Samacheer NotesTnpsc

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Notes 11th History

11th History Lesson 12 Notes in Tamil

12. ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

அறிமுகம்

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல; மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம் புரிதாகவே இருந்தது. எனினும், வங்காளத்தில் 1770இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பின் சற்றே அதிகாரத்தை பொறுப்புணர்வு கொண்டதாக அவர்கள் மாற்றினர். ஒருபுறம் பாரபட்சமான சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தபோதும், அவர்கள் தாங்கள் ஆண்ட மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நீதி நடைமுறைகளையும் காக்க முயல்வதாகப் பறைசாற்றிக் கொண்டார்கள். பாரம்பரிய அரசாட்சி சர்வாதிகாரக் கொடுமையை உள்ளடக்கியதாக இருப்பதாலும், எதிர்பாராத படையெடுப்புகளாலும் கள்வர்களாலும் மக்கள் இன்னல் அனுபவிப்பதாலும் தங்களின் அதிகாரம் விரிவடைவது தவிர்க்க முடியாததென நியாயப்படுத்திக் கொண்டார்கள். இருப்புப்பாதை ஏற்படுத்தியதும், தந்தி தொடர்பு முறையும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், உள்ளூர் மக்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் உதவின. ஆங்கிலேயரின் விவசாய, வணிகக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை நாசப்படுத்தின. இந்திய நாட்டின் வளங்கள் பல வகைகளிலும் கொள்ளைபோயின. பாதிக்கப்பட்ட விவசாயிகளும் நெசவாளர்களும் இதன் விளைவாக 1830களின் பின் அதிக அளவில் ஆங்கிலேய அதிகாரம் பரவியிருந்த நாடுகளில் இருந்த தோட்டங்களுக்கு கூலி உழைப்பாளிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்.

ஆங்கிலேய அரசு உருவாக்கம்

  • ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற பக்சார் போரே முக்கியக் காரணமாகும். வங்காளம், அவத் நவாபுகள் மட்டுமல்லாமல் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் ஆங்கிலேயரை எதிர்த்தார். பக்சார் போரில் முடிவில், கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத் தன்மையை இழந்து அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது. போரின் முடிவில் ராபர்ட் கிளைவ் இங்கிலாந்திற்குச் சென்றார்.
  • வங்காள நிர்வாகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கருதப்பட்டதால் அவர் வில்லியம் கோட்டை ஆளுநராக நியமிக்கப்பட்டார். கிளைவிற்கு, அவருக்கு முன்பாக பதவி வகித்த ஆளுநரான வான்சிடார்ட் அவத்தை ஷா ஆலம் வசம் மீண்டும் ஒப்படைத்தது ஏற்புடையதாக இல்லை. அதனால் அவர் சூஜா-உத்-தௌலாவுடன் புதிய பேச்சு வார்த்தையைத் துவங்கினார். அதன் விளைவாக இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • வங்காளம், பீகார் , ஒரிசா பகுதிகளின் திவானி (வருவாய் நிர்வாகம்) அதிகாரத்தைக் கம்பெனி வசம் பேரரசர் ஒப்படைத்தார் அலகாபாத் , காரா பகுதிகளின் நிர்வாகத்தைப் பெறுவதோடு பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் வருவாயிலிருந்து ஆண்டுக்கு 26 இலட்சம் ரூபாய் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது.
  • போர் இழப்பீடு வழங்கிவிட்டு சுஜா-உத்-தௌலா அவத் பகுதியை தக்க வைத்துக்கொள்ள உறுதி செய்யப்பட்டது. வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் பொது நிர்வாகம் வங்காள நவாபின் பொறுப்பானது.

  • பேரரசர், கிளைவிடம் திவானி பொறுப்பை ஒப்படைக்கும் முன்பே மீர் ஜாபரின் வாரிசாக பொறுப்பேற்ற நவாப், நிஜாமத் (பொது நிர்வாகம்) பொறுப்புகளைக் கம்பெனி வசம் ஒப்படைத்திருந்தார். ஆகவே திவானாகவும் நசீமாகவும் கம்பெனி செயல்பட வேண்டியிருந்தது.
  • திவானின் கடமை வரி வசூலிப்பதும் குடிமக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ஆகும். நசீமின் கடமையோ இராணுவச் செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்கலும் ஆகும். இவ்வாறாகக் கம்பெனி மெய்யாக முழு அதிகாரத்தையும் தன்வசம் தக்க வைத்துக்கொண்டு வெற்று நிர்வாகச் சுமையை மட்டுமே நவாபிடம் விட்டு வைத்தது. இத்தகைய நிர்வாக முறையே ‘இரட்டை ஆட்சிமுறை’ என்றும் இரட்டை அரசுமுறை (diarchy) என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • ஆனால் ‘இரட்டை ஆட்சிமுறை’ விரைவில் உடையத் துவங்கியது. பொறுப்புகளை ஏற்காத அரசாட்சி முறை வங்காளத்தில் 1770ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்கு இட்டுச்சென்றது.
  • மூன்றில் ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் மடிந்தனர். கம்பெனி ஊழியர்கள் அரிசி வணிகத்தில் கொண்டிருந்த ஏகபோகக் கட்டுப்பாடும், அவர்கள் அவ்வேளையிலும் கடைப்பிடித்த லாப நோக்கமும் துயரச்சூழலை மேலும் அதிகமாக்கியது.
  • இறுதியாகக் கம்பெனி தனது பொறுப்பை உணர்ந்ததன் விளைவாக, 1773ஆம் ஆண்டில் ஒழுங்குமுறைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. வங்காளத்தின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார்.
  • 1772 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தலைவர் ஆளுநரே ஆவார் (வில்லியம் கோட்டையிலோ ஜார்ஜ் கோட்டையிலோ வீற்றிருப்பார்). வில்லியம் கோட்டையில் ஆளுநராகப் பதவியிலிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழுங்கு முறைச் சட்டத்தின் (1773) மூலமாக கவர்னர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார். கவர்னட் ஜெனரல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் மன்றத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 1833 பட்டயச் சட்டம் மூலமாக அப்பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று நிலையேற்றம் பெற்றது. அப்பதவியும் இயக்குநர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, பதவி வகிப்பவர் இயக்குநர் மன்றத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய கடமையுமிருந்தது. 1857 பெருங்கிளர்ச்சிக்குப்பின் இந்திய அரசின் பொறுப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகை செய்த 1858இல் ‘விக்டோரியா ராணியாரின் பிரகடனம்’ முதன்முறையாக அரசப் பிரதிநிதி (வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்) என்ற சொற்றொடரைக் கையாண்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னட்ர் ஜெனரலாக கானிங் நியமிக்கப்பட்டார்.

நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்

  • ஒழுங்குமுறைச் சட்டம் 1773இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவுசெலவு கணக்கு பற்றி இயக்குநர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்குத் தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது.
  • ஆளுநரும் தலைமைத் தளபதியும் இரு ஆலோசகர்களும் கொண்ட குழு, வருவாய் குறித்து விவாதித்தது. 1784ஆம் ஆண்டின் பிட் இந்தியச் சட்டம், இராணுவ மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாகப் பிரித்தது.
  • தானே ஒரு நிலச்சுவாந்தாரராக இருந்த காரன்வாலிஸ் பிரிட்டிஷ் முறையப் பின்பற்றிய நிலப்புரபுத்துவ முறையை உருவாக்க நினைத்தார். வருவாய் வசூலிப்பவரோடு கலந்துபேசி அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இது ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை உருவாக்கியதோடு பயிரிடுவோரைக் குத்தகை விவசாயிகளாக மாற்றியது.
  • இயக்குநர் குழுவின் அறிவுரைப்படி வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் ஜமீன்தார்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு முறையே நிலையான நிலவரி முறையாக அறியப்படுகிறது.
  • ‘சாசுவதம்’ என்பது நிலத்தை அளவிட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வதாகும். 1793இல் வங்காளம், பீகார்., ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு அந்த நிர்ணயம் நிரந்தரமாக்கப்பட்டது.
  • இம்முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாற்றி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு மேலாக வசூலிக்கப்பட்ட அனைத்தையும் ஜமீன்தார்கள் கையகப்படுத்திக் கொண்டார்கள்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டு சென்னை மாகாணத்தின் நில வருவாய் வரலாற்றின் தொடக்கக் காலமாகும். ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைக்குப் பின் நிரந்தர நிலவரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்கள் பல மிட்டாக்களாக பிரிக்கப்பட்டு அதிக தொகைக்குக் கேட்போருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு நிலவுரிமை பெற்றோர் வேளாண் குடிகளை அப்புறப்படுத்தியமையால் ஓரிடு ஆண்டுகளில் தோல்வியையே எதிர்கொண்டனர். ஆகவே அம்முறை கைவிடப்பட்டது. அதன்பின் வருவாய் வாரியம் (Board of Revenue) கிராமங்களைக் குத்தகைக்கு விடும் முயற்சியை மேற்கொண்டது.
  • கிராமக் குத்தகை முறையில் , பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் மூன்று ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
  • மிராசுதார் முறை நிலவி வந்த மாவட்டங்களில் நிலவரி வசூலிக்கும் பொறுப்பு மிராசுதார்களிடம் கொடுக்கப்பட்டது. மிராசுதார்கள் இல்லாத பகுதிகளில் கிராமத்தலைவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இம்முறை மோசமான பருவநிலை, தானிய விலைக் குறைவு, குறைந்த கால குத்தகை முறை போன்ற காரணங்களால் தோல்வியடைந்தது.
  • போதிய விளைச்சல் இல்லாத போது மொத்த கிராமங்களும் வரி செலுத்த முடியாமல் புலம் பெயர்வது என்பது சாதாரணமாக நிகழ்ந்தது. அரசு, மாவட்ட ஆட்சியரின் துணையோடு அவ்வாறு புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
  • 1814ஆம் ஆண்டு இயக்குநர் குழுவில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • வேளாண் நிலத்தின் உரிமையாளரும், அதன் வரிகளை செலுத்துபவரும் என்ற பொருள் கொண்ட ‘ரைய்யா’ என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திபே ‘ரயத்’ (Ryot) ஆகும்.
  • ரயத் என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள், எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொள்வதே இம்முறையாகும்.
  • நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்தாதோரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவதோடு அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த கால்நடை, வீடு தனிப்பட்ட உடைமை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அரசு, பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு வயலிலிருந்தும் கிடைக்கக்கூடிய வருவாயைக் கணித்தது.
  • தானிய விலை மாற்றம், சந்தைப்படுத்தும் வசதிகள், பாசன வசதி போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முப்பது ஆண்டுக்கு ஒருமுறை தீர்வு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இரயத்துவாரி முறை நிலத்தில் தனியுடைமையை அறிமுகப்படுத்தியது.
  • தனிப்பட்ட உடைமையாளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்ட பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் நிலத்தை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் , குத்தகைக்கு விடுவதற்கும், உரிமையை மாற்றிக் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
  • வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் (1833) மகல்வாரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நிலவருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.

தாமஸ் மன்றோ:

தாமஸ்மன்றோ 1780இல் மதராஸ் வந்தடைந்தார். முதல் பன்னிரெண்டு வருடங்கள் அவர் ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார். அவர் பாரமஹால் பகுதியில் (சேலம் மாவட்டம்) 1792 முதல் 1799 வரையிலும், கன்னட பகுதியில் 1799 முதல் 1800 வரையிலும் பணியிலிருந்தார். பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டங்களான கடப்பா, கர்னூல், சித்தூர், அனந்தபூர் ஆகியவற்றிற்கு ஆட்சியராக பணி புரிந்தார். இக்காலத்திந்தான் அவர் இரயத்துவாரி முறை பற்றி யோசிக்கலானார். அவர் 1820ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று அதன் பின் ஏழு வருடங்கள் சேவையாற்றினார். அப்போது 1822 ஆம் ஆண்டில் இரயத்துவாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார். அவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார். அவர் நிர்வாகத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றுவதை ஆதரித்தார். அவர் ஜூலை 1827 ஆம் ஆண்டு கர்னூலில் அமைந்துள்ள பட்டிக்கொண்டாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மக்களிடையே பிரபலமாகியிருந்த ஆளுநரான அவரின் நினைவாக பல நினைவிடங்கள் எழுப்பப்பட்டதோடு, குழந்தைகள் பல நினைவிடங்கள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து அவரது சிலை வடிவமைக்கப்பட்டு 1839ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.

துணைப்படைத் திட்டமும், வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும்

  • கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி (1798 – 1805) பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு ஒரு முன்னோக்கிய கொள்கையை பின்பற்றினார். அவர் சிற்றரசுகளைப் போர் வெற்றியின் மூலமாக வசப்படுத்தவில்லை. அதற்கு மாறாக அரசர்களைப் பெயரளவிற்கு அங்கீகரித்து அவர்களுக்கு மானியம் வழங்கியதோடு மொத்த நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தினார்.
  • வெல்லெஸ்லிக்கு முன்பாக இந்திய அரசர்களோடு கம்பெனி கூட்டணி அமைத்திருந்த நிஜாமும், அவத் நவாபும் பிரிட்டிஷ் படைகளைப் பராமரிக்க மானியம் பெற்றிருந்தார்கள்.
  • ஆனால் அவ்வாறு பராமரித்த படைப்பிரிவுகள் அவர்களின் நாட்டு எல்லைகளுக்கு வெளியே தான் நிறுத்தப்பட்டிருந்தன. பராமரிப்புச் செலவு பணமாகவே வழங்கப்பட்டது.
  • பணப்பட்டுபாடா குறித்த நேரத்தில் நடந்தேறாதபோது சிக்கல் எழுந்தது. இம்முறையை வெல்லெஸ்லி துணைப்படைத் திட்டத்தின் மூலம் விசாலமாக்கியதோடு ஹைதராபாத், மைசூர், லக்னோ., மராத்திய பேஷ்வா , போன்ஸ்லே (கோலாப்பூர்), சிந்தியா (குவாலியர்) போன்ற அரசுகளையும் அரசர்களையும் அதன் கீழ்க்கொண்டு வந்தார்.
  • துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன

(அ) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை கலைத்து விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக (Resident) ஏற்க வேண்டும் .

ஆ) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும். அது முடியாதபோது மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்

இ) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசர் பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்கக்கூடாது.

ஈ) பிரிட்டிஷார் அனுமதியில்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியிலமர்த்தக்கூடாது. இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனியை சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.

  • துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டுமொத்தத் திறனையும் கூட்டியது. அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும். அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளையர்களாக மாறினார்கள். பிண்டாரிகளின் (கூட்டமாக சூறையாடுவோர்) எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கணிசமாக உயர்ந்தது.
  • அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியபோதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
  • மாகாணம் (Presidency) என்பதற்கும் மாநிலம் (Province) என்பதற்குமான வேறுபாடு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப் பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அவ்விதத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும். பின்னர் இம்மாகாணங்களை நிர்வாகத்தில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்றவை உருவாக்கப்பட்டன.

வாரிசு உரிமை இழப்புக் கொள்கை

  • இந்து சம்பிரதாயங்களின்படி, வாரிசில்லாத மன்னர் ஓர் ஆண் மகவைத் தத்தெடுக்க முடியும். அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்குச் சொத்தில் முழு உரிமையும் உண்டு. இச்சூழலில் உச்ச அதிகாரத்திற்கு (இங்கிலாந்திற்கு) கட்டுப்பட்ட ஒரு சிற்றரசு அவ்வதிகாரத்தின் அனுமதி பெறாமல் வாரிசுகளை நியமிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்தது.
  • டல்ஹௌசியின் வரவுக்கு சுவீகாரத்திற்கு முன்போ, பின்போ அரச குடும்பத்தினர் பெற்று வந்தனர். ஆனால் டல்ஹௌசியோ இம்முறை உச்சபட்ச அதிகாரத்தின் பார்வைக்கு சென்றால் சட்டப்பூர்வமான சிக்கலை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தார்.
  • அவ்வாறு இருக்குமாயின் தத்தெடுக்கப்பட்ட வாரிசுகள் அரியணை ஏறுவது கம்பெனி அரசால் செல்லாதது என்று அறிவிக்கவும் வாய்ப்பிருந்தது.
  • வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும். சதாராவின் மன்னரான ஷாஜி இறந்த பின் (1848) அவரது தத்தெடுக்கப்பட்ட வாரிசை டல்ஹௌசி அங்கீகரிக்க மறுத்தார்.
  • ஜான்சியின் அரசர் கங்காதர்ராவ் நவம்பர் 1853இல் இறந்த மறுகணமே அவ்வரசு டல்ஹௌசியால் இணைக்கப்பட்டது. (விதவையான அவரது மனைவி இராணி லட்சுமிபாய் 1857 பெருங்கிளர்ச்சியின் போது பெரும் பங்காற்றினார்.)
  • குழந்தைகள் இல்லாமல் மூன்றாம் ரகுஜி போன்ஸ்லே 1853இல் மறைந்தார். நாக்பூர் உடனடியாகக் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது. மராத்தியர்களின் கடைசி பேஷ்வா 1851இல் காலமானார். அவர் முப்பத்து மூன்று வருடம் கம்பெனி கொடுத்த ஓய்வூதியத்தைப் பெற்றிருந்தார்.
  • ஆனால் டல்ஹௌசியோ அவரது வாரிசான நானா சாகிப்பிற்கு ஓய்வூதியம் கொடுக்க மறுத்தார். இவ்வாறாக வாரிசு உரிமை இழப்புக் கொள்கை நாடு பிட்க்கும் உத்தியாகச் செயல் வடிவம் பெற்றது. எனினும் பிரிட்டிஷ் முடியரசு இந்திய நாட்டின் பொறுப்பை ஏற்ற பின் இக்கொள்கை திரும்ப பெறப்பட்டது.

சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்

  • பிளாசிப்போருக்குப் பின் (1757) கம்பெனி தன்னை விரிவுபடுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியது. இம்முறையின் கீழ், மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு அவரது பின்புலத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றினர்.
  • கொள்கையளவில் கம்பெனி , தன்னை திவானாக (வரி வசூலிக்கும் அதிகாரம்) மட்டும் சொல்லிக்கொண்டாலும் முழு அதிகாரமும் அதனிடமே குவிந்திருந்தது. கிளைவால் உறுதியளிக்கப்பட்டிருந்த முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலமிற்கு செலுத்தவேண்டிய ஆண்டு ஓய்வுதியம் நிறுத்தப்பட்டதன் மூலம் இவ்வதிகாரம் வலியுறுத்தப்பட்டது.
  • கடித அளவிலான மரியாதையைக்கூடக் காரன்வாலிஸ் கொடுக்க மறுத்தார். வெல்லெஸ்லி மேலும் நெருக்கடியைக் கூட்டும் வண்ணமாக பிரிட்டிஷாருக்குச் சாதகமாகத் துணைப்படைத் திட்டத்தைக் கடைபிடித்தார். அதனை ஹைதராபாத் , பூனா, மைசூர் போன்ற முக்கிய அரசுகளை ஏற்க வைத்தார்.
  • கவர்னர் ஜெனரலாக 1813ஆம் ஆண்டு பதவியேற்ற ஹேஸ்டிங்ஸ் (மொய்ரா) முகலாய முத்திரையைப் பரிவர்த்தனைகளில் தவிர்த்தார். கம்பெனியின் உடைமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்திவந்த ஆதிக்கத்தை நிறுத்திகொள்ளாவிட்டார் அவரைத் தான் சந்திக்க முடியாது என்றார்.
  • ஹேஸ்டிங்ஸ் இந்திய அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனிக்கு இல்லை என்ற கொள்கை முடிவைப் பின்பற்றினார். ஆக, துணைப்படைத் திட்டத்தின் கீழ் மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி கொண்டாலோ, அண்டை அரசு பொறாமையால் சூழ்ச்சியில் ஈடுபட்டாலோ பாதிப்பு எதுவும் ஆட்சி செய்வோருக்கு ஏற்படவில்லை
  • குறுந்தலைமைகளால் பிரித்து ஆட்சி செய்யப்பட்டுவந்த கத்தியவார் பகுதியையும் மத்திய இந்தியப் பகுதியையும் கம்பெனி நெருங்கிய கண்காணிப்பில் வைத்திருப்பது தவ்ர்க்க முடியாததாயிற்று.
  • தூணைப்படைத் திட்டத்தின் கீழ் கம்பெனி ராணூவம் இந்திய ஆட்சியாளர்களை உள்நாட்டு கலகங்களிலிருந்தும். பிற பாதிப்புகளிலிருந்தும் காத்தது.
  • ஹைதராபாத்தின் சில பகுதிகள் நிஜாமின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட அரேபியப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. பிரிட்டிஷ் படைப்பிரிவின் உதவியோடு அரேபிய வீரர்கள் பணிய வைக்கப்பட்டார்கள்.
  • மைசூர் அரசில் 1830ஆம் ஆண்டு நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து ஏற்பட்ட கிளர்ச்சியை வெல்லெஸ்லியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கம்பெனி தலையிட்டு சரி செய்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பெண்டிங் அரசரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் விடுவித்து மார்க் கப்பன் என்பவரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.
  • குவாலியரின் வாரிசு இளம் வயதினர் என்பதால் நிர்வாகம் கட்டுடைந்து, அரசவையில் கோஷ்டிகள் தோன்றி அவர்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். இராணுவமோ கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயலிழந்து கிடந்தது.
  • எல்லன்பரோ வலிமையான படைகளோடு வந்து சேர்ந்தார். அவரது படைகளை உள்ளூர் படைகள் எதிர்த்தன. மகாராஜ்பூர் போரில் உள்ளூர் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு 1843ஆம் ஆண்டில் படை பலத்தைக் குறைத்துக்கொள்வது உள்ளிட்ட நிபந்தனைகளோடு புதிய வழிமுறை மொழியப்பட்டது.
  • டல்ஹௌசியின் வாரிசு இழப்புக்கொள்கை பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுபாட்டிற்குள்ளிருந்த பகுதியை விரிவாக்கியது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த அரசுகளின் மீதான கம்பெனியின் அதிகாரம் ஓங்கியது.

குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்

  • நீதிபதியும், கிழக்கித்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று காரன்வாலிஸ் கம்பெனி நிர்வாகத்தைக் கட்டமைத்தார். குற்றம் நடப்பதைக் கண்டுபிடிக்கவும், தண்டனை வழங்கவும் ஒரு சீரிய முறையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக கிளைவ் உருவாக்கிய இரட்டை ஆட்சி முறையை முடிவு கொண்டு வந்தார்.
  • வரி வசூலிக்கும் பொறுப்பைப் பொது நிர்வாகத்திலிருந்தும், நீதித்துறையிலிருந்தும் பிரித்தார். ஆட்சியர்களை(Collectors) வரி வசூலிக்க மட்டுமே பணித்து, அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
  • குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன. நீதித்துறையின் உச்சகளாகச் சீரமைக்கப்பட்டன. நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும் , சதர் நிஜாமத் அதாலத்தும் திகழ்ந்தன,
  • குற்றவியல், குடிமையியல் நீதியில் உச்சபட்ச முறையீட்டு நீதிமன்றங்களான இவை கல்கத்தாவில் அமையப்பெற்று கவர்னர் ஜெனரல் உள்ளிட்ட குழுவினரால் வழிநடத்தப்பட்டன. அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
  • இந்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றினுக்கும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவி புரிய ஓர் இந்திய வல்லுனரும் நியமிக்கப்பட்டார்கள். இந்நீதிமன்றங்களின் கீழ் ஒரு ஐரோப்பிய நீதிபதியையும், அவருக்குத் துணையாகச் சில இந்தியர்களையும் உள்ளடகிய மாவட்ட மற்றும் நகர நீதிமன்றங்கள் இயங்கின.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருநகரிலும் ஓர் நீதிமன்றம் அமைந்தது. அவற்றின் கீழ் இந்திய நீதிபதிகளைக் கொண்ட முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கின. சீரியல் (சிவில்) வழக்குகளில் இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்பட்டன. குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவரின் சமயப் பின்னணியினைப் பொறுத்து இந்து சட்டமும், இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்பட்டன.
  • காரன்வாலிஸின் தலையாய பங்களிப்பானது குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும். அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார்.
  • கம்பெனி அதிகாரிகளுக்குச் சொற்ப சம்பளத்தை வழங்கிவிட்டு அவர்களைத் தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
  • திறமையின் அடிப்படையில் பணிவழங்கியபோதும், இந்தியர்கள் பணியாற்றத் தகுதியற்றவர்கள் என்று கருதியதால் அவர்களைப் பணிக்கு அமர்த்த மறுத்தார்.
  • ஒவ்வொரு மாவட்டமும் தானாக்களாகப் (காவல் வட்டம்) பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட தரோகா என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
  • காரன்வாலிஸின் காவல் துறை நிர்வாக முறை பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது. நீதியதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்திற்குமிடையேயான திடமான பிரிவு கைவிடப்பட்டது. ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் துவங்கினார்.
  • குடிமை மற்றும் நீதி நிர்வாகத்தைப் பண்படுத்திய காரன்வாலிஸ் கம்பெனி ஊழியரின் கல்வியை மேம்படுத்த போதிய அக்கறை செலுத்தவில்லை. வெல்லெஸ்லியோ அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இங்கிலாந்தின் தாராளவாதக் கல்வி முறையோடு இந்தியரின் மொழி, சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குடிமைப் பணியாளர்கள் அறிந்திருத்தல் நன்று என அவர் கருதினார்.
  • இந்நோக்கத்தோடு கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் 1800இல் ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. கம்பெனிடின் குடிமைப் பணியாளர்களுக்கு இங்கு மூன்று வருட காலப் பயிற்சி வழங்கப்பட்டது.
  • பல ஐரோப்பியப் பேராசிரியர்களும் எண்பது இந்தியப் பண்டிதர்களும் இங்குப் பணிபுரிந்தனர். இதுவே வங்காளக் கிழக்கத்தியப் பள்ளியாக உருவெடுத்தது. கிழக்கத்தியக் கல்லூரி 1806இல் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது.
  • வில்லியம் கோட்டை கல்லூரியின் அடியொற்றி, எல்லிஸ் என்பவர் தூய ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (1812) சென்னையில் உருவாக்கினார். இங்குதான் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருத்தாக்கம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி

  • மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதரசாவை உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும். இம்மதரசா நாற்பது மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது.
  • இஸ்லாமியர்களுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் செய்தது போன்ற சேவையை இந்துக்களுக்கு மேற்கொள்ள அவருக்குப் பின் பொறுப்பேற்றோர் தயாராக இருந்தனர். காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை (1791) நிறுவினார்.
  • அதன் பின் வந்த இருபது ஆண்டுகளில் பெரிய நடவடிக்கைகள் எதையும் பிற ஆளுநர்கள் மேற்கொள்ளவில்லை. கம்பெனியின் நலம் கருதி இந்தியாவில் கல்வி வளர்ச்சியை மேற்கொள்வது விரும்பத்தக்கது அல்ல என்றே நினைத்து செயல்பட்டது.
  • பின்னர் 1813ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டயச்சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனராலகப் பொறுப்பேற்ற பின் கிறித்தவ சமயத் தொண்டாற்றுவோர் மூலமாகத் தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார்.
  • கல்கத்தாவில் 1817ஆம் ஆண்டு ஆங்கில மொழியையும் மேற்கத்திய அறிவியலையும் ஆதரித்த இந்தியரின் எண்ணவோட்டத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகத் துவக்கப்பட்ட இந்து கல்லூரிக்கு அவரே புரவலரானார்.
  • அலெக்சாண்டர் டஃப் போன்ற கிறித்தவ சமயப்பணியாளர்களும் கல்வியை வளர்த்தெடுக்கத் தூண்டுகோலாக இருந்தனர். ஹேஸ்டிங்ஸின் தாராளப்பார்வையும், அதன் விளைவாக 1799இல் பத்திரிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் கல்வி வளர்ச்சியில் பாராட்டுக்குறிய நடவடிக்கைகளாகும். இச்சூழலில்தான் 1818ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் “சமாச்சார் தர்பன்” துவங்கப்பட்டது.
  • இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833ஆம் ஆண்டின் பட்டயச்சட்டம் வலியுறுத்தியது. ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Thuggee) (சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள்) அழிக்கவும், சதி முறையை ஒழிக்கவும், கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கத் தலைப்பட்டார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியை 1835இல் துவங்கினார்.
  • இக்கல்லூரியின் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டார்கள். 1845இல் பம்பாயில் கிராண்ட் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. தாம்சன் பொறியியல் கல்லூரி 1847ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
  • மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார். அவர் கல்விக்குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உள்நாட்டுக் கல்வி மீதுமதிப்பிருக்கவில்லை.
  • மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்ததால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
  • டல்ஹௌசியும் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவர் வடகிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநர் (1843 – 53) ஜேம்ஸ் தாமஸினால் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வி முறைக்கு ஆதரவு கொடுத்தார்.
  • சார்லஸ் உட்டின் ‘கல்வி அறிக்கை (1854) ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரைவாகும். பொதுக் கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாணத் தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 1857இல் சென்னை பல்கலைக்கழகமும் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
  • டல்ஹௌசி மெக்காலேயின் கொள்கையை மாற்றி, தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார். அவர் சாதி சமயப் பாகுபாடு பார்க்காமல் தனியாரின் கல்விச்சேவையை ஆதரிக்கும் விதமாக கல்விச் சேவையில் ஈடுபட்ட தனியாருக்கும் மானியம் வழங்கினார்.
  • பட்டயம் (charter) என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக்கொண்டு சகல அதிகாரங்களும், சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும். கிழக்கிந்தியக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600இல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக 1773ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டயச்சட்டமே கடைசியானது ஆகும்.

மெக்காலே

இந்திய இலக்கியம், தத்துவம், மருத்துவம் இவற்றில் எதிலும் மெக்காலே நல்லவற்றை காணவில்லை. 1835ஆம் ஆண்டு எழுதிய கல்வி குறித்த குறிப்பில் மெக்காலே கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்”

……………..எனக்கு அரபு மொழியும் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் அரபு, சமஸ்கிருத மொழிகளில் சிறப்பானவையாகக் கருதப்படும் நூல்களின் மொழியாக்கங்களைப் படித்திருக்கிறேன். எனது நாட்டிலும் , இங்கும் (இந்தியாவில்) கிழக்கத்திய மொழிகளில் புலமை பெற்ற மனிதர்களுடன் உறவாடியிருக்கின்றேன். நல்லதோர் ஐரோப்பிய நூலகத்தில் உள்ள ஓர் அலமாரியில் இருக்கும் நூல்கள் அரேபியாவிலும், இந்தியாவிலும் உள்ள அனைத்து இலக்கிய நூல்களுக்கும் சமம் என்பதை அவர்களுள் ஒருவர்கூட மறுக்கமாட்டார்கள்.

…………….நமக்கு முன் உள்ள கேள்வி இதுதான்: நம்முடையவற்றிற்கு ஒப்பாக புத்தக்கள் எந்த ஒரு பாடத்திற்கும் இல்லாதபோது நமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மொழி (சமஸ்கிருதம்)யை நாம் கற்றுக்கொடுக்க முடியுமா?

………ஐரோப்பிய அறிவியலைக் கற்றுக்கொடுக்க முடியும்போது, ஐரோப்பிய முறைகளிலிருந்து மாறுபடுகிற அனைத்தும் மோசமானவை என்ற கருத்து எங்கும் நிலவும் போது, மேன்மைமிக்க தத்துவம், உண்மையான வரலாறு நம்மால் ஆதரிக்கப்படும்போது, பொதுமக்கள் நலத்திற்கு கேடான ஒன்றை ஆதரிக்க முடியுமா?

……………ஆங்கிலேய குதிரைக்கு லாடங் கட்டுபவன் கூட நானத்தக்க மருத்துவக் கோட்பாடுகள், வானியல் , 30அடி உயர மன்னர்கள், முப்பதாயிரம் ஆண்டுகள் ஆண்டனர் என்ற வரலாறு, அமிர்த, பாற்கடல்களையும் கொண்ட புவுயியல் போன்றவை ஆங்கிலேயரது உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்குக்கூட சிரிப்பை உண்டாக்கும்.

…………..அரபு, சமஸ்கிருத மொழிகளில்தான் பலநூறு மில்லியன் மக்களால் புனித நூல்கள் எழுதப்படுகின்றன. எனவே அவ்வடிப்படையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. உறுதியாக பிரிட்டீஷ்-இந்திய அரசின் கடமை மத சம்பந்தப்பட்டவற்றில் நடுநிலையோடும் சகிப்புத்தன்மையோடும் செயல்படுவதுதான். உள்நாட்டு மக்களைக் கிறித்தவர்களாக மதமாற்றம் செய்வோர்க்கு நாம் ஆதரவு தர மறுக்கிறோம்; எப்போதும் மறுப்போம் என நான் நம்புகிறேன். இவ்வாறு நாம் நடந்துகொள்ளும்போது எவ்வாறு நிச்சயமாக, கௌரவமாக அரசு நிதியிலிருந்து வாரி வீசி ஓர் கழுதையைத் தொட்டால் எப்படு சுத்தப்படுத்துவது, வேதத்தின் எப்பகுதியின் உரையை ஓர் ஆட்டைக் கொன்ற பாவத்திற்காகக் கூறவேண்டும் என்பனவற்றைக் கற்றுக் கொடுத்து எப்படி [இளைஞர்களின்] இளமைக்காலத்தை வீணடிக்க முடியும்?

………….தற்போது நமக்கும், நாம் ஆள்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்குமிடையே உரைபெயர்ப்பாளர்களாக ஒரு வர்க்கத்தை உருவாக்கம் நாம் முடிந்ததைச் செய்ய வேண்டும் – இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர் ஆனால் சுவையில், கருத்தில், தார்மீகத்தில், அறிவில் ஆங்கிலெயராக இருக்கும் ஒரு வர்க்கம்.

…….பிராந்திய மொழிகளைச் சீர்திருத்தி, மேற்கத்திய சொற்பட்டியலிலிருந்து அறிவியல் தொடர்பான சொற்களைச் சேர்த்து செழுமைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் எவ்வழியில் அறிவைக் கொண்டு சேர்க்க முடியுமோ அவ்வழியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அவ்வர்க்கத்திடமே விட்டுவிடலாம்.

பாதுகப்பு முயற்சிகளும் வளர்ச்சி நடவடிக்கைகளும்

பிண்டாரிப் போர்

பிண்டாரி கொள்ளைக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். துணைப்படைத் திட்டத்தினால் வேலையிழந்த பல வீரர்கள் இக்கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவுக்குப் பெருகினர். பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஆனால் அது மராத்தியருக்கு எதிரானப் போராக உருப்பெற்றது. இப்போர்கள் பல்லாண்டுகள் (1811 – 1818) நடைபெற்றாலும் மொத்த மத்திய இந்தியாவையும் இறுதியில் பிரிட்டிஷார் வசம் கொண்டு சேர்த்தது.

தக்கர்களை அடக்குதல்

  • தக்கர்களை பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக்கொண்டிந்த கூட்டத்தினர் ஆவார். அவர்கள் தங்கள் அமைப்பை உறுதிமொழி ஏற்பதன் மூலமாகவும், சில சடங்கு ஆச்சாரங்களைப் பின்பற்றுவதன் மூலமாகவும் பலப்படுத்தி அப்பாவி வழிப்போக்கர்களை எதிர்பாராத தருணத்தில் தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து வந்தனர்.
  • தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பெண்டிங் ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837 வரையான காலகட்டத்தில் நிரூபணமானது. ஐந்நூறு பேர் அரசு சாட்சிகளாக மாறினர். தக்கர்களை முன்னிட்டு எழுத பிரச்சினைகள் 1860ஆம் ஆண்டுவாக்கில் முடிவுக்கு வந்தன.

சதி ஒழிப்பு

விதவைகளை அவர்களது கணவர்களின் சிதையோடு சேர்த்து எரிக்கும் சதி முறையை ஒழிக்க முடிவெடுத்ததின் மூலம் வில்லியம் பெண்டிங் தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பதவி வகித்த கவர்னர் ஜெனரல்கள் சமயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட யோசித்த பின்புலத்தில், பெண்டிங் தயக்கமில்லாமல் சட்டம் (சதி ஒழிப்புச் சட்டம் , 1829) ஒன்றை இயற்றி, அதன் மூலம் இப்பழக்கத்திற்கு ஒரு முடிவு கொண்டுவர முயன்றார். இராஜா ராம் மோகன் ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத்தன்மையற்ற முறை ஒழிய முக்கியக் காரணமாக இருந்தன.

இருப்புப்பாதையும், தபால் –தந்தி முறையும்

  • இருப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும். இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதைப் போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களிடம் இருக்கவே செய்தது.
  • இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசி வாதிட்டு அதை வலியுறுத்தினார். எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
  • இந்த்யாவிற்கும் லண்டனுக்குமிடையே தந்திப் போக்குவரத்தை உருவாக்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்டபோதும் தந்திப் போக்குவரத்து இந்தியாவில் 1854ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
  • 1857ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்குப் பின் அது அதி முக்கியத் தேவையென்ற நிலையை எட்டியது. லண்டனுக்கும், கல்கத்தாவிற்குமிடையே தொடர்பு கொள்ள பல நாட்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழிசெய்தது.
  • ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது. இலண்டனின் இந்திய அலுவலகத்தில் (Indian Office) செயலாற்றி வந்த பிரிட்டிஷ் அரசின் செயல்தலைவரோடு தொடர்பு தவர்க்கமுடியாததானது. இதன் பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த ‘வெள்ளை மாளிகையைத்’ (Whitehall) தொடர்பு கொள்ளாமல் முடுவெடுக்கத் தயங்கினார்கள்.
  • பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை 1853ஆம் ஆண்டு அமையவும், ஹௌராவுக்கும் ராணிகஞ்சிற்கும் இடையே 1854-55 ஆம் ஆண்டுகளில் அமையவும் செய்தது. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856ஆம் ஆண்டு மதராஸுக்கும், அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது. அவ்வாண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்.

நீர்ப்பாசன வசதி

  • பாசனவசதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. இந்திய அரசர்கள் வெட்டிச் சென்ற பழைய கால்வாய்களும் குளங்களும் பயனற்றுக் கிடப்பதை கண்டபோதும் அவற்றைத் தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொடுக்கவோ, புதுப்பிக்கவோ கம்பெனி முயற்சி செய்யவில்லை.
  • சென்னையில், நாம் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணப்போவது போல, ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
  • பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கொள்ளிடத்தின் குறுக்கே 1836இல் அணையைக் கட்டினார்.
  • கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் 1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும், 1856இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்தூறைக் கால்வாய் (தோ ஆப்) தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும். ஆனால் கால்வாய்கள் மண்ணில் உப்புத் தன்மையை கூட்டவும், தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்கவும் வழிவகுத்தது.

காடுகள்

  • பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்க கூடியதாக நிலமே விளங்கியது. அதனால் வேளாண் நிலத்தை விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன.
  • ஜங்கிள் மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலங்களின் பூர்வீக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டார்கள். ஆகவே சந்தால் இன மக்களே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்கிறார்கள்.
  • ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது. ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தார்களும் காடுகளை அழித்தார்கள். ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.
  • எனினும், விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்டங்களை உருவக்க முயன்றுகொண்டே இருந்தார்கள். இருப்புப்பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
  • 1870களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்திய மரங்களில் சால், தேவதாரு, தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.
  • இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும்பொருட்டு இந்தியாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன. இந்தியக் காடுகளின் செல்வவளம் அழிக்க முடியாதது என்ற தொன்மக்கூற்று உடைபட்டது. இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
  • பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களைப் பூர்வீக குடிகள் பயன்படுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியைப் பெற்றது. அவர்களின் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் கட்டுக்குள் கோண்டுவரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினச் சட்டம், 1871இல் இயற்றப்பட்டது.
  • காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தனர். காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும்

  • ஐரோப்பிய நாடுகள் கிழக்கி;லிருந்து பெருமளவில் இறக்குமதி செய்துகொண்ட அளவிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஏற்றுமதியான நறுமணப் பொருட்கள், பருத்தி , ஆபரணங்கள் முதலானவற்றுக்கு மாற்றாகக் கிழக்கு நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து எதுவும் தேவைப்படவில்லை.
  • இந்த நிலையை இங்கிலாந்தின் ஜவுளி உற்பத்தியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி முதன்முறையாக மாற்றியமைத்தது. அதன்பின் திட்டமிட்டே இந்தியாவில் தொழில்கள் அழிவுக்குத் தள்ளப்பட்டன. உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய இந்தியா, லங்காஷ்யரின் (இங்கிலாந்து) பருத்தி ஆடைத் தேவைக்குச் சந்தையாக மாற்றப்பட்டது.
  • குறைந்த விலையில் இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் குவியலாயின. நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உகந்தமையாக இருந்ததனாலும், சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும் இயந்திரத் தயாரிப்பில் உருவான பொருட்களின் பயன்பாடு ஓங்கி, இந்திய கைவினைப் பொருட்கள் உற்பத்தி நலிவடையக் காரணமாகியது.
  • முதல் முப்பது ஆண்டுகளில் கம்பெனி அரசு பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களை இறக்குமதி வரி ஏதும் விதிக்காமல் தங்குதடையின்றி அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
  • இப்பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை விட விலை குறைவாக இருந்தன. அதே வேளை, இந்திய உற்பத்திப் பொருட்கள் மீது பாதுகப்பு வரிகள் பலவற்றைத் திணித்து பிரிட்டிஷ் சந்தையில் பங்குபெற முடியாமல் செய்தனர். இக்கொள்கை இந்திய நெசவாளர்களையும் வணிகர்களையும் பெரிதும் பாதித்தது.
  • நெசவாளர்கள் பெருமளவில் வேலையிழந்து வாழ்வாதாரத்திற்காக வேளாண்மைக்குச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டனடர். ஏற்கனவே நிலத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மிக அதிக அளவிலான வேளாண் மக்களோடு நெசவாளர்களும் சேர்ந்ததால் நிலத்தின் மீதான அழுத்தம் அதிகமாகி நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
  • இஸ்லாமியர் ஆட்சி முறையை பிரிட்டிஷ் அரசிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்த வில்லியம் பெண்டிங், முந்தைய ஆட்சியே நன்மை பயக்கக்கூடியதாகக் கருதினார். பெண்டிங் எழுதுகிறார்: பல வகையிலும் இஸ்லாமியர் ஆட்சி நம்மை விஞ்சுகிறது; அவர்கள் படையெடுத்துச் சென்ற நாடுகளிலேயே குடியமர்ந்தார்கள்; அவர்கள் உள்ளூர் மக்களோடு மண உறவு கொண்டார்கள், அவர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்கினார்கள்; படையெடுத்தவர்களும், அடிபனிந்தவர்களும் ஒத்தக்கருத்தும், எண்ண ஓட்டமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்லள். இதற்கு மாறாக நம்முடைய ஆட்சியோ நேரெதிரானதாக உள்ளது – விரோதப் போக்கு, சுயநலம், இரக்கமின்மை ஆகியவையே அதன் கூறுகள்.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவுக் கணக்கில் இராணுவ மற்றும் குடிமை நிர்வாகச் செலவுகள் 80 சதவீதமாகவும், எஞ்சிய 20 சதவீதம் மட்டுமே மற்ற துறைகளுக்குப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. வேளாண்மை புறக்கணிக்கப்பட்டது. பாசன வசதி ஏற்படுத்தப்படவில்லை.
  • காவேரி, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் தடுப்பணைகள் கட்டிய ஆர்தர் காட்டன், காலனி அரசு நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்புப்பாதை பதிப்பில் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது நிராகரிக்கப்பட்டது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில் ஏற்பட்ட தொடர் பஞ்சங்கள் , பிரிட்டிஷ் முடியரசை அணைகள் கட்ட சில நடவடிக்கைகள் எடுக்கத்தூண்டின.
  • இரயத்துவாரி முறையின் நோக்கம் சீரழிந்துபோன வஞ்சகமான ஜமீன்தார்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட வேளாண் குடிகளை உருவாக்குவதே என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் பெரிய நிலக்கிழார்களே வகுவடைந்தார்கள்.
  • இரயத்துவாரி பகுதிகளில் குத்தகை விவசாயிகளின் நலன் பற்றி அரசு அக்கறை கொள்ளவில்லை. நில வரியே அரசின் பெரிய வருவாயாக இருந்ததால் கடுமையான முறைகளைப் பின்பற்றி வரி வசூலிப்பது முக்கியக் கொள்கையாக இருந்தது.
  • கம்பெனி அரசால் சென்னையில் நியமிக்கப்பட்ட சித்திரவதை ஆணையம் 1855இல் சமர்ப்பித்த அறிக்கை, வருவாய் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் வரி வசூலிக்கும் சமயங்களில் பயிரிடுவோர் மீது கட்டவிழ்த்துவிட்ட அராஜகங்களை விளக்கமாக எடுத்தியம்பியது. எனினும் சித்திரவதைச் சட்டம் 1858ஆம் ஆண்டுதான் திரும்பப் பெறப்பட்டது.

இங்கிலாந்து மக்களவையின் தேர்வுக்குழு (Select Committee) 1840 ஆம் ஆண்டு அங்கம் வகித்த சார்லஸ் ட்ராவல்யன் இவ்வாறு தன் பார்வையை முன் வைக்கிறார். வங்காளத்தில் முன்பு விளைந்த ஒருவகைப் பட்டு போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்லின் என்ற மெல்லிய துணியை நெய்வார்கள், அது போன்ற ஒன்றை பார்ப்பது அரிதாகிவிட்டது. டாக்கா நகரின் மக்கள் தொகை 1,500,000 லிருந்து 30,000 அல்லது 40,000 என்ற அளவில் விழுந்து விட்டது என்பதோடு அந்நகரை மலேரியா நோயும், காடுகளும் வேகமாக சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மான்செஸ்டர் என்று கருதப்பட்டு வந்த நகரம் இன்று சிறப்பிழந்து வறுமை சூழ்ந்து சிறுத்துவிட்டது. அங்கே நிலவும் அசாதாரணச் சூழல் உண்மையில் படு பயங்கரமானது.

அபே டுபாய் என்ற பிரெஞ்சுக் கத்தோலிக்க சமயப் போதகர் தான் ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்கு முன் 1823ஆம் ஆண்டு இவ்வாறு கூறுகிறார். “கவலையும், இறப்பும் எங்கெங்கும் நிறைந்து சென்னை மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்துமடிகிறார்கள்.”

“வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்ததில்லை. பருத்தி நெசவாளர்களின் எலும்பு இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பரப்புகளை வெளுக்கச் செய்கின்றன” என்று கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் கூறுகிறார்.

பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும்

  • பஞ்சம் இந்தியாவுக்குப் புதியதல்ல என்ற போதும் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அடிக்கடி தோன்றியதோடு மிக கோரமானதாகவும் விளங்கியது. நான்கு பஞ்சங்களே 1800ஆம் ஆண்டிலிருந்து 1825ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தோன்றின. ஆனால் அந்நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில் 22 பஞ்சங்கள் தோன்றின.
  • இவற்றால் ஐம்பது இலட்சத்திற்கும் மேலானோர் இறந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் குடிமைப் பணி அதிகாரியான ரோமேஷ் சந்திர தத் 1901ஆம் ஆண்டில் கணக்கிடும்போது 1860ஆம் ஆண்டிற்கு பின் 10 பெரும் பஞ்சங்களைச் சுட்டுவதோடு, அதனால் ஒன்றரை கோடி மக்கள் இறந்ததாகவும் கூறுகிறார்.
  • தலையிடா வணிகக்கொள்கை (Laissez Faire) என்பதைக் கடைபிடிப்பதாக 1833இல் காலனி அரசு எடுத்த முடிவைப் பஞ்சக்காலத்திலும் பலமாகப் பின்பற்றியது. பல ஆண்டுகளாக மேற்கத்தியக் கல்வி முறையில் கற்ற இந்திய இளைஞர்கள் பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறது என்று வாதிட்டனர்.
  • ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் மூன்றில் ஒருவர் என்ற அளவில் மக்கள் பசியாலும் நோயாலும் செத்து மடிந்ததே அக்கூற்றுக்குச் சான்றாக விளங்கியது. இந்நிகழ்வே தாதாபாய் நௌரோஜியை தமது வாழ்க்கை முழுக்க இந்திய வறுமை பற்றிய ஆய்வை மேற்கோள்ள வைத்தது.
  • சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் (தாது வருடப் பஞ்சம்) , 1876 – 78: இரு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பருவகாலம் பொய்த்ததால் சென்னை மாகாணத்தில் 1876 – 78 ஆம் ஆண்டுகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரிஸ்ஸாவில் பின்பற்றியது போன்றே வைஸ்ராய் கைவிரிக்கும் போக்கை பின்பற்றினார். இதனால் மாகாணத்தில் முப்பத்தைந்து லட்சம் மக்கள் மடிந்தனர்.
  • தோட்டப்பயிர்களின் அறிமுகமும், மலைச் சரிவு நிலப் பயிரிடு முறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் இலங்கை, மொரீசியஸ், பிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், நோட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமான தொழிலாளர் தேவையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள்.
  • கம்பெனி அரசு 1843இல் இந்தியாவில் அடிமை முறையை ஒழித்த பின் ஒப்பந்தக் கூலிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மூறையின் கீழ், தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியமர்த்தப்பட்டு முடிவில் பயணச் செலவு வழங்கப்பட்டவுடன் தாய்நாட்டிற்குத் திரும்ப வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட பல தொழிலாளர்களும் நெசவாளார்களும் சிறிதளவேனும் பணம் ஈட்ட முடியும் என்று எண்ணி இம்முறைக்கு இசைந்தார்கள்.
  • ஆனால் அதற்கு மாறாக அவர்களுடைய நிலை அடிமை முறையைவிட மோசமனதாக விளங்கியது. காலனி அரசு நிலமற்ற விவசாயக்கூலிகளை ஏமாற்றியோ, ஆட்கடத்தல் முறையிலோ கொண்டு வர கண்காணிகள் எனும் முகவர்களை நியமித்தது. இப்புதிய அடிமைமுறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் 150பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாய் முதன்முறையாக 1828இல் தஞ்சாவூர் பகுதியிலிருந்து இலங்கையில் அமையப்பற்ற பிரிட்டிஷ் காப்பித் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.
  • அவர்கள் அனைவரும் பணியை விட்டு தப்பிச் சென்றார்கள். தப்பித்துச்செல்வது குற்றம் என்று கூறிய 1830களின் சட்ட விதிகளையும் இணைத்து நடந்த பணிநியமனம் இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது எனினும் பட்டினி சாவிலிருந்து தப்பிக்கப் பலர் தாமாக முன்வந்து இப்புதிய அடிமை முறையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
  • சென்னையின் ஆளுநர் 1815ஆம் ஆண்டு இலங்கையின் ஆளுநரிடமிருந்து காப்பித் தோட்டங்களில் பணி புரிய கூலித் தொழிலாளர்களைக் கேட்டு கடிதம் ஒன்றை பெற்றார்.
  • சென்னை ஆளுநர் அக்கடிதத்தை தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்ப, அவர் நிலைமையை ஆராய்ந்து அங்குள்ள மக்கள் நிலத்தோடு மிகுந்த பற்றுக்கொண்டவர்களாக விளங்குவதால் ஏதாவது ஊக்கமளிக்காவிட்டால் விஷயமில்லாமல் அவர்களை ஊரை விட்டுக் கிளப்புவது கடினம் என்று பதில் கொடுத்தார்.
  • ஆனால் அப்பகுதியை தாக்கிய இரு பெரும் பஞ்சங்கள் (1833 மற்றும் 1843ஆம் ஆண்டுகளில்) அரசின் எந்தவித ஊக்கமோ, சலுகையோ இல்லாமல் அவர்களை இலங்கைக்குப் புலம் பெயர்த்து காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் இப்பந்த முறையின் கீழ் கூலித் தொழிலாளர்களாக பணியில் அமரக் கட்டாயப்படுத்தின. கிட்ட்த்தட்ட பதினைந்து லட்சம் (14,44,407) மக்கள் 1843-1868ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையிலிருந்து இலங்கைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்றார்கள்.

  • அன்றைய சென்னை மாகாணத்தின் குண்டூர் மாவட்டத்தில் 1833ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் பற்றிய ஒரு நேரடிப் பார்வையாளரின் (ஆங்கிலேயர்) கூற்று வருமாறு: மிகுந்த நெருக்கடியான சூழலில் மனிதர்கள் எத்தகைய அருவருப்பான உணவை உட்கொள்வார்கள் என்பதை யோசிக்கவே மிகவும் அச்சமாக உள்ளது. ஏனென்றால் உயிர் பிழைத்த சிலர் ஒரு செத்த நாயையும் குதிரையையும் பேராசையோடு சுவைப்பதைக் கண்டேன். மற்றொரு சமயம் ஒரு துரதிருஷ்டமான கழுதை கோட்டையை விட்டு வெளியேறிய அக்கணத்திலேயே அதன் மீது ஓநாய்கள் போல் பாய்ந்து முன்னங்கால், பின்னங்கால் வேறுபாடில்லாமல் பாய்ந்து அங்கேயே கொன்று சுவைத்ததைக் கண்டேன்.
  • ஒப்பந்தக் கூலிமுறை: இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான, தண்டனைக்குரிய ஒப்பந்தமுறை ஆகும் இது. இம்முறையின்படி கூலி (இந்திய ஒப்பந்தத் தொழிலாளரை அழைக்கும் பெயர்) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும். பணியில் அலட்சியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ, முடுக்காகத் திரிந்தாலோ உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தாலோ, ஒப்பந்தக் காலம் முடியுமுன் பணியைவிட்டு விலகினாலோ, கூலியை மறுக்கவோ அல்லது சிறைத் தண்டனை வழங்கவோ முடியும். ஓர் அற்பப் பிரச்சனைக்காகக்கூட சட்டச் சரத்துக்களைக்காட்டி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை மறுப்பதோ அவர்களை சிறையிலடைக்கவோ செய்தனர். கூலி உயர்வுக்காவோ அல்லது ஒப்பந்தத்தை முறிக்கவோ செய்திட சங்கம் வைத்துப் போராட ஒப்பந்தக் கூலிச் சட்டம் தோட்டத் தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. பாரதி தனது ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடலில் பெண் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை உருக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

செல்வச் சுரண்டல்

  • ‘வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும்’ (Poverty and UnBritish Rule in India) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நௌரோஜி விளக்குகிறார்.
  • ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் சென்று விட்டார்கள். சந்தேகமில்லாமல் அவர்கள் மிகுந்த ரணங்களை ஏற்படுத்தினார்கள் என்றபோதும் செயலூக்கம் கொண்ட இந்திய சிறிது காலத்தில் மீண்டெழுந்தது.
  • அவ்வாறல்லாமல் படையெடுத்தோர் ஆட்சியாளர்களாக இந்த மண்ணில் குடியமர்ந்த போது அவர்கள் ஆட்சி முறை எவ்வாறு இருந்த போது இங்கிருந்து பொருட்கடத்தலோ , நன்னடத்தை சீர்கேடோ ஏற்படவில்லை.
  • ஆங்கிலேய ஆட்சி இதிலிருந்து வேறுபடுகிறது. பொதுப்பணத்தில் நடத்தப்பட்ட முதற்போர்கள் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தின என்பதோடு காயத்தை ஆறவிடாமல் உயிர் பாய்ச்சும் உதிரத்தை உறிஞ்சும் போக்கில் தொடர் சுரண்டலே நடைபெற்றது.
  • பழைய ஆட்சியாளர்கள் கசாப்புக்காரர் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டினார், ஆனால் ஆங்கிலேயரோ விஞ்ஞான அறிவோடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கத்தியால் நேரடியாக இதயத்தை வெட்டினாலும் , வடு தெரியாதவாறு நேர்த்தையைக் கையாளுவதோடு நாகரீகம், வளர்ச்சி போன்ற சொல்லாடல்களை பயன்படுத்திக் காயத்தை மறைக்கிறார்கள்.

  • நௌரோஜி தன் வாதத்தில் இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் (Home Charges) என்ற வகையில் இங்கிலாந்து போய்ச் சேர்கிறது என்கிறார். உள்நாட்டுச் செலவுக் கட்டணம் கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கியது.
  • கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம்.
  • ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள் போன்றோரின் சம்பளம், சேமிப்பு என்ற வகையில் இங்கிலாந்தில் வரவு வைக்கப்பட்டத் தொகை.
  • இராணுவத்திலிருந்தும், குடிமைப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றோருக்குச் சேர வேண்டிய ஓய்வு ஊதியத் தொகை.
  • இலண்டலின் அமைந்திருந்த ‘இந்திய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் செயலருக்குமான வேண்டிய பெருஞ்சம்பளம்.
  • இந்தியாவில் நிகழ்ந்த போர்களுக்கான செலவுகள், போர் நடத்துவதற்காக வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டி மற்றும் இருப்புப்பதை அமைக்க ஏற்பட்ட செலவுகள்.
  • இங்கிலாந்திற்கு இந்தியா 1837இல் கொடுக்க வேண்டிய கடன் 130மில்லியன் பவுண்டுகளாகும். அது சிறிது காலத்தில் 220 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்த போது அதில் 18 சதவீதம் ஆப்கானீஸ்தானோடும், பர்மாவோடும் போர் நடத்திய வகையில் செலவு செய்த்தாகக் சொல்லப்பட்டது.
  • ஒரு அரசு அறிக்கை 1908 ஆம் ஆண்டில் நிலவரத்தைக் குறிப்பிடும்போது இருப்புப்பாதை பதிக்கும் வகையில் மட்டும் இந்தியாவின் கடன் பாக்கி 177.5 மில்லியன் பவுண்டு என்றது. இந்தியாவில் முதலீடுகள் தொய்வு நிலையை எட்டியபோது பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்தின் தனியாரிடமிருந்து முதலீடுகளை பெற்றுக்கொண்டது.
  • இவ்வாறு பெறப்பட்ட முதலுக்கு உறுதியாக 5 சதவீத வட்டியை ஸ்டெர்லிங்கில் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த வகையில் மட்டுமே இந்தியாவிற்கு 220 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டது.
  • இந்தியாவில் நடந்த செல்வவளக் கடத்தல் (Drain of Wealth) என்று இப்போக்கை வர்ணிக்கும் தாதாபாய் நௌரோஜி இவ்வளங்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்தால் இந்த நாடு செழித்திருக்கும்.
  • மேலும் கூறுகையில் அவர் கஜினி முகமதுவின் கொள்ளை பதினெட்டு முறையோடு நின்றுவிட, பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது என்றார்.
  • ஆர்.சி.தத் மதிப்பீட்டில் மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளில் (1891 – 1901) மொத்த வருவாயான 647 மில்லியன் பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!