Tnpsc

இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Notes 8th Social Science Lesson 13 Notes in Tamil

8th Social Science Lesson 13 Notes in Tamil

13. இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

இடம்பெயர்தல்

  • இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறையில் வரையறுத்துள்ளனர்.
  • ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.
  • எனவே இடம்பெயர்தல் என்பது மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரையறை

  • இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களிடையே நடபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • சமூக அறிவியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ‘மனிதன் இடம் பெயர்தல்’ ஆகும்.
  • இது பழங்காலத்திருந்தே மனித குலத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
  • இடம்பெயர்தல் என்பது மனித வாழ்க்கையின் தொடக்க காலத்திலிருந்தே மிக முக்கியமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.
  • பழங்காலத்தில் உணவைத்தேடி மக்கள் இடம் பெயர்ந்தனர்.
  • பெரும்பாலான மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்ற தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.
  • இதன் விளைவாக மனித குலம் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. அவர்கள் கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத்தொடங்கினர்.
  • இந்நிலையில் மக்கள் வளம் மிகுந்த வேளாண் நிலத்தைத் தேடி தொடர்ந்து குடி பெயர்ந்தனர்.
  • அதன் பின்னர் இடம்பெயர்வின் தன்மை காலத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

இடம் பெயர்வுக்கான காரணிகள்

  • மக்கள் இடம் பெயர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் கீழ்க்காண் இரு தலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

1. சாதகமான காரணிகள்

ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் அல்லது இழு காரணிகள் (Pull Factors) என அழைக்கப்படுகின்றன.

2. பாதகமான காரணிகள்

மக்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறச் செய்யும் காரணிகள் உந்து காரணிகள் (Push Factors) அல்லது பாதகக் காரணிகள் என அழைக்கப்படுகின்றன.

இடம் பெயர்வுக்கான காரணிகள்

மனித குல இடம் பெயர்வுக்கான பல்வேறு காரணிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

அ. சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்

  • சூழியல் இடம் பெயர்வு இயற்கையான ஒன்றாகும்.
  • எரிமலை வெடிப்பு, நிலஅதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும்.
  • இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன.
  • நீர் வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் போன்றவை இடம் பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளன.

ஆ. பொருளாதார காரணங்கள்

  • ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்வதற்கு பொருளாதாரம் மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
  • இடம் பெயர்வின் அளவு மற்றும் திசைகளைப் பல்வேறு பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றன.
  • வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
  • பெருந்திரளான மக்களின் ஏழ்மை நிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை தங்கள் பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.

இ. சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்

சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்களும் இடம் பெயர்வில் தமது பங்கை வகிக்கின்றன.

1. பெண்களின் திருமணத்திற்குப் பின் இடம்பெயர்வு.

2. புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக கலாச்சாரப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

இழு காரணிகள் (Pull Factors) உந்து காரணிகள் Push Factors
இயற்கை காரணிகள்
இடர் குறைவாக உள்ள மண்டலங்கள் இடர் பாதிக்கும் மண்டலங்கள்
உகந்த காலநிலை காலநிலை மாறுபாடு (கடுமையான காலநிலை நிகழ்வுகள்)
இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மிகுந்த பகுதிகள் (எடுத்துக்காட்டு: நீர், எண்ணெய், யுரேனியம்) விளைச்சல் பொய்த்தல் மற்றும் உணவு பற்றாக்குறை
பொருளாதாரக் காரணிகள்
வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள் வேலையின்மை
சமூக மற்றும் பண்பாட்டுக் காரணிகள்
ஒருங்கிணைப்பு குடும்ப முரண்பாடு (பூசல்கள்)
மக்கள் தொகை காரணிகள்
குறைவான மக்கள் தொகை மிகை மக்கள் தொகை பெருக்கம்
அரசியல் காரணிகள்
அரசியல் பாதுகாப்பு போர், சமூக உரிமைகள், அமைதியின்மை
தனித்துவம் மற்றும் சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு பாதுகாப்பு சார்ந்தவை – இனம், மதம் மற்றும் கலாச்சார துன்புறுத்தல்
குறைந்த செலவு, எளிதில் கிடைக்கும் நகர்ப்புற சேவைகள் (சுகாதாரம், கல்வி, பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் நீர்) குறைவான அல்லது பற்றாக்குறையான நகர்ப்புற சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி (சுகாதாரம், கல்வி, பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து)

மண்டல வாரியான உலக மக்கட்தொகை பங்கு மற்றும் சர்வதேச இடம் பெயர்வு – 2017

மண்டலத்தின் பெயர் மொத்த மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் சதவீதம் சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் சர்வதேச புலம் பெயர்ந்தோர் சதவீதம்
ஆப்பிரிக்கா 12,56,268 16.6% 36266 14.1%
ஆசிய 45,04,428 59.7% 1,05,684 41%
ஐரோப்பா 7,42,074 9.8% 61,191 23.7%
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 6,45,593 8.6% 37,720 14.6%
வட அமெரிக்கா 3,61,208 4.8% 4,413 1.7%
ஓசியானியா 40,691 0.5% 1,880 0.7%
அறியப்படாதவை 10,560 4.1
உலகம் 75,50,262 100% 2,57,715 100%

ஈ. மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்

  • மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
  • இளைஞர்களின் இடம்பெயர்வு மற்ற பிரிவினரை விட அதிகம் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
  • பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு புலம் பெயர்கிறார்கள்.
  • பொதுவாக அதிக மக்கள் தொகை ஒரு உந்து காரணியாகவும் குறைவான மக்கள்தொகை இழு காரணியாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச இடம்பெயர்தல் அறிக்கை, 2017

  • ஐரோப்பா, வட அமெரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெயர்கிறார்கள்.

உ. அரசியல் காரணங்கள்

  • பல்வேறு அரசியக் காரணங்களான காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை காலங்காலமாக இடம்பெயர்தலில் முக்கிய பங்கை வகித்து வருகின்றன.
  • பழங்காலத்திலிருந்தே போர்கள் இடம் பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

இடம் பெயர்வின் வகைகள்

இடம் பெயர்வை பல வழிகளில் வகைப்படுத்தலாம். இவை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கை, 2017

  • 2017ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப் பெரிய நாடாகவும் (17 மில்லியன்) இதைத் தொடர்ந்து மெக்சிகோவும் (13 மில்லியன்) உள்ளன.

I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்

அ. உள்நாட்டு இடம் பெயர்வு

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம் பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படுகிறது.
  • மேலும் உள்நாட்டு இடம் பெயர்வு என்பது இடம் பெயர்வு தொடங்கும் இடம், இடம் பெயர்வோர் சேருமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

1. ஊரகத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்தல்

இவ்வகையில் மக்கள் ஊரகப் பகுதியிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக இடம் பெயர்கிறார்கள்.

2. நகரத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்தல்

இவ்வகை இடம்பெயர்வானது ஒரு நகர்ப் புறத்திலிருந்து மற்றொரு நகர்ப்பகுதிக்கு அதிக ஊதியம் பெறும் பொருட்டு இடம் பெயர்கிறார்கள்

3. ஊரகத்திலிருந்து இருந்து ஊரகத்திற்கு இடம் பெயர்தல்

சாகுபடிக்கு ஏற்ற வளமான நிலம் மற்றும் பிற சமூக காரணிகளான திருமணம் போன்றவை இவ்வகை இடம்பெயர்தலை தீர்மானிக்கின்றன.

4. நகர்ப்புறத்தில் இருந்து ஊரக பகுதிக்கு இடம் பெயர்தல்

  • நகர்ப்புற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பூர்வீக இடங்களுக்கு திரும்புவதற்கும் மக்கள் நகர்புறத்திலிருந்து ஊரகப் பகுதிகளுக்கு இடம் பெயர்கிறார்கள்.
  • மேற்கூறிய நான்கு வகைகளில் ஊரகப் பகுதியிலிருந்து நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர்தல் அதிகம் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.

ஆ. சர்வதேச இடம் பெயர்வு

ஒரு நாட்டின் எல்லைகளை கடந்து நடக்கும் இடம் பெயர்தல் சர்வதேச இடம்பெயர்தல் என்று அழைக்கப்படுகிறது.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல்

1. தன்னார்வ இடம் பெயர்வு

தனி நபர்களின் விருப்பத்தின் பேரிலும், முயற்சி மற்றும் முன்னெடுத்தலின் மூலம் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் வசதியான இடத்தில் வாழ வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலும் நடைபெறும் இடம்பெயர்தல் தன்னார்வ இடம் பெயர்வு எனப்படுகிறது.

2. தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு

மக்களின் விருப்பத்திற்கு மாறாக இடம்பெயர்வு நடைபெறுமாயின் அது அனிச்சையான இடம்பெயர்வு என அழைக்கப்படுகிறது. போர் போன்ற உந்து காரணியால் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குடிபெயர்தல் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

III. இடம் பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம் பெயர்தல்

1. குறுகிய கால இடம் பெயர்வு

இந்த வகையான இடம் பெயர்வுகளில் குடியேறுபவர்கள் பூர்வீக இடத்திற்கு திரும்புவதற்கு முன் குறுகிய காலம் மட்டுமே குடிபெயர்ந்த இடத்ச்தில் தங்குவர். இந்த இடம் பெயர்வு சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை மட்டுமே இருக்கும்.

2. நீண்டகால இடம் பெயர்வு

இவ்வகையான இடம்பெயர்வு குடியேறுபவர்கள் குறைந்த சில வருடங்களாவது குடியேறிய இடத்தில் தங்கி இருப்பார்கள்.

3. பருவகால இடம் பெயர்வு

இவ்வகையான இடம்பெயர்வில் பொதுவாக மக்களில் ஒரு குழுவினர் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தின் போது தன் பூர்வீக இடங்களிலிருந்து குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்.

கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறும் மக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் பயிர் விதைக்கும் பருவங்களில் இடம் பெயர்வது இவ்வகையைச் சார்ந்ததாகும். ‘மடந்தை இடமாற்றம்’ (Transhumance) என்பது மக்கள் கால்நடையுடன் இடம் பெயர்தலாகும். இதுவும் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை, 2017

  • சமீப காலங்களில் சர்வதேச அளவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
  • 2000இல் 173 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010இல் 220 மில்லியன்களாகவும் 2017இல் 258 மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது.

இடம் பெயர்தலின் விளைவுகள்

இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

இடம்பெயர்தலின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

அ. மக்கள் தொகை விளைவுகள்

  • மக்கட் தொகை கூறுகளான வயது மற்றும் பாலினத்தின் இடம்பெயர்வு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடம்பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது.
  • வேலை தேடி செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம்பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.

ஆ. சமூக விளைவுகள்

பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர்வதால் பன்முக சமுதாயம் உருவாக இவை வழி வகுக்கின்றன. இது மக்கள் குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏதுவான சூழலை உருவாக்குகின்றது.

இ. பொருளாதார விளைவுகள்

  • அதிக மக்கள் தொகை நிறைந்த பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அதிக மக்கள் இடம் பெயர்வதால் மக்கள் வள (Resource population) விகிதம் சமநிலையற்றதாகிவிடுகிறது.
  • சில சமயங்களில் இவ்விரு பகுதிகளும் உகந்த (Optimum population) மக்கட் தொகையைக் கொண்ட பகுதிகளாக மாறவும் செய்கின்றன.
  • இடம்பெயர்வு ஒரு பகுதியிலுள்ள மக்கள் தொகையின் தொழில் கட்டமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் பாதிக்கிறது.
  • அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) என்பது பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேசி வளர்ந்த நாடுகளுக்குச் செல்கின்றனர். இது இடம்பெயர்வின் ஒரு முக்கிய விளைவாகும்.
  • இதன் விளைவாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன. இது ‘அறிவுசார் வெளியேற்ற விளைவு’ (Back Wash Effect) என அழைக்கப்படுகிறது.

ஈ. சுற்றுச்சூழல் விளைவுகள்

  • ஊரகப் பகுதியில் இருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு பெருமளவிலான மக்கள் இடம் பெயர்வதால் நகரங்களில் மக்கள் நெரிசலையும், வளங்கள் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது.
  • இவ்விடப்பெயர்வு நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. நகர்ப்புற பகுதிகளின் மக்கள் பெருக்கம் காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவை மாசு அடைய வழி வகுக்கிறது.
  • குடிநீர் பற்றாக்குறை, போதிய குடியிருப்பின்மை, போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான வடிகால் அமைப்பு போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் நகர்புறங்களில் நிலவுகின்றன.
  • குடியிருப்பு இடம்பற்றாக்குறை மற்றும் நிலமதிப்பு உயர்வு போன்றவை குடிசைவாழ் பகுதிகள் உருவாக வழி வகுக்கின்றன.

நகரமயமாதல்

  • நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் எனப்படுகிறது.

நகரமயமாதலுக்கான காரணங்கள்

நகரமயமாக்கம் மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவை:

1. இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி

2. ஊரகத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல்

3. ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுச்சீரமைப்பு செய்தல்.

  • தற்போதைய நகரமயமாக்கல் மக்கள் தொகையில் மாற்றங்கள், நிலப்பரப்பு, பொருளாதாரச் செயல்முறைகள் மற்றும் புவியியல் பகுதிகளின் பண்புகள் ஆகியவைகளும் நகரமயமாக்கலுக்கு காரணமாக உள்ளன.

உலக நகரமயமாக்கல் விளக்கக் குறிப்பு, 2014

2007 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது. அதன் பிறகு நகர்புற மக்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

உலக நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

பண்டைக் காலம்

  • வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின. (10,000 ஆண்டுகளுக்கு முன்பு) இக்கால கட்டத்தில் தொடக்ககால மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினார்கள்.
  • நிரந்தரக் குடியிருப்புகள் வளர்ச்சியடையத் தொடங்கின. எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்ப்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகர மையங்களாக உருவாகின.
  • உணவு தானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
  • மெசபடோமியாவி உர் மற்றும் பாபிலோன், எகிப்தில் உள்ள தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா, கிரேக்கத்தின் ஏதென்ஸ், இந்தியாவின் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகியவை உலகின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த குறிப்பிடத்தக்க நகரங்களாகும்.
  • பண்டைய காலத்தில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகிய இரு பெரும் காலனியாதிக்க காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியது.
  • ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன. கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு, 2018

  • இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018-2050 ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் 32 சதவீதத்தைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இக்காலத்தில் இந்தியா 416 மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையும், சீனா 255 மில்லியன் மக்கள் தொகையையும், நைஜீரியா 159 மில்லியன் மக்கள் தொகையையும் நகர்ப்புறவாசிகளாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.

இடைக்காலம்

  • இது 11-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைக் குறிக்கிறது,. இந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடல் கடந்த வணிகம் அதிகரித்தது.
  • இவ்வணிக வளர்ச்சி , பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட காலத்திற்குப் பின் ஐரோப்பிய நகரங்கள் மற்றும் மாநகரங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
  • 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸ், இலண்டன், ஜென்வா, மிலன் மற்றும் வெனிஸ் ஆகிய முக்கிய நகரங்கள் காணப்பட்டன.

நவீன காலம்

  • இக்கால கட்டம் 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்ட வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • 19ஆம் நூற்றாண்டில் உருவான தொழிற்புரட்சி, நகரங்கள் மற்றும் மாநகரங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது.
  • ஐரோப்பியர்களின் நகர்ப்புற நாகரிகத்தினால் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் உருவாயின.
  • நவீன தொலைத்தொடர்பு,போக்குவரத்து மற்றும் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய வணிக கடல்வழித்தடங்களின் வளர்ச்சி, வணிகத்தளங்களையும் நகர்ப்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.
  • சமீபத்திய நகரமயமாக்கலின் வளர்ச்சி ஆப்பிரிக்க கண்டத்தில் நன்கு தென்படுகிறது.
  • 1930-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் கடற்கரையை ஒட்டியே இருந்தன. ஆனால் தற்பொழுது ஐம்பது நகரங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
  • கெய்ரோ, நைரோபி, மும்பசா, புலவையோ, டூலா, அபிடியன், லாகோஸ், அக்ரா, அடிஸ் அபாபா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால் , பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களாகும்.
  • நவீன கால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.

உலக நகரமயமாக்கல் விளக்க குறிப்பு, 2018

  • 1950இல் உலகின் மக்கள் தொகையில் 30% நகர மக்கள் தொகையாகும்.
  • 2050 இல் இவை 68 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
உலக நகரமயமாக்கல்
வ.எண் கண்டங்கள் நகர மக்கள் தொகை(%)
1 வட அமெரிக்கா 82
2 இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகள் 81
3 ஐரோபா 74
4 ஓசியானியா 68
5 ஆசியா 50
6 ஆப்பிரிக்கா 43
உலக சராசரி 55
அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்கள்
மாநகரத்தின் பெயர் மக்கள் தொகை (மில்லியனில்)
1. டோக்கியோ (ஜப்பான்) 37
2. புதி தில்லி (இந்தியா) 29
3. சாங்காய் (சீனா) 26
4. மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) 22
5. சா பாலோ (பிரேசில்) 22

நகரமாதலின் விளைவுகள்

அ. குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதிகள்

  • நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பதால் குடியிருப்பு இடம் பற்றாக்குறை மற்றும் குறிப்பிடத்தக்க அளவு தரமற்ற குடியிருப்புகள் உருவாக காரணமாகின்றன.
  • இப்பிரச்சனைகள் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப் பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன.

ஆ. மக்கள் நெரிசல்

நகர்ப்புற பகுதிகளில் அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு வழி வகுக்கிறது. இது பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

இ. தண்ணீர் விநியோகம் , வடிகால் மற்றும் சுகாதாரம்

உலகின் எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதுக்கும் தேவையான அளவிற்கு முறையாக நீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. வடிகாலமைப்பு மோசமான நிலையில் உள்ளது. நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.

ஈ. போக்குவரத்து மற்றும் நெரிசல்

பல நகரங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான திட்டங்கள் இல்லாமை மற்றும் போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாமை, நகர்ப்புற பகுதிகளில் காணப்படும் பெரும் பிரச்சனையாகும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. வாகனப் பெருக்கம், காற்று மாசு அடைய காரணமாகின்றன.

உ. மாசடைதல்

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்கள் முக்கியமான காரணிகளாகும். பல நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர் நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாடுபடுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!