Tnpsc Current Affairs in Tamil – 5th January 2024
1. “Why Bharat Matters” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியர் யார்?
அ. அமித் ஷா
ஆ. நிர்மலா சீதாராமன்
இ. S ஜெய்சங்கர்
ஈ. இராஜ்நாத் சிங்
- வெளியுறவுத்துறை அமைச்சர் Dr S ஜெய்சங்கர் புதுதில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது புதிய, “Why Baharat Matters’ என்ற நூலை வெளியிட்டார். பிரதமர் மோடியின்கீழ் கடந்த பத்தாண்டுகளில் வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவின் மாற்றத்தை இந்நூல் ஆய்கிறது. இது இந்தியாவின் பரிணாமத்தை ராமாயணத்துடன் இணைக்கிறது. புவிசார் அரசியலின் காரணமாக 2024ஆம் ஆண்டு எதிர்பாரா நிகழ்வுகளின் ஆண்டாக இருக்கும் என்றும் இந்தியா அதன் வலிமையைக் கருத்தில்கொண்டு சவால்களை எதிர்கொள்ளும் என்றும் ஜெய்சங்கர் இதில் கூறியுள்ளார்.
2. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப்பூங்காவில் சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த பெண் சிறுத்தையின் பெயரென்ன?
அ. ஆராத்யா
ஆ. ஆத்யா
இ. வேணி
ஈ. ஆஷா
- பிரதமர் நரேந்திர மோடியால், ‘ஆஷா’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிறுத்தை, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப்பூங்காவில் அண்மையில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. இந்த நிகழ்வு இந்தியாவில் சிறுத்தை இனத்தை மீட்டுருவாக்கம் செய்தல் திட்டத்தின் ஒரு முதன்மை சாதனையாக பார்க்கப்படுகிறது. ‘ஆஷா’ மற்றும் அதன் குட்டிகளின் நலமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
3. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற, அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மூன்று பொருட்கள் எவை?
அ. ஆதி கேகிர், வாஞ்சோ கைவினைப்பொருட்கள், சாங்லாங் ஆடைகள்
ஆ. அபதானி அரிசி, ஆதி கேகிர், திபெத்திய கம்பளங்கள்
இ. ஆதி கேகிர், திபெத்திய தரைவிரிப்புகள், வாஞ்சோ மர கைவினைப்பொருட்கள்
ஈ. காம்தி அரிசி, ஆதி கேகிர், சாங்லாங் ஆடைகள்
- அருணாச்சல பிரதேசத்தின் ஆதி கேகிர் இஞ்சி, திபெத்திலிருந்து வந்து குடியேறியவர்களால் கையால் நெய்யப்படும் தரைவிரிப்புகள் மற்றும் வாஞ்சோ சமூகத்தினரால் செய்யப்படும் மர கைவினைப்பொருட்கள் ஆகிய 3 தயாரிப்புகள் அவற்றின் தனித்துவ காரணத்திற்காக புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன. ஆதி கேகிர் என்பது பிரபலமான இஞ்சி வகையாகும். வாஞ்சோ கைவினைஞர்கள் மரச்சாமான்களில் சிற்பங்களை உருவாக்குகிறார்கள். புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளின் சந்தைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.
4. “Chip War: The Fight for the World’s Most Critical Technology” என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. யுவல் நோவா ஹராரி
ஆ. மால்கம் கிளாட்வெல்
இ. கிறிஸ் மில்லர்
ஈ. வால்டர் ஐசக்சன்
- அமெரிக்க-சீனாவுக்கு இடையே நிலவும் குறைக்கடத்தி போட்டியை விளக்கும், “Chip War: The Fight for the World’s Most Critical Technology” என்ற நூலின் ஆசிரியர் கிறிஸ் மில்லர் ஆவார். அவர், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். அவரது வருகை இளைஞர்களுக்கு உற்சாகமளிப்பதோடு தமிழ்நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்ட இந்தத் துறைசார்ந்த கொள்கை விவாதம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
5. எந்த ஆண்டு, சாவித்ரிபாய் புலே, பெண்களுக்கான நாட்டின் முதல் பள்ளியை நிறுவினார்?
அ. 1835
ஆ. 1848
இ. 1855
ஈ. 1860
- சாவித்ரிபாய் புலே, தனது கணவர் ஜோதிபா பூலேவுடன் இணைந்து, இந்தியாவில் பெண்கள் உரிமை இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். கடந்த 1848இல், அவர் பெண்களுக்கான நாட்டின் முதல் பள்ளியை நிறுவினார். பெண்கல்வி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் விடுதலைபோன்ற காரணங்களுக்காக அவர் மிக்க போராடினார்.
6. எந்தப் பொதுத்துறை விண்வெளி நிறுவனம் இந்தியாவின் GSAT-20 செயற்கைக்கோளை 2024ஆம் ஆண்டில் SpaceX ஏவுகலம்மூலம் ஏவவுள்ளது?
அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)
ஆ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்
இ. நியூஸ்பேஸ் இந்தியா லிட்
ஈ. ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிட்
- ISROஇன் வணிகப்பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிட், SpaceXஇன் பால்கன்-9 ஏவுகலத்தின்மூலம் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் GSAT-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் அகலக்கற்றை இணைய சேவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக NSILஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகும்.
7. தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பசுமைப் பரப்புக் குறியீட்டை உருவாக்குவதற்காக தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்ட அமைப்பு எது?
அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஆ. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
இ. இந்திய தரநிலைகள் பணியகம்
ஈ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பரந்த வலையமைப்பில் உள்ள வனங்களைக் கண்காணிக்கும் நோக்கத்திற்காக, செயற்கைக்கோள் உருக்காட்சிகளைப் பயன்படுத்தி, “பசுமைப் பரப்புக் குறியீடு – Green Cover Index” உருவாக்குவதற்காக மூன்று ஆண்டுகள் செல்லாகும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ISROஇன் தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடன் மேற்கொண்டுள்ளது.
8. ஐஐடி-மெட்ராசில் (IIT-M) மீத்தட (hyperloop) போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான ஆசியாவின் முதல் சோதனை வசதியை அமைக்கவுள்ள பெருநிறுவன குழுமம் எது?
அ. அதானி குழுமம்
ஆ. வேதாந்தா லிட்
இ. ஆர்சிலர் மிட்டல்
ஈ. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிட்
- ஆர்சிலர் மிட்டல், ஐஐடி-மெட்ராசுடன் இணைந்து மீத்தட போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான ஆசியாவின் முதல் சோதனை வசதியை உருவாக்கியுள்ளது. இது சரக்குகள் மற்றும் மக்களை வெற்றிட குழாய்கள்மூலம் அதிவேகமாக போக்குவரத்து மேற்கொள்ளச் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
9. கிளென்மார்க்கால் அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரிமாதிரி நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தின் பெயர் என்ன?
அ. இன்சுஜென்
ஆ. லிராஃபிட்
இ. கிளைசிபேஜ்
ஈ. ஜானுக்லிஃபை
- மருந்தாக்கத் தொழில் நிறுவனமான கிளென்மார்க், இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் மலிவு விலையில் சிகிச்சை வழங்குவதற்காக, ஏற்கெனவே இந்தியாவில் பிரபலமாக உள்ள உயிரி-எதிர்ப்பி மருந்தான லிராகுளுடைட்டின் உயிரிமாதிரி மருந்தான லிராஃபிட்டை 70% மலிவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
10. CCRASஉடன் இணைந்து ஆயுர்வேதத்தில் மருத்துவ ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, ‘SMART 2.0’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
அ. ஆயுஷ் அமைச்சகம்
ஆ. NITI ஆயோக்
இ. இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம்
ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமம் (CCRAS), இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவை நாடு முழுவதுமுள்ள ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுடன் இணைந்து வலுவான மருத்துவ ஆய்வுகளை ஊக்குவிக்க, ‘ஸ்மார்ட்’ (கற்பித்தல் வல்லுநர்களிடையே ஆயுர்வேத ஆராய்ச்சியை பிரதானப்படுத்துவதற்கான வாய்ப்பு – Scope for Mainstreaming Ayurveda Research among Teaching professionals) என்ற திட்டத்தின் 2ஆம் கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இடைநிலை ஆராய்ச்சி முறைமைகளைப் பயன்படுத்தி ஆயுர்வேதத்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய சான்றுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
11. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தற்போதைய (2024) தலைமைச் செயலதிகாரி யார்?
அ. சஞ்சய் குண்டு
ஆ. இராஜேஷ் குமார்
இ. இராகேஷ் அஸ்தானா
ஈ. அஜய் பல்லா
- இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தலைமைச் செயலதிகாரி (CEO) இராஜேஷ் குமார் தனது சமீபத்திய ஊடக நேர்காணலின்போது, கடந்த 2021 ஏப்ரல் முதல் சைபர் குற்றவாளிகளால் இந்தியாவில் `10,300 கோடிக்கு மேல் மோசடிசெய்யப்பட்டதாக புள்ளிவிவரங்களோடு கூறினார். I4C என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும். இணையவெளி குற்றங்களைக் கையாளுவதற்காக சட்ட நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காக இது நிறுவப்பட்டது.
12. 2024 ஜனவரி.01 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அரசு அலுவலகங்கள் வாங்குவதை தடை செய்துள்ள மாநில அரசு எது?
அ. இமாச்சல பிரதேசம்
ஆ. அருணாச்சல பிரதேசம்
இ. உத்தர பிரதேசம்
ஈ. மத்திய பிரதேசம்
- 2024 ஜனவரி.01 அன்று இமாச்சல பிரதேச மாநில அரசு இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் ஒன்று ஜன.01ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. 2026 மார்ச்.31ஆம் தேதிக்குள் இமாச்சல பிரதேச மாநிலத்தை தூய்மையான மற்றும் பசுமை ஆற்றல் மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநில அரசாங்கம் இனி மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே வாங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ் எழுத்துக்களால் உருவான 20 அடி உயர திருவள்ளுவர் சிலை!
கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரங்கொண்ட திருவள்ளுவர் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார்.
2. நேபாளத்திலிருந்து 10,000 MW மின்சாரம்: இந்தியா ஒப்பந்தம்.
நேபாளத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் 10,000 மெகாவாட் (MW) மின்சாரத்தை வாங்க அந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. நேபாளத்திடமிருந்து தற்போது 450 MW மின்சாரத்தை இந்தியா இறக்குமதி செய்துவரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் அதை 10,000 MWஆக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இமயமலைத் தொடர்களில் இருந்து உருவாகும் மகா காளி, கர்னாலி, சப்த கந்தகி, சப்த கோசி ஆகிய 4 முக்கிய ஆறுகள், இந்தியாவில் கங்கையாற்றை அடைவதற்குமுன் நேபாள பள்ளத்தாக்குகளில் பாய்ந்து ஓடுகின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே நீர்மின் நிலையங்களை அமைக்க இந்தியா உதவியுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்கும் இந்த ஒப்பந்தம், இரு நாட்டு நல்லுறவின் அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது.
நேபாளத்தின், ‘முனல்’ என்ற செயற்கைக்கோள் மற்றும் ஜாஜர்கோட் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய நிவாரண வழங்கலின் 5ஆவது தவணையை விடுவித்தல்போன்ற ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
3. ‘BIMSTEC’ பொதுச்செயலராக இந்திர மணி பாண்டே பதவியேற்பு.
‘BIMSTEC’ கூட்டமைப்பின் பொதுச்செயலராக இந்தியாவின் இந்திர மணி பாண்டே பதவியேற்றார். இந்தியர் ஒருவர் BIMSTEC கூட்டமைப்பின் பொதுச்செயலராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். BIMSTEC (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பு) என்பது இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த அமைப்பின் நான்காவது பொதுச் செயலராக முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த இந்திர மணி பாண்டே பதவியேற்றார்.
4. தமிழ்நாட்டில் முதன்முறையாக கோயம்புத்தூரில் இதயம் காப்போம் திட்டம்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் காப்போம் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டத்தால், கிராமங்களில் யாருக்காவது சிறு அளவிலான இதய பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள துணை சுகாதார நிலையங்களு -க்குச் சென்று, செவிலியரை அணுக வேண்டும். செவிலியர் இருதயச் சிறப்பு மருத்துவர்களை தொடர்புகொண்டு தேவையான சிகிச்சைகளை வழங்கிடத் தொடங்குவார்கள். அதில் முதல்கட்டமாக, செவிலியரிடம் தரப்பட்டுள்ள 14 மாத்திரைகளை உட்கொள்ளச் செய்வதன்மூலம் உடனடியாக உயிரைக் காப்பாற்றிட முடியும்.