General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 17

21. “தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்

சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்”

இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்

(அ) கலிங்கத்துப்பரணி

(ஆ) தமிழ்விடுதூது

(இ) குற்றாலக்குறவஞ்சி

(ஈ) முக்கூடற்பள்ளு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) முக்கூடற்பள்ளு

“தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்

சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்

கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்”

– முக்கூடற்பள்ளு.

பொருள்: மருதூரில் வாய்க்கால்களில் தத்திச் செல்லும் நீரானது முத்துகளால் இடைமறித்து அடைக்கப்படும். சாலை வழியாகக் கொணர்ந்த கருப்பங்கழிகளைக் கரும்பாலைகளில் சாறு பிழிந்து கொண்டிருக்கும் பேரிரைச்சல் சத்தமோ காதுகளைச் செவிடாக்கும்”.

“முக்கூடற்பள்ளு” என்ற நூலை இயற்றியவர் யாரென இதுவரை அறியப்படவில்லை.

22. “முற் பிறப்பினை உணர்ந்தவளாகக் “ குறிப்பிடப்படுபவள்

(அ) கண்ணகி

(ஆ) மணிமேகலை

(இ) மாதவி

(ஈ) மாதரி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) மணிமேகலை

மணிமேகலை காப்பியத்தின் நாயகி மணிமேகலை, மணிபல்லவத் தீவில் தன் முற்பிறப்பினை மணிமேகலா தெய்வம் மூலம் உணர்கிறாள். ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் அறவண அடிகளின் “மறு பிறப்புணர்ந்த மணிமேகலை நீ” என்ற கூற்றின் மூலம் இதனை அறியலாம்

23. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்

(அ) சீறாப்புராணம்

(ஆ) பெரியபுராணம்

(இ) கம்பராமாயணம்

(ஈ) சிவபுராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பெரியபுராணம்

“உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்” – என்று இந்நூலை திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள் பாராட்டியுள்ளார்.

24. “நந்திக்கலம்பகம்” – நூலின் ஆசிரியர் யார்?

(அ) கணிமேதாவியார்

(ஆ) ஜெயங்கொண்டார்

(இ) மூன்றாம் நந்திவர்மன்

(ஈ) அறியப்படவில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) அறியப்படவில்லை

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற நந்தி கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இந்நூல் சிற்றிலக்கியங்களில் கலம்பக வகையில் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.

25. பொருள் விளங்குமாறு பிரித்து எழுதுக:

(அ) நீயடாவெதிர் நிற்பதோ

(ஆ) நீய டாவெதிர் நிற்பதோ

(இ) நீயடா வெதிர் நிற்பதோ

(ஈ) நீ யடா வெதிர் நிற்பதோ

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நீய டாவெதிர் நிற்பதோ

தேம்பாவணி – வளன் செனித்தபடலம்

“நீய டாவெதிர் நிற்பதோ மதம்மொழி கரிமேல்

நாய டாவினை நடத்துமோ கதங்கொடு நானே”

– வீரமாமுனிவர்.

பொருள்: “அடா சிறுவனாகிய நீயா என்னை எதிர்த்து நிற்பது? மதயானையை எதிர்த்து நாய் போர் புரிவதுண்டோ” என கோலியாத்து தாவீதை நோக்கிக் கேட்டான்.

26. “அழகர் கிள்ளை விடு தூது” என்னும் சிற்றிலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய நூல்?

(அ) 251 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(ஆ) 245 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(இ) 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

(ஈ) 252 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்

அழகர் கிள்ளை விடு தூது: இந்நூலின் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை. இவருடைய காலம் கி.பி.1680 முதல் 1746 வரை. “இந்நூல் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்” என்று சமச்சீர் கல்வியில் கொடுக்கப்பட்டுள்ளதால் அதையே விடையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியரின் காலத்தைக் கணக்கில் கொண்டால் 272 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

27. “செரு அடுதோள்” என்ற அடைமொழி பெற்றவர்

(அ) விளம்பிநாகனார்

(ஆ) கபிலர்

(இ) நல்லாதனார்

(ஈ) பூதஞ்சேந்தனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) நல்லாதனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “திரிகடுகம்” என்ற நூலின் ஆசிரியர் நல்லாதனார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த “திருத்து” என்னும் ஊரினர் என்பவர். வைணவ மதத்தைச் சேர்ந்தவர். இவரை, “செரு அடுதோள் நல்லாதன்” என்று பாயிரம் குறிப்பிடுவதனால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

28. “கற்றவர்க்கு எல்லா நாடுகளும் தம்முடைய நாடுகளே” – என்ற கருத்தமைந்த பாடலைப் பாடிய சங்கப்புலவர்

(அ) கணியன் பூங்குன்றனார்

(ஆ) முன்றுறை அரையனார்

(இ) கணிமேதாவியார்

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) முன்றுறை அரையனார்

பழமொழி நானூறு

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

வேற்றுநாடு ஆகா; தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்”

– முன்றுறை அரையனார்.

பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடுகள் இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை தம்முடைய நாடுகளே. எனவே அந்நாடுகளுக்குச் செல்லும் போது வழிநடை உணவை அவர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

29. “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே”

– இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்.

(அ) புறநானூறு

(ஆ) நற்றிணை

(இ) ஏலாதி

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நற்றிணை

நற்றிணை:

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”

– மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள்: அரசரால் சிறப்புச் செய்யப் பெறுதலும், யானை, தேர், குதிரை முதலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வச் சிறப்பன்று. அஃது அவரவர்தம் முன்வினைப் பயனே. தன்பால் புகலிடம் தேடி வந்த எளியோரைக் கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வமெனச் சான்றோர் கூறுவர்.

30. “கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கன் வென்ற சீர்முகத் திளவல் பின்னர்த் திறந்ததன் னாம வேலாற்” என்ற வரிகளை எழுதியவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) ஓட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வீரமாமுனிவர்

தேம்பாவணி:

வளன்செனித்த படலம்

“கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கன் வென்ற

சீர் முகத் திளவல் பின்னர் திறந்ததன் னாம வேலாற்

போர்முகத் தெதிர் ஒன்றில்லான் பொழிமறை பழித்தயாரும்

பார்முகத் ததற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தான்”

– வீரமாமுனிவர்.

பொருள்: அழகிய முகத்தை உடைய இளைஞனாகிய தாவீதன், கரிய மேகத்தில் தோன்றும் இடியும் கூசுமாறு சினந்து கடுமொழி கூறிய அரக்கனாகிய கோலியாத்தை வென்றான். பின்பு, அவன் தன் புகழ்பெற்ற வேலினால் போர்க்களத்தில் தன்னை எதிர்த்துப் போர் புரிவோர் எவரும் இல்லாதவனாய் அவர்களை வென்று அடக்கினான். நன்மை மொழியும் சத்திய வேதத்தைப் பழித்த அவர்கள் யாவரும் உலகில் அதற்குச் சார்பாய் எப்போதும் பரிந்து பேச வகை செய்தான்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!