர்.
ஆளுநர், முதலமைச்சர் அதிகாரங்களும், பணிகளும்:
மாநிலச் சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர், மாநில நிருவாகத் துறையின் தலைவராகவும் மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிருவாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் அவர் இருக்கிறார். மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்துச் சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும்) அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன. மாநிலத் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.
மாநில நிருவாகத் துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநர் செயல்படுகிறார். மாநில நிருவாகத் துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார். முதலமைச்சர், தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார். அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்ட சபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.
அரசாங்கத்தில் சட்டமன்றம், நிருவாகத் துறை, நீதித்துறை என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. சட்ட மன்றம், சட்டங்களை இயற்றுகிறது. நிருவாகத் துறை சட்டங்களை செயல்படுத்துகிறது. நீதித்துறை, சட்டங்களை நிலைநாட்டுகிறது.
நீதித்துறை:
மாநில அளவில், மிகப்பெரிய நீதித்துறை அமைப்பாக இருப்பது உயர்நீதி மன்றம். இவ்வமைப்பு, சுதந்திரத் தன்மையுடன் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஓர் உயர்நீதிமன்றம் உண்டு. மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் இருப்பர். உயர் நீதி மன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குடியரசுத் தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி, தமக்கு 62 வயது ஆகும்வரை, அந்தப் பதவியில் இருப்பார். உயர் நீதிமன்றத்தைத் தவிர, மாவட்ட அளவில் நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் உள்ளன. அவை, எவ்விதச் சார்புமின்றி, மக்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்கின்றன. அவை மட்டுமல்லாமல், குடும்ப நல நீதிமன்றங்களும் உள்ளன. அவை, திருமணம் குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கின்றன.
பாடச்சுருக்கம்:
இந்தியா 29 மாநிலங்களாகவும் 7 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனித்தனி சட்ட மன்றங்களைக் கொண்டுள்ளது. மாநில அரசு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவை உள்ளடக்கியதாகும். மாநில அரசின் தலைவர் கவர்னர் ஆவார். ஆளுநர் 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். சட்ட மன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறார். மாநில அரசின் நிருவாக அதிகாரம் முதலமைச்சரிடம் உள்ளது. பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவினர் சட்ட மன்றத்திற்கு கூட்டு பொறுப்புடையவர்கள் ஆவர். உயர்நீதி மன்றம் மாநில அரசின் உச்ச பட்ச நீதியமைப்பு. உயர் நீதிமன்றம் மாநிலத்தின் ஒட்டு மொத்த பரப்பிற்கான அதிகார எல்லை உடையது.
சொற்களஞ்சியம்:
சட்ட மன்றம் | Legislative | Law making body | |
மந்திரி சபை | Cabinet | The Committee of senior ministers | |
நிருவாகம் சார்ந்த | Executive | Administrative | |
நீதித்துறை | Judiciary | A system of courts of law |