Tnpsc Current Affairs in Tamil – 28th May 2024
1. நிஷி பழங்குடியினர் சார்ந்த மாநிலம் எது?
அ. அசாம்
ஆ. பீகார்
இ. அருணாச்சல பிரதேசம்
ஈ. மிசோரம்
- மலையேறுபவரும் கிரிக்கெட் வீராங்கனையுமான கபக் யானோ, எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதல் நிஷி பழங்குடியினப் பெண் மற்றும் ஐந்தாவது பெண் என்ற சாதனையைப் படைத்தார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய இனக்குழுவான நிஷி, முதன்மையாக அசாமின் எட்டு மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் வசிக்கின்றனர். சுமார் 300,000 மக்கள்தொகையுடன், அவர்கள் வெட்டு மற்றும் எரிப்பு விவசாயம் மற்றும் பல்வேறு கைவினைகளில் சிறந்து விளங்குகின்றனர். மத ரீதியாக, அவர்கள் கிறிஸ்தவம், இந்து மதம் மற்றும் பழங்குடி டோனி போலோவைப் பின்பற்றுகிறார்கள்.
2. ESA/EU விண்வெளி கவுன்சிலில் எத்தனை நாடுகள் ஜீரோ டெப்ரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டன?
அ. 11
ஆ. 12
இ. 13
ஈ. 14
- பன்னிரண்டு நாடுகள் ESA/EU விண்வெளி கவுன்சிலில் ஜீரோ டெப்ரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டன; இது பூமியின் சுற்றுப்பாதையில் நிலையான மனித நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) 2023 நவம்பரில் இச்சாசனத்தை வெளியிட்டது. இது இலட்சிய தொழில்நுட்ப இலக்குகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புமூலம் 2030ஆம் ஆண்டளவில் விண்வெளி குப்பைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. அரசுக்குச் சொந்தமான GAIL (இந்தியா) லிமிடெட் சமீபத்தில் தனது முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய பிரதேசத்தின் எந்தப் பகுதியில் தொடங்கியுள்ளது?
அ. விஜயப்பூர்
ஆ. பாலகாட்
இ. தீர்பூர்
ஈ. பெதுல்
- GAIL (இந்தியா) லிமிடெட், தனது முதல் 10 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய பிரதேச மாநிலத்தின் விஜயப்பூரில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின்கீழ் திறந்துள்ளது. 2022 ஜன.04 அன்று அங்கீகரிக்கப்பட்ட இவ்வியக்கம் இந்தியாவை பசுமை ஹைட்ரஜனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது எலக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஊக்கத்தொகை, சோதனை அடிப்படையிலான திட்டங்களுக்கான ஆதரவு, பசுமை ஹைட்ரஜன் மையங்களின் மேம்பாடு மற்றும் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தரநிலைகளுக்கான கொள்கை கட்டமைப்பை உள்ளடக்கியது.
4. ‘Stellaria mcclintockiae’ என்றால் என்ன?
அ. COVID இன் புதிய திரிபு
ஆ. ஒரு புதிய தாவர இனம்
இ. சிறுகோள்
ஈ. அணுவாற்றல்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்
- 1,250-1,400 மீ உயரத்தில், கேரளாவின் நெல்லியம்பதி மலைகளின் சேற்றுச்சரிவுகளில், ‘Stellaria mcclintockiae’ என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூலிகை, 15 செமீ உயரம் வரை வளரும், இது ஸ்டெல்லாரியா (குடும்பம் கேரியோஃபிலேசியே) இனத்தைச் சேர்ந்தது. இது தனித்துவமான இதழ்கள், மகரந்த உருவவியல், ப்ராக்ட்கள், சீப்பல்கள் & விதை கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஸ்டெல்லேரியா இனமான இது, அழிந்து வரும் இனமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5. விருபாக்ஷா கோயில் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. கேரளா
ஈ. குஜராத்
- கர்நாடகாவில் உள்ள ஹம்பியின் விருபாக்ஷா கோவிலின் ஒருபகுதி, குறிப்பாக ‘சால் மண்டபம்’ பந்தல், தொடர் மழையால் இடிந்து விழுந்தது. சிவனின் வடிவமான விருபாக்ஷருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், விஜயநகர பேரரசின் முன்னாள் தலைநகரமான ஹம்பியில் உள்ள UNESCOஇன் உலக பாரம்பரிய தளத்தின் ஒருபகுதியாகும். பிரம்மாண்டமான கோபுரங்கள், விமானம், நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் தூண் மண்டபங்களுடன் கூடிய திராவிட பாணி கோவில் கட்டிடக்கலையை இது எடுத்துக்காட்டுகிறது.
6. முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. கேரளா
ஈ. குஜராத்
- அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகம் அண்மையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC அண்ணாவை வரவேற்றது. குஜராத்தில் கட்ச் வளைகுடாவின் வடகரையில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம், இந்தியாவின் சரக்குக்கையாளும் மிகப்பெரிய தனியார் துறைமுகமாகும். இது நாட்டின் கொள்கலன் போக்குவரவில் 33% கையாளுகிறது. APSEZஆல் இயக்கப்படுகிற இது, 260 MMT திறன்கொண்டது. ஆண்டுதோறும் 155 MMTஐ இது கையாளுகிறது.
7. ஐராவதி ஆறு பாயும் நாடு எது?
அ. நேபாளம்
ஆ. மியான்மர்
இ. இந்தியா
ஈ. பூட்டான்
- மியான்மர் நாட்டின் இராணுவ ஆட்சி, ஐராவதி ஆற்றின் நீர்மின் திட்டங்களை மதிப்பிடுவதற்கு ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது; இது சர்ச்சைக்குரிய மைட்சோன் அணைக்குப் புத்துயிர் அளிக்கும். 2021 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு மோசமான மின் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, இராணுவ ஆட்சி, இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. அண்மையில், ஆயுஷ் அமைச்சகமும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும் இணைந்து எந்த இடத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. ஹைதராபாத்
ஈ. பெங்களூரு
- அனைத்துத் தரப்பினருக்கும் ஆயுஷ் சிகிச்சைகள் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்காக ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் ஆயுஷ் சிகிச்சைகளை சேர்ப்பதற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
9. எந்த அமைப்பு அண்மையில் இந்திய வாழ்விட மையத்தில், ‘ஆயுர்கியான் மற்றும் டெக்னோ இன்னோவேஷன் (பிரகதி-2024)’இல் பார்மா ஆராய்ச்சியை நடத்தியது?
அ. AMAI
ஆ. CCRAS
இ. IISER
ஈ. தேசிய பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம்
- மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ‘பிரகதி – 2024’ (ஆயுர்வேதக் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மருந்து ஆராய்ச்சி) என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளது. ஆயுர்வேதத் துறையில் கூட்டாய்வுக்கு இது மிகவும் பயனுள்ள வாய்ப்பை வழங்குகிறது. ஆயுஷ் 64, ஆயுஷ் SG மற்றும் ஆயுஷ் குட்டி உட்பட 35 ஃபார்முலேஷன்கள் மற்றும் 3 கருவிகளின் ஆவணம் விவாதத்திற்கு வழங்கப்பட்டது. இந்த முன்முயற்சி ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பயனளிக்கும்.
10. AI தீர்மானம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிபற்றிய கட்டமைப்பு தீர்மானத்தை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?
அ. ஐரோப்பிய கவுன்சில் (COE)
ஆ. ஐக்கிய நாடுகள்
இ. UNICEF
ஈ. ILO
- ஐரோப்பிய கவுன்சிலானது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிபற்றிய கட்டமைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது; இது ‘AI தீர்மானம்’ என அழைக்கப்படுகிறது. AI அமைப்புகள் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்குவதை உறுதிசெய்வதே இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.
11. இந்தியன் பிரீமியர் லீக் 2024-ஐ வென்ற அணி எது?
அ. சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆ. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இ. இராஜஸ்தான் ராயல்ஸ்
ஈ. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), மே 26 அன்று சென்னை MA சிதம்பரம் அரங்கில் நடந்த 17ஆவது IPL இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (SRH) 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து மூன்றாவது IPL பட்டத்தை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர், KKR பந்துவீச்சில் SRHஐ 113 ரன்களுக்கு ஆட்டமிழக்கச்செய்தார்; IPL இறுதிப் போட்டியில் மிகக்குறைந்த ரன்கள் கொண்ட ஆட்டமாக இது இருந்தது.
12. அண்மையில், குடியரசுத்துணைத்தலைவர், எந்த இடத்தில் கார்பன் இழை மற்றும் வலுவூட்டப்பட்ட குழைம மையத்தைத் திறந்து வைத்தார்?
அ. சென்னை
ஆ. ஹைதராபாத்
இ. பெங்களூரு
ஈ. புது தில்லி
- பெங்களூருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் கார்பன் இழை மற்றும் வலுவூட்டப்பட்ட குழைம மையத்தை குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார். ஹன்சா NG பயிற்சியாளர் மற்றும் SARAS பல்நோக்கு விமானம் போன்ற புத்தாக்கங்களையும் அவர் அப்போது பார்வையிட்டார். அறிவியலாளர்களிடம் உரையாற்றிய அவர், முறியடிக்கும் தொழில்நுட்பங்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘ரீமெல்’ புயல்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, ‘ரீமெல்’ புயல், வங்கதேசத்தின் கேப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே கடந்த ஞாயிறுன்று நள்ளிரவில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 135 கிமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.
2. 3,300 ஹெக்டேர் பரப்பில், ‘லாந்தனா காமரா’ உண்ணிச்செடிகள் அகற்றம்.
தமிழ்நாட்டின் வனப்பகுதியில் சுமார் 3300 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்த, ‘லாந்தனா காமரா’ உண்ணிச் செடிகள் அகற்றப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த உண்ணிமுள்ளுச்செடிகள் காடுகளின் பன்முகத் தன்மையைக் குறைப்பதால் பறவைகள், விலங்குகள் உள்பட அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. இதில், குறிப்பாக, ‘சிவப்புமூக்கு ஆள்காட்டி’ என்ற பறவையினம் தரையில் கூடுகட்டும் பண்பைக் கொண்டது.
அழியும் நிலையிலுள்ள இந்தப்பறவையினம் லாந்தனா உண்ணிச்செடியின் ஆக்கிரமிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இச்செடியை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட நீண்டகால நடவடிக்கை காரணமாக இதுவரை சுமாா் 3300 ஹெக்டோ் பரப்பளவிலான, ‘லாந்தனா’ செடிகள் தமிழக வனப்பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் காரணமாக முதுமலை வனப்பகுதியில், ‘சிவப்பு மூக்கு ஆள்காட்டி’ பறவைகள் மீண்டும் தரையில் கூடுகட்டி முட்டை இடத்தொடங்கியுள்ளன.