Tnpsc Current Affairs in Tamil – 30th November 2023
1. ‘FASTER 2.0’ என்ற இணையதளத்துடன் தொடர்புடையது எது?
அ. இந்திய தேர்தல் ஆணையம்
ஆ. இந்திய உச்சநீதிமன்றம் 🗹
இ. DPIIT
ஈ. NITI ஆயோக்
- இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி DY சந்திரசூட், ‘FASTER 2.0’ என்ற இணையதளத்தைத் தொடக்கி வைத்தார். இது சிறைக்கைதிகளை விடுவிக்கக்கூறும் நீதிமன்றத்தின் ஆணைகள் குறித்து சிறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கும். செயலில் உள்ள இந்த ‘FASTER 2.0’ இணையதளம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவலை உடனடியாகத் தெரிவிக்க உதவுகிறது. மேலும் e-SCR இணையதளத்தின் இந்தி பதிப்பும் அப்போது தொடக்கி வைக்கப்பட்டது; இந்தத் தளத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை காணமுடியும்.
2. 2023 – உலக பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டை நடத்துகிற நகரம் எது?
அ. புது தில்லி
ஆ. லண்டன்
இ. துபாய் 🗹
ஈ. கொழும்பு
- COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் உலக பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இரண்டு நாள் பயணமாக துபாய் செல்லவுள்ளார். பருவநிலை மாற்றம் குறித்த இந்த உலகளாவிய உச்சிமாநாடானது பைங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பது மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைக் கையாள்வதில் வளரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் கவனஞ்செலுத்தும்.
3. சீன மற்றும் இந்திய குடிகளுக்கு 30 நாட்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்த ஆசிய நாடு எது?
அ. தாய்லாந்து
ஆ. வியட்நாம்
இ. மலேசியா 🗹
ஈ. சிங்கப்பூர்
- மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிமின் கூற்றுப்படி, மலேசியாவிற்கு வரும் டிசம்பர்.01 முதல் வருகை தரும் சீன மற்றும் இந்திய குடிகளுக்கு நுழைவு இசைவு தேவையில்லை. சீன மற்றும் இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கலாம். நுழைவு இசைவு தேவையில்லை என்றாலும் பாதுகாப்பு சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். இதன்மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஈர்க்கலாம் என்றும் அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்றும் மலேசியா நம்புகிறது.
4. ‘பாலினத்தை உள்ளடக்கிய தகவல்தொடர்பு வழிகாட்டி’யை அறிமுகப்படுத்திய நாடு எது?
அ. இலங்கை
ஆ. வங்காளதேசம்
இ. அமெரிக்கா
ஈ. இந்தியா 🗹
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘பாலினத்தை உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கான வழிகாட்டியை’ வெளியிட்டார். இந்த வழிகாட்டியை லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, ஐநா பெண்கள் அமைப்பு, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. பாலினம் தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் உள்ளடக்கிய தன்மையை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது. பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘எலி வளை சுரங்கம்’ அதிகமாக உள்ள மாநிலம் எது?
அ. உத்தரகாண்ட்
ஆ. மேகாலயா 🗹
இ. சிக்கிம்
ஈ. அருணாச்சல பிரதேசம்
- உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணியில் பயன்படுத்தப்படும் எலி வளை சுரங்கமானது, குறுகிய மற்றும் கிடைமட்ட மடிப்புகளில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். கடினமான நிலப்பரப்பு மற்றும் நிலக்கரியின் தன்மை இந்தப் பகுதியில் இருப்பதால் மேகாலயா மாநிலம் முதன்மையாக எலி வளை சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளது. பொதுவாக ஒருவர் இறங்கி நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் அளவுக்கு இருக்கும் தரையில் தோண்டப்பட்ட குறுகிய குழிகள்தான் “எலி வளை” சுரங்கம் எனப்படுகிறது.
- இவ்வகை சுரங்கங்ககள் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இடர்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இவ்வகை சுரங்க செயல்முறை நிலச்சீரழிவு, காடழிப்பு மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014ஆம் ஆண்டில் இவ்வகை சுரங்க முறைக்குத் தடைவிதித்தது.
6. 2023ஆம் ஆண்டுக்கான, ‘புக்கர்’ பரிசைப் பெற்ற பால் லிஞ்ச் சார்ந்த நாடு எது?
அ. அமெரிக்கா
ஆ. இங்கிலாந்து
இ. அயர்லாந்து 🗹
ஈ. ஆஸ்திரேலியா
- ஐரிய எழுத்தாளர் பால் லிஞ்ச் தனது பிறழுலக புதினமான, ‘பிராபட் சாங்’குக்காக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை பெற்றார். இது அவரது ஐந்தாவது புதினமாகும். அயர்லாந்தில் தனது குடும்பத்தைப் பாதுகாக்க போராடும் கதைநாயகி எலிஷ் ஸ்டாக்கின் கதையை இது விவரிக்கிறது. 54 ஆண்டுகால வரலாற்றில் புக்கர் பரிசை வென்ற ஐந்தாவது ஐரிய எழுத்தாளர் பால் லிஞ்ச் ஆவார்.
7. கிளாசிக் இம்பீரியல் சுற்றுலாக் கப்பலுடன் தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
அ. கோவா
ஆ. கேரளா 🗹
இ. புதுச்சேரி
ஈ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கேரளாவில் கட்டப்பட்ட முதலாவதும் மிகப்பெரியதுமான சுற்றுலாக் கப்பலான கிளாசிக் இம்பீரியலைத் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். 50 மீ நீளமுள்ள இக்குளிரூட்டப்பட்ட கப்பல், இந்திய கப்பல் பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. 150 பயணிகள் வரை இதில் செல்லவியலும்.
8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அல்பட்ராஸ் (Appias albina) சார்ந்த இனம் எது?
அ. கால்நடைகள்
ஆ. வாத்து
இ. பட்டாம்பூச்சி 🗹
ஈ. பாம்பு
- கிழக்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளை நோக்கி பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது, வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்துடன் இணைந்த வருடாந்திர நிகழ்வாகும். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குமுன் நீல வரியன், அடர் நீல வரியன், இருவரி காக்கை கருப்பன் மற்றும் சாதா காக்கை கருப்பன் போன்ற டானைனே (Danainae) என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் மேற்கு நோக்கிப் பறக்கின்றன. நவம்பர் மாத இரண்டாம் வாரத்தில் ஆனைகட்டி மற்றும் நீலகிரி மலைகளில் இருந்து சிறுமுகை வனப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நோக்கி பைரிடே (Pieridae) குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி இனமான சாதாரண அல்பட்ராஸ் (அப்பியாஸ் அல்பினா) பறப்பதை கூர்நோக்காளர்கள் கண்டுள்ளனர்.
9. WHO மதிப்பீட்டின்படி, எத்தனை சதவீத பெண்கள் தன் வாழ்நாளில் உடல்சார் மற்றும் (அல்லது) பாலியல்சார்ந்த வன்முறையை அனுபவிக்கிறார்கள்?
அ. 50%
ஆ. 33.33% 🗹
இ. 12.5%
ஈ. 10%
- WHOஆல் 2021 மார்ச்சில் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் மற்றும் (அல்லது) பாலியல் வன்முறையை அனுபவிக்கிறார் என்கிறது. இதில் பெரும்பாலானவை நெருங்கிய உறவின்முறை கொண்டவரால் நிகழ்த்தப்படுகிறது. நவ.25, பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக 16 நாட்கள் நடைபெறும் செயல்பாட்டினைக் குறிக்கிறது. இந்தச் செயல்பாடு டிசம்பர்.10-மனித உரிமைகள் நாள் வரை நீடிக்கும்.
10. இந்தியாவில் அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. நவம்பர்.25
ஆ. நவம்பர்.26 🗹
இ. நவம்பர்.27
ஈ. நவம்பர்.28
- 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியோரின் பங்களிப்பை போற்றும் வகையில், நாடு முழுவதும் அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 125ஆவது பிறந்த ஆண்டான 2015ஆம் ஆண்டில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாக இந்திய அரசு அறிவித்தது. மக்கள் தங்கள் வாழ்வில் அரசியலமைப்பின் விழுமியங்களைப் பின்பற்றுவதற்கு ஊக்குவிப்பதே இத்தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கமாகும்.
11. இந்தியாவில் தேசிய பால் நாள் அனுசரிக்கப்படுகிற மாதம் எது?
அ. ஜூன்
ஆ. செப்டம்பர்
இ. நவம்பர் 🗹
ஈ. டிசம்பர்
- ஒவ்வோர் ஆண்டும், பால் நுகர்வின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நவ.26 அன்று தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வெண்மைப்புரட்சியின் சிற்பியான Dr வர்கீஸ் குரியனின் பிறந்தநாள் தேசிய பால் நாள் என நினைவுகூரப்படுகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. அயோத்திதாசப் பண்டிதருக்கு சிலையுடன் மணிமண்டபம்.
‘திராவிடப் பேரொளி’ எனப் போற்றப்படுபவர் அயோத்திதாசப் பண்டிதர். அவர் திராவிட மகாஜன சபையைத் தொடங்கியதுடன், ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழையும் தொடங்கினார். அவருக்கு, சென்னை கிண்டியில் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
2. `5,566 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
2024ஆம் ஜனவரி மாதத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ‘ஸ்டார்ட்-அப்’ தர வரிசையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3ஆம் இடத்தில் உள்ளது.
சென்னையில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில் `5,566.92 கோடி முதலீட்டிற்கான 293 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
3. பால் உற்பத்தியைப் பெருக்குவோம்.
இந்தியா 2021-22இல் 22.1 கோடி டன் பாலை உற்பத்தி செய்ததாக ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. எனினும் இந்தியாவில் பால் விலை அதிகமாக உள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, அதன் எகோ-போகஸ் இதழில் (மே 2023) 2021-22ஆம் ஆண்டு 5.3 சதவீதமாக இருந்த பால் உற்பத்தி வளர்ச்சி 2022-23ஆம் ஆண்டு 0.4 சதவீதமாக சரிவடைந்ததால் பால் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 32 இலட்சம் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தோல் வீக்க நோய்த்தொற்று (இன்பெக்ஷியஸ் லம்பி ஸ்கின் டிசீஸ்) இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளின் இறப்புக்குக் காரணமாக இருந்ததும், கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததும் பால் மற்றும் பால் பொருட்களின் பற்றாக்குறைக்கான காரணங்கள் என இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை குறிப்பிட்டுள்ளது.
செயற்கை கருவூட்டல் என்பது, எண்ணிக்கையில் குறைந்த கால்நடை இனங்களின் மரபணு முன்னேற்றத்தை விரைவுபடுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். இந்தச் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பம் 2019-20ஆம் ஆண்டில் 8 கோடிக்கும் அதிகமான கால்நடை கருவூட்டல்கள் நிகழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்தியாவில் செயற்கை கருவூட்டலினால் நிகழும் சராசரி கருத்தரிப்பு விகிதம் 35 சதவீதம் என்ற தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் கூறுகிறது.
மத்திய அரசு ‘ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்’ என்ற திட்டத்தின் வாயிலாக செயற்கை கால்நடை கருவூட்டலை தேசிய அளவில் செயல்படுத்தியது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து இன மாடுகளின் மரபணு மேம்பாட்டை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் நான்காவது கட்டம் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை இத்திட்டத்தின்கீழ் 6.767 கோடி செயற்கை கருவூட்டல்கள் நடத்தப்பட்டுள்ளன.
4. வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூல்.
எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இதை திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கடந்த ஏப்ரல்.1ஆம் தேதி கேரளத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. வைக்கம் போராட்டம் கடந்த 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. 1925ஆம் ஆண்டு நவ. 29ஆம் தேதி வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா, வைக்கத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு பெரியார் தலைமையேற்றார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO