Tnpsc Current Affairs in Tamil – 4th & 5th May 2024
1. ‘அன்டரேஸ்’ என்றால் என்ன?
அ. நீர்மூழ்கிக் கப்பல்
ஆ. AI கருவி
இ. சிவப்பு மீப்பெரும் அரக்க விண்மீன்
ஈ. ஆக்கிரமிப்பு தாவரம்
- பெங்களூருவைச் சார்ந்த இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஸ்கார்பியஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள சிவப்பு மீப்பெரும் அரக்க விண்மீனான அன்டரேஸின் முன் நிலவு கடந்துசெல்வதை பதிவுசெய்தது. சூரியனைவிட 10000 மடங்கு பிரகாசமான அன்டரேஸின் விட்டம் 700 மடங்காகும். இது 600 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும், குறைந்த அடர்த்தி மற்றும் வெப்பநிலையையே (சுமார் 6100°F (3400°C)) அன்டரேஸ் கொண்டுள்ளது. இதன் வெப்பநிலைதான் இதற்குச் செந்நிறத்தை அளிக்கிறது.
2. இன்வெஸ்ட் இந்தியா அறிக்கையின்படி, இந்தியாவின் மின்னணு வணிகச் சந்தையானது எந்த ஆண்டில் $325 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
அ. 2025
ஆ. 2027
இ. 2030
ஈ. 2040
- 500 மில்லியன் நுகர்வோர் மற்றும் பரவலான இணைய அணுகல்மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்னணு வணிகச்சந்தை $325 பில்லியனை எட்டும் என இன்வெஸ்ட் இந்தியா கணித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய இணையவழி சில்லறை சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கிறது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்நிறுவனம், கடந்த 2022இல் மின்னணு வணிகச் சந்தையின் மதிப்பு சில்லறை விற்பனையின் 7%த்தையும் உள்ளடக்கி $70 பில்லியன் என வெளிப்படுத்தியது.
3. அண்மையில், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தீங்குவிளைவிக்கும் கூர்மையான நூல்கள் அல்லது ‘மாஞ்சா’வை “முற்றிலும் தடைசெய்ய” அறிவுறுத்தியுள்ள அமைப்பு எது?
அ. தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஆ. இந்திய விலங்குகள் நல வாரியம்
இ. தேசிய காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம்
ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
- இந்திய விலங்குகள் நல வாரியமானது (AWBI) தீங்குவிளைவிக்கும் கூர்மையான நூல்கள் அல்லது ‘மாஞ்சா’வை முழுமையாக தடைசெய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தியுள்ளது. சீன ‘மாஞ்சா’ நூலால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்குமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ‘மாஞ்சா’வுக்கு முழுமையான தடையை விதித்தது.
- AWBI என்பது கடந்த 1960ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆலோசனை அமைப்பாகும். இது ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள பல்லப்கர்ஹில் இருந்து செயல்படுகிறது.
4. அஜ்ரக் ஜவுளி கைவினையுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. குஜராத்
இ. மத்திய பிரதேசம்
ஈ. கேரளா
- காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகளின் தலைமைக்கட்டுப்பாட்டகம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ‘கட்ச் அஜ்ரக்’ ஜவுளி கைவினைஞர்களுக்கு புவிசார் குறியீட்டை (GI) வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய ‘அஜ்ரக் ஜவுளி கைவினை’, குறிப்பாக கட்ச், சிந்து மற்றும் பார்மரில், பருத்தித் துணி கொண்டு உருவாக்கப்படுகிறது. இண்டிகோ சாயத்தின் பெயரால் இது, ‘அஸ்ராக்’ என அழைக்கப்படுகிறது.
5. உலக டுனா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
அ. மே.01
ஆ. மே.02
இ. மே.03
ஈ. மே.04
- உலக டுனா நாளானது ஆண்டுதோறும் மே.02 அன்று கொண்டாடப்படுகிறது. உலகளாவிய டுனா கையிருப்பின் சரிவையும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இன்றியமையாத டுனா, அதிகப்படியான மீன்பிடியால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இந்நாள் நிலையான மீன்பிடி நடைமுறைகளை வலியுறுத்துவதோடு மீன்பிடியைக் குறைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சூரைமீன் (டுனா) விநியோகத்தை உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகியவற்றையும் எடுத்துக்கூறுகிறது.
6. அண்மையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDEஆல் யாருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது?
அ. வைஷாலி ரமேஷ் பாபு
ஆ. சூர்ய சேகர் கங்குலி
இ. சவிதா ஸ்ரீ பாஸ்கர்
ஈ. தானியா சச்தேவ்
- இந்திய செஸ் மேதை வைஷாலி ரமேஷ் பாபு, FIDE வழங்கும் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அண்மையில் பெற்றார். இதன்மூலம் கோனெரு ஹம்பி மற்றும் துரோணவல்லிக்குப்பிறகு இந்தியாவின் 3ஆம் பெண் கிராண்ட்மாஸ்டராக வைஷாலி ரமேஷ் பாபு ஆனார். அவர் லோப்ரேகாட் ஓபனில் 2500 ELO புள்ளிகளைப் பெற்றிருந்தார். அண்மையில் டொராண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் போட்டியில் FIDE அவருக்கு முறையாக அப்பட்டத்தை வழங்கியது.
7. அண்மையில், உலகின் மிகப்பெரிய வானூர்தி நிலையமான அல் மக்தூம் பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்த நகரம் எது?
அ. மும்பை
ஆ. துபாய்
இ. லண்டன்
ஈ. நியூயார்க்
- ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் தலைமையில் உலகின் மிகப்பெரிய வானூர்தி நிலையமான அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை துபாய் உருவாக்கி வருகிறது. ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இது 400 முனைய வாயில்கள் மற்றும் 5 இணை ஓடுபாதைகளைக் கொண்டிருக்கும். போக்குவரத்திற்கு அப்பால், நகர்ப்புற வாழ்க்கை, வர்த்தகம் மற்றும் உலகளாவிய வர்த்தகம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. காட்டுத்தீ காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பீம்தால் ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. உத்தரகாண்ட்
இ. கேரளா
ஈ. பஞ்சாப்
- அண்மையில், இந்திய வான்படையின் (IAF) ஹெலிகாப்டர், உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள பீம்தால் ஏரியிலிருந்து தண்ணீரைச்சேகரித்தது, அருகிலுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தியது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக இந்திய இராணுவமும் இந்திய வான்படையும் வரவழைக்கப்பட்டன. தீயணைத்தல் பணிக்காக MI-17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. தீயை அணைக்கும் முயற்சிகளுக்காக உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான பீம்தால் ஏரி பயன்படுத்தப்பட்டன. நைனிடால் மாவட்டம் இந்தியாவின் ‘ஏரி மாவட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. மாபாரதத்தின் பீமாவின் பெயரால் அழைக்கப்படும் இவ்வேரி, பூமியின் மேலோடு மாற்றத்தால் இயற்கையாக உருவானதாகும்.
9. 2024 – உலக பத்திரிகை சுதந்திர நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis
ஆ. Shaping a Future of Rights
இ. Journalism under Digital Siege
ஈ. Information as Public Good
- உலக பத்திரிக்கை சுதந்திர நாளானது ஆண்டுதோறும் மே.03 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis” என்பதாகும். உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் பத்திரிகையின் பங்கை வலியுறுத்தும் விதமாக இக்கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. 1993இல் ஐநா பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள், உலகளவில் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கும் விண்ட்ஹோக் பிரகடனத்தை நினைவுகூருகிறது.
10. IQAirஇன்படி, அண்மையில் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
அ. காத்மாண்டு
ஆ. புது தில்லி
இ. போகரா
ஈ. ஹைதராபாத்
- IQAirஇன் கூற்றுப்படி, 2024 மே.02 நிலவரப்படி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக காத்மாண்டு உள்ளது. சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான IQAir என்பது 101 நகரங்களின் காற்று மாசு அளவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் காற்று மாசு அதிகரித்து வருவதால் நேபாள மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில், IQAirஇன் உலக காற்றுத்தர அறிக்கை இந்தியாவை மூன்றாவது மிகவும் மாசுபட்ட நாடாகவும், புது தில்லியை மிகவும் மாசுபட்ட தலைநகராகவும் தரவரிசைப்படுத்தியது.
11. அண்மையில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக ஓய்வூதியத்துறையால் தொடங்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன?
அ. அப்யுக்த் இணையதளம்
ஆ. விருத்தி இணையதளம்
இ. பவிஷ்யா இணையதளம்
ஈ. விகாஸ் இணையதளம்
- ஓய்வூதியத் துறையானது, ‘பவிஷ்யா’ என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது ஓய்வு பெற்ற அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய செலுத்துகைகள் மற்றும் மானியங்களைக் கண்காணிக்கும். பாரத வங்கி (SBI), பரோடா வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளின் ஓய்வூதிய செயலாக்கம் மற்றும் செலுத்துகைச் சேவைகளுடன் இந்த இணையதளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
12. அண்மையில், UPIபோன்ற உடனடி கட்டணச் சேவைகளுக்காக எந்த ஆப்பிரிக்க நாட்டுடனான ஒப்பந்தத்தில் NPCI கையெழுத்திட்டது?
அ. நமீபியா
ஆ. தான்சானியா
இ. கென்யா
ஈ. நைஜீரியா
- இந்தியாவின் UPI தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, நமீபியாவிற்கான UPIபோன்ற உடனடி கட்டண முறைமையை உருவாக்குவதற்காக NPCIஇன் அயல்நாட்டுப்பிரிவு நமீபியா வங்கியுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நமீபியாவின் நிதிச்சூழலை நவீனமயமாக்குவது மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கட்டண வலையமைப்புகளுடன் இணைப்பை மேம்படுத்துவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நமீபியாவில் நிதிச்சேர்க்கை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகப் பார்க்கப்படுகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி.
வாகன மாசு உமிழ்வு பரிசோதனை மையங்களில் அதிகரித்து வரும் விதிமீறல்களை தடுக்கும் விதமாக மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் (பி.யூ.சி.சி 2.0) என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்யவுள்ளது. இந்தச் செயலிமூலம் மாசு பரிசோதனை மையங்களின் இருப்பிடம் உறுதிசெய்யப்பட்டு விதிமீறல் நடப்பது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் மாசுக் கட்டுபாடு சான்றிதழ் பெற பி.யூ.சி.சி 2.0 செயலியை அறிமுகப்படுத்திய மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
2. நிலவில் மாதிரிகளைச் சேகரிக்க விண்கலத்தை அனுப்பியது சீனா.
‘சாங்கே-6’ எனப்பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. சீனாவின் தெற்குத் தீவு மாகாணமான ஹெய்னானில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ‘லாங் மார்ச்-5 ஒய்8’ ஏவுகலம்மூலம் சாங்கே-6 விண்கலம் செலுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கால அளவு 53 நாள்கள் ஆகும். கடந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் தரை ஊர்தியை தரையிறக்கியதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.