TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 8th & 9th October 2023

1. ISROஇன் Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) என்பது கீழ்காணும் எந்தத் திட்டத்துக்கான முதன்மைச் சோதனையாகும்?

அ. ஆதித்யா எல்1

ஆ. மங்கள்யான்

இ. சந்திரயான்-3

ஈ. ககன்யான் 🗹

  • Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம், மனிதர்களை தாழ் புவி சுற்றுப் பாதையில் செலுத்தி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவரும் திறனைச் சோதிப்பதாகும். TV-D1 என்பது Crew Module (CM) மற்றும் Crew Escape Systems (CES) ஆகியவற்றைக் கொண்டு செல்லும் ஒற்றை-நிலை திரவ ஏவுகலம் ஆகும்.

2. அண்மையில், ‘Iron Swords’ என்றவொரு ஆபரேஷனை தொடங்கிய நாடு எது?

அ. உக்ரைன்

ஆ. இஸ்ரேல் 🗹

இ. ரஷ்யா

ஈ. அமெரிக்கா

  • பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்மையில் இஸ்ரேலால் ‘ஆபரேஷன் அயன் ஸ்வாட்ஸ்’ தொடங்கப்பட்டது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் குறைந்தது 100 பேர் இறந்திருக்கலாம். ‘ஆபரேஷன் அயன் ஸ்வாட்ஸ்’ ஆனது இஸ்ரேலுக்குள் நுழைந்து பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படைகள்மீது தாக்குதல்களை நடத்தும் செயல்களை குறிவைக்கிறது. இதன் காரணமாக காசாவில் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

3. பீகாரைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் இரண்டாவது மாநிலம் எது?

அ. இராஜஸ்தான் 🗹

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தரப்பிரதேசம்

ஈ. உத்தரகாண்ட்

  • இராஜஸ்தான் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பீகாருக்குப் பிறகு, இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இரண்டாவது மாநிலம் இராஜஸ்தான் ஆகும். ‘மகாத்மா’ காந்தியின் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 63 சதவீதம் உள்ளதாக பீகார் மாநிலம் வெளிப்படுத்தியிருந்தது.

4. அதிவேகமான, விலை குறைவான அகலக்கற்றை இணைய சேவையை வழங்கும் ‘புராஜெக்ட் குய்ப்பர்’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்?

அ. ஸ்பேஸ் X

ஆ. அமேசான் 🗹

இ. புளூ ஆர்ஜின்

ஈ. கூகிள்

  • ‘Project Kuiper’ என்பது அமேசானின் ஒரு துணை நிறுவனமாகும்; இது கடந்த 2019இல் நிறுவப்பட்டது. இணையம் சென்று சேராத இடங்களுக்கு அதிவேகமான, விலை மலிவான அகலக்கற்றை இணைய சேவையை வழங்குவதே இதன் குறிக்கோளாகும். அமேசான் நிறுவனமானது சமீபத்தில் புளோரிடாவில் $120 மில்லியன் டாலர் மதிப்பிலான முன்செயலாக்க வசதியை திறந்து வைத்தது. அதன் திட்டமிட்ட இணையச் சேவைக்காக முதல் ஜோடி சோதனை செயற்கைக்கோள்களையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Draconid” என்ற பதத்துடன் தொடர்புடையது?

அ. பாதுகாப்பு அமைப்பு

ஆ. விண்கல் மழை 🗹

இ. மென்பொருள் பிழை

ஈ. கடல்வாழ் உயிரினங்கள்

  • ‘டிராகோனிட்’ விண்கல் மழையானது அக்.6-10, 2023 முதல் நிகழவுள்ளது; இதன் உச்சபட்ச நிகழ்வு அக்.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை நேரத்தில் இம்மழை சிறப்பாகக் காணப்படும். ‘டிராகோனிட்’ விண்கல் மழைக்கு டிராகோ விண்மீன் தொகுதியின்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியில் இருந்து பார்க்கும் போது இவ்விண்கற்கள் வானத்தின் இந்தப் பகுதியில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது.

6. சமீபத்தில் உலகின் மிகவும் அதிக பதக்கம் வென்ற சீருடற்பயிற்சியாளரான சிமோன் பைல்ஸ் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா 🗹

ஆ. கனடா

இ. ஆஸ்திரேலியா

ஈ. இங்கிலாந்து

  • அமெரிக்க சீருடற்பயிற்சி வீராங்கனை சிமோன் பைல்ஸ் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரத்தில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல்ரவுண்ட் தங்கத்துடன் தனது 21ஆவது உலக பட்டத்தை வென்றார். இதன்மூலம் சிமோன் பைல்ஸ் இப்போது உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் 34 பதக்கங்களுடன் உலகின் மிகவும் அதிக பதக்கம் வென்ற சீருடற்பயிற்சி வீராங்கனை ஆனார்.

7. கங்கை டால்பின்களின் அண்மைய கணக்கெடுப்பானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் எந்த வனவுயிரிகள் சரணாலயத்தில் நடத்தப்பட்டது?

அ. பகீரா சரணாலயம்

ஆ. சந்திர பிரபா வனவுயிரிகள் சரணாலயம்

இ. ஹஸ்தினாபூர் வனவுயிரிகள் சரணாலயம் 🗹

ஈ. கச்சுவா சரணாலயம்

  • உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹஸ்தினாபூர் வனவுயிரிகள் சரணாலயத்தில் கங்கையாற்று ஓங்கில்களின் சமீபத்திய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்மூலம் கங்கையாற்றில் தற்போது 50 டால்பின்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது; கடந்த 2020ஆம் ஆண்டைய கணக்கெடுப்பில் 41 டால்பின்கள் இருந்தன. சுமார் 2,500-3,000 கங்கையாற்று ஓங்கில்கள் வனப்பகுதியினுள் வாழ்ந்து வருகின்றன.
  • ககிர்மாதா கடல் சரணாலயம் மற்றும் பிதர்கனிகா சரணாலயங்களில் கடந்த ஆண்டு 342ஆக இருந்த ஓங்கில் எண்ணிக்கை தற்போது 540ஆக உயர்ந்துள்ளது. பர்மன் ஆற்றில் 2013இல் 35 கங்கை டால்பின்கள் இருந்தன; அது 2021இல் 50ஆக உயர்ந்தது. சிலிகா ஏரியில் 2021இல் 188 ஐராவதி ஓங்கில்கள் இருந்தன; அது கடந்த 2020 ஆம் ஆண்டில் 163ஆக இருந்தது.

8. கொள்கை ரீதியான ரெப்போ விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் எந்தக் குழு தீர்மானிக்கிறது?

அ. பணவியல் கொள்கை குழு 🗹

ஆ. நிதி உள்ளடக்கக் குழு

இ. ஒழுங்குமுறை குழு

ஈ. பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வுக் குழு

  • இந்திய ரிசர்வ் வங்கியானது முக்கிய வட்டி விகிதங்கள், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவுசெய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக கொள்கை ரீதியான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருக்க முடிவுசெய்தது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையைத் தொடர்கிறது. ரிசர்வ் வங்கி கடைசியாக ரெப்போ விகிதத்தை பிப்.08, 2023 அன்று 6.5%ஆக உயர்த்தியது. கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (Payments Infrastructure Development Fund) திட்டத்தை டிச.31, 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது.

9. மனிதாபிமான அடிப்படையிலான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியை நடத்துகிற மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கோவா 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. பஞ்சாப்

  • மூன்று நாள் நடைபெறும் வருடாந்திர கூட்டு மனிதாபிமான அடிப்படையிலான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி கோவாவில் நடைபெறும். இந்தியப்பெருங்கடல் பகுதியில் உள்ள பிற எட்டு நாடுகள் இதில் பங்கேற்கும். இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது; மேலும் இந்திய கடலோர காவல்படை, NDMA, NDRF, NIDM மற்றும் தேசிய தொலைநிலை உணர்திறன் முகமைகளுடன் இணைந்து முப்படைகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கும்.

10. எந்த நாட்டின் உச்சநீதிமன்றம், ‘அணுகல்தன்மைக்கான குழு’வை அமைத்து சைகை மொழிக்கெனத் தனி மொழிபெயர்ப்பாளரை நியமித்துள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. இந்தியா 🗹

ஈ. ஜெர்மனி

  • செவித்திறன் குறைபாடுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நீதித்துறை நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு சைகை மொழிக்கான மொழிபெயர்ப்பாளரை நியமித்தது. அனைத்து அரசியலமைப்பு அமர்வு விசாரணைகளுக்கும் மொழிபெயர்ப்பாளர் இடம்பெற்றிருப்பார். சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் நியமனம் நீதித்துறை அமைப்பை மேலும் உள்ளடக்கியதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும். தலைமை நீதியரசர் D Y சந்திரசூட் அவர்கள் கடந்த ஆண்டில் அணுகல் தொடர்பான உச்சநீதிமன்றக் குழுவை அமைத்திருந்தார்.

11. ஆசிய விளையாட்டுப் போட்டியில், எந்த நாட்டின் ஹாக்கி அணி தங்கப்பதக்கத்தை வென்றது?

அ. சீனா

ஆ. பாகிஸ்தான்

இ. இந்தியா 🗹

ஈ. ஜப்பான்

  • ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் 2 கோல்களும், மன்பிரீத், அமித் ரோஹிதாஸ், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை மீண்டும் பெற்றுள்ளது. இந்தியா இதுவரை 17 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடியுள்ளது.

12. NABARDஇன் அண்மைய அறிக்கையின்படி, சுய உதவிக் குழுக்களின் சேமிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா

இ. ஆந்திரப் பிரதேசம் 🗹

ஈ. பீகார்

  • NABARD வங்கியின் அறிக்கையின்படி, சுயஉதவி குழுக்களின் (SHGs) சேமிப்பின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரப்பிரதேச சுய உதவிக்குழுக்கள் `18,606 கோடியும், தெலுங்கானா மாநில சுய உதவிக் குழுக்கள் `5,156 கோடியும் சேமித்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்துடன் (89%) ஒப்பிடுகையில், தெலுங்கானாவில் அதிக சதவீத SHGs கடன்கள் (97%) நிலுவையில் உள்ளன.

13. ‘சர்க்கரை விலைக் குறியீட்டை’ வெளியிடும் நிறுவனம் எது?

அ. NABARD

ஆ. FAO 🗹

இ. UNEP

ஈ. FSSAI

  • உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) கூற்றுப்படி, உலக சர்க்கரை விலை செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. FAOஇன் சர்க்கரை விலைக் குறியீடு கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 9.8 சதவீதம் உயர்ந்துள்ளது; இது 2010 நவம்பருக்குப் பிறகு மிகவுயர்ந்த புள்ளியாகும். FAO ஆனது சர்க்கரை விலைகள் அதிகரிப்பதற்கு எல் நினோ வானிலை நிகழ்வை காரணமாகக் கூறுகிறது; இந்த நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது.

14. ’பிரைட் ஸ்டார்’ பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. எகிப்து 🗹

இ. அமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்திய வான்படையின் MiG-29 போர் விமானங்கள் எகிப்தில் நடந்த ‘பிரைட் ஸ்டார்’ பயிற்சியில் பங்கேற்றன. இது எகிப்தில் உள்ள கெய்ரோ வான்படைத்தளத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பலதரப்பு முப்படைகளின் பயிற்சியாகும். இப்பயிற்சியில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகள் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வெல்லப்பாகு மீதான GST வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது.

வெல்லப்பாகு மீதான GST வரியை 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைகிறது. இந்நடவடிக்கை ஆலைகளில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகையை விரைவாக வழங்கவும் உதவும். இதன்மூலம் கால்நடை தீவனம் தயாரிப்பதற்கான செலவும் குறையும்.

2. நீலகிரி வரையாடு திட்டம்: அக்.12 அன்று தொடக்கம்.

டாக்டர் ERC டேவிதாருக்கு மரியாதை செய்யும்விதமாக ஒவ்வோராண்டும் அக்.07ஆம் நாள் நீலகிரி வரையாடு நாளாக கடைப்பிடிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவித்திருந்தார். டாக்டர் ERC டேவிதார் தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு குறித்த ஆய்வை கடந்த 1975ஆம் ஆண்டிலேயே முன்னெடுத்த முன்னோடியாவார். நீலகிரி வரையாடு திட்டம் வரும் அக்.12 அன்று தொடங்கப்படவுள்ளது.

3. ஆதித்யா எல்1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு

சூரியனின் புறவெளியை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த ISRO, அதை PSLV C-57 ஏவுகலம்மூலம் கடந்த செப்.2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

பூமியில் இருந்து 15 இலட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் எல்1 பகுதிக்கு அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாகக் கொண்ட சூரிய ஒளிவட்டப்பாதையில் (ஹாலோ ஆர்பிட்) நிலைநிறுத்தப்படவுள்ளது. அங்கிருந்த படியே எல்1 பகுதியை மையமாகக்கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோ ஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வு செய்யும்.

4. சாதனையுடன் நிறைவு செய்தது இந்தியா!

சீனாவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் அக்டோபர்.08 அன்று நிறைவடைந்தன. கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் 15 நாள்கள் நடைபெற்றது.

நிகழ்வின் முடிவில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பொறுப்புத்தலைவரான ரண்தீர்சிங், அடுத்த எடிஷனை 2026இல் நடத்த இருக்கும் ஜப்பானின் நகோயா அய்சி நகரத்தின் ஆளுநரிடம் ஒப்படைத்தார். முதன்முறையாக பதக்க எண்ணிக்கையில் 100ஐ கடந்து 107 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது. இந்தியாவைப் பொருத்தவரை, 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் பெற்றுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!