TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th July 2024

1. மெத்தனால் மற்றும் ஃபார்மால்டிஹைட் கலவையிலிருந்து ஹைட்ரஜன் உருவாக்கும் திறமையான முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. IISER, திருப்பதி

ஆ. ஐஐடி, ரூர்க்கி

இ. ஐஐடி, மெட்ராஸ்

ஈ. ஐஐடி, தில்லி

  • IISER திருப்பதியின் ஆராய்ச்சியாளர்கள் மெத்தனால் மற்றும் ஃபார்மால்டிஹைடைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை திறம்பட உருவாக்குவதற்கான ஒரு முறையை வகுத்துள்ளனர். வினையூக்கிகளின் தேவையில்லாமல், சந்தையில் எளிதில் கிடைக்கும் நிக்கல் வினையூக்கிகளைப் பயன்படுத்தி அவர்கள் இம்முறையை உருவாக்கினார்கள். இந்த ஹைட்ரஜன் உற்பத்தியானது அல்கைன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி பரிமாற்ற ஹைட்ரஜனேற்றத்தை செயல்படுத்தி, அவற்றை அல்கீன்களாக மாற்றுகிறது. இந்த முறை உயிர்வேதியியல் மூலக்கூறுகளின் தொகுப்பை ஆதரிக்கிறது.

2. அண்மையில் INS தபார் வருகையால் செய்திகளில் இடம்பெற்ற துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியா உள்ள நாடு எது?

அ. இந்தோனேசியா

ஆ. எகிப்து

இ. பிரான்ஸ்

ஈ. ரோம்

  • இந்திய கடற்படைக் கப்பல் தபார் அண்மையில் எகிப்தின் அலெக்சாண்டிரியாவுக்குச் சென்று இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தது. 2004ஆம் ஆண்டு ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்ட தல்வார்-வகுப்பு மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான INS தபார், “Guts and Glory” என்ற பொன்மொழியை உள்ளடக்கியது. இப் பயணம் இந்தியாவின் உத்திசார் கடல்சார் ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடற்படை திறன்களையும் இது வலியுறுத்துகிறது.

3. அண்மையில், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளுக்கு ஆதரவாக $1.5 பில்லியன் அளவுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்த அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. பன்னாட்டு செலாவணி நிதியம்

இ. புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி

ஈ. பன்னாட்டு வளர்ச்சி சங்கம்

  • இந்தியாவின் குறைந்த கரிம-ஆற்றல் வளர்ச்சியை ஆதரிக்க உலக வங்கி $1.5 பில்லியன் அளவுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியானது பசுமை ஹைட்ரஜன், மின்பகுப்பிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கத்திற்கு உதவும். இது இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் ஆற்றல் இலக்கு ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 500 கிகாவாட் (Gw) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவது மற்றும் 2070ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய உமிழ்வை அடைவது இந்தியாவின் இலக்காகும்.

4. அண்மையில், விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SERA) கீழ்க்காணும் எந்த நாட்டை மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பயணத் திட்டத்துக்கான கூட்டாளர் நாடாக அறிவித்தது?

அ. பூட்டான்

ஆ. இந்தியா

இ. நேபாளம்

ஈ. மியான்மர்

  • அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SERA) மற்றும் புளூ ஆர்ஜின் ஆகியவை மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்திட்டத்திற்காக இந்தியாவுடன் கூட்டுசேர்ந்துள்ளன. வருங்கால நியூ ஷெப்பர்ட் திட்டத்தில், குறைந்த இடவசதி உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அவர்கள் ஆறு இடங்களை ஒதுக்குவார்கள். நியூ ஷெப்பர்ட் என்பது மறு பயன்பாடுடைய துணை சுற்றுப்பாதையில் வலம் வரக்கூடிய ஏவுகலம் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களை 100 கிமீ தொலைவிலுள்ள பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையான கர்மான் கோடு வழியாக 11 நிமிட பயணத்தில் விண்வெளிக்கு இது அழைத்துச் செல்லும்.

5. இந்திய இராணுவம் அண்மையில் எந்த நாட்டு இராணுவத்துடன் இணைந்து, ‘மைத்ரீ’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தியது?

அ. தாய்லாந்து

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. நியூசிலாந்து

  • 2024ஆம் ஆண்டு ஜூலை.01 முதல் 15ஆம் தேதி வரை தாய்லாந்தின் வச்சிரபிரகான் கோட்டையில் இராயல் தாய் இராணுவத்துடன் இந்திய இராணுவம் மைத்ரீ பயிற்சியைத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இருதரப்பு பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. லடாக் சாரணர்கள் உட்பட இருபடைகளிலிருந்தும் எழுபத்தாறு பணியாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி நகர்ப்புற மற்றும் வனச்சூழல்களில் கிளர்ச்சி-எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டாகத் திட்டமிடல், உத்திசார் பயிற்சிகள் மேற்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

6. அண்மையில், ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா அவையின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. தோஹா, கத்தார்

ஆ. அஸ்தானா, கஜகஸ்தான்

இ. புது தில்லி, இந்தியா

ஈ. பிஷ்கெக், கிர்கிஸ்தான்

  • 2024 ஜூன்.30 மற்றும் ஜூலை.01 ஆகிய தேதிகளில் தோஹாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா மாநாட்டில் முதன்முறையாக தாலிபான் பங்கேற்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் SCO உட்பட 25 நாடுகள் மற்றும் அமைப்புகள் கலந்துகொண்டபோதிலும், கணிசமான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை. தாலிபான்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கானிய சிவில் சமூகப்பிரதிநிதிகள் கோரிக்கையைத்தவிர்த்து பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இணைந்தார். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து ஜே பி சிங் கலந்துகொண்டார்.

7. மார்ஸ் ஒடிஸி சுற்றுக்கலனைப்பயன்படுத்தி ஒலிம்பஸ் மோன்ஸ் என்று பெயரிடப்பட்ட நமது சூரியமண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையின் காவியக் காட்சியை படம்பிடித்த அமைப்பு எது?

அ. ROSCOSMOS

ஆ. JAXA

இ. NASA

ஈ. CNSA

  • NASAஇன் மார்ஸ் ஒடிஸி சுற்றுக்கலன் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸின் காவியக்காட்சியை படம் பிடித்தது. 2001இல் தொடங்கப்பட்ட ஒடிஸியின் பணி, செவ்வாய் கோளின் மேற்பரப்பை வரைபடமாக்குவது மற்றும் தகவல்தொடர்பு சேவை வழங்குவதை உள்ளடக்கியதாக உள்ளது. கவச எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸ், 24 கிமீ உயரமும் 550 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. பூமியின் மௌனா லோவாவை விட உயரமானதாக்கும் இம்மலை. 2025 வரை செயலில் இருக்கவுள்ள இந்தத் திட்டம், மற்றொரு கோளைச் சுற்றி மிகநீண்டகாலம் செயலில் உள்ள திட்டம் எனப் பெயர் பெற்றுள்ளது.

8. ‘நெக்ஸஸ்’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. உள்நாட்டு வங்கி அமைப்புகளை மேம்படுத்துதல்

ஆ. உடனடி எல்லைதாண்டிய சில்லறை கொடுப்பனவுகளை செயல்படுத்துதல்

இ. புதிய கிரிப்டோ நாணயத்தை உருவாக்க

ஈ. பன்னாட்டு நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க

  • உள்நாட்டு விரைவு கொடுப்பனவு முறைகளை ஒன்றிணைப்பதன்மூலம் உடனடி எல்லைதாண்டிய சில்லறை கொடுப்பனவுகளை செயல்படுத்தும் ஒரு முயற்சியான நெக்ஸஸ் திட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்தது. BIS புத்தாக்க மையம்மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட, ‘நெக்ஸஸ்’ தடையற்ற பன்னாட்டு பரிவர்த்தனைகளுக்கு ஒற்றை-இணைப்பு தீர்வை வழங்குகிறது. இது 2026ஆம் ஆண்டிற்குள் இந்தியா மற்றும் 4 ஆசியான் நாடுகளின் உள்நாட்டு விரைவு கொடுப்பனவு முறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெக்ஸஸ் திட்டம் தாமாகவே புதிய உறுப்புநாடுகளை இணைக்கிறது, செயல்திறனை மேம்படுத்துகிறது, செலவுகளைக் குறைக்கிறது மற்றும் பன்னாட்டு கொடுப்பனவு அணுகலை மேம்படுத்துகிறது.

9. ‘நௌகா பைச்’ என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய படகுப்போட்டியாகும்?

அ. ஒடிசா

ஆ. கேரளா

இ. மேற்கு வங்காளம்

ஈ. மணிப்பூர்

  • தென்மேற்குப்பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் நௌகா பைச் படகுப் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இப்பாரம்பரிய பந்தயங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நிகழ்கின்றன. இப்போட்டியில் பெண்களின் பங்கேற்பும் இருக்கும். அரவங்களின் தெய்வமான மானசா வழிபாட்டுடன் தொடர்புடைய இந்தப் போட்டிகள், 90 அடி நீளமுள்ள சோரெங்கி உட்பட பல்வேறு பாரம்பரிய படகுகளைப் பயன்படுத்துகின்றன. இது, வேளாண் பண்பாடு மற்றும் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளை கொண்டாடுகிறது.

10. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான தீக்கோழிக்கூடு கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • ஆந்திர பிரதேச மாநிலத்தில் 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப்பழமையான தீக்கோழிக் கூட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பேருயிரின் அழிவுபற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள பெருவிலங்குகள் பேருயிரிகள் என அழைக்கப்படுகின்றன; இவற்றுள் பெருந்தாவர உண்ணிகள், பெரும் மாமிச உண்ணிகள் மற்றும் பெரும் அனைத்துண்ணிகள் ஆகியவை அடங்கும். பிளீஸ்டோசீன் காலத்திற்குப் பிற்பகுதியிலிருந்து பேருயிரிகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தன.

11. அண்மையில், எந்த மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சௌனிக் ஆனார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. மகாராஷ்டிரா

  • மூத்த இஆப அதிகாரியான சுஜாதா சௌனிக் மகாராட்டிரத்தின் முதல் பெண் தலைமைச்செயலராக பதவியேற்றார். 1960இல் மகாராட்டிர மாநிலம் உருவானதிலிருந்து அவர் 45ஆவது தலைமைச்செயலராவார். இவருக்கு முன் ஓய்வு பெற்ற நிதின் கரீர் இப்பதவியில் இருந்தார். சுஜாதா சௌனிக், 2025 ஜூன் வரை ஓராண்டு பதவியில் இருப்பார். அவரை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஒருமனதாக நியமித்தனர். மும்பையில் உள்ள மாநில செயலகமான மந்த்ராலயாவில் பணிமாறுதல் விழா நடந்தது.

12. Tianlong-3 என்ற விண்வெளி ஏவுகலத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. வியட்நாம்

ஈ. இந்தோனேசியா

  • சீனாவின் தனியார் ஏவுகலமான டியான்லாங்-3 சோதனை ஓட்டத்தின்போது தற்செயலாக ஏவப்பட்ட காரணத்தால் விபத்துக்குள்ளானது. பெய்ஜிங் தியான்பிங்கால் (விண்வெளி முன்னோடி) உருவாக்கப்பட்ட டியான்லாங்-3 என்பது ஒரு நடுத்தர உயரம் செல்லும் ஏவுகலமாகும், இது பகுதியளவில் பத்து முறை வரை மீண்டும் பயன்படுத்தக்கூடியது. இதன் முதல் நிலை தாமாக செங்குத்து நிலையில் தரையிறங்கும் திறன்கொண்டது. இதால் தாழ் புவி சுற்றுப்பாதை (LEO) மற்றும் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு (SSO) நடுத்தர அளவிலான சுமைகளை கொண்டு செல்லமுடியும்; அதன் செயல்திறன் ஸ்பேஸ்Xஇன் பால்கன்-9 உடன் ஒப்பிடத்தக்கதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்.

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் விரிவாக்கத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை.11ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த ஆண்டு டிச. 18இல் தொடங்கப்பட்டது. அதன்மூலம், 8.74 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளைத் தொடர்ந்து, ஊரகப்பகுதிகளிலும் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

காலை உணவுத்திட்டம்:

பள்ளி மாணாக்கர்க்கு காலையில் உணவு அளிக்கும் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்கீழ், 14,40,351 பேர் பயன்பெற்று வருகிறார்கள். இந்தத்திட்டத்தால் காலை உணவு தயாரிக்கும் நேரமும் பொருட்செலவும் குறைவதுடன், குழந்தைகளின் நலம், கற்றல்திறன் அதிகரித்துள்ளதாக திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சென்றடையும் வகையில், ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த அனைத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்க்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் (ஜூலை.15) திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!