Tnpsc Current Affairs in Tamil – 31st January 2024
1.’ஆர்மடோ’ என்றால் என்ன?
அ. மின்சார வாகனம்
ஆ. எறிகணை
இ. செயற்கைக்கோள்
ஈ. ஆயுதம் தாங்கிய இலகுரக சிறப்பு வாகனம்
- இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக சிறப்பு வாகனமான புதிய, ‘மஹிந்திரா ஆர்மடோ’, குடியரசு நாள் அணிவகுப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. மஹிந்திரா டிஃபென்ஸ் அமைப்பால் வடிவமைத்து கட்டப்பட்ட இந்த வாகனம் பயங்கரவாத எதிர்ப்பு, உளவு மற்றும் எல்லைப்புற ரோந்து ஆகியவற்றில் இந்திய ஆயுதப்படைகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 0-60 கிமீ வேகத்தை வெறும் 12 வினாடிகளில் இது எட்டுகிறது. மணிக்கு 120 கிமீக்கு மேல் வேகம் செல்லும் இது, தீவிர தட்பவெப்பநிலைகளிலும் செயல்படும்.
2. இந்திய இராணுவத்தில் சுபேதார் பதவியை பெற்ற முதல் பெண்மணி யார்?
அ. பிரீத்தி ரஜக்
ஆ. இராஜேஸ்வரி குமாரி
இ. மனிஷா கீர்
ஈ. ஸ்ரேயாசி சிங்
- நேர் எறிதட்டு சுடுதலில் சாம்பியனான பிரீத்தி ரஜக், ராணுவத்தில் ஹவில்தாராக இருந்து சுபேதாராக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணியானார். துப்பாக்கிச் சுடுதலில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீராங்கனையான சுபேதார் பிரீத்தி ரஜக், தனது நேர் எறிதட்டு சுடுதல் திறமையின் அடிப்படையில் 2022இல் ராணுவத்தில் சேர்ந்தார்.
3. எந்த இருநாடுகளுக்கு இடையே, ‘SADA TANSEEQ’ என்ற பயிற்சி நடத்தப்படுகிறது?
அ. இந்தியா மற்றும் இஸ்ரேல்
ஆ. இந்தியா மற்றும் சவூதி அரேபியா
இ. இந்தியா மற்றும் எகிப்து
ஈ. இந்தியா மற்றும் ஜப்பான்
- ‘சதா தான்சீக்’ என்னும் இந்தியா-சவுதி அரேபியா கூட்டு இராணுவப்பயிற்சி இராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் தொடங்கியது. இப்பயிற்சி 2024 ஜன.29 முதல் பிப்.10 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பகுதியளவு பாலைவன நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளுக்காக இருதரப்புப் படையினருக்கும் பயிற்சியளிப்பதே இப்பயிற்சியின் நோக்கம் ஆகும். இருதரப்பு துருப்புக்களுக்கு இடையே ஒத்துழைப்பு, நல்லிணக்கம், தோழமை ஆகியவற்றை வளர்க்கவும் இது உதவும். இந்தப் பயிற்சி இருதரப்பினருக்கும் தங்களின் பிணைப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
4. உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 28 ஜனவரி
ஆ. 29 ஜனவரி
இ. 30 ஜனவரி
ஈ. 31 ஜனவரி
- உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் (Neglected Tropical Diseases) நாளானது ஆண்டுதோறும் ஜனவரி.30 அன்று அனுசரிக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது வெப்பமண்டல பகுதிகளில் நிலவும், எளிய சமூகத்தினரைப் பாதிக்கும் 20 நோய் நிலைகளாகும்.
- பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும், கினியா புழு, சிக்குன்குனியா, டெங்கு மற்றும் யானைக்கால் நோய் போன்ற NTDகள் கடுமையான உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 12 புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் காணப்படுகின்றன. WHO மதிப்பிட்டுள்ளபடி, 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. ‘கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது’டன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஹிமாச்சல பிரதேசம்
ஈ. ஆந்திர பிரதேசம்
- ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், 2024ஆம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து பெற்றார். கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது நல்லிணக்கத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்வோரை அங்கீகரிக்கிறது. ஆண்டுதோறும் குடியரசு நாளன்று முதலமைச்சரால் வழங்கப்படும் இவ்விருது, மதநல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் சிறந்த முயற்சிகளை செய்யும் தமிழ்நாட்டில் உள்ள தனிநபர்களை கௌரவிக்கிறது. இந்த விருது பதக்கம், `25,000 ரொக்கம் மற்றும் சேவைகளை அங்கீகரிக்கும் சான்றிதழை உள்ளடக்கியதாகும்.
6. ‘டசர் பட்டு’ உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
அ. ஜப்பான்
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. இந்தியா
- ஜார்கண்ட் மாநிலத்தின் குடியரசு நாள் அலங்கார ஊர்தியானது ஆசன் மற்றும் அர்ஜுன்போன்ற தாவரங்களை உண்டுவாழும் பட்டுப்புழுக்களிலிருந்து பெறப்படுகின்ற காட்டுப் பட்டு வகையான டசர் பட்டுகளை வடிவமைப்பதில் பழங்குடியினப் பெண்களின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டியது. துசார் மற்றும் டஸ்ஸர் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படும் இவ்வகை பட்டின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது.
7. ஃபுதாலா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
அ. கேரளா
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. மகாராஷ்டிரா
ஈ. மத்திய பிரதேசம்
- நாக்பூரில் உள்ள ஃபுதாலா ஏரியில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மகாராஷ்டிர அரசுக்கும் அதன் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும் இந்திய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மேற்கு நாக்பூரில் உள்ள தெலாங்கெடி ஏரி என்றும் அழைக்கப்படும் ஃபுதாலா ஏரி அறுபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. போன்ஸ்லே மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஏரி, அதன் நீரூற்றுகளுக்காகப் புகழ்பெற்றதாகும். அதன் மூன்று பக்கமும் காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் நான்காவது பக்கம் கடற்கரையுடன் அமைந்துள்ளது.
8. அண்மையில் ISROஆல் ஏவப்பட்ட INSAT-3DS என்பது எவ்வகையான செயற்கைக்கோளாகும்?
அ. புவிநிலை செயற்கைக்கோள்
ஆ. வானிலை செயற்கைக்கோள்
இ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- ISRO மற்றும் IMD ஆகியவை காலநிலை சேவைகளை மேம்படுத்துவதற்காக கூட்டிணைந்துள்ளன. GSLV F-14 ஏவுகலம் மூலம் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் INSAT-3D மற்றும் INSAT-3DR உடன் அதனை இணைக்கும். இச்செயற்கைக்கோள் இரவுநேர படமாக்கல், துல்லியமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மதிப்பீடு மற்றும் அதிக இடஞ்சார்ந்த தீர்மானம்போன்ற அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. ‘INSAT-3DS’ மொத்தம் 2,275 கிகி எடை கொண்டது. இதில் ஆறு இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
9. “இந்தியாவிற்கென ஓர் உச்சநீதிமன்றம் இருக்கவேண்டும்” எனக் கூறுகின்ற அரசியலமைப்புப் பிரிவு எது?
அ. பிரிவு 124
ஆ. பிரிவு 129
இ. பிரிவு 110
ஈ. பிரிவு 112
- 1950 ஜன,26இல் நிறுவப்பட்ட இந்திய உச்சநீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டத்தை பிரதமர் அண்மையில் தொடக்கிவைத்தார். இந்திய அரசியலமைப்பின் 124ஆவது பிரிவுதான், “இந்தியாவிற்கென ஓர் உச்சநீதிமன்றம் இருக்கவேண்டும்” எனக்கூறுகின்றது. உச்சநீதிமன்றம் எனப்படுவது இந்தியாவின் மிகவுயர்ந்த நீதிமன்றமாகும். அனைத்து உரிமை மற்றும் குற்ற வழக்குகளுக்கும் மேல்முறையீடு செய்வதற்கான இறுதி நீதிமன்றம் இதுவாகும்.
10. சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக, ‘சாலை பாதுகாப்புப் படை’யைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
அ. பஞ்சாப்
ஆ. ஹரியானா
இ. இராஜஸ்தான்
ஈ. மகாராஷ்டிரா
- பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், ஜலந்தரில், ‘சாலை பாதுகாப்புப்படை’யைத் தொடங்கினார். இதன்மூலம் பிரத்யேக சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைப் படையைத் தொடங்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் ஆனது. சாலை விபத்துகளில் தினசரி 17-18 பேர் மரணிப்பாதை அறிந்த அம்மாநில முதலமைச்சர், மாநிலம் முழுவதும் போக்குவரத்தைச் சீரமைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவுமாக 144 உயர்நுட்ப வாகனங்கள் மற்றும் 5000 பணியாளர்களைக் கொண்ட சாலைப் பாதுகாப்புப் படையை உருவாக்கினார்.
11. ருசோமா ஆரஞ்சு திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
அ. அஸ்ஸாம்
ஆ நாகாலாந்து
இ. சிக்கிம்
ஈ. மணிப்பூர்
- ருசோமா ஆரஞ்சு திருவிழா என்பது நாகாலாந்து மாநிலத்தின் கோகிமாவில் உள்ள ருசோமா கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் ஒரு திருவிழாவாகும். அங்ககப் பொருட்களை ஊக்குவித்து அவற்றின்மூலம் வருமானம் ஈட்ட கிராமப்புற உழவர்களை ஊக்குவிப்பதே இத்திருவிழாவின் குறிக்கோளாகும். கிராமத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்தத் திருவிழா ஒருவகையில் உதவுகிறது.
12. ஊதா புரட்சியுடன் தொடர்புடையது எது?
அ. சுகந்தி (லாவெண்டர்)
ஆ. சூரியகாந்தி
இ. தேன்
ஈ. பருத்தி
- 2024 – குடியரசு நாள் அணிவகுப்பின் போது ஜம்மு & காஷ்மீரின் ஊதா புரட்சி காட்சிப்படுத்தப்பட்டது. மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் அரோமா இயக்கத்தின் ஒருபகுதியான இது, லாவெண்டர் சாகுபடியின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த முன்னெடுப்பானது உள்ளூரில் நறுமணப்பயிர்சார்ந்த விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், வணிக அளவிலான லாவெண்டர் விவசாயத்தை ஊக்குவிக்கவும் எண்ணுகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. குடியரசு நாள் விழா அணிவகுப்பு: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு விருது.
தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது. நடுவர் குழு தேர்வில் மாநிலங்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களுக்கான விருதுகளை முறையே ஒடிஸா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பெற்றன. மத்திய அரசுத்துறைகளின் சிறந்த ஊர்தியாக மத்திய கலாசார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அலங்கார ஊர்தி கலைக்குழுவினருக்கு முதலிடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
2. இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக இருக்கும்: சர்வதேச நிதியம்.
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%ஆக வலுவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. நடப்பாண்டு சீன பொருளாதார வளர்ச்சி 4.6%ஆகவும், அடுத்த ஆண்டு 4.1 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருந்தது. இது நடப்பாண்டு 2.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 1.7 சதவீதமாகவும் சரிய வாய்ப்புள்ளது. வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா நீடிக்கிறது. நடப்பாண்டும், அடுத்த ஆண்டும் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக வலுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. நீச்சல், டென்னிஸில் தமிழ்நாட்டுக்கு இரட்டைத்தங்கம்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதல், நீச்சல், டென்னிஸ் ஆகியவற்றில் தமிழர்களுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
பளுதூக்குதல் மகளிர் 81 கிகி பிரிவில் தமிழ்நாட்டின் கீர்த்தனா தங்கம் வென்றார். நீச்சலில் மகளிர் 200 மீட்டரில் தமிழ்நாட்டின் ஸ்ரீநிதி நடேசன் தங்கம் வென்றார். ஆடவர் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் நித்திக் நாதெல்லா தங்கம் வென்றார். டென்னிஸில் ஆடவர் இரட்டையரில் பிரணவ்/மகாலிங்கம் கூட்டணி தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் இரட்டையரில் மாயா இராஜேஸ்வரன்/ரேவதி இலட்சுமி பிரபா ஜோடி தங்கம் வென்றது.
4. காகிதமில்லா கணினி வழி கோப்புகள்: பொது சுகாதாரத்துறை முதலிடம்.
மின்னாளுகை நடவடிக்கைகளின் கீழ் காகிதமில்லா கணினிவழி மின்கோப்புகளை (e-files) அதிக அளவில் தயாரித்து பகிர்ந்ததில் பொது சுகாதாரத்துறை முதலிடம் பிடித்துள்ளது.
5. புகழ்பெற்ற வரலாற்றாசிரியர செம்பகலட்சுமி மறைவு.
தென்னிந்திய வரலாற்றில் நிபுணத்துவம்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரும், சமூக அறிவியலாளருமான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் R செம்பகலட்சுமி (92) ஜன.28 அன்று காலமானார்.
ஜன:30 தியாகிகள் நாள்