TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 6th & 7th May 2024

1. அண்மையில், “Localizing the SDGs: Women in Local Governance in India Lead the Way” என்ற தலைப்பிலான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ்

இ. நியூயார்க்

ஈ. புது தில்லி

  • ஐநா அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, “நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்” என்ற தலைப்பிலான நிகழ்வை 2024, மே.03 அன்று மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 57ஆவது அமர்வின் போது ஏற்பாடு செய்தது. ஏப்.29 முதல் மே. 03 வரை நியூயார்க்கில் உள்ள ஐநாஇன் தலைமையகத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது.
  • திரிபுரா மாநிலத்தின் செபாகிஜாலா ஜில்லா பரிஷத்தின் தலைவர் சுப்ரியா தாஸ் தத்தா, ஆந்திர பிரதேச மாநிலத்தின் பெகேரு கிராம பஞ்சாயத்து தலைவர் குனுகு ஹேமா குமாரி, இராஜஸ்தான் மாநிலத்தின் லம்பி அஹீர் கிராம பஞ்சாயத்து தலைவர் நீரு யாதவ் ஆகியோர் இந்தியாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்தத் தூதுக்குழுவிற்கு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமை தாங்குகிறார். அடித்தட்டளவில் அரசியல் தலைமையில் இந்திய பெண்களின் முக்கியப் பங்கை இது பறைசாற்றும்.

2. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான, ‘பசுமை ஆஸ்கர்’ விட்லி தங்க விருதுபெற்ற இந்தியர் யார்?

அ. துளசி கௌடா

ஆ. பூர்ணிமா தேவி பர்மன்

இ. ஆலிஸ் கார்க்

ஈ. அமிர்தா தேவி

  • அஸ்ஸாமிய வனவிலங்கு உயிரியலாளர் Dr பூர்ணிமா தேவி பர்மன், அழிந்துவரும் பெருநாரை இனத்தையும் அதன் வாழ்விடமான ஈரநிலங்களை பாதுகாத்தமைக்காகவுமாக, ‘பசுமை ஆஸ்கர்’ என்றும் அழைக்கப்படும் தனது 2ஆவது விட்லி தங்க விருதை பெற்றார். இதற்கு முன்பு 2017இல் அவர் இவ்விருதைப் பெற்றுள்ளார். தொண்டு நிறுவனத்தின் புரவலரான இளவரசி அன்னே, லண்டனில் அவருக்கு விருதை வழங்கினார். உள்ளூர் மக்களைத் திரட்டி, நாரை மற்றும் அதன் வாழ்விடத்தைப் பாதுகாத்த டாக்டர் பூர்ணிமா தேவி பர்மன், அவற்றின் எண்ணிக்கையை 450இல் இருந்து 1800-க்கு அதிகமாக ஆக காரணமாக அமைந்தார்.

3. அண்மையில் வெளியிடப்பட்ட OECD அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதம் என்ன?

அ. 5.5%

ஆ. 6.6%

இ. 7.2%

ஈ. 7.8%

  • மே.02 அன்று வெளியிடப்பட்ட OECDஇன், “பொருளாதாரக் கண்ணோட்டம்” என்ற அறிக்கை, 2024-25-க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 6.2%இலிருந்து 6.6%ஆக உயர்த்தியது. இது 2025-26-க்கான வளர்ச்சி விகிதத்தை 6.6% எனக்கணித்துள்ளது. பிற நிறுவனங்கள் போலவே இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை OECDஉம் தற்போது திருத்தியமைத்துள்ளது.
  • அதிகரித்த அரசு முதலீடு மற்றும் வணிக நம்பிக்கை ஆகியவை இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்குக் காரணம் என்று இவ்வறிக்கை கூறுகிறது. வருவாய் வளர்ச்சி, செலவுத்திறன் மற்றும் நிதி விதிகள்மூலம் கடன் சுமையை அரசாங்கம் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்தி கூறுகிறது.

4. அண்மையில், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள், மேகாலயா மாநிலத்தின் எந்த மலைகளில், பழங்கால புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர்?

அ. தெற்கு காரோ மலைகள்

ஆ. கிழக்குக் காசி மலைகள்

இ. மேற்குக் காசி மலைகள்

ஈ. ஜெயிந்தியா மலைகள்

  • இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) ஆய்வாளர்கள், மேகாலயா மாநிலத்தின் தெற்குக் காரோ மலைகளில் உள்ள டோலெக்ரேவில் 35-40 மில்லியன் ஆண்டுகள் பழைமையான புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேகாலயா மாநிலத்தின் ஒருபகுதியான காரோ குன்றுகள், இந்திய-வங்காளதேச எல்லைக்கு அருகில் மேகாலயா துணை-வெப்பமண்டலக் காடுகளின் சுற்றுச்சூழல் பகுதியில் அமைந்துள்ளன. மியான்மர் வரை நீண்டுள்ள பட்காய் மலைத்தொடர் கனமழைக்குப் பெயர் விளங்கிய காரோ குன்றுகளை உள்ளடக்கியதாகும்.

5. ‘Batillipes chandrayaani’ என்றால் என்ன?

அ. கடல்வாழ் மெதுநடையன் இனங்கள்

ஆ. ஆக்கிரமிப்பு தாவரம்

இ. கடற்படைக் கப்பல்

ஈ. புறக்கோள்

  • கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில், சந்திரயான்-3இன் நினைவாகப் பெயரிடப்பட்ட ஒரு புதிய கடல்வாழ் நீர்க்கரடி இனமான, ‘Batillipes chandrayaani’ஐக் கண்டுபிடித்துள்ளனர். மண்டபத்தின் இடைப்பட்ட கடற்கரை வண்டல்களில் காணப்படும் இது, 0.15 மிமீ நீளமும் 0.04 மிமீ அகலமும் கொண்டுள்ளது. ஒரு சரிவக வடிவ தலையும் நான்கு இணை கால்களும் கூர்மையான நுனியுடன் கூடிய உணர்திறன் முதுகெலும்புடன் இது காணப்படுகிறது. இதன் இரு பாலினமும் ஒரே மாதிரியான உருவ அமைப்பைக் கொண்டுள்ளன. இது ‘Batillipes’இன் 39ஆவது இனமாகும். “நீர்க்கரடிகள்” என அழைக்கப்படும் மெதுநடையன்கள் மீள்தன்மைகொண்ட நுண்ணிய விலங்குகள் ஆகும்.

6. அண்மையில், “Aging well in Asia: Asian Development Policy” என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. ஐரோப்பிய முதலீட்டு வங்கி

ஈ. ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி

  • ஆசிய வளர்ச்சி வங்கியின், “Aging well in Asia: Asian Development Policy” என்ற அறிக்கை வயதானவர்களின் நல்வாழ்வின் 4 முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. அவை உடல்நலம், உற்பத்தி வேலை, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகும். வளரும் ஆசியா அதிகப்படியான முதியோர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது; 2050ஆம் ஆண்டளவில் 25.2%ஆக இருமடங்காக முதியோர்களின் எண்ணிக்கை ஆசியாவில் இருக்கும்.

7. ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வணிக வழிகளைக் கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையில் மூழ்கியுள்ள இந்தத் திருக்கோவில், நீர்மட்டம் குறைந்ததால் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அறுநூற்றெண்பது ஆண்டுகளுக்கு முன்பு தண்டநாயக கோட்டையை கட்டிய தண்டநாயகரை ஆட்சிபுரியச்சொல்லி ஹொய்சாள மன்னர் மூன்றாம் வீர பல்லால மாதவப் பெருமாள் அவரை நியமித்தார். அவரது மகன் வீர சித்த கெத்தயா தண்டநாயகதத்துள்ளே கோவிலைக் கட்டினார். பின்னர் விஜயநகரப் பேரரசு, உம்மத்தூர் தலைவர்கள் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் அந்தக் கோட்டை ஆளப்பட்டது. 1790ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியமங்கலம் போருக்கும் சாட்சியாக அக்கோட்டை விளங்கி வருகிறது.

8. அண்மையில், இந்திய ரெயில்டெல் (RailTel) கழகத்திற்கும் மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?

அ. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் KAVACH செயல்படுத்தும் திட்டங்களை ஆராய்ந்து வழங்குதல் 

ஆ. KAVACHஇன் புதிய பதிப்பை உருவாக்க

இ. புதிய இரயில் பாதைகளை உருவாக்குதல்

ஈ. ரெயில் எஞ்சின்கள் தயாரித்தல்

  • இந்திய ரெயில்டெல் கழகமானது ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்நாட்டு தானியங்கி ரெயில் பாதுகாப்பு அமைப்பான KAVACHஐ செயல்படுத்தவுள்ளது. இந்திய தேசத்தின் தொழிற் துறையுடன் இணைந்து RDSOஆல் உருவாக்கப்பட்ட ‘KAVACH’, பாதுகாப்பு ஒருமைப்பாடு (Safety Integrity) நிலை -4இல் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த பிழை நிகழ்தகவுடன் செயல்படுகிறது. அதன் அம்சங்களுள் மையப்படு -த்தப்பட்ட ரெயில் இயக்க கண்காணிப்பு, தானியங்கி அதிவேகத் தடுப்பு மற்றும் SOS செய்தி அனுப்புதல் ஆகியவை அடங்கும்.

9. தூய விளையாட்டுகள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அண்மையில் #PlayTrue என்ற பரப்புரையை நடத்திய இந்திய அமைப்பு எது?

அ. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை

ஆ. தேசிய விளையாட்டு கூட்டமைப்பு

இ. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஈ. தேசிய விளையாட்டு அமைப்பு

  • இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) #PlayTrue இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 12,133-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த இயக்கம் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) Play True நாளை நினைவுகூர்கிறது. இது இந்தியாவில் தூய விளையாட்டு & ஊக்கமருந்து எதிர்ப்பு நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • #PlayTrue இயக்கம் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முழு விளையாட்டு சமூகத்தையும் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளைப் பற்றிய முழுமையான புரிதலுடன் ஆயத்தம் செய்வதற்கான தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. நியாயமான விளையாட்டை ஆதரிப்பதன்மூலமும், ஊக்கமருந்தை நிராகரிப்பதன்மூலமும், நியாயமான போட்டியின் உணர்வை ஊக்குவிப்பதன்மூலமும் விளையாட்டுகளில் ஒருமைப்பாட்டை வளர்க்க இந்தப் பரப்புரை எண்ணுகிறது.

10. இந்தியாவின் முதல் வானியல் சுற்றுலா முன்னெடுப்பான, ‘நக்ஷத்ர சபா’வைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஹரியானா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. ராஜஸ்தான்

  • உத்தரகாண்ட் மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியமும் ஸ்டார்ஸ்கேப்சும் இணைந்து வானியல் சுற்றுலா (astro tourism) முன்னெடுப்பான, ‘நக்ஷத்ர சபா’வைத் தொடங்கியுள்ளன. விண்மீன்களைப் பார்ப்பதைத் தவிர, இது சூரியனை கூர் நோக்குதல், நிழற்படம் எடுத்தல் போட்டிகள் மற்றும் முகாம் ஆகியவற்றையும் வழங்குகிறது. வானியல் ஆர்வலர்கள் மற்றும் சாகசக்காரர்களை இலக்காகக்கொண்ட இது பேரண்டத்தின் அதிசயங்களை உத்தரகாண்டின் இயற்கை அழகுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. ஆரவல்லி மலைத்தொடரில் சட்டத்துக்குப்புறம்பாக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளை உடனே நிறுத்துமாறு, கீழ்க்காணும் எந்த மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. ஹரியானா

ஈ. மகாராஷ்டிரா

  • இராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டத்துக்குப்புறம்பாக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளை உடனே நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா முழுவதும் 692 கிமீ நீண்டு பரவியுள்ள ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவின் பழமையான மலைத்தொடராகும். சூழலியல் மற்றும் நீரியலுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை பாலைவனமாவதைத் தடுக்கின்றன, தட்பவெப்பநிலையை ஒழுங்குபடுத்துகின்றன; மேலும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சபர்மதி மற்றும் லூனி போன்ற ஆறுகளை ஆதரிக்கின்றன.

12. சக்ஷம் பள்ளத்தாக்கு என்பது கீழ்க்காணும் எந்த 2 நாடுகளுக்கு இடையேயுள்ள பிரச்சனைக்குரிய பகுதியாகும்?

அ. இந்தியா & பூடான்

ஆ. இந்தியா & பாகிஸ்தான்

இ. இந்தியா & நேபாளம்

ஈ. இந்தியா & சீனா

  • சக்ஷம் பள்ளத்தாக்கில் சட்டத்துக்குப்புறம்பானதாகக் கருதப்படும் சீனாவின் கட்டுமானத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒருபகுதியாகும். இது இந்தியாவால் உரிமை கோரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நிலப்பகுதியாகும்; ஆனால் பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்பட்டு 1963இல் பாகிஸ்தானால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் 6ஆவது பிரிவு காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகண்ட பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறது. இது ஜின்ஜியாங், POK மற்றும் சியாச்சின் பனிப்பாறையின் எல்லையாக உள்ளது. 1970களில் கட்டப்பட்ட காரகோரம் நெடுஞ்சாலை, சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தின் விளைவாக உருவானதாகும்.

13. நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண்ணை எடுத்து வருவதற்காக, அண்மையில் ‘Chang’e-6’ என்ற ஆய்வுப் பணியை ஏவியுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா

ஈ. ஜப்பான்

  • நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து அதனை பூமிக்குக் கொண்டு வருவதற்காக சீனா ‘Chang’e-6’ ஆய்வுப் பணியை ஏவியுள்ளது. இதற்கு முன்பு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவின் மாதிரிகளை அதன் அண்மைப் பக்கத்திலிருந்து சேகரித்துள்ளன. சீனாவின் Chang’e-4, 2019இல் நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்கியது; ஆனால் மாதிரிகளை கொண்டுவரவில்லை. 2023ஆம் ஆண்டில், இந்தியாவின் சந்திரயான்-3 பணி நிலவின் தென்துருவத்திற்கு அருகே தரையிறங்கியதன்மூலம் சாதனை புரிந்தது.

14. எரிசக்தி மற்றும் உள்ளூர் நாணய தீர்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த ஆப்பிரிக்க நாட்டுடன் இந்தியா ஒத்துழைத்துள்ளது?

அ. கென்யா

ஆ. தான்சானியா

இ. செனகல்

ஈ. நைஜீரியா

  • இந்தியாவும் நைஜீரியாவும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கோடு உள்ளூர் நாணய தீர்வுமுறை ஒப்பந்தத்தை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இதன்மூலம் இந்திய ரூபாய் (`) மற்றும் நைஜீரிய நைராவில் வர்த்தக தீர்வுகள் நடைபெறும். அபுஜாவில் நடைபெற்ற 2ஆவது இந்தியா-நைஜீரியா கூட்டு வர்த்தகக்குழு அமர்வின் போது இந்த முடிவு எட்டப்பட்டது. அமர்தீப் சிங் பாட்டியா தலைமையில், இந்தியக் குழுவில் RBI, EXIM வங்கி மற்றும் NPCI ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். ஏப்.29-30 வரை நடைபெற்ற கூட்டத்தில், வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

15. பத்ரா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

  • கர்நாடக மாநிலத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பத்ரா புலிகள் சரணாலயத்திற்கு வனப்பயண பார்வையாளர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. இச்சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சுற்றுலாப் பயணிகள் வெகுகவனமாக இருக்க வேண்டும். 1998ஆம் ஆண்டில் இந்தியாவின் 25ஆவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இதில் யானைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுடன் கணிசமான புலிகளும் உள்ளன. பிற கர்நாடக மாநிலத்து புலிகள் காப்பகங்களுள் பந்திப்பூர், நாகர்ஹோல், தண்டேலி-அன்ஷி மற்றும் பிலிகிரிரங்கா ஆகியவை அடங்கும்.

16. அண்மையில், 7ஆவது இந்தியா-இந்தோனேசியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. ஜகார்த்தா

இ. சென்னை

ஈ. ஹைதராபாத்

  • இந்தியாவும் இந்தோனேசியாவும் அண்மையில் புது தில்லியில் ஏழாவது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்தை நடத்தின. பாதுகாப்புத் தொழிற்துறை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது. இருநாடுகளும் வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்தன. பாரத் ஃபோர்ஜ் மற்றும் மஹிந்திரா டிஃபென்ஸ் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கையில் இந்தோனேசியாவின் பங்கு எடுத்துரைக்கப்பட்டது.

17. 2024 – உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 158

ஆ. 159

இ. 160

ஈ. 161

  • ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸின் கூற்றுப்படி, 2024இல் இந்தியாவின் உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டு மதிப்பெண் 36.62இலிருந்து 31.28ஆக குறைந்துள்ளது. இவ்வறிக்கை 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுகிறது. பிற நாடுகளின் சரிவு காரணமாக இந்தியாவின் தரநிலை 161இலிருந்து 159-க்கு முன்னேறியுள்ளது. ஆயினும், இந்தியா துருக்கி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைவிட பின்தங்கியுள்ளது. பாதுகாப்பில் சிறிதளவு முன்னேற்றம் இருந்தபோதிலும், பிற குறிகாட்டிகளில் மதிப்பெண்கள் பெருவீழ்ச்சியடைந்துள்ளன; இது பத்திரிகை சுதந்திரத்திற்கான சவால்களை எடுத்தியம்புகிறது.

18. அண்மையில், இந்தியாவும் நெதர்லாந்தும் ஹேக்கில் எத்தனையாவது சுற்று வெளியுறவு ஆலோசனைகளை ஏற்பாடு செய்தன?

அ. 11ஆவது

ஆ. 12ஆவது

இ. 13ஆவது

ஈ. 14ஆவது

  • இந்தியாவும் நெதர்லாந்தும் மே.02 அன்று ஹேக்கில் 12ஆவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை நடத்தின. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) ஸ்ரீ பவன் கபூர் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமைந்தது. இச்சந்திப்பின்போது, பசுமை ஹைட்ரஜன் மற்றும் குறைக்கடத்திகள்போன்ற புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதன்மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் நெதர்லாந்தும் ஒப்புக்கொண்டன.

19. அண்மையில், சரக்குகள் & சேவைகள் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. O P சௌத்ரி

ஆ. பங்கஜ் சௌத்ரி

இ. சஞ்சய குமார் மிஸ்ரா

ஈ. அஜய் பூஷன் பாண்டே

  • மத்திய GST சட்டம், 2017இன்கீழுள்ள இரண்டாவது மேல்முறையீட்டு ஆணையமான GSTATஇன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். CGST சட்டம், 2017 மற்றும் SGST சட்டங்களின்கீழ் மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை GSTAT விசாரிக்கிறது. GSTAT என்பது புது தில்லியில் உள்ள ஒரு முதன்மை அமர்வாகும். இது குடியரசுத்தலைவர் மற்றும் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களைக் (மத்தியிலிருந்து ஒன்று, மாநிலத்திலிருந்து ஒன்று) கொண்டுள்ளது. இந்த GSTAT-க்கு பல மாநில அமர்வுகளும் உண்டு.

20. லக்ஷ்யா விமானத்தை வடிவமைத்து கட்டிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. CSIR

ஈ. HAL

  • பெங்களூருவைச் சார்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் ஆனது லக்ஷ்யா விமானத்தை உருவாக்கியுள்ளது. இது தற்போது CBIஇன் கூர்ந்தாய்வின்கீழ் உள்ளது. 2000 (IAF), 2001 (IN) மற்றும் 2003 (IA)இல் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ADE
    -ஆல் உருவாக்கப்பட்ட நுண்-இலகு, விமானியிலா விமானமாகும் லக்ஷ்யா. HALஆல் தயாரிக்கப்பட்ட எஞ்சினுடன் உருவாக்கப்பட்ட இது செலவு குறைந்ததாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய இது ஆயுத அமைப்பு சோதனைகளுக்கு உதவுகிறது. இதனை தரை அல்லது கடலிலிருந்து ஏவமுடியும்.

21. 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் திறன் எவ்வளவு % அதிகரித்துள்ளது?

அ. 1.65%

ஆ. 2.44%

இ. 3.50%

ஈ. 3.80%

  • 2023-24இல், நாட்டின் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் திறன் 2023 மார்ச்சின் 237.27 GWஇல் இருந்து 2.44% அதிகரித்து 243.22 GWஆக உள்ளது. புதைபடிவமற்ற எரிபொருள் திறன் 10.79% அதிகரித்து, 2022 -23இல் 172.01 GWஆக இருந்த நிலையில் 2023-24இல் 190.57 GWஐ எட்டியது. இதில் சூரிய ஆற்றல், காற்று மற்றும் புனல் மின்சாரம் ஆகியவை அடங்கும். அணுசக்தித் திறன் 6.78 ஜிகாவாட்டிலிருந்து 8.18 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது; இது ஆண்டுக்கு 20.64% அதிகரிப்பைக் குறிக்கிறது.

22. அண்மையில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின்கீழ், கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய சணல் வாரியத்தில் இயக்குநர் மட்டத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அஜய் குமார்

ஆ. சசி பூஷன் சிங்

இ. இராஜீவ் சக்சேனா

ஈ. அரவிந்த் குமார்

  • இந்திய ரெயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியான சஷி பூஷன் சிங், கொல்கத்தாவில் உள்ள தேசிய சணல் வாரியத்தின் செயலாளராக (இயக்குனர் மட்டம்) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 5 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை நடப்பிலிருக்கும். தேசிய சணல் வாரியச் சட்டம், 2008இன்கீழ் நிறுவப்பட்ட தேசிய சணல் வாரியம் 2010 ஏப்.01இல் செயல்படத்தொடங்கியது. இது சணல் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் சணல் பல்வகைப்படுத்தலுக்கான தேசிய மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது.

23. பழியர் பழங்குடியினருடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • பெரும்பான்மையாக கொடைக்கானல் மற்றும் தேனி பகுதிகளில் வாழும் பழியர் பழங்குடியினத்தோரைப் பற்றிய அண்மைய ஆய்வுகள், அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தமிழில் ‘பழனியர்’ என்பதிலிருந்து பெறப்பட்ட அவ்வினத்தாரின் பெயர், பழையர், பழையரேர் மற்றும் பனையர் என்றும் விளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாவட்டங்களில் பரவி வாழும் அவர்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள் மற்றும் பாரம்பரியமாக வேட்டையாடிகளாக உள்ளனர்.
  • வனதேவதையையும் கருப்பனையும் வழிபடுகிற அவர்கள், இறந்தவர்களை தகனம் செய்வதைத் தவிர்த்து, தங்கள் குடியிருப்புப்பகுதியின் மேற்குப்பகுதியில் இட்டுப் புதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

24. அண்மையில், 26ஆவது ASEAN-இந்திய மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. ஜெய்ப்பூர்

இ. சென்னை

ஈ. ஹைதராபாத்

  • ஜெய்தீப் மஜும்தார் மற்றும் ஆல்பர்ட் சுவா ஆகியோர் தலைமையில் புது தில்லியில் நடைபெற்ற 26ஆவது ASEAN-இந்திய மூத்த அதிகாரிகள் கூட்டம், அரசியல்-பாதுகாப்பு, பொருளியல் மற்றும் சமூக-கலாசார ஈடுபாடு ஆகியவற்றில் கவனஞ்செலுத்தி, ASEAN-இந்தியா உறவுகளை மதிப்பாய்வு செய்தது. ASEAN-இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கு பிரதமர்களின் பன்னிரு அம்ச முன்மொழிவை செயல்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். லாவோஸின் வியன்டியானில் நடைபெறவுள்ள ASEAN-இந்தியா உச்சிமாநாட்டிற்கான முன்னேற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முழுவீச்சில் பாம்பன் புதிய ரெயில்வே பாலம் கட்டுமானப்பணி.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-இராமேசுவரத்தை இணைக்கும் வகையில் கடந்த 1914ஆம் ஆண்டில் கடலுக்கு குறுக்கே ரெயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் வரும்போது, திறந்து மூடும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தப்பாலத்தில் இருந்த மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள ரெயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு, தரநிர்ணய அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் பாலத்தின் கர்டர்களை வடிமைக்கும் பணி, பாம்பனை அடுத்த சத்திரக்குடி ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

தற்போது, இந்தப் பாலத்தில் ஒரு ரெயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. இருப்பினும், எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்கான வசதிகள் கொண்டதாகவே இப்பாலத்தின் கட்டுமானம் நடைபெறுகிறது. இந்தப் பணி நிறைவடையும்போது, நாட்டிலேயே செங்குத்தான நிலையில் திறந்து, மூடும் வசதி கொண்ட முதல் பாலம் என்ற பெருமையை இந்தப்பாலம் பெறும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தப் பாலம் முக்கியப் பங்காற்றும் எனக்கூறப்படுகிறது.

2. இகா ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்.

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் அவர் வாகை சூடியது இதுவே முதல் முறையாகும். சாம்பியனான இகா ஸ்வியாடெக்குக்கு `9.23 கோடி ரொக்கப்பரிசும், 1000 WTA புள்ளிகளும் கிடைத்தன. ரன்னர்-அப் இடம் பெற்ற சபலென்காவுக்கு `4.91 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

3. மே.17இல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆம் முறையாக வருகின்ற மே.17 அன்று விண்வெளிக்குச் செல்லவுள்ளார். விண்வெளி நிலையத்தில் 322 நாள்கள் தங்கியிருக்கும் திட்டத்திற்காக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ‘ஸ்டார் லைனர்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கியுள்ளது. அவ்வோடம் சோதனை முறையில் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புளோரிடா மாகாணத்தின் கேப் கனவரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ள ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!