TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 6th and 7th July 2024

1. கானமயில் மற்றும் வரகுக்கோழி ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக அண்மையில் `56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதலளித்த அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

  • கானமயில் (Great Indian Bustard) மற்றும் வரகுக்கோழி (Lesser Florican) ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக `56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிற இந்தத்திட்டம், இந்த மிகவும் அருகிவிட்ட உயிரினங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இதன்மூலம் சுமார் 140 கானமயில்கள் மற்றும் 1,000-க்கும் குறைவான வரகுக் கோழிகள் உயிர்பிழைத்துள்ளன. இனப்பெருக்க மையங்கள், வாழ்விடத்திலேயே பாதுகாப்பு, செயற்கை கருவூட்டல் நுட்பங்கள் மற்றும் வேட்டையாடுதல் மற்றும் மின்கம்பி மோதல்கள் போன்ற அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை இத்திட்டத்தின் முதன்மை முயற்சிகளில் அடங்கும்.

2. அண்மையில், லியோன் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை 10ஆவது முறையாக வென்றவர் யார்?

அ. ஃபேபியானோ கருவானா

ஆ. விஸ்வநாதன் ஆனந்த்

இ. செர்ஜி கர்ஜாகின்

ஈ. மேக்னஸ் கார்ல்சன்

  • ஸ்பெயினின் லியோனில் 2024 ஜூன்.30 அன்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ஜெய்ம் சாண்டோஸ் லடாசாவை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து முன்னாள் உலக செஸ் சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10ஆம் முறையாக லியோன் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், இதற்கு முன்பு 1996, 1999, 2000, 2001, 2005, 2006, 2007, 2011, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டியை வென்றுள்ளார். லியோன் மாஸ்டர்ஸில் அர்ஜுன் எரிகைசி மற்றும் வெசெலின் டோபலோவ் உட்பட நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

3. அண்மையில், எந்த நாட்டின் கடற்படை, இந்தியாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் (GRSE) நிறுவனத்துடன், பெருங்கடலில் செல்லும் 800 டன் எடைகொண்ட இழுவைப்படகுக்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மியான்மர்

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம்

ஈ. சீனா

  • வங்காளதேச கடற்படை, இந்தியாவின் கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் (GRSE) நிறுவனத்துடன் பெருங்கடலில் செல்லும் 800 டன் எடைகொண்ட இழுவைப்படகுக்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. டாக்காவில் இறுதிசெய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு, GRSE மற்றும் வங்காளதேச கடற்படை அதிகாரிகள் சாட்சியாக இருந்தனர். இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் K திரிபாதியின் வங்காளதேசப் பயணம், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலியுறுத்துவது மற்றும் இருநாடுகளுக்கிடையே புதிய கடற்படை ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயும் இந்த ஒப்பந்தத்துடன் ஒத்துப்போனது.

4. அண்மையில், முதல் முறையாக பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) வழியாக நிலக்கரி ஏற்றிச்செல்லும் இரண்டு ரெயில்களை இந்தியாவுக்கு அனுப்பிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. உக்ரைன்

ஈ. வங்காளதேசம்

  • பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) வழியாக இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதியை ரஷ்யா முதன்முறையாக தொடங்கியுள்ளது. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக புனித பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு சுமார் 7,200 கிமீ தொலைவுக்கு இந்த இரண்டு ரெயில்கள் பயணிக்கும். இந்தியா, ஈரான், அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம், கப்பல், ரெயில் மற்றும் சாலை வலையமைப்புகளை INSTC ஒருங்கிணைக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் வழித்தடமானது போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யூரோ-ஆசிய போக்குவரத்து மாநாட்டின் போது இது ஒப்புக்கொள்ளப்பட்டது.

5. அண்மையில், ‘NTR பரோசா ஓய்வூதிய திட்டத்தை’ அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. தெலுங்கானா

இ. கர்நாடகா

ஈ. ஒடிசா

  • ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, NTR பரோசா ஓய்வூதியத் திட்டத்தை 1 ஜூலை 2024 அன்று தொடங்கினார். பயனாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஓய்வூதியம் வழங்குகிற இத்திட்டம், தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியாகும். இத்திட்டம், பல்வேறு பிரிவுகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதியை அதிகரிக்கிறது. முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் பிற நபர்களுக்கு `3,000 முதல் `4,000 வரையும் கடுமையான ஊனமுற்ற நபர்களுக்கு `15,000 வரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. சமூகப்பாதுகாப்பை மேம்படுத்துவதை இத்திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. இந்தியா-மங்கோலியா இடையேயான, ‘நாடோடி யானை – Nomadic Elephant’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 16ஆவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. கொல்கத்தா, மேற்கு வங்காளம்

ஆ. உலன்பாதர், மங்கோலியா

இ. உம்ரோய், மேகாலயா

ஈ. கௌகாத்தி, அஸ்ஸாம்

  • இந்தியா-மங்கோலியா கூட்டு இராணுவப் பயிற்சியான ‘நாடோடி யானை’ 16ஆவது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் தொடங்கியது. 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் பிற ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மங்கோலிய ராணுவத்தின் சார்பில் அந்நாட்டின் 150 விரைவு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ‘நாடோடி யானை’ பயிற்சி என்பது இந்தியாவிலும், மங்கோலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு பயிற்சி நிகழ்வாகும். கடந்த முறை இந்தப் பயிற்சி 2023 ஜூலையில் மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டு இப்பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் தம்பஜவின் கன்போல்ட் மற்றும் இந்திய இராணுவத்தின் 51 துணைப்பகுதி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா ஜோசி ஆகியோர் கலந்துகொண்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், தேடுதல் செயல்பாடுகளில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை இந்த ஆண்டு பயிற்சியில் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகிறது.

7. LOw-Frequency ARray (LOFAR)இன் முதன்மை நோக்கம் என்ன?

அ. பூமியின் மையத்தை ஆய்வு செய்தல்

ஆ. குறைந்த ரேடியோ அலைவரிசையில் பேரண்டத்தை கூர்நோக்குதல்

இ. தட்பவெப்பநிலை மாற்றத்தைக் கண்காணித்தல்

ஈ. சிறுகோள் அசைவுகளைக் கண்காணித்தல்

  • டச்சு ரேடியோ வானியல் நிறுவனத்தால் (ASTRON) உருவாக்கப்பட்ட, ஐரோப்பா முழுமைக்கும் பரவலாக்கப்பட்ட LOw-Frequency ARray (LOFAR)ஐப் பயன்படுத்தி வானியலாளர்கள் ஒரு புதிய ரேடியோ விண்மீன் மண்டலத்தைக் கண்டுபிடித்தனர். குறைந்த ரேடியோ அதிர்வெண்களில் (90-200 MHz) பேரண்டத்தை LOFAR நோக்குகிறது. இதால் ஒரே நேரத்தில் பல திசைகளை கூர்நோக்க முடியும். இது ஆரம்பகால பேரண்டம், சூரிய செயல்பாடு மற்றும் நிலப்பரப்பு வளிமண்டலத்தை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. ‘Senna spectabilis’ என்றால் என்ன?

அ. ஆக்கிரமிப்பு தாவரம்

ஆ. மீனினம்

இ. பாரம்பரிய நீர்ப்பாசன முறை

ஈ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

  • வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ‘Senna spectabilis’ஐ அகற்றும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் அண்மையில் வனத்துறையை வலியுறுத்தின. தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட ஒரு பயறு குடும்ப மரமான Senna spectabilis, இந்தியாவில் ஊடுருவி வருகிறது. பிரகாசமான மஞ்சள்நிறப் பூக்கள் மற்றும் நெகிழ்ச்சித்தன்மைக்கு பெயர்பெற்ற இம்மரம், நிழல் மற்றும் எரிபொருளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால் இப்போது அதன் அடர்த்தியான பசுமையின் காரணமாக பூர்வீக இனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

9. டௌன் நோய்க்குறி என்றால் என்ன?

அ. குரோமோசோம்கள் இல்லாததால் ஏற்படும் மரபணுக்கோளாறு

ஆ. கூடுதல் குரோமோசோம் அல்லது குரோமோசோமின் துண்டினால் ஏற்படும் நிலை

இ. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று

ஈ. ஒரு வகையான தசைநார் சிதைவு

  • ஓர் அண்மைய ஆய்வு நியண்டர்தால்களில் டௌன் நோய்க்குறியின் முதல் பாதிப்பை ஆவணப்படுத்துகிறது. டௌன் நோய்க்குறி என்பது மனிதரில் காணப்படும் 21ஆம் நிறப்புரியில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். இது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது. இதில் சிலவேறுபட்ட வகைகள் இருப்பினும் டிரைசோமி-21 / டிரைசோமி-ஜி என்னும் வகை 95% ஆகும். இந்த மரபணு நிலை மனம் மற்றும் உடல் வளர்ச்சியை பாதிக்கிறது. இந்த நிலை பொதுவாக ஆரம்பகால கரு வளர்ச்சியின்போது தோராயமாக எழுகிறது. மரபு அடிப்படையில் இது வருவதில்லை.

10. ‘Xenophrys apatani’ என்பது சார்ந்த இனம் எது?

அ. எறும்பு

ஆ. தவளை

இ. மீன்

ஈ. சிலந்தி

  • இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், டால்லே வனவிலங்கு சரணாலயத்தில், காடுகளில் வசிக்கும் தவளை இனமான, ‘Xenophrys apatani’ஐக் கண்டுபிடித்துள்ளனர். அபதானி சமூகத்தின் பாதுகாப்பு முயற்சிகளின் காரணமாக இத் தவளை இனத்திற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த இனம் கிழக்கிமாலய மற்றும் இந்தோ-பர்மா பல்லுயிர் வெப்பப்பகுதிகளில் காணப்படுகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஜிரோ பள்ளத்தாக்கில் வசிக்கும் அபதானிகள், தனி மொழி பேசுகிறார்கள்; ஞாயிறு மற்றும் திங்களை வணங்குகிறார்கள்; திரீ மற்றும் மயோகோ போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எமியோ, பியாப் மற்றும் மைபியா போன்ற நெல் வகைகளைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த நெல்-மீன் பண்ணையத்தை மேற்கொள்கிறார்கள்.

11. அண்மையில், “மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆராய்ச்சி & மேம்பாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட அரசு நிறுவனம் எது?

அ. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

ஆ. அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம்

இ. NITI ஆயோக்

ஈ. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

  • இந்திய மாநிலப் பல்கலைக்கழகங்களில் R&D பற்றிய NITI ஆயோக்கின் அறிக்கை, R&D (GERD)க்கான மொத்தச் செலவினம் 2010-11இலிருந்த `60,197 கோடியிலிருந்து 2020-21இல் `127,381 கோடியாக இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட அரசு துறைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் GERDஐ இயக்குகின்றன. R&D புதுமைகளை வளர்க்கிறது, தொழில்துறை தேவைகளுடன் கல்வியைச்சீரமைக்கிறது மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்கிறது. இருப்பினும், உலகளாவிய சகாக்களுடன் ஒப்பிடும்போது, GDPஇல் R&Dக்கான குறைந்த ஒதுக்கீடு, ஆராய்ச்சியைவிட கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் Ph.Dபோன்ற மேம்பட்ட திட்டங்களில் குறைந்த அளவிலான சேர்க்கை ஆகியவை சவால்களில் அடங்கும்.

12. அண்மையில், மண்குறித்த பன்னாட்டு மாநாட்டில் புதிய உலக மண் நலக் குறியீட்டை அறிவித்த அமைப்பு எது?

அ. UNESCO

ஆ. UNICEF

இ. UNEP

ஈ. UNDP

  • உலக அளவில் மண்ணின் தரமதிப்பீட்டை தரப்படுத்துவதற்காக மொராக்கோவில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் UNESCO புதிய உலக மண் நலக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் மண் சிதைவு போக்குகள் மற்றும் மேம்பாடுகளை கண்காணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. UNESCO சிறந்த நடைமுறைகளை உருவாக்க பத்து உயிர்க்கோள காப்பகங்களில் நிலையான மண் மேலாண்மையை சோதிக்கும். உலகளவில், மண் சிதைவு 75% நிலத்தைப் பாதிக்கிறது; 3.2 பில்லியன் மக்களை பாதிக்கிறது; மேலும் 2050ஆம் ஆண்டில் அது 90%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 32% நிலம் பாழடைந்துள்ளது; 25% காடழிப்பு மற்றும் தொழில்துறை மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாலைவனமாக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சமையல் உபகரணங்கள் மீது ISI முத்திரை கட்டாயம்: நடுவண் அரசு.

அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத எஃகால் தயாரிக்கப்படும் அனைத்து சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் மீதும் ISI (இந்திய தரநிறுவன குறியீடு) முத்திரை இடம்பெறுவதை நடுவணரசு கட்டாயமாக்கியுள்ளதாக இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் BIS சார்பில் இந்த ISI குறியீடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, துருப்பிடிக்காத எஃகால் ஆன சமையல் உபகரணங்கள்மீது ‘IS 14756:2022’ என்ற குறியீடும் அலுமினிய சமையல் உபகரணங்கள்மீது, ‘IS 1660:2024’ என்ற குறியீடும் இடம்பெறும். பாத்திரம் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு விவரக்குறிப்பு, செயல்திறன் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரக்குறியீடுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!