உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Notes 6th Social Science
6th Social Science Lesson 23 Notes in Tamil
23] உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
மாநகராட்சி
பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், அதிக வருவாயும் இருக்கிற ஊர்களை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும். இப்படித்தான் இப்போ இந்தப் பட்டியலில் ஆவடியும் சேர்ந்துள்ளது.
- ஏற்கனவே 14 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஆவடியும் சேர்ந்துள்ளது.
1. சென்னை 2. மதுரை 3. கோயம்புத்தூர்
4. திருச்சி 5. சேலம் 6. திருநெல்வேலி
7. ஈரோடு 8. தூத்துக்குடி 9. திருப்பூர்
10. வேலூர் 11. திண்டுக்கல் 12. தஞ்சாவூர்
13. நாகர்கோவில் 14. ஒசூர் 15. ஆவடி

1688ல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.
- கிராமங்களின் தேவைகளும், நகரங்களின் தேவைகளும் மாறுபடும். அப்படி இருக்கும் பகுதிகளில் மக்களின் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்வதற்காக சில அமைப்புகளை நமது அரசமைப்பு உருவாக்கி இருக்கிறது.
- அதன்படி, நகர்ப்புறத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப்புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இவை உள்ளாட்சி அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
- மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், வருவாய் அதிகம் இருக்கும் ஊர்களை நகராட்சி என்று பிரித்துள்ளனர்.
- நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர். சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய ஊராக இருந்தால் அதுதான் பேரூராட்சி.
- இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார். நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் (EO) ஆவார்.
- கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன. இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை நகராட்சி ஆகும்.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்
- ஊராட்சி மன்றத் தலைவர்
- பகுதி உறுப்பினர்கள்
- ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
- மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்
ஊராட்சி ஒன்றியம்
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர். துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.
மாவட்ட ஊராட்சி
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது. பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.
- உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தொகுதிகள் , பகுதிகள் (wards) என அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
- அவ்வாறே மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடித் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பொதுமக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப்பணிகள், விருப்பப்பணிகள் எனப் பிரிக்கலாம். இவை உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன.
கிராம ஊராட்சியின் பணிகள்
அவசியப் பணிகள்
- குடிநீர் வழங்குதல்
- தெருவிளக்கு அமைத்தல்
- தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
- கழிவுநீர் கால்வாய் அமைத்தல்
- ஊர்ச்சாலைகள் அமைத்தல்
- மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
விருப்பப் பணிகள்
- பூங்கா அமைத்தல்
- நூலகம் அமைத்தல்
- விளையாட்டு மைதானம் அமைத்தல் இன்னும்பிற.
மாநகராட்சியின் பணிகள்
- குடிநீர் வசதி
- தெருவிளக்கு அமைத்தல்
- தூய்மைப் பணி
- மருத்துவச்சேவை
- சாலைகள் அமைத்தல்
- மேம்பாலங்கள் அமைத்தல்
- சந்தைகளுக்கான இடவசதி
- கழிவுநீர் கால்வாய்
- திடக்கழிவு மேலாண்மை
- மாநாகராட்சிப் பள்ளிகள்
- பூங்காக்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- பிறப்பு, இறப்பு பதிவு. இன்னும்பிற.,
மன்றக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர், அல்லது அதிகாரி அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இப்படி அப்பணிகள் சிறப்பாக நடைபெற பல அடுக்குகளிலும் பணியாற்ற ஊழியர்கள் உண்டு.
இந்தப் பணிகளைச் செய்யத் தேவையான நிதியை நேரடியாக அரசும் அளிக்கும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளும் வரிகளாக வசூல் செய்து கொள்வார்கள்.
கிராம ஊராட்சியின் வருவாய்
- வீட்டுவரி
- தொழில் வரி
- கடைகள் மீதான வரி
- குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
- நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
- சொத்துரிமை மாற்றம் – குறிப்பிட்ட பங்கு
- மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு. இன்னும் பிற.
மாநகராட்சியின் வருவாய்
- வீட்டு வரி
- குடிநீர் வரி
- கடைகள் மீதான வரி
- தொழில் வரி
- பொழுதுபோக்கு வரி
- வாகனக் கட்டணம்
- மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு. இன்னும்பிற
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர அமைப்பு. கிராம சபைக் கூட்டம் சிறிய கிராமங்களிலும் நடைபெறும். கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
அதில், 18வயது நிறைவடைந்து, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவங்க கலந்து கொள்ளலாம். இக்கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பகுதி (வார்டு) உறுப்பினர்கள் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.
இந்தக்கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 , அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கூடும்.
இந்நாட்களைத் தவிர தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கிராம சபை கூடும். இவை சிறப்பு கிராம சபைக்கூட்டம் எனப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற நோக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இப்படியான ஓர் அமைப்பு வேண்டும் என்று இதற்கு இப்பெயர் வைத்தவர் நம்ம மகாத்மா காந்தி.
- தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24.
பஞ்சாயத்து ராஜ் – சிறப்பம்சங்கள்
- கிராம சமை அமைத்தல்
- மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு
- இடஒதுக்கீடு
- பஞ்சாயத்து தேர்தல்
- பதவிக்காலம்
- நிதிக் குழு
- கணக்கு மற்றும் தணிக்கை இன்னும் பிற
உள்ளாட்சியில் பெண்களின் பங்கு
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2011இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 38% இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பு. 2016ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். இதற்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இதற்கான தேர்தலை நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.

பேரிடர் காலங்கள் மற்றும் நோய்த் தொற்று காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட பணிகள்

தற்போது தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள்
கிராம ஊராட்சிகள் – 12,524
ஊராட்சி ஒன்றியங்கள் – 388
மாவட்ட ஊராட்சிகள் – 31
பேரூராட்சிகள் – 528
நகராட்சிகள் – 121
மாநகராட்சிகள் – 15