பொது மற்றும் தனியார் துறைகள் Notes 8th Social Science Lesson 23 Notes in Tamil
8th Social Science Lesson 23 Notes in Tamil
23. பொது மற்றும் தனியார் துறைகள்
அறிமுகம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அடிப்படையில் ஒரு வேளாண்மையை பொருளாதார நாடாகவும் பலவீனமான தொழில் துறையை கொண்ட நாடாகவும் இருந்தது. நாட்டில் அதிக அளவில் வறுமை , கல்வியறிவின்மை, வேலையின்மை நிலவியது. இந்தியா மிகவும் மோசமான பொருளாதார மற்றும் சமுதாய அடிப்படை பிரச்சனைகளை எதிர்கொண்டு இருந்தது. இதன் காரணமாக நாட்டை முன்னேற்றுவதில் அரசு ஒரு விரிவான பங்கினை வகிக்க வேண்டிய நிலையில் இருந்தது. எனவே இந்திய பொருளாதாரமானது சமதர்ம அடிப்படையில் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதியது. தனியார் துறை மற்றும் பொதுத்துறை கைகோர்ப்பதனால் ஒரு நிலையான அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்றும் நாடு கருதியது. இந்தியாவில் கலப்பு பொருளாதார முறையை பின்பற்றி தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொது மற்றும் தனியார் துறை
- சிறிய அல்லது பெரிய, தொழில்துறை அல்லது வர்த்தகம் , தனியாருக்குச் சொந்தமான அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்து வகையான வணிக அமைப்புகளும் நம் நாட்டில் உள்ளன.
- இந்த நிறுவனங்கள் நமது அன்றாட பொருளாதார வாழ்வில் பங்கு கொள்வதால், இவை இந்திய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது.
- இந்திய பொருளாதாரம் தனியாருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களைக் கொண்டிருப்பதால், இது ஒரு கலப்பு பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்திய அரசியல் பொருத்தமான தனியார் மற்றும் அரசு நிறுவனங்க இணைந்து கலப்புப் பொருளாதாரத்தை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரத்தை இரு துறைகளாக அதாவது தனியார் துறை அல்லது பொதுத்துறை என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
- சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கான பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
- பொதுத்துறை தொழில்கள் அதன் அரசாங்கத்தின் உரிமையின் கீழ் உள்ளன, அதே நேரத்தில் தனியார் துறை தொழில்கள் தனியார் நபர்களின் உரிமையின் கீழ் உள்ளன.
- பொதுத்துறை ஒரு பொருளாதாரத்தின் முழு வளர்ச்சியை செயல்படுத்துகிறது. பொதுத்துறை சேவை நோக்கத்திலும், தனியார் துறை இலாப நோக்கத்திலும் செயல்படுகிறது.
கலப்புப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவையாகும்.
பொதுத்துறையின் வரையறை
அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும். நிறுவனங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் என முழுவதும் சொந்தமானவையாகவும் அரசாங்கத்தால் நடத்தப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளூர் அரசாங்கமாகவும் இருக்கும்.
பொதுத்துறையின் வரலாறு
- 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில்துறை தளத்தைக் கொண்ட வேளாண்மையை முதன்மையாக கொண்ட நாடாகும்.
- ஆங்கிலேயர்கள் நிறுவிய பதினெட்டு இந்திய போர் தளவாட (Ordnance) தொழிற்சாலைகள் மட்டுமே நாட்டில் இருந்தன.
- தங்கள் சொந்த பொருளாதார நலனுக்காகவும், துணைக் கண்டத்தை முரட்டுத்தனமாக படைகளைக் கொண்டு ஆளவும், தேசிய ஒருமித்த கருத்து பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாதலுக்கு ஆதரவாக இருந்தது, மற்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு திறவுகோலாக கருதப்பட்டது. அது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து பொருளாதார இறையாண்மையையும் மேம்படுத்தியது.
- பம்பாய் திட்டத்தை (1940) கட்டமைப்பதற்கு, அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஒழுங்கு முறைகளின் தேவையை நோக்கமாகக் கொண்டு 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பில் தொழில்துறை வளர்ச்சியின் வளர்ச்சியின் யுக்திகளை பரந்த வரையறைக் கொண்டு வகுத்தது.
- அதைத் தொடர்ந்து, மார்ச் 1950இல் அமைச்சரவ தீர்மானத்தால் திட்டக் குழு அமைக்கப்பட்டது மேலும், தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது.
- பிரதமர் ஜவஹர்லால் நேரு இறக்குமதிக்கு மாற்று தொழில்மயமாக்கலின் அடிப்படையில் ஒரு பொருளாதாரக் கொள்கையை ஊக்குவித்து, கலப்பு பொருளாதாரத்தை ஆதரித்தார்.
- இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு, அடிப்படை மற்றும் கனரக தொழில்களை நிறுவுவது என்று அவர் நம்பினார்.
- இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் (1956 – 60), 1956ஆம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானமும் நேருவின் தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை வலியுறுத்தியது.
- அவரது பார்வையை “இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை” என்று அழைக்கப்படும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி முன்னெடுத்துச் சென்றார்.
- இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா.பி.சி. மஹலானோபிஸ் அதன் உருவாக்கத்திற்கு கருவியாக இருந்தார்.
- இது பின்னர் ப்ரீட்மேன் –மஹலானோபிஸ் (Friedman –Mahalanobis Model) மாதிரி என்று அழைக்கப்பட்டது.
- 1991ஆம் ஆண்டின் தொழில்துறை கொள்கை முந்தைய அனைத்து கொள்கைகளிலிருந்தும் தீவிரமாக வேறுபட்டது, அங்கு அரசாங்கம் பொதுத்துறை முதலீடு செய்ய திட்டமிட்டு தனியார் துறைக்கு அதிக சுதந்திரத்தை அனுமதித்தது.
- அதேநேரத்தில், இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- இவ்வாறு, ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வாறு பொருளாதாரத்தில் நுழைந்தன.
- இவ்வாறு, இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள்
இரண்டு வகையான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன, அதாவது அரசாங்கத்தின் வசூல் வரி, கடமைகள், கட்டணங்கள் போன்றவற்றால் அவர்கள் திரட்டும் வருவாயின் மூலம் அரசாங்கம் அவர்களுக்கு முழுமையான நிதியளிக்கிறது. நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 51% க்கும் அதிகமாக உள்ளது. இது பல்வேறு அமைச்சகங்களின் கீழ் செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளன.
இது மிகப் பெரிய துறையாகும், இது மக்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குவதன் மூலம் மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுகிறது. அஞ்சல் சேவைகள், இரயில்வே சேவைகள், பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை குறைந்த செலவில் வழங்குதல், மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை.
பொதுத்துறையின் உறுப்புகள்:
1. அரசுத்துறைகளால் நிர்வாக செய்யப்படும் நிறுவனங்கள்
ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானதாகும்.
எடுத்துக்காட்டு: தபால் மற்றும் தந்தி, இரயில்வே , துறைமுக அறக்கட்டளை, இந்தியாவிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவை.
2. கூட்டுத் துறை நிறுவனங்கள்
இது ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிஸ் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்.
3. பொதுக் கழகம்
பொதுக் கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக் கழகத்தினை நிறுவுவதே ஆகும்.
எடுத்துக்காட்டு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC), ஏர் இந்தியா, இந்தியா ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்.
பொதுத்துறையின் நோக்கங்கள்
- உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
- வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
- வருமானம் மற்றும் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்.
- வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
- சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கு மாற்றீடை துரிதப்படுத்துதல்.
தொழில்களை வகைப்படுத்துதல்
- இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின் 1956ஆம் ஆண்டு தொழிற் கொள்கை தீர்மானத்தின் வாயிலாக அதன் தோற்றத்தை கண்டன. இந்த 1956 தீர்மானமானது தொழில்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. அரசுக்கே உரிய சொந்தமான தொழில்கள் அட்டவணை – A என குறிப்பிடப்படுகின்றன.
- தனியார் துறை தொழில்கள், மாநிலம் தன் முழுப் பொறுப்பில் தொடங்கும் புதிய அலகுகள் மற்றும் முயற்சிகளுக்கு துணை புரியக் கூடிய தொழில்கள் அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன.
- மீதமுள்ள தொழில்கள் தனியார் துறையில் அட்டவணை – C என குறிப்பிடப்படுகின்றன.
பொதுத்துறைகள் பின்வரும் 9 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்க வேண்டும். இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன. விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, இரயில்வே, மின் உற்பத்தித் தொலைத் தொடர்பு போன்றவைகளாகும்.
- பொதுத்துறை நிறுவனங்கள் “கட்டளைப் பொருளாதாரத்தின் அதிகாரங்களை” (Commanding heights of the economy) தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய், எஃகு போன்றவைகளாகும்.
- பொதுத்துறை ஒரு தொழில்முனைவோர் பங்கினை வகிக்க வேண்டும் அதாவது வேறுவிதமாக கூறினால் இதனை மூலதன தீவிர தொழில்கள் என்றும் அழைக்கலாம். எடுத்துக்காட்டு: இரும்புத்தாது, பெட்ரோ – வேதிப்பொருள், உரம், சுரங்கம், கப்பல் – கட்டுமானம், கனரக பொறியியல் போன்றவை.
- அரசின் முற்றுரிமையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இதில் அடங்கும். தொலைத்தொடர்பு உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, இரயில்வே, ரோலிங் ஸ்டாக் போன்றவை.
- உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்தியோகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், எடுத்துக்காட்டு:அணுசக்தி.
- நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: மருந்து, காகிதம், உணவகம் போன்றவை.
- நலிவடைந்த தனியார் நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: ஜவுளி, பொறியியல் போன்றவை.
- வர்த்தக கழகமாக அமைக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: இந்திய உணவுக் கழகம் (FCI), சி.சி.ஐ. (CCI) முதலியன.
- ஆலோசனை மற்றும் பொறியியல் சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு : மெக்கான் நிறுவனம் (MECON).
நிதி ஆயோக்
- நிதி ஆயோக் என்பது 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழுவாகும். அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்க திட்டக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
- நிதி ஆயோக் அடிப்படையில் ஒரு மதியுரையகக் குழுவாகவும் உண்மையான ஆலோசனைக் குழுவாகவும் 2015 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது.
சமூக பொருளாதார மேம்பாடு
- சமூக பொருளாதார மேம்பாடு என்பது ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல் முறையேயாகும்.
- சமூக பொருளாதார மேம்பாட்டை பின்வரும் குறியீடுகள் கொண்டு அளவிடப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஆயுட்காலம், கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்பின் அளவு போன்றவைகளாகும்.
- புதிய “மதியுரையகக் குழு” (Think Tank) எனப்படும் நிதி ஆயோக் (NITI Aayog) என்ற அமைப்பினால் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சமூக துறை முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் பொருத்தமான தளத்தை உருவாக்க முடியும்.
சமூக – பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிகிறது. தொழில் துறையில், தனியார் மற்றும் பொதுத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் அதிகரித்துள்ளது. இது அரசின் நிதியை அதிகரிப்பதோடு பொதுச் செலவுகளையும் அதிகரிக்கிறது.
ஆயுட்காலம்
2011ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சராசரி ஆயுட்காலம் ஆண்டுகளுக்கு 65.80 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆகும். பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது. ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சேவை செய்வதற்காக 2018-19 மத்திய வரவு செலவுத் திட்டத்தில் “தேசிய சுகாதார உற்பத்தி திட்டத்தை” (NHPS) அரசாங்கம் அறிவித்தது.
கல்வியறிவு
- சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) இந்திய அரசின் முதன்மை திட்டத்தின் அங்கமாகும்.
- 6-14 வயதுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்களுடன் கூடிய இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டது.
- கல்வியில் தரத்தின் அளவை அதிகரிப்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (RMSA), திறன் வகுப்பு (Smart Class) மின்னணு-கற்றல் (E-Learning), இலவச கணினி திறன் வகுப்புகள் மற்றும் சூழல்-நட்பு (ECO-Friendly) கற்பதற்கான இயற்கையான சூழல் வழங்குதல் போன்ற திட்டங்களும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு
- வேலை வாய்ப்பானது, முதன்மை துறையிலிருந்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு வேலைவாய்ப்பு மாறியுள்ளது என்பது தெளிவாகிறது.
- அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிக்கிறது. இதனால் அரசாங்கம் “திறன் நகரம்” (Smart City) திட்டத்தை தொடங்கியது.
- இது நகரங்களில் மருத்துவமனைகள், பள்ளிகள், வீட்டு வசதிகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற பல வசதிகளை அளிக்கிறது.
- வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் மின்சார வரிச்சலுகை போன்ற பல சலுகைகளை வழங்குவதன் மூலம் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துறையை தொடங்க தனியார் துறைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இதனால் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது.
வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்
அரசுத் துறையானது வீட்டு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்குகிறது. சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதால் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.
பொதுத்துறையின் முக்கியத்துவம்
எந்தவொரு பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் பொதுத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பின்வரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
- பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்:
திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்கியது.
- பொருளாதார மேம்பாடு: பொருளாதார வளர்ச்சி முக்கியமாக தொழிற்துறை வளர்ச்சியைப் பொறுத்தது. சிறு தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்க இரும்பு மற்றும் எஃகு கப்பல் போக்குவரத்து, சுரங்கம் போன்ற கனரக மற்றும் அடிப்படை தொழில்கள் தேவைப்படுகிறது.
- சமச்சீரான வட்டார வளர்ச்சி: பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் மின்சாரம் , குடிநீர் வழங்க; , தன்னாட்சி நகரியம் மற்றும் மனித சக்தி போன்ற அடிப்படை தொழில்துறை மற்றும் குடிமை வசதிகள் இல்லை. பொது நிறுவனங்கள் இந்த வசதிகளை வளர்ச்சியடையச் செய்வதன்மூலம் இந்த வட்டாரங்களில் உள்ள மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வேலைவாய்ப்பு உருவாக்கம்: நாட்டில் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க பொதுத்துறை இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. 2011ஆம் ஆண்டில் பணியமர்த்திய நபர்களின் எண்ணிக்கை 150 இலட்சம் ஆகும். ஒரு மாதிரி முதலாளியாக பணியாற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொதுத்துறை அதிக அளவில் பங்களிப்பு செய்துள்ளது
- ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய்: சில பொது நிறுவனங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு அதிக பங்களிப்பு செய்துள்ளன. மாநில வர்த்தக நிறுவனம் (STC), தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக நிறுவனம் (MMTC) , இந்துஸ்தான் எஃகு நிறுவனம், பாரத மின்னணு நிறுவனம், இந்துஸ்தான் இயந்திர கருவிகள் போன்றவை ஏற்றுமதி மேம்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
- நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு: நலிவடைந்த பிரிவு மூடப்படுவதைத் தடுப்பது, பொறுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் பலர் வேலையில்லாமல் இருப்பதைத் தடுப்பது, இதுமட்டுமல்லாமல் மூலதனம், நிலம், கட்டடம், இயந்திரங்கள் போன்றவற்றை தேவையற்ற முறையில் மூடுவதை (Locking) பொதுத்துறை தடுக்கிறது.
- இறக்குமதி மாற்று: சில பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும், அந்நிய செலாவணியை சேமிப்பதற்காகவும் தொடங்கப்பட்டன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC) , இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத மின்னணு நிறுவனம் போன்றவை இறக்குமதி மாற்றீடு மூலம் அந்நிய செலாவணியை சேமித்துள்ளன.
- இந்திய இரயில்வேயானது அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும்.
பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடு
நாட்டை வளர்ச்சியடைய செயவதற்காக பொதுத் துறையும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயல்பட்டாலும் அவை வெவ்வேறு குறிக்கோள்களையும் நோக்கங்களையும் கொண்டுள்ளன. அவற்றிற்கிடையேயான முக்கிய வேறுபாடுகள் சிலவற்றைக் காணலாம்.
வ.எண் | பொதுத்துறை | தனியார் துறை |
1 | தொழில்களின் உரிமையானது அரசாங்கத்திடம் உள்ளது. | தொழில்களின் உரிமையானது தனிநபர்களிடம் உள்ளது. |
2 | பொதுவருவாய், வருமானம் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கும் வரியை பொருத்தது | பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வழங்குதல் அல்லது கடன் வாங்குவதைப் பொருத்தது |
3 | பொதுத்துறை தொழிலாளர்களுக்கு முறையான ஊதியத்தை உறுதி செய்கிறது | தனியார்துறை தொழிலாளர்களை சுரண்டுகிறது |
4 | இது ஒரு சிலர் கைகளிலோ அல்லது பணக்காரர்களிடம் பெரும் செல்வத்தை குவிக்க அனுமதிக்காது | இது ஒரு சிலர் கைகளில் அல்லது பணக்காரர்களிடம் பெரும் செல்வத்தை குவிக்க அனுமதிக்கிறது |
5 | பொதுத்துறை நிறுவனங்களுக்கு NLC, SAIL, BSNL போன்றவை உதாரணமாகும். | தனியார்த்துறை நிறுவனங்களுக்கு TVS Motors, Ashok Leyland, TATA Steel போன்றவை உதாரணமாகும். |
6 | வரி ஏய்ப்பு இல்லை | வரி ஏய்ப்பு உண்டு |
7 | இது சேவை நோக்கமுடையதாகும் | இது முற்றிலும் இலாப நோக்கம் உடையது |
8 | சமூகரீதியாக பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. | இது சமூகரீதியாக பின்தங்கிய வர்த்தக மக்களை பொருட்படுத்தாது. இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. |
பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்
இந்தியாவில் 2017ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 8 மகாரத்னா தொழில்கள், 16 நவரத்னா தொழில்கள் மற்றும் 74 மினிரத்னா தொழில்கள் உள்ளன. கிட்டத்தட்ட 300 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) உள்ளன.
மகாரத்னா தொழில்கள் (Maharatna Industries)
சராசரியாக ஆண்டுக்கு நிகர லாபம் ₹ 2500 கோடி அல்லது சராசரி ஆண்டு நிகர மதிப்பு 3 ஆண்டுகளுக்கு ₹ 10,000 கோடொ அல்லது சராசரி ஆண்டு வருவாய் 3 ஆண்டுகளுக்கு ₹20,000 கோடி (முன்னர் பரிந்துரைக்கப்பட்ட ₹25,000 கோடிக்கு மாற்றாக) கொண்டுள்ள தொழில்கள் மகாரத்னா தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.
- தேசிய அனல்மின் கழகம் (NTPC)
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC)
- இந்திய இரும்பு ஆலை ஆணையம்(SAIL)
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
- இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
- செயில் (இந்தியா) நிறுவனம் (GAIL)
- பாரத பெட்ரோலிய நிறுவனம் (BPCL)
நவரத்னா தொழில்கள் (Navratna Industries)
அறுபது என்ற (நூற்றுக்கு என்ற அளவில்) ஆறு அளவீடுகள் இதில் நிகரலாபம், நிகர மதிப்பு, மொத்த மனிதவள செலவு, மொத்த உற்பத்தி செலவு, சேவைகளில் செலவு, PBDIT (Profit Before Depreciation Interest and Taxes) தேய்மானத்திற்கு முன் லாபம், வட்டி மற்றும் வரிகள் , மூலதனம் பணியமர்த்தல் போன்றவை மற்றும் ஒரு நிறுவனம் முதலில் ஒரு மினிரத்னாவாக இருந்து அதற்கு முன் அதன் குழுவில் 4 சுதந்திரமான இயக்குனர்கள் இருக்க பெற்றால் அதை ஒரு நவரத்னா நிறுவனமாக மாற்ற முடியும்.
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
- இந்திய கொள்கலன் நிறுவனம் (CONCOR)
- இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (EIL)
- இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL)
- மகன் அகர் தொலைபேசி நிறுவனம் (MTNL)
- தேசிய அலுமினியம் கம்பெனி (NALCO)
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL)
- இந்திய ஆயில் எண்ணெய் நிறுவனம் (OIL)
- இந்திய கப்பல் நிறுவனம்(SCI)
மினிரத்னா தொழில்கள் (Miniratna Industries- 1)
மூன்றில் ஒரு வருடம் நிகர லாபம் ₹30 கோடி அல்லது அதற்கு மேல் அல்லது தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் லாபம் ஈட்டிய தொழிற்சாலைகளாகும்.
சில மினிரத்னா தொழில்கள் – 1, அவை
- இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
- பாரத இயக்கவியல் நிறுவனம் (BDL)
- பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் (BSNL)
- சென்னை பெட்ரோலிய நிறுவனம் (CPCL)
- இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO)
- இந்திய மாநில வர்த்தக கழகம்(STCI)
மினிரத்னா தொழில்கள் – 2 (Miniratna Industries-2)
மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டியுள்ள மற்றும் நேர்மறையான நிகர மதிப்பு கொண்ட தொழிற்சாலைகளாகும்.
சில மினி ரத்னா தொழில்கள் – 2, அவை
- HMT பன்னாட்டு நிறுவனம்
- இந்திய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம் (IMPCL)
- MECON நிறுவனம்
- கனிம ஆய்வு நிறுவனம்
- தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
- பாரத பம்புகள் & அமுக்கிகள் நிறுவனம்
- நவரத்னா என்ற சொல் ஒன்பது விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் குறிக்கிறது. இது பின்னர், குப்த பேரரசர் அக்பர் ஆகியோரின் அவையில் இச்சொல்லானது ஒன்பது அறிஞர்களை குறிப்பிடுவதாக அமைந்தது.
தனியார் துறையின் வரையறை
- தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.
- தனியார் துறை நிறுவனங்களின் அளவுகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. அவை இரண்டு வழிகளில் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதன் மூலமாகவோ அல்லது எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலமாகவோ உருவாகிறது.
- தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும். இது அரசாங்கத்தை விட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.
- பொதுத்துறை பரந்து விரிந்து இருந்தாலும் கூட, தனியார் துறையின் பங்களிப்பு தொடர்ந்து மிகப்பெரியதாக இருக்கிறது.
- இது நடுத்தர , சிறிய மற்றும் மிகச்சிறிய அல்லது நுண்ணிய அளவிலான தொழில் வளர்ச்சியால் ஏற்பட்டது.
- மேலும் குடிசை மற்றும் கிராமத் தொழில்கள் மற்றும் சிறிய அளவு தொழில்களின் உற்பத்தியின் பங்களிப்பு மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தின் முக்கிய பகுதி ஆகும்.
- தேசிய உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பு பொதுத் துறையை விட அதிகமாக உள்ளது. சாலை, கப்பல் விமான வழி போக்குவரத்து மற்றும் நுகர்வோர் தொழில்களிலும் தனியார் துறை ஆதிக்கம் செலுத்துகிறது.
முக்கிய தனியார் நிறுவனங்கள்
- இன்போசிஸ் நிறுவனம்
- ஆதித்யா பிர்லா நிறுவனம்
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்கள்
- டாட்டா குழும நிறுவனங்கள்
- விப்ரோ நிறுவனம்
- இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
- ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
தனியார் துறையின் பணிகள்
- தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்தோடு இயங்க கண்டறிவதற்கும், உற்பத்தியின் புதியநுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களை தூண்டுகிறது.
- உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
- இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல், விரிவுபடுத்துதல்.
- மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல் மற்றும் சமூக வணிக மற்றும் கூட்டுறவு, உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMME) வழங்குவதன் மூலம் அளிப்பு பக்க நடவடிக்கைகள் மற்றும் தேவை பக்க நடவடிக்கைகளை கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்.
-
- இந்தியா ஒரு கலப்பு பொருளாதார நாடாக இருப்பதால், விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாட்டில் உள்ள தனியார் துறைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது.
- தொழில்கள், வர்த்தக மற்றும் சேவைத் துறையில் தனியார் துறைக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பங்கை நிர்ணயித்துள்ளது.
- இந்தியாவின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் துறையான வேளாண்மை மற்றும் பால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பிற தொடர்புடைய நடவடிக்கைகள் முற்றிலும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு முழு வேளாண்மைத் துறையை நிர்வகிப்பதிலும், அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு முழு உணவு விநியோகத்தையும் வழங்குவதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
- மேலும், தொழில்துறையின் பெரும்பகுதி மற்றும் இலகுவான பகுதிகளில் ஈடுபட்டுள்ளது, நிலைத்த மற்றும் நிலைக்காத பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார பொருட்கள், வாகனங்கள், ஜவுளி, ரசாயனங்கள், உணவு பொருட்கள், ஒளி பொறியியல் பொருட்கள் போன்ற பல்வேறு நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- நாட்டின் முன் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மிகப்பெரியவை. கட்டமைப்பு மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இலக்குகளை பூர்த்தி செய்ய பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
-