TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th and 30th June 2024

1. நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்து அதை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்த முதல் நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. இந்தியா

ஈ. பிரான்ஸ்

  • சீனாவின் சாங்கே-6 பணியானது, நிலவின் தொலைதூரப்பகுதியிலிருந்து, குறிப்பாக தென் துருவம்-ஐட்கென் பேசின் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டுவந்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. ரிலே செயற்கைக்கோள்கள்மூலம் ரேடியோ சமிக்ஞைகளின் தடையைச் சமாளிப்பது, துல்லியமான தரையிறக்கம் மற்றும் இரண்டு கிகி எடையுள்ள நிலவுப்பாறை மற்றும் மண்ணைச் சேகரித்தல் ஆகியவை இதன் முக்கிய சாதனைகளாகும். இந்தப் பணி நிலவுப் புவியியல், ஆரம்பகால சூரிய குடும்ப வரலாறு மற்றும் பூமி-நிலவு உறவுகள் பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது.

2. அண்மையில், 18ஆவது மக்களவையின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. K சுரேஷ்

ஆ. ஓம் பிர்லா

இ. இராஜ்நாத் சிங்

ஈ. அமித் ஷா

  • எதிர்க்கட்சி வேட்பாளர் K சுரேஷைத் தோற்கடித்து மக்களவையின் அவைத்தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் ஓம் பிர்லா மக்களவையின் அவைத்தலைவராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். இவ்வாறாக மக்களவையின் அவைத்தலைவராக இருமுறை பதவிவகித்த 6ஆவது நபர் இவராவார்.

3. அண்மையில், C-DAC உயர்செயல்திறன் கணினி மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மனிதவள மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க எந்த நிறுவனத்துடனான MoAஇல் கையெழுத்திட்டுள்ளது?

அ. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம்

ஆ. ஐஐடி, பம்பாய்

இ. ஐஐடி, மெட்ராஸ்

ஈ. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

  • அதிநவீன கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) ஆகியவை உயர்செயல்திறன் கணினி மற்றும் தொடர்புடைய பகுதிகளில் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சங்க அமைப்பு விதிக்குறிப்பில் கையெழுத்திட்டன. அதன் முதன்மை முயற்சிகளில் பெருந்திட்ட பயிற்சியாளர் திட்டங்கள், தரமேம்பாட்டுத் திட்டங்கள், ஸ்வயம் தளத்தில் HPC படிப்புகள், தொழில்சார்ந்த பாட மேம்பாடு மற்றும் AICTEஆல் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு C-DAC HPC கற்றல் தளங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
  • இந்த ஒத்துழைப்பு புதுமைகளை வளர்ப்பதையும், தொழில் மற்றும் கல்வித்தேவைகளைப் பூர்த்திசெய்வதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘School in a Box’ என்ற திட்டம் கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தொடர்புடையதாகும்?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. நாகாலாந்து

ஈ. மணிப்பூர்

  • அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்கள் கல்வியைத் தொடர 167 நிவாரண முகாம்களில், ‘ஒரு பெட்டியில் பள்ளி’ திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்ட இந்த முயற்சி, வீடுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இழப்பதால் ஏற்படும் அதிர்ச்சியைச் சமாளிக்க உதவுகிறது. ஒவ்வொரு முகாமும் குறிப்பேடுகள் மற்றும் கற்றல் பொருட்களுடன் UNICEF வடிவமைத்த சிறார்க்குகந்த வெளி கருவிப்பெட்டி வழங்கும். அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், கருவிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும், குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து வருகிறது.

5. அண்மையில் பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. தென் ஆப்பிரிக்கா

இ. இங்கிலாந்து

ஈ. நியூசிலாந்து

  • 2024 – T20 உலகக்கோப்பையிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதால் டேவிட் வார்னரின் 15 ஆண்டுகால பன்னாட்டு கிரிக்கெட் வாழ்வு அமைதியாக முடிந்தது. பன்னாட்டு கிரிக்கெட்டில் தனது இறுதிக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் இந்த உலகக்கோப்பையை தனது கடைசி போட்டியாக டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். அவர் 2023 இல் தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியை விளையாடினார்; 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 2025 – சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு இருந்த போதிலும், T20 உலகக்கோப்பையோடு அவர் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்தார்.

6. ஜம்மு & காஷ்மீரில் பாயும் எந்த ஆற்றின்மீது ரேட்டில் மின்னுற்பத்தித் திட்டம் அமைந்துள்ளது?

அ. செனாப்

ஆ. ஜீலம்

இ. சிந்து

ஈ. உஜ்ஹ்

  • ஜம்மு & காஷ்மீரில் செனாப் ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள நீர்மின் திட்டமான ரேட்டில் மின்னுற்பத்தித் திட்டத்தை 5 பேர்கொண்ட பாகிஸ்தான் தூதுக்குழு மற்றும் உலக வங்கி நிபுணர்கள் பார்வையிட்டனர். 2006ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தான், பன்னாட்டு நடுவர் மன்றத்தைக் கோரி தொழில்நுட்ப ஆட்சேபனைகளை எழுப்பியது, அதை இந்தியா நிராகரித்து வந்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்கீழ், ஜம்மு & காஷ்மீரில் பாயும் நதிநீர்மீது இந்தியாவுக்கு உரிமையும், பஞ்சாபின் ஆறுகள்மீதான முழு உரிமையும் உள்ளது. இந்தியா ஒப்பந்தத்திற்கு இணங்குவதை உறுதிப்படுத்துகிறது.

7. அண்மையில், உள்துறை அமைச்சகத்தால் சோதிக்கப்பட்ட, ‘eSakshya’ செயலியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. சமூக வலைப்பின்னல் சேவைகளை வழங்குதல்

ஆ. குற்றச்சம்பவத்தின் சாட்சியங்களைப் பதிவுசெய்து பதிவேற்ற காவல்துறைக்கு உதவுதல்

இ. வணிகங்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ் தீர்வுகளை வழங்குதல்

ஈ. ரெயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த விவரங்களை வழங்குதல்

  • மத்திய உள்துறை அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய தகவலியல் மையம் உருவாக்கிய, ‘eSakshya’ என்ற மொபைல் செயலியை சோதனைசெய்து வருகிறது. இது குற்றக் காட்சிகளைப் பதிவுசெய்வதற்கும், மேகக்கணிமை அடிப்படையிலான தளத்தில் ஆதாரங்களைப் பதிவேற்றுவதற்கும் காவல்துறைக்கு உதவுகிறது. முதல் தகவல் அறிக்கையின் பல்வேறு கோப்புகளுடன், ஒவ்வொரு பதிவும் நான்கு நிமிடங்கள் வரை நீளமாக இருக்கும். இந்தச் செயலி டிஜிட்டல் சான்றுகளின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. ரஷ்யாவில் நடந்த 2024-BRICS விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?

அ. 20

ஆ. 21

இ. 29

ஈ. 30

  • நடப்பு 2024ஆம் ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற BRICS விளையாட்டுப்போட்டியில் இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 20 வெண்கலங்கள் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. இந்திய அணி பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கியதோடு இந்தச் சர்வதேச பல்விளையாட்டு நிகழ்வில் குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்தியது.

9. ஒவ்வோர் ஆண்டும், ‘போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.26

ஆ. ஜூன்.27

இ. ஜூன்.28

ஈ. ஜூன்.29

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.26ஆம் தேதியன்று, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள், சமூகத்தில் போதைப்பொருளின் தீங்குவிளைவிக்கும் விளைவுகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “The evidence is clear: invest in prevention” என்பதாகும். 1987 டிசம்பர்.07இல் ஐநா பொதுச்சபையால் நிறுவப்பட்ட இந்நாள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

10. அண்மையில், முதல் ‘பன்னாட்டு பால் கூட்டமைப்பு ஆசிய-பசிபிக் உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?

அ. வாரணாசி, உத்தர பிரதேசம்

ஆ. இந்தூர், மத்திய பிரதேசம்

இ. கொச்சி, கேரளா

ஈ. கொல்கத்தா, மேற்கு வங்காளம்

  • முதலாவது பன்னாட்டு பால் கூட்டமைப்பு ஆசிய-பசிபிக் உச்சிமாநாடானது கேரள மாநிலம் கொச்சியில் 2024 ஜூன் 26-28 வரை போல்காட்டியில் உள்ள கிராண்ட் ஹையாத்தில் நடந்தது. “பால்பண்ணை வைத்தலில் உழவர்களை மையமாகக்கொண்ட கண்டுபிடிப்புகள்” என்ற கருப்பொருளில் நடந்த இம்மாநாடு பன்னாட்டு பால் கூட்டமைப்பின் இந்திய தேசியக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 22 கண்காட்சி அரங்குகளும் 17 புத்தொழில்களும் பால்பண்ணைகள், செயலாக்க உபகரணங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றன.

11. ஒவ்வோர் ஆண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை (MSME) நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.26

ஆ. ஜூன்.27

இ. ஜூன்.28

ஈ. ஜூன்.29

  • கடந்த 2017ஆம் ஆண்டு முதல், ஜூன்.27ஆம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை (MSME) நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் MSME துறையின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. MSMEகள் 90% வணிகங்கள், 60-70% வேலைவாய்ப்பு மற்றும் உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50த்தைக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை MSME நாளை 2017 ஏப்ரல்.06 அன்று நிறுவியது. நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், MSMEs and the SDGs” என்பதாகும்.

12. அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) 100ஆவது முழுநேர உறுப்பினராக சேரவுள்ள நாடு எது?

அ. பராகுவே

ஆ. சீனா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. பிரேசில்

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் 100ஆவது முழு நேர உறுப்பினராவதற்கான ஏற்புறுதியை பராகுவே புது தில்லியில் வைத்து அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. 2015ஆம் ஆண்டு COP21இன்போது இந்தியா மற்றும் பிரான்சு இணைந்து நிறுவிய பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியானது சூரிய ஆற்றலை திறம்பட பயன்படுத்துதலை ஊக்குவிக்கிறது. இந்தக்கூட்டணியில் தற்போது 119 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன; 100 நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக உள்ளன. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி, பாரிசு காலநிலை ஒப்பந்தத்தை விரிவான சூரிய ஆற்றல் ஏற்பு மற்றும் பயன்படுத்துதல்மூலம் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காப்புரிமை…

இந்திய அளவில் காப்புரிமை செய்வதில் மொத்தம் 12, 948 காப்புரிமைகளுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் காப்புரிமை தொடர்பான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்றும் தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. குறு, சிறு நிறுவனங்களுக்காக `100 கோடியில் கடனுதவி திட்டம்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு `100 கோடியில் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கிமூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் கடனுக்கு 10 சதவீத என்ற வட்டி விகிதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு நிறுவனத்துக்கு `20 இலட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும். 2024-25 நிதியாண்டில் இதற்கென `100 கோடி தாய்கோ வங்கியால் ஒதுக்கப்படும்.

தென்னை நார் பொருள்கள் ஏற்றுமதி மையம்:

தென்னை நார்சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியை மேம்படுத்த பொள்ளாச்சியில் ஏற்றுமதி மையம் தொடங்கப்படும்.

3. நூல் வெளியீடு…

ISRO அறிவியலாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும், ‘விண்வெளித்தழும்புகள்’ என்னும் நூலின் தமிழ்ப்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

4. நான்கு புதிய மாநகராட்சிகள்.

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடிபோன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரமுயர்த்த வேண்டுவதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!