தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Notes 10th Social Science Lesson 15 Notes in Tamil
10th Social Science Lesson 15 Notes in Tamil
15. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
அறிமுகம்
காலனியாட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே பாளையக்காரர்கள், தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவமுயன்ற ஆங்கிலேயர்களின் முயற்சிகளை எதிர்த்தனர். பாளையக்காரர்களின் தோல்விக்குப் பின்னரும் கூட 1806இல் வேலூர் கோட்டையில் இந்திய வீரர்களும் அதிகாரிகளும் ஓர் எழுச்சியைத் திட்டமிட்டு நடத்தினர். அப்புரட்சி தென்னிந்தியாவின் பல இராணுவமுகாம்களிலும் எதிரொலித்தது. மேற்கத்திய கல்வி அறிமுகம் மற்றும் இறுதியில் தோன்றிய படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் தோற்றம் ஆகியவை ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை அரசமைப்புப் பாதையில் எடுத்துச் சென்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் தனித்தன்மை வாய்ந்ததாகும். ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அது ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டமாக மட்டுமல்லாமல், தீங்கினை விளைவிக்கும் சாதிமுறை ஏற்படுத்தியிருந்த சமூக தடைகளிலிருந்து விடுதலை பெறுவதற்குமான போராட்டமாகவும் அமைந்தது. இப்பாடத்தில் தமிழ்நாட்டில் வெவ்வேறு கருத்தியல்களைப் பின்பற்றிய தேசியவாதிகள் வகித்த பாத்திரத்தை நாம் அறிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் தொடக்ககால தேசிய அதிர்வுகள்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சென்னையில் உருவான, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கல்விகற்ற நபர்களைக் கொண்ட குழுக்கள் பொதுவிஷயங்களில் அக்கறை செலுத்தத்தொடங்கின.
- இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நடந்ததைப் போலவே இவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சென்னைவாசிகள் சங்கம், சென்னை மகாஜன சங்கம் எனும் அரசியல் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தினர்.
அ) சென்னைவாசிகள் சங்கம்
- சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association –MNA), தென்னிந்தியாவில், தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பான இவ்வமைப்பு தனிப்பட்ட குழுக்களின் விருப்பங்களைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளை அனைவருக்கும் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவானது.
- இவ்வமைப்பு 1852இல் கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்களாலும் நிறுவப்பெற்றது. இவ்வமைப்பில் வணிகர்களே அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர்.
- தனது உறுப்பினர்களின் நலன்களை முன்னெடுப்பது, வரிகளைக் குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை இவ்வமைப்பு உள்ளடக்கி இருந்தது. மேலும் கிறித்தவ சமயப்பரபாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளிதத்தை எதிர்த்தனர். மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தைத் திருப்பும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்ட்து.
- வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதைப்படுத்தப்படுவதற்கு எதிராக இவ்வமைப்பு (MNA) நடத்திய போராட்டம் முக்கியமான பங்களிப்பாகும். இவ்வமைப்பு மேற்கொண்ட முயற்சிகளால் சித்திரவதை ஆணையம் (Torture Commission) நிறுவப்பட்டது.
- அதன் விளைவாகச் சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய சித்திரவதைச் சட்டம் (Toture Act) ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வமைப்பு 1862க்குப் பின்னர் செயலிழந்து இல்லாமலானது.
ஆ) தேசியவாதப் பத்திரிக்கைகளின் தொடக்கங்கள்: தி இந்து மற்றும் சுதேசமித்திரன்
- T.முத்துச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877இல் நியமிக்கப்பட்டது சென்னை மாகாணத்தில் பெருக்ம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகைகளும் விமர்சனம் செய்தன.
- எதிர்ப்பு தெரிவித்த அனைத்துப் பத்திரிகைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்படுவதை கல்விகற்ற இளைஞர்கள் உணர்ந்தனர். இது குறித்து இந்தியரின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு செய்திப் பத்திரிக்கை தேவை என்பது உணரப்பட்டது. G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878இல் ‘தி இந்து’ எனும் (The Hindu) செய்திப் பத்திரிகையைத் தொடங்கினர்.
- மிக விரைவில் இச்செய்திப் பத்திரிகை தேசியப் பிரச்சாரத்திற்கான கருவியானது. G. சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார். 1899இல் அவ்விதழ் நாளிதழாக மாறியது.
- தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டது. இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot) சவுத் இந்தியன் மெயில் (South Indian Mail) , மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகள் தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது.
இ) சென்னை மகாஜன சபை
- தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்கக்கால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும். முதலாம் தலைமுறையைச் சேர்ந்த தேசியவாதிகளுக்கு இவ்வமைப்பு பயிற்சிக் களமானது. 1884 மே 16இல் M.வீரராகவாச்சாரி, P.அனந்தாச்சார்லு, P.ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P.ரங்கையா பொறுப்பேற்றார்.
- இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P.அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்கேற்றினார். அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சனைகள் குறித்து விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
- மாகாணத்தின் பல பகுதிகளில் வாழும் மக்களிடையே பல்வேறு பொதுப்பிரச்சனைகள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கி அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினர். மாகாணத்தின் பல பகுதிகளில் வாழும் மக்களிடையே பல்வேறு பொதுப்பிரச்சனைகள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கி அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதே சென்னை மகாஜன சபையில் நோக்கமாக இருந்தது.
- குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும். லண்டனிலுள்ள இந்தியக் கவுன்சிலை மூடுவது , வரிகளைக் குறைப்பது ஆகியன இவ்வமைப்பின் கோரிக்கைகளாகும். இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.
தமிழ்நாட்டின் முக்கிய தொடக்கக்கால மிதவாத தேசியவாதிகள்
தொடக்கக்கால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. தங்கள் கண்ணோட்டங்களைப் பெருந்தன்மை வாய்ந்த மொழிநடையில் வேண்டுகோள்களாகவும், மனுச்செய்தல், இறைஞ்சுதல், குறிப்பாணைகள் மூலமாக அரசுக்கு அவர்கள் சமர்ப்பித்தது அரசு அமைத்த பல விசாரணைக் குழுக்களில் காணமுடிகின்றது. வங்கப் பிரிவினையின் போது திலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச்செய்வதற்காக வட்டாரமொழியைப் பயன்படுத்தியதாலும் தொடக்ககால தேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கப்படலாயினர். சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் V.S. சீனிவாச சாஸ்திரி, P.S.சிவசாமி, V.கிருஷ்ணசாமி, T.R.வெங்கட்ராமனார், G.A.நடேசன், T.M. மாதவராம் மற்றும் S.சுப்பிரமணியனார் ஆகியோராவர். ஆங்கிலேயர்கள் தங்களை தாராளமானவர்கள் என உரிமை கொண்டாடியதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியதே மிதவாதிகள் செய்த முக்கியப் பங்களிப்பாகும். ஆங்கிலேயர் எவ்வாறு இந்தியாவைச் சுரண்டினார்கள் என்பதை அம்பலப்படுத்தினர். இங்கிலாந்தில் ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆங்கிலேயர் காலனிகளில் பிரதிநிதித்துவமற்ற அரசை எவ்வாறு திணித்து நாடகமாடுகின்றனர் என்பதையும் வெட்டவெளிச்சம் ஆக்கினர்.
ஈ) மிதவாதக் கூட்டம்
- சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகிலஇந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர். அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் பிரம்மஞான சபையில் கூடியது.
- தாதாபாய் நௌரோஜி , K.T.தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P.ரங்கையா, P.அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- இந்திய தேசியக் காங்கிரசின் முதற்கூட்டம் 1885இல் பம்பாயில் நடைபெற்றது. மொத்தம் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவார். G.சுப்பிரமணியம் தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்தவர் ஆவார்.
- இந்தியா பொருளாதாரரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்ள அவர் செய்த பங்களிப்புகளில் அவர் நௌரோஜி மற்றும் கோகலே ஆகியோருக்கு இணையானவராவார்.
- இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886இல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது.
- காங்கிரசின் மூன்றாவது மாநாடு பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887இல் சென்னையின் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் (Makkies Garden) நடைபெற்றது. கலந்து கொண்ட 607 அகில இந்தியப் பிரதிநிதிகள் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- தமிழ்நாடு அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களூரு, பெல்லாரி, தெற்கு கனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சிலபகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.
சுதேசி இயக்கம்
- வங்கப்பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
- இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிட்ரா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர். கல்கத்தா காங்கிட்ரசில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி சுதேசி நிறுவனங்களை ஊக்குவித்தல், அந்நியப் பண்டக்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை முன்னெடுத்தல் ஆகியவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.
- சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நியப் பண்டங்களைப் புறக்கணித்தல் தொடர்பாக காங்கிரஸ் தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அ) தமிழ்நாட்டின் எதிர்வினை
- வ.உ.சிதம்பரனார், V.சர்க்கரையார். சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
- மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
- சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும். தீவிர தேசியவாதத் தலைவரான பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய சொற்பொழிவுகள் இளைஞர்களைக் கவர்ந்தன. சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
சுதேசி நீரவிக் கப்பல் நிறுவனம்
- சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளின் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
- இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.
- இருந்தபோதிலும் ஐரோப்பியக் கம்பெனியின் முறையற்ற கழுத்தறுப்பு போட்டியினாலும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான போக்கினாலும் வ.உ.சி. யின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
திருநெல்வேலி எழுச்சி
- திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார். இவர் 1908இல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இந்நிகழ்வு நடைபெற்ற அதே சமயத்தில் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார்.
- பிபின் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சியும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இருவரும் அரசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
- தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
- காவல்நிலைய , நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.
- சிறையில் வ.உ.சி. கடுமைடாக நடத்தப்பட்டதோடு செக்கிழுக்க வைக்கப்பட்டார். கைது செய்யப்பட வேண்டியவர்களில் G.சுப்பிரமணியர், சுரேந்திரநாத் ஆர்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
- சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார்.
- பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்தகோஷ் V.V.சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர். சுதேசி இயக்கத் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான அடக்குமுறை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை ஓர் முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆ) தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாதிகளின் செயல்பாடுகள்
- ஏனைய இடங்களில் நடந்ததைப் போலவே சுதேசி இயக்கம் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. தலைவர்கள் இல்லாத சூழலில் அவர்கள் புரட்சிகரப் பாதையை நோக்கித் திரும்பினர். புரட்சிகர தேசியவாதிகளுக்குப் பாண்டிச்சேரி பாதுகாப்பான புகலிடமாயிற்று.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இப்புரட்சிகர தேசியவாதிகள் பலருக்குப் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த இந்தியா ஹவுஸ் (India House) என்ற இடத்திலும் பாரிசிலும் வழங்கப்பெற்றது. அவர்களில் முக்கியமானவர்கள் M.P.T.ஆச்சாரியா, V.V.சுப்ரமணியனார் மற்றும் T.S.S.ராஜன் ஆகியோராவர். அவர்கள் புரட்சிகர நூல்களை பாண்டிச்சேரியின் வழியாக சென்னையில் விநியோகம் செய்தனர்.
- புரட்சிவாதச் செய்தித்தாள்களான இந்தியா, விஜயா, சூர்யோதயம் ஆகியன பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தன. சில புரட்சிவாத செய்தித்தாள்களும் பாரதியின் பாடல்களும் அரசுக்கு எதிரானதெனத் தடைசெய்யப்பட்டன.
- 1910இல் அரவிந்த கோஷ், V.V.சுப்ரமணியனார் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் பாண்டிச்சேரியில் புரட்சிகர நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இத்தகைய நடவடிக்கைகள் முதல் உலகப்போர் வெடிக்கின்றவரை தொடர்ந்தன.
ஆஷ் கொலை
- 1904இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர். ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
- செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார். அவர் 1911 ஜுன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E.ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார்.
- அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார். மக்களிடமிருந்து பிரிந்துநின்ற இந்த இளம் புரட்சியாளர்கள் தேசபக்தி உடையவர்களாக இருந்தபோதில்யும், மக்களை ஊக்கப்படுத்தவும் அணிதிரட்டவும் தவறிவிட்டனர்.
இ) அன்னிபெசண்ட் அம்மையாரும் தன்னாட்சி இயக்கமும்
- தீவிர தேசியவாதிகளும் புரட்சிகர தேசியவாதிகளும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்ட நிலையில் மிதவாத தேசியவாதிகள் சில அரசமைப்பு சீர்திருத்தங்கள் செய்யப்படலாம் என நம்பினர்.
- இருந்தபோதிலும் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்பதால் அவர்கள் மனச்சோர்வடைந்தனர். இதன் பின்னரும் கூட மேலும் சில சீர்திருத்தங்களைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் ஆங்கிலேயரின் போர் முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியது.
- இவ்வாறு தேசிய இயக்கம் தளர்வுற்று இருந்த நிலையில் பிரம்மஞான சபையின் தலைவரும், அயர்லாந்துப் பெண்மனியுமான அன்னிபெசன்ட் அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சிப் இயக்கத்தை முன்மொழிந்தார்.
- 1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule league) தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்,
- இச்செயல் திட்டத்தில் G.S.அருண்டேல், B.P.வாடியா மற்றும் C.P.ராமசாமி ஆகியோர் அவருக்குத் துணை நின்றனர். இவர்கள் கோரிய தன்னாட்சி ஆங்கில அரசிடம் ஓரளவிற்கான விசுவாசத்தையே கொண்டிருந்ததாக அமைந்தது.
- தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக அன்னிபெசன்ட் நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal) எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
- “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என கூறினார்.
- 1910ஆம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தின்படி அன்னிபெசண்ட் பிணைத் தொகையாக பெருமளவு பணத்தைச் செலுத்துபடி அறிவுறுத்தப்பட்டார்.
- அன்னிபெசண்ட் ‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’ (‘How India wrought for Freedom’) இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
- பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து தன்னாட்சி இயக்க வகுப்புகளின் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அம்மாணவர்கள் சாரணர் இயக்கக் குழுக்களாகவும் (Scouts) தொண்டர் குழுக்களாகவும் மாற்றப்பட்டனர்.
- அன்னிபெசண்ட்டும் அவருடன் பணியாற்றியோரும் பொதுமேடைகளில் பேசுவதும் எந்த ஒரு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது.
- 1917இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசண்ட் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். தன்னாட்சிப் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த B.P.வாடியா போன்றோர் தொழிற்சங்கங்களை உருவாக்கி தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.
- இத்தலைவர்கள் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலுள்ள நிலைகளை மேம்படுத்தியதோடல்லாமல், தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றனர்.
- இருந்தபோதிலும் காந்தியடிகள் தேசியத் தலைவராக எழுச்சி பெற்ற நிலையில் அன்னிபெசன்டும் தன்னாட்சி இயக்கங்களும் ஒளிமங்கின.
பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும்
- இதே சமயத்தில் சென்னை மாகாணத்தில் கல்வி வேகமாக வளர்ந்தது. கல்வியறிவு பெற்ற பிராமணர் அல்லாதோரின் எண்ணிக்கை அதிகமானது. மேலே விவாதிக்கப்பட்ட தீவிர அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள் படித்த பிராமணரல்லாதவர்களை அரசியலில் ஈடுபடவைத்தது.
- பிராமணர்களின் மேலாதிக்கத்தில் இருந்த அரசுப் பணிகளிலும், தேர்வு செய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதித்துவத்திலும் , அரசு வாய்ப்புகளில் நிலவும் சமநிலையற்ற தன்மையும் சாதியப் பாகுபாடும் இருப்பது குறித்து அவர்கள் பிரச்சனைகளைக் கிளப்பினர். மேலும் காங்கிரசிலும் பிராமணர்களே மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தனர்.
அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்
- பிராமணரல்லாதோர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர். 1912இல் சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association) உருவாக்கப் பெற்றது. அதன் செயலராக C.நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
- 1916 ஜுன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினார். மேலும் இக்காலப் பகுதியைச் சேர்ந்த இரு முக்கிய பிராமணர் அல்லாதோரின் தலைவர்களான T.M.நாயர், P.தியாகராயர் ஆகிய இருவரிடையே நிலவிய கருத்து வேற்றுமையை சரிசெய்து இணக்கத்தை ஏற்படுத்தினார்.
- இவ்விருவருமே தொடக்கத்தில் காங்கிரசில் அங்கம் வகித்தவர்களே. காங்கிரஸ் அமைப்பினுள் பிராமணரல்லாதவர்கள் எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்துத் தெளிவுபெற்றவர்களாவர்.
- 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், T.M.நாயர். C.நடேசனார் ஆகியோர் தலைமையில் சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொதுஅரங்கில் கூடினர். பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation – SILF) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- அவர்கள் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் (Justics – நீதி) தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனும் மூன்று செய்தித்தாள்களையும் தொடங்கினர். விரைவில் இவ்வமைப்பு நடத்திய ஆங்கில நாளிதழின் பெயரான ஜஸ்டிஸ் என்பதே அவ்வமைப்பின் பெயராகி ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என அழைக்கப்படலாயிற்று.
- அமைப்புக்கான கிளைகளை உருவாக்கும் முகமாக மாகாணம் முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி பல மாநாடுகளை நடத்தியது.
இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை
- நீதிக்கட்சி தனது நோக்கங்களை கோடிட்டுக் காட்டி பிராமணரல்லாதோரின் அறிக்கையை (Non – Brahmin Manidests) வெளியிட்டது. அவை: அரசுப் பணியிடங்களில் பிராமணரல்லாதோர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இடஒதுக்கீடு என்பனவாகும்.
- இவ்வமைப்பு தன்னாட்சி இயக்கத்தைப் பிராமணர்களின் இயக்கம் என எதிர்த்தது. தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடுமென அஞ்சியது. இது காங்கிரசையும் பிராமணர்களின் கட்சியென விமர்சித்தது.
- பாராளுமன்ற அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து 1917இல் மாண்டெகுவின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்தன. நீதிக்கட்சி வகுப்புவாத பிரதிநிதித்துவத்தைக் கோரியது (சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினர்களுக்கும் பிரதிநிதித்துவம்).
- சென்னை அரசாங்கம் நீதிக் கட்சியை ஆதரித்தது. ஆங்கிலேயரின் ஆட்சி பிராமணர் அல்லாதோரின் முன்னேற்றத்திற்குத் துணைபுரியுமென நீதிக்கட்சி நம்பியது..
- 1919ஆம் ஆண்டுச் சட்டம் பிராமனரல்லாதோர்களுக்குத் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கியது. இந்நடவடிக்கையைக் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது ஆனால் நீதிக்கட்சியால் இது வரவேற்கப்பட்டது.
நீதிக்கட்சி அமைச்சரவை
- 1920இல் நடத்தப்பட்ட தேர்தல்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது. சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் 63இல் நீதிக்கட்சி வெற்றிபெற்றது. நீதிக்கட்சியின் A.சுப்பராயலு முதலாவது முதலமைச்சரானார்.
- 1923இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார். பிராமணரல்லாதோரின் நலனுக்காக நீதிக்கட்சி பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. அவை வருமாறு: உள்ளாட்சித்துறைகளிலும் கல்விநிலையங்களிலும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. பணியாளர் தேர்வுக்குழு நிறுவப்பெற்றது. இது பின்னர் பொதுப் பணியாளர் தேர்வாணையமானது.
- இந்து சமய அறநிலையத்துறை சட்டமும் சென்னை அரசு தொழில் உதவிச் சட்டமும் இயற்றப்பட்டன. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காகப் புறம்போக்கு நிலங்களை பட்டாசெய்து வழங்கப்பட்டன.
- வசதியற்ற மக்கள் பிரிவினரிடையே கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக கல்வி கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை வழங்குதல், மதிய உணவுத் திட்டம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆ) அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்: ரௌலட் சட்டம்
- முதல் உலகப்போரில் முக்கியப் பங்களிப்பை செய்ததனால் (குறிப்பாக ஆங்கிலப் பேரரசுக்காக இந்தியவீரர்கள் தொலைதூரப் பகுதிகளில் போரிட்டனர்) இந்தியர்கள் ஆங்கில அரசிடமிருந்து மேலும் பல சீர்திருத்தங்களை எதிர்நோக்கினர்.
- ஆனால் ஆங்கில அரசு 1919இல் கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தைப் பரிந்துரை செய்த குழுவினுடைய தலைவரின் பெயர் சர் சிட்னி ரௌலட் ஆவார். எனவே இச்சட்டம் பரவலாக ரௌலட்சட்டம் என அறியப்பட்டது.
- இச்சட்டத்தின் கீழ் முறையான நீதித்துறை சார்ந்த விசாரணைகள் இல்லாமலேயே யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி எனக் குற்றம்சாட்டி அரசு சிறையில் அடைக்கலாம்.
- இதைக் கண்டு இந்தியர்கல் திகிலடைந்தனர். மக்களின் கோபத்திற்குக் குரல்கொடுத்த காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் தான் பயன்படுத்திய போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை மேற்கொண்டார்.
ரௌலட் சத்தியாகிரகம்
- 1919 மார்ச் 18இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். 1919 ஏப்ரல் 6இல் ‘கருப்புச் சட்டத்தை’ எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
- தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது.
- அந்நாள் முழுவதும் உண்ணாவிரதமும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை சத்தியாகிரக சபை என்ற அமைப்பும் நிறுவப்பட்டது.
- ராஜாஜி, கஸ்தூரிரங்கர், S.சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
- தொழிலாளர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் V. கல்யாணசுந்தரம் (திரு.வி.க, B.P.வாடியா, வ.உ.சி. ஆகியோர் உரையாற்றினர். தொழிலாளர்களும், மாணவர்களும், பெண்களும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றதே இவ்வியக்கத்தின் முக்கிய அம்சமாகும்.
ஜார்ஜ் ஜோசப்
- வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்குவகித்தார்.
- செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார். தனது நீண்ட பொது வாழ்வின் போது, அவர் கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்.
- ஏனெனில், இது இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினையாக அவர் கருதினார். தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கினார். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றிய சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோடாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர். மதுரை தொழிலாளர்ப் சங்கம் (Madurai Labour Union) (1918) எனும் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார்.
- இச்சங்கத்தின் தொடக்ககாலப் போராட்டங்கள் நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும் வேலைநேரக் குறைப்பையும் பெற்றுத்தந்தன.
இ) கிலாபத் இயக்கம்
- ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து அதற்குக் காரணமான ஜெனரல் டயர் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுக்கப்பட்டதோடல்லாமல் அவருக்குப் பரிசுகளும் வெகுமதியும் வழங்கப்பட்டன.
- முதல் உலகப் போருக்குப் பின்னர் துருக்கியின் கலீபா அவமரியாதை செய்யப்பட்டதுடன் அவரது அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.
- கலீபா பதவியை மீட்பதற்காக கிலாபத் இயக்கம் தொடங்கப்பெற்றது. பெரும்பாலும் தேசிய இயக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்த முஸ்லிம்கள் தற்போது பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கத் தொடங்கினர்.
- தமிழ்நாட்டில் 1920 ஏப்ரல் 17இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைபிடிக்கப்பட்டது. இதைப்போன்ற ஒரு மாநாடு, ஈரோட்டிலும் நடத்தப்பட்டது. வாணியம்பாடி, கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
ஒத்துழையாமை இயக்கம்
- ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு செயல்துடிப்புடன் விளங்கியது. C.ராஜாஜியும் ஈ.வெ.ராமசாமியும் (ஈ.வெ.ரா. பின்னர் பெரியார் என அழைக்கப்பட்டார்) தலைமையேற்று நடத்தினர்.
- முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவிய யாகுப் ஹசன் என்பாருடன் ராஜாஜி நெருக்கமாகச் செயல்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒத்துமையாமை இயக்கத்தின்போது இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டனர்.
- பொதுக்கூட்டங்களின்போது ஒழுங்கைப் பராமரிக்கவும் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யவும், கொடிகளை ஏந்திச் செல்லவும் காங்கிரஸ் தொண்டர்கள் அணி உருவாக்கப்பட்டது. அவர்களும் கள்ளுக்கடை மறியலில் முக்கியப் பங்காற்றினர்.
அ) வரிகொடா இயக்கமும் கள்ளுக்கடை மறியல் இயக்கமும்
- ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பல இடங்களில் விவசாயிகள் வரிகொடுக்க மறுத்தனர். தஞ்சாவூரில் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது.
- சட்டமன்றங்கள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. அந்நியப்பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. பல பகுதிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன அவற்றில் பல தேசியத் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது.
- தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது கள்ளுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களே. கள்ளுக்கடைகள் மறியல் செய்யப்பட்டன.
- மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. குற்றப்பரம்பரைச் சமூக சட்டத்திற்கு எதிராகவும் குளர்ச்சிகள் நடைபெற்றன.
- 1921 நவம்பரில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென முடி செய்யப்பட்டது. ராஜாஜி, சுப்பிரமணிய சாஸ்திரி, ஈ.வெ.ரா., ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 1922 ஜனவரி 13இல் வேல்ஸ் இளவரசரின் வரகை புறக்கணிக்கப்பட்டது.
- காவல்துறையின் அடக்குமுறையில் இருவர் கொல்லப்பட்டனர் பலர் காயமுற்றனர். 1922இல் சௌரி சௌரா நிகழ்வில் 22 காவலர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆ) ஈ.வெ.ரா. வின் ஆக்கப்பூர்வச் செயல்பாடுகள்
- இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலில் ஈ.வெ.ரா. முக்கியப் பங்குவகித்தார். கதரின் பயன்பாட்டை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்.
- கள்ளுண்பதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் தனக்குச் சொந்தமான தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினார்.
- திருவாங்கூர் அரசின் ஆட்சியிலிருந்த வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற கோவில் நுழைவுக்கான சத்தியாகிரகத்திலும் முக்கியப்பங்கு வகித்தார்.
- கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்கள் நடமாடக்கூட முடியாத அல்லது உயர் சாதி மக்களிடமிருந்து குறிப்பிட்ட தூரம் விலகியே நின்றாக வேண்டிய காலகட்டமிது.
- கேரளாவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வெ.ரா, அங்கு சென்று அவ்வியக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். அவர் கைது செய்யப்பட்டு ஒருமாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
- விடுதலை செய்யப்பட்ட பின்னரும் வைக்கத்தை விட்டு வெளியேற மறுத்தார். எழுச்சியூட்டும் விதத்தில் உரைகள் நிகழ்த்தியதற்காக இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டு ஆறுமாதகால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
- விடுதலையாகி ஈரோடு திரும்பியபோது கதர் விற்பனையை முன்னேற்றுவது குறித்து பேசியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
- 1925 ஜுன் மாதத்தில் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகவும் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவர் செய்த பங்களிப்பிற்காக வைக்கம் வீரர் (Vaikom Hero) எனப் பாராட்டப்பட்டார்.
சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை
- ஆயினும் இக்காலகட்டத்தில் ஈ.வெ.ரா.காங்கிரசின் மீது மிகவும் அதிருப்தி கொண்டிருந்தார். அது பிராமணர்களின் நலன்களை மட்டுமே மேம்படுத்துவதாக உணர்ந்தார். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பாக காங்கிரசுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடும் ஈ.வெ.ராவை காங்கிரை விட்டு வெளியேற வைத்தன.
- தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு ஒரு குருகுலமானது V.V.சுப்பிரமணியனாரால் சேரன்மாதேவியில் நிறுவப்பெற்றது. இது காங்கிரசிடமிருந்து நிதியினைப் பெற்றது.
- இருந்தபோதிலும் இப்பள்ளியில் சாதியின் அடிப்படையில் மாணவர்கள் பாகுபடுத்தப்பட்டனர். பிராமண மாணவர்களுக்கும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியே உணவு பரிமாறப்பட்டது. உணவிலும் வேறுபாடுகள் இருந்தன.
- இது ஈ.வெ.ரா.வின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அவர் மற்றொரு தலைவரான P.வரதராஜுலுவுடன் இணைந்து இப்பழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி கடுமையாக விமர்சித்தார்.
- 1925 நவம்பர் 21இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அவர் சட்டசபையில் பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார்.
- இதன் பொருட்டு 1920 முதல் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியுற்றார். இவர் முன்மொழிந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் வேறு சில பிராமணரல்லாத தலைவர்களுடன் மாநாட்டை விட்டு வெளியேறினார்.
- வெளிவந்தவர்கள் தனியே சந்தித்தனர். விரைவில் காங்கிரசிலிருந்து விலகிய ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
இ) சுயராஜ்ஜிய கட்சியினர் – நீதிக்கட்சியினர் இடையேயான போட்டி
- ஒத்துழையாமை இயக்கம் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் “மாற்றத்தை விரும்பாதோர்” “மாற்றத்தை விரும்புவோர்” எனப் பிரிந்தது.
- மாற்றத்தை விரும்பாதோர் சட்டமன்றப் புறக்கணிப்பைத் தொடர விரும்பினர். மாற்றத்தை விரும்பியோர் தேர்தலில் போட்டியிட்டுச் சட்டமன்றத்தினுள் செல்ல விரும்பினர்.
- ராஜாஜியுடன் காந்தியத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் வேறு சிலர் இணைந்து சட்டமன்றத்திற்குச் செல்வதை எதிர்த்தனர். கஸ்தூரிரங்கர், M.A.அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து கொண்ட ராஜாஜி சட்டமன்றத்தைப் புறக்கணிப்பது எனும் கருத்தை முன்வைத்தார். இக்கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காங்கிரசுக்குள்ளேயே சித்தரஞ்சன் தாஸ், மோதிலால்நேரு ஆகியோரால் சுயராஜ்ஜியக் கட்சி உருவாக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. தமிழ்நாட்டில் S. சீனிவாசனார், S. சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ஜியக் கட்சியினருக்குத் தலைமை ஏற்றனர்.
ஈ) சுப்பராயன் அமைச்சரவை
- 1926இல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுயராஜ்ஜியக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றனர்.
- இருந்தபோதிலும் காங்கிரசின் கொள்கைக்கு இணங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கமறுத்தது. மாறாக அவர்கள் சுயேட்சை வேட்பாளரான P.சுப்பராயனுக்கு அமைச்சரவை அமைக்க உதவினர்.
- 1930இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் போட்டியிடாததால் நீதிக்கட்சி எளிதாக வெற்றி பெற்றது. அக்கட்சி தொடர்ந்து 1937 வரை ஆட்சி செய்தது.
நீல் சிலை அகற்றும் போராட்டம் (1927)
- ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர். 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
- இதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் நீல் கொடூரமாக நடந்து கொண்டார், பின்னர் நீல் இந்திய வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார். சென்னை மௌண்ட்ரோட்டில் ஆங்கிலேயர் அவருக்கு ஒரு சிலை வைத்தனர். இதை, இந்தியர்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதை எனக் கருதிய தேசியவாதிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.
- சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த போராட்டக்காரர்களுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த S.N.சோமையாஜுலு தலைமையேற்றார். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அச்சயம் சென்னைக்கு வந்த காந்தியடிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 1937இல் இராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தபோது இச்சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உ) சைமன் குழுவைப் புறக்கணித்தல்
- 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய 1927 இல் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் ஒன்று சர் ஜான் சைமனின் தலைமையில் அமைக்கப் பெற்றது. ஆனால் வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த இக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு மிகப்பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
- ஆகையால் காங்கிரஸ் சைமன் குழுவைப் புறக்கணித்தது. சென்னையில் S.சத்தியமூர்த்தி தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது. மாணவர்கள், கடைகள் வைத்திருப்போர், வழக்கறிஞர்கள், ரயில் பயணிகள் ஆகியோரிடையே விரிவான அளவில் புறக்கணிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
- 1929 பிப்ரவரி 18இல் சைமன் குழு சென்னைக்கு வந்தபோது பொதுக்கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள், கடையடைப்பு போன்றவற்றால் வாழ்த்தப்பெற்றது. குழுவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. எதிர்ப்புகளை ஒடுக்க காவல்துறை படைப் பிரயோகம் செய்தது.
சட்ட மறுப்பு இயக்கம்
அ) பூரண சுயராஜ்ஜியத்தை நோக்கி
- 1920களில் தமிழ்நாட்டில் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் விரிந்துபட்ட அடித்தளத்தைக் கொண்ட அமைப்பாக மாறிக் கொண்டிருந்தது.
- 1927இல் இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது. சைமன் குழுவினை எதிர்த்து, அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதற்காக காங்கிரஸ் மோதிலால் நேருவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
- 1929இல் லாகூரில் கூசிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் (முழு சுதந்திரம்) என்பதே இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மேலும் 1930 ஜனவரி 26இல் ராவி நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றினார்.
ஆ) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
- காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாத்தைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
- 1930 மார்ச் 12இல் தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரையைத் துவக்கினார். சட்டமறுப்பு இயக்கமானது மாணவர்கள், கடைகள் வைத்திருப்போர், தொழிலாளர், பெண்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மக்கள் பெருவாரியான எண்ணிக்கையில் கலந்து கொண்ட போராட்டமாகும்.
- கிராகப்புறங்களிலும் நகரங்களிலும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கடையடைப்பு ஆகியனவௌம் சுதேசி நாடகங்களை மேடையேற்றுவது சுதேசிப் பாடல்கள் பாடுவது ஆகியனவும் அன்றாட நிகழ்வுகள் ஆயின.
- சென்னை நகரில் கடைகளுக்கு முன்பான மறியல்கள் நடத்தப்பட்டதுடன் அந்நியப் பண்டங்கள் புறக்கணிக்கப்பட்ட. ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடுசெய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.
- தாங்களாக முன்வந்த ஆயிரம் தொண்டர்களில் நூறு தொண்டர்கள் மட்டுமே அணிவகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1930 ஏப்ரக் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது. இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் புனைந்திருந்தார்.
- காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் ராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர். உப்புச் சட்டத்தை மீறியதற்காக ராஜாஜி கைது செய்யப்பட்டார். T.S.S.ராஜன், திருமதி.ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C.சாமிநாதர் மற்றும் K.சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.
இ) தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்
- T.பிரகாசம், K.நாகேஸ்வர ராவ் ஆகியோட்ர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர். ஆனால் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு சென்னையில் கடையடைப்பிற்கு வழிகோலியது.
- 1930ஏப்ரல் 27இல் திருவெல்லிக்கேணியில் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இம்மோதலில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.
- ராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். உவரி, அஞ்செங்கோ, வேப்பலோடை, தூத்துக்குடி மற்றும் தருவைக்குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
- மாகாண முழுவதிலும் நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
- பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
- இயக்கத்தை நசுக்க காவல்துறை கொடுமையான படையைப் பயன்படுத்தியது. 1932 ஜனவரு 26 இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.
- சத்தியமூர்த்தி அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளை மறியக் செய்தார், ஊர்வலங்களைத் திட்டமிட்டார், துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தார்.
- N.M.R.சுப்பராமன் மற்றும் கு.காமராஜ் ஆகியோரும் முக்கியப் பங்கு வகித்தனர்.
திருப்பூர் குமரனின் வீரமரணம்
- 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்தி உதைக்கப்பட்டனர்.
- பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R.குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார். ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழப்படுகிறார். எனவே , ஒத்துழையாமை இயக்கம் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்றாகும்.
ஈ) முதல் காங்கிரஸ் அமைச்சரவை
- 1935 இந்திய அரசாங்கச் சட்டம் மாநில சுயாட்சிக்கு வழி வகுத்தது. சட்டமன்றத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள்குழு மாகாண அதிகாரகளை நிர்வகித்தது.
- இருந்தபோதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை ஆளுநர் பெற்றிருந்தார்.
- 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.
- ராஜாஜி முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். மது விலக்கைப் பரிசோதனை முயற்சியாக சேலத்தில் அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.
- சமூகத் தளத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கோவில்களைத் திறந்து வைத்தார். T.பிரகாசம் மேற்கொண்ட முயற்சியனால் ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
- இருந்தபோதிலும் கிராமப்புற கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கடன் சமரச வாரியங்கள் அமைக்கப்பட்டதை தவிர வேறு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
- தேர்தெடுக்கப்பட்ட இந்திய அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது.
- மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர், செயலர் L.N.கோபால்சாமி ஆகியோரால் 1939 ஜுலை 9இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஹரிஜன மக்களுடன் நுழையத் திட்டமிடப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ள குடிமை, சமூக குறைபாடுகளை அகற்றுவதற்காக 1939இல் கோவில் நுழைவு அங்கீகார, இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.
உ) இந்தி எதிர்ப்புப் போராட்டம்
- பள்ளிகளில் இந்தி பொழி கட்டாயப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது, இது ராஜாஜியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும்.
- தமிழ் மொழிக்கும் பண்பாட்டுற்கும் தீங்கு விளைவிக்க, ஆரிய வட இந்தியர்களால் சுமத்தப்பட்ட ஏற்பாடாக இது கருதப்பட்டதால் மக்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக ஈ.வெ.ரா. மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார். அவர் இந்திய எதிர்ப்பு மாநாடு ஒன்றினை சேலத்தில் நடத்தினார். உறுதியான செயல்பாட்டிற்கான திட்டத்தை இம்மாநாடு வடிவமைத்தது.
- இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பும், முஸ்லிம் லீக்கும் ஆதரவளித்தன. தாளமுத்து மற்றும் நடராஜன் எனும் இரண்டு ஆர்வமிக்க போரட்டக்காரர்கள் சிறையில் மரணமடைந்தனர்.
- திருச்சியிலிருந்து சென்னைக்கு ஊர்வலமொன்று திட்டமிடப்பட்டது. பெரியார் உட்பட 1200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கைக்கொண்ட சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- கிரிப்ஸ் குழுவின் தோல்வியும், போர்க்கால பற்றாக்குறைகளும், விலையேற்றமும் மக்களிடையே பெரும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.
- 1942 ஆகஸ்டு 8 இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காந்தியடிகள் “செய் அல்லது செத்துமடி” எனும் முழக்கத்தை வழங்கினார்.
- ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் ஒரே நாள் இரவில் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் உள்ளூர் தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் ரயிலை விட்டு இறங்கியதும் கைது செய்ததை பம்பாயிலிருந்து ஊர் திருபிக் கொண்டிருந்த கு.காமராஜர் கவனித்தார்.
- காவல் துறையினரின் கண்களில்படாமல் அரக்கோணத்திலேயே இறங்கிவிட்டார். பின்னர் அவர் தலைமறைவாகி வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மக்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டார்.
- துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தபோது ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் பரந்துபட்ட அளவில் நடைபெற்றது.
- மேலும் அஞ்சல் அலுவலகங்களை தீக்கிரையாக்குவது, தந்திக் கம்பளங்களின் கம்பிகளை வெட்டி விடுவது, ரயில் போக்குவரத்திற்கு ஊறு விளைவிப்பது போன்ற வன்முறை நிகழ்வுகளும் அரங்கேறின.
தீராத மக்கள் இயக்கம்
- இவ்வியக்கத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டில் மில், சென்னை துறைமுகம், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார டிராம் போக்குவரத்து போன்ற இடங்களில் பெருமளவிலான தொழிலாளர்கள் போராட்டங்கள் நடைபெற்றன.
- வேலூர் மற்றும் பணப்பாக்கம் ஆகிய ஊர்களில் தந்தி, தொலைபேசிக் கம்பிகள் வெட்டப்பட்டதுடன் பொதுக்கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
- பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போராட்டத்தில் தீவிரப் பங்கேற்றனர். சூலூர் விமானநிலையம் தாக்குதலுக்குள்ளானது, கோயம்புத்தூரில் ரயில்கள் தடம்புரளச் செய்யப்பட்டன. மதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் இராணுவத்துடன் மோதினர். ராஜபாளையம், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய இடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
- பெரும் எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் இந்திய தேசிய இராணுவத்தில் (INA) சேர்ந்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் இரக்கமற்ற முறையில் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது.
- ராயல் இந்தியக் கப்பற்படைப் புரட்சியும், இங்கிலாந்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசு தொடங்கிய பேச்சு வார்த்தைகளும் இந்திய விடுதலைக்கு வழிகோலின. சோகம் யாதெனில் நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதுதான்.