Tnpsc Current Affairs in Tamil – 4th December 2023
1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தை நிறுவிய நிறுவனங்கள் எவை?
அ. FAO மற்றும் UNICEF
ஆ. FAO மற்றும் WHO 🗹
இ. UNICEF மற்றும் UNESCO
ஈ. உலக வங்கி மற்றும் IMF
- கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையம் என்பது உணவு தரநிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைக் குறியீடுகளை உருவாக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இவ்வமைப்பு 1963இல் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. சமீபத்தில், கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையம் தினைக்கான இந்தியாவின் தரநிலைகளைப் பாராட்டியதோடு தினைக்கான உலகளாவிய தரத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முன்மொழிவையும் ஏற்றுக்கொண்டது. தினையின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் 2023ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2. நடப்பாண்டின் (2023) உலக எய்ட்ஸ் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Bridges of Understanding
ஆ. Harmony in Healing
இ. Let Communities Lead 🗹
ஈ. Community for Healing
- உலக எய்ட்ஸ் நாள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.01ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், “Let Communities Lead” என்பதாகும். HIV ஒழிப்பில் சமூகங்களின் முக்கியத்துவத்தையும், 2030க்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கையும் இந்தக் கருப்பொருள் சிறப்பித்துக்காட்டுகிறது. உலக எய்ட்ஸ் நாள் என்பது எய்ட்ஸ் தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் மற்றும் நோயால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஒரு பன்னாட்டு நாளாகும்.
3. அண்மையில் சென்னையில் சிலை திறக்கப்பட்ட அயோத்திதாச பண்டிதர் பற்றிய தவறான கூற்று எது?
அ. 1891ஆம் ஆண்டில், ‘திராவிட மகாஜன சபை’யை நிறுவினார்
ஆ. ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழைத் தொடங்கினார்
இ. அவர் ஒரு மருத்துவர் / ஆயுர்வேத நிபுணர் 🗹
ஈ. மேலே உள்ள அனைத்தும் சரியான கூற்றுகள்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னையில் சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாச பண்டிதரின் சிலையை திறந்து வைத்தார். ‘தமிழர்’ மற்றும் ‘திராவிடர்’ போன்ற சொற்களை அரசியல் ரீதியாகப் பிரபலப்படுத்தியதில் பெரியாருக்கு முன்னோடியாக அயோத்திதாசர் திகழ்ந்தார் என்று மு. க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 1845இல் சென்னையில் பிறந்த அயோத்திதாச பண்டிதர், கடந்த 1891இல் ரெட்டமலை சீனிவாசனுடன் இணைந்து நிறுவிய, ‘திராவிட மகாஜன சபை’யின்மூலம் திராவிட சித்தாந்தத்தை ஊக்குவித்தார்.
- கடந்த 1876ஆம் ஆண்டில், அத்வைதானந்த சபையை நிறுவியதோடு, ஜான் இரத்தினத்துடன் இணைந்து, ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழையும் அவர் தொடங்கினார். சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர், மே 5, 1914 அன்று காலமானார்.
4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆர். வைஷாலி சார்ந்த விளையாட்டு எது?
அ. தடகளம்
ஆ. கேரம்
இ. டேபிள் டென்னிஸ்
ஈ. செஸ் 🗹
- 2023 டிசம்பர்.01 அன்று, R. வைஷாலி இந்தியாவின் மூன்றாவது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டராக ஆனார். இவர் இந்தியாவின் 84ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆவார். இதன்மூலம் கோனேரு ஹம்பி மற்றும் D ஹரிகா ஆகியோரை தொடர்ந்து இந்தியாவின் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டியலில் மூன்றாவதாக வைஷாலி இணைந்தார். கோனேரு ஹம்பி, 2002ஆம் ஆண்டில் தனது 15ஆம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் இந்தியப் பெண்மணி ஆனார். ஹரிகா 12 ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
5. NASAஇன் லூசி விண்கலத்தால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘டிங்கினேஷ்’ என்ற சிறுகோளின் நிலவுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் யாது?
அ. அமானி
ஆ. முவாங்கா
இ. கேஷோ
ஈ. சீலம் 🗹
- NASAஇன் லூசி விண்கலம், கடந்த மாதம், ‘டிங்கினேஷ்’ என்ற சிறுகோளையும் அதற்கென ஒரு சிறிய, “தொடுவகை இரும விண்மீன்” நிலவைக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தது. சர்வதேச வானியல் ஒன்றியம், இந்த நிலவிற்கு எத்தியோப்பியா மொழியில், “அமைதி” என்று பொருள்படும் “சீலம் – Selam” என்று சூட்டப்பட்ட பெயருக்கு ஒப்பு அளித்தது. ‘டிங்கினேஷ்’ மற்றும் ‘சீலம்’ என்ற பெயர்கள் எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2 புகழ்பெற்ற ஹோமினிட் புதைபடிவங்களைக் குறிக்கின்றன.
6. “பஞ்சாமிர்த” உறுதிமொழியுடன் தொடர்புடையது எது?
அ. வறுமையொழிப்பு
ஆ. உதிகட்டமைப்பு மேம்பாடு
இ. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடல் 🗹
ஈ. பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு
- காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் COP26இல் செய்யப்பட்ட, “பஞ்சாமிர்த” உறுதிமொழியின்கீழ் 2030ஆம் ஆண்டிற்குள் 500GW புதைபடிவமற்ற ஆற்றல் திறனை எட்டுவதை இந்தியா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் சரிபாதி புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெறப்படும்; அதே நேரத்தில் கரியமில வாயு உமிழ்வின் தீவிரத்தை 2005ஆம் ஆண்டிலிருந்த அளவைவிட 45% இது குறைக்கும்.
7. பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவானது (PMGKAY) அண்மையில் கீழ்க்காணும் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது?
அ. 2025
ஆ. 2028 🗹
இ. 2030
ஈ. 2032
- பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவானது (PMGKAY) 2028 வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியத்தை வழங்கும் இந்தத் திட்டமானது, COVID-19 தொற்றுநோய் காலத்தின்போது நிவாரணம் வழங்குவதற்காக 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 800 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிகி இலவச உணவு தானியம் இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை 2028 வரை நீட்டிக்க தற்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு `1.18 இலட்சம் கோடி அரசுக்குச் செலவாகும்.
8. 2023 நிலவரப்படி, இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியில் புனல் மின்சாரத்தின் சதவிகிதம் எவ்வளவு?
அ. 50%
ஆ. 11% 🗹
இ. 17%
ஈ. 25%
- அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியில் புனல் மின்சாரத்தின் உற்பத்தி சதவிகிதம் சுமார் 11% ஆகும். வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, நாட்டில் உள்ள மொத்த புனல் மின்சார உற்பத்தித்திறன் 145 கிகாவாட் (GW) ஆகும்; அதில் 29% மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஆற்றலைப் போலல்லாமல், புனல் மின்சாரமானது நெகிழ்வான உற்பத்தியை வழங்குகிறது. இதற்கு காரணம், உற்பத்திக்கு ஏற்றவாறு அலகுகளை விரைவாக சரிசெய்துகொள்ளும் திறன்தான்.
9. அண்மையில், COP28 உச்சிமாநாட்டில், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழியில் இந்தியா ஏன் கையெழுத்திடவில்லை?
அ. வளர்ச்சி முன்னுரிமைகள் 🗹
ஆ. வளங்களின் பற்றாக்குறை
இ. அரசியல் கருத்து வேறுபாடு
ஈ. தொழில்நுட்ப வரம்புகள்
- துபாயில் நடைபெற்ற COP28 காலநிலை உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்ட உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்த 118 நாடுகள் உறுதியளித்துள்ளன. இருப்பினும், சீனா, சௌதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இந்த உறுதிமொழியில் இருந்து விலகின.
- இந்தியா அதன் சொந்த தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளில் உறுதியாக உள்ளது; ஆனால் வளர்ச்சி முன்னுரிமைகளை பாதிக்கக்கூடிய இந்தக் குறிப்பிட்ட உறுதிமொழியின் விதிமுறைகளை ஏற்க இயலவில்லை. 2030க்குள் 50% புதைபடிவமற்ற எரிபொருள் உற்பத்தி வசதியை நிறுவ இந்தியா இலக்கு கொண்டுள்ளது.
10. SWIS மற்றும் STEPS ஆகிய கருவிகள் ISROஇன் எந்தத் திட்டத்துடன் தொடர்புடையவை?
அ. ஆதித்யா L1 🗹
ஆ. சந்திரயான்
இ. ககன்யான்
ஈ. மங்கள்யான்
- சமீபத்திய மாதங்களில் இரண்டு அதிநவீன துகள் நிறமாலைமானிகள் தரவு சேகரிப்பைத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவின் ஆதித்யா L1 செயற்கைக்கோள் சூரியக் காற்றின் புதிர்களை அவிழ்க்கத் தொடங்கியுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் உள்ள SWIS மற்றும் STEPS கருவிகள் சூரிய-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி L1க்கு அருகில் சூரியக்காற்றின் நடத்தையை வெளிப்படுத்தும் புரோட்டான்கள் மற்றும் ஹீலியம் அயனிகள் கண்டறிந்துள்ளன.