TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 8th November 2023

1. ‘2024ஆம் ஆண்டுக்கான ஆசியா-பசிபிக் மனிதவள மேம்பாட்டு அறிக்கை’யை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. ADB

ஆ. AIIB

இ. UNDP 🗹

ஈ. WEF

  • 2024ஆம் ஆண்டுக்கான ஆசிய-பசிபிக் மனிதவள மேம்பாட்டு அறிக்கை சமீபத்தில் UNDPஆல் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, பல பரிமாண வறுமையில் வாழும் மக்களின் பங்கு 2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் 25%லிருந்து 15 சதவீதமாகக்குறைந்துள்ளது. அதிக வருமானம் மற்றும் செல்வச் சமத்துவமின்மை உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், 2000 – 2022ஆம் ஆண்டுக்கு இடையில், தனிநபர் வருமானம் $442இலிருந்து $2,389ஆக உயர்ந்துள்ளது எனவும், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 23 சதவீதம் மட்டுமே உள்ளது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2016

ஆ. 2018

இ. 2020 🗹

ஈ. 2022

  • பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013இன்கீழ் தகுதியான குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கும் நோக்கோடு COVID-19 தொற்றுநோய் காலத்தின்போது கடந்த 2020ஆம் ஆண்டில் PMGKAY தொடங்கப்பட்டது.

3. ஒரே திங்களில் 16 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்ட நாட்டின் முதல் துறைமுகம் எது?

அ. காண்ட்லா துறைமுகம்

ஆ. முந்த்ரா துறைமுகம் 🗹

இ. கொச்சி துறைமுகம்

ஈ. சென்னை துறைமுகம்

  • குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், நடப்பு 2023ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஒரே திங்களில் 16 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக்கையாண்ட நாட்டின் முதல் துறைமுகமாக மாறியது. இதுவே இந்தியாவில் உள்ள எந்தவொரு துறைமுகமும் இதுவரை கையாளாத அதிகபட்ச அளவாகும். முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்திற்குச் சொந்தமானதாகும். இது ஆண்டுக்கு 338 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாகும். மேலும், இது இந்தியாவில் செயல்படும் அனைத்து துறைமுகங்களிலும் மிகப்பெரியதாகும்.

4. “பெண்களுக்காக நீர், நீருக்காகப் பெண்கள்” என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. ஜல் சக்தி அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 🗹

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் எனப்படும் அம்ருத் திட்டமும் இணைந்து, “பெண்களுக்காக நீர், நீருக்காகப் பெண்கள்” இயக்கம் என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. ஒடிசா அர்பன் அகாடமி அறிவுசார் கூட்டு செயல்பாட்டு நிறுவனமாக இதில் செயல்படும். இந்த இயக்கம் “தண்ணீர் தீபாவளியைக்” கொண்டாடுகிறது. இது 2023 நவம்பர்.07 முதல் நவம்பர்.09 வரை நடைபெறும். நீர் நிர்வாகத்தில் பெண்களை இணைப்பதற்கான தளத்தை வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” என்ற முன்னெடுப்பை ஆதரிக்கும் நோக்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கூட்டினைந்துள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை எது?

அ. சன்

ஆ. ஸ்டார்

இ. கலர்ஸ் 🗹

ஈ. ஜீ

  • இந்திய பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையான, ‘கலர்ஸ்’, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டத்துடன் இணைந்து செயல்படுகிறது. பெண் குழந்தைகளைக்கைவிடும் பிரச்னையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான, ‘டோரீ’ என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பவுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘இலியுஷின்-38 கடல் டிராகன்’ என்றால் என்ன?

அ. கடற்புற ரோந்து விமானம் 🗹

ஆ. ஆளில்லா விமானம்

இ. ஹெலிகாப்டர்

ஈ. இலகுரக போர் விமானம்

  • இந்தியக் கடற்படையின் ‘இலியுஷின்-38 கடல் டிராகன்’ என்ற நீண்டதூரம் செல்லும் திறன்படைத்த கடற்புற ரோந்து விமானம் தனது 46 ஆண்டுகால சேவைக்குப் பிறகு விடைபெற்றது. INAS 315 ஆனது கடந்த 1977ஆம் ஆண்டில் IL-38 விமானங்களோடு பணியில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் வான்வழியிலான நீண்டதூர கடல்சார் கண்காணிப்பின் நவீன சகாப்தம் தொடங்கியது. இவற்றில் இரண்டு விமானங்கள் குஜராத் மாநிலத்தின் லோத்தல் மற்றும் கர்நாடக மாநிலத்தின் நிபானியில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக காட்சிக்கு நிறுத்தப்படும்.

7. இந்தியாவானது கீழ்காணும் எந்நாட்டுடன் இணைந்து, ‘கல்வி மற்றும் திறன் கவுன்சில்’ கூட்டத்தை நடத்தியது?

அ. அமெரிக்கா

ஆ. பிரான்ஸ்

இ. ஆஸ்திரேலியா 🗹

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் (AIESC) கூட்டம் நடந்தது. AIESC, முன்பு ஆஸ்திரேலிய-இந்திய கல்வி கவுன்சில் (AIEC) என இருந்தது. இருநாடுகளுக்கும் இடையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக கடந்த 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும். கல்வி & திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இதன் நோக்கம் இருநாடுகளின் தேசிய முன்னுரிமைகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்டது.
  • உழவு, நீர்மேலாண்மை, முதன்மை கனிமங்கள், சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு (AI), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக ஆஸ்திரேலிய மற்றும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

8. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின்படி, ‘ஒவ்வொரு பணியாளரும் வாரத்திற்கு சராசரியாக எத்தனை மணிநேரம் உழைக்கின்றனர்’ என்ற அடிப்படையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை யாது?

அ. இரண்டாவது

. ஆறாவது 🗹

இ. பத்தாவது

ஈ. பதினைந்தாவது

  • மிகக்கடின உழைப்பாளிகளைக் கொண்ட உலகில் உள்ள 163 நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய 2023 ஏப்ரல் தரவுகளின்படி, இந்தியாவில் பணிபுரியும் ஒவ்வொருவரும் வாரத்திற்கு சராசரியாக 47.7 மணிநேரம் வேலைசெய்கின்றனர். ஆனால் பூடான், காங்கோ, லெசோதோ மற்றும் காம்பியா போன்ற சிறிய நாடுகளைவிட அவர்கள் குறைவாகவே வேலைசெய்கிறார்கள்.

9. 49 ஒருநாள் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த கிரிக்கெட் வீரர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. விராட் கோலி 🗹

இ. இரவீந்திர ஜடேஜா

ஈ. கேஎல் இராகுல்

  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்களை விராட் கோலி சமன்செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு (6976) இந்தியாவில் ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். சச்சின் 451 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 49 சதங்களை எடுத்தார், விராட் கோலி தனது 289வது ஆட்டத்தில் தனது 277ஆவது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை எட்டினார்.

10. 2023இல், ‘பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை’ வென்ற நாடு எது?

அ. இந்தியா 🗹

ஆ. ஜப்பான்

இ. சீனா

ஈ. வங்காளதேசம்

  • இந்திய மகளிர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை 2ஆவது முறையாக வென்றது. சங்கீதா குமாரி (17ஆவது நிமிடம்), நேஹா (46ஆவது நிமிடம்), லாரெம்சியாமி (57ஆவது நிமிடம்), வந்தனா கட்டாரியா (60ஆவது நிமிடம்) ஆகியோரின் கோல்கள் மூலம் இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தனது முதல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை 2016இல் சிங்கப்பூரில் வென்றது. ஜப்பான், 2013 மற்றும் 2021இல் என இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.

11. இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் நகரம் எது?

அ. கொச்சி

ஆ. கோவா 🗹

இ. சென்னை

ஈ. கௌகாத்தி

  • இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா நவ.20 முதல் 28, 2023 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பிரிட்டிஷ் திரைப்படமான, ‘கேச்சிங் டஸ்ட்’ விழாவின் தொடக்க படமாகவும் அமெரிக்கத்திரைப்படமான ‘தி ஃபெதர்வெயிட்’ நிறைவுப்படமாகவும் இருக்கும். உலர்புல் பற்றிய துருக்கிய திரைப்படம் விழாவின் மத்திய நாளில் திரையிடப்படும். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் இந்த ஆண்டு IFFIஇல், ‘சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படும். முழுநீள திரைப்பட பிரிவில் தொடக்க திரைப்படமாக, ‘ஆட்டம்’ என்ற மலையாள திரைப்படமும், குறும்பட பிரிவில் மணிப்பூரின் ‘ஆண்ட்ரோ ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

12. மத்திய அரசால் தொடங்கப்பட்ட மானிய விலை கோதுமை மாவின் பெயர் என்ன?

அ. நமோ ஆட்டா

ஆ. பாரத் ஆட்டா 🗹

இ. இந்தியா ஆட்டா

ஈ. சுதேசி ஆட்டா

  • அனைத்து நுகர்வோரும் வாங்கக்கூடிய மானிய விலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட கோதுமை மாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டங்களின் தேவை அதிகரிக்கும் பண்டிகைக் காலங்களில் உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த முகமைகள், ‘பாரத் ஆட்டா’ என்ற பிராண்ட் பெயரிலான மாவை, ஒரு கிலோகிராம் `32-34 என்று விற்கப்படும் சந்தை விலைக்கு எதிராக, `27.50 என்ற மானிய விலையில் விற்கும்.

13. பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ. நோவக் ஜோகோவிச் 🗹

ஆ. கார்லோஸ் அல்கராஸ்

இ. டேனியல் மெட்வெடேவ்

ஈ. ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

  • உலகின் நம்பர்.01 வீரரான நோவக் ஜோகோவிச் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி ஏழாவது பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸிடம் தோல்வியடைந்த பிறகு நோவக் ஜோகோவிச் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வி காணவில்லை. ஜோகோவிச், சமீபத்திய ATP தரவரிசையில் 398ஆவது வாரமாக நெ:01 வீரராக சாதனை படைத்து வருகிறார்.

14. FIDE கிராண்ட் சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்ற செஸ் வீரர் யார்?

அ. R பிரக்ஞானந்தா

ஆ. விதித் குஜராத்தி 🗹

இ. D குகேஷ்

ஈ. கோனேரு ஹம்பி

  • இந்திய செஸ் வீராங்கனைகள் வைஷாலி மற்றும் விதித் குஜ்ராத்தி ஆகியோர் முறையே FIDE கிராண்ட் சுவிஸ் மகளிர் மற்றும் ஓபன் பட்டங்களை வென்றனர். வைஷாலி, அவரது தம்பி பிரக்ஞானந்தாவுடன் இணைந்து, அந்தந்த போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் சகோதர-சகோதரி இணை ஆனர். கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் வைஷாலி பெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய ஜூனியர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழ்நாட்டு வீரர் சாதனை.

கோவையில் நடைபெற்று வரும் 38ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டும் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ஜிதின் தேசிய சாதனை படைத்துள்ளார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் நீளந்தாண்டுதலில் தமிழ்நாட்டு வீரர் ஜிதின் 7.35 மீ தாண்டி தேசிய சாதனை படைத்தார். கடந்த 2018இல் பங்கஜ் வர்மா 7.27 மீட்டர் நீளம் தாண்டியதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ஜிதின் முறியடித்தார்.

2. தமிழ்ப்பற்றாளர்கள் 38 பேருக்கு விருது.

தமிழ்ப்பற்றாளர்கள் 38 பேருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. தூயதமிழ் ஊடக விருது மா. பூங்குன்றனுக்கும், நற்றமிழ்ப்பாவலர் விருது ம. சுடர்த்தமிழ்ச்சோழனுக்கும் வழங்கப்பட்டது.

3. பாரத் ஆர்கானிக்ஸ்.

இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்காக, ‘பாரத் ஆர்கானிக்ஸ்’ என்ற வர்த்தகப்பெயரை மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துவைத்தார். ‘பாரத் ஆர்கானிக்ஸ்’ வர்த்தகப்பெயரின் கீழ், இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, சர்க்கரை, ராஜ்மா, பாசுமதி அரிசி, சோனாமசூரி அரிசி ஆகிய ஆறு பொருள்கள் விற்பனை செய்யப்படும். அவை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதர் டைரியின் 150 விற்பனையகங்கள், இணையவழிகளில் விற்கப்படும்.

4. 2022ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 75 இலட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு!

உலக அளவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆண்டு 75 இலட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம், 2022இல் காசநோய் பாதிப்பு கண்டறிதலும், பாதிப்புக்கு சிகிச்சை அளித்தலும் உலக அளவில் மேம்பட்டிருப்பதையும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உலக அளவில் 192 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நடப்பு ஆண்டுக்கான உலகளாவிய காசநோய் பாதிப்பு அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது கடந்த 1995ஆம் ஆண்டு முதல் கண்டறியப்பட்ட நோய் பாதிப்புடையவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும். புவியியல் ரீதியில் 2022ஆம் ஆண்டில் காசநோயால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக தென்கிழக்காசியா (46%), ஆப்பிரிக்கா (23%), மேற்கு பசிபிக் பிராந்தியம் (18%) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. குறைந்த பாதிப்பு பதிவான பகுதிகளாக கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி (8.1%), அமெரிக்கா (3.1%), ஐரோப்பா (2.2%) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

புதிதாக காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. காசநோய் தொடர்பான உயிரிழப்புகளைப் பொருத்தவரை (HIV பாதிக்கப்பட்டவர்கள் உள்பட) கடந்த 2021ஆம் ஆண்டு உலக அளவில் 1.4 கோடியாக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2022இல் 13 இலட்சமாக குறைந்துள்ளது.

5. இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

கடந்த 2022ஆம் ஆண்டில் காப்புரிமை பதிவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. இந்தியாவிலிருந்து காப்புரிமை விண்ணப்பங்களை பதிவுசெய்வோரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 31.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக அதிகளவிலான காப்புரிமை விண்ணப்பங்களை இந்தியா பதிவுசெய்துவருகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin