TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th February 2024

1. தீனபந்து சோட்டு இராம் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

. ஹரியானா

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • ஹரியானாவின் யமுனா நகரத்தில் 800 மெகாவாட் திறன்கொண்ட தீனபந்து சோட்டு இராம் அனல்மின் நிலையம் 57 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. உயர்மின் உற்பத்தியாளர்கள் கொள்முதல் குழு கூட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் அவர்களால் பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு `6900 கோடி மதிப்பிலான இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தின் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அலகானது திறனை 8 சதவீதம் அதிகரித்து, நிலக்கரி நுகர்வினைக் குறைக்கும்.

2. செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மிசோரம்

ஆ. மணிப்பூர்

இ. திரிபுரா

ஈ. அஸ்ஸாம்

  • திரிபுரா மாநிலத்தில் உள்ள செபஹிஜாலா வனவிலங்கு சரணாலயத்திற்கு அண்மையில் இரண்டு இராயல் வங்கப் புலிகள், இரண்டு சிறுத்தைகள், புறாக்கள், இரண்டு மயில்கள் மற்றும் 4 மலை மைனாக்கள் உள்ளிட்ட இனங்கள் புதியதாகக் கொண்டுவரப்பட்டன். 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சரணாலயம் 18.5 சதுர கிமீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளுக்கான வாழ்விடத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சரணாலயம் செங்கால்நாரை மற்றும் வெள்ளை அரிவாள்மூக்கன் போன்ற பல்வேறு பறவையினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

3. SAMARTH திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குதல்

ஆ. உழவர்களுக்கு உதவுதல்

இ. MSME-களுக்கு உதவுதல்

ஈ. குழந்தைகளுக்கு விரிவான மருத்துவ சேவையை வழங்குதல்

  • மத்திய கனரக தொழிற்துறை இணையமைச்சர், SAMARTH மையங்கள் குறித்து மக்களவையில் தெரிவித்தார். SAMARTH, அல்லது Smart Advanced Manufacturing and Rapid Transformation Hub, ஆனது, “இந்திய மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்துதல்” என்ற திட்டத்தின்கீழ் செயல்படுகிறது. இம்மையங்கள் தொழிற்துறை 4.0இல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன்மூலம் MSME-களுக்கு உதவுகின்றன. IoT, மென்பொருள் மேம்பாடு மற்றும் தரவுப்பகுப்பாய்வுபோன்ற துறைகளில் ஆலோசனைகளையும் இது வழங்குகின்றது. மேலும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அடைவு ஆதரவையும் இது வழங்குகின்றது.

4. மூன்று மாநிலங்கள் இணைந்து மேற்கொண்ட முதலாவது பிணந்தின்னிக் கழகுகள் கணக்கெடுப்பின்போது, ‘இமயமலை பிணந்தின்னிக் கழுகுகள்’ கீழ்க்காணும் எந்த இடத்தில் காணப்பட்டன?

அ. வயநாடு வனவிலங்கு சரணாலயம்

ஆ. மலபார் வனவிலங்கு சரணாலயம்

இ. காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம்

ஈ. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்

  • மூன்று மாநிலங்கள் இணைந்து மேற்கொண்ட முதலாவது பிணந்தின்னிக் கழகுகள் கணக்கெடுப்பின்போது, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் 7 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 320 பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் பிரத்யேகமாக, ‘Accipitridae’ குடும்பத்தைச் சேர்ந்த இமயமலை பிணந் தின்னிக்கழுகு, வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் பதிவாகியுள்ளது. இவை பொதுவாக இமயமலை, திபெத்திய பகுதி மற்றும் மத்திய ஆசிய மலைகள் வரை பரவி காணப்படுகின்றன.

5. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் 155 ஸ்மார்ட் வெடிமருந்துகளை உருவாக்க, மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி கான்பூர்

ஆ. ஐஐடி சென்னை

இ. ஐஐடி தில்லி

ஈ. ஐஐடி மும்பை

  • ஐஐடி சென்னையும் மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் 155 ஸ்மார்ட் வெடிமருந்துகளை உருவாக்கவுள்ளன. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இரண்டாண்டு காலம் செயல்பாடும் இந்த முன்னெடுப்பானது, 10 மீட்டர் அளவிலான துல்லியத் திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு நடவடிக்கைகளில் துல்லியத்தைக் கணிசமாக மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துல்லியத்தை அதிகரிப்பதிலும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் இந்தத் திட்டம் கவனஞ்செலுத்துகிறது.

6. உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த நகரம், நடுவணரசின், ‘நீர் போர்வீரர்’ விருது பெற்றுள்ளது?

அ. லக்னோ

ஆ. நொய்டா

இ. அயோத்தி

ஈ. சஹரன்பூர்

  • கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாட்டில் சிறந்த முயற்சிகளை கொண்டமைக்காக, மத்திய நீர் அமைச்சகத்தால் நொய்டா, “நீர் போர்வீரர்” நகரமெனக் கௌரவிக்கப்பட்டுள்ளது. 260 MLD கழிவுநீரைச் சுத்திகரிக்கும் 411 MLD (நாள் தோறும் மில்லியன் லிட்டர்) மொத்த கொள்ளளவுகொண்ட எட்டுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இந்த நகரம் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 70-75 MLD நீர் நீர்ப்பாசனம், கட்டுமானம், தீயணைப்பு, குளம் பராமரிப்பு மற்றும் சாலையின் தூய்மை ஆகியவற்றிற்காக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

7. ஆறாவது, ‘உலக அரசாங்கங்கள் உச்சிமாநாடு’ நடைபெறுகிற இடம் எது?

அ. துபாய்

ஆ. பாரிஸ்

இ. பெல்ஜியம்

ஈ. அபுதாபி

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி.14 அன்று துபாயில் நடைபெறும் உலக அரசாங்கங்கள் உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தவுள்ளார். இது 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் பங்கேற்கும் இரண்டாவது மாநாடாகும். 2013 முதல் துபாயில் நடைபெற்று வரும் இந்த வருடாந்திர நிகழ்வு, அழுத்தமான சிக்கல்கள்குறித்து விவாதிக்க உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
  • பிப்.12-14 வரை திட்டமிடப்பட்ட இந்த உச்சிமாநாடு, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் முகமது பின் சயீத் அல் நயான், அண்மைய துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

8. திவ்ய கலா மேளாவை நடத்துகிற அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நடத்தப்படுகிற திவ்ய கலா மேளா அகர்தலாவில் தொடங்கியது. அமைச்சர் இரத்தன்லால் நாத் மற்றும் பலர், மாற்றுத்திறனாளி கைவினைஞர்களின் படைப்புகள், வீட்டு ஒப்பனை, ஆடைகள், எழுதுபொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை ஊக்குவித்து, நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். இந்தத்திட்டம் மாற்றுத்திறன் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கிறது. இது படைப்பாற்றல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகிய நோக்கத்துடன் ஒத்திசைகிறது.

9. 2024 – தேசிய கருப்பு HIV / AIDS விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Together for Love: Stop HIV Stigma

ஆ. To acknowledge how HIV disproportionately affects Black people

இ. Engage, Educate, Empower: Uniting to End HIV / AIDS in Black Communities

ஈ. Let communities’ lead

  • நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் தேசிய கருப்பு HIV / AIDS விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள், “Engage, Educate, Empower: Uniting to End HIV / AIDS in Black Communities” என்பதாகும். தேசிய கருப்பு HIV / AIDS விழிப்புணர்வு நாள் என்பது HIV குறித்த அறிவை அதிகரிக்கவும், பரிசோதனையை அதிகரிக்கவும், சமூக ஈடுபாட்டை அதிகரிக்கவும், சிகிச்சையை அதிகரிக்கவும், HIV பரிசோதனை, தடுப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தவும் மற்றும் HIV களங்கத்தை நிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

10. வித்யாஞ்சலி உதவித்தொகை திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

  • மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புது தில்லியில் ‘EdCIL வித்யாஞ்சலி உதவித்தொகை’ திட்டத்தை தொடக்கிவைத்தார். கல்வியில் திறமையும், தகுதியும் உள்ள, ஆனால் கல்வியைத் தொடர நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சமூகம் மற்றும் தனியார்துறை ஈடுபாட்டின்மூலம் பள்ளிகளை வலுப்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகம் 2021 செப்டம்பரில் வித்யாஞ்சலி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனியார்துறை மற்றும் சமூகத்தின் உதவியைப்பெற்று, அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

11. கியாசனூர் வன நோய் பரவி வருகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

மந்திக்காய்ச்சல் (Monkey Fever) என அழைக்கப்படும் கியாசனூர் வன நோய், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பரவி வருகிறது. இந்த ஆண்டு, 49 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இதன் காரணமாக இறப்பெய்தியுள்ளனர். 1957ஆம் ஆண்டு கியாசனூர் வனப்பகுதியில் இருந்து உருவான இந்த நோய், கியாசனூர் வன நோய் தீநுண்மத்தால் ஏற்படுகிறது. பெரும்பாலான பாதிப்புகள் உத்தர கன்னடா மாவட்டத்தில் காணப்படுகின்றன.

12. தடுப்பூசி பாதுகாப்பு வலை (Vaccine Safety Net) என்ற முன்னெடுப்புடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. UNICEF

ஆ. WHO

இ. UNFPA

ஈ. UNDP

  • நலமான இந்தியா திட்டம் (The Healthy Indian Project) உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு வலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நம்பகமான தடுப்பூசி பாதுகாப்பு தகவலை வழங்குவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. உலகளாவிய வலையமைப்பின் ஒருபகுதியாக, THIP ஆனது சரிபார்க்கப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பு விவரங்களுக்கு ஒரு நம்பகமான ஆதாரமாக மாறியுள்ளது. இது உலகளவில் துல்லியமான நோய்த்தடுப்பு தகவலை வழங்குவதற்கான WHOஇன் முயற்சிக்கு பங்களிக்கிறது. 1999இல் WHOஆல் நிறுவப்பட்ட VSN, பல்வேறு மொழிகளில் நம்பகமான தடுப்பூசி பாதுகாப்பு தகவல்களை வழங்கும் பல்வேறு வலைத் தளங்களை உள்ளடக்கியுள்ளது.

13. AICTE அறிமுகப்படுத்திய, ‘Support to Students for Participating in Competitions Abroad – SSPCA’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. உள்நாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல்

ஆ. தொழில்நுட்பக் கல்வியில் இந்திய மாணவர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல்

இ. உள்ளூர் நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குதல்

ஈ. கலாச்சார பரிமாற்ற திட்டங்களை ஊக்குவித்தல்

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இந்திய தொழில்நுட்ப மாணவர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக, ‘Support to Students for Participating in Competitions Abroad – SSPCA’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் போக்குவரவு உதவிகளை வழங்குகிறது. பன்னாட்டு அறிவியல் போட்டிகளுக்கு ஒரு மாணவருக்கு `2 லட்சம் வரை பயண மானியங்களை இது வழங்குகிறது. AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள மாணவர்கள், உலக அரங்கில் இந்தியாவைத் திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தி இந்தத் திட்டத்தின்மூலம் பயனடையலாம்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு:

அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தின் ஒருங்கிணைப்புடன் நடந்த தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, அந்தப்பறவைகளின் எண்ணிக்கை 246 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது, ‘டெக்ளோஃபெனா’ என்ற மருந்து. கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இம்மருந்து, கழுகுகளின் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. இறந்த கால்நடைகளைக் கழுகுகள் தங்கள் இரையாக்கிக் கொள்ளும்போது, அந்த மருந்தும் கழுகுகளின் உடலில் கலந்து விடுவதால், கழுகு இனம் மெல்லமெல்ல அழிந்து வந்தது. கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும், ‘டெக்ளோஃபெனா’ மருந்தின் விற்பனை தற்போது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 9 விதமான கழுகு, பருந்து இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் வெள்ளிநிறப்பருந்துகள், சிவப்புத்தலை பருந்துகள், நீளமூக்கு கழுகுகள், எகிப்தியப் பருந்துகள் என 4 இனங்கள் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்கில்தான் பெரும்பாலானவை காணக்கிடைக்கின்றன.

2. ரெப்போ வட்டி விகிதத்தில் ஆறாவது முறையாக மாற்றமில்லை: இந்திய ரிசர்வ் வங்கி.

வங்கிகளுக்கான குறுகியகாலக்கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசாவ் வங்கி (RBI) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக தொடரும் எனவும், பணவீக்கம் இலக்கை நெருங்கி வருவதாகவும், எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும் RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வட்டியும் அதிகரிக்கப்படாது.

இதன்மூலம் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 4 முதல் 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எண்ம (digital) ரூபாய்: இதுவரை இணைய வழியில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த எண்ம ரூபாய் இனி இணையம் இல்லாமலும் பரிமாற்றம் செய்துகொள்ளும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக RBIஇன் எண்ம ரூபாய் முன்னோடித் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் எளிய மக்களும், இணைய வசதி இல்லாதவர்களும் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். ஏற்கெனவே UPI வழிப்பணப்பரிமாற்றம் இணைய வசதி இல்லாமலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

3. `6,000 கோடியில் புதிய மீன்வளத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மீன்வளத்துறையை முறைப்படுத்தும் `6,000 கோடி மதிப்பிலான புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ், இத்துறை தனை முறைப்படுத்துவதற்கான துணைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. `6,000 கோடி முதலீட்டில் 2023-24 முதல் 2026-27 வரை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ‘தேசிய மீன்வள எண்ம தளம்’ உருவாக்கப்பட்டு, மீனவர்களுக்கு பணிரீதியிலான அடையாள அட்டை வழங்கப்படும்.

07-02-2024: ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணரின் 122ஆவது பிறந்தநாள்.

4. தமிழ்நாட்டில் 6.80 இலட்சம் ஈரநிலப் பறவைகள் உள்ளன: அரசு தகவல்.

2024ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஈரநிலப்பறவைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 6,80,028 ஈர நிலப்பறவைகள் உள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதில் 120 நீர்ப்பறவை இனங்கள் மற்றும் 269 நிலப்பறவை இனங்கள் என மொத்தம் 389 பறவையினங்கள் அடங்கும். மொத்த பறவைகள் எண்ணிக்கையில் 5, 36, 245 நீர்ப்பறவைகளும் (79%), 1, 43, 783 நிலப்பறவைகளும் (21%) உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.

5. இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்!

கோயம்புத்தூர் வெரைட்டி ஹால் சாலையில் கடந்த 1914ஆம் ஆண்டு கட்டப்பட்ட, ‘டிலைட்’ என்ற திரையரங்கம் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமாகும். போதிய வருமானம் இல்லாததாலும், பராமரிக்க முடியாததாலும் திரையரங்கம் இடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

6. பிப்.17இல் விண்ணில் பாய்கிறது GSLV F-14 ஏவுகலம்!

INSAT-3DS செயற்கைக்கோளுடன் GSLV F-14 ஏவுகலம் வரும் 17ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக ISRO அறிவித்துள்ளது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) சார்பில் INSAT வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன INSAT-3DS எனும் செயற்கைகோளை ISRO வடிவமைத்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளானது GSLV F-14 ஏவுகலம்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான INSAT-3DS செயற்கைகோள் மொத்தம் 2,275 கிகி எடை கொண்டது. இதில் ஆறு இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ்நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன் கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள INSAT-3D செயற்கைக்கோளின் தொடர்ச்சியாகவே இந்த INSAT-3DS விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App
Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://storage.googleapis.com/cp-prod-projb-pub/billing_18thOct23/jbzwb/production/whitelabel_jbzwb/8904611905783086/app-release.apk

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!