Tnpsc Current Affairs in Tamil – 6th & 7th April 2024
1. அண்மையில், வியட்நாமில் ஒரு துறைமுக அழைப்பை மேற்கொண்ட இந்திய கடலோர காவல்படை கப்பலின் பெயர் என்ன?
அ. தாரா பாய்
ஆ. சாம்ராட்
இ. சமுத்ரா பஹேர்தார்
ஈ. பிரியதர்ஷினி
- இந்திய கடலோர காவல்படையின் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்ரா பஹேர்தார், ஒரு ஹெலிகாப்டருடன், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (ASEAN) நடந்துவரும் வெளிநாட்டு பணி நிமித்தத்தின் ஒரு பகுதியாக 2024 ஏப்ரல்.02 அன்று வியட்நாமின் ஹோ-சி-மின் துறைமுகத்தை அடைந்தது. கப்பலின் மூன்று நாள் பயணத்தின்போது, கடல் மாசுபாடு தணிப்பை மையமாகக்கொண்ட தொழிற்முறை குழுவினர் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் சட்ட அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
- இப்பயணம் இந்திய கடலோர காவல்படை மற்றும் வியட்நாம் கடலோர காவல்படை இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் உள்நாட்டு கப்பல்கட்டும் திறன்களையும் வெளிப்படுத்துகிறது. மேலும், கப்பலில் உள்ள 25 தேசிய மாணவர் படை கேடட்கள் நடைபயிற்சி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள்.
2. ‘NICES திட்டத்தை’ செயல்படுத்துகிற அமைப்பு எது?
அ. ISRO
ஆ. DRDO
இ. IEA
ஈ. SEBI
- ISRO மற்றும் விண்வெளித் துறையால் செயல்படுத்தப்படும், ‘NICES’ என்ற திட்டம், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்திய ஆராய்ச்சியாளர்களை அழைக்கின்றது. காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தின்கீழ் 2012இல் தொடங்கப்பட்ட NICES திட்டம், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி காலநிலை மாறுபாட்டைக் கண்காணிக்கிறது. பூமியின் தட்பவெப்பநிலையைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமான காலநிலை மாறுபாடுகளை ஆராய்வது அதன் நோக்கங்களில் அடங்கும்.
3. பிந்தியாராணி தேவியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. ஹாக்கி
ஆ. நீச்சல்
இ. குத்துச்சண்டை
ஈ. பளு தூக்குதல்
- 2022ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி, தாய்லாந்தின் புக்கெட்டில் நடைபெற்ற IWF உலகக்கோப்பை-2024இல் பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் 196 கிகி எடையைத்தூக்கி வெண்கலம் வென்றார். மாறாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு 12ஆவது இடத்தைப்பிடித்தார். பதக்கம் பெறவில்லை என்றாலும், மீராபாய் சானு 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றார். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபராக அவர் ஆனார். வடகொரியாவின் காங் ஹியோன் கியோங் தங்கமும், ருமேனியாவின் மிஹேலா காம்பே வெள்ளியும் வென்றனர்.
4. தொழிற்துறை அமைப்பான ASSOCHAM-க்கு 2024-25-க்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?
அ. வினீத் அகர்வால்
ஆ. சஞ்சய் நாயர்
இ. தீபக் சூட்
ஈ. சுனில் கனோரியா
- சோரின் முதலீட்டு நிதியத்தின் முன்னாள் தலைவரான சஞ்சய் நாயர், 2024-25-க்கான ASSOCHAMஇன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்குமுன் ஸ்பைஸ்ஜெட்டின் அஜய்சிங் அப்பதவியை வகித்துவந்தார். சிட்டி குரூப் மற்றும் KKRஇல் பணியாற்றி விரிவான உலகளாவிய நிதி அனுபவத்தைக் கொண்ட சஞ்சய் நாயர், 2023இல் ஓய்வுபெற்றார். KKR இந்தியா செயல்பாடுகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த அவர், நைகாஇன் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
5. போஜ்ஷாலா வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. கர்நாடகா
ஆ. மத்திய பிரதேசம்
இ. ஒடிசா
ஈ. கோவா
- மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள போஜ்ஷாலா வளாகம், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வரலாற்று ரீதியாகப் போட்டி நிலவி வரும் ஓரிடமாகும். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இது, இந்துக்களுக்கான கோவிலாகவும், முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய தொல்லியல் துறையின் ஏற்பாட்டில் இந்து மதத்தினர் செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகளை நடத்தவும், முஸ்லிம் மதத்தினர் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. அண்மையில், உச்சநீதி மன்றம், அங்கு நடத்தப்படும் தற்போதைய அறிவியல் ஆய்வுகள்மீதான தடையை நிராகரித்ததோடு, கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியது.
6. 2024 – கண்ணிவெடிகள் குறித்து பன்னாட்டளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Protecting Lives, Building Peace
ஆ. Safe Ground, Safe Steps, Safe Home
இ. Together for Mine Action
ஈ. Perseverance, Partnership, and Progress
- கண்ணிவெடிகள் குறித்து பன்னாட்டளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.04 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது கண்ணிவெடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் கண்ணிவெடிகளை அகற்றுவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. “Protecting Lives, Building Peace” என்பது 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். 2023இல், “Mine Action Cannot Wait” என்பது கருப்பொருளாக இருந்தது. 2005இல் ஐநா பொதுச்சபையால் இந்நாள் நிறுவப்பட்டது.
7. அண்மையில், மேற்கு வங்கத்தின் எந்தப் பகுதியை பேரிடர் தரும் சூறைக்காற்று தாக்கியது?
அ. மைனகுரி
ஆ. சிலிகுரி
இ. டார்ஜிலிங்
ஈ. கொல்கத்தா
- அண்மையில், மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மைனகுரியை ஓர் அழிவுகரமான சூறைக் காற்று தாக்கியது; 10 நிமிடம் நீடித்த அச்சூறைக்காற்றில் சிக்கி 5 பேர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவில் சூறைக்காற்று அரிதாக இருந்தாலும், மேற்கு வங்காளம், ஒடிஸா மற்றும் ஜார்கண்ட் போன்ற இந்தியாவின் கிழக்குப்பகுதிகளை, குறிப்பாக பருவமழைக்கு முந்தைய காலங்களில் அது பாதிக்கிறது.
- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் 2016ஆம் ஆண்டு ஆய்வின்படி, வங்காளத்தில் சூறாவளியின் செயல்பாடு அதிகரித்துள்ளதாகவும், அது இறப்புகளுக்கு காரணமாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் இந்நிகழ்வுகளுக்கு வங்காள விரிகுடாவின் வெப்பமயமாதல் மற்றும் அசாதாரண காற்று மாதிரிகள் போன்றவை காரணமாக கூறப்படுகின்றன.
8. முக்கூர்த்தி தேசியப்பூங்காவில் வாழும் நீலகிரி வரையாட்டுக்கு வெற்றிகரமாக ரேடியோ கழுத்துப்பட்டையை அணிவிப்பதற்காக அண்மையில் தமிழ்நாடு மாநில வனத்துறையுடன் கூட்டிணைந்த அமைப்பு எது?
அ. உலக சுகாதார நிறுவனம் (WHO)
ஆ. உலக வனவிலங்கு நிதியம் (WWF)
இ. வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS)
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)
- தமிழ்நாடு மாநில வனத்துறை, WWF-இந்தியாவுடன் இணைந்து, முக்கூர்த்தி தேசியப்பூங்காவில் உள்ள நீலகிரி வரையாட்டிற்கு ரேடியோ கழுத்துப்பட்டையை அணிவித்தது. ‘நீலகிரி தார்’ என்றும் அழைக்கப்படுகிற நீலகிரி வரையாடு, தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும், தென்னிந்தியாவில் மலைத்தொடரில் வாழ்வனவற்றுள் குளம்பு உடைய உள்ள ஒரே விலங்காகவும் உள்ளது. அழிந்து வரும் நிலையில் உள்ள இவ்விலங்கின் வாழ்விடமானது மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் பரவியுள்ளது.
9. கள்ளக்கடல் என்றால் என்ன?
அ. பொங்கு கடல் அலைகளால் கரையோரங்களில் வெள்ளம் ஏற்படுவது
ஆ. வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள பகுதி
இ. தென்னிந்தியாவின் பாரம்பரிய மீன்பிடி நுட்பம்
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்
- ‘கள்ளக்கடல்’ என்றும் அழைக்கப்படுகின்ற பொங்கு கடலைகள், கேரள மாநிலத்தில் உள்ள கடலோர வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளன. பருவமழைக்கு முந்தைய காலத்திலும், சில சமயங்களில் பருவமழைக்கு பிந்தைய காலத்திலும் இது முதன்மையாக நிகழ்கிறது; ‘கள்ளக்கடல்’ என்பது தொலைதூர புயல்களின் விளைவாக கடல் அலைகளை உருவாக்குகிறது. மீனவர்களின் சொல்லாடலான, ‘கள்ளக்கடல்’ என்பதற்கு ‘கடல் திருடன்’ என்பது பொருளாகும். இவ்வகை அலைகள் தெற்கு இந்தியப்பெருங்கடலில் இருந்து உருவாகி, கேரளாவின் கடற்கரையை அடைகிறது. 2012இல் UNESCO இச்சொல்லாடலை அங்கீகரித்தது.
10. உலக வங்கியின் கணிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்னவாக இருக்கும்?
அ. 6.3%
ஆ. 6.4%
இ. 6.6%
ஈ. 6.8%
- 2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக்கணிப்பு 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.6%ஆக இருக்கும் என்று உலக வங்கி திருத்தி அறிவித்துள்ளது. நடப்பாண்டு மதிப்பிடப்பட்ட 7.5% வளர்ச்சியில் ஒரு மந்த நிலை இருந்தபோதிலும், வலுவான பொது முதலீடு எதிர்கால வளர்ச்சியை உந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் புள்ளியியல் அமைச்சகம் நடப்பாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6%ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது; இது அதன் முந்தைய கணிப்பைவிட அதிகமாகும். 2023-24 முதல் 2024-25 வரையிலான வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்குக் காரணம் முதலீடுகளின் குறைவே ஆகும். இருந்தபோதிலும், சேவைகள் மற்றும் தொழிற்துறைகள் வலுவாகவே உள்ளன.
11. அண்மையில், கீழ்காணும் எந்த அமைப்பால் 2024 – LEADS திட்டம் தொடங்கப்பட்டது?
அ. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (FICCI) & இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
ஆ. இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (INSA) & நல்லாளுகைக்கான தேசிய மையம் (NCGG)
இ. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)
ஈ. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD)
- 2024 ஏப்.01-07 வரை புது தில்லியில் நடைபெற்ற 2ஆவது INSA-NCGG LEADS திட்டம் என்பது இந்திய தேசிய அறிவியல் அகாதெமி மற்றும் நல்லாளுகைக்கான தேசிய மையம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. தலைமைத்துவம் மற்றும் இந்தியாவின் அறிவியல் சிறப்பை இது மேம்படுத்துகிறது.
12. அண்மையில், இந்தியக்குடியரசுத்தலைவரால் கீழ்காணும் எந்த இடத்தில் புற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு சிகிச்சை முறை தொடங்கி வைக்கப்பட்டது?
அ. ஐஐடி சென்னை
ஆ. ஐஐடி மும்பை
இ. ஐஐடி ஹைதராபாத்
ஈ. ஐஐடி தில்லி
- புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மும்பை ஐஐடிஇல் தொடக்கி வைத்தார். ‘CAR-T செல்சிகிச்சை’ எனப்பெயரிடப்பட்ட இந்தச் சிகிச்சை முறையை எளிதாகக் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முன்னெடுப்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும், தற்சார்பு இந்தியாவின் ஒளிரும் உதாரணமாகத் திகழ்கிறது என்றும் குடியரசுத்தலைவர் கூறினார். ஐஐடி மும்பை, டாடா நினைவு மருத்துவமனை மற்றும் இம்யூனோACT இணைந்து உருவாக்கிய இது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையை குறிக்கிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. விழிஞ்சம் துறைமுகத்துக்கு சர்வதேச பாதுகாப்பு தரச்சான்று.
கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்துக்கு சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு சான்றை ஐநா-இன் சர்வதேச கடல்சார் ஆணையம் வழங்கியது. அதிவேக சரக்குக்கப்பல்கள் உள்பட சர்வதேச கப்பல்கள் இத்துறைமுகத்தில் பயணிப்பதற்கு இச்சான்று அவசியம். கடந்த 2001 செப்.11ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக கடற்சார் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகளை குறைக்கவும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஐஎஸ்பிஎஸ் சான்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2. ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி.
வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து ஏழாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது. உணவுப்பொருள்களின் விலை உயரக்கூடும் என்பதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி 7%: கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் குறையும்: கடந்த நிதியாண்டில், பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது. இந்நிதியாண்டில் அது 4.5%ஆக சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஜனவரி நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 15.30 கோடி பேர் உத்தர பிரதேசத்திலும், குறைந்தபட்சமாக 57,500 வாக்காளர்கள் இலட்சத்தீவிலும் உள்ளனர்.
3. சர்வதேச பாட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்.
கஜகஸ்தான் சர்வதேச பாட்மின்டன் சேலஞ்ச் போட்டியில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, தருண் ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.