Tnpsc Current Affairs in Tamil – 2nd February 2024
1. கோவாவில் CSIR-NIOஆல் அறிமுகப்படுத்தப்பட்ட தானாகவே இயங்கக்கூடிய நீர்மூழ்கி கலமான, ‘C-bot’இன் நோக்கம் என்ன?
அ. விண்வெளி ஆய்வு
ஆ. பவளப்பாறைகளை கண்காணித்தல்
இ. வேளாண் ஆராய்ச்சி
ஈ. காற்றின் தர அளவீடு
- கோவாவைச் சார்ந்த CSIR-தேசிய பெருங்கடலியல் நிறுவனமானது பவளப்பாறைகளை கண்காணிப்பதற்காக நீருக்கடியில் தானாகவே இயங்கக்கூடிய கலமான, ‘C-bot’ஐ அறிமுகப்படுத்தியது. இந்தக் கலமானது பவளப்பாறை கண்காணிப்பு எந்திரன் (ரோபோ) என்றும் அழைக்கப்படுகிறது. ‘C-bot’ என்பது கடலடிப்பவளப்பாறைகள்மீது அதிக கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கான அதிநவீன அம்சங்களைக்கொண்ட ஓர் எந்திரனாகும். இந்த எந்திரனால் நீருக்கடியில் 200 மீட்டர் ஆழம் வரை செல்லவியலும்.
2. Dr இராதாகிருஷ்ணன் குழுவானது பின்வரும் எந்தச் சீர்திருத்தத்துடன் தொடர்புடையது?
அ. வேளாண் சீர்திருத்தங்கள்
ஆ. கல்வி சீர்திருத்தங்கள்
இ. வரி சீர்திருத்தங்கள்
ஈ. வங்கி சீர்திருத்தங்கள்
- Dr இராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டு மதிப்பீட்டு அமைப்பு (Composite Assessment System) திட்டத்தையும் நிறுவன அங்கீகாரத்தையும் ஒன்றிணைத்து, இது ஓர் இருமய அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. பழைய முறைமையின்கீழ் புதிய விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படாமல், நான்கு மாதங்களுக்குள் இதை செயல்படுத்த NAAC நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலை 1 முதல் 5 வரையிலான முதிர்வு அடிப்படையிலான தரப்படுத்தப்பட்ட அங்கீகார முறை 2024 டிசம்பருக்குள் செயல்படுத்தப்படும். கூடுதலாக, வெளிப்படையான அங்கீகார செயல்முறைகளுக்காக ஒருங்கிணைந்த ஒரு நாடு ஒரு தரவு தளம் மற்றும் “பங்குதாரர் சரிபார்ப்பு” ஆகியவையும் முன்மொழியப்பட்டுள்ளன.
3. “பாரத்: மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளுடன் அமைந்த அலங்கார ஊர்தி 2024 – குடியரசு நாள் அணிவகுப்பில் முதலிடத்தைப் பிடித்தது. இது எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. கலாச்சார அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- நடப்பு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற 75ஆவது குடியரசு நாள் அணிவகுப்பில், “பாரத்: மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளில் அணிவகுப்பில் பங்கேற்ற கலாச்சார அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி முதல் பரிசை வென்றது. பண்டைய இந்தியா முதல் நவீனகால வரையிலான மக்களாட்சியின் பரிணாம வளர்ச்சியை அது காட்சிப்படுத்தியது. இந்திராகாந்தி தேசிய கலை மையம் இதனை அறிவித்தது. “துடிப்பான கிராமங்களை” சித்தரித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசைப் பெற்றது.
4. 2023 – ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
அ. 93
ஆ. 83
இ. 91
ஈ. 81
- டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2023 – ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில், இந்தியா, 180 நாடுகளில் 93ஆவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீடானது ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்றவோர் அரசுசாரா நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்தியா பெற்றுள்ள மதிப்பெண் 39/ 100 ஆகும். இந்தக் குறியீடு நாடுகளை 0 (ஊழல் நிறைந்த) முதல் 100 வரையிலான (ஊழல் குறைந்த) மதிப்பெண் கொண்டு, பொதுத்துறையில் நடைபெறும் ஊழலின் அளவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
5. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. இராதா ரதுரி
ஆ. குசும் காண்ட்வால்
இ. காமினி குப்தா
ஈ. கீதா கண்ணா
- உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் தலைமைச்செயலாளராக 1988ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த மூத்த இஆப அதிகாரி இராதா ரதுரி நியமிக்கப்பட்டுள்ளார். சுக்பீர் சிங் சந்துவுக்கு மாற்றாக இப்பதவிக்கு வந்துள்ள அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் இந்த உயர் நிர்வாகப்பதவியை வகிக்கும் முதல் பெண்ணாவார்.
6. இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பீட்டு அறிக்கையின்படி, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன?
அ. லடாக்
ஆ. ஜம்மு காஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. சிக்கிம்
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்தியாவின் முதல் பனிச் சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டார். இந்திய வனவிலங்கு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த மதிப்பீடு, காடுகளில் சுமார் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. லடாக்கில் 477, உத்தரகாண்டில் (124), இமாச்சல பிரதேசத்தில் (51), அருணாச்சல பிரதேசத்தில் (36), சிக்கிம் (21), ஜம்மு காஷ்மீர் (9) எனப் பனிச்சிறுத்தைகள் உள்ளன. உலகளாவிய பனிச்சிறுத்தை எண்ணிக்கையில் 10-15% இந்தியாவில் உள்ளது.
7. சல்கேர் கோட்டை, சிவனேரிக்கோட்டை மற்றும் பன்காலா கோட்டை ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. மத்திய பிரதேசம்
ஆ. மகாராஷ்டிரா
இ. கர்நாடகா
ஈ. இராஜஸ்தான்
- 2024-25ஆம் ஆண்டில் UNESCOஇன் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறுவதற்காக, “இந்தியாவின் மராத்திய இராணுவ நிலப்பரப்புகளை” இந்தியா முன்மொழிந்துள்ளது. 17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இந்த இராணுவ பரப்புகள் மராத்திய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான கோட்டை அமைப்புகளாகும். சயாத்ரி மலைத்தொடர்கள், கொங்கன் கடற்கரை, தக்காண பீடபூமி மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றில் பரந்து விரிந்திருக்கும் இக்கோட்டைகள், தனித்துவமான பரப்புகளை ஒருங்கிணைக்கிறது. சல்கேர் கோட்டை, சிவனேரிக் கோட்டை, இராய்காட், விஜய்துர்க் ஆகியன இதன் குறிப்பிடத்தக்க கூறுகளாம். 17ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்கிய மராத்திய இராணுவ சித்தாந்தம், 1818இல் பேஷ்வா ஆட்சிவரை தொடர்ந்தது.
8. “இந்தியப் பொருளாதாரம்: ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
அ. வேளாண் அமைச்சகம்
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- 2024 ஜனவரியில், “இந்தியப் பொருளாதாரம்: ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2024-25க்கான மத்திய பட்ஜெட் பிப்.1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் என்பது பொருளாதார விவகாரங்கள், வருவாய், செலவுகள், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை, மற்றும் நிதிச்சேவைகள் என ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும்.
9. எரவிகுளம் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஒடிசா
ஈ. கர்நாடகா
- கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள எரவிகுளம் தேசியப் பூங்கா, நீலகிரி வரையாடுகளின் கன்றீனும் பருவத்திற்காக மூடப்படுகிறது. 1978இல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்ட இது 97 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குதான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகவுயர்ந்த சிகரமான ஆனைமுடி உள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும், “நீலக்குறிஞ்சி” மலருக்குப் புகழ்பெற்ற இந்தப்பூங்கா, அதீத பருவமழையைப் பெறுகிறது.
10. அண்மையில், பசுமை ஹைட்ரஜன் (H) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்காக NTPC உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
அ. தமிழ்நாடு
ஆ. இராஜஸ்தான்
இ. மகாராஷ்டிரா
ஈ. ஹரியானா
- NTPC பசுமை ஆற்றல் நிறுவனமானது மகாராஷ்டிர அரசாங்கத்துடன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் ஆண்டுக்கு 1 மில்லியன் டன் வரை பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் கிளைப்பொருட்களான பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் போன்றவை உற்பத்தி செய்யப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மற்றும் 2 GW திறன்கொண்ட பம்ப் செய்யப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
11. “பாரத் 5ஜி வலைத்தளம் – ஓர் ஒருங்கிணைந்த வலைத்தளம்” என்பதை தொடங்கிய அமைச்சகம் எது?
அ. தகவல்தொடர்பு அமைச்சகம்
ஆ நிதி அமைச்சகம்
இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
ஈ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
- தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறைச்செயலாளர், ‘பாரத் டெலிகாம்-2024’இன்போது “பாரத் 5G வலைத்தளத்தை” அறிமுகப்படுத்தினார். இந்த ஒருங்கிணைந்த வலைத்தளமானது குவாண்டம், 6G, IPR மற்றும் 5G ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. PANIIT USA உடன் இணைந்து, இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழலமைப்பிற்கு உதவும் நோக்கோடு, எதிர்கால தொழில்நுட்ப வல்லுநர்கள் பதிவுசெய்துகொள்ளும் வசதியையும் இது கொண்டுள்ளது. குவாண்டம், IPR, PoCs/Pilot, 5G மற்றும் 6G ஆகியவற்றிற்கான மையப்படுத்தப்பட்ட மையமாக இது செயல்படுகிறது.
12. கடற்களை சாகுபடியை ஊக்குவிப்பது தொடர்பான முதல் தேசிய மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. இராமேஸ்வரம்
ஆ. கட்ச்
இ. அகமதாபாத்
ஈ. திருவனந்தபுரம்
- குஜராத் மாநிலத்தின் கட்சில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கடற்களை சாகுபடியை மேம்படுத்துவதற்கான தேசிய மாநாட்டில், பல்வேறு கடற்களை சாகுபடி முறைகள் (மோனோலைன், டியூப்-நெட் மற்றும் மிதவை) காட்சிப்படுத்தப்பட்டன. CMFRI, CSMCRI மற்றும் NFDB ஆகியவை இந்த நுட்பங்களுக்கு செயல் விளக்கம் அளித்துக்காட்டின. மெய்யான வேர்கள் மற்றும் இலைகள் இல்லாத கட்புலனாகத்தக்க ஆல்காவான கடற் களைகள் கடலிலும் கடலோர நீரிலும் செழித்துவளரும் தன்மையுடையன்.
- வெள்ளொளியின் குறிப்பிட்ட அலைநீளங்களை உறிஞ்சும் நிறமிகளின் அடிப்படையில் அவை நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியானது கடற்களை வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், இந்தியாவில் அதன் திறத்தைப்பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. கடன் பத்திரங்கள்மூலம் `14.13 இலட்சம் கோடி
மத்திய அரசின் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு `14.13 இலட்சம் கோடி திரட்ட முடிவுசெய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.1ஆம் தேதி தொடங்கும் புதிய நிதி ஆண்டில் இருந்து இந்தக் கடன் பத்திரங்கள்மூலம் நிதி திரட்டும் பணிதொடங்கும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு `15.43 இலட்சம் கோடி கடன் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் கடன்வாங்கும் இலக்கு அதைவிட சற்றுகுறைந்துள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளதே அரசு கடன்வாங்குவதைக் குறைப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
2. ‘PM கிஸான்’ திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு தலா `6,000 நிதியுதவி 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. நேரடி பலன் பரிமாற்றத்தின்கீழ் (DTB), விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இத்தொகை செலுத்தப்படுகிறது. கடந்த 2019 இடைக்கால பட்ஜெட்டின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
3. ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ என்ற திட்டத்தின்கீழ், நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் தொடங்கப்பட்ட புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
4. 1 கோடி வீடுகளில் பிரதமரின் சூரிய மின்சார திட்டம்.
பிரதமரின் சூரியோதயம் திட்டம்மூலம் ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 அலகு அளவு மின்சாரம் உற்பத்தி செய்யவியலும். இதனால், ஆண்டுக்கு `18,000 வரை அந்தக்குடும்பத்தினரால் சேமிக்கவியலும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை 2027ஆம் ஆண்டுக்குள் சுழியமாகக் குறைக்க நோக்கி இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த 10 ஆண்டுகளில் 81 ஜிகாவாட்டிலிருந்து 188 ஜிகாவாட்டாக உயர்ந்திருப்பதாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய மின்சார ஆணையத்தின் தரவுப்படி, நாட்டில் சூரிய மின்னாற்றலிலிருந்து 73 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மின்னாற்றலிலிருந்து 45 ஜிகாவாட் (GW), பெரிய மற்றும் சிறிய நீர்மின்திட்டங்களிலிருந்து முறையே 47 ஜிகாவாட், 5 ஜிகாவாட், உயிரி ஆற்றலிருந்து 10 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
5. விளையாட்டு அமைச்சகத்துக்கு `3,442 கோடி ஒதுக்கீடு.
நடப்பாண்டு பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு `3,442.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு `3,396.96 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
பாரீஸில் நடப்பாண்டு ஜூலை.26 முதல் ஆகஸ்ட்.11 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கவனஞ்செலுத்துவதே 2024-25ஆம் நிதியாண்டின் முக்கிய நோக்கமாகும். ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிக்கு `900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள் வழங்குதல், தேசிய அளவிலான முகாம் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள்போன்ற பணிகளில் இந்திய விளையாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆணையத்துக்கு கடந்த ஆண்டு `795.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து நடப்பாண்டு கூடுதலாக `26.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. அதிக ராம்சர் தளங்களைக் கொண்ட மாநிலம்: தமிழ்நாடு.
இந்தியாவில் அதிக ராம்சர் தளங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 14 ராம்சர் தளங்கள் உள்ள நிலையில், அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் லாங்வுட் சோலை காப்புக்காட்டை ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், தமிழ்நாட்டில் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்: கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் 453.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தத்தளம் 500க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக செயல்படுகிறது. இந்தச்சதுப்பு நிலம் நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய காரணமாகத் திகழ்கிறது.
லாங்வுட் சோலை காப்புக்காடு: லாங்வுட் சோலை காப்புக்காடு நீலகிரி மாவட்டத்தில் 116.007 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தத் தளம் 700க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நூறு சதுப்புநிலங்களைப் பாதுகாக்க `115.15 கோடி செலவில், “தமிழ்நாடு சதுப்புநிலங்கள் இயக்கம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
7. ஆவின் தினம்: பிப்ரவரி முழுவதும் கடைப்பிடிப்பு.
ஆவின் தினம், ஆண்டுதோறும் பிப்.1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) உருவாக்கப்பட்ட நாளான பிப்.1ஆம் தேதி, ‘ஆவின்’ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
8. ராம்சர் பட்டியலில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியின் லாங்வுட் சோலை காப்புக்காடுகள்!
ஐநாவின் பன்னாட்டு பல்லுயிர் சூழல் மையம் சார்பில் ராம்சர் பட்டியலில் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலை காப்புக்காடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 116 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட பசுமைமாறா காடாகும். லாங்வுட் சோலை பல்லுயிர் சூழல்மையமாகவும் திகழ்கிறது. உலகின் தலைசிறந்த பசுமைமாறா காடாக அறிவிக்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின், ‘குயின்ஸ் கனோபி’ என்ற பிரிட்டன் அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் லாங்வுட் சோலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. லாங்வுட் சோலை 700 வகையான தாவர வகைகள், 177 பறவையினங்களைக் கொண்டுள்ளது.
சதுப்புநிலங்களைப் பாதுகாக்க ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் கடந்த 1971ஆம் ஆண்டு பன்னாட்டு அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி, ஐநா சார்பில் உலகம் முழுவதும் உள்ள சதுப்புநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் வகையில் ராம்சர் தலங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள பதிமூன்று (13) இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது குறிப்பிடத்தக்கது.
பிப்.02 – உலக ஈரநிலங்கள் நாள்.
கருப்பொருள்: Wetlands and Human Wellbeing