Tnpsc Current Affairs in Tamil – 7th November 2023
1. 2024ஆம் ஆண்டில் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் பேரவையை நடத்தும் நாடு எது?
அ. இந்தியா 🗹
ஆ. சீனா
இ. வங்காளதேசம்
ஈ. சவூதி அரேபியா
- அடுத்த ஆண்டு உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் பேரவையை இந்தியா நடத்தவுள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்பேரவை என்பது ITU தரநிலைப்படுத்தல் துறையின் (ITU-T) ஆளுகை மாநாடு ஆகும். இது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மூன்று உலக மாநாடுகளுள் ஒன்றாகும்.
2. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான அடுத்த பிராந்திய இயக்குநரான சைமா வசீத் சார்ந்த நாடு எது?
அ. இந்தியா
ஆ. வங்காளதேசம் 🗹
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. மியான்மர்
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வசீத், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அடுத்த பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான WHO பிராந்தியக் குழுவின் 76ஆவது அமர்வின்போது நடைபெற்ற வாக்கெடுப்பில், நேபாளத்தைச் சேர்ந்த ஷம்பு ஆச்சார்யாவை சைமா வசீத் தோற்கடித்தார்.
3. ‘பன்னாட்டு உயிர்க்கோளக் காப்பகங்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
அ. நவம்பர்.01
ஆ. நவம்பர்.03 🗹
இ. நவம்பர்.05
ஈ. நவம்பர்.07
- கடந்த 2022ஆம் ஆண்டில், UNESCOஇன் பொது மாநாட்டின் 41ஆவது அமர்வில், நவ.03ஆம் தேதியை பன்னாட்டு உயிர்க்கோளக் காப்பகங்கள் நாளென கொண்டாடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக உள்ள காப்புப்பகுதிகளாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளையே மனிதர்களும் தங்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளுக்குச் சார்ந்துள்ளனர். 134 நாடுகளில் மொத்தம் 738 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன; இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
4. இந்தியாவின், ‘பசி திட்டத்திற்கு’ நிதியுதவி அளித்து, உத்தரகாண்டில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிற நாடு எது?
அ. பிரான்ஸ்
ஆ. இங்கிலாந்து
இ. கனடா
ஈ. நார்வே 🗹
- நார்வே நாடு இந்தியாவின், ‘பசி திட்டத்திற்கு’ நிதியுதவி அளிப்பதோடு உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உணவுப்பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும். இத்திட்டத்தின் காலம் 2026 செப்டம்பர் வரை $44.7 மில்லியன் செலவினத்தில் மூன்றாண்டுகள் அமலிலிருக்கும். வனப்பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சியை இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யும்.
5. 2023ஆம் ஆண்டுக்கான, ‘உலகளாவிய பொறுப்புமிகு சுற்றுலா’ விருதை பெற்ற இந்திய மாநிலம் எது?
அ. அஸ்ஸாம்
ஆ. கேரளா 🗹
இ. கோவா
ஈ. உத்தரகாண்ட்
- கேரளத்தின் பொறுப்புமிக்க சுற்றுலா இயக்கத்தால் வெற்றிகரமாக ஊக்குவிக்கப்பட்ட அதன் நிலையான மற்றும் மகளிரை உள்ளடக்கிய முன்னெடுப்புகளுக்காக, 2023ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொறுப்புமிக்க சுற்றுலா விருதை கேரள மாநிலம் பெற்றது. ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கப் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட உலகளாவிய பொறுப்புமிக்க சுற்றுலா விருதுகள், நெகிழிக்கழிவுகளைக் கையாளுவது; அர்த்தமுள்ள இணைப்புகள்; உள்ளூர் மூலாக்கம் – கைவினை மற்றும் உணவு; காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகாணல்; பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் மற்றும் இயற்கைக்குகந்த சுற்றுலா உட்பட ஆறு பிரிவுகளில் வழங்கப்பட்டன.
6. இந்தியாவின் இராணுவத் திட்டங்களில் 100% அந்நிய நேரடி முதலீட்டைச் செய்த முதல் அயல்நாட்டு நிறுவனம் எது?
அ. போயிங்
ஆ. லாக்ஹீட் மார்ட்டின்
இ. சாப் 🗹
ஈ. ஜெனரல் டைனமிக்ஸ்
- இந்தியாவின் இராணுவத் திட்டங்களில் 100% அந்நிய நேரடி முதலீட்டைச் செய்த முதல் அயல்நாட்டு நிறுவனம் என்ற பெருமையை சுவீடனின் சாப் பெற்றுள்ளது. ஓரறிக்கையின்படி, சுவீடனின் சாப் நிறுவனம் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஏவப்படும் எறிகணைகளைத் தயாரிக்கும் புதிய அலகை நாட்டில் அமைக்கவுள்ளது. தற்போது, இந்தியா பாதுகாப்புத் துறையானது, 74% வரை அந்நிய நேரடி முதலீட்டை மட்டுமே அனுமதிக்கிறது. அதையும் தாண்டி, சில சிறப்பு வகையின்கீழ் அனுமதி அழிக்கப்படுகிறது.
7. Cnemaspis rashidi என்பது அண்மையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்காணும் எந்த உயிரினத்தின் ஒரு வகையாகும்?
அ. சிலந்தி
ஆ. ஆமை
இ. மரப்பல்லி 🗹
ஈ. வண்ணத்துப் பூச்சி
- தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிய வகை மரப்பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தைச் சேர்ந்த மூத்த அறிவியலாளர் அமித் சையீத் அவர்களால் வழிநடத்தப்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இக்கண்டுபிடிப்பை புரிந்துள்ளது. இதுவரை ஆவணப்படுத்தப்படாத இந்த உயிரினத்திற்கு தனது தந்தை பேராசிரியர் ரஷித் சையீத்தின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.
8. ‘Arrow Missile’ இராணுவ அமைப்புடன் தொடர்புடைய நாடு எது?
அ. இஸ்ரேல் 🗹
ஆ. இத்தாலி
இ. ரஷ்யா
ஈ. அமெரிக்கா
- ஏமனில் ஈரானியர்களால் ஏவப்பட்ட எறிகணையை இஸ்ரேலின் ஏரோ மிசைல் இராணுவ அமைப்பு இடைமறித்து உள்ளது; இது எறிகணை பாதுகாப்பு தொழினுட்பத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை குறிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த இராணுவ அமைப்பு பலவிதமான எறிகணைகளுக்கு எதிராக திறனை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
9. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய அருமண் வழங்கு நாடு எது?
அ. இந்தியா
ஆ. பிரேஸில்
இ. சீனா 🗹
ஈ. ஆஸ்திரேலியா
- உலகின் மிகப்பெரிய அருமண் வழங்கு நாடாக சீனா, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அருமண் தொழிற்துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. சீனா, நடப்பு 2023ஆம் ஆண்டிற்கான அதன் அருமண் உலோக உற்பத்தி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைவிட 14% அதிகரித்து 240,000 டன்களாக உயர்த்தியுள்ளது. அதன் வளர்ச்சியடைந்து வரும் மின்சார வாகனத் தொழிலுக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அருமண் இருப்புக்களை சீனா தன்னகத்தே கொண்டுள்ளது.
10. ‘M-கவாச் 2’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இயலி (bot) அகற்றும் கருவியாகும்?
அ. NIC
ஆ. C-DAC 🗹
இ. HAL
ஈ. EIL
- ஹைதராபாத்தில் உள்ள C-DAC உருவாக்கிய ஆண்ட்ராய்டு சாதனங்களின் இயலி அகற்றும் கருவியின் பெயர் ‘M-கவாச் 2’ ஆகும். ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக இ-ஸ்கேன் உருவாக்கிய இயலி அகற்றும் கருவியின் பெயர் ‘eScan CERT-In Bot Removal’ ஆகும். இயலிகள் என்பன தானே தன்னறிவோடு இயங்கவல்ல செய்திறன் பொறி அல்லது அமைப்பாகும். சாதனங்களில் குப்பைக்கோப்புக்களை உருவாக்குதல், தரவுகளை அழித்தல் அல்லது திருடல் அல்லது தீங்கிழை செயல்கள் மேற்கொள்வதுபோன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படலாம்.
11. 2023-24ஆம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு (MGNREGS) ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?
அ. ரூ.40,000 கோடி
ஆ. ரூ.60,000 கோடி 🗹
இ. ரூ.80,000 கோடி
ஈ. ரூ.90,000 கோடி
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) அவசர நிதி உதவியாக `10,000 கோடியை நிதி அமைச்சகம் விடுவித்தது. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் எதிர்பாராமல் அதிகரித்த செலவினங்களைச் சமாளிக்க இந்த நிதி விடுவிக்கப்பட்டது. மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதி, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படும் வரை இந்த நிதி உதவும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு, 2023-24 வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட `60,000 கோடியில் 95% நிதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே தீர்ந்துவிட்ட நிலையைல் இந்த அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12. 2023ஆம் ஆண்டில், ஜோகூர் சுல்தான் கோப்பையை வென்ற நாடு எது?
அ. இந்தியா
ஆ. பாகிஸ்தான்
இ. ஜெர்மனி 🗹
ஈ. ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி தனது இரண்டாவது ஜோகூர் சுல்தான் கோப்பையை வென்றது. ஜோகூர் சுல்தான் கோப்பையில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
13. இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றுள்ளவர் யார்?
அ. பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா
ஆ. ஹீரலால் சமரியா 🗹
இ. நிதின் அகர்வால்
ஈ. R ஹரி குமார்
- தகவலாணையர் ஹீரலால் சமரியா தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார். இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஹீரலால் சமரியா தற்போது மத்திய தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
14. கீழ்காணும் எந்த நிறுவனம், தான்சானியாவில் அதன் சான்சிபார் (ஆப்பிரிக்கா) வளாகத்தை திறந்து வைத்தது?
அ. IISc பெங்களூரு
ஆ. IIT மெட்ராஸ் 🗹
இ. IIT பாம்பே
ஈ. BITS
- IIT மெட்ராஸ் (IIT-M) ஆனது அதன் சான்சிபார் (ஆப்பிரிக்கா) வளாகத்தை முறையாகத் திறந்து வைத்தது. சான்சிபார் என்பது ஒரு தீவாகும். இது ஆப்பிரிக்காவின் கீழைக் கடற்கரையில் அமைந்துள்ள தான்சானியாவிற்கு சொந்தமான ஒரு தீவாகும். பல நூற்றாண்டுகளாக மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பாதைகளில் இந்தத்தீவு முக்கிய துறைமுகமாக இருந்து வருகிறது. சான்சிபார் வளாகத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் அறிவியல் பள்ளியின் முதன்மையர் மற்றும் பொறுப்பு இயக்குநராக பிரீத்தி அகாலயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வைஷாலி, விதித் குஜராத்திக்கு பட்டம்.
பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர் வைஷாலி, விதித் குஜராத்தி ஆகியோர் முறையே மகளிர் மற்றும் ஓப்பன் பிரிவுகளில் பட்டம் வென்றனர். கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் சாம்பியனாகிய முதல் இந்தியர் என்ற பெருமையை வைஷாலி பெற்றார். இப்போட்டியில் அவருக்குப் பிறகு விதித் வென்றார். பட்டம் வென்ற விதித் குஜராத்திக்கு கோப்பையுடன் `66 இலட்சமும், தமிழ்நாட்டின் வைஷாலிக்கும் கோப்பையுடன் `20 இலட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO
https://wp.me/p7JanY-ag8