Tnpsc Current Affairs in Tamil – 4th January 2024
1. ஆண்டுதோறும், ‘உலக பிரெய்லி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. ஜனவரி.01
ஆ. ஜனவரி.02
இ. ஜனவரி.04
ஈ. ஜனவரி.06
- பிரெய்லி எழுத்து முறையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜன.04 அன்று உலக பிரெய்லி நாள் அனுசரிக்கப்படுகிறது. இது பார்வையிழந்தோர்க்கும் பார்வை மங்கிய மக்களுக்கும் ஒரு தகவல்தொடர்பு ஊடகமாக செயல்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் ஐநா பொது அவையால் கடந்த 2019ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதம் பிரெய்லி எழுத்தறிவு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பிரெஞ்சு அமைப்பை புதுமைப்படுத்திய பிரெஞ்சு கல்வியாளர் லூயிஸ் பிரெய்லி என்பவர் 1809 ஜன.04 அன்று பிறந்தார்.
2. அண்மையில் காலமான வேத பிரகாஷ் நந்தா சார்ந்த துறை எது?
அ. வேளாண்மை
ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இ. பன்னாட்டு சட்டம்
ஈ. மனித உரிமைகள்
- இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பான பங்களித்தமைக்காக கடந்த 2018 மார்ச்.20 அன்று, ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட வேத பிரகாஷ் நந்தா, 2024 ஜனவரி.01இல் காலமானார். அவர் கொலராடோவின் டென்வர் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு சட்டம் தொடர்பான பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். பன்னாட்டு சட்டத் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், டென்வர் பல்கலையில் சர்வதேச மற்றும் ஒப்பீட்டு சட்டத்திற்கான வேத் நந்தா மையத்தை நிறுவுவதன்மூலம் அங்கீகரிக்கப்பட்டன.
3. சிறுதொழில்களுக்கு கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்கியதற்காக கடந்த 2006இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற முகமது யூனுஸ் சார்ந்த நாடு எது?
அ. இந்தியா
ஆ. பாகிஸ்தான்
இ. வங்காளதேசம்
ஈ. சவூதி அரேபியா
- சிறுதொழில் கடன்களை அளித்ததன்மூலம் வங்கதேசத்தில் ஏராளமானவர்களை ஏழ்மையிலிருந்து மீட்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுசுக்கு (83) அந்த நாட்டு நீதிமன்றம் ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவரது நிறுவனத்தின் 67 ஊழியர்களை நிரந்தரமாக்காதது, பணியாளர் நலநிதி ஒதுக்கீடு செய்யாதது போன்றவற்றின்மூலம் தொழிலாளர்நல சட்டத்தை யூனுஸ் மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், அரசியல் காரணங்களுக்காகவே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
4. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அமைப்பு எது?
அ. இந்திய ரிசர்வ் வங்கி
ஆ. SIDBI
இ NABARD
ஈ. பாரத வங்கி (SBI)
- தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஓர் உறுதிமொழி பத்திரம் போன்றது. இந்தப் பத்திரங்களுக்கு வட்டிகிடையாது. விதிகளின்படி, 1% வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சிகள் மட்டுமே அவற்றை பணமாக்க முடியும். சமீபத்தில், 29 கிளைகளில் 2023 ஜனவரி.02 முதல் 11 வரை தேர்தல் பத்திரங்களின் 30ஆவது கட்ட விற்பனைக்கு SBI-க்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியது.
5. ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் இறக்குமதியில் தாவர எண்ணெய்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்களின் சதவீதம் எவ்வளவாக உள்ளது?
அ. 86.4%
ஆ. 62.1%
இ. 57.8%
ஈ. 72.1%
- இந்தியாவில் உணவுத்தன்னிறைவுநிலை தொடரவேண்டும் என்ற நோக்கத்திற்காக தாவர எண்ணெய்கள், பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதாக ஒரு பகுப்பாய்வு காட்டுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில், இந்த மூவகைப் பொருட்களும் வேளாண் இறக்குமதியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வணிக அமைச்சகத்தின் தரவுகளின்படி, மொத்த இறக்குமதியில் வேளாண் இறக்குமதி மட்டும் 72.1 சதவீதம் பங்களிக்கிறது. இதில் பனையெண்ணெயின் உள்ளடக்கம் மட்டும் 51.9% ஆகும். குறைந்த எண்ணெய் வித்துக்களின் விளைச்சலே இந்தச் சதவீத அளவுக்குக் காரணமாகும்.
6. பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக ஜாக்சன் கிரீன் என்ற நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட மாநில அரசு எது?
அ. தமிழ்நாடு
ஆ. இராஜஸ்தான்
இ. மத்திய பிரதேசம்
ஈ. மேற்கு வங்காளம்
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கானத் தீர்வுகளில் ஈடுபட்டுள்ள ஜாக்சன் கிரீன் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் & பசுமை அம்மோனியா திட்டத்தை நிறுவுதற்காக ராஜஸ்தான் மாநில அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை இது இலக்காககொண்டுள்ளது. ஜாக்சன் கிரீன் நிறுவனமானது குஜராத் மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
7. அரிவாள் செல் இரத்தசோகையைக் கண்டறிவதற்காக சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரென்ன?
அ. National Sickle Cell Anaemia Mission
ஆ. National Sickle Cell Anaemia Elimination Mission
இ. National Sickle Cell Anaemia Eradication Mission
ஈ National Sickle Cell Anaemia Control Mission
- தேசிய அரிவாள்செல் இரத்தசோகை ஒழிப்பு இயக்கம் 2023 ஜூலை.01 அன்று மத்திய பிரதேசத்தின் ஷாடோலில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 3 ஆண்டுகளில் 7 கோடி மக்களை பரிசோதிக்க முயற்சிக்கிறது. இந்த நோய் பெரும்பாலும் பழங்குடியின மக்களிடம் காணப்படுகிறது. இந்தியாவின் அனைத்து பழங்குடியினர் மற்றும் பிற அதிக பரவல்பகுதிகளில் அரிவாள் செல் ரத்தசோகையைப் பரிசோதித்தல், தடுத்தல் என இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் அரிவாள் செல் இரத்த சோகைப் பாதிப்பு அதிகம் உள்ள 278 மாவட்டங்களில் இத்திட்ட கவனம் செலுத்துகிறது.
8. பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியின் வானியல் பதம் யாது?
அ. சங்கிராந்தி (Solstice)
ஆ. உத்தராயணம் (Equinox)
இ. சூரிய அண்மை நிலை (Perihelion)
ஈ. சூரிய சேய்மை நிலை (Aphelion)
- சூரிய அண்மை நிலை என்பது பூமியின் நீள்வட்டப்பாதையில் சூரியனுக்கு மிகஅருகில் பூமி இருக்கும் புள்ளியைக் குறிக்கிறது. 2024ஆம் ஆண்டில், இந்தச் ‘சூரிய அண்மை நிலை நாள்’ ஜன.03 அன்று பூமி சூரியனில் இருந்து 91.4 மில்லியன் மைல்களுக்குள் வரும்போது நிகழ்ந்தது. இது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்மாத சங்கிராந்திக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிகழ்கிறது. இதன் எதிர் நிலையானது அதாவது சூரிய சேய்மை நிலை 2024 ஜூலை.06 அன்று நிகழும்.
9. அண்மையில் கிர்கிஸ்தானின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விலங்கு எது?
அ. பனிச்சிறுத்தை
ஆ. யாக்
இ. கழுகு
ஈ. குதிரை
- கிர்கிஸ்தான் தனது புதிய தேசிய சின்னமாக பனிச்சிறுத்தையை அறிவித்துள்ளது. அந்நாட்டில் உள்ள தியான் ஷான் மலைத்தொடரில் பனிச்சிறுத்தைகள் அதிகமாக வாழ்கின்றன. கிர்கிஸ் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெற்றுள்ள பனிச்சிறுத்தைகள் மகத்துவம், உயர்பண்பு மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அழிந்து வரும் உயிரினமான இவை, இந்த அறிவிப்பின்மூலம் பாதுகாக்க ஊக்குவிக்கப்படும்.
10. அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, பட்காய் மலைகளின் பெயரால் அழைக்கப்படும் புதிய தவளை இனத்தின் பெயர் என்ன?
அ. Arunchalops patkaiensis
ஆ. Gracixalus patkaiensis
இ. Rana patkaiensis
ஈ. Kaloula patkaiensis
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பல்லுயிர் நிறைந்த நம்தாபா தேசியப் பூங்காவில், ‘Gracixalus patkaiensis’ என்ற புதிய பச்சைத் தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.2 செமீட்டரே உடைய இச்சிறிய தவளை, பட்காய் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த பசுமையான காடுகளில் வாழ்கிறது. இதன் சத்தம் ஒரு பூச்சிபோன்ற ஒலியைக்கொண்டுள்ளது. கிழக்கு இமயமலையின் பட்காய் மலைகளின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.
11. இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் (IOCL) அண்மையில் தொடங்கப்பட்ட ஆசனூர் பைப்லைன் முனையம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. கேரளா
ஈ. கர்நாடகா
- இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆசனூர் பைப்லைன் முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. `456 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு பெட்ரோலிய பொருட்களை குழாய்வழிமூலம் கொண்டுசெல்லும். இது சென்னையில் இருக்கும் முனையங்களின் பணியைக் கணிசமாகக் குறைக்கும்.
12. பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை செயல்படுத்தும் முதல் யூனியன் பிரதேசம் எது?
அ. லடாக்
ஆ. ஜம்மு & காஷ்மீர்
இ. புதுச்சேரி
ஈ. இலட்சத்தீவுகள்
- கைவினைஞர்களுக்கான பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் திறன் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் யூனியன் பிரதேசமாக ஜம்மு & காஷ்மீர் மாறியுள்ளது. ஷோபியானில் உள்ள ITI மையத்தில் தையல் மற்றும் ஆடை வடிவமைப்பில் கவனஞ்செலுத்தும் முதல் தொகுப்பில் முப்பது பயிற்சியாளர்கள் இணைந்துள்ளனர். உள்ளூர் தொழில்கள் மற்றும் சுயதொழில்களை வளர்ப்பதை செயல்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
13. CDSCOஆல் தொடங்கப்பட்ட, ‘தேசிய ஒற்றைச்சாளர அமைப்பின்’ முதன்மை நோக்கம் என்ன?
அ. சுகாதார ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மேலாண்மை செய்தல்
ஆ. மருத்துவ சாதன இறக்குமதியை சீரமைத்தல்
இ. மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதியளித்தல்
ஈ. பொது சுகாதாரத்தைக் கண்காணித்தல்
- இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தொடங்கியுள்ள, ‘தேசிய ஒற்றைச்சாளர அமைப்பு’ மருத்துவ சாதனங்களின் இறக்குமதியை சீராக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. TATA கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)ஆல் இன்வெஸ்ட் இந்தியாமூலம் உருவாக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தளம், முதலீட்டாளர்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. தேசிய ஒற்றைச்சாளர அமைப்பானது மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்வது, பதிவுச்சான்றிதழ்கள், உற்பத்தி உரிமங்கள் மற்றும் இறக்குமதி உரிமங்களுக்கான விண்ணப்பம் பெறுவது தொடர்பான அனைத்து ஒப்புதலுக்கும் ஒரே இடத்தில் சேவையை வழங்குகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண்!
விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி (34) நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848.86 மீட்டர்) ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.
2. வளர்ச்சியைத் தடுக்கும் கார்பன் வரி.
“கார்பன் எல்லை வரி” எனப்படும் இறக்குமதி வரி வரும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அண்மையில் துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28), பிற நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும்போது கார்பன் கசிவைத்தடுப்பதே கார்பன் எல்லை வரியின் நோக்கமாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியம், மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்மீது கார்பன் வரி விதிப்பது, ஐரோப்பாவில் உற்பத்தியாகும் பொருள்களை மலிவான விலைக்கு வளரும் நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் முயற்சி என்ற பார்வையில் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் இயங்கி வரும் உரம், சிமென்ட், எஃகு, அலுமினியம், மின்சாரம், ஹைட்ரஜன் ஆகிய தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்நிலையில், இறக்குமதிப்பொருள்களுக்கு, “கார்பன் எல்லை வரி” விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம், வளர்ந்துவரும் நாடுகளை பாதிக்கும் என்பதால் இந்தியா இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
3. 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை: மத்திய அரசு
கிராமப்புற பகுதிகளில் சுமார் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களுடன் இணைந்து, ‘ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில பட்டியலின்கீழ், குடிநீர் வழங்கல் உள்ளது. குடிநீர் விநியோகம் குறித்த திட்டமிடல், வடிவமைப்பு, ஒப்புதல் மற்றும் அதனை செயல்படுத்தும் திட்டங்கள் மாநிலங்களின் பொறுப்புக்குட்பட்டதாக உள்ளன.
கடந்த டிச.25ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 72.29 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் மேற்கு வங்காளம், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் 78.59%…: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு: புதுச்சேரி, தெலங்கானா, குஜராத், கோவா, அந்தமான் & நிகோபார், தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
4. சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47ஆவது புத்தகக்காட்சி தொடங்கியது.
5. ‘BRICS’ கூட்டமைப்பில் ஐந்து புதிய உறுப்புநாடுகள்.
‘BRICS’ கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஐந்து உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன. சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத் -தும் நடவடிக்கையாக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், ‘BRIC’ கூட்டமைப்பை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின. இதைத் தொடர்ந்து, 2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ‘BRICS’ என மறுபெயரிடப்பட்டது.
6. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை!
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தொடங்கிவைத்தார். வேலைவாய்ப்பு அலுவலகங்க -ளில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்போருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதந்தோறும் `200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு `300, 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு `400, பட்டதாரிகளுக்கு `600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பதிவு செய்து ஓராண்டு காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், உதவித்தொகையின் மதிப்பும் குறைந்தபட்சம் `600 முதல் `1000 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
7. ‘கலைச்செம்மல்’ விருது: ஓவிய, சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
‘கலைச்செம்மல்’ விருதுக்கு, ஓவியம், சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த விருதுக்கு, 50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் படைப்பாளிகள் தங்களது 20 கலைப்படைப்புகளின் வண்ண ஒளிப்படங்களை இணைக்க வேண்டும். மாநில, தேசிய மற்றும் பன்னாட்டளவில் நடத்தப்பட்ட கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலைப்படைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.