TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th January 2024

1. இந்தியாவில், ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜனவரி.01

ஆ. ஜனவரி.09

இ. ஜனவரி.14

ஈ. ஜனவரி.21

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.9ஆம் தேதியன்று வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகிறது. 1915 ஜனவரி.09 அன்று மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்குத் திரும்பியதை இந்த நாள் நினைவுகூருகிறது. இந்திய புலம்பெயர் சமூகத்தை இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இணைக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தால் 2003இல் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் நிறுவப்பட்டது.

2. 2024ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் உலக பொருளாதார சூழல் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் யாது?

அ. 5.9%

ஆ. 7.1%

இ. 6.2%

ஈ. 4.0%

  • ஐக்கிய நாடுகளின் உலக பொருளாதார சூழல்-2024 அறிக்கையில் உலகில் மிகவேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், வலுவான தனிநபர் நுகர்வு, அரசு முதலீடு காரணமாக நடப்பாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உற்பத்தித்துறை, சேவைகள் துறை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணைநிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற மரத்தாலான வாஞ்சோ கைவினைப் பொருட்களுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. பீகார்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

  • அண்மையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மூன்று பொருட்கள் புவிசார் குறியீட்டைப் பெற்றன. அவை ஆதி கேகிர் (இஞ்சி), திபெத்திலிருந்து குடியேறியவர்களால் கையால் நெய்யப்பட்ட தரைவிரிப்புகள் மற்றும் வாஞ்சோ சமூகத்தினரால் செய்யப்படும் மரப்பொருட்களாகும். மரத்தாலான வாஞ்சோ கைவினைப்பொருட்கள் வடிவமைப்பில் தனித்துவம் மிக்கதாகும்.

4. வங்காள விரிகுடாவில் கிருஷ்ணா கோதாவரி படுகை ஆழ்கடல் திட்டத்தை செயல்படுத்துகிற நிறுவனம் எது?

அ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆ. இந்தியன் எண்ணெய் நிறுவனம்

இ. பாரத் பெட்ரோலியம்

ஈ. எண்ணெய் & இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC)

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) வங்காள விரிகுடாவில் கிருஷ்ணா-கோதாவரி படுகை ஆழ்கடல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் KG-DWN-98/2 தொகுதியில் அமைந்துள்ளது. கிருஷ்ணா-கோதாவரி படுகை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு பெட்ரோலியப் படுகை ஆகும். இதன் கரையோரப்பகுதி 15,000 சகிமீ பரப்பளவையும் கடல் பகுதி 25,000 சகிமீ பரப்பளவையும் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மிதக்கும் தளமான அர்மடா ஸ்டெர்லிங் V-ஐ ONGC வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தத் தளம் 70% ஷபூர்ஜி பலோன்ஜி ஆயில் மற்றும் கேசுக்கும், 30% மலேசியாவின் புமி அர்மடாவுக்கும் சொந்தமானதாகும்.

5. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற லாஞ்சியா சௌரா ஓவியங்கள் சார்ந்த மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

  • ‘எகான்ஸ்’ அல்லது ‘இடிடல்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்ற லாஞ்சியா சௌரா ஓவியங்கள் ஒடிஸா மாநிலத்துச் சுவரோவியக் கலையின் ஒரு தனித்துவமான பாணியாகும். இக்கலைவடிவம் பெரும்பாலும் ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினக் குழுவான லாஞ்சியா சௌரா சமூகத்தினரால் வரையப்படுகிறது. இந்த சுவரோவியங்கள் மண்ணாலான வீடுகளின் வெளிப்புற சுவர்களில் வரையப்படுகின்றன. கருஞ்சிவப்பு-மெரூன் பின்னணியில் வெண்ணிறத்தில் இந்தச் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன.

6. லாகோவா மற்றும் புர்காசபோரி வனவிலங்கு சரணாலயங்கள் கீழ்காணும் எந்த மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும்?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. மிசோரம்

  • வெற்றிகரமான சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அஸ்ஸாமில் உள்ள லாகோவா மற்றும் புர்காசபோரி வனவிலங்கு சரணாலயத்திற்கு இரண்டு காண்டாமிருகங்கள் மீண்டும் திரும்பின. பிரம்மபுத்ரா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்விரு வனவிலங்கு சரணாலயங்களும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகவே உள்ளன. கசிரங்கா & ஒராங் தேசியப்பூங்காக்களுக்கு இடையே விலங்குகள் இடம்பெயர்வதற்கான முக்கிய இணைப்புத்தடமாக அவை செயல்படுகின்றன.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘30 டோராடஸ் B’ பற்றி பின்வருவனவற்றுள் எது விவரிக்கிறது?

அ. ஒரு மீ ஒளிர் விண்மீனின் எச்சம்

ஆ. ஒரு மிகப்பெரிய கருந்துளை

இ. ஒரு விண்வெளி ஆய்வுக்கூடம்

ஈ. பூமிபோன்ற புறக்கோள்

  • NASAஇன் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகமானது அண்மையில் பால்வீதியின் துணை விண்மீன் மண்டலமான பெரிய மாகெல்லானிக் மேகங்களில் அமைந்துள்ள ஒரு மீ ஒளிர் விண்மீனின் எச்சமான, ‘30 டோராடஸ் B’இன் படத்தைப் பிடித்தது. ‘NGC 2060’ என்றும் அழைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு, எட்டு முதல் பத்து மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து மாறிவரும் ஒரு விண்மீனின் உருவாக்கத்தின் ஒருபகுதியாகும்.
  • பூமியிலிருந்து 160,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, ‘30 டோராடஸ் B’, இருண்ட வாயு மேகங்கள், இளம் விண்மீன்கள், உயர் ஆற்றல் அதிர்வுகள் மற்றும் மீ வெப்ப வாயு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிக்கலான வடிவத்தைக் கொண்டுள்ளது.

8. அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து NASAஇன் சந்திர நுழைவாயில் நிலையத்தில் ஒரு தொகுதியை உருவாக்குவதில் பங்கேற்பதாக அண்மையில் அறிவித்த நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • NASAஇன் சந்திர நுழைவாயில் நிலையத்திற்கான (Lunar Gateway Station) தொகுதியை உருவாக்குவதில் ஒத்துழைப்பை நல்குவதை அறிவித்ததன்மூலம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) விண்வெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இக்கூட்டு முயற்சியில் அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கேற்பு அடங்கும்; இது விண்வெளி ஆய்வின் உண்மையான பன்னாட்டுத் தன்மையை வலியுறுத்துகிறது.
  • சந்திர நுழைவாயில் நிலையம் NASAஇன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்; இது நிலவில் ஆர்ட் டெமிஸ் தளம் எனப்படும் நீண்டகால தளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் முன்னோடியான சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), பூமியை தாழ்புவி சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது; இது தாழ்புவி சுற்றுப் பாதைக்கு வெளியே அமையும் முதல் விண்வெளி நிலையமாக இருக்கும்.

9. 1972இல் அப்பல்லோ-17-க்குப்பிறகு, சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கவுள்ள அமெரிக்க விண்கலத்தின் பெயர் என்ன?

அ. பெரேக்ரின் திட்டம் – 1

ஆ. வல்கன் சென்டார்

இ. அப்பல்லோ – 24

ஈ. ஆஸ்ட்ரோபோடிக்

  • கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ-17 பயணத்திற்குப் பிறகு சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கவுள்ள முதல் அமெரிக்க விண்கலம் பெரெக்ரின் திட்டம் – 1 ஆகும். இது சந்திர ஆய்வில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. அண்மையில் பெரெக்ரின் திட்டம் – 1 அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோட்டிக் வல்கன் சென்டார் ஏவுகலம் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்டது. சந்திரனின் மெல்லிய வளிமண்டலம் மற்றும் நீர்மூலக்கூறு அசைவுகளை ஆய்வது இதன் நோக்கங்களுள் அடங்கும். பெரெக்ரின் திட்டம் – 1 பிப்ரவரி.23 அன்று தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

10. AI தொழில்நுட்பத்தில் இந்தியாவில் உள்ள 100,000 நிரலாளர்களை மேம்படுத்துவதற்கு, “AI Odyssey” என்ற முன்னெடுப்பை அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ. IBM

ஆ. மைக்ரோசாப்ட்

இ. கூகுள்

ஈ. சாம்சங்

  • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளில் இந்தியாவில் உள்ள 100,000 நிரலாளர்களை மேம்படுத்துவதற்காக, ‘AI ஒடிஸி’ என்ற ஒரு முன்னெடுப்பை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது சிக்கலான நிஜ உலகச் சிக்கல்களைத் தீர்க்க நிரலாளர்களுக்கு உதவுவதோடு வணிக ரீதியிலான AI தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் மதிப்பைக் கூட்டும். ஒரு மாதகால விரிவான AI பயிற்சியை வழங்குவதன்மூலம் நாட்டில் AI சரளத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. 81ஆவது கோல்டன் குளோப் விருதுகள்-2024இல் ‘சிறந்த திரைப்பட’ (நாடகம்) விருதை வென்ற திரைப்படம் எது?

அ. தி ஃபேபல்மேன்ஸ்

ஆ. டாப் கன்: மேவரிக்

இ. ஓபன்ஹெய்மர்

ஈ. ஜெயிலர்

  • 81ஆவது கோல்டன் குளோப் விருதுகள்-2024 ஜன.07 அன்று கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இது சிறந்த உள்ளூர் (அமெரிக்க) மற்றும் வெளியூர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இதில், ‘சிறந்த திரைப்படத்துக்கான (நாடகம்)’ விருது, ‘ஓபன்ஹெய்மர்’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. முதல் அணுவாயுதங்களை உருவாக்குவதற்காக மன்ஹாட்டன் திட்டத்தை வழிநடத்திய அமெரிக்க இயற்பியலாளர் ஜே. இராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையை இப்படம் சித்தரிக்கிறது. இது இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டை உருவாக்குவதில் ஓபன்ஹெய்மரின் பணியை விவரிக்கிறது; எனவே அவரை, “அணுகுண்டின் தந்தை” என்று அழைக்கிறோம்.

12. இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF) – 2023 நடத்தப்படுகிற நகரம் எது?

அ. சென்னை

ஆ. புனே

இ. பரிதாபாத்

ஈ. கொல்கத்தா

  • இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF) – 2023-க்கான தொடக்க நிகழ்வு 2024 ஜன.08 அன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் நடைபெற்றது. IISF-2023 ஆனது பரிதாபாத்தில் அமைந்துள்ள உயிரி தொழில்நுட்பத்துக்கான பிராந்திய மையமாக விளங்கும் DBT பெயர்ச்சி நல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் ஜன.17 முதல் ஜன.20 வரை நடத்தப்படும்.

13. அதன்,’சோலார் மாவாலை’ கண்டுபிடிப்புக்காக அண்மையில் காப்புரிமை பெற்ற நிறுவனம் எது?

அ. பிலிப்ஸ்

ஆ. கிர்லோஸ்கர் சகோதரர்கள்

இ. சக்தி பம்புகள்

ஈ. குரோம்ப்டன் கிரீவ்ஸ்

  • சக்தி பம்ப்ஸ் (இந்தியா) நிறுவனம் அதன், ‘சோலார் மாவாலை – Solar Flour Mill’ கண்டுபிடிப்புக்காக இந்திய அரசாங்கத்தின் காப்புரிமை அலுவலகத்திலிருந்து காப்புரிமை பெற்றுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒன்பதாவது காப்புரிமையாகும். சூரிய ஆற்றலில் இயங்கும் மாவாலை கிராமப்புறங்களில் மின்பற்றாக்குறையை கையாளுவதோடு செலவுகளையும் கணிசமாகக் குறைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியது அமெரிக்கா.

நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக்கலத்தை சுமார் ஐம்பதாண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்க தனியாார் விண்வெளி ஆய்வுநிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின் லூனார் லேண்டர் – 1, அந்த நாட்டின் புளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. யூனைட்டட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய வல்கன் ஏவுகலம்மூலம் அந்த ஆய்வுக்கலம் செலுத்தப்பட்டது. வரும் பிப்.23ஆம் தேதி அந்த ஆய்வுக்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் பெறும். இதற்கு முன்னர் கடந்த 1972ஆம் ஆண்டில் நிலவுக்கு அமெரிக்கா தரையிறங்கும் ஆய்வுக்கலத்தை அனுப்பியது.

2. பிரபஞ்சமும் வசப்படும்! | ஆதித்யா எல்-1 விண்கலம்.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் ரோவர் நிலவின்மீது தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இப்போது சூரியனின் புறவெளியை ஆராய்ச்சிசெய்ய இந்தியா அனுப்பியிருக்கும் ஆதித்யா L-1 விண்கலம் மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2023 செப்டம்பர்.02 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து PSLV C57 ஏவுகலம்மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 1,475 கிகி எடைகொண்ட ஆதித்யா L1, பூமியிலிருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் அமைந்திருக்கும் லாக்ராஞ்சியன் புள்ளியை வெற்றிகரமாக அடைந்திருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே 5 லாக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. லாக்ராஞ்சியன் புள்ளி என்பது பூமி, சூரியன் இரண்டுக்குமான ஈர்ப்பாற்றல் வட்டத்தில் அமைந்த புள்ளியாகும். அதனால், இரண்டின் ஈர்ப்பும் இல்லாத புள்ளி என்கிற நிலையில், குறைந்த அளவு எரிசக்தி செலவில் அங்கே விண்கலத்தை நிலைநிறுத்த முடியும்.

ஆதித்யா L-1 விண்கலத்தில் சூரிய புறவூதா கதிர் படப்பதிவு தொலைநோக்கி, எக்ஸ் கதிர் நிறமாலைமானி உள்பட ஏழு விதமான ஆய்வுக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான்கு கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்வதற்கானவை. ஏனைய மூன்றும் லாக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வுசெய்பவை.

சூரியனில் மறைந்திருக்கும் பத்து இலட்சம் டிகிரி செல்ஸியஸ் வெப்பமுள்ள கரோனாவின் வெளிச்சம்தான் நமது கண்களைக் கூசவைத்து சூரியனின் உருவத்தை மறைக்கிறது. அதன் காரணமாக சூரியனில் காணப்படும் அக்னிக்குழம்பு, அனல்காற்று, ஹைட்ரஜன் வெடிப்புகள் உள்ளிட்டவை குறித்து இதுவரை எதுவும் தெரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அதுகுறித்தப் புதிரைத்தேடும் தொடக்கநிலை ஆய்வுதான் ஆதித்யா L-1. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள 15 இலட்சம் கிலோமீட்டரில் ஒரு சதவீத தொலைவைத்தான் ஆதித்யா எல்-1 எட்டி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

NASஇன், ‘விண்ட்’, ‘ஏய்ஸ்’, ‘டிஸ்கவர்’ மட்டுமல்லாமல், NASAஉம் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமையும் இணைந்து அனுப்பிய, ‘சோஹோ’ உள்ளிட்ட விண்கலன்கள் ஏற்கெனவே ஆதித்யா L1 போல சூரியனின் ஆய்வுக்காக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

122 ஆண்டுகளுக்கு முன்னால், கடந்த 1901இல் தமிழ்நாட்டின் கொடைக்கானல் விண்வெளி ஆய்வுநிலையத்தில் சூரியனைப் பார்ப்பதற்கான தொலைநோக்கி நிறுவப்பட்டதில் தொடங்குகிறது நமது விண்வெளி குறித்த தேடல். ‘ஆஸ்ட்ரோசாட்’ அனுப்பப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜன.1 அன்று விண்ணில் ஏவப்பட்டிருக்கும், ‘XPoSat’ (X-ray Polarimeter Satellite) விண்கலம் உலகின் இரண்டாவது போலாரிமீட்டர் கதிரியக்க விண்கலம் ஆகும்.

சூரியனை ஆய்வுசெய்ய விண்கலன் அனுப்பியுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாகவும், ஆசியாவில் முதல் நாடாகவும் இந்தியா உயர்ந்துள்ளது. ஆதித்யா L1 விண்கல சாதனையில் அதிகளவில் பெண் அறிவியலாளர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி அதன் திட்ட இயக்குநராக இருந்திருக்கிறார் என்பதும் நம்மை பெருமிதம் அடைய வைக்கின்றன.

3. “எங்கள் பள்ளி – மிளிரும் பள்ளி” திட்டத்தின்கீழ் பள்ளிகளில் தூய்மைப்பணி தொடக்கம்.

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைக்க, “எங்கள் பள்ளி – மிளிரும் பள்ளி” என்ற திட்டத்தை, 2023 செப்.1 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுத்த அரசு அறிவுறுத்தியது. இந்தத்திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையுடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம், மாசு கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் இணைந்து செயல்படும். தற்போது இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4. கர்ப்பிணிகளுக்கான மருத்துவக் கண்காணிப்புக்கு பிக்மி 3.0! புதிய மென்பொருள் கட்டமைப்பு தொடக்கம்.

கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் மருத்துவக் கண்காணிப்புக்கான, ‘பிக்மி 3.0’ மென்பொருள் சேவையை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி.08 அன்று தொடக்கிவைத்தார். சுகப் பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பராமரிப்பு, பயிற்சிப்பிரிவு, யோகா பயிற்றுவித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை கண்காணிக்கும் வகையில் Pregnancy and Infant Cohort Monitoring & Evaluation (PICME 3.0) என்ற மென்பொருள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் நிகழும் பிரசவங்கள், மகப்பேறு வசதிகள், தொடர் பராமரிப்பு போன்ற பலவகையான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin