Samacheer NotesTnpsc

அரசு Notes 11th Political Science

11th Political Science Lesson 2 Notes in Tamil

2. அரசு

அறிமுகம்

அரசியல் அறிவியல் என்பது அரசைப் பற்றிய ஓர் முறையான படிப்பாகும். நாம் அனைவரும் ஓர் அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் என்பதே பல்வேறு அரசுகள் அடங்கிய ஓர் வடிவமாகும். அரசு என்ற எண்ணம் அல்லது கருத்தாக்கமானது வரலாற்று ரீதியாக பார்த்தோமேயானால் ஒவ்வொரு பகுதியிலும் அதன் அரசியல், பண்பாடு, மதம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் உருவானதேயாகும். இன்று அரசு என்ற சொல் நவீன அரசையே குறிக்கிறது. நவீன அரசானது, ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோரை மட்டும் உள்ளடக்கிய நவீன காலத்துக்கு முன்பிருந்த அரசுகளை விட முற்றிலும் மாறுபட்டதாகும். எனவே, எது அரசு? எது அரசு அல்ல? என்பதைப் பற்றிய ஒரு சரியான புரிதல் அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு அவசியம் ஆகிறது.

ஆம்! நாம் அனைவரும் ஓர் அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம். எது அரசு என்ற சரியான விழிப்புணர்வு இல்லாமலேயே அதனுடன் நாம் தொடர்பும் கொண்டுள்ளோம். சாலை வசதிகள், மருத்துவ சேவை, மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவை நம்மை அரசுடன் இணைப்பவற்றில் சிலவாகும். அரசு நம்மைச் சில செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்துகிறது. சில செயல்களைச் செய்ய விடாமல் தடுக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை நாம் மீறுவோமானால் அது தண்டனைக்கு வழிவகுக்கிறது. எனவே அரசின் சட்டமும் , சுதந்திரமும் அதனாலேயே வகுக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டது என்றே முடிவு செய்ய வேண்டுயுள்ளது. நமது வாழ்வும் , வளமும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்கிறது. எனவே நாம் அரசை விரும்புகிறோமோ இல்லையோ அது நம்மை அதன் மக்களாக இருப்பதற்க்ய் விரும்புகிறது. எனவே நாம் அத்தகைய அரசைப் பற்றி படிக்க வேண்டாமா?

அரசு என்பதன் பொருள் மற்றும் வரையறை

  • அரசு என்பது உலகளாவிய ஏனைய சமூக அமைப்புகளைவிட, மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அரசு இயற்கையாக தோன்றிய அமைப்பாகும். ‘மனிதன் (மானிடர்) ஓர் சமூக விலங்கு என்பதுடன் மனிதர்கள், அரசியல் சார்ந்து இருப்பது அவர்களின் இயல்பன தன்மை என அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
  • மேலும், ‘ஒரு மனிதன் அரசு எனும் அமைப்பிற்குள் வாழ்வது, அவன் மனிதத்தன்மையுடன் வாழ்வது, இவை இரண்டும் ஒன்றே’ என அரிஸ்டாட்டில் கருதினார்.
  • நவீன சொல்லான அரசு (State) என்பது ‘ஸ்டேட்டஸ்’ (Status) எனும் சொல்லில் இருந்து உருவானதாகும். நிக்கோலோ மாக்கியவல்லி (1469 – 1527) எனும் அறிஞர் முதன் முதலில் அரசு எனும் சொற்பிரயோகத்தைத் தமது படைப்புகளில் பயன்படுத்தினார்.
  • மனிதர்கள் வாழ்வியலிற்கான அடிப்படையினை கொண்டுள்ளதனாலேயே அரசு ஒரு இன்றிமையாத அமைப்பாகக் கருதப்படுகிறது. அரசு என்பது மனித சமுதாயத்திற்கு நல்வாழ்வினை ஏற்படுத்தித் தருவதற்காக நீடிக்கிறது.
  • மனிதர்களின் நோக்கங்கள், ஆசைகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவை அரசு அனும் அமைப்பின் மூலமே செயல் வடிவம் பெறுகின்றன. மனிதர்களுக்கு அத்தியாவசியமான அமைப்பாக அரசு கருதப்பட்டாலும் , அரசு என்பதற்கான வரையறை இதுதான் என எந்த இருவேறு சிந்தனையாளர்களும் கருத்தின் அடிப்படையில் ஒத்துபோவது கிடையாது.
  • இந்த கருத்து வேறுபாடு அரசு குறித்த ஆய்வினை மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், ஆர்வமிக்கதாகவும் ஆக்குகிறது. உதாரணமாக, அரசியல் அறிவியலில் சமூக ஒப்பந்தக் கோட்பாடு உள்ளது. தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக் மற்றும் ஜீன் ஜாக்குவஸ் ரூசோ ஆகிய மூவரும் சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என அறியப்படுகின்றனர்.
  • மனிதர்களை அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பது இவர்களின் உள்ளார்ந்த கருத்தாகும். ஆனால் அக்கட்டுப்பாட்டின் எல்லையினைக் குறித்து அம்மூவருக்கு இடையே ஒருமித்த கருத்து என்பது காணப்படவில்லை.
அரசியல் சிந்தனையாளர் மனிதனின் இயல்பு இயற்கையின் நிலை சமூக ஒப்பந்தம்
ஹாப்ஸ் மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறரிடம் ஓநாய்களைப் போன்று பகைமையுடன் இருக்கக்கூடியவர்கள் போர்ச்சூழல் லெவியதான் (ஒற்றை ஆட்சியாளர்)
லாக் மனிதனுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு தனி மனிதச் சொத்துக்கள் பாதுகாப்பானதாக இல்லை பொது நலக் கூட்டமைப்பு
ரூசோ மனிதன் முழுமையான சுதந்திரம் கொண்டவன் ஆனால் அவன் ஒழுக்கக்கேடானவன் பாதுகாப்பு மற்றும் அறநெறி கிடையாது அரசு பொது விருப்பத்தின் வழி நடத்தப்படும்

அரசு –வரையறை

  • “அரசு எனப்படுவது யாதெனில், ஓர் குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டத்தின் மாட்சிமையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும்” என்று வரையறுக்கிறார், – உட்ரோ வில்சம் (Woodrow Wilson)
  • அரசு எனப்படுவது “குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் ஒன்றிணைந்து அவற்றின் நோக்கத்திற்காகவும், அவைகளிம் மகிழ்ச்சியான, மரியாதைக்குரியதுமான வாழ்க்கை மற்றும் முழுமையான சுய சார்பு கொண்ட வாழ்க்கை முறையினை வாழ உதவும் ஓர் அமைப்பு அரசாகும்” என வரையறுத்தார்.
  • அரிஸ்டாட்டில் (Aristotle)
  • அரசு என்பது “பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினை ஆக்கிரமித்து வாழும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களின் பெருந்திரள், தம்மிலும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதலை நியாயப்படுத்தும் அமைப்பாகும்”.
  • ஹாலந்து (Holland)
  • அரசினை வரையறுக்கும் போது ‘மனித வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கினர் ஒரு அமைப்பாக இருந்து செயல்படுவதே அரசு’ என்கிறார்.
  • பர்ஜெஸ் (Burgess)
  • ‘அரசு என்பது அரசாங்க வடிவில் தனிமனிதன் அல்லது சங்கங்கள் இணைவதாகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின்மீது அவர்கள் ஒன்றிணைந்து தங்களை அரசியல் ரீதியாக அமைத்துக்கொள்வது அரசு ஆகும்’.
  • சிட்ஜ்விக் (Sidgwick)
  • அரசு என்பது “ஓர் மக்கள் கூட்டமானது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசித்துக் கொண்டு , அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல் ஒரு முறையான அரசாங்கத்தைப் பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துதல்” என விளக்குகிறார்.
  • கார்னர் (Garner)
  • “அரசு என்பது ஓர் நிலப்பரப்பில் அமைந்த சமுதாயமாகும். அது அரசாங்கம் மற்றும் குடிமக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு இடையேயான உறவுகள் மேன்மையான அதிகாரத்தை வலுக்கட்டாயமாக பயன்படுத்துவதன் மூலமாகத் தீர்மானிக்கப்படுகிறது” என்கிறார்.
  • பேராசிரியர் லாஸ்கி (Prof. Laski)

அரசின் முக்கிய கூறுகள்

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து, அரசு சில அடிப்படை கூறுகளைக் கொண்டிருக்கவேண்டுமென நீங்கள் எளிதாக முடிவு செய்யலாம். அரசு என்பது மக்கள் மீது அளப்பரிய ஆதிக்கம் செலுத்தவல்ல அதிகாரத்துவம் கொண்ட அமைப்புகளின் தொகுப்பாகும். எனவே, அனைத்து நவீன அரசுகளும் ஒருபுறம் அரசின் அளப்பரிய கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரத்தினையும், மறுபுறம் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சலுகைகளையும் தத்தமது அரசமைப்பு சட்டத்தின் வாயிலாக சமன்படுத்துவதைக் காணலாம். எனவே அரசமைப்பு சட்டம் என்பது அரசின் அளப்பரிய அதிகாரத்துவம் செலுத்தும் தன்மையினை கட்டுப்படுத்தும் ஒரு முகமையாக கருதப்படுகிறது.

  • மான்டிவீடியோ எனும் நகரில் 1933-ல் நடைபெற்ற அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளின் மீதான மாநாடு, அரசு என்பதனைப்பற்றிய ஓர் அடிப்படை புரிதலை அளித்தது.
  • அரசு என்பது ஓர் நிரந்தர மக்கள்தொகை, ஓர் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் அந்நிலப்பரப்பின் மீது ஆளுமை செலுத்தும் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்; அரசு அதன் மக்களை கட்டுப்படுத்தவல்லது; பிற நாடுகளுடன் பன்னாட்டு உறவுகளையும் நடத்த வல்லதாகும்.
  • இதன் விளைவாக, ஓர் அரசினை பிற அரசுகள் அங்கீகரித்தல் என்பது ஒரு அரசின் சட்டப்பூர்வ தன்மைக்கு மிக முக்கியமாகும். இறையாண்மை குறித்து கற்கும்போது நீங்கள் மேலும் இது குறித்து தெரிந்துகொள்வீர்கள்.

அரசின் முக்கியக் கூறுகள் எவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்

  • நமது நாடான இந்தியாவை ஓர் அரசாக சிந்தியுங்கள். இந்தியா தன்னை ஒர் அரசு என தகுதியாக்குவதற்கு எவை எல்லாம் காரணங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். முதலில், இந்தியா ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியினைக் கொண்டதாகும்.
  • இந்தியாவில் இந்தியர்களான நாம் வசிக்கிறோம். இந்தியர்களான நமக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது. இந்தியா உலக அரங்கில் ஒரு தகுந்த நிலையுடன் சுதந்திரமாக உள்ளது. நமது நாடு பிற அரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்படாதது. பிற அரசுகளுடனும் இந்தியா ஒப்பந்தம் மேற்கோள்ளலாம்.
  • நமது தூதரகங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளன. அமெரிக்க ஐக்கிய குடியரசில் உள்ள இந்திய தூதரகம் அமெரிக்காவிலுள்ள இந்தியா என்றே அறியப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகம், இந்தியாவில் உள்ள பிரான்சு என்றே அழைக்கப்படுகிறது.

2011 மக்கள் தொகைக்கணக்கெடுப்பு

  • 1948-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்கணக்கெடுப்புச் சட்டத்தின் படியும் அரசமைப்பின் வழிகாட்டுதலின் படியும் சுதந்திரத்திற்கு பிந்தைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • கடைசியாக 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை விவரக் கணக்கெடுப்பில் வீடுகளின் பட்டியல், வீடுகளின் எண்ணிக்கை ஆகியவைகளை முதன்மைப்படுத்தி புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. ஒரு வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, அதன் தலைவர், அவ்வீட்டின் வசதிகள், அதன் உள்ளிருப்பு , உடைமைகள் ஆகியன அடிப்படையிலும், அவ்வீட்டின் தரை, சுவர் மற்றும் மேற்கூரை ஆகியவற்றின் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் கணக்கு எடுக்கப்பட்டது.
  • மேலும் குடும்பத்தலைவரின் பெயர், பாலினம், வகுப்பு, வீட்டின் உரிமையாளர், வசிப்பிட அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதியர்களின் எண்ணிக்கை போன்றவைகளும் கணக்கெடுக்கப்பட்டது. கணக்கெடுப்பாளர்கள் வீட்டில் அமைந்துள்ள வசதிகள், குடிநீர் கிடைக்கும் முறை, கழிவறை, கழிவு நீர் வெளியேறும் வழி, குளியலறை வசதி, சமையலறை, சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் போன்ற தகவல்களையும் திரட்டியுள்ளனர்.
  • கணக்கெடுப்பாளர்கள் மக்களின் வங்கிப் பயன்பாடுகள் மற்றும் வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப்பெட்டி, கணிப்பொறி, வலைதள இணைப்பு, தொலைபேசி, மிதிவண்டி, உந்து வண்டி, மகிழுந்து போன்ற சொத்துக்களையும் கணக்கெடுத்தனர்.

மக்கள் தொகை

  • மக்கள்தான் அரசை உருவாக்குகிறார்கள். அரசுக்கு மக்கள் தொகை அவசியமாகும். முற்காலச் சிந்தனையாளர்கள் மக்கள் தொகையின் அளவினை விவாதத்திற்கு உள்ளாக்கினர். தத்துவஞானி பிளாட்டோவின் கூற்றுப்படி ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று அறுதியிட்டார்.
  • அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி மக்கள் தொகையினை துல்லியமாகக் கூறாமல் , மிகக்குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கக்கூடாது என்று மட்டும் அறிவுறுத்தினார். அதாவது ஓர் அரசு தன்னிறைவு பெறுவதற்கு ஏற்றவகையிலும், அதே நேரத்தில் திறம்பட ஆட்சி செய்வதற்குத் தகுந்த வகையிலும் மக்கள் தொகை இருக்க வேண்டும் என அரிஸ்டாட்டில் கருதினார். ரூசோ ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாக இருத்தல் வேண்டும் என்று கூறினார்.
  • பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற முற்கால சிந்தனையாளர்கள் சிறிய கிரேக்க நகர அரசுகளான ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டு மக்கள் தொகை எண்ணிக்கையினை முடிவு செய்தனர்.
  • நவீன கால அரசுகள் மக்கள் தொகை எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. இந்தியாவின் 2011–ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 121.02 கோடி மக்களைக் கொண்டுள்ளது.
  • பிளாட்டோவின் கருத்துப்படி ஒரு இலட்சிய அரசின் மக்கள்தொகை என்பது 5040 ஆகும். இந்த 5040 என்ற எண்ணிக்கையினை ஏன் அவர் தெரிவு செய்தார் தெரியுமா?

இதற்கு முக்கிய காரணம் இந்த 5040 என்ற எண்ணை 1 முதல் 12 வரையிலான எந்த எண்ணாலும் வகுக்கலாம். உதாரணமாக, இந்த எண்ணினை 12-ஆல் வகுத்தால் மீதம் உள்ளது 2 என்ற எண் மட்டுமே! நெருக்கடியான காலங்களில் மக்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குரிய தனித்தனி அறிவிப்புகள் தருவதற்கு வசதியாகவே இந்த 5040 என்ற இந்த மக்கள் தொகை எண்ணிக்கை பிளாட்டோவினால் தேர்வு செய்யப்பட்டது.

நிலப்பரப்பு

  • நிலப்பரப்பு இல்லாமல் அரசு இருக்கமுடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. மக்கள் வசிக்க இருப்பிடம் அதாவது நிலப்பகுதி அவசியமாகிறது. மேலும் மக்கள் தங்களை சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் தயார்படுத்திக்கொள்ள நிலப்பகுதி தேவையாகிறது.
  • நிலப்பகுதி என்பது அந்நாட்டின் நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நவீன அரசுகள் அவற்றின் நிலப்பகுதி அளவில் வேறுபடுகின்றன. குடியுரிமைக்கு நிலப்பகுதி முக்கியமானதாகும்.
  • மக்கள் தொகை என்ற கூற்றினைப் போல் நிலப்பகுதி என்பதற்கு குறிப்பிட்ட அளவு என்பது கிடையாது. சிறிய மற்றும் பெரிய நிலப்பகுதிகள் கொண்ட அரசுகள் உள்ளன.
  • ‘நிலப்பரப்பின் மீதான இறையாண்மை அல்லது அரசின் மேலான தன்மை’ என்பது அந்தந்த அரசின் எல்லைப் பகுதிக்குள் சுதந்திரமாகவும், வெளியிலிருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதும் தான். இதுவே நவீன அரசுமுறை வாழ்வின் அடிப்படைக் கொள்கையாகும் என பேராசிரியர் எலியட் கூறுகிறார்.
  • இந்திய அரசின் நிலப்பகுதி 32,87,263 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது உலக அளவில் கிட்டத்தட்ட 2.4% நிலப்பரப்பு ஆகும். இந்திய அரசமைப்பின் முதல் உறுப்பு இந்தியாவின் நிலப்பரப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம்

  • அரசாங்கம் என்பது அரசின் செயல்படக்கூடிய ஓர் முகமையாகும். அரசாங்கம் என்பது அரசின் அரசியல் அடிப்படையிலான ஒருங்கிணைப்பாகும்.
  • பேராசிரியர் அப்பாதுரை (A.Appadurai) “அரசின் விருப்பங்களை உருவாக்கி வெளிப்படுத்தி உடன் நிறைவேற்றும் ஓர் முகமையாக அரசாங்கம் விளங்குகிறது” என குறிப்பிடுகிறார்.
  • சி.எப்.ஸ்ட்ராங் (C.F.Strong) என்பவர், “சட்டத்தை இயற்றி அதனை அமல்படுத்த அரசுக்கு மேலான அதிகாரம் தேவைப்படுகிறது” என்று கூறுகிறார்.
  • அரசாங்கம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட அமைப்பாகும். அரசாங்கத்தினை வழி நடத்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அவர்கள் மாறுவதும் இயல்பென்றாலும், மாறாதது அரசாங்கத்தின் கட்டமைப்பாகும்.
  • மக்கள் அவர்களுக்குரிய அதிகார பீடத்திற்கு வருவதற்கு முன்னரும் அரசு இருந்தது. அவர்கள் தங்களின் அதிகாரத்தினின்று விலகிய பின்னரும் அரசு இருக்கும்.

இறையாண்மை

  • இறையாண்மை என்பது ஓர் அரசின் நான்காவது அடிப்படை கூறாகும். இறையாண்மை என்பதன் பொருள் மேலான மற்றும் இறுதியான சட்ட அதிகாரம் என்பதாகும். எந்த சட்ட அதிகாரமும் இறையாண்மையை விட உயர்ந்ததாக இருக்க முடியாது.
  • நவீன அரசுகள் தோன்றும்போது அதனுடன் இறையாண்மை என்ற கருத்தும் உருவாக்கப்பட்டது. இறையாண்மை எனும் சொல் இலத்தீன் மொழிச்சொல்லான ‘சூப்பரானஸ்’(Superanas) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருளாகும்.
  • தொன்றுதொட்டு வரும் புரிதலின்படி இறையாண்மை என்பது முழுமையானது, நிரந்தரமானது, அனைவருக்குமானது, பிரிக்க முடியாதது, தனித்துவமானது மற்றும் மாற்றித்தர இயலாதது என்பன போன்ற பண்புகளை உள்ளடக்கியுள்ளது.
  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் போடின் (Jean Bodin) (1530 – 1597) என்பவர் நவீன இறையாண்மையக் கோட்பாட்டின் தந்தையாவார். ஹெரால்சு லாஸ்கியின் (Harold Laski) கருத்துப்படி ‘அரசு இறையாண்மை உடையதாக இருப்பதால்தான் பிற மனிதக் கூட்டமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது’.

நிலப்பரப்பின் மீதான இறையாண்மையின் பெயரால் மக்கள் ஒரு அரசின் நிலப்பரப்பிலிருந்து மற்றொரு அரசின் நிலப்பரப்பிற்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நிஈங்கள் இணையத்தைப் பயன்படுத்தி மற்றொரு நாட்டில் உள்ளவருடன் தொடர்பு கொள்ள முடியும். அரசின் பிரதான உரிமையான இறையாண்மையின் பார்வையில், இதனை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? முகநூல் (Facebook), கீச்சகம் (Twitter) மற்றும் வலையொளி (YouTube) போன்ற சமூக வலைதளங்கள் சில நாடுகளில் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பதை ஆராயவும்.

சமுதாயம், அரசு மற்றும் அரசாங்கம்

சமுதாயம், அரசு மற்றும் அரசாங்கம் என்பதன் பொருள் என்ன என்று நாம் ஆராய்வோம். மேலும் அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் காண்போம்.

சமுதாயம், அரசு, அரசாங்கம் – இவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளன?

நாம் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் குடும்பம், சமுதாயம் மற்றும் அரசு எனும் அமைப்புகளில் வாழ்கின்றோம். இதற்கென்ன பொருள்? சமுதாயமும், அரசும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன? அரசு மற்றும் சமுதாயத்துடன் அரசாங்கத்திற்கு என்ன தொடர்பு?

  • மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த வரலாற்று ரீதியிலான பண்டைய நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஒரு இடத்தில் நிலையாய் குடி கொண்டு வாழும் நிலைக்கு வந்த பின்பு, ஒவ்வொருவரும் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினர்.
  • குடும்பங்களின் செறிவு நாம் இன்று காணும் சமுதாயமாகவும் ஆனது. தனிநபர்கள் , தங்கள் உளவியல் தேவைக்காக மற்றவரை சார்ந்து இருந்ததினால் குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்து வந்தனர்.
  • குடும்பங்கள், தங்கள் பாதுகாப்பிற்காகவே சமூகம் எனும் கட்டமைப்பின் கீழ் வந்தன. இவ்வாறு அமையப்பெற்ற சமூகங்கள், தங்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக சமுதாயம் எனும் அமைப்பினைத் தோற்றுவித்தன.
  • சமுதாயத்தில் வாழ்பவருடைய தேவை அதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கூட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. இவ்வாறே தனித்தனியாக ஒவ்வொரு மனிதரும் தத்தமது அன்றாட உணவிற்காக உழைப்பது, பொருள் உற்பத்தியைத் தோற்றுவிக்கும் .
  • இதனாலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், அவற்றின் மூல நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு சந்தை மற்றும் வாணிபம் எனும் அமைப்புகள் உருப்பெற்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் , அவற்றின் மூல நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு சந்தை மற்றும் வாணிபம் எனும் அமைப்புகள் உருப்பெற்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் போதும், வர்த்தகம் செய்யப்படும்போதும், பலம் பொருந்திய மனிதர்களின் கட்டுப்பாட்டில் அவை செல்லும் சாத்தியமும் உள்ளது. அவ்வாறு சமுதாயமானது வலியோரின் ஆளுகைக்குள் வருமாயின், அது சமுதாயத்தின் சிதைவிற்கு வழிவகுக்கும்.
  • சமுதாயம் சீரழிந்து போகும் போது, அதன் தாக்கம் சமூகக்குழுக்களின் மீதும் ஏற்படும். சமூகங்கள் சிதைவு பெறும்போது குடும்பங்களும் சிதையத்தொடங்கும். குடும்பங்கள் சிதையத்துவங்கினால், ஒவ்வொருவரும் துன்புற நேரிடும். இவ்வாறு ஒரு சரி செய்ய இயலாத சீரழிவைத் தடுக்கும் பொருட்டே, மனிதர்கள் ஒன்றுபட்டு, பகுத்தறிவின் வழிகாட்டுதலின் பேரில் அரசு எனும் மாட்சிமை பொருந்திய வலிமையோடு இருக்கக்கூடிய அமைப்பின் அவசியத்தினை உணர்ந்தனர்.
  • மனிதர்கள் ஒருவருக்கொருவர் தம்மை அழித்துக்கொள்வதிலிருந்து அவர்களை காக்கும் நோக்கிலேயே அதிகாரங்கள் குவிக்கப்பட்டு அவ்வதிகாரங்களை நிர்பந்திக்கும் அதிகாரமும் கொண்ட ‘அரசு’ எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • நவீன அரசுகளில் மனிதர்கள் மீதான இக்கட்டுப்பாடுகள், சட்டத்தின் வழியாக உரிய விதிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களாட்சியில் இச்சட்டங்கள் சட்டமன்றத்தால் இயற்றப்படும்.
  • இயற்றப்பட்ட சட்டங்கள், செயலாட்சி துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும், நீதிமன்றத்தால் இச்சட்டங்களின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் நீதிபரிபாலனத்தன்மை ஆகியன ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன.
  • சட்டமியற்றுதல், இயற்றிய சட்டத்தை அமலாக்குதல் மற்றும் அதற்கு விளக்கமளித்தல் ஆகியன அரசாங்கத்தின் பணிகளாகும். ‘அதிகாரப் பிரிவினை’ என்ற தலைப்பின்கீழ் நீங்கள் மேலும் இது குறித்து அறியலாம்.

அரசு மற்றும் சமுதாயத்திற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்

சமுதாயம் என்பது தனி நபர்கள், குடும்பங்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும். ஆரம்பகால அரசியல் சிந்தனையாளர்கள் அரசு மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றே என்று கருதினர். அரசு என்பது சமுதாயத்தின் பகுதியாகும். எனினும் அதுவே சமுதாயத்தின் வடிவமாகிவிடாது.

அரசு சமுதாயம்
சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு தோன்றியது. சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது.
அரசின் எல்லை வரையறுக்கப்பட்டது. சமுதாயத்தின் பரப்பெல்லை பந்ததாகும்.
அரசுக்கு ஒரு நிலையான நிலப்பரப்பு உண்டு. சமுதாயத்திற்கு என நிலையான நிலப்பரப்பு இல்லை.
அரசு என்பது அரசியல் சார்ந்த அமைப்பாகும். சமுதாயம் என்பது ஒர் சமூக அமைப்பாகும்.
அரசிற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளது சமுதாயத்திற்கு அத்தகைய அதிகாரங்கள் எதுவும் இல்லை.
  • அரசு மற்றும் சமுதாயத்தின் உறுப்பினராகும் தன்மை என்பது ஒன்றேயாகும். ஆனால் அவை இரண்டும் தத்தமது நோக்கங்களில் மாறுபடுகின்றன. அரசு என்பது ஒரு மிகப்பெரிய ஆனால் ஒரே ஒரு நோக்கத்திற்காக உள்ளது.
  • ஆனால் சமுதாயம் , எண்ணிலடங்காத நோக்கங்களுக்கானதாகும். அவற்றில் சில பெரிய நோக்கங்கள் மற்றும் சில சமயம் சிறிய நோக்கங்கள் உள்ளன. சமுதாயத்தின் நோக்கங்கள் ஆழ்ந்ததாகவும் , பரந்ததாகவும் காணப்படுகின்றன.
  • அரசு என்பது சட்டம் சாந்த ஒற்றை அமைப்பாகும். ஆனால் சமுதாயம் என்பது பல அமைப்புகளை உள்ளடக்கியதாகும். அரசு மக்களின் மீது தன் அதிகார வலிமையை பயன்படுத்தி அவர்களை கீழ்ப்படிய வைக்கிறது.
  • ஆனால் சமுதாயமோ மக்களின் மனமுவந்த செயல்பாட்டையே ஊக்குவிக்கிறது. சமுதாயத்தின் பல்வேறு தேவைகளே அது இசைவான வழியில் செயல்படும் முறையை தேவையானதாக்குகிறது.
  • சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகள் இருப்பதால், ஒருவர் தான் கட்டாயப்படுத்தப்படுவதாக கருதினால் அதிலிருந்து விடுபட்டு வேறு அமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. நிர்ப்பந்தத்தின் மூலமாக அமைப்புகள் செயல்பட முடியாது.
  • இதன் வாயிலாக, வலியுறுத்தும் அதிகாரமற்ற அரசும், மக்களை அவர்களின் சுய விருப்பத்துடன்
  • தன்னகத்தே வைத்துக் கொள்ளும் தூண்டல் இல்லாத சமுதாயமும் வீழ்ச்சியடையும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசாங்கம்

பேச்சு வழக்கில் அரசும், அரசாங்கமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை ஆகும். பின்வரும் அட்டவணையிலிருந்து அரசிற்கும், அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறியலாம்.

அரசு அரசாங்கம்
அரசு என்பது மக்கள் தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாகும். அரசாங்கம் என்பது அரசின் நான்கு கூறுகளில் ஒன்றாகும்.
அரசு மூல அதிகாரங்களை பெற்றதாகும். அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவையாகும்.
அரசு என்பது நிரந்தரமானது என்பதுடன் என்றென்றைக்கும் நீடித்திருப்பதாகும். அரசாங்கம் என்பது தற்காலிகமானதாகும். மக்கள் விருப்பத்தின் பேரில் அரசாங்கங்கள் மாற்றப்படலாம்.
அரசு என்பது காண முடியாததும், புலனாகாததும் ஆகும். அரசாங்கம் என்பது உறுதியானது மற்றும் காணக்கூடியது.

நவீன அரசு

நவீன அரசைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் உங்களுக்கு நவீனத்துவம் பற்றிய புரிதல் வேண்டும். நவீனத்துவ, என்றால் என்னா? நவீன அரசு என்றால் என்ன?

  • நவீனத்துவம் என்பதனை வரலாற்று அடிப்படையில் பார்த்தால் மரபுகளை கேள்விக்குட்படுத்தி அதன் மூலம் காலம் தொட்டு வந்த நம்பிக்கைகளை, பழக்கங்களை, சமூக பண்பாட்டு நெறிமுறைகளை நிராகரிக்கும் காலகட்டம் நவீனத்துவமாகும்.
  • தனி மனிதத்தத்துவதிற்கு முன்னுரிமை, சமத்துவம், சுதந்திரம், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அறிவியல் மனப்பாங்கினை வளர்த்தல் போன்றவற்றிற்கு நவீனத்துவம் அடித்தளமிட்டது.
  • நவீனத்துவம் மக்களை விவசாயம் சார்ந்த நிலையிலிருந்து தொழில்மயம், நகரமயம், மதச்சார்பின்மை நோக்கி வழி நடத்தியது. இந்த அறிவார்ந்த நகர்வானது சமுதாயம், அரசு மற்றும் அரசாங்கம் போன்றவற்றை பற்றிய புரிதல் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • உதாரணமாக, இந்திய சமுதாயத்தை சீர்திருத்த இராஜாராம் மோகன்ராய் மேற்கொண்ட முயற்சிகள் போன்றவை இந்திய சிந்தனையாளர்கள் மீது மேற்கத்திய நவீனத்துவத்தின் தாக்கம் நேரடியாக இருந்ததற்கு சான்றாகும்.
  • அரசியல் அறிவியல் பாடத்தில் நவீனத்துவமானது அரசு, சுதந்திரம், சமத்துவம், நீதி முதலிய கருத்தக்கங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, தொன்றுதொட்டு புரிந்து கொள்ளப்பட்ட அரசியல் சொற்களான தேச பக்தர்கள், புரட்சி, உரிமைகள், சலுகைகள், இறையாண்மை ஆகியவை அவற்றின் வரலாற்று பின்னணிக்கு மாற்றாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
  • இதே போன்று கிரேக்க நகர அரசின் காலத்தில் அரசு என்பது முற்றிலும் வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட நவீன அரசு மெஏற்கத்திய ஐரோப்பாவில் புது வடிவம் பெற்ற அரசியல் நிறுவனமாக இடைக்காலத்தில் தோன்றியது.
  • நவீன அரசின் அறிவுப் பூர்வமான அடித்தளம் பெரும்பாலும் 1648-ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட “வெஸ்ட் பாலியா உடன்படிக்கை” (Treaty of Westphalia)யின் விளைவு என்றே கூறப்படுகிறது.
  • நவீன அரசின் சிந்தனை 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனிமயமாக்கம் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின் சுதந்திரம் பெற்ற காலனி நாடுகள் இன்றளவும் காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய (Post – Colonial States) அரசுகள் என அறியப்படுகின்றன.
  • இவ்வாறு சுதந்திரம் பெற்ற தெற்காசிய நாடுகள் காலனியாதிக்க காலத்திற்குப் பிந்தைய அரசுகள் என்னும் குடையின் கீழ் வருகின்றன. இவ்வாறு உலகெங்கிலும் உள்ள காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய அரசுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பீடு செய்யலாம். இவ்வாறான ஒப்பீடுகள் அவ்வரசுகளின் ஆட்சி முறைமைகளின் சாதக பாதகங்களை அறிந்துகொள்ள உதவும். அதன் மூலம் அவ்வரசுகளின் ஆட்சி முறைமைகளை மேம்படுத்த இயலும்.

நவீன அரசுகளின் பணிகள்

  • நவீன அரசு என்பது வளர்ச்சியடைந்த அரசு ஆகும். அது தனது மக்களை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்ள முயல வேண்டும். அரசு தனது எல்லைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். தனது எல்லைகளுக்குள் வெளிநாட்டவர் எவரும் உட்புகாத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சந்தையின் தேவைகளனைத்தும் நன்கு கட்டமைக்கப்பட்ட பேரியல் பொருளாதார கட்டமைப்பு மூலம் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
  • ‘முதலில் மக்கள் நன்மை’ என்பதே அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். நவீன அரசின் ஆளுகை கொள்கை என்பது அதன் செயல்கள் மக்களின் நலனை பேணுவதாக இருக்கிறதா என்பதாகும். இவ்வாறு அத்தியாவசிய சேவைகளை செய்துதரும் அமைப்பாக நவீன அரசு இயங்குகிறது. நவீன அரசு கீழ்க்காணும் மூன்று முக்கிய செயல்பாடுகளை மையமாக கொண்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இடர்காப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள்

அரசுகள் இன்றைய உலகளாவிய சூழலில் ‘இடர்காப்பு’ என்பதனை பன்மடங்கான நிலைப்பாடுகளில் பொருள் கொள்கின்றன. மனித இடர்காப்பு போன்ற சொற்கள் குடிமக்களின் நலனே முதன்மையானது என்பதையே குறிக்கிறது. தத்துவஞானி இம்மானுவேல் காண்ட் அவர்களின் “நிரந்தர அமைதி” எனும் சிந்தனையின் படி உலக நாடுகள் ஒன்றிணைந்து ‘பன்னாட்டு சங்கம்’ எனவும் பின்னாளில் ‘ஐக்கிய நாடுகள் சபை’ எனவும் ஒன்றிணைந்து இடர்காப்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை விவாதித்து உலக அமைதியை பேணுகின்றன.

பொருளாதார பணிகள்

அரசியல் முறைமையின் பொருளாதார செயல்பாடுகளில் தலையிடவேண்டிய கடமையில் நவீன அரசுகள் உள்ளன. மக்கள் தங்களின் திறனை உணர்ந்து மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். செயல் திறன் குறித்த அமெரிக்க அறிஞர் மார்த்தா நூசுபாம் (Martha Nussbaum) அவர்களின் கருத்து மற்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் (Amartya Sen) அவர்களின் செயல் திறன் அணுகுமுறை குறித்த சிந்தனைகளை அறிய முயற்சிக்கவும்.

நலிவுற்ற பிரிவினர் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாத்தல், லாபம் ஈட்ட இயலாத துறைகளில் முதலீடு செய்வது போன்றவை நவீன அரசின் பொருளாதார பணிகளாக கருதப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை வழங்குதல்

‘கருவறையிலிருந்து கல்லறை வரை’ நவீன அரசு அதன் குடிமக்களை கவனித்துக்கொள்ள வேண்டும். உணவு, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகப்பு ஆகியன அரசின் முதன்மையான பொறுப்புகளாகும். இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கங்களின் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த திசையில் இருப்பதை நீங்கள் காணலாம். தமிழக அரசாங்கத்தின் மதிய உணவு திட்டம் மற்றும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் ஆகியவை நாட்டின் பிற பகுதிகளில் பின்பற்றப்படுவது இதற்கு தக்கதொரு சான்றாகும். நவீன அரசு மக்களின் நலனைப் பேணுவதால் “மக்கள் நல அரசு” எனும் மற்றுமொரு கருத்தாக்கம் தோன்றியது.

மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் (Concept of Welfare State)

  • இந்திய அரசமைப்பின் ‘அரசு வழிகாட்டி நெறிமுறைகள்’, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் நல அரசு பற்றிய சிந்தனையை பிரதிபலிப்பதை கவனித்து இருக்கிறீர்களா?
  • குடிமை உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அம்சங்கள் அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் வைக்கப்பட்டுள்ளபோது, சமூக, பொருளாதார மேம்பாட்டினை வலியுறுத்தும் வழிமுறைகள் நான்காம் பகுதியில் ‘அரசு வழிகாட்டி நெறிமுறைகள்’ எனும் தலைப்பின் கீழ் அமைந்துள்ளது எதனால் என்று அறிவீர்களா? அதன் காரணமென்ன? அரசமைப்பில் உள்ள அடிப்படை உரிமையின் பகுதியாக பொருளாதார உரிமைகள் ஏன் இல்லை?
  • குறைந்தபட்ச மக்கள்தொகை மற்றும் அதே நேரத்தில் வளங்கள் மிகுதியாக இருப்பது, மக்கள் நல அரசு மாதிரியின் (Welfare State Model) வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணமாகும்.
  • ஸ்கேண்டிநேவியா நாடுகள் மக்கள் நல அரசிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. இந்தியாவின் அரசமைப்பு ஓர் நல அரசினை நிறுவ முயல்கிறபோதிலும், வளங்கள் தோதாமை, அதே சமயம் பெருகும் மக்கள்தொகை ஆகியவை மக்கள் நல அரசின் இலக்குகளை எட்ட தடையாக உள்ளது.
  • ‘மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டதாகும். மக்கள் நல அரசிக், அரசாங்கத்தினுடைய முதன்மை சிந்தனை என்பது மனித வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றவேண்டும் என்பதாகும்.
  • குடிமக்களின் நல்வாழ்விற்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டினை பேணுதல் நல அரசின் பங்காகும். குடிமக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன் பின்வருவனவற்றின் அடிப்படையிலானதாகும்.
  1. வாய்ப்புகளில் சமத்துவம் எனும் கொள்கை
  2. பொருளாதார வளங்களை சமமாக வழங்குவதற்கான கொள்கை
  3. குறைந்தபட்ச நல் வாழ்க்கையை தங்களால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதவர்களுக்கு, அவ்வாறான வாழ்க்கையினை ஏற்படுத்தித் தருதல் ஆகியனவாகும்.
  • சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஒரு காலனித்துவ அரசாக இருந்தது. இந்தியர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இருந்தனர். நம் நாடு சுதந்திரம் அடைந்ததும், நாம் நமது அரசமைப்பினை உருவாக்கினோம். நமது அரசமைப்பானது மேற்கத்திய மக்கள் நல அரசின் சிந்தனைகளை உள்வாங்கியதாகும்.

மென்மை அரசு என்ற கருத்தக்கம் (Concept of Softstate)

  • நோபல் பரிவு பெற்ற பொருளாதார நிபுணர் குன்னர் மிர்டால் (Gunnet Myrdal) மேற்கத்திய அரசுகளுடன் ஆசிய அரசுகளை ஒப்பிடும்போது, ஆசிய அரசுகளில் நிலவும் சமுதாய ஒழுங்கீனங்கள் ஆசிய அரசுகளை மென்மை அரசுகளாக ஆக்குவதை கண்டறிந்தார்.
  • சமூக ஒழுங்கீனம், ஊழல் மற்றும் மிகப்பலவீனமாக சட்ட அமலாக்கம் ஆகியன மென்மை அரசின் முக்கிய தன்மைகளாகும்.
  • முழு வளர்ச்சி பெறாத ஆளுமை திறன்கள் கொண்ட காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகள் ‘மென்மை அரசுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  • தரநிலைகளை கடைபிடிக்காமை, ஒழுக்கத்தை பராமரிக்க இயலாமை, சட்ட அமலாக்கம் செய்ய இயலாமை போன்றவை நமது நாட்டினை மென்மை அரசாக மாற்றிவிடுகிறது. தனது மக்களாட்சி பண்புகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள ஒரு மென்மை அரசால் இயலவே இயலாது.

மிகை மேம்பாட்டு அரசு என்ற கருத்தாக்கம் (Concept of Over Developed State)

  • தெற்காசிய அரசுகள் பெரும்பாலும் நவீன் மக்களாட்சி தத்துவத்தின் படி இயங்கும் அரசுகளாகும். ஆனால், அவை வளர்ச்சியில் மேற்கத்திய நாடுகளை விட பின் தங்கி இருப்பதன் காரணம் யாது? இந்நாடுகளின் ஆளுகை அமைப்புகளான நாடாளுமன்றம், அதிகாரவர்க்கம், திட்டமிடும் துறைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டு நிலவியல் சூழலுக்கேற்ப காலனியாதிக்க காலத்திலேயே மாற்றப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வளர்ச்சி என்பது மிக மந்தமாகவே இருப்பதை காண முடிகிறது.
  • வளர்ச்சி வேகம் மிக மெதுவாகவே இந்நாடுகளில் இருப்பதற்கான காரணம் என்ன? இதனை எடுத்துக்காட்டி ஹம்சா ஆலாவி (Hamza Alavi) பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஆளுகைத்தன்மை நெருக்கடியினை விளக்குகிறார். காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகளின் செயல்படாத தன்மையினை விளக்கும்பொருட்டு மிகை மேம்பாட்டு அரசு எனும் கருத்தாக்கம் பயன்படுகிறது. காலனியாதிக்கக் காலத்தின் போதும், அதற்கு பின்னரும் தொடரும் அதிகாரவர்க்க ஆளுகைக்கட்டமைப்பு மூலமாக ‘மிகை மேம்பாட்டு அரசு’ புரிந்துகொள்ளப்படுகிறது.
  • காலனியாதிக்க கால அடிமைத்தளையில் இருந்து இந்நாடுகள் விடுபட்டாலும், புதிதாக பெறப்பட்ட அரசியல் சுதந்திரத்தின் தாக்கத்தினை அந்நாடுகளில் உள்ள நிர்வாகக்கட்டமைப்புகள் எந்த வகையிலும் உள்வாங்கவில்லை.
  • ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் இரட்டை வேடமிட்டு, தங்கள் நாட்டு ஆரோக்கிய அரசியலினை தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள காலனியாதிக்க நாடுகளுக்கு வழங்கவில்லை. அவர்களின் நாடுகளில் அரசுகள் என்பவை குடிமக்களின் அரசியல் வாழ்வு, சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் போன்ற உரிமைகளை நிலைநாட்டி மக்களுக்கு அதீத சுதந்திரம் வழங்கிய அமைப்பாகக் கருதப்பட்டன.
  • மக்கள் அரசினை தங்கள் ‘செல்ல பிராணி’ போன்று கருதினர். ஆனால், அதே ஐரோப்பியர்கள் அதற்கு நேர் எதிராக, தங்களின் காலனியாதிக்க நாடுகளில் அரசமைப்புகள் கொடூரமானதாக இருக்குமாறு வடிவமைத்தனர்.
  • அதிகாரக் குவிப்பு என்பது பெரும் அளவில் காலனியாதிக்க அரசின் வசம் இருந்தது. இதனால் காலனியாதிக்கம் செய்யப்பட்ட நாடுகளில் இருந்து மிக எளிதாக செல்வங்களை சுரண்டி அவர்கள் தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முடிந்தது.
  • காலனியாதிக்க நாடுகளில் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அதிகாரவர்க்கம் இதற்கு மிக சிறப்பாக உதவி புரிந்தது. நாட்டைச் சுரண்ட உதவிய இவ்வகை அமைப்புகளை நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், பெரும் மரபாகவே கருதி பிந்தைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தனர். அதிகாரவர்க்கமும் தன்னை பெரிய அளவில் உருமாற்றமும் செய்துகொள்ளவில்லை.
  • சமுதாயம் மற்றும் அதன் பொருளாதாரம் நவீனமயமாக்கப்படாத நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் மாட்சிமை பெற்ற அமைப்பான அரசு மட்டும் நவீனமாக்கப்பட்டால், அது அரசையும் அதன் அங்கமான சமுதாயத்தினையும் ஒன்றோடொன்று தொடர்பில்லாத இரு வேறு கூறுகளாக ஆக்கி விடும்,
  • இது அரசு இயந்திரத்திற்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இடைவெளியினை ஏற்படுத்திவிடும். இவ்வகையான பிரதிநிதித்துவ மக்களாட்சியில் , மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பது மக்களால் தீர்மானிக்கப்படமாட்டாது.
  • அதற்குமாறாக செல்வக்கு மிக்க ஒரு சிலரால் மட்டுமே தீர்மானிக்கப்படும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் இத்தகைய தன்மையினை இராணுவ அதிகாரவர்க்க ‘இராணுவ அதிகாரவர்க்க சிறுகுழுவாட்சி’ எனும் சொற்றொடர் மூலம் ஹம்சா ஆலாவி விளக்குகிறார்.
  • ‘இராணுவ அதிகாரவர்க்கத்தின் சிறுகுழுவாட்சி’ என்பது இந்தியாவின் உரிமங்கள் ஆட்சியை (License Raj) ஒத்துள்ளதாகும். காலனியாதிக்க கால அனுபவத்தில் இருந்து இந்தியாவில் தொடரும் அதிகாரக்குவிப்பு குறித்த கவலைகள் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு வருவதைக் காணலாம்.

தமிழ்த்திரைப்படம் ‘தண்ணீர் தண்ணீர்’

தமிழ்நாட்டில் ஒருசிறிய கிராமம் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. அப்பிரச்சினையை தீர்க்க கிராமத்தவர்கள் முயற்சிக்கும் போது அவர்கள் அதிகாரவர்க்கத்தினரின் கைகளில் படும் துயரங்களை படம் வெளிப்படுத்துகிறது.

காலனியாதிக்க காலத்துக்கு பிந்தைய அரசு என்ற கருத்தாக்கம் (Concept of post – colonial state)

காலனியாதிக்கம் இருந்த நாடுகளில் காவல் துறையினருக்கு மக்கள் அஞ்சுவது போல், அதே நாட்டினை தனது காலனியாதிக்கத்தில் வைத்திருந்த மேற்கத்திய நாடுகளில் மக்கள் அவர்களது காவல் துறையினரைக் கண்டு அஞ்சுவதில்லை. ஏன்? என அறிக. காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நம் நாட்டில் தற்போது அரசாங்க ஊழியர்கள் சாமானிய மனிதர்களுக்கு சமமாகவே நடத்தப்படுவதை அறிக. அதே நேரத்தில் , காலனியாதிக்கத்தினால் அந்நாடுகளுக்கு நன்மைகள் ஏதேனும் ஏற்பட்டனவா? அவற்றை பட்டியலிடுக.

  • இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு உருவான புதிய தேசிய அரசுகள் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகள் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகள் எனவும் இவை அழைக்கப்படுகின்றன.
  • அரசின் கட்டமைப்பை பொறுத்தவரை காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் காலனியாதிக்க கால அரசுகளின் இயல்புகள் அப்படியே உள்ளன. ஆனால் தற்பொழுது அரசின் கட்டமைப்புகளுடைய குறிக்கோள்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவிட்டதைக் காணலாம்.
  • பொதுவாக, காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் அதிக அளவிலான வறுமை, அரசியல் நிலையற்றத்தன்மை, மற்றும் ஆளுகையில் திறனின்மை போன்றவை காணப்படுகிறது.
  • நவீன அரசுக்கும், மரபுசார் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள சமுதாயத்திற்கும் உள்ள முரண்பாடுகளே இதற்கு காரணம் எனலாம்.
  • உலகின் புதிய பகுதிகளுக்குள் நுழைந்த காலனியாதிக்கச் சக்திகள், அங்கே நிலவிய பாரம்பரிய மரபுகள் மற்றும் பண்பாட்டினை அழித்ததுடன் தங்கள் மரபுகளையும் பண்பாட்டினையும் தொடர்ந்து திணித்தவாறு இருந்தனர்.
  • இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட மரபுகள் மற்றும் பண்பாடுகளுடன் மாற்றத்திற்கு உள்ளான மக்கள், தங்கள் நாடு விடுதலை அடைந்தவுடன், காலனியாதிக்க அடையாளங்களை தூறந்து தங்களுக்கென சுய அடையாளங்களை ஏற்படுத்தும் உடனடி கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைந்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்களின் புதிய தேசிய அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று,
  • இது காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் ஆள்வோருக்கும் இடைவெளி ஏற்பட ஒரு முக்கிய காரணமானது. இன்றளவும் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசுகளில் ஆள்வோர் அன்னிச்சையாக நடந்து கொள்வதைக் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!