Tnpsc Current Affairs in Tamil – 8th May 2024
1. ‘MQ-9B Predator’ என்றால் என்ன?
அ. பயிர்களில் காணப்படும் பூச்சிகளை அகற்றுவதற்கான ஒரு நுட்பம்
ஆ. உயரமான இடங்களில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம்
இ. அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக்கப்பல்
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- இந்தியா அமெரிக்காவிடமிருந்து, ‘MQ-9B பிரிடேட்டர்’ என்ற ஆளில்லா விமானங்களை வாங்கி அவற்றை தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் பணியில் ஈடுபடுத்தவுள்ளது. ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்மூலம் உருவாக்கப்பட்ட இது, மிக்கவுயரமான இடங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதமேந்திய ஆளில்லா விமானம் ஆகும். கண்காணிப்பு மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்காக அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிற இது 2 வகைகளைக் கொண்டுள்ளது. அவை SkyGuardian மற்றும் SeaGuardian ஆகும்.
2. அண்மையில், உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 2024 – ஆடவர் AFC U-23 ஆசிய கோப்பையை வென்ற நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தோனேசியா
இ. ஜப்பான்
ஈ. கஜகஸ்தான்
- கத்தாரின் தோகாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி ஜப்பான் தனது இரண்டாவது ஆடவர் AFC U-23 ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. மாற்று வீரராக களமிறங்கிய யமடா அடித்த தனி கோல், ஜப்பானின் வெற்றியையும் 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் அதன் இடத்தையும் உறுதிசெய்தது. ஜப்பானிய கோல் கீப்பரின் பெனால்டி சேமிப்புகள் அவர்களின் வெற்றியை உறுதிசெய்தது. அரையிறுதியில் இந்தோனேசியாவை வீழ்த்தி ஈராக் வெண்கலப்பதக்கம் வென்றது.
3. அண்மையில், எந்த நாட்டின் ஆடவர் அணி இந்தோனேசியாவை தோற்கடித்து 11ஆவது தாமஸ் கோப்பையை வென்றது?
அ. சீனா
ஆ. மலேசியா
இ. இந்தியா
ஈ. வியட்நாம்
- சீனாவின் செங்டுவில் நடைபெற்ற 2024 – BWF தாமஸ் மற்றும் உபெர் கோப்பைக்கான போட்டியில் சீன பூப்பந்து அணி ஆடவர் மற்றும் மகளிர் பட்டங்களை வென்றது. தாமஸ் கோப்பையில், சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தி 11ஆவது முறையாக கோப்பையை வென்றது. நடப்புச் சாம்பியனான இந்தியா, கால் இறுதியில் சீனாவிடம் தோல்வியடைந்தது. 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக அணி சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு நாடு இரண்டு பட்டங்களையும் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
4. அண்மையில், இந்திய விண்வெளிக்கொள்கை, 2023 செயல்படுத்துவதற்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை வெளியிட்ட அமைப்பு எது?
அ. CSIR
ஆ. DRDO
இ. ICAR
ஈ. IN-SPACe
- இந்திய விண்வெளிக்கொள்கை, 2023-க்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை IN-SPACe வெளியிட்டுள்ளது. இது ஒழுங்குமுறை முன்கணிப்பு மற்றும் வணிகத்தை எளிதாக்குகிறது. விண்வெளிப் பொருள்களின் ஏவுதல், செயல்பாடு மற்றும் பூமிக்குத் திரும்புதல் உள்ளிட்ட இந்திய பரப்பெல்லை மற்றும் அதிகார எல்லைக்குள் விண்வெளி நடவடிக்கைகளுக்கான அங்கீகாரத்தை இது உள்ளடக்கியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்றாலும், இந்தியர்கள் அல்லாத நிறுவனங்கள் இந்திய சகாக்கள்மூலம் விண்ணப்பிக்க இயலும். இந்திய விண்வெளித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளை இது கோடிட்டுக் காட்டுகிறது.
5. தடோபா-அந்தாரி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தெலுங்கானா
ஆ. மகாராஷ்டிரா
இ. கேரளா
ஈ. கர்நாடகா
- தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்திலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சயாத்ரி புலிகள் காப்பகத்திற்கு புலிகளைக் கொண்டு செல்ல மகாராஷ்டிர மாநில வனத்துறை திட்டமிட்டுள்ளது. 2010இல் உருவாக்கப்பட்ட இது, சண்டோலி தேசியப்பூங்கா மற்றும் கொய்னா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்தக் காப்பகம் செங்குத்தான மலைகள் மற்றும் ‘சதாஸ்’ என்றழைக்கப்படும் தரிசு பாறை பீடபூமிகளுடன் தனித்துவமான நிலப்பரப்பைக்கொண்டுள்ளது. இங்கு, அழிவின் விளிம்பிலிருக்கும் பலவிதமான தாவரங்கள் காணப்படுகின்றன.
6. லான்செட் அறிக்கையின்படி, 2085ஆம் ஆண்டளவில் இந்தியாவில் பால் உற்பத்திக் குறைப்பு வீதம் எவ்வளவாக இருக்கும்?
அ. 25%
ஆ. 35%
இ. 45%
ஈ. 65%
- இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக 2085ஆம் ஆண்டளவில் அதன் பால் உற்பத்தியானது 25% வரை குறையலாம் என லான்செட் அறிக்கை எச்சரித்துள்ளது. உலகளவில் முன்னணி பால் உற்பத்தியாளராகவும் நுகர்வோரகவும் உள்ள இந்தியா, கடுமையான வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அபாயங்களை எதிர்கொள்கிறது. 8.9 கோடி சிறுவிவசாயிகளால் ஆதரிக்கப்படும் இந்தியாவின் பால் உற்பத்தியில் சுமார் 30 சதவீதம் வட சமவெளிகள் பங்களிக்கின்றன. வெப்பநிலை ஈரப்பத குறியீடுமூலம் அளவிடப்படுகிற வெப்ப அயர்ச்சியே பால் உற்பத்தியின் குறைவுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
7. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புடன் (CDSCO) தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- 2024 மே.15 முதல் மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டி, ஏற்றுமதிக்கான புதிய மருந்துகளுக்கு உற்பத்தி உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரத்தைப் பெறுகிறது.
- அனைத்து ஏற்றுமதி தொடர்பான தடையில்லா சான்றிதழ்கள் தற்போது SUGAM வலைத்தளம் வழியாக CDSCO மண்டல அலுவலகங்கள்மூலம் விண்ணப்பித்தபின் வழங்கப்படும். முன்னதாக, அந்தந்த மாநிலத்தின் அதிகாரிகள் இதை கையாண்டனர். மருந்து ஆலோசனைக் குழுவால் அடையாளம் காணப்பட்ட ஏற்றுமதியைச் சீரமைக்கவும் தாமதங்களைச் சமாளிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. 2024 UNESCO/கில்லர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திரப் பரிசினைப் பெற்றவர்கள் யார்?
அ. ரஷ்ய பத்திரிகையாளர்கள்
ஆ. உக்ரேனிய பத்திரிகையாளர்கள்
இ. பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள்
ஈ. சீன பத்திரிகையாளர்கள்
- காஸாவைச் செய்தியாக்கும் பாலஸ்தீனியப் பத்திரிகையாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான UNESCO/கில்லர்மோ கானோ உலகப் பத்திரிகை சுதந்திரப் பரிசை வென்றனர். ஆபத்தான சூழ்நிலையில் அவர்களின் துணிச்சலான பணியை இப்பரிசு அங்கீகரிக்கின்றது. சிலியின் சாண்டியாகோவில் நடந்த உலக பத்திரிகை சுதந்திர மாநாட்டின் போது விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஸா மோதல்களுக்கு மத்தியில், 2023 அக்டோபர் தொடங்கி 26 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
9. முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் தொடர்புடைய மாநிலங்கள் எவை?
அ. தமிழ்நாடு & கேரளா
ஆ. தமிழ்நாடு & கர்நாடகா
இ. கேரளா & கர்நாடகா
ஈ. கர்நாடகா & ஆந்திர பிரதேசம்
- பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து கேரள மாநில அரசு முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளைத் தடுப்பதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. கேரள மாநிலம் தங்களது வழக்கமான அணை பராமரிப்புப் பணிகளை மாதங்கள் முதல் ஆண்டு வரை தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சிறிய மற்றும் முதன்மை அணைகளை பலப்படுத்தும் பணிகளை முடிப்பதற்கு 15 மரங்களை வெட்ட அனுமதி கோரி, நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு மனு செய்துள்ளது. அணை பாதுகாப்புச் சட்டம், 2021இன்கீழ் மேற்பார்வைக் குழுவின் அதிகாரம் இருந்தபோதிலும் கேரளம் இதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு குற்றஞ்சாட்டுகிறது. 1800 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அணை, பெரியாற்றை தமிழ்நாட்டின் பக்கம் திருப்புகிறது.
10. பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் (INCOIS) முதன்மை நோக்கம் என்ன?
அ. வேளாண் தரவுகள் மற்றும் சேவைகளை வழங்குதல்
ஆ. வானிலை முறைகளைக் கண்காணித்து முன்னறிவித்தல்
இ. பெருங்கடல் தரவுகள், தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்
ஈ. விண்வெளி ஆய்வு குறித்து ஆய்வு நடத்துதல்
- மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் 1999இல் நிறுவப்பட்ட INCOIS, கடலோர மாநிலங்களுக்கு உரகடல்கள், சீற்றமிகு அலைகள் மற்றும் வெள்ள அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகளை வழங்குகிறது. இது பல துறைகளுக்கு கடல்சார் தரவு, தகவல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ESSOஇன்கீழ் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகளில் சுனாமி, புயல் உருவாக்கம் மற்றும் சீற்றமிகு அலைகள், மீனவர்களுக்கான தினசரி ஆலோசனைகள் மற்றும் குறுகியகால கடல்சார் வானிலை முன்னறிவிப்புகள் / எச்சரிக்கை சேவைகள் ஆகியவை அடங்கும். தரவுகளை சேகரிக்கவும் கடல்சார் மாற்றங்களைக் கணிக்கவும் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகளையும் இது பயன்படுத்துகிறது.
11. அண்மையில் தனது 65ஆவது தொடக்க நாளை கொண்டாடிய எல்லைபுறச் சாலைகள் அமைப்புடன் (BRO) தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்
ஆ. புவி அறிவியல் அமைச்சகம்
இ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு தனது 65ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது. இதையொட்டி தில்லியில் பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 1960ஆம் ஆண்டில் கிழக்கில் டஸ்கர் திட்டம் (தற்போது வர்தக்) மற்றும் வடக்கில் பீகான் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுடன் உருவாக்கப்பட்ட BRO இன்று 11 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் செயல்படுகிறது. 18 திட்டங்களுடன் ஒரு துடிப்பான அமைப்பாக மாறியுள்ளது. Lt. Gen இரகு சீனிவாசன் தற்போது BROஇன் தலைவராக உள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ், “In the Silence of Our Great Mountains – Work Speaks” என்ற நோக்க வாசகத்துடன் BRO செயல்பட்டு வருகிறது.
12. அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து, ‘iCube-Qamar’ஐ என்ற தனது முதல் நிலவுப் பயணத் திட்டத்தை பாகிஸ்தான் ஏவியது?
அ. ரஷ்யா
ஆ. இந்தியா
இ. சீனா
ஈ. ஈரான்
- பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாக இணைந்து பாகிஸ்தானின் முதல் நிலவுப் பயணத் திட்டமான, ‘iCube-Qamar’ஐ ஏவின. பாகிஸ்தானின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம், ‘SUPARCO’ மற்றும் சீனாவின் ‘SJTU’ ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட 7 கிலோகிராம் செயற்கைக்கோள், சீனாவின் Chang’e-6 பணியின் ஒருபகுதியாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஒளிசார் ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இது, நிலவினைச் சுற்றிவருகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான், நிலவின் மேற்பரப்புப்படங்கள் குறித்து செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆராய்ச்சியை தானாகவே மேற்கொள்ளவியலும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மாணவர்களுக்கு `1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம்: ஜூலையில் தொடக்கம்.
அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் `1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழ்நாடு அரசால், ‘நான் முதல்வன்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, +2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும், ‘கல்லூரிக்கனவு’ திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
கல்லூரிக்கனவு நிகழ்ச்சி: இதையடுத்து நிகழ் கல்வியாண்டில் +2 தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான, ‘கல்லூரிக் கனவு-2024’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதேபோன்று சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகப் பட்டினம், மதுரை, நெல்லை, ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2. தாயகத்துக்கு `9 இலட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை.
ஐநாஇன் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு உலக புலம்பெயர்வு அறிக்கை-2024ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் வசித்தும் பணியாற்றியும் வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு 2022ஆம் ஆண்டு $111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் `9.28 இலட்சம் கோடி) அனுப்பியுள்ளனர். இதன்மூலம், உலக அளவில் வெளிநாடுகளில் வசித்தும் பணியாற்றியும் வருவோர் தங்கள் தாயகத்துக்கு அனுப்பிய தொகை $100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது இதுவே முதல்முறை. இந்தப் பெருமையை பெற்ற முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.