TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th March 2024

1. அண்மையில், 148ஆவது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. பாரிஸ், பிரான்ஸ்

ஆ. வாஷிங்டன் DC, அமெரிக்கா

இ. ஜெனீவா, சுவிட்சர்லாந்து

ஈ. வியன்னா, ஆஸ்திரியா

  • 148ஆவது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2024 மார்ச்.23-27 வரை நடைபெற்றது. நாடாளுமன்றங்களுக்கு இடையிலான சங்கம் என்பது 1889ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலும் அலுவலகங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கிலும் மற்றும் வியன்னா, ஆஸ்திரியா போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் 7 பேர்கொண்ட இந்திய நாடாளுமன்றக்குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டது. நாடாளுமன்றங்களுக்கு இடையிலான சங்கமானது 180 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ளது.

2. சமீபத்தில், சர்வதேச வானியல் ஒன்றியமானது ஒரு சிறுகோளுக்கு கீழ்காணும் எந்த இந்திய அறிவியாலாளரின் பெயரைச் சூட்டியது?

அ. ஹரிஷ் சந்திரா

ஆ. கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்

இ. ஜெயந்த் மூர்த்தி

ஈ. அவத் சக்சேனா

  • சர்வதேச வானியல் ஒன்றியம் இந்திய வானியல் இயற்பியலாளர் பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தியின் நினைவாக சிறுகோள் (215884) ஒன்றுக்கு ஜெயந்த்மூர்த்தி எனப் பெயரிட்டு கௌரவித்தது. கிட் பீக் தேசிய கூர்நோக்ககத்தில் MW பூயி என்பவரால் கடந்த 2005இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சிறுகோள், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் சுழற்சிக் காலம் 3.3 ஆண்டுகளாகும்.

3. லான்செட் ஆய்வின்படி, 2050இல் இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் எவ்வளவாக இருக்கும்?

அ. 2.1

ஆ. 1.29

இ. 1.91

ஈ. 2.5

  • லான்செட் ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 2050ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.29 குழந்தைகளாகவும், மேலும் 2100ஆம் ஆண்டில் 1.04 ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிவு 1950இல் காணப்பட்ட ஒரு பெண்ணுக்கு 6.18 குழந்தைகள் என்ற அளவிலிருந்து கணிசமான சரிவைக் குறிக்கிறது. இந்தியா தற்போது கருவுறுதலின் மாற்று நிலைக்குக் கீழே உள்ளது; 2021இல் தேவையான 2.1க்கும் கீழே அதாவது 1.91ஆக உள்ளது.

4. ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள், 2024ஐ அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • ஒளிப்பதிவு (திருத்தம்) சட்டம், 2023இன் படி, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள், 1983ஐ மாற்றி, ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள், 2024ஐ அறிவித்துள்ளது. திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தும் வகையிலும், சமகாலத்திற்கேற்ப விதிமுறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. இப்புதிய விதிகள் எண்ம (டிஜிட்டல்) யுகத்திற்கான திரைப்பட சான்றிதழ் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும் நவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

5. சந்திரயானின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு கோள்தொகுதி பெயரிடலுக்கான IAU பணிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பெயர் என்ன?

அ. திரிசூலம்

ஆ. சிவசக்தி

இ பரமேஷ்

ஈ. ஸ்வஸ்திக்

  • சர்வதேச வானியல் ஒன்றியம் சந்திரயான் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு, ‘சிவசக்தி நிலையம்’ எனப் பரிந்துரைத்த பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆக.26 அன்று, சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிடப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்துப் புராணங்களில் வேரூன்றிய, ‘சிவசக்தி’ உறுதியையும் அதிகாரத்தையும் குறிக்கின்றது. மனிதநேயத்திற்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும் ‘சக்தி’ என்பது பெண் அறிவியலாளர்களை கௌரவிக்கும் விதமாக உள்ளது எனவும் பிரதமர் எடுத்துரைத்தார்.

6. அண்மையில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஹைப்பர்லூப் நிறுவனம் இந்தியாவில் ஹைப்பர்லூப் அமைப்புகளை உருவாக்குவதற்காக கீழ்காணும் எந்த ஐஐடியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி தில்லி

ஈ. ஐஐடி ஹைதராபாத்

  • சுவிஸ் ஹைப்பர்லூப் நிறுவனமான ஸ்விஸ்ஸ்போட் டெக்னாலஜிஸ், இந்தியாவில் ஹைப்பர்லூப் அமைப்புகளை அமைப்பதற்காக ஐஐடி மெட்ராஸின் துணை நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 2013இல் எலோன் மஸ்க் முன்மொழிந்த ஹைப்பர்லூப், சூரிய சக்தியால் இயங்கும் அதி வேக தரைமட்ட போக்குவரத்தை வழங்குகிறது. இது ஐந்தாவது போக்குவரத்து முறையாகும்; குறைந்த அழுத்தம் கொண்ட குழாய்களில் காந்த மிதப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதில் போக்குவரத்தை மேற்கொள்ளலாம்.

7. POEM-3 என்ற திட்டத்தைத் தொடங்கிய விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO

ஆ. NASA

இ. JAXA

ஈ. CNSA

  • ISROஇன் PSLV Orbital Experimental Module – 3 (POEM – 3) திட்டமானது PSLVஇன் PS4 நிலையுடன் சுற்றுப்பாதை குப்பைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். POEM-3 என அழைக்கப்படும் சுற்றுப்பாதை சோதனை -களுக்காக ISRO PS4ஐ மூன்றாவது முறையாக பயன்படுத்துவதை இது குறிக்கிறது. சோலார் பேனல்கள் மற்றும் லித்தியம்-அயன் மின்கலம்மூலம் 4-6 மாதங்களுக்கு இயக்கப்படும் இந்தத் தொகுதி சுற்றுப்பாதையில் அறிவியல் சோதனைகளை நடத்தும்.

8. தென்னிந்தியாவில் ஜிப்ஸ் கழுகுகளின் மிகப்பெரிய கூடுகட்டும் வெளிகளைக் கொண்டுள்ள பள்ளத்தாக்கு எது?

அ. அரக்கு பள்ளத்தாக்கு

ஆ. மோயாறு பள்ளத்தாக்கு

இ. கரஹால் பள்ளத்தாக்கு

ஈ. பராக் பள்ளத்தாக்கு

  • மாயாறு பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் மோயாறு பள்ளத்தாக்கு, அழிவின் விளிம்பிலுள்ள ஜிப்ஸ் கழுகுகளின் பூமியாக உள்ளது. கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்குள் அமைந்துள்ள இது, புலிகள் மற்றும் யானைகள்போன்ற முக்கிய உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்தப் பிராந்தியம் தீபகற்ப இந்தியாவில் ஜிப்ஸ் கழுகுகளின் மிகப்பெரிய கூடுகட்டும் வெளியைக் கொண்டுள்ளது.

9. ஹரியானா வேளாண் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் பட்டாணிச்செடிகளை பாதிக்கும் ஒரு புதிய நோயை அடையாளம் கண்டுள்ளனர். அந்நோயின் பெயர் என்ன?

அ. புசாரியம்

ஆ. மந்திரவாதிகளின் துடைப்பம்

இ. ஆன்டிரிரின் துரு

ஈ. சாம்பலச்சு

  • சௌத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், பட்டாணிச் செடிகளைப் பாதிக்கும், ‘Candidatus Phytoplasma asteris’ (16SrI) என்ற புதிய நோய்க் காரணிக்கு, “Witches’ broom” என்று பெயரிட்டுள்ளனர். அமெரிக்க தாவரநோயியல் சங்கத்தின் அறிக்கையில் இத்தாவர நோய்பற்றிய முதல் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

10. 2024 – இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சி நிறுவனம்

ஆ. பன்னாட்டு மன்னிப்பு அவை

இ. வணிகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு

ஈ. உலக சுகாதார அமைப்பு

  • ILO மற்றும் IHD இணைந்து வெளியிட்ட 2024 – இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை, இந்திய இளையோர்க்கு பணி தேடுவதில் உள்ள சவால்களை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. கவலையளிக்கும் வகையில், வேலையில்லாதோரில் 83% இளையோராவர். குறிப்பாக வேலையில்லாதவர்களிடையே படித்த இளைஞர்களிடையே வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது; இடைநிலைக்கல்வி அல்லது அதற்குமேல் படித்து வேலையில்லாமல் உள்ளோரின் சதவீதம் 65.7%ஆக உள்ளது. இந்தச்சதவீதம் கடந்த 2000இல் 35.2%ஆக இருந்தது.

11. அண்மையில், மியான்மருக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. வினை குமார்

ஆ. அபை தாக்கூர்

இ. வினை மோகன் குவாத்ரா

ஈ. பவன் கபூர்

  • 1992ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுச்சேவை அதிகாரியான மூத்த இந்திய தூதர் அபை தாக்கூர், மியான்மருக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது 2024 மார்ச்.26 அன்று வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்புப்பணியில் உள்ள அபை தாக்கூர், முன்னர் இந்தியா G20இன் தலைமைப் பொறுப்பை வகித்தபோது அதன் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.

12. கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படும், 2024 – ஏபெல் பரிசை வென்றவர் யார்?

அ. அவி விக்டர்சன்

ஆ. லூயிஸ் ஏ. கஃபரெல்லி

இ. மைக்கேல் தலகிராண்ட்

ஈ. லாஸ்லோ லோவாஸ்

  • நார்வேஜிய அறிவியல் & எண்கள் அகாதெமி 2024ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசுக்கு மைக்கேல் தலகிராண்டை தெரிவு செய்துள்ளது. நிகழ்தகவு கோட்பாடு மற்றும் வாய்ப்பியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ் விருது வழங்கப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பு மற்றும் வணிகப் போக்குவரத்துபோன்ற துறைகளின் பல்வேறு நிகழ்வுகளில் வாய்ப்பியலின் பங்கை தலகிராண்டின் பணி விளக்குகிறது. அவரது ஆராய்ச்சியின் மையமானது காஸியன் பரவலைப் பற்றிய புரிதல் மற்றும் பயன்பாடுகளை விளக்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேஜஸ் MK1A போர் விமானத்தின் முதல் சோதனை வெற்றி.

தேஜஸ் MK1A போர் விமானம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL) தெரிவித்துள்ளது. தேஜஸ் MK1A போர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட ரேடார், பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போர்விமானத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2021 பிப்ரவரியில் கையொப்பமானது. பெங்களூரில் உள்ள அறிவியல் & தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் இந்தப்போர்விமான வடிமைப்புக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

2. லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் – உறுப்பினர்கள் நியமனம்.

ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இதற்குத் தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவுக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான G M அக்பர் அலி தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், விழிப்புணர்வுப் பணி, நிதி மற்றும் சட்டம் சார்ந்த துறைகளில் 25 ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிப்போர், ஊழல் ஒழிப்புக் கொள்கை, பொது நிர்வாகம், விழிப்புணர்வுப் பணி, நிதி மற்றும் சட்டம் சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!