Tnpsc Current Affairs in Tamil – 8th December 2023
1. எந்நாட்டின் வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக அந்நாட்டிற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது?
அ. கென்யா 🗹
ஆ. தென்னாப்பிரிக்கா
இ. காங்கோ
ஈ. பப்புவா நியூ கினி
- கென்யாவில் வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக $250 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, எண்ம பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. கென்யாவில் சிறுதானியங்களை விளைவிக்கும் வகையில், அந்நாட்டின் சட்டங்களுக்கு உள்பட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அந்நாடு நிலம் வழங்கவுள்ளது.
2. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2022ஆம் ஆண்டில் இணையவெளிக் குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களின் போக்கு என்ன?
அ. அதிகரித்துள்ளது 🗹
ஆ. குறைந்துள்ளது
இ. மாற்றமில்லை
ஈ. தகவல் இல்லை
- 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இணையவெளிக் குற்றங்கள் இந்திய நாட்டில் 24.4% அதிகரித்துள்ளது. அதேசமயம் பிற வகை குற்றங்களான பொருளாதாரக் குற்றங்கள் (11.1%), மூத்த குடிகளுக்கு எதிரான குற்றங்கள் (9%), பெண்களுக்கெதிரான குற்றங்கள் (4%) ஆகியவையும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன. தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்தத் தகவல்கள் உள்ளன.
3. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘கிராம் மஞ்சித்ரா’ செயலியுடன் தொடர்புடையது எது?
அ. புவிக்கோளத் தகவல் அமைப்பு 🗹
ஆ. கலாச்சார காப்பகம்
இ. கல்வி வளங்கள்
ஈ. தடுப்பூசி நினைவூட்டல்
- கிராமப்பஞ்சாயத்துமூலம் இடஞ்சார்ந்த திட்டமிடலை ஊக்குவிக்கும் வகையில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ‘கிராம் மஞ்சித்ரா’ என்ற புவிக்கோளத் தகவல் அமைப்பு (Geographic Information System) பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. புவி-நில்லிடஞ்சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் திட்டமிடலைச் செய்வதை இச்செயலி எளிதாக்குகிறது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்தவும், கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்திற்கான முடிவு ஆதரவு அமைப்பை வழங்கவும் இது ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது.
- நிலக்குறியீடுகள் (GPS Coordinates) மூலம் நிழற்படங்களை எடுக்க உதவும் திறன்பேசி அடிப்படையிலான தீர்வான ‘mActionSoft’ஐயும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
4. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, ‘PDI’ என்பதன் விரிவாக்கம் என்ன?
அ. Panchayat Development Index 🗹
ஆ. Panchayat Distribution Index
இ. Panchayat Direction Index
ஈ. People Development Index
- உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் மற்றும் அதன்மூலம் SDG 2030ஐ அடைவதில் அடிமட்ட அளவிலான அமைப்புகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் அளவிடுவதற்குமாக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து வளர்ச்சிக் குறியீட்டு (PDI) அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் செயல்திறன் மதிப்பீடு மற்றும் முன்னேற்ற மதிப்பீட்டில் பஞ்சாயத்து வளர்ச்சிக் குறியீடு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
5. உலகின் மிகப்பெரியதும் மிகவும் மேம்பட்ட அணுக்கரு இணைவு உலையுமான, ‘JT-60SA’ ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும்?
அ. இந்தியா
ஆ. ஜப்பான் 🗹
இ. அமெரிக்கா
ஈ. ஆஸ்திரேலியா
- உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அணுக்கரு இணைவு உலையான, ‘JT-60SA’ ஆனது ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் அதிகாரப்பூர்வமாக தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ‘JT-60SA’ என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். ‘JT-60SA’ அணுவுலை ஆறடுக்கு இயந்திரம் ஆகும்; இது டோக்கியோவின் வடக்கே நாகாவில் உள்ள ஒரு ஹேங்கரில் நிறுவப்பட்டுள்ளது.
6. ‘ஜெமினி’ என்ற புதிய AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
அ. மைக்ரோசாப்ட்
ஆ. கூகுள் 🗹
இ. ஆரக்கிள்
ஈ. ஆப்பிள்
- ‘ஜெமினி – Gemini’ என்னும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெமினி நானோ, ஜெமினி புரோ, ஜெமினி அல்ட்ரா என மூன்று வடிவங்களில் இந்தச் செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஜெமினி சகாப்தத்தின் முதலாவது மாதிரிகள்தாம் இவை. கூகுளால் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ‘Google DeepMind’ உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
7. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, 2022இல் அதிக எண்ணிக்கையிலான காவல் மரணங்கள் பதிவான மாநிலம் எது?
அ. குஜராத் 🗹
ஆ. கர்நாடகா
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. உத்தர பிரதேசம்
- தேசிய குற்றப்பதிவு பணியகத்தால் (NCRB) அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குஜராத் முதலிடத்தில் உள்ளது. NCRB அறிக்கையின்படி, இராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இணைந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளன.
8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘TRIPS ஒப்பந்தம்’ என்பதுடன் தொடர்புடையது எது?
அ. WTO 🗹
ஆ. UNICEF
இ. IMF
ஈ. WEF
- இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மற்றபிற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து, COVID-19 தொற்றின் நோயறிதல் & சிகிச்சை முறைகளுக்கான 5 ஆண்டு உலகளாவிய காப்புரிமை நீக்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. உலக வர்த்தக அமைப்புக்கு அளித்த சமர்ப்பிப்பில், COVID-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் இன்றியமையாத கருவிகள் என்று அந்நாடுகள் தெரிவித்தன.
9. புதைபடிவ எரிபொருட்களைக் கையாளுவதற்காக மூன்று தெரிவுகளை முன்வைத்துள்ள உலகளாவிய கால நிலை ஒப்பந்தத்தின் வரைவை வெளியிட்ட அமைப்பு எது?
அ. ஐக்கிய நாடுகள் அவை 🗹
ஆ. உலக பொருளாதார மன்றம்
இ. NITI ஆயோக்
ஈ. பன்னாட்டு செலாவணி நிதியம்
- ஐக்கிய நாடுகள் அவை உலகளாவிய காலநிலை ஒப்பந்தத்தின் சமீபத்திய வரைவை வெளியிட்டது. இது புதைபடிவ எரிபொருட்களைக் கையாளுவதற்கான மூன்று தெரிவுகளை முன்வைத்தது. அதில் முதலாவது, ‘ஒழுங்கு முறையில் பாடிப்படியாக புதைபடிவ எரிபொருட்கள் சார்பிலிருந்து வெளியேறுவது’ ஆகும்.
- இரண்டாவது, பைங்குடில் வாயுக்களின் உமிழ்வுகளைக் கைப்பற்றுவதற்கும் சேமித்து வைப்பதற்கும் வழியில்லாத திட்டங்களை விரைவாக ஒழித்துவிட்டு, 2050க்குள் ஆற்றல் உற்பத்தியில் கரியமில வாயுவின் (CO2) நடுநிலையை அடைதலுக்கு அழைப்பு விடுப்பதாகும். மூன்றாவது விருப்பம் எதுவும் செய்யாமலிருப்பதாகும். இதற்கு, ‘உரையில்லை’ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபியாவும் சீனாவும் ஆதரிக்கின்றன.
10. குப்பையில்லா நகரங்களுக்கான துளிர்நிறுவல் வாயிலை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 🗹
ஆ. MSME அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது துளிர்நிறுவல்கள் அடைவு மற்றும் புத்தாக்க மையம், IIT கான்பூருடன் இணைந்து, குப்பையில்லா நகரங்களுக்கான துளிர் நிறுவல்கள் வாயிலை அறிமுகப்படுத்தியது. இது கழிவு மேலாண்மை திறனை மேம்படுத்துதல்மூலம் இந்தியாவின் கழிவு மேலாண்மை சவால்களுக்கு தீர்வுகாண செயல்படும் துளிர் நிறுவல்களை ஆதரிக்கும். தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம்கீழ், இந்திய கழிவு மேலாண் துறைசார்ந்த துளிர்நிறுவல் சூழலை வளர்ப்பதற்காக 2022இல், ‘ஸ்வச்சதா ஸ்டார்ட்அப் சவால்’ தொடங்கப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாடு கேட்டது `5060 கோடி: மத்திய அரசு அறிவித்திருப்பது `450 கோடி
தமிழ்நாட்டில், ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய `5060 கோடி தேவை என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், `450 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2. காஸா விவகாரம்: அபூர்வ சட்டப்பிரிவைக் கையிலெடுத்த குட்டெரெஸ்.
காஸாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஐக்கிய நாடுகளின் (ஐநா) பாதுகாப்பு அவையின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகவும் அபூர்வமாகப் பயன்படுத்தப்படும் ஐநாஇன் 99ஆவது சட்டப்பிரிவை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கையிலெடுத்துள்ளார்.
ஐநா பொதுச்செயலர்கள் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானதாகும். இதற்கு முன்னர் கடந்த 1971ஆம் ஆண்டில் அப்போதைய ஐநா பொதுச்செயலர் யு. தான்ட்தான் இந்தப் பிரிவைப் பயன்படுத்தினார். அப்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்த சட்டப்பிரிவை அவர் பயன்படுத்தினார். அந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்று, கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதி வங்கதேசமாக உருவெடுத்தது நினைவுகூரத்தக்கது.
3. 2024-இல் மாக்-3, 3 GSLV, 6 PSLV இராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் ISRO.
“இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அடுத்த ஆண்டில் (2024) ஒரு LVM (மாக்-3) ராக்கெட், 3 GSLV, 6 PSLV ராக்கெட்டுகளை விண்ணில் ஏவவுள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்தது.
ISRO 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக புதிய சிறிய இரக செயற்கைக்கோள்களை செலுத்த வடிவமைக்கப்பட்ட SSLV ராக்கெட் மூலமாக தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மனிதர்களை விண்ணுக்கனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு இரண்டு முறை அனுப்பி பரிசோதிக்க உள்ளது. கூடுதலாக, விண்கலம் விண்ணை நோக்கிப் பயணிக்கும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறும் பன்முக சோதனையையும் ISRO மேற்கொள்ளும். மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகலத்தை ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கும் பரிசோதனையை இரண்டு முறை மேற்கொள்ள உள்ளது.
நியோஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் வணிகரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘ஜிசாட்20’ தகவல்தொடர்பு செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் ISRO நிலைநிறுத்த உள்ளது. இவைதவிர, 6 PSLV ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது. இந்த ராக்கெட்டுகள்மூலம் விண்வெளி அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 2 தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள்கள், NSILஇன் 2 வணிக ரீதியிலான திட்டத்தின் கீழான செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவவுள்ளது. மேலும், 3 GSLV ராக்கெட்டுகள் செலுத்தும் திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வு செயற்கைக்கோள், கண்காணிப்பு செயற்கைக்கோள், NASA-ISRO கூட்டு ரேடார் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தை ISRO செயல்படுத்தவுள்ளது. அதோடு, NSILஇன் வணிக ரீதியிலான திட்டத்தின்கீழ் LVM3 (மாக்-3) ராக்கெட்மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தையும் ISRO செயல்படுத்தவுள்ளது.