இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Notes 10th Social Science Lesson 20 Notes in Tamil
10th Social Science Lesson 20 Notes in Tamil
20. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
அறிமுகம்
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டுமொத்த தேசியக் கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாகும். நாடுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சர்வதேச உறவுகளில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது தவிர்க்க இயலாததாகும். ஒரு குறிக்கோள் மற்றும் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது நாடுகளிடையே மேம்பட்ட உறவுகளை அடையும் திறனையும் விரைவான வளர்ச்சிக்கான பலத்தையும் கொண்டிருக்கும். வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்: உடன்படிக்கைகள், நிர்வாக ஒப்பந்தங்கள், தூதுவர்களை நியமித்தல், வெளிநாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவைகள் ஆகும்.
- வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது. 1986ஆம் ஆண்டு புதுடெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு (IFS) பயிற்சி அளிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950
சட்டப்பிரிவு 51
அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்
அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள்:
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
- நாடுகளிடையே நியாயமான மற்றும் கௌரவமான உறவுகளைப் பேணுதல்
- சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளை மதித்தல்
- சர்வதேசப் பிரச்சனைகளை நடுவர் மன்றம் மூலம் தீர்க்க ஊக்குவித்தல்
நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்
- தேசியப் பாதுகாப்பு
- தேசிய வளமை
- நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- உலக அமைதி அடைதல் மற்றும் ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியுடன் சேர்ந்திருத்தல்
- பொருளாதார வளர்ச்சி
நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வலிமையைப் பயன்படுத்தாமல் அமைதி வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் புத்தர் ஆதரித்தார்.
பஞ்சசீலம்
- (சமஸ்கிருதச் சொற்களாக பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.)
- இந்தியா (பிரதமர் – ஜவஹர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென் -லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்) 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது. இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
- இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள்
- நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு
- நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை
- இயற்கை வளங்கள்
- பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
- அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
- அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
- ராணுவ வலிமை
- சர்வதேச சூழ்நிலை
1950 மற்றும் 1960களில் வெளியுறவுக் கொள்கைகள்
- நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 மற்றும் 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு வழிகாட்டுதலின்படி முக்கியக் குறிக்கொள்களைக் கொண்டதாக அமைந்திருந்தன.
- நீண்டகாலமாகக் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம்பெற்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு தொடர்பாகக் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டன. எனவே சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) ஆகியவற்றின் ஏதேனும் ஒரு முகாம்களில் சேர்வது அவசியமாயிற்று.
- நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார். எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்க மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்ததோடு சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியை உருவாக்க முயன்றார்.
- அச்சமயத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் உலக ஒத்துழைப்பு, உலக அமைதி, காலனிய ஏகாதிபத்திய முடிவு, இனச் சமத்துவம் மற்றும் அணிசேராமை ஆகியனவாகும்.
“பரந்த அளவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல. அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்” – ஜவகர்லால் நேரு
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961
- ‘அணிசேரா இயக்கம்’ என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதன் நோக்கம் ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
- பன்முகக் கூட்டரங்கில் இது மிகப்பெரிய அரசியல் குழுவாக விளங்குகிறது. அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
- வளர்ச்சி குறைந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தை நிறுவுவதில் அணிசேரா நாடுகள் வெற்றி அடைந்துள்ளன.
- மற்றொரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால் இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்: இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.
புதிய சவால்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள்
- இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய – சோவியத் ஒப்பந்தத்தின் (20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு) மூலம் இணைந்தது.
- பின்னர் இந்தியா ராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது. சீனா 1964 ஆம் ஆண்டு லாப் நார் (Lop Nor) என்னுமிடத்தில் மேற்கொண்ட அணு சோதனைக்குப் பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணு சோதனைத் திட்டத்தினை 1974இல் நடத்தியது. (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம்/ Subterranean Nuclear Explosions Project)
- மாறிவரும் உலகச் சூழ்நிலைகள் வெளியுறவுக் கொள்கை விவரங்களைத் தீர்மானிக்கின்றன. எனினும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் உள்ளது.
- இக்கோட்பாடுகள் வெறும் கொள்கை அளவில் இல்லாமல் நடைமுறை சாத்தியம் கொண்டவையாகவும் உள்ளன. பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியா அரசியல் விடுதலை பெற்றது.
- மேலும் தீவிர வறுமை, படிப்பறிவின்மை, குழப்பமான சமூக-பொருளாதார நிலைகளிலிருந்து இந்தியா தன்னை மீட்டெடுக்க வேண்டியிருந்தது.
- இதனால் நமது புதிய நாடு ராணுவக் கூட்டு மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபட இயலவில்லை.
- சுதந்திர இந்தியா தனது மக்களாட்சி முறையைப் பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த தேசத்தைக் காப்பாற்றும் வழிகளையும் உருவாக்க வேண்டியிருந்தது.
- இராணுவக் கூட்டினைத் தவிர்ப்பது என்பது அப்போது ஒரு விருப்பமாக மட்டுமின்றி ஒரு தேவையாகவும் இருந்தது. தற்போது அணிசேராமை என்பது நடுநிலைமையாக இருப்பது என்பது பொருள் அல்ல; பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகல் சுதந்திரமாகத் தீர்மானிப்பதாகும்.
- அணிசேராமை என்பது இராணுவ வலிமை இல்லாது இருத்தல் என்று பொருள் அல்ல. மோதல்கள் மற்றும் பதட்டங்களைக் குறைப்பதை உறுதிசெய்வது எனப் பொருள்படுவதாகும்.
- பரந்த அளவில் இது, இந்தியா தனது சமூக-பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்திட உதவியது. இக்காலகட்டத்தில் இந்தியா இரண்டு போர்களைப் பாகிஸ்தானுடன் எதிர்கொண்டது.
- அழிவை ஏற்படுத்திய சீன –இந்தியப் போர் கூட்டுச்சேராமையை நடைமுறை சாத்தியமற்றதாக்காமல் இராணுவக் கட்டமைப்பின் பற்றாக்குறையை வெளிப்படுத்தியது.
- கூட்டுசேராமையை விலக்கினாலும்கூட இந்தியா அதிக அளவில் தனது ராணுவ அமைப்பைப் பலப்படுத்தவும் ஒரு அணுசக்தி நாடாகவும் ஆக முடிந்தது.
- வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும் தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை இன்னும் நடைமுறையில் உள்ளது.
- அணிசேரா இயக்கம் என்பது நாடுகளிடையே அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பரஸ்பர உதவிக்கானதாகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நிலைப்பாடுகள்
- காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட ஆதரவளித்தல்
- தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறியைக் கடுமையாக எதிர்த்தல்
- பாதுகாப்பு, ஆயத்த நிலைமையின் முக்கியத்துவத்தை எதிர்கொள்ளுதல்
புதிய மாற்றங்கள் – 1990 மற்றும் இருபதாம் நூற்றாண்டு
- 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு ஒரு புதிய உலகளாவிய பொருளாதார கொள்கை (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) எழுச்சி பெற்றது.
- புதிய பொருளாதார ஒழுங்கும் ஒரு துருவ உலகமும் (அமெரிக்க ஐக்கிய நாடுகள் மையமாக) இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்க வலியுறுத்தின.
- இந்தியா உலகப் பொருளாதார மன்றத்துடன் (GATT) ஓர் ஒப்பந்தத்தில் சேர்ந்ததோடு இருதரப்பு, முத்தரப்பு, பலதரப்பு ஒப்பந்தங்களிலும் இணைந்துள்ளது.
- இந்தியாவின் அணு ஆயுத சோதனைகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து அச்சுறுத்தும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின.
இந்திய வெளியுறவுக் கொள்கை பின்வரும் பல்வேறு வகைகளில் மாற்றம் கொண்டது.
- சீனாவுடனான நட்புறவு – கிழக்கு நோக்கி கொள்கை (1992)
- பொக்ரான் (ராஜஸ்தானில்) நடைபெற்ற இரண்டாவது அணு சோதனை (1998)
- இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்தலுக்கான உறவு
- அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி ஆற்றல் வள தூதராக உறவு
- அமெரிக்காவின் அணு ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்
- சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்களிப்பு
21ஆம் நூற்றாண்டில் மீண்டெழும் இந்தியா
- சர்வதேச அமைப்பின் அமைப்புமுறை மாறி உள்ளது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான பணி இந்தியாவின் உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.
- இதன் மூலம் இந்தியாவின் பன்முக மதிப்பீடுகளை ஊக்குவிப்பதுடன் இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றங்களை மேம்படுத்த இயலும்.
- வெளியுறவுக் கொள்கை நோக்கில் பொருளாதார வளமே இந்தியா வல்லரசு தன்மை அடைவதற்கான திறவுகோலாகக் காணப்படுகிறது. தற்போது நமது வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உள்முதலீட்டை அதிகரித்தல், வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது.
- தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இது எளிதாக்கப்படும்.
- உலகின் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தியா தனது கொள்கைகளைச் சரி செய்துள்ளது. இது நமது மூலதனங்களுக்கான உள் முதலீட்டை அதிகரித்தல், தொழில்நுட்பயோசனை, வளர்ச்சிக்கான கருத்துகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உலகின் முன்னணி பொருளாதாரங்களுள் ஒன்றாக மறுவெழுச்சி அடைதல் ஆகியவற்றிற்கேற்ப வடிவமைத்துள்ளது.
- இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட நிலையான அதிக பொருளாதார வளர்ச்சியானது நாட்டு வளர்ச்சியானது நாட்டு மக்களை மேம்படுத்துவதற்கு உதவியதோடல்லாமல் இந்தியா வெளி உலக தொடர்பில் அதிக அளவில் ஈடுபடவும் வழிவகுத்தது.
- இந்தியா தற்போதைய உலகளாவிய விவகாரங்களில் ஈடுபட்டு தனது சர்வதேச கொள்கைகள் முக்கிய இடத்தைப் பெற முனைவதோடு உலக அளவில் தனது இருப்பை உணரச்செய்கிறது. இந்தியா G-20, IBSA, BRICS போன்ற புதிய உலகக் குழுக்களில் இணைந்துள்ளதானது உலகளாவிய விவகாரங்களில் பெரிய பங்கை வகிக்க இந்தியாவிற்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது.
- உலகப் பாதுகாப்புக் குறித்த அக்கறை இந்தியாவின் ராணுவ நவீனமயமாக்கல்ச், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அணுசக்திக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன.
- இந்தியா உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கியக் குரலாகவும் வளர்ந்து வரும் உலகளாவிய கட்டமைப்பில் ஒரு பாலமாகவும் சமநிலைப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவும் உருவெடுத்துள்ளது.
- இந்தியா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர் கொண்டாலும் பொருளாதாரம், அரசியல் மற்றும் போர்த்திறன் சார்ந்த துறைகளில் கொள்கை வகுப்பாளர்களின் முடிவுகள் இந்தியாவை வலிமை வாய்ந்த சக்தியாக உருக்கொள்ளச் செய்துள்ளன.
- இத்தகைய சவால்கள் பொருளாதார வளர்ச்சியை நீட்டிக்கச் செய்தல், வளம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவைகளிலும் இராணுவத்தன்மை அல்லாத பிரச்சனைகளான காலநிலை மாற்றம், எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு, அரிதான வளங்களுக்குப் போட்டி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் இடம்பெயர்தல் போன்ற விவகாரங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சி மாற்றங்களை அடைந்துள்ளது.
- இந்த சவால்கள் எண்ணற்றவையாகவும் கடினமானவையாகவும் இருந்தபோதிலும் அவை இந்தியாவின் கொள்கை அமைப்புகளுக்கு எட்டாதவை அல்ல.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள்
- தேசிய நலனைப் பேணுதல்
- உலக அமைதியை எய்துதல்
- ஆயுதக் குறைப்பு
- பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
- அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
- அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
- சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்
- காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு
படை வலிமை குறைப்புக் கொள்கை
- நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் படைவலிமைக் கூறைப்பை நடைமுறைப்பட்டுத்துவது ஆகும்.
- அமைதியை விரும்பும் நாடான இந்தியா, தொடக்கத்திலிருந்தே கருத்து மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் படைவலிமை குறைப்புக் காரணங்களுக்காகப் போராடி வருகிறது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகளவில் ஆயுதப் பெருக்கத்தடை இந்தியாவின் அணுக் கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது.
- இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 1974 மற்றும் 1998 அணு சோதனைகள் போர்த்திறமை சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவையாகும்.
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:
- முதலில் பயன்படுத்துவதில்லை
- குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்
அணு ஆயுதத்தைப் போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
சார்க் – தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC – South Asian Association for Regional Cooperation)
- சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும்.
- சார்க் (SAARC) நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக-பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியவையாகும்.
- சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தெற்காசியாவில் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மைக்கான வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாகும்.
- இஸ்ரோ (ISRO) அமைப்பு சார்க் பிராந்தியத்திற்கான “செய்தித்தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக” சார்க் செயற்கைக்கோளைச் செலுத்த உள்ளது.
- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்: ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
வெளியுறவுக் கொள்கை என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவையாகும்.
இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்காலச் சூழல் மாற்றம் மற்றும் தொடர்ச்சி
அ. ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: முதலில் அண்டை நாடுகள் கொள்கை
- வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை மையமாகக்கொண்ட அண்டை நாடுகள் என்ற கருத்து இந்தியாவின் வெளியூறவுக் கொள்கையாக எப்பொழுதும் இருந்து வருகிறது.
- இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் அரசியல் மற்றும் ராஜதந்திர முன்னுரிமையை இந்தியா அளித்து வருகிறது.
- இந்திய வெளியுறவுக் கொள்கை இந்த அண்டை நாடுகளை மையம் கொண்டது என்பது பல்வேறு வகையான வளர்ச்சி இலக்குகளை இந்தியா அடைவதற்கு அமைதியான சுற்றுப்புறம் அவசியம் என்ற தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியா தனது அண்டை நாடுகளுக்குத் தேவைப்படும் ஆதரவினை வளஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சியாக அளித்து வருகிறது. பொருள்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் எளிதாகச் செல்வதை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.
ஆ. அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல்
- இந்தியாவின் உள்நாட்டு முக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.
- இது தொழில்நுட்ப உதவி கிடைப்பதை மேம்படுத்துதல், மூலதனத்தைப் பெறுதல், சந்தையினைப் பெறுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இ. “கிழக்கே நோக்கு” என்பதிலிருந்து “கிழக்குச் செயல்பாடு” என்ற கொள்கைக்குப் படிப்படியான மாற்றம்
- வடகிழக்கு இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா தொடங்குகிறது. மியான்மர் இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக உள்லது.
- இதன் நோக்கம் ஆசியாவின் ஒரூங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ –பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பல்முனை சமநிலையை உறுதிப்படுத்துவதாகும்.
- இக்கொள்கை ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளிடையே ஆக்கப்பூர்வமான பங்கினை வலியுறுத்துகிறது. நமது கிழக்குக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகள் வலிமையான நிலப்பரப்பு இணைப்பு, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானவை ஆகியனவாகும்.
ஈ. பொருளாதார வளர்ச்சி
- தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
- பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன. விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
- நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
- இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.
உ. வழிகாட்டும் சக்தியாக இந்தியா
- ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் (BRICS) ஆகியவற்றில் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
- ஐ.நா.சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
- இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.
- மேலும் ஆற்றல் வளம், முக்கிய இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், அவசியமான கப்பல் வழித்தடங்களைத் திறத்தல் மற்றும் பராமரித்தல், முதலீடுகளை எதிர்நோக்கல், கடல்கடந்த வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நுழைவினைப் பெறுதல் போன்ற பல்வேறு காரணிகளால் முன்னேற்றம் கண்டு வருகிறது.
உள்நாட்டுக் கொள்கை | வெளியுறவுக் கொள்கை |
|
|
முடிவுரை
தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்தியா எந்தவொரு மிகப்பெரிய ராணுவக் கூட்டணியில் இல்லை என்றாலும் பெரிய நாடுகளுடன் போர்த்திறன் சார்ந்த ஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும். இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களை அடைய எதிர்பார்க்கும் அதேவேளையில் அனைத்து நாட்டு மக்களுக்கும் அமைதி, சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் நீதி ஆகியவற்றையும் வேண்டுகிறது. இவ்வாறு சர்வதேச விவகாரங்களில் நிரந்தர நண்பனும் இல்லை: நிரந்தர பகைவனும் இல்லை; நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. புதிய வகை சவால்கள் புதிய உண்மைகளுக்கே அமைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. அப்போதுகூட அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் உள்ளது.