Tnpsc Current Affairs in Tamil – 30th & 31st December 2023
1. 2024 – கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விளையாட்டு எது?
அ. ஸ்குவாஷ்
ஆ. கேனோயிங்
இ. கயாக்கிங்
ஈ. கேனோ ஸ்லாலோம்
- ஆறாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள், 2024 ஜனவரி.19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. முதன்முறையாக, ஸ்குவாஷ் விளையாட்டு இந்த விளையாட்டுகளில் சேர்க்கப்படவுள்ளது.
2. எந்தச் சீக்கிய குருவின் 4 மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.26 அன்று வீர பாலர் தினம் அனுசரிக்கப்படுகிறது?
அ. குரு தேக் பகதூர்
ஆ. குரு ராம் தாஸ்
இ. குரு கோவிந்த் சிங்
ஈ. குரு அர்ஜன்
- பத்தாவதும் கடைசி சீக்கிய குருவுமான குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.26ஆம் தேதி வீர பாலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜோராவர் சிங், ஃபதே சிங், ஜெய் சிங் மற்றும் குல்வந்த் சிங் ஆகியோர் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மற்றும் அவரது இராணுவத்திற்கு எதிராகப் போரிட்ட நான்கு வீரமகன்கள் ஆவர்.
3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அம்னியா கோட்டை அமைந்துள்ள பகுதி எது?
அ. சஹாரா
ஆ. கோலன் ஹைட்ஸ்
இ. சைபீரியா
ஈ. அலாஸ்கா
- மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ள அம்னியா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அம்னியா கோட்டை, மண் சுவர்கள் மற்றும் மரத்தாலான பலகைகள் கொண்ட குழி-வீடு தாழ்வுகளைக் கொண்டுள்ளது. இது மேம்பட்ட விவசாய மற்றும் தற்காப்புத் திறன்களைக் குறிக்கும் வண்ணம் உள்ளது.
4. இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் யார்?
அ. நரேந்திர மோடி
ஆ. ஜவஹர்லால் நேரு
இ அடல் பிஹாரி வாஜ்பாய்
ஈ. மன்மோகன் சிங்
- இந்தியாவும் இஸ்ரேலும் 1947இல் மதத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியான உறவுகளை ஏற்படுத்தின. இந்தியா 1950இல் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை அங்கீகரித்தது. 1992இல் முழு அளவிலான அரசியல் ரீதியான உறவுகள் நிறுவப்பட்டன. கடந்த 2000ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய அமைச்சர் LK அத்வானி ஆவார். 2003ஆம் ஆண்டில், ஏரியல் ஷரோன் இந்தியாவிற்கு வருகைதந்த முதல் இஸ்ரேலியப் பிரதமர் ஆனார். 2017இல் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
5. ‘தான்சென் சமரோ’ என்பது ஒவ்வோர் ஆண்டும், டிசம்பரில், கீழ்காணும் எந்த நகரத்தில் கொண்டாடப்படுகிறது?
அ. லக்னோ
ஆ. குவாலியர்
இ. தில்லி
ஈ. அஜ்மீர்
- ‘தான்சென் சமரோ’ நிகழ்வின்போது சுமார் 1300 தபேலா கலைஞர்கள் தபேலா வாசித்தனர். இந்நிகழ்வு “மிகப்பெரிய தபேலா ஒன்றுகூடல்” என்ற பிரிவின்கீழ் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில், ‘தான்சென் சமரோ’ கொண்டாடப்படுகிறது.
6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “6X6X6 உத்தி” என்பதுடன் தொடர்புடையது எது?
அ. பகல் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துதல்
ஆ. இரத்த சோகையின் பரவலைக் குறைத்தல்
இ. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குதல்
ஈ. மேற்கூறிய எதுவுமில்லை
- ‘இரத்தசோகையிலா பாரதம்’ என்னும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு, இந்திய அரசு அறிமுகப்படுத்தியது, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு இரத்தசோகை நிலையைக் குறைக்க, தடுப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் இது வழங்குகிறது. 6X6X6 உத்தி ஆனது ஆறு வழிமுறைகளைச் செயல்படுத்துவதன்மூலம் ஆறு வித வயதுக்குழுக்களிடையே இரத்த சோகையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. சர்வதேச கொள்ளைநோய்த் தடுப்புத் தயார்நிலை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. டிசம்பர் 27
ஆ. டிசம்பர் 28
இ. டிசம்பர் 29
ஈ. டிசம்பர் 30
- சர்வதேச கொள்ளைநோய்த் தடுப்புத் தயார்நிலை நாளானது (International Epidemic Preparedness Day) ஒவ்வோர் ஆண்டும் டிச.27 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொது அவையின் அழைப்பின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. “Legacy of Resilience: Learning from the Past, Preparing for the Future” என்பது 2023ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
8. அண்மையில், இலக்கியம் மற்றும் கலைத்துறையில் வழங்கப்படும், ‘கிரேட் அரபு மைண்ட்ஸ்’ என்ற விருதை வென்றவர் யார்?
அ. சுக்ரிதா பால்
ஆ. வசினி லாரெட்ஜ்
இ. பிரதீப் குமார்
ஈ. மிச்செல் ஜராத்தே
- பேராசிரியர் வசினி லாரெட்ஜ் அவர்களுக்கு இலக்கியம் மற்றும் கலைத்துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) வழங்கப்படும், ‘Great Arab Minds’ என்ற விருதை வென்றுள்ளார். ‘கிரேட் அரபு மைண்ட்ஸ்’ விருது என்பது ‘அரபின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படுகிறது.
9. பல்முனை ஏவல் நுட்பமுடைய ஏவுகணை அமைப்பான, ‘ஃபதா-II’ அண்மையில் அறிமுகப்படுத்திய நாடு எது?
அ. வங்காளதேசம்
ஆ. ஈராக்
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. பாகிஸ்தான்
- 2023 டிசம்பர்.27 அன்று, பாகிஸ்தானிய இராணுவம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பல்முனை ஏவல் நுட்பமுடைய ஏவுகணை அமைப்பான, ‘Fatah-II’இன் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. Fattah-2 என்பது 2023 நவம்பரில் ஈரானால் ஏவப்பட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீவுயர் அதிர்வெண்கொண்ட ஆயுதமாகும்.
10. ‘பாரத் GPT’ என்ற திட்டத்திற்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
அ. ஐஐடி தில்லி
ஆ. ஐஐடி மெட்ராஸ்
இ. ஐஐடி மும்பை
ஈ. IISc பெங்களூரு
- இந்தியாவில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொழில்நுட்பக்கழகம் – மும்பையுடன் இணைந்து ‘பாரத் GPT’ என்றவொரு புதிய முயற்சியைத் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் பல்வேறு துறைகள் புதிய உருமாற்றம் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நந்தன்கானன் விலங்கியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. உத்தர பிரதேசம்
ஆ. மேற்கு வங்காளம்
இ. ஒடிசா
ஈ. கர்நாடகா
- துபாய் சபாரி பூங்காவிலிருந்து ஒடிஸா மாநிலத்தில் உள்ள நந்தன்கானன் விலங்கியல் பூங்காவிற்கு சிறுத்தை, ஆப்பிரிக்க சிங்கம் மற்றும் சிம்பன்சி ஆகிய விளங்கினங்களைக் கொண்டுவர மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நந்தன்கானன் விலங்கியல் பூங்கா இதற்கு ஈடாக நீர்யானை, வெளிமான், புள்ளிமான், காட்டெருது, சிவப்புக்காட்டுக்கோழி மற்றும் கங்கைநீர் முதலை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை வழங்கும்.
12. பொது விநியோகத் திட்டத்தின்மூலம், எந்தப்பெயரில் 1 கிலோ அரிசியை `25க்கு விற்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது?
அ. நமோ
ஆ. பாரத்
இ. அன்னபூர்ணா
ஈ. சுதேசி
- பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரிசியின் விலை 10% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ‘பாரத்’ என்ற பெயரில் 1 கிலோ அரிசியை `25-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஏற்கெனவே ‘பாரத்’ ஆட்டா (கோதுமை) கிலோ `27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ `60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள்மூலம் இவை விற்பனை செய்யப்படவுள்ளன.
13. அண்மைச் செய்திகளின்படி, எந்த விமான நிலையத்திற்கு, ‘மகரிஷி வால்மீகி’யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
அ. லக்னோ
ஆ. அயோத்தி
இ. ஜோத்பூர்
ஈ. உஜ்ஜயினி
- அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையத்திற்கு, மகரிஷி வால்மீகியின் நினைவாக, ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2023 டிசம்பர்.30 அன்று புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். விமான நிலையத்தின் பெயர் அயோத்தியின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதைக் குறிப்பிடுவதால் இந்தச்செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ஜன.1-இல் விண்ணில் பாய்கிறது PSLV C-58 ஏவுகணை!
விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (X-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை ISRO வடிவமைத்துள்ளது. மொத்தம் 469 கிகி எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப்பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக போலிக்ஸ் (X-ரே போலாரிமீட்டர்) மற்றும் எக்ஸ்பெக்ட் (X-ரே ஸ்பெக்ட்ரோகிராபி) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் பரவும் ஊடுகதிர்களின் (X-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடும். அதேபோன்று, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்ளிட்ட அம்சங்களை 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்ய உள்ளது.
2. கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.
கிளாம்பாக்கத்தில் `400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய மற்றும் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செயல்படவுள்ளது. இங்கிருந்து தினமும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துக்கு, ‘ISO’ தரச்சான்று.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ‘ISO’ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டம் 1-க்கு ‘ISO: 9001’ தரமேலாண்மை மற்றும் ‘ISO: 14001’ சுற்றுச்சூழல் மேலாண்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
4. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ‘தலைமைத்தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பணிக்காலம்) மசோதா-2023’ நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும் மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல்:
பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. மேலும், மத்திய சரக்கு-சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா-2023, தற்காலிக வரி வசூல் மசோதா-2023 ஆகியவற்றுக்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
5. செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயர்வு: மத்திய அரசு.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாண்டு வைப்புத் திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும்.
6. காயல்பட்டினத்தில் 950 மிமீ மழை.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 950 மிமீ மழைபெய்துள்ளது. 1992ஆம் ஆண்டு நவ.14ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை அருகே உள்ள காக்காச்சியில் ஒரே நாளில் 965 மிமீ மழைபெய்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
7. தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை.
‘வந்தே பாரத்’ என்னும் அதிவேக இரயில் சேவை கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘வந்தே பாரத்’, சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில் தயாராகின்றது. தென் மாநிலங்களில் இயக்கப்பட்ட முதல் ‘வந்தே பாரத்’ இரயில் சென்னை-மைசூரு இடையே பயணித்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது, ‘வந்தே பாரத்’ இரயில் சேவையானது சென்னை – கோவை ஆகிய நகரங்களுக்கு இடையே வரவுள்ளது. இது ஏப்ரல்.8 அன்று தொடங்கிவைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இதுவாகும்.
8. தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது; பள்ளிகளுக்கு தலா `10 இலட்சம் ஊக்கத்தொகை.
தமிழ்நாட்டில் நடப்புக்கல்வியாண்டில் நூறு (100) அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’, அந்தப் பள்ளிகளுக்கு தலா `10 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. ஆண்டு தோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு `10 இலட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50; உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 50 என மொத்தம் 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.