TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th May 2024

1. 2024 – உலக ஆஸ்துமா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Closing Gaps in Asthma Care

ஆ. Uncovering Asthma Misconceptions

இ. Enough Asthma Deaths

ஈ. Asthma Education Empowers

  • 2024ஆம் ஆண்டில் வரும் உலக ஆஸ்துமா நாளானது “Asthma Education Empowers” என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மேயில் வரும் முதல் செவ்வாயில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பயனுள்ள நோய்மேலாண்மையைக் கற்றுத்தருவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலகளவில் 260 மில்லியனுக்கும் மேலானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நோயால் ஆண்டுதோறும் 450,000-க்கும் மேற்பட்டோர் மரணிக்கின்றனர்.

2. நடுவண் அரசின் SMART-PDS திட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. கோவா

  • பொது வழங்கள் அமைப்பில் நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட SMART-PDS திட்டத்தை கேரள மாநிலம் செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. உணவு & பொது வழங்கல் துறையின் தலைமையில், இது உணவுதானியக் கசிவைத் தடுப்பதையும், விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சி குடும்ப அட்டையின் தரவுகளை மையப்படுத்துவதோடு கொள்முதல் முதல் விநியோகம் வரை நிகழ்நேர கண்காணிப்பைச் செயல்படுத்துகிறது.

3. அண்மையில், இலட்சத்தீவுகள் கடலில் பவளப்பாறை நிறமாற்றம் குறித்த ஆய்வை நடத்திய நிறுவனம் எது?

அ. ஐஐடி, கான்பூர்

ஆ. ICAR – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்

இ. தேசிய கடல்சார் நிறுவனம்

ஈ. கடல்சார் உயிரியல் ஆய்வகம்

  • 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடல்சார் வெப்ப அலைகள் காரணமாக இலட்சத்தீவுகள் கடலில் கடுமையான பவளப்பாறை நிறமாற்றம் ஏற்படுவதாக ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) தெரிவித்துள்ளது. இந்தியப்பெருங்கடலில் விரைவான வெப்பமயமாதல், வலுவான எல்-நினோ நிலையுடன் இணைந்து வெப்ப அலைகளை நிகழ்வை அதிகரித்துள்ளது. மேற்கு இந்தியப் பெருங்கடலில் பத்தாண்டுக்கு சுமார் 1.5 நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து வட வங்காள விரிகுடாவில் பத்தாண்டுக்கு 0.5 நிகழ்வுகளும் இதுபோல் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், மன்னார் வளைகுடாவில் உள்ள 85% பவளப்பாறைகள் நிறம் மாறிவிட்டன.

4. 2024 – அரேபிய பயணச்சந்தையின்போது துபாயில், ‘Cool Summers of India’ என்ற பரப்புரையத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. சுற்றுலா அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • நடுவணரசின் சுற்றுலா அமைச்சகம், 2024 மே.06-09 வரை துபாயில் நடைபெறும் அரேபிய சுற்றுலாக் கண்காட்சி 2024இல் பங்கேற்கிறது. மத்திய கீழை நாடுகளின் சுற்றுலா சந்தையில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்துவதில் இந்நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது.
  • அதிகம் அறியப்படாத மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இடங்களை முன்னிலைப்படுத்தி, சுற்றுலா அமைச்சகம் அரேபிய சுற்றுலாக் கண்காட்சியில், “குளிரான இந்தியாவின் கோடை” என்ற பரப்புரையைத் தொடங்கியது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் கோடைகால பயணத்திற்கு இந்தியா மிகவும் தயாராக உள்ளது என்பதைக் குறிக்கிறது. அரேபிய சுற்றுலா கண்காட்சி 2024இல் இந்தியாவின் பங்கேற்பு சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்திற்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால், சுற்றுலாத்துறையில் வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. கொட்டைப்பாக்கின் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தீர்த்தஹள்ளி பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • சிவமோகாவில் அமைந்துள்ள பாக்கு ஆராய்ச்சி மையம், கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளியில் விளையும் கொட்டைப் பாக்குகள் மற்ற இரகங்களைவிட தரம் வாய்ந்தவை என்று கண்டறிந்துள்ளது. வெற்றிலை என்றும் அழைக்கப்படும் கொட்டைப்பாக்குகள் இந்தியாவில் ஒரு முதன்மை பணப்பயிராகும். காஃபின், நிகோடின் மற்றும் ஆல்கஹாலைத் தொடர்ந்து, உலகளவில் பொதுவாக உட்கொள்ளப்படும் உளத்தூண்டு பொருட்களில் இது 4ஆம் இடத்தில் உள்ளது. பரவலாக மென்று உட்கொள்ளப்படும் இது, குறிப்பாக தெற்காசியாவில் பல்வேறு புகையிலை தயாரிப்புகளில் முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.

6. கார்பன் பண்ணையத்தின் முதன்மை இலக்கு என்ன?

அ. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவைக் கைப்பற்றி சேமித்தல்

ஆ. வேளாண் விளைச்சலை அதிகரித்தல்

இ. விவசாயத்தில் நீர் நுகர்வைக் குறைத்தல்

ஈ. பைங்குடில் இல்ல வளி வெளியேற்றத்தை அதிகரித்தல்

  • கார்பன் பண்ணையம் அல்லது கார்பன் தனிப்படுத்திச்சேமித்தல் பண்ணையம் எண்பது வளிமண்டலத்திலிருந்து மண் அல்லது உயிர்ப்பொருளில் உள்ள கரியமில வாயுவைக் கைப்பற்றி சேமிப்பதன்மூலம் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இது பல்வேறு வேளாண்-காலநிலை மண்டலங்களுக்குப் பொருந்தக் கூடியதும் மண் சிதைவு, நீர்ப்பற்றாக்குறை மற்றும் காலநிலை மாறுபாடு சவால்களையும் நிவர்த்தி செய்கிறது. போதுமான மழைப்பொழிவு உள்ள பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமான இது கார்பனைப் பிரித்தெடுப்பதற்கு தாவர வளர்ச்சியைப் பயன்படுத்துகிறது. இந்த நடைமுறை பைங்குடில் இல்ல வாயு செறிவுகளை குறைக்க உதவுகிறது மற்றும் நிலையான விவசாயத்தை வளர்க்க உதவுகிறது.

7. போலவரம் நீர் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. இராஜஸ்தான்

  • மக்களவைத் தேர்தலின் போது, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், போலவரம் நீர் திட்டம் பேசுபொருளானது. 1941 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தாமதங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொள்கிறது. இந்திரா சாகர் திட்டம் என்று அழைக்கப்படும் போலவரம் நீர் திட்டம், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அமைந்துள்ளது. கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீர் மற்றும் நீர்மின்சாரத்தை வழங்கும் கோதாவரி ஆற்றின் பல்நோக்கு அணைதான் இந்தத் திட்டம்.

8. புலிட்சர் பரிசுடன் தொடர்புடைய துறை எது?

அ. இதழியல்

ஆ. வேளாண்மை

இ. பொழுதுபோக்கு

ஈ. விளையாட்டு

  • 2024ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்களை மே.07 அன்று கொலம்பியா பல்கலைக்கழகம் அறிவித்தது. 1904ஆம் ஆண்டில் ஜோசப் புலிட்சரால் நிறுவப்பட்ட இவ்விருது, பத்திரிகை, கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குவோரைக் கௌரவிக்கிறது. இதழியல் மற்றும் கலைப்பிரிவுகளைச் சார்ந்தோரை வெற்றியாளர்களாக புலிட்சர் பரிசு வாரியம் தெரிவு செய்கிறது; பின்னர் நடைபெறும் விழாவில், பல்கலைக்கழகத் தலைவரால் விருது பெற்றவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். இவ்விருது முதன்முதலாக 1917ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

9. அண்மையில், இந்தியாவின் முதல் உள்நாட்டு நுண்கட்டுப்படுத்தி சில்லான செக்யூர் IoTஐ அறிமுகப்படுத்திய IIT எது?

அ. ஐஐடி பம்பாய்

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி ரூர்க்கி

  • ஐஐடி மெட்ராஸின் அடைவில் உள்ள மைண்ட்கிரோவ் டெக்னாலஜிஸ், நாட்டின் முதல் உயர் செயல்திறன்கொண்ட SoC (சிஸ்டம் ஆன் சிப்) செக்யூர் IoTஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Peak XV பார்ட்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் இந்தச் சில்லு, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, தரம் குறையாமல் செலவுகளைக் குறைத்து இந்திய OEMஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, பல மின்னணு கூறுகளை ஒருங்கிணைத்து, சிறிய மற்றும் திறன்மிகு சாதனங்களாக உருவாக்குகிறது.

10. மேற்கு நைல் காய்ச்சலின் காரணி எது?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. புரோட்டோசோவா

ஈ. பூஞ்சை

  • கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஐந்து பேருக்கு மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பிருப்பதை கேரள மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதில் நான்கு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; ஒருவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். கேரளத்தில் 2011ஆம் ஆண்டில் முதல் முறையாக மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு பதிவுசெய்யப்பட்டது; 2022இல் அந்நோய் தொடர்புடைய முதல் இறப்பு பதிவுசெய்யப்பட்டது.
  • 1937ஆம் ஆண்டில் உகாண்டா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், முதன்மையாக பறவைகளைத் தாக்கி, புலம்பெயர்ந்த பறவைகள் வழியாக மற்ற உயிரினங்களுக்குப் பரவுகிறது. இது ஒரு ஃபிளவி வைரஸ் ஆகும். மேற்கு நைல் காய்ச்சல் என்பது மேற்கு நைல் வைரஸால் ஏற்படுகிறது. இது முதன்மையாக பறவைகளையும் எப்போதாவது மனிதர்களைக் கடிக்கும் பாதிக்கப்பட்ட கொசுக்கள்மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது.

11. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 7 மே

ஆ. 8 மே

இ. 9 மே

ஈ. 10 மே

  • உலக செஞ்சிலுவை & செம்பிறை நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.08ஆம் தேதியன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனருமான ஹென்றி டியூனாண்டின் பிறந்தநாளான (மே.08) இந்நாள் 1948இலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச்சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984இலிருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Everything we do comes from the heart” என்பதாகும்.

12. ‘Glyptothorax punyabratai’ எண்பது சார்ந்த இனம் எது?

அ. சிலந்தி

ஆ. கெளுத்தி மீன்

இ. தவளை

ஈ. பாம்பு

  • ICAR-NBFGR ஆனது, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்ரா ஆற்றின் துணையாறான துங் ஓடையில், ‘Glyptothorax punyabratai’ என்ற புதிய கெளுத்தி மீனினத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பொதுவான கெளுத்தி மீன் போல இரவு நேரங்களில் இரையத் தேடுகின்றது மற்றும் மண்ணடியில் வாழ்வை மேற்கொள்கிறது. 2000-க்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்டுள்ள கெளுத்திகள், பெரும்பாலும் நன்னீரிலும் சில சமயம் கடல்சார் வாழிடத்திலும் வாழ்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அரசுப்பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 100 Mbps வேகத்தில் இணைய வசதி இந்த மாத இறுதிக்குள் செய்து முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தில் காணொலிமூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு BSNL நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தி வருகிறது.

2. கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான, ‘அஸ்ட்ராசெனகா’ வர்த்தக காரணங்களுக்காக தனது COVID-19 தடுப்பூசியை (கோவிஷீல்டு) சர்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. COVID-19 பரவலின்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது. “COVID திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகளின் தேவை மாறியுள்ளது. சந்தையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் மிகுதியாக கிடைக்கப்பெறுவதால் எங்கள் தயாரிப்பை திரும்பப்பெறுகிறோம்” என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!