இந்திய அரசமைப்பு அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம் Notes 12th Political Science Lesson 1 Notes in Tamil
12th Political Science Lesson 1 Notes in Tamil
இந்திய அரசமைப்பு
அரசமைப்பின் பொருள், பணிகள் மற்றும் முக்கியத்துவம்
- காலனி ஆட்சிக்காலத்தில் உருவான நமது தேசியத்தன்மை அரசியல் விடுதலைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளின் (பிற்காலத்தில் மாநிலங்களின்) ஒருங்கிணைப்பு, அரசமைப்புமையமாதல் (சட்டமாதல்) மற்று மக்களாட்சிமயம் ஆகியவற்றுக்காகவும் போராடி வந்துள்ளது.
- இந்தியா ஒரு பண்பாட்டு வேற்றுமை கொண்ட நாடு என்ற போதிலும் இந்தியர்கள் அனைவரும் பல வகைகளின் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சார்ந்தும் ஒத்துழைப்புடனும் உள்ளனர்.
- இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ சில குறிப்பிட்ட அடிப்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டிருப்பது அவசியமாகிறது. இத்தகைய விதிகள், ஒழுங்குமுறைகள் இல்லையென்றால் மக்களாட்சி நிலைத்திருக்காது.
- அந்நிலையில் மக்களின் நிலை பாதுகாப்பற்றதாக இருக்கும். காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியா ஆங்கிலேய அரசால் பிறப்பிக்கப்பட்ட சாசனங்கள் (Charters), ஆட்சிக்குழு சட்டங்கள் (council Acts), காலனியாட்சிக்கால இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆளப்பட்டது.
- புதிதாக எழுச்சிபெற்ற இந்தியாவின் இயக்கங்களும் அதன் தலைவர்களும் ஒரு வரையறுக்கப்பட்ட எழுதப்பட்ட புதிய அரசமைப்பின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்பதை விரும்பினர்.
- மைய (மத்திய) சட்டமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. மாநிலங்களின் (அரசுகளின்) ஒன்றியமாக , பல பிரிவுகளுக்கும் ஒருமைப்பாடினையும் ஒருங்கிணைப்பையும் வழங்கும் கூட்டாட்சியை உருவாக்கும் வகையில் புதிய அரசமைப்பை முன்மொழிய வேண்டியிருந்தது.
- ஒரு அரசமைப்பின் மிக முக்கியச் செயல்பாடு என்பது அந்த அரசின் குடிமக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய அடிப்படை விதிகளை வழங்குவதுதான். ஒரு அரசு அமைக்கப்பட்டு, அது ஆட்சி செய்வதற்குத் தேவையான விதிகளைக் கொண்டதே அரசமைப்பு ஆகும்.
- ஒரு அரசின் பல பாகங்களுக்குத் தேவையான ஒதுக்கீடுகளை அரசமைப்பு வரையறுக்கிறது. இந்திய பன்மைத்துவத்துக்கு மாநிலங்களின் ஒன்றியமே தேவையானதாகும். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒரு மக்களாட்சி வடிவிலான அரசினையே விரும்பின. இதன்படி நாடாளுமன்றமே நமது அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் முடிவு செய்கிறது.
- ஒரு சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும் ஒரு சமுதாயத்துக்கான வரையறைகளை உருவாக்கவும் அரசாங்கத்திற்கு அரசமைப்பு அதிகாரம் வழங்குகிறது. இந்திய அரசமைப்பின் நான்காவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும்வகையில் விதிகளைக் கொண்டுள்ளது.
- ஒரு நாட்டின் மக்களின் அடிப்படை அடையாளங்களை அரசமைப்பு வெளிப்படுத்துகிறது. தனது குடிமக்களால் ஒருபோதும் மீறப்படாத சில குறிப்பிட்ட அடிப்படைச் சட்டங்களை ஒரு அரசமைப்பு முன்மொழிகிறது.
- ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஒரு அரசமைப்பு பாதுகாக்கிறது. ஒரு நாட்டின் மத்திய அரசுக்கும் அந்நாட்டின் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவினையும், பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான உறவினையும் கொண்ட ஒரு சட்டகத்தினையும் அது உருவாக்குகிறது.
- உலகின் அரசமைப்புகளில் பெரும்பான்மையானவை எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன; அவை பல பிரிவுகள் பட்டியல்களைக் கொண்டுள்ளன.
- இங்கிலாந்து அரசில் காணப்படுவது போன்று அரசமைப்பு ஒரே ஆவணமாகக் கொண்டிராத சில அரசுகளும் உள்ளன. இங்கிலாந்து அரசானது ஏராளமான வழக்கங்கள் , உடன்பாடுகள் மற்றும் வரலாற்று முன்னுதாரணங்கள் ஆகியனவற்றின் தொகுப்பாக பல அங்கங்களைக் கொண்ட அரசமைப்பினைக் கொண்டுள்ளது.
மதச்சார்பு அரசு
மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு மதச்சார்பு அரசு எனப்படும். மத சார்பு அரசு என்பது ஒரு மதத்தினை அரசு மதமாகக் கொண்டிருக்கும். அந்த அரசின் உயர் பதவிகள் அனைத்தும் அரசு மதத்தை பின்பற்றுவோருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும். மதச்சார்பு அரசு உதாரணங்கள் – பாகிஸ்தான், வாடிகன் நகரம் போன்றவை ஆகும்.
உருவாக்கம்
- ஓர் அரசமைப்பு எவ்வாறு நடைமுறைக்கு வந்தது, அதை யார் உருவாக்கியது, அதன் அதிகார அமைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் ‘அரசமைப்பு உருவாக்கம்’ என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
- உதாரணமாக, அமெரிக்க அரசமைப்பானது அங்கு தேசிய இயக்கம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
- இந்திய அரசமைப்பானது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் நிர்ணயசபையால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வமான அரசமைப்பாகும் விடுதலையின்போது நாட்டில் இருந்த மக்கள் பிரிவுகளில் பெரும்பான்மையோரின் ஒருமித்த கருத்தை இந்திய அரசமைப்பு பிரதிபலிக்கிறது. அரசமைப்பை பொதுவாக்கெடுப்புக்கு விட்டு அங்கீகாரம் பெறும் நிகழ்வுகள் சில நாடுகளில் உள்ளது.
பொதுவாக்கெடுப்பு
- சட்டமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு மாறாக ஒன்று அல்லது பல கேள்விகளின் தொகுப்பின் மீது வாக்காளர்களின் ஒப்புதல்பெற நேரடி வாக்கெடுப்பு நடத்துவது பொதுவாக்கெடுப்பு ஆகும்.
- பொதுவாக்கெடுப்பு முறை ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாகவும், தனிநபருக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கும் அங்கீகாரமாகவும், ஒப்புதலாகவும் பார்க்கப்படுகிறது.
- இந்திய அரசமைப்பு திருத்தங்களில் ஒன்றிற்குக்கூட இதுவரை பொதுவாக்கெடுப்பு விடப்பட்டதில்லை. இந்திய மக்களாட்சி மூறையில் இது ஒரு பின்னடைவாகும் இதன் பொருத்தப்பாட்டினை அறிய சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வாக்கெடுப்புமுறையை அறிந்துகொள்வது பயனுள்ளதாக அமையும்.
ஓர் அரசமைப்பின் அம்சங்கள்
- ஒரு சிறந்த அரசமைப்பு என்பது சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடமளிப்பதாக இருக்க வேண்டும்.
- மதம், சாதி, மொழி அடிப்படையில் பாகுபாடு கொண்ட அரசமைப்புகள் நாட்டின் அனைவராலும் ஏற்கப்படாமல் போகலாம். அரசமைப்பின் அடிப்படைச் சட்டவிதிகளே அதன் தன்மையை வெளிப்படுத்துகின்றன. தன் குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தினையும், சமத்துவத்தினையும் பாதுகாக்கும் எந்த அரசமைப்பும் வெற்றிகரமானதாகும்.
இந்தியாவில் மதச்சார்பின்மை
- இந்திய அரசமைப்பின் 42வது திருத்தச்சட்டம், அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ‘இறையாண்மை கொண்ட குடியரசு’ என்பதை ‘இறையாண்மை சமதர்மம், மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு’ என்றும் ‘நாட்டின் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை ‘நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு’ என்றும் முந்நாள் பிரதமர் இந்திரா காந்தி 1976இல் தேசிய அவசரநிலைக் காலத்தில் இந்த 42-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
- ஒரு தனிநபர் அல்லது ஒற்றை நிறுவனத்திடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டால் தவறாகப் பயன்படுத்தப்பட வ்ழியெஏற்றப்படும் என்பதால் ஒரு சிறந்த அரசமைப்பில் அதிகாரங்கள் தனி நபரிடமோ ஒற்றை நிறுவனத்திடமோ குவிக்கப்படுவதில்லை. இதனையொட்டி பல அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பிரித்து வழங்கப்பட்டு சமநிலைப்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.
- இந்திய அரசமைப்பு அதிகாரங்களை சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை போன்ற நிறுவனங்கள் இடையே கிடைமட்டமாக பகிர்ந்து வழங்குகிறது.
- இந்திய அரசமைப்பு அதிக இறுக்கமான தன்மையைக் கொண்டதில்லை ; அதிக நெகிழ்வுத் தன்மையும் கொண்டதில்லை; அதன் மாறாத அடிப்படை அமைப்பு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் இது வெளிப்படுகீறது.
- சிறப்பாக எழுதி வடிவமைக்கப்பட்ட ஒரு அரசமைப்பு என்பது அதன் உட்கருவைத் தக்கவைத்துக்கொண்டு மாறும் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத்தக்கதாகும்.
- நமது அரசமைப்பு நெருக்கடி மிக்க தருணங்களிலும் செயல்படுவதை அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உறுதிசெய்துள்ளனர்.
அரசமைப்பின் தயாரிப்பிப் பணிகள்
- அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் அரசமைப்பினை எழுதினர். அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 அன்று கூடியது.
- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை 14 ஆகஸ்ட் 1947 அன்று மீண்டும் கூடியது. அன்றைய மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினர்களை மறைமுக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
- கேபினர் மிஷன் என அழைக்கப்பட்ட பிரிட்டானிய அமைச்சரவைக் குழு முன்மொழிந்த அடிப்படையில் அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் வரிசை அமைந்தது.
- அன்றைய மாகாணங்கள், சுதேச அரசுகள், அல்லது அரசுகளின் குழுக்களில் இருந்து அதன் மக்கள்தொகைக்கு ஏற்றபடி பத்து லட்சத்துக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
- இதன்படி, மாகாணங்களில் இருந்து 292 உறுப்பினர்களும் சுதேச அரசுகளிடம் இருந்து 93 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- ஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்து, முஸ்லிம், சீக்கியர் ஆகிய சமுதாயங்களின் மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப இடம் ஒதுக்கப்பட்டது.
- இந்த உறுப்பினர்கள் அந்தந்த மாகாணத்துக்கு மாற்றத்தக்க வாக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையின்படி ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- சுதேச அரசுகள் தங்கள் பகுதியிலிருந்து உறுப்பினர்களை மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப தாங்களே தேர்வுசெய்துகொள்ளும் முறையை உருவாக்க அனுமதிக்கப்பட்டது.
அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கம்
- 284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்றுக் கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்.
- அரசமைப்பு நிர்ணயசபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள் : “தற்காலிகத் தலைவர் தேர்வு” ஆகும். ஆச்சார்ய ஜே.பி.கிருபாளினி (ஐக்கிய மாகாணம்: பொது) அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமெயேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
- அரசமைப்பிற்கு ஒப்புதல் தருவதாக சபை 24.01.1950 அண்று கூடிய கூட்டத்திற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார்.
- 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரு , 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையின் விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.
- தொகுதி 1 – 9 டிசம்பர் முதல் 23 டிசம்பர் 1946 வரை
- தொகுதி 2 – 20 ஜனவரி முதல் 25 ஜனவரி 1947 வரை
- தொகுதி 3 – 28 ஏப்ரல் முதக் 2 மே 1947 வரை
- தொகுதி 4 – 14 ஜூலை முதல் 31 ஜூலை 1947 வரை
- தொகுதி 5 – 14 ஆகஸ்ட் முதல் 30 ஆகஸ்ட் 1947 வரை
- தொகுதி 6 – 27 ஜனவரி 1948
- தொகுதி 7 -4 நவம்பர் 1948 முதல் 8 ஜனவரி 1949 வரை
- தொகுதி 8 – 16 மே முதல் 16 ஜூன் 1949 வரை
- தொகுதி 9 – 30 ஜூலை முதல் 18 செப்டம்பர் 1949 வரை
- தொகுதி 10 – 6 அக்டோபர் முதல் 17 அக்டோபர் 1949 வரை
- தொகுதி 11 – 14 நவம்பர் முதல் 26 நவம்பர் 1949 வரை
- தொகுதி 12 – 24 ஜனவரி 1950
இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்
இந்திய அரசாங்கச் சட்டம் , 1935
கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத் தேர்வாணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள் ஆகியன இந்திய அரசாங்கச் சட்டம் , 1935-லிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு:
நாடு | அரசமைப்பின் மூல ஆதாரங்கள் |
பிரிட்டன் | நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற செயல்முறைகள், இடைக்கால தடையாணைகள் |
அமெரிக்க அரசமைப்பு | அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை |
அயர்லாந்து | அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் |
கனடா | ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் பொதுப் பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு |
ஆஸ்திரேலியா | வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் கூட்டுக்கூட்டம். |
ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு | நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு |
சோவியத் யூனியன் | அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார, அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வது திருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது) |
பிரான்சு | குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் |
தென் ஆப்பிரிக்கா | அரசமைப்புத் திருத்தமுறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு |
(இறுதிபடுத்தப்பட்ட, திருத்தப்பட்ட வரைவு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.)
இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள்
நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு: இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது. மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது. நமது அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு அரசமைப்பின் மூலங்களிலிருந்து நம் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர். தனிநபர் உரிமைகளை அடிப்படை உரிமைகளாகவும், அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளாகவும், நிர்வாகச் செயல்முறை விவரங்கள் என விரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இறுக்கம், நெகிழ்வுத் தன்மை இரண்டும் கொண்ட தனித்துவம்:
அதன் அமலாக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இறுக்கமும் நெகிழ்வும் கொண்டதாக இந்திய அரசமைப்பு அழைக்கப்படலாம்.
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு
- வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களே இந்தியாவை ஆள்கிறார்கள்.
- இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட அரசு என்றால் தனது உள்நட்டு, வெளிநாட்டு விவகாரங்களை எந்தவிதமான வெளி நாட்டின் தலையீடு இன்றி நிர்வகிப்பதாகும்.
- இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 42-வது திருத்தச்சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சமதர்மம், முதலாளித்துவம் ஆகிய பொருளாதாரங்கள் இணைந்த கலப்புப் பொருளாதார முறை கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் அரசு மதம் என ஒன்றில்லை; அனைத்து மதங்களும் சமமாக ஒன்றில்லை; அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.
- இந்தியக் குடியரசு என்பது இந்தியாவில் முடியரசு மூலமாக அல்லாமல் தேர்தல் மூலமாக அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதாகும்.
நாடாளுமன்ற ஆட்சிமுறை
- அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதால் நாடாளுமன்ற ஆட்சிமுறை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்ற முறை அரசில் நிர்வாகம் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டது; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்வரை அந்த அரசு நீடிக்கும்.
ஒற்றைக் குடியுரிமை
- இந்திய அரசமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்குமானது.
- 2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் குடியுரிமை சட்டம் 1955-ல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.
- பதிவு அல்லது இயல்புரிமை முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
- இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மதங்கள் இருந்தாலோ ஒரு நபர் இந்தியக் குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால், அசாதாரண சூழல் நிலவுமானால் இந்தத் தகுதிகளைத் தளர்த்திக்கொள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது.
வயது வந்தோர் வாக்குரிமை
‘ஒரு நபர், ஒரு வாக்குரிமை’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் 18 வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள். தேர்தலில் வாக்களிப்பில் இந்திய குடிமக்கள் இடையே சாதி, மதம், பால், இனம் அல்லது தகுதி அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் கடைபிடிக்கப்படுவதில்லை.
சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பு
- இந்தியாவில் நீதி துறையின் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
- ஒருங்கிணைந்த இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றத்தின் கீழ் உயர் நீதிமன்றங்கள், கீழாமை நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
அடிப்படை உரிமைகள்
- ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை அடிப்படைக் கொள்கையாக அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்திய அரசமைப்பு பகுதி IIIஇல், அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் ஆறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவையாவன: சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை, மத வழிபாட்டுக்கான உரிமை, மற்றும் கல்வி, பண்பாட்டு உரிமை.
- தொடக்கத்தில், சொத்து உரிமை உறுப்பு 31(அ)வின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, சொத்து உரிமையும் அடிப்படை உரிமையாக இருந்தது.
- 44-வது திருத்தச்சட்டம், 1978 சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கிவிட்டு, உறுப்பு 300(அ) ஆகச் சேர்த்தது. இதன் மூலம் சொத்து உரிமை சட்ட உரிமையாகக் கருதப்படுகிறது.
- இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படுபவை ஆகும். ஒரு ந்பார் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி நிவாரணம் அடைய முடியும். இதனையொட்டி நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை நாடும் உரிமை உறுப்பு 32-இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மக்களுக்கான அரசியல் நீதியை அது உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அடிப்படை உரிமைகள் முழுமையானவை அல்ல. நாட்டின் பாதுகாப்பு தேவையைக் கருத்தில் கொண்டு உகந்த தடைகள் விதிக்கப்படலாம்.
‘கல்வி உரிமை’
- இந்திய அரசமைப்பின் (82-வது திருத்தம் 2002) இந்திய அரசமைப்பு உறுப்பு 21 அ-வில், 6 முதல் 14 வயது வரையான சிறார்களுக்கும் இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்துள்ளது.
- இதை அமலாக்கும் வகையில் மாநிலங்கள் விதிகளை வகுத்துக்கொள்ளலாம். சிறார் இலவச கட்டாயக் கல்வி சட்டம், 2009, அரசமைப்பு உறுப்பு 21-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் இயற்றப்பட்டது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
- அரசாட்சி தொடர்பாக அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் நான்காவது பகுதியில் இடம் பெற்றுள்ளன.
- இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும்.
- இதனை இந்தியாவில் சமூக பொருளாதார நீதியை நிலைநாட்டும் வண்ணம் அரசு அவற்றை அமலாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் எனலாம்.
- ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது.
- இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை, நோய்வாய்படுதல், வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.
- அரசு கொள்கை வழிகாட்டு நெறிகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக நிலைநாட்டப்பட முடியாது என்றாலும் நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
அடிப்படைக் கடமைகள்
- 42-வது திருத்தத்தின் வாயிலாக அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசமைப்பு பகுதி IV அ உறுப்பு 51அ-வில் வழங்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய அறக் கடமைகள் ஆகும்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.
அ) அரசமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன் மாண்புகள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை அளிக்க வேண்டும்.
ஆ) நமது நாட்டு விடுதலை போராட்டத்தின் போது பின்பற்றப்பட்ட உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்றவேண்டும்.
இ) இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து போன்ற வேண்டும்.
ஈ) தேவையான காலங்களில் அழைப்பு விடுக்கப்படும்போது நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும் முன்வர வேண்டும்.
உ) மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்; பெண்களின் மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
ஊ) நமது பன்மைத்துவப் பாண்பாட்டின் வளமான மரபினை மதித்துப் பாதுகாக்க வேண்டும்.
எ) வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி அனைத்து உயிரினங்களும் வாழத் தகுந்ததாக பராமரிக்க வேண்டும்.
ஏ) அறிவியல் ஆர்வம், மனிதநேயம், தேசல் நெறி, சீர்த்திருத்தம் ஆகியனவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐ) பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாமல் மற்றும் பாதுகாக்கவும் வேண்டும்.
ஒ) நமது முயற்சிகள் மற்றும் சாதனைகளை மென்மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி எடுத்துச் சென்று நாட்டினை மென்மேலும் தொடர்ந்து உயர்த்தும் வண்ணம் தனிநபர் மற்றும் கூட்டு செயல்பாடுகளில் சிறப்புத்திறன் பெற்றுத் முன்னேற வேண்டும்.
ஓ) ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அச்சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் வழங்க வேண்டும்.
கூட்டாட்சி அல்லது ஒற்றையாட்சி
- இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியமும் (மத்திய அரசும்) சிதைக்கத்தக்க மாநிலங்களும் கொண்ட ஆட்சி முறையாகும். அதாவது நெருக்கடிநிலை காலத்தில் ஒற்றை ஆட்சி குணாம்சம் கொண்டது என்பது இதன் பொருளாகும்.
- ஒன்றியம் முழுமையான கூட்டாட்சி என்று கூறமுடியாது. ஆனால்., கிட்டத்தட்ட கூட்டாட்சி முறை என்று கூறலாம்.
- வசிவத்தில் கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிருந்தாலும் இந்திய அரசமைப்பு ஒற்றையாட்சி முறை, கூட்டாட்சி முறை இரண்டையும், நேரம், சூழல் போன்ற தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளத்தக்க ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது.
நீதிசீராய்வு சமநிலை நாடாளுமன்ற மேலாதிக்கம்
- இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் கண்காணிப்பதிலும் நாடாளுமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் தேவைப்பட்டால் தலையிடுவதிலும் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது இது இந்திய அரசமைப்பின் சிறப்புக்கூறுகளில் ஒன்று ஆகும்.
- நீதி அமைப்பும், நாடாளுமன்றமும் ஒன்றுக்கொன்று சமமான மேலாதிக்க தன்மை கொண்டவை. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்பின் அடிப்படை தத்துவத்திற்கு முரணாக இருந்தால், அதை செல்லாததாக்கும் அதிகாரம், நீதி சீராய்வு எனப்படும்.
இந்தியக் குடியுரிமை
- ஒருநாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது குடியுரிமை ஆகும். குடியுரிமைச் சட்டம் , 1955, குடியுரிமைபெறுதல் மற்றும் உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது.
- பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கைவயப்படுத்தல் மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல் ஆகிய வழிகளில் குடியுரிமை பெற இந்திய அரசமைப்பு வழிவகை செய்துள்ளது.
- குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடியுரிமையை விலக்கிக்கொள்ளவும் ரத்துசெய்யவும் விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அயல்நாட்டு குடிமக்கள் பதிவுமுறைகளும், அவர்களுக்குரிய உரிமைகளும் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி
- உறுப்பு 79இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மற்றும் ஈரவைகளைக் கொண்டது ஆகும்.
- ஈரவைகள் மாநிலங்களவை, மக்களவை என்று அறிவோம். ஒரு கூட்டாட்சியில் நாடாளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இதனை ஏற்கப்படுகிறது; மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கீழவை என்று அழைக்கப்படும் மக்களவை மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்டவையாகும்.
- ஈரவைகளும் தன் இயல்பில் செயல்பட்டு மாநிலங்களின் ஒற்றுமை, ஒன்றிய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கின்றன.
தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆரோக்கியமான விவாதங்கள்
- இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் உருவான மதராஸ் மாகான முதல் சட்டமன்றத்தில் (1952 – 1957). இராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படைக் கல்வி திட்டம் விமர்சிக்கப்பட்டது.
- எதிர்க்கட்சிகளுடன் ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் உட்பட இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். இத்திட்டம் சாதி அடிப்படையிலான படிநிலை மேலாதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும் என்று விமர்சித்தனர்.
- பின்னர் முதல்அமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர் அமைச்சரவையில் 1954 அரசின் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதேசமயம், இராஜாஜி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டங்கள் தொடரப்பட்டன.
- “சென்னை மாகாண தலைவர் சி.இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கையை 1937இல் மதராஸ் சட்டமன்றம், செனட் அவை, மதராஸ் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் தாக்கல் செய்தார்”.
- 1967 இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. சி.என்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு ‘சுயமரியாதை திருமணங்கள்’ அதாவது மத சடங்குகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
- அவருக்கு அடுத்து பதவி ஏற்று, ஐந்து தடவைகள் முதல் அமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி பல சட்டங்களையும் எண்ணற்ற தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த கடைசி சட்டமுன்வரைவு பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் முஸ்லீம்களுக்கும் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதுடன் பட்டியல் இனங்களுக்கும் மற்றும் பழங்குடியினருக்குமான ஒதுக்கீட்டின் கீழ் அருந்தியர்களுக்கு உளொதுக்கீடு வழங்குகிறது.
- அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்.ஜி, இராமச்சந்திரன் தலைமையிலான பத்து ஆண்டுக்கால ஆட்சியில் (1977 – 1987) வருவாய் நிர்வாக துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
- குறிப்பாக, வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான “கர்ணம்” பதவிக்கு முடிவு கட்டினார். மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார்.
- 1992 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து தமிழகத்தில், பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் கூட்டப்பட்டு 69 சதவீதம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம்
- தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. 189 உறுப்பினர்கள் பொது தொகுதிகளிலிருந்தும் 45 உறுப்பினர்கள் தனித்தொகுதிகளிலிருதும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் முதல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து (1952). 3.5.1952 அன்று தொடங்கியது.
- அரசமைப்பு உறுப்பு 333இன் கீழ் ஆங்கிலோ-இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
- 16.05.2016 அன்று தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடந்ததையொட்டி 15-வது தமிழக சட்டமன்றம் 21.05.2016 அன்று அமைக்கப்பட்டது.
பொதுக் கணக்கு குழு
மக்களவை உறுப்பினர்களிலிருந்து ஒருவர் பொது கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இதில் 1967 – 1968 ஆம் ஆண்டில் முதன் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே பொதுக் கணக்குக் குழுத்தலைவராக மக்களவைத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு மக்களவைத் தலைவர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு நாடாளுமன்றக் குழுவாகவே கருதப்படுகிறது. 1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை இக்குழு 1596 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
அரசமைப்புத் திருத்தச்சட்ட முன்வரைவு
அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவுகள் அரசமைப்புத் திருத்தச்சட்டம் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது. உறுப்பு 368 (2) ன் கீழ் வரும் அனைத்து விதிகளும் இதில் அடங்கும். இந்த சட்ட முன்வரைவினை நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் கொண்டு வரலாம்.
உறுப்பு 370
அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு –காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி வழங்குவது ஆகும். இந்திய அரசு 5 ஆகஸ்டு 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ரத்துசெய்தது.
சங்கரலிங்கனார்
- சங்கரலிங்கனார் காந்தியவாதியும் இந்திய விடுதலைக்காக போராடிய தமிழ் வீரரும் ஆவார். 1895இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக பிறந்தார்.
- 1917இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார், இராஜாஜியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சங்கரலிங்கனார் 1930இல் காந்தியுடன் தண்டி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார்.
- மதராஸ் மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 1952இல் உண்னாவிரதப் போராட்டம் நடத்தினார்.
- இதைத்தொடர்ந்து பெயர் மாற்றும் பிரச்சனை எழுந்தது. இதை தொடர்ந்து 1956இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார்.
- பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 ஜூலை 27 அன்று விருதுநகரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி சி.என்.அண்ணாதுரை , ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும் அவர் ஏற்கவில்லை. 1956 அக்டோபர் 13 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் 76ஆம் நாள் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.
முக்கிய கூட்டு கூட்டங்கள்
- வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1959 – 6 மற்றும் 9 மே 1961.
- பயங்கரவாத தடுப்புச் சட்டம் – 2002 மார்ச்
தமிழ்நாடு
- மதராஸ் மகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 20.07.1956 முதல் 10.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
- மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 14 ஜனவரி 1969 ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- காந்திய வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தவர்.
தேர்வுக்குழு
- தேர்வுக்குழுவில் குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை குறிப்பிட்ட காரணத்திற்காக நியமிக்கப்பட்டிருப்பார். இந்த தேர்வுக்குழு முறை வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற மக்களாட்சி முறையிலிருந்து பிறந்தது ஆகும்.
- மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையின் உறுப்பு 125இன் கீழ் எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வர முடியும். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்த சட்ட முன்வரைவு தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
- இவ்வாறு தீர்மானம் கொண்டு வருவதற்கு தேர்வுக் குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குறைந்தபட்ச உறுப்பினர்களாக (Quorum – கோரம்) அவையில் இருப்பது அவசியம். இவ்வாறு முன்மொழியப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி –தோல்வி இன்றி முடிந்தால் அவைக்குத் தலைமை ஏற்பவரின் முடிவே இறுதி முடிவாகும். சட்ட முன்வரைவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு அம்சம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் எனில் அதற்கென ஒரு துணைக் குழுவை தேர்வுக்குழு அமைத்துக்கொள்ளலாம்.
- இந்த செயல்முறையில் ஏதேனும் கேள்விகள் எழுந்தால் அதனை மாநிலங்களவைத் தலைவர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவரது முடிவே இறுதியானது.
- ஒரு சட்ட முன்வரைவு ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு மற்றொரு அவையால் நிராகரிக்கப்படும் போதும் அல்லது ஏதேனும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்படும் போது அல்லது ஆறு வாரத்திற்கும் அதிகமாக இழுபறி நிலை நீடிக்கும் போதும் குடியரசுத்தலைவர் ஈரவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டித் தீர்வு காணலாம். அந்த முன்வரைவு அமர்ந்துள்ள ஈரவைகளின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றால் அந்த முன்வரைவு நிறைவேற்றப்படும். ஆனால் பண முன்வரைவு அல்லது அரசியில் அரசமைப்புத் திருத்தச்சட்டம் ஆகியவற்றின் போது இதுபோன்று கூட்டு கூட்டத்தினை கூட்டி சட்டமாக்க இந்திய அரசமைப்பு அனுமதிக்கவில்லை.