TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd January 2024

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கர்சவான் படுகொலை, தற்போதைய எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது?

அ. ஒடிசா

ஆ. ஜார்கண்ட்

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

  • கடந்த 1948 ஜன.01 அன்று, இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கர்சவான் நகரத்தில் காவல்துறையினரால் ஆதிவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர். கர்சவான் சமஸ்தானத்தை ஒடிஸா மாநிலத்துடன் இணைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது இந்தப் படுகொலை நிகழ்ந்தது. ஜெய் பிரகாஷ் சிங் முண்டாவின் உரையைக் கேட்க போராட்டக்காரர்களும் உள்ளூர் மக்களும் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது எதிர்பாரா விதமாக கலவரமடைந்த மக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; அதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். ஜாலியன் வாலாபாக் சோகத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படுகொலை பார்க்கப்படுகிறது.

2. அண்மையில், இந்திய கடற்படையின் புதிய துறைக்கலங்கள் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. துணை அட்மிரல் சந்தீப் நைதானி

ஆ. துணை அட்மிரல் கிரண் தேஷ்முக்

இ. துணை அட்மிரல் S R சர்மா

ஈ. துணை அட்மிரல் G S பாபி

  • துணை அட்மிரல் சந்தீப் நைதானி ஓய்வுற்றதையடுத்து இந்திய கடற்படையின் புதிய துறைக்கலங்கள் தலைவராக துணை அட்மிரல் கிரண் தேஷ்முக் பொறுப்பேற்றுள்ளார். துறைக்கலங்கள் தலைவர் என்பவர் கடற்படையின் துறைக்கலங்களின் கிளை, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பைக் கையாளுகிறார்.

3. அண்மையில், இந்திய கடற்படையின் எந்தக் கடலிய ஆய்வுக்கப்பல் ஓமனுக்கு சாகர் மைத்ரி திட்டம்-4க்காக புறப்பட்டுச் சென்றது?

அ. INS மகர்

ஆ. INS சந்தாயக்

இ. INS சாகர்தவானி

ஈ. INS துருவ்

  • இந்திய கடற்படையின் பெருங்கடலிய ஆய்வுக்கப்பலான INS சாகர்தவானி, ஓமனுக்கு சாகர் மைத்ரி திட்டம்-4க்காக புறப்பட்டுச் சென்றது. கடலிய ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் அமைந்துள்ள நாடுகளுடன் நீண்டகாலத்திற்கான அறிவியல் கூட்டாண்மை & ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோளாகும். இது கடல்சார் அறிவியல் & தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும்.

4. அண்மையில், பதினாறாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. விரால் ஆச்சார்யா

ஆ. ஜெகதீஷ் பகவதி

இ அரவிந்த் பனகாரியா

ஈ. அமித் மித்ரா

  • இந்திய நிதி ஆணையத்தின் புதிய தலைவராக Dr அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். நிதி ஆணையம் என்பது மத்திய-மாநில நிதி உறவுகள்குறித்த பரிந்துரைகளை வழங்கும் ஓர் அரசியலமைப்பு அமைப்பாகும். சிறந்த பொருளாதார நிபுணரான Dr அரவிந்த் பனகாரியா, NITI ஆயோக்கின் முதல் துணைத்தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது டாக்டர் அரவிந்த் பனகாரியாவின் கீழுள்ள 16ஆவது நிதி ஆணையம், 2026-27 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வு சூத்திரத்தை பரிந்துரைக்கும்.

5. அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றத்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ. பாதுகாப்பு உறுதித் திட்டம்

ஆ. சாட்சிப் பாதுகாப்புத் திட்டம்

இ. சாட்சிக் காவல் திட்டம்

ஈ. நீதித்துறை சாட்சிக் காவலர் திட்டம்

  • அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய உச்சநீதிமன்றம், நாடு தழுவிய சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. துன்புறுத்தல் அல்லது பாதுகாப்பின்மை காரணமாக சாட்சிகள் விசாரணையின்போது அடிக்கடி இடமாறுதல் செய்யப்படுவதால் இந்தத்திட்டம் அவசியமானதாக உள்ளது. இத்திட்டம் சாட்சிகளின் அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் அச்சுறுத்தல் உணர்வின் மூன்று வகைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குகிறது.

6. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் எரி பட்டு நூற்பாலை நிறுவப்படவுள்ள இடம் எது?

அ. கௌகாத்தி, அஸ்ஸாம்

ஆ. முஷல்பூர், அஸ்ஸாம்

இ. ஷில்லாங், மேகாலயா

ஈ. இம்பால், மணிப்பூர்

  • தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியமானது அஸ்ஸாம் மாநிலம், பக்சா மாவட்டத்தில் உள்ள முஷல்பூரில், எரி பட்டு நூற்பு ஆலையை நிறுவுகிறது. நீலப்புரட்சி திட்டத்தின் ஒருபகுதியாக, `15 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 375 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும். மேலும் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 25,000 குடும்பங்கள் பயனடையும் விதமாக இது செயலாற்றும்.

7. கீழ்காணும் எந்த ஆண்டு முதல், ஜனவரி முதல் வாரத்தின்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அணுமின் நிலையங்கள் மற்றும் நிறுவல்களின் பட்டியலைப் பரிமாறிக்கொள்கின்றன?

அ. 1988

ஆ. 1992

இ. 1995

ஈ. 1998

  • இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், நிறுவல்கள் குறித்த பட்டியல் தில்லி மற்றும் இசுலாமாபாத்தில் உள்ள தூதரகங்கள் வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டன. அணுமின் நிலையங்கள்மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக்கொள்ளப்படும் 33ஆவது பட்டியல் இதுவாகும். இதன் முதல் பட்டியல் கடந்த 1992ஆம் ஆண்டு ஜனவரி.01ஆம் தேதி பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 1988 டிசம்பர்.31இல் கையொப்பமிடப்பட்டு, 1991 ஜனவரி.27 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று இந்தப் பட்டியல் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

8. NEDFIஆல் அமைக்கப்பட்ட வடகிழக்குத் துணிகர நிதியத்தின் முதன்மை நோக்கம் யாது?

அ. பேருட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்குவதற்காக

ஆ. இந்தியா முழுவதும் அசையா சொத்துக்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்காக

இ. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் துளிர்நிறுவல் முயற்சிகளை ஆதரித்து முதலீடு செய்வதற்காக

ஈ. வடகிழக்கு மாநில அரசுகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக

  • NEDFI (North Eastern Development Finance Corporation Ltd.) ஆல் நிறுவப்பட்ட வடகிழக்குத் துணிகர நிதியம் (North-East Venture Fund), இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் துளிர் நிறுவல்கள் முன்னெடுப்புகளை ஊக்குவித்து அதற்கு ஒத்துழைப்பு நல்குவதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது. `100 கோடி நிதி அர்ப்பணிப்புடன், அமைச்சகம், NEDFI மற்றும் SIDBI (இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி) பங்களிப்புடன், NEVF வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தொழில்முனைவோர்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள பல்வேறு நிறுவல்கள் மற்றும் திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் NEDFIஇன் பரந்த பங்களிப்பில் இந்த முன்முயற்சியும் தற்போது இணைந்துள்ளது.

9. காசநோய் (TB) நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு நிதியுதவி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திட்டத்தின் பெயரென்ன?

அ. TB போஷன் யோஜனா

ஆ. நிக்ஷய் போஷன் யோஜனா

இ. TB-DBT

ஈ. அக்ஷய் போஷன்

  • காசநோய் (TB) நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு நிதியுதவி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிக்ஷய் போஷன் திட்டமானது கடந்த 2018 ஏப்ரலில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. காசநோய் ஏற்படுவதற்கு குறிப்பிடத்தக்க இடர் காரணியாக ஊட்டச்சத்து குறைபாட்டை அங்கீகரித்து, இத்திட்டம், காசநோயாளிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மூலமாக மாதத்திற்கு `500 வழங்குகிறது. காசநோய் சிகிச்சையின் போது நோயாளிகள் சத்தான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.

10. இந்தியாவில் ஒரே நேரத்தில் பல தேர்தல் நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய்

ஆ. பாபுராம் நிஷாத்

இ. விஜய்பால் சிங் தோமர்

ஈ. இராம்நாத் கோவிந்த்

  • இந்தியாவில் ஒரே நேரத்தில் பல தேர்தல் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு தேர்தல்கள் என்பது மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடத்துவதை குறிக்கிறது. இது தேர்தல் பணியை சீராக்கி, செலவுகளைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. இராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இதுகுறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு 2024ஆம் ஆண்டு முதல் இரண்டுகட்டமாக மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கே நடத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க இந்திய அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது.

11. இந்தியா-UAE கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘Desert Cyclone – 2024’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா

  • இந்தியா-ஐக்கிய அரபு அமீரக கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘Desert Cyclone – 2024’ ஆனது இராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த இருதரப்பு பயிற்சியின் முதல் பதிப்பு 2024 ஜன.02 முதல் ஜனவரி.15 வரை ராஜஸ்தானில் நடத்தப்படும். நகர்ப்புற நடவடிக்கைகள் போன்ற பகுதிகளில் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதன்மூலம் இந்திய இராணுவம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக படைகளுக்கு இடையே இயங்குதிறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இது இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துகிறது.

12. அண்மையில், எந்த நகரத்தில் இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப்பள்ளி திறக்கப்பட்டது?

அ. லக்னோ

ஆ. பிருந்தாவனம்

இ. குர்கான்

ஈ. பரிதாபாத்

  • இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப் பள்ளி மதுராவின் பிருந்தாவனத்தில் தொடங்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்வில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். சம்வித குருகுல பெண்கள் இராணுவப்பள்ளியானது வாத்சல்யா கிராம வளாகத்திற்குள் அமைந்துள்ளது. சாத்வி ரிதம்பரத்தினால் நிறுவப்பட்ட இப்பள்ளி, 870 மாணவிகளுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முன்னெடுப்பானது பாரம்பரியமாக இந்தியாவில் ஆண்களுக்காக மட்டும் இருந்த இராணுவக்கல்வியை பெண்களுக்கும் விரிவுபடுத்துவதன் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

13. சுகோய்-30 MKI போர் விமானங்களுக்காக இந்தியாவால் உருவாக்கப்பட்டு வரும் ரேடாரின் பெயரென்ன?

அ. திரிநேத்ரா

ஆ. விருபாக்ஷா

இ. ரோகினி

ஈ. சுவாதி

  • இந்தியா தனது சுகோய்-30 MKI போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக, ‘விருபாக்ஷா’ எனப்படும் அதிநவீன Active Electronically Scanned Array (AESA) ரேடார் அமைப்பை உருவாக்கி வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், இது எந்த சுகோய் வகையிலும் பொருத்தக்கூடிய மிகவும் திறமையான ரேடராக இருக்கும். இந்த வான்வழி ரேடார், இயந்திர மேவலுக்குப் பதிலாக மின்னணுவைப் பயன்படுத்துகிறது.

14. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள், ‘சூரிய வணக்கம்’ செய்து 2024ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை படைத்த மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. இராஜஸ்தான்

  • 2024ஆம் ஆண்டின் முதல் நாளில் 108 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில், 50,000-க்கும் அதிகமான மக்கள், ‘சூரிய வணக்கம்’ செய்யவைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது குஜராத். இச்சாதனை ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதோடு பிரதமர் நரேந்திர மோடியாலும் பாராட்டப்பட்டது. பிரதமர், இந்திய கலாச்சாரத்தில் 108 என்ற எண்ணின் சிறப்பு முக்கியத்துவத்தை சிறப்பித்துக் கூறினார். மாநில அளவிலான இந்த நிகழ்வானது, மேசானா மாவட்டத்தில் உள்ள மோதேரா சூரியன் திருக்கோவிலில், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலின் மேற்பார்வையில் நடைபெற்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பாலைவன புயல்’ இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு இராணுவப் பயிற்சி இராஜஸ்தானில் தொடக்கம்.

‘பாலைவன புயல்’ என்ற இந்திய – ஐக்கிய அரபு கூட்டு இராணுவப் பயிற்சியின் முதல் பதிப்பு 2024 ஜனவரி.02 முதல் 15ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் நடைபெறுகிறது. ஐநா அவை அமைதி நடவடிக்கைகளின் 7ஆவது பகுதியின்கீழ் பாலைவனம் / பகுதி பாலைவனங்களில் உள்ள கட்டமைப்பு பகுதிகளில் சண்டையிடுதல் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதே இதன் நோக்கமாகும். இந்தப்பயிற்சி இருதரப்புக்குமிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கும் ஒருங்கிணைந்த நட்புணர்வை மேம்படுத்துவதற்கும் உதவும்.

2. ‘நலம் 365’: யூ-டியூப் சேனல்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார நலத்திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்றுநோய் விழிப்புணர்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் நான்கு பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளார். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்டு தீர்ப்பளித்தார். இதனையடுத்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

4. `1000 கோடி மதிப்பில், ‘பசுமை காலநிலை மாற்ற நிதியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை.

இந்த ஆண்டு (2022-2023) நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசு `1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியத்தை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தகைய நிதி அமைப்பு முயற்சி இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதியத்துக்குத் திரட்டப்படும். இந்த நிதியானது SEBI மாற்று முதலீட்டு நிதி விதிமுறைகள், 2012இன் கீழ் ஒரு வகை – I (சமூக முயற்சி நிதி) ஆக அமைக்கப்படவுள்ளது.

பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அமைத்து செயல்படுத்தி வருகிறது. மேற்படி மூன்று திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வழிநடத்த தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) என்ற சிறப்பு நோக்கு வாகனத்தையும் (Special Purpose Vehicles) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

5. 2023இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 28,811 புகார்கள் பதிவு.

2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 28,811 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 55% புகார்களுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதில் 16,109 புகார்கள் பதிவுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தலைநகரம் தில்லி 2,411 புகார்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (1,343 புகார்கள்) மூன்றாமிடம் வகிக்கிறது. பிகார் (1,312), மத்திய பிரதேசம் (1,165), ஹரியானா (1,115), இராஜஸ்தான் (1,011), தமிழ்நாடு (608), மேற்கு வங்காளம் (569), கர்நாடகம் (501) ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இருந்தபோதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 30,864 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

6. அயலகத் தமிழர்களுக்கான, ‘வேர்களைத் தேடி’ திட்டம் தொடக்கம்.

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.11 மற்றும் 12 ஆகிய நாள்களில் கொண்டாடி வருகிறது. அதோடு, அயலகத் தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக, ‘வேர்களைத்தேடி’ என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை -யும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இத்திட்டம்மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும்வகையில் தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடுசெய்ய ஆணையிட்டிருந்தார். அதனடிப்படை -யில் வேர்களைத்தேடி திட்டத்தின் முதல் பயணம் டிச.27இல் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்கப்பட்டது.

7. காசநோய் பாதிப்பு 2.65% உயர்வு.

தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 96,709 பேர் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

8. டிசம்பரில் GST வசூல் `1.64 இலட்சம் கோடி.

டிசம்பரில் மொத்தமாக `1.64 இலட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டின் GST வருவாய் `9,888 கோடி என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மொத்த GST வசூல் `14.97 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் டிசம்பர் GST வசூலுடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பர் மாத GST வசூல் 10.3% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் 19% அதிகரிப்பு: கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டின் GST வசூல் `9,888 கோடி. இது அதற்கு முந்தைய டிசம்பரில் வசூலான `8,324 கோடி வசூலுடன் ஒப்பிடுகையில் 19% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin