Tnpsc Current Affairs in Tamil – 7th March 2024
1. இந்திரம்மா வீட்டுவசதித் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. தெலுங்கானா
இ. கர்நாடகா
ஈ. கேரளா
- தெலுங்கானா மாநில முதலமைச்சர் A ரேவந்த் ரெட்டி, இந்திரம்மா வீட்டுவசதித் திட்டத்தை மார்ச்.11ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக அறிவித்தார். இந்தத் திட்டமானது நலிவடைந்த பிரிவினருக்கு வீடுகட்டித் தருவதன்மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் நிலம் வைத்திருந்து வீடில்லாமல் இருப்பவர்களுக்கு தங்கள் மனைகளில் வீடுகட்டுவதற்கு `5 லட்சமும், அதே நேரத்தில் நிலமில்லாதவர்களுக்கு நிலமும் அதே தொகையுடன் வீடுகட்டுவதற்கான மனையும் சேர்த்து வழங்கப்படும்.
2. 2024 – உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Ear and hearing care for all! Let’s make it reality
ஆ. Changing mindsets: Let’s make ear and hearing care a reality for all
இ. To hear for life, listen with care
ஈ. Action for hearing loss: make a sound investment
- ஆண்டுதோறும் மார்ச்.03 அன்று உலக செவித்திறன் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Changing mindsets: Let’s make ear and hearing care a reality for all” என்பதாகும். இந்த நாள் சிகிச்சை மற்றும் ஒட்டுமொத்த காதுநலம் குறித்த சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது தனிநபர்கள் தங்கள் செவிப்புலனைப் பாதுகாக்கவும், செவிப்புலன் தொடர்பான சிக்கல்களுக்கு உதவிபெறவும் ஊக்குவிக்கிறது.
3. ஓக்லா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. மத்திய பிரதேசம்
இ. உத்தர பிரதேசம்
ஈ. பீகார்
- 2024 மார்ச்.03 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தலைமையிலான WWF EIACP PC-RP, ஓக்லா பறவைகள் சரணாலயத்தில் உலக வனவிலங்கு நாளைக் கொண்டாடியது. அதன் வளமான பல்லுயிர்தன்மை மற்றும் ‘Mission LiFE’ நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது இக்கொண்டாட்டம். உத்தர பிரதேச மாநிலத்தில் நொய்டாவின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம், 4 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. மாநிலத்தின் 15 பறவைகள் சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. மார்ச்.04
ஆ. மார்ச்.05
இ. மார்ச்.06
ஈ. மார்ச்.07
- இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச்.04 அன்று அனுசரிக்கப்படும் தேசிய பாதுகாப்பு நாள் என்பது தேசிய பாதுகாப்பு வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளை வலியுறுத்தி, நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Safety for a Sustainable Future” என உள்ளது. இக்கருப்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நீடிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நாள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
5. அண்மையில் புவிசார் குறியீடுபெற்ற ரூபா தர்காஷி (வெள்ளிச்சரிகை சித்திரவேலை) என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. அஸ்ஸாம்
இ. ஒடிஸா
ஈ. கேரளா
- கட்டாக்கின் புகழ்பெற்ற ரூபா தர்காஷி (வெள்ளிச்சரிகை சித்திரவேலை) சென்னையில் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவகத்திடமிருந்து புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. ஒடிஸா மாநில கூட்டுறவு கைவினைப்பொருட்கள் லிட்ஆல் இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது; ஒடிஸா மாநில அரசாங்கத்தின் ஜவுளி மற்றும் கைவினைத்துறையால் இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. இந்த வெள்ளிச்சரிகை சித்திரவேலை என்பது பாரம்பரிய நகைகளில் நேர்த்தியான கைவினைத்திறனைக் கொண்டுள்ளது. சுமார் பொஆமு 3500-க்கு முந்தைய மெசபடோமிய நாகரிகத்தைச் சார்ந்த இது, 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வாணிபம்மூலம் பெர்சியாவிலிருந்து இந்தோனேசியா வழியாக கட்டாக் நகருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
6. அண்மையில், புது தில்லியில் பெருங்கடல் குறித்த, ‘நீலப்பேச்சுகள்’ கூட்டத்தை நடத்திய அமைச்சகம் எது?
அ. புவி அறிவியல் அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. வேளாண் அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- புவி அறிவியல் அமைச்சகமானது முதல், ‘நீலப்பேச்சுகள்’ கூட்டத்தை 2024 பிப்.29 அன்று புது தில்லியில் நடத்தியது. இந்தச் சந்திப்பில் பிரான்சு தூதரகமும் இந்தியாவில் உள்ள கோஸ்டாரிகா தூதரகமும் இணைந்து செயல்பட்டன. இந்தியாவுக்கான பிரான்சு தூதரும் கோஸ்டாரிகாவின் தூதரும் இதன் இணை-ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். இச்சந்திப்பில் கடல்சார் சுகாதாரம் மற்றும் நிர்வாகம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
7. அண்மையில், இந்திய அறிவியலாளர்கள் பின்வருவனவற்றில் எதில் இருந்து ஒரு சுற்றுச்சூழலுக்குகந்த ஒரு காயக்கட்டுத்துணியை உருவாக்கியுள்ளனர்?
அ. வாழை நார்
ஆ. பருத்தியிழை
இ. மென்மர நார்
ஈ. சணல் நார்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் (IASST) இந்திய அறிவியலாளர்கள் வாழை நார்களிலிருந்து ஒரு புதிய காயக்கட்டுத்துணி தயாரிக்கும் பொருளை உருவாக்கியுள்ளனர். பலபணி ஒட்டும் தன்மையுள்ள இப்பொருள், வாழை நார்களை சிட்டோசன் மற்றும் கோந்து போன்ற உயிரி-பாலிமர்களுடன் இணைக்கிறது. இது சிறந்த வலிமையும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது.
8. அண்மையில், மீளாக்க மருத்துவத்துறையில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான, ‘மகாராஷ்டிர பூஷன் விருது’ வழங்கப்பட்டுள்ளது?
அ. பிரதீப் மகாஜன்
ஆ. அசோக் சரஃப்
இ. பாபாசாகேப் புரந்தரே
ஈ. அனில் ககோட்கர்
- ஸ்டெம்Rx நிறுவனரும் CMDஉமான Dr பிரதீப் மகாஜன், மீளாக்க மருத்துவத்தில் அவராற்றிய பங்களிப்புகளுக்காக, 2024ஆம் ஆண்டுக்கான, ‘மகாராஷ்டிர பூஷன்’ விருதைப் பெற்றார். அவரது தனித்துவமான அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்பு மேம்பட்ட அறிவியல் புரிதல் மற்றும் உலகளவில் புதுமையான சிகிச்சை முறைகளை வழங்கியுள்ளது.
9. நவா ஷேவா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. குஜராத்
ஈ. கேரளா
- மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பைக்கு கிழக்கே உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் இரட்டைப் பயன்பாடுகொண்ட கப்பலை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜவஹர்லால் நேரு துறைமுகம் என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் பரபரப்பான துறைமுகமாகும், இது நாட்டின் வாணிபத்தில் பாதியைக் கையாளுகிறது. மும்பையின் நெரிசலைக் குறைப்பதற்காக 1989இல் தொடங்கப்பட்ட இது, இப்போது கொள்கலன் சரக்குகளுக்கான ஐந்து முனையங்களைக் கொண்டுள்ளது.
10. ஹஜ் யாத்ரீகர்களுக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
அ. ஹஜ் பில்கிரிம்ஸ் செயலி
ஆ. ஹஜ் சுவிதா செயலி
இ. ஹஜ் சேவா செயலி
ஈ. ஹஜ் யாத்ரா செயலி
- ‘ஹஜ் சுவிதா’ செயலியை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தொடக்கி வைத்தார்; இது முக்கியமான தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன்மூலம் ஹஜ் புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. BISAG-Nஇன் வழிகாட்டுதலின்கீழ் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, புனிதப் பயணப் போக்குவரவுச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
11. துருப்பிடிக்காத எஃகு துறைக்கான நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
அ. ஹரியானா
ஆ. உத்தரபிரதேசம்
இ. குஜராத்
ஈ. ராஜஸ்தான்
- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய M சிந்தியா, ஹரியானா மாநிலம் ஹிசார், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்டில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை திறந்து வைத்தார். துருப்பிடிக்காத எஃகுத் துறையில் உலக அளவில் நிறுவப்பட்ட முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையான இது, மிதக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் 2,700 மெட்ரிக் டன்கள் வரையும் இருபது ஆண்டுகளில் 54,000 டன்கள் வரையும் கரியமில வாயும் உமிழ்வைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டது.
12. தனது அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு எது?
அ. ஜெர்மனி
ஆ. பிரான்ஸ்
இ. போலந்து
ஈ. மலேசியா
- பிரான்ஸ் தனது நாட்டின் அரசியலமைப்பில் கருக்கலைப்பு செய்யும் உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது. ஒரு முதன்மை கூட்டு நாடாளுமன்ற அமர்வில், 780 வாக்குகள் பெரும்பான்மையுடன் இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த வரலாற்று முடிவு பிரெஞ்சு அரசியலமைப்பின் 34ஆவது பிரிவில் வெளிப்படையான தெளிவான விளக்கத்தைச் சேர்த்துள்ளது. இது சட்ட கட்டமைப்பிற்குள் கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இலட்சத்தீவுகளில், ‘INS ஜடாயு’ கடற்படை தளம் திறப்பு.
பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலட்சத்தீவுகளில், ‘INS ஜடாயு’ கடற்படைத் தளம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கடற்படை தளம் மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான கடற்படையின் செயல்பாடுகளுக்கு உதவும்.
நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள அந்தமானின், ‘INS பாஸ்’ கடற்படை தளமும் மேற்குப்பகுதியில் உள்ள இலட்சத் தீவுகளின், ‘INS ஜடாயு’ கடற்படை தளமும் தேசநலனைப்பாதுகாப்பதில் இந்திய கடற்படைக்கு முக்கியப் பங்களிக்கும். இலட்சத்தீவுகளின் தென்கோடியில் உள்ள மினிகாய், முக்கிய கடல்வழிப்பாதையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கவரத்தி தீவில், ‘INS துவீப்ரக்ஷாக்’ கடற்படை தளம் உள்ள நிலையில், இரண்டாவது கடற்படை தளமாக, ‘INS ஜடாயு’ அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது சூதாட்டச்சட்டம், 1867இன்கீழ் பந்தயம் மற்றும் சூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பல்வேறு சட்டங்களின்கீழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத செயல்களுக்கு விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து வகை ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் எல்லா விளம்பரங்களுக்கும் பொருந்தும்.
2. நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்.
கொல்கத்தாவின் ஹௌரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைத்தார். ஹௌரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 4.8 கிமீ, இதற்கிடையே ஹுக்ளி ஆற்றைக் கடப்பதற்காக 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரெயில் சேவையாகும்.
3. 2035ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை.
வரும் 2033ஆம் ஆண்டிலிருந்து 2035ஆம் ஆண்டுக்குள் ரஷியாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ROSCOSMOSஇன் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக, நிலவில் சர்வதேச ஆய்வு நிலையத்தை (ILRS) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ROSCOSMOSஉம், சீன விண்வெளி ஆய்வுநிறுவனமான CNSAஉம் 2021ஆம் ஆண்டு கையொப்பம் இட்டன. இதற்காக வரும் 2026ஆம் ஆண்டில் நிலவுக்கு கலங்களை அனுப்பவும், ஆய்வுநிலையம் அமைப்பதற்கான பணிகளை 2028இல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
4. ‘MH 60R ஹெலிகாப்டர்கள்’ கடற்படையில் இணைப்பு.
கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள, ‘INS கருடா’ தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில், ‘MH 60R சீஹாக்’ ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன. அமெரிக்காவிடமிருந்து 4ஆம் தலைமுறை 24 MH 60R சீஹாக் ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் 2020ஆம் ஆண்டில் கையொப்பமானது. இதுவரை ஆறு ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிநாட்டு ஏவுகணைகள், நீர் மூழ்கி ஏவுகணைகளை அழிக்கும் திறன்பெற்றவை. தன்னைத் தாக்கவரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளும், ‘சாஃப்’ மற்றும் ‘அகசிவப்பு தீப்பொறி’ அமைப்புகள் இந்த ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையில் இந்த வகை ஹெலிகாப்டர்களில் மட்டுமே இத்தகைய தற்காப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
5. 2024 – ஔவையார் விருது.
பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கானச் சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் நாளன்று (மார்ச்.08) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு `1 இலட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த வகையில், சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான ‘ஔவையார் விருதினை’ இலக்கியத்தின் மூலமாக ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்து சமூகத்தொண்டாற்றிவரும் எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமா பெறுகிறார்.