Tnpsc

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Notes 8th Social Science Lesson 19 Notes in Tamil

8th Social Science Lesson 19 Notes in Tamil

19. காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

அறிமுகம்

  • பொதுவாக மனித சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
  • மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர். இதனால் பல்வேறு காலங்களில் பெண்களின் நிலையை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறது.
  • பெண்களின் நிலை அனைத்து காலக்கட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேலும் வட்டார அளவிலும் கூட வேறுபட்டிருந்தன.
  • பண்டைய இந்தியாவில் அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில் பெண்கள் சமமான உரிமைகளை பெற்று மதிக்கப்பட்டனர்.
  • ஆனால் தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக சமூகத்தில் அவர்களின் நிலை மோசமடைந்தது.
  • அவர்கள் அடக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
  • புதிய சமூக நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் சமூகத்திற்குள் நுழைந்து பெண்களின் சுதந்திரத்திற்கு சில வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தன.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார் ஈ.வெ.ரா, டாக்டர் தர்மாம்பாள் போன்ற பல முக்கிய சமூக-சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினர்.
  • ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால் 1829ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • வித்யாசாகரின் அயராத முயற்சியால் விதவைப் பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதுடன் 1856இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வருவதற்கும் வழிவகுத்தது.
  • பெண்கள் கல்வி கற்பதன் மூலமே சமூக தீமைகளை ஒழிக்க முடியும் என்பதை சீர்திருத்தவாதிகள் உணர்ந்தனர்.
  • ஆகையால் அவர்கள் பெண்களுக்கான பள்ளிகளை நாட்டின் பல பகுதிகளிலும் தொடங்கினர். அதுவே பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டுவந்தன.
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தனர். சுதந்திரம் பெறும்வரை பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
  • இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளனர்.
  • பெண்கள் தற்பொழுது வாழ்க்கையின் ஒவ்வொரு துறைகளிலும் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்துகின்றனர்.

பெண்களின் நிலை

அ. பண்டைய காலம்

  • பண்டைய இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • அச்சான்றுகளிலிருந்து அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மதிக்கப்பட்டிருந்தனர் என தெளிவாகத் தெரிகிறது.
  • ரிக்வேதகாலத்தில் மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • பின்வேதகாலத்தில் பெண்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சமய வேள்வி செயல்பாடுகளைத் தவிர்த்து, அவர்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.
  • பின்வேதகாலத்தின் போது சதி எனும் பழக்கம் பிரபலமானது. விதவைகள் தாங்களாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ கணவரின் சிதையோடு சேர்த்து எரிக்கப்பட்டனர்.
  • தந்தை வழி முறை கடுமையானதாக மாறியது. பெண்கள் வேதாகமங்களைப் படிக்க மறுக்கப்பட்டனர்.

ஆ) இடைக்காலம்

  • இடைக்கால சமூகத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது.
  • சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
  • பொதுவாக ஒருதார மணமே இருந்தது. ஆனால் செல்வந்த மக்களிடையே பலதாரமணமும் நிலவியது.
  • குறிப்பாக அரச மற்றும் உயர்தர சமூகத்தினரிடையே சதி எனும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் முகலாய ஆட்சியாளர் அக்பர் சதி முறையினை ஒழிக்க முயன்றார் என்ற உண்மையை நாம் மறுக்க இயலாது.
  • விதவை மறுமணம் அரிதாகவே காணப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது.
  • ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்களிடையே ஜவ்கார் எனும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.
  • முஸ்லீம் படையெடுப்பின் விளைவாக பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில் விதவையின் நிலை பரிதாபமாக மாறியது. பெண்கல்விக்கு சிறிதளவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • பொதுவாக பெண்களின் நிலை மோசமடைந்திருந்தபோதிலும் ராசியா, சுல்தானா, ராணி துர்காவதி, சாந்த் பீவி, நூர்ஜஹான், ஜஹனாரா, ஜீஜாபாய் மற்றும் மீராபாய் போன்ற சில விதிவிலக்குகளையும் நாம் காணலாம்.
  • இடைக்காலத்தில் கல்விமுறை ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தது. பெண்களின் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்படவில்லை.
  • இருப்பினும் பெண்களுக்கென தனியாக பள்ளிகள் எதுவும் காணப்படவில்லை. பெண்கல்வி முறையாக இல்லை.
  • பெண்கள் பொதுவாக குழந்தை பருவத்தில் பெற்றோரிடமிருந்து தங்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டனர். ஆனால் செல்வந்தர்கள் தங்கள் மகள்களுக்கு வீட்டிலேயே பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர்.
  • ராஜபுத்திர தலைவர்கள் மற்றும் ஜமீன்தார்களின் மகள்கள் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றைக் கற்றனர்.
  • ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜப்புத்திர போர்வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறையை குறிப்பிடுகிறது.

இ) ஆங்கிலேயர்கள் காலம்

  • இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பெண்கள் ஆண்டுகளுக்கு அடிபணிந்திருந்ததோடு சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்டிருந்தனர்.
  • 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வின் விளைவாக சமூகத்தில் சீர்திருத்தம் ஏற்பட்டது.
  • கடுமையான சமூக தீமைகள் மற்றும் காலாவதியான பழக்கவழக்கங்களுக்கு எதிராக அறிவார்ந்த மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்தனர்.
  • ஏராளமான தனிநபர்கள், சீர்திருத்த சங்கங்கள் மற்றும் சமய அமைப்புகள் பெண் கல்வியைப் பரப்ப கடுமையாக உழைத்தன.
  • விதவை மறுமணத்தை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களை பர்தா அணியும் முறைய்லிருந்து வெளியே கொண்டுவருதல், ஒருதார மணத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடுத்தரவர்க்க பெண்கள், தொழில்கள் அல்லது பொது வேலைவாய்ப்புகளை மேற்கொள்ள உதவுதல் போறன்ற செயல்முறைகளில் ஈடுபட்டனர்.
  • 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண் கல்வியறிவுடன் ஒப்பிடும்போது பெண் கல்வியறிவு மிகக்குறைவாகவே இருந்தது.
  • கிறித்துவ அமைப்புகள் 1819ஆம் ஆண்டு கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை அமைத்தன.
  • கல்கத்தாவில் கல்வி கழகத்தின் தலைவராக இருந்த J.E.D.பெதுன் என்பவர் 1849ஆம் ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.
  • 1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
  • 1882ஆம் ஆண்டில் இந்திய கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது. மேலும், சிறுமிகளுக்கு சிறப்பு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க பரிந்துரைத்தது.
  • இந்தியப் பெண்கள் 1880களில் பல்கலைக்கழகங்களில் நுழையத் தொடங்கினர். அவர்கள் மருத்துவர்களாகவும் ஆசிரியர்களாகவும் பயிற்சி பெற்றனர். மேலும் அவர்கள் புத்தங்களையும் பத்திரிக்கைகளையும் எழுத தொடங்கினர்.
  • 1914இல் மகளிர் மருத்துவ சேவை அமைப்பு செவிலியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் பெரும்பங்காற்றியது.
  • 1890களில் D.K.கார்வே, பண்டித ரமாபாய் ஆகியோர் கல்வியறிவின் மூலம் பெண்கள் விடுதலை பெற தீவிர முயற்சி எடுத்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது.
  • 1916இல் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் பேராசிரியர் D.K.கார்வேவால் தொடங்கப்பட்டது. இது பெண்களுக்கு கல்வியை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக விளங்கியது. அதே ஆண்டில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியும் டெல்லியில் தொடங்கப்பட்டது.

முக்கிய சமூக தீமைகள்

அ) பெண்சிசுக் கொலை

  • பெண்சிசுக்கொலை என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்திய சமுதாயத்தை பாதித்த ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும்.
  • இது குறிப்பாக ராஜபுதனம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்பெண்சிசுக்கொலையானது பொருளாதார சுமையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன.
  • குடும்பப் பெருமை, சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைக்கு பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்ற காரணிகளே இந்த நடைமுறைக்கு முக்கிய காரணங்கள் ஆகும். எனவே, பிறந்த உடனேயே பெண் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
  • கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் இந்த நடைமுறையை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
  • 1795ஆம் ஆண்டின் வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் XXI, 1802ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் 1870ஆம் ஆண்டின் பெண் சிசுக்கொலை தடைச் சட்டம் ஆகிய சட்டங்களை நிறைவேற்றி பெண்சிசுக்கொலை நடைமுறையை தடைசெய்தது.

ஆ) பெண்சிசுக் கருக்கொலை

  • பெண்சிசு கருக்கொலை என்பது சாதி, சமய, வர்க்கம் மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்த மற்றொரு மனிதாபிமானமற்ற நடைமுறையாகும்.
  • பெண்சிசுக்கொலை அல்லது பெண்சிசு கருக்கொலை எதுவாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே.
  • பெண்சிசு கருக்கொலை மற்றும் கருவிலேயே பாலினம் அறிதல் ஆகியவற்றை தடை செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

இ) குழந்தைத்திருமணம்

  • குழந்தைத் திருமணமானது நடைமுறையில் பெண்களுக்கெதிரான மற்றொரு சமூக தீமையாக காணப்பட்டது. குழந்தைத் திருமணம் பழங்குடியினரிடையே வழக்கத்தில் இருந்தது.
  • 1846 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது என இருந்தது.
  • 1872இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
  • 1930இல் மத்திய சட்டபேரவையில் ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா கொண்டுவரப்பட்டது.
  • இச்சட்டம் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 14 ஆகவும் நிர்ணயித்தது.
  • பின்னர் இது ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் திருத்தப்பட்டது.
  • அக்பர் குழந்தை திருமணத்தை தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலை பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் பெண்ணிற்கான திருமணவயது 14 எனவும் ஆண்களுக்கான திருமன வயது 16 எனவும் நிர்ணயித்தார்.

ஈ) சதி

  • இந்திய சமூகத்தில் நிலவிய மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம் காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்புரத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது.
  • இதன் பொருள் ‘கணவனின் சிதையில் தானாக முன்வந்து விதவைகள் எரித்துக்கொள்ளுதல்’ ஆகும்.
  • ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டர். ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால் சிதையில் அமர்ந்தனர்.
  • கி.பி. (பொ.ஆ). 1420இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலிய பயணி நிக்கோலோ கோண்டி தனது குறிப்புகளில் ‘அந்தப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டனர் என்றும் பெண்கள் இறந்த தன் கணவருடன் எரிக்கப்பட்டனர்’ என்றும் குறிப்பிடுகிறார்.
  • 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சதி என்னும் பழக்கம் வங்காளத்தின் பல பகுதிகளிலும் மேற்கு இந்தியா மற்றும் தென் இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது.
  • 1811 ஆம் ஆண்டில், ராம்மோகன் ராயின் சகோதரர் ஜெகன்மோகன் ராய் காலமானதால் அவருடன் அவரது மனைவியும் எரிக்கப்பட்டார்.
  • ராம்மோகன் ராய் அதைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தார். இந்த கொடூரமான நடைமுறையை சட்டத்தின் மூலம் ஒழிப்பேன் என்று சபதம் செய்தார்.
  • அவர் சதியை ஒழிப்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை பத்திரிக்கை மூலமாகவும் மேடைகளில் பேசுவதன் மூலமாகவும் மேற்கொண்டார்.
  • ராஜா ராம்மோகன் ராய் 1818-20 இல் பல கட்டுரைகளை வெளியிட்டார், அதில் சதி எனும் சடங்கு சாஸ்திரங்களால் கட்டளையிடப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.
  • சதி எனும் சடங்கு இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிதைக்க செராம்பூர் சமயப் பரப்புக் குழுக்களில் இந்த கருத்துகள் பயன்படுத்தப்பட்டது.
  • பழமையான இந்து பழக்கமான சதி ஒழிப்புக்கு எதிராக ராதாகந்த் தேப் மற்றும் பவானி சரண் பானர்ஜி ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.
  • வில்லியம் பெண்டிங் பிரபு குற்றவியல் நீதிமன்றங்களின் சதி எனும் பழக்கம் ரத்து செய்யப்படுவது பரிந்துரைக்கப்பட்டிருப்பதை கண்டார். எனவே அவர் டிசம்பர் 4, 1829இல் விதிமுறை XVII என்ற சட்டத்தை நிறைவேற்றினார். இச்சட்டத்தின் மூலம் சதியில் ஈடுபடுவது அல்லது எரித்தல் அல்லது இந்துவிதவைகளை உயிருடன் புதைத்தல் ஆகியவை சட்டத்திற்கு புறம்பானது மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களால் தண்டிக்கக்கூடியவை எனவும் அறிவித்தார்.
  • அதே போன்ற நடவடிக்கைகள் பம்பாய் மற்றும் சென்னையிலும் உடனடியாக சட்டமாக்கப்பட்டது.

உ) தேவதாசி முறை

  • தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் “கடவுளின் சேவகர்” என்பதாகும்.
  • பெண் குழந்தையை கோவிலுக்கு நேர்த்தி கடனாக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையையும் அனுபவித்தனர்.
  • பிற்காலங்களில் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம், பெருமை உணர்வு, சுமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றை இழந்தனர். அதைத் தொடர்ந்து தேசதாசி முறை ஒரு சமூக தீமையாக மாறியது.
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார், கொடுமையான தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
  • தேவதாசி முறைக்கு எதிரான அவரது போராட்டத்தை பாராட்டும் வகையில் 1929இல் அவர் சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
  • பெரியார் ஈ.வெ.ரா, “தேவதாசி ஒழிப்பு மசோதாவை” நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டார்.
  • 1930இல் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் இம்மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.
  • தேவதாசிகளின் விடுதலைக்காக போராடிய மற்றொரு பெண்மணி மூவலூர் ராமாமிர்தம் ஆவார்.
  • ராஜாஜி, பெரியார் மற்றும் திரு.வி.க. ஆகியோரின் தொடர்ச்சியான தார்மீக ஆதரவுடன் இந்த கொடுமையான முறைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பினார். இதன் விளைவாக அரசாங்கம் “தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை” நிறைவேற்றியது.
  • மதராஸ் தேவதாசி சட்டம் என்பது அக்டோபர் 9, 1947 இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும். மதராஸ் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தேவதாசிகளுக்கு சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்கியதுடன், இந்திய கோவில்களுக்கு பெண் குழந்தைகளை தானமாக வழங்குவது சட்டவிரோதம் எனவும் அறிவித்தது.

சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு

  • 19ஆம் நூற்றாண்டி இரண்டாம் பாதியிலிருந்து, பல சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெண்களுக்கு கல்வி அளிப்பது, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது, விதவைகளை கவனித்துக்கொள்வது, அதே போன்று சாதிமுறையின் இறுக்கமான தன்மையை நீக்குவது மற்றும் ஒழுக்கப்பட்ட வகுப்பை சமத்துவநிலைக்கு உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முயன்றது.
  • இவ்வியக்கங்களை வழிநடத்திய சீர்திருத்தவாதிகளே நவீன இந்தியாவின் முன்னோடிகள் ஆவர்.

அ) ராஜா ராம்மோகன் ராய்

  • இந்தியாவில் காணப்பட்ட சமூக அடக்குமுறைகளை சீர்திருத்த முயன்ற பிரிட்டிஷாரின் முயற்சியை ஆதரித்த சில அறிவார்ந்த இந்தியர்கள் இருந்தனர்.
  • அவர்களில் மிக முக்கியமானவர் ராஜா ராம்மோகன் ராய் ஆவார்.
  • இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடியான ராஜா ராம்மோகன்ராய், தனது உடன் பிறந்த சகோதரரின் வாழ்க்கையில் இந்த நடைமுறையைக் கண்டபின்னர் சாதிகளுக்கு அப்பால் சதி எதிர்ப்பு போராளியானார்.
  • மனிததன்மையற்ற இத்தீய பழக்கத்திற்கு எதிரான இயக்கத்தை தொடங்கினார். இரக்கமற்ற கொடிய இப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட ராம்மோகன் ராய் தலைமையிலான இயக்கத்தின் செல்வாக்கினால், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தச் செயலை “சார்ந்த குற்றம் கொலை” என்று அறிவித்தது.
  • 1829இல் சதி எனும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் என வில்லியம் பெண்டிங் அறிவித்தார்.
  • இந்த தடைச்செயலுக்கு உதவியதற்காக ராஜா ராம்மோகன் ராய் மிகவும் நினைவு கூறப்படுகிறார். மேலும் குழந்தைத் திருமணம் மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவற்றையும் அவர் எதிர்த்தார்.
  • விதவை மறுமணம், பெண்கல்வி மற்றும் பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார். இவ்வாறாக சதி என்னும் தீய பழக்கம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட்டது.

ஆ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண் கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரிக்கவும் பலதார மணத்தை ஒழிப்பதற்காகவும் வங்காளத்தில் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார்.
  • 1856இல் இந்து விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய சட்டமன்றத்திற்கு அவர் பல மனுக்களை சமர்ப்பித்தார்.
  • மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அவரது மகன் நாராயணச்சந்திரா, ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டார்.
  • வித்யாசாகர் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக வங்காளத்தில் நாடியா, மிட்னாபூர், ஹுக்ளி மற்றும் பர்த்வான் ஆகிய மாவட்டங்களில் பல பெண்கள் பள்ளியை நிறுவினார்.

இ) கந்துகூரி வீரேசலிங்கம்

  • கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி ஆவார்.
  • அவர் விவேகவர்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டார். மேலும் அவர் 1874 இல் தனது முதல் பெண்கள் பள்ளியை திறந்தார்.
  • விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றை சமூக சீர்திருத்தத்திற்கான தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டார்.

ஈ) எம்.ஜி.ரானடே மற்றும் பி.எம்.மலபாரி

  • எம்.ஜி.ரானடே மற்றும் பி.எம்.மலபாரி ஆகியோர் பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தினர்.
  • 1869ஆம் ஆண்டில், ரானடே விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்ததுடன் குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.
  • 1887இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கினார். அது சமூக சீர்திருத்தத்திற்கான ஒப்புயர்வற்ற நிறுவனமாக உருவானது.
  • ஒரு பத்திரிக்கையாளரான பி.எம்.மலபாரி 1884இல் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

உ) கோபால கிருஷ்ண கோகலே

  • கோபால கிருஷ்ண கோகலே 1905ஆம் ஆண்டில் இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கினார். அது தொடக்கக் கல்வி, பெண் கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது.
  • பெண் கல்வியின் பரவலானது, பர்தாவை ஒழிப்பது போன்ற பல பெரிய சமூக சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்ததோடு, சுதந்திர போராட்டத்தில் பெண்கள் பங்கேற்கவும் வழிவகுத்தது.

ஊ) பெரியார் ஈ.வெ.ரா.

  • பெரியார் ஈ.வெ.ரா தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்.
  • இவர் பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார். மேலும் குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.

எ) பெண் சீர்திருத்தவாதிகள்

  • பெரும்பாலான சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம் (1828), பிரார்த்தனை சமாஜம் (1867) மற்றும் ஆரிய சமாஜம் (1875) போன்றவை ஆண் சீர்திருத்தவாதிகளால் வழிநடத்தப்பட்டன.
  • அவர்கள் பெண்கள் சுதந்திரம் மற்றும் வளர்ச்சியில் ஒரு எல்லையை நிர்ணயித்தனர்.
  • பண்டித ராமாபாய், ருக்மாபாய் மற்றும் தாராபாய் ஷிண்டே போன்ற பெண் சீர்திருத்தவாதிகள் மேலும் அதை விரிவுபடுத்த முயற்சித்தனர்.
  • 1889இல் இந்து விதவைகளுக்காக சாரதா சதன் (கற்றல் இல்லம்) எனும் அமைப்பினை பண்டித ரமாபாய் பம்பாயில் திறந்தார். பின்னர் அது பூனாவுக்கு மாற்றப்பட்டது.
  • அவரது முயற்சிகளிலேயே மகத்தானது இந்தியாவில் விதவைகளுக்கு முதன்முதலில் கல்வி புகட்ட மேற்கொண்டதாகும். மேலும் சென்னையில் பிரம்மஞான சபை (தியோசாபிகல் சங்கம்) நிறுவப்பட்டது.
  • டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் ஐரோப்பாவிலிருந்து வருகை தந்து அவற்றில் இணைந்தார். இச்சங்கமும் பொது சமூக சீர்திருத்த திட்டத்தை உருவாக்கியது.
  • பெரியாரின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட மற்றொரு சீர்திருத்தவாதி டாக்டர் S.தர்மாம்பாள் ஆவார். அவர் விதவை மறுமணத்தை செயல்படுத்துவதிலும் பெண்கல்வியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
  • சீர்திருத்தவாதியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் குரல் எழுப்பினார்.
  • அம்மையார் அவர்களது நினைவாக தமிழக அரசு ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி’ திட்டத்தை தொடங்கியது.
  • இந்த சமூக நலத்திட்டம் மூலம் ஏழைப்பெண்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இவ்வாறாக தங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெண் சீர்திருத்தவாதிகளும் பெரும் பங்காற்றியுள்ளனர்.
  • தங்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுக்கானதொரு சங்கம் நிறுவப்படுவதன் அவசியத்தை புகழ்பெற்ற பெண்கள் உணர்ந்தனர்.
  • அதன் விளைவாக, இந்தியாவில் இந்திய பெண்கள் சங்கம், தேசிய பெண்கள் ஆனையம் மற்றும் அனைத்து இந்திய பெண்கள் மாநாடு போன்ற மூன்று மிகப்பெரிய பெண்கள் அமைப்புகள் நிறுவப்பட்டது.

விடுதலை இயக்கத்தில் பெண்கள்

  • தொடக்ககால காலனிய எதிர்ப்பு போரட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர்.
  • சிவகங்கையின் வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீரதீரமாக போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார்.
  • 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சியின் ராணி லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்தி போராடினர்.
  • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்தல், ஊர்வலங்களில் கலந்துகொள்வது, சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்கு சென்றனர்.
  • விடுதலைப் போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு வெகுஜன தன்மையில் புதிய பரிணாமத்தை சேர்த்தது.

சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம்

  • பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
  • இது மக்களிடையே தேஇய விழிப்புணர்வை உருவாக்கியது.
  • தியாகம், சேவை மற்றும் பகுத்தறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.
  • சதி மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவை சட்டவிரோதமாக்கப்பட்டது.
  • விதவை மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பின்வரும் சட்டங்கள் திருமணம், தத்தெடுப்பு, வாரிசு போன்ற விஷயங்களில் பெண்களின் நிலையை மேம்படுத்தியுள்ளது.

முக்கிய சட்டவிதிகள் முக்கிய பிரிவுகள்
வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் XXI, 1804 பெண்சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது
ஒழுங்குமுறை XVII, 1829 சதி எனும் பழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.
இந்து விதவைகள் மறுமணச்சட்டம், 1856 விதவைகளை மறுமணம் செய்ய அனுமதித்தது.
உள்நாட்டி திருமணச்சட்டம், 1872 குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது.
சாரதா சட்டம், 1930 சிறுவர்கள் சிறுமிகளுக்கான திருமணவயது உயர்த்தப்பட்டது
தேவதாசி ஒழிப்புச் சட்டம், 1947 தேவதாசி முறையை ஒழித்தது

சுதந்திர இந்தியாவில் பெண்கள்

  • இந்தியாவில் பெண்கள் தற்போது கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் பங்கேற்கின்றனர்.
  • இந்திய அரசியலமைப்பு (பிரிவு 14) சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதமளிக்கிறது.
  • பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கையானது, தேசிய கல்விக் கொள்கை (1986) கீழ் நிறைவேற்றப்பட்டது.
  • புதிதாக தொடங்கப்பட்ட ‘மஹிளா சமக்யா’ எனும் திட்டமானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியது.
  • பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒதுக்கியது. பெண்களின் சமூக-அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
  • ஜனவரி 1992இல் பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
  • பெண்கள் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்வது, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் உரிமைகள் மறுப்பு குறித்த தனிப்பட்ட புகார்களில் தலையிடுவது இதன் முக்கியப் பணிகள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!