Science Notes

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Notes 6th Science Lesson 9 Notes in Tamil

6th Science Lesson 9 Notes in Tamil

9] நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

அறிமுகம்

மாற்றம் என்றால் என்ன?

  • ஒரு பொருள் தன்னுடைய நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வே மாற்றம் எனப்படும். பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடே மாற்றம் எனப்படும்.
  • மாற்றம் என்பது இயற்கையின் நியதியாகும். நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றிப் பல மாற்றங்களைக் காண்கிறோம்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் வானிலையில் மாற்றம் நிகழ்கிறது. இதேபோல் பருவத்திலும் மாற்றம் நிகழ்கிறது. காகிதம் தீப்பிடித்த உடனே எரிகிறது. ஆனால் இரும்பு ஆணி துருப்பிடிக்க சில நாட்கள் ஆகின்றன.
  • பால் தயிராக மாற சில மணிநேரங்களை எடுத்துக் கொள்கிறது. ஆனால், சமைக்கும் போது சில நிமிடங்களில் காய்கறிகள் வெந்து விடுகின்றன.
  • மாற்றங்கள் என்பது வடிவம், நிறம், வெப்பநிலை, நிலை மற்றும் இயைபு போன்ற பண்புகளில் (எந்தப் பண்பிலும்) நிகழலாம். பொருட்களில் ஏற்படுத்தப்படும் இத்தகைய மாற்றங்களில் சிலவற்றை நாம் கண்களால் காணமுடியும் சிலவற்றைக் கண்களால் காண இயலாது.

மாற்றங்களின் வகைகள்

  • இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. சில மாற்றங்கள் மிக விரைவாக நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நிகழப் பல மணித்துளிகள், நாட்கள் அல்லது வருடங்கள் தேவைப்படுகின்றன.
  • சில மாற்றங்கள் தற்காலிகமானவை, சில மாற்றங்கள் நிரந்தரமானவை. சில மாற்றங்கள் புதிய பொருட்களை உருவாக்குகின்றன, சில மாற்றங்கள் புதிய பொருட்களை உருவாக்குவதில்லை.
  • சில மாற்றங்கள் இயற்கையானவை, சில மாற்றங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. சில மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்களை உண்டாக்குகின்றன, சில மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்களை உண்டாக்குகின்றன.

இதன் அடிப்படையில் நாம் மாற்றங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

  • மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
  • மீள் மற்றும் மீளா மாற்றங்கள்
  • இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்
  • விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்
  • இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்

மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்

மெதுவான மாற்றங்கள்

சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. (மணிகள்/நாட்கள்/மாதங்கள்/ ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.

எ.கா: நகம் மற்றும் முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.

வேகமான மாற்றங்கள்

சில மாற்றங்கள் நிகழ குறைந்த அளவே நேரத்தை எடுத்துக் கொள்கின்றன (நொடிகள் / நிமிடங்கள்). இவை வேகமான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.

எ.கா: பலூன் வெடித்தல், கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல், காகிதம் எரிதல்.

மீள் மாற்றம்

சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள் மாற்றம் என்றழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு: தொட்டால் சிணுங்கி தாவரம் (தொடுதலுக்குத் துலங்குதல்), ரப்பர் வளையம் நீளுதல், பனிக்கட்டி உருகுதல்.

மீளா மாற்றம்

சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்து பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டு: பால் தயிராக மாறுதல், உணவு செரித்தல், மாவிலிருந்து இட்லி தயாரித்தல்.

ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து இரு பாகங்களாக வெட்டவும். ஒரு பாதியை, சிறு துண்டுகளாக வெட்டி உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். ஆப்பிளை வெட்டியதால் அதன் இயல்பில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? இல்லை அதன் உருவம் மற்றும் அளவு மட்டுமே மாறியது. இவ்வகை மாற்றம் இயற்பியல் மாற்றம் ஆகும்.

மற்றொரு பாதி ஆப்பிளை அப்படியே மேசை மேல் சற்று நேரம் வைத்திருக்கவும். சிறிது நேரம் கழித்து ஆப்பிள் பழத்தின் வெட்டிய பகுதியின் மேற்பரப்பில் பழுப்பு நிற திட்டுகள் தோன்றியிருப்பதை காணலாம். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இவ்வகை மாற்றம் வேதி மாற்றம் ஆகும்.

இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்

இயற்பியல் மாற்றங்கள்

இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.

எடுத்துக்காட்டு: பனிக்கட்டி உருகுதல், உப்பு அல்லது சர்க்கரையினை கரைசலாக்குவது, இரப்பர் வளையத்தினை இழுத்தல்.

நாம் இப்பொழுது நீரில் நிகழும் இயற்பியல் மாற்றங்களைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.

நீரானது, திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல் மூலமோ அல்லது குளிர்வித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுவதும், குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுவதும் இம்மாற்றங்களுக்குக் காரணமாகிறது.

நீரின் நிலைமாற்றங்களும் அவற்றின் பெயர்களும்.

மாற்றம் முறை
பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் உருகுதல்
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் ஆவியாதல்
நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் ஆவி சுருங்குதல்
நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் உறைதல்
  • ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். உதாரணம்: கற்பூரம்

மேலும் ஒரு இயற்பியல் மாற்றத்தை பற்றி நாம் புரிந்து கொள்ளலாம்.

கரைதல்

திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.

  • கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக்கூடிய பொருளாகும்.
  • கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக்கூடிய பொருளாகும்.
  • கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது.

கரைபொருள் + கரைப்பான் கரைசல்

  • நீர் ஒரு பொதுக் கரைப்பான். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.

வேதியியல் மாற்றங்கள்

பொருள்களின் வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேதியியல் மாற்றங்கள் எனப்படும். வேதியியல் மாற்றங்கள் புதிய பொருள்களை உண்டாக்குகின்றன.

எடுத்துக்காட்டு: மரம் எரிதல், சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல் மற்றும் இரும்பு துருப்பிடித்தல்.

இயற்பியல் மாற்றம் வேதியியல் மாற்றம்
புதிய பொருள்கள் உருவாவதில்லை புதிய பொருள்கள் உருவாகின்றன
வேதி இயைபில் மாற்றம் ஏற்படாது வேதி இயைபில் மாற்றம் ஏற்படும்
இது ஒரு தற்காலிக மாற்றம் இது ஒரு நிரந்தர மாற்றம்
இது ஒரு மீள் வினை இது ஒரு மீளா வினை

விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்

விரும்பத்தக்க மாற்றங்கள்

சுற்றுச்சூழலுக்குப் பயன்தரும் அல்லது சுற்றுச்சூழலைப் பாதிக்காத, நம்மால் விரும்பப்படும் மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: காய் கனியாதல், பருவநிலை மாற்றம், தாவரங்கள் வளருதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்.

விரும்பத்தகாத மாற்றங்கள்

சுற்றுச்சூழலுக்குப் பயந்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: காடுகள் அழிதல், பழம் அழுகுதல், இரும்பு துருப்பிடித்தல்.

இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

இயற்கையான மாற்றங்கள்

இயற்கையில் தானாகவே நிகழும் மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் இயற்கையான மாற்றங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: புவியின் சுழற்சி, மழை பெய்தல், அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின் வெவ்வேறு நிலைகள்.

மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள்

மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.

எடுத்துக்காட்டு: சமைத்தல், காடுகளை அழித்தல், பயிடுதல், கட்டிடங்களை கட்டுதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!