TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 6th & 7th January 2024

1. அண்மையில் 2023ஆம் ஆண்டுக்கான, ‘குவெம்பு இராஷ்ட்ரிய புரஸ்கார்’ வென்ற எழுத்தாளர் ஷிர்ஷேந்து முக்யோபாத்யாய் சார்ந்த மொழி எது?

அ. தமிழ்

ஆ. கன்னடம்

இ. பெங்காலி

ஈ. ஹிந்தி

  • பெங்காலி மொழி எழுத்தாளரான ஷிர்ஷேந்து முக்யோபாத்யாய்க்கு 2023ஆம் ஆண்டுக்கான, ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ வழங்கப்பட்டது. பெங்காலி மொழியில் அவரது படைப்புகள்மூலம் இந்திய இலக்கியத்திற்கு அவராற்றிய பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஷிர்ஷேந்து முக்யோபாத்யாய் பயணக்குறிப்புகள் மற்றும் சிறார் புனைகதை உட்பட 90-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் என்பது ஒரு மதிப்புமிக்க தேசிய இலக்கிய விருது ஆகும்; இது மறைந்த கன்னட கவிஞர் குவெம்புவின் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2. அண்மையில் 14ஆவது M S சுவாமிநாதன் விருதை வென்ற பேராசிரியர் B R கம்போஜ் என்பவருடன் சார்ந்த துறை எது?

அ. உழவியல்

ஆ. கால்நடை அறிவியல்

இ. சுற்றுச்சூழல் அறிவியல்

ஈ. தாவர உயிரி தொழில்நுட்பம்

  • சௌத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் B R கம்போஜ், வேளாண் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக M S சுவாமிநாதன் விருதுபெற்றார். அறிவியலாளர் /நீட்டிப்பு நிபுணராக அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர் B R கம்போஜின் பணி விவசாய அறிவியலில் பெரும் பங்காற்றி உள்ளது. பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்கள், புத்தகங்கள் மற்றும் தொழில்நுட்ப இதழ்களில் சுமார் 300 ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில், ‘ஒரே நலம் ஒரே உலகம்’ என்ற சர்வதேச மாநாட்டில் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

3. Mappls செயலியில் அனைத்து விபத்து சாத்திய இடங்களையும் குறித்துள்ள முதல் மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. பஞ்சாப்

  • மேப்ஸ்மைஇந்தியா உருவாக்கிய வழிசெலுத்தல் அமைப்பான, ‘Mappls’ செயலியில் அனைத்து 784 விபத்து நடக்க சாத்தியமுள்ள இடங்களையும் குறித்துள்ள இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் ஆனது. பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் அறிவித்த இம்முயற்சி, முதலமைச்சர் பகவந்த் சிங் மானின், ‘சதக் சுரக்ஷா படை’யை தொடங்குவதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதியாகும். இந்த முன்னோடி முயற்சியானது, மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

4. அயல்நாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தன்னாட்டு கடல் எல்லைக்குள் நுழைவதற்கு ஓராண்டு தடைவிதித்துள்ள நாடு எது?

அ. மியான்மர்

ஆ. தாய்லாந்து

இ. பிலிப்பைன்ஸ்

ஈ. இலங்கை

  • அயல்நாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தனது கடற்பரப்பில் நுழைவதற்கு ஓராண்டுகால தடையை விதித்து இலங்கை அரசாங்கம் அறிவிப்பு செய்துள்ளது. இதற்கான அலுவல்பூர்வ காரணமாக திறன்மேம்பாட்டை அது குறிப்பிட்டுள்ளது. இப்பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா எழுப்பிய கோரிக்கைகளுக்கு பதிலாக இம்முடிவு கருதப்படுகிறது. வெளியுறவு அமைச்சக தொடர்பாளர் நிலுக கதுருகமுவ, இந்த தடைக்காலம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

5. 10ஆவது துடிப்பான குஜராத் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்ற பீட்டர் ஃபியாலா, கீழ்காணும் எந்த நாட்டின் பிரதமராவார்?

அ. செக் குடியரசு

ஆ. சுலோவாக்கியா

இ. ஹங்கேரி

ஈ. ஆஸ்திரியா

  • 10ஆவது துடிப்பான குஜராத் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற பீட்டர் பியாலா, செக் குடியரசின் பிரதமராவார். காந்திநகரில் நடந்த இந்நிகழ்வில் அவரது வருகை செக் குடியரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை சிறப்பித்துக் காட்டுகிறது. உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பாக அறியப்படும் இந்த உச்சிமாநாடு, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விவாதங்களுக்கு ஒரு முக்கிய தளமாகச் செயல்படுகிறது.

6. ஐநாஇன் உலகப் பொருளாதார நிலை மற்றும் தகவலேடு-2024 அறிக்கையின்படி, 2024இல் எந்தப் பிராந்தியம் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்டிருக்கும்?

அ. ஐரோப்பிய ஒன்றியம்

ஆ. கிழக்காசியா

இ. தெற்காசியா

ஈ. மேற்காசியா

  • ஐநாஇன் உலகப்பொருளாதார நிலை மற்றும் தகவலேடு-2024 அறிக்கையானது 2024ஆம் ஆண்டில் தெற்காசியா கணிசமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் (GDP) கொண்டிருக்கும் என்று கணித்துள்ளது. இப்பிராந்தியத்தில் GDP 5.2% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இதற்குக் காரணம் உலகில் வெகுவேகமாக வளர்ந்துவருகிற பெரிய பொருளாதாரமான இந்தியாவின் வலுவான விரிவாக்கமே ஆகும். இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.2%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

7. அண்மையில் தனது குடிகளை ரஷ்யா அல்லது உக்ரைனுக்கு வேலைக்குச் செல்ல தடைவிதித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. நேபாளம்

ஈ வங்காளதேசம்

  • நேபாள அரசாங்கம் அதன் குடிகள் ரஷ்யா அல்லது உக்ரைனுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கு தடைவிதித்து ஆணையிட்டுள்ளது. போரில் ஈடுபடுவதற்காக நேபாள மக்கள் ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து நேபாளத்தில் உள்ள வேலைவாய்ப்புத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது. நேபாள அரசாங்கத்தின் இந்த முடிவு, குடிமக்கள் மீதான பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

8. COP29 (Conference of the Parties) அமர்வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. ரஷாத் அல்லாவெர்தியேவ்

ஆ. முக்தர் பாபாயேவ்

இ. சுல்தான் அல்-ஜாபர்

ஈ. ஃபாத்திஹ் பிரோல்

  • COP29 அமர்வின் தலைவராக அஜர்பைஜானின் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் முக்தார் பாபாயேவ் நியமிக்கப்பட்டுள்ளார். அஜர்பைஜான் குடியரசின் மாநில எண்ணெய் நிறுவனத்தில் நிர்வாகியாக (SOC AR) பணிபுரிந்த முக்தார் பாபாயேவ், COP29இல் உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவார். முந்தைய ஆண்டு நடைபெற்ற COP28க்கு அபுதாபி நேஷனல் எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) தலைவரான சுல்தான் அல்-ஜாபர் தலைமைதாங்கினார்.

9. இந்திய மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, “பிரித்வி விக்யான்” திட்டத்தின் மதிப்பீடு எவ்வளவு?

அ. ரூ. 2542 கோடி

ஆ. ரூ. 3583 கோடி

இ. ரூ. 4797 கோடி

ஈ. ரூ. 5267 கோடி

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-26ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் `4,797 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின், “பிரித்வி விஞ்ஞான்” என்ற விரிவான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில், “வளிமண்டலம் & காலநிலை ஆராய்ச்சி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகளுக்கான முறைகள்”, “பெருங்கடல் சேவைகள், மாதிரி செயல்முறை, வளங்கள் & தொழில்நுட்பம்”, “துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி”, “பூகம்பவியல் & புவி அறிவியல்”, “ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் மக்கள்தொடர்பு” ஆகிய ஐந்து துணைத் திட்டங்கள் அடங்கும்.

10. அண்மையில், Si-Graphite கலவையை நேர்மின்வாய் பொருளாகக்கொண்ட ஒரு புதிய வகை மின்கலமான சிலிக்கான் உயராற்றல் லித்தியம்-அயான் மின்கலத்தை வெற்றிகரமாக பரிசோதித்த இந்திய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. TATA அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்

ஈ. சாஹா அணு இயற்பியல் நிறுவனம்

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) 190 Wh/kg ஆற்றல் அடர்த்திகொண்ட ஒரு புதிய வகை மின்கலத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த சிலிக்கான் உயராற்றல் கொண்ட லித்தியம்-அயான் மின்கலம், Si-கிராஃபைட் கலவையை நேர்மின்வாய் பொருளாகக்கொண்டுள்ளது. இது வழமையான லித்தியம்-அயான் மின்கலங்களை விட மிகவும் திறமையானதாகவும் உற்பத்தி செலவு குறைந்ததாகவும் உள்ளது; இது பொதுவாக 157 Wh/kg ஆற்றல் அடர்த்தியைக்கொண்டுள்ளது. PSLV-C58இன் POEM-3 இயங்குதளத்தில் இந்த மின்கலங்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் மின்கல தொழில்நுட்பத்தில் ISROஇன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

11. ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. பிரஜேந்திர நவ்நீத்

ஆ. செந்தில் பாண்டியன் C

இ. பங்கஜ் குமார் பன்சால்

ஈ. M செல்வேந்திரன்

  • ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) இந்திய தூதராக 2002ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சேர்ந்த இஆப அதிகாரியான செந்தில் பாண்டியன் C நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் 2024 ஜன. 5 அன்று அமைச்சரவையின் நியமனக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார். உலக வர்த்தக அமைப்பிற்கான இந்திய தூதராக இருந்த பிரஜேந்திர நவ்நீத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

12. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்காக அதானி குழுமத்திடமிருந்து ஆதரவைப் பெற்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் யார்?

அ. விஸ்வநாதன் ஆனந்த்

ஆ. பெண்டாலா ஹரிகிருஷ்ணா

இ. விதித் குஜராத்தி

ஈ. R பிரக்ஞானந்தா

  • இந்தியாவின் பிரகாசமானசெஸ் திறமையாளர்களில் ஒருவராக கருதப்படும் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு (18) ஆதரவளிப்பதாக அதானி குழுமம் முடிவுசெய்துள்ளது. இதன்ஒரு கட்டமாக அதானி குழுமத்து தலைவர் கௌதம் அதானி, பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்துப்பேசினார். விளையாட்டில் அவர் முன்னேறிய வேகம் & செயல்திறன் குறிப்பிடத்தக்கது என்றும் அனைத்து இந்தியர்களுக்கும் பிரக்ஞானந்தா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்றும் கௌதம் அதானி புகழுரைத்தார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியானது டொராண்டோவில் ஏப்ரல்.02 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

13. ஆட்களால் எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய இந்திய வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான, ‘VSHORADS’ஐ உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)

ஆ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)

இ. பாரத் டைனமிக்ஸ் லிட் (BDL)

ஈ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL)

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்தியாவின் மனிதர்கள் கொண்டுசெல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை உருவாக்கியுள்ளது. மிகவும் குறுகியதூரம் மட்டுமே செல்லக்கூடிய இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, ‘Very SHOrt-Range Air Defence System-VSHORADS’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு 6 கிமீ வரையிலான குறைந்த உயர வான்வழி அச்சுறுத்தல்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புவி அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு: `4,797 கோடி திட்டத்துக்கு ஒப்புதல்.

புவி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு தொடர்புடைய `4,797 கோடி மதிப்பிலான, ‘பிரித்வி விக்யான்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டம், வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி, துருவ அறிவியல், தாழ்வெப்பமண்டல ஆராய்ச்சி, நில அதிர்வு மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஐந்து துணைத்திட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயானாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல்: தென்னமெரிக்க நாடான கயானாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் ஹைட்ரோ கார்பன் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பான ஐந்தாண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மோரீஷஸுடன் இணைந்து சிறிய செயற்கைக்கோள்: மோரீஷஸுடன் இணைந்து சிறிய இரக செயற்கைக்கோள் தயாரித்து இஸ்ரோ சார்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. இஸ்ரோவும் மோரீஷஸ் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபி -டிப்புகளுக்கான கவுன்சிலும் இணைந்து செயற்கைக்கோள்களை உருவாக்குதல், மோரீஷஸ் நாட்டு விண்வெளி ஏவுதளத்தை இஸ்ரோ பயன்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா – US-AID ஒப்பந்தம்: இந்திய இரயில்வே வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சுழிய கார்பன் (கரியமில வாயு) உமிழ்வு இலக்கை எட்ட உதவும் வகையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (US-AID) அமைப்புடன் இந்தியா மேற்கொள்ளவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்தது. இந்த ஒப்பந்தம் மூலம், இரயில்வே துறையில் நவீன மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த கலந்தாலோசனையை அமெரிக்க அமைப்புடன் இந்திய இரயில்வே மேற்கொள்ள முடியும்.

2. L1 புள்ளியை வெற்றிகரமாக எட்டியது ஆதித்யா விண்கலம்.

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான L1 புள்ளியை வெற்றிகரமாக எட்டியதாக ISRO அறிவித்துள்ளது. அங்கிருந்தபடி, ஆதித்யா விண்கலம் சூரியனின் புறவெளி ஆய்வுகுறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஆதித்யா L1 என்னும் அதிநவீன விண்கலம் வடிவமைக்கப்பட்டு, PSLV C57 ஏவுகலம்மூலம் ஆந்திரபிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக கடந்த ஆண்டு செப்.2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா L1 விண்கலத்தில் சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டர் உள்பட 7 விதமான ஆய்வுக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. பூமியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிமீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (L1) என்னும் புள்ளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்புவிசை சமமாக இருக்கும். அப்புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச்சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்துக்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியல் மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (IISER) ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

திட்டமிட்டபடி விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, L1 புள்ளியை வலம்வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா கலன் ஆய்வுசெய்யும். இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சூரியனை ஆய்வுசெய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்தத்திட்டம் வெற்றிபெற்றால் இந்தியா அந்த வரிசையில் நான்காவது நாடாக உருவெடுக்கும்.

3. நடப்பாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2%: ஐநா கணிப்பு.

வலுவான தனிநபர் நுகர்வு, அரசு முதலீடு காரணமாக நடப்பாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%ஆக இருக்கும் என ஐநா கணித்துள்ளது. அதேநேரம் உற்பத்தித்துறை, சேவைகள் துறை ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணைநிற்கும்.

விவசாய உற்பத்தி குறைய வாய்ப்பு: அடுத்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற மழைப்பொழிவு விவசாய உற்பத்தியைக் குறைக்க வாய்ப்புள்ளது.

கடுமையான வறட்சி / வெள்ளம்: கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகுந்த வறட்சி நிலவிய மாதங்களில் ஒன்றாக இருந்தது.

உலக பொருளாதார வளர்ச்சி 2.4%: COVID பரவலுக்கு முன்பு, உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 2.7%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த வளர்ச்சி நடப்பாண்டு 2.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பத்தாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு.

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சிமாநாடு – 2024 மற்றும் 10ஆவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற ஜன.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதன் முதலாவது மாநாடு சென்னையில், இரண்டாவது துபாய் நாட்டில், மூன்றாவது சென்னையில், நான்காவது தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில், ஐந்தாவது புதுச்சேரி மாநிலத்தில், ஆறாவது சென்னையில், ஏழாவது மாநாடு இணையவழியிலும், எட்டாவது மாநாடு சென்னையிலும், 9ஆவது மாநாடு துபாய் நாட்டிலும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பத்தாவது மாநாடாக இந்த மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

5. விண்வெளியில் மின்னுற்பத்தி ISRO புதிய சாதனை!

விண்வெளியில் சோதனை முயற்சியாக 180 வாட்ஸ் மின்னுற்பத்தியை மேற்கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) சாதனை படைத்துள்ளது. அண்மையில் அனுப்பப்பட்ட PSLV C-58 ஏவுகலத்தின் இறுதிநிலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஆய்வுக்கருவிகள் மூலமாக இச்சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தயாரிக்கப்பட்ட எரிபொருள் செல்சார்ந்த மின்னாற்றல் அமைப்பு (Fuelcell Based Power System) கருவியும் அதில் ஒன்று. பிஎஸ்-4 பகுதியில் இருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றைக் கொண்டு அந்தக்கருவிமூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின் ஆற்றல் உற்பத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மின்னாற்றல் உற்பத்தியால் விண்வெளியில் மாசு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின்னாற்றல் எரிசக்தியை இத்தகைய வழிகளில்பெற முடியும் என்பதை இந்தச் சோதனை உறுதிபடுத்தியுள்ளது.

6. உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2030ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு.

உயர்கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (GER) தற்போதைய 27 சதவீதத்திலிருந்து 2030ஆம் ஆண்டளவில் 50%ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகவும், 2030க்குள் 7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகவும், 2047இல் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாகவும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி: ஆய்வில் தகவல்.

2023ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப்பிடித்துள்ளன. தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 113 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையுள்ள நகரங்கள் பிரிவில், 49 நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 100க்கு 48.42 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9ஆவது இடத்தில் கோயம்புத்தூர், 11ஆவது இடத்தில் மதுரை இடம்பிடித்துள்ளன. இதேபோல, 10 இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்கள் வரிசையில், 64 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. 100க்கு 40.39 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடத்தில் வேலூர், 6ஆவது இடத்தில் சேலம், 7ஆவது இடத்தில் ஈரோடு, 8ஆவது இடத்தில் திருப்பூர், 10ஆவது இடத்தில் புதுச்சேரி, 29ஆவது இடத்தில் திருநெல்வேலி, 30ஆவது இடத்தில் தஞ்சாவூர், 31ஆவது இடத்தில் தூத்துக்குடி, 33ஆவது இடத்தில் திண்டுக்கல் இடம்பெற்றுள்ளது.

8. 2024ஆம் ஆண்டின் முதல் ஏறுதழுவுதல்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள தச்சன்குறிச்சியில் 2024ஆம் ஆண்டின் முதல் ஏறுதழுவல் போட்டி நடைபெற்றது.

9. ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி.

சூரியனை ஆய்வுசெய்யும் ஆதித்யா L-1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கிறார்கள் ISRO அறிவியலாளர்கள். ISROஇன் ஆதித்யா L-1 திட்டத்தின் இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளியில் படித்த பெண் அறிவியலாளர் நிகர் சாஜி உள்ளார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர்.

இதற்கு முன்னதாக, சந்திரயான்-2 திட்டத்துக்கு M வனிதா தலைமைதாங்கினார். மேலும், பூமியைப் படம்பிடிக்கும் செயற்கைக்கோள் தயாரிப்பில் தேன்மொழி தலைமை வகித்தார். தற்போதைய சந்திரயான்-3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக கல்பனா பொறுப்பேற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin