Tnpsc Current Affairs in Tamil – 28th June 2024
1. தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் குளோபல் நேவிகேசன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) ரிசீவரை நிறுவ, மானவ் ரச்னா பல்கலைக்கழகத்துடன் (MRU) அண்மையில் கூட்டிணைந்த அமைப்பு எது?
அ. ISRO
ஆ. NASA
இ. JAXA
ஈ. CNSA
- மானவ் ரச்னா பல்கலைக்கழகம் தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் முதல் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) ரிசீவரை நிறுவ ISRO மற்றும் NARL உடன் கூட்டுசேர்ந்தது. இந்த முயற்சியானது வளிமண்டலம் மற்றும் விண்வெளி அறிவியலில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. பொறியியல் மற்றும் அறிவியல்சார்ந்த மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்துடன் நடைமுறை அனுபவத்தையும் இது வழங்குகிறது.
2. அம்புபச்சி மேளா என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்?
அ. அஸ்ஸாம்
ஆ. சிக்கிம்
இ. மணிப்பூர்
ஈ. நாகாலாந்து
- அஸ்ஸாம் மாநிலத்தின் கௌகாத்தியில் உள்ள காமாக்யா திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அம்புபச்சி மேளாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் கூடி வருகின்றனர். இந்தியாவின் 51 சக்திபீடங்களில் ஒன்றான காமாக்யா திருக்கோவில், நிலாச்சல் மலையின்மேல் அமைந்துள்ளது. இது பார்வதிதேவியின் வடிவமான காமாக்யா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது காமாக்யா தேவியின் மாதவிடாய் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். கோவிலின் கட்டிடக்கலை தனித்துவமாக பாரம்பரிய நாகரா மற்றும் முகலாய பாணிகளை ஒருங்கிணைக்கிறது; இது நிலாச்சல பாணி என்றும் அழைக்கப்படுகிறது.
3. அண்மையில், மாநிலங்களவையின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. பியூஷ் கோயல்
ஆ. J P நட்டா
இ. சிராக் பாஸ்வான்
ஈ. ராஜ்நாத் சிங்
- மகாராட்டிர மாநிலம் வட மும்பையிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பியூஷ் கோயலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் J P நட்டா மாநிலங்களவையின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு J P நட்டா பாஜகவால் பரிந்துரைக்கப்பட்டார்.
4. Reciprocal Exchange of Logistics Agreement (RELOS) என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான நிர்வாக ஏற்பாடாகும்?
அ. பிரான்ஸ்
ஆ. சீனா
இ. ஆஸ்திரேலியா
ஈ. ரஷ்யா
- இந்தியாவுடனான வரைவு சரக்குப் போக்குவரவு ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. பரஸ்பர சரக்குப் போக்குவரவு பரிமாற்ற ஒப்பந்தத்தின் (RELOS)கீழ் இராணுவ ஒத்துழைப்பை இது மேம்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம், அமைதிக்காலம் மற்றும் போர்க்கால பணிகளின்போது துருப்புக்கள், போர்க்கப்பல்கள் மற்றும் விமான வசதிகளை வழங்குதல் மற்றும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கான சரக்குப் போக்குவரவு ஆதரவை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் ஆற்றலை மிகவும் அதிகரிப்பதோடு, ஆர்க்டிக் ஆராய்ச்சி ஒத்துழைப்பையும் ஆதரிக்கிறது.
5. அண்மையில், தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0இன்கீழ், “சஃபாய் அப்னாவோ, பிமாரி பகாவோ” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ஈ. விவசாய அமைச்சகம்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0இன்கீழ், “சஃபாய் அப்னாவோ, பிமாரி பகாவோ” என்ற முன்னெடுப்பை ஜூலை.01 முதல் ஆகஸ்ட்.31 வரை நடத்தவுள்ளது. இது தூய்மை மற்றும் நலத்தில் கவனஞ்செலுத்தி, மழைக்கால சவால்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தயார்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின், “STOP வயிற்றுப்போக்கு பரப்புரையுடன்” இணைந்து, அதிக மழைபொழியும்போது ஏற்படும் தூய்மை மற்றும் நோய் இடர்களை நிவர்த்திசெய்ய துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கிறது.
6. அண்மையில், ‘பாரத ஒலிம்பிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்’ திறக்கப்பட்ட இடம் எது?
அ. ஜெய்ப்பூர்
ஆ. காந்திநகரம்
இ. பாட்னா
ஈ. லக்னோ
- பாரத ஒலிம்பிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமானது (BCORE) ஜூன்.23 அன்று குஜராத்தின் காந்திநகரத்திலுள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி டி உஷா, இந்திய விளையாட்டுகளில் அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் செயல்திறனுக்கான மையமாக BCOREன் பங்கை எடுத்துரைத்தார். பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, ‘BCORE’ ஒலிம்பிக் மதிப்புகளை ஒரு கல்வி மையமாக செயல்பட்டு ஊக்குவிக்கும்.
7. அண்மையில், ULLAS-நவ பாரத் சாக்ஷர்தா கார்யகிரம் திட்டத்தின்கீழ் முழு செயல்பாட்டு எழுத்தறிவு பெற்ற முதல் நிர்வாக அலகு எது?
அ. சண்டிகர்
ஆ. புதுச்சேரி
இ. இலட்சத்தீவுகள்
ஈ. லடாக்
- 2024 ஜூன்.24 அன்று, 97%-க்கும் அதிகமான எழுத்தறிவை அடைந்த பின்னர், ULLAS – நவ பாரத் சாக்ஷர்தா கார்யகிரம் திட்டத்தின்கீழ் முழு செயல்பாட்டு எழுத்தறிவை அடைந்ததற்கான நிர்வாக அலகாக லடாக்கை துணை நிலை ஆளுநர் Dr BD மிஸ்ரா அறிவித்தார்.
- தேசிய கல்விக்கொள்கை-2020உடன் இணைந்த இந்தத் திட்டம், தன்னார்வத்தொண்டுமூலம் வயது வந்தோரை கல்வியறிவு, எண்ணியல் மற்றும் வாழ்க்கைத்திறன்களில் மேம்படுத்துகிறது. இத்திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் இதுவரை 77 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். ULLAS திறன்பேசி செயலியில் 1.29 கோடிக்கும் அதிகமான கற்பவர்களும் 35 இலட்சம் தன்னார்வ ஆசிரியர்களும் உள்ளனர்.
8. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான காரணி எது?
அ. பாக்டீரியா
ஆ. பூஞ்சை
இ. வைரஸ்
ஈ. புரோட்டோசோவா
- மிசோரம் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி முதல் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதிலிருந்து 3,350 பன்றிகள் இறந்தன. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளில் 100% இறப்பு விகிதத்தை விளைவிக்கும் மிகவும் தொற்றும் வைரஸ் நோயாகும். காய்ச்சல், பலவீனம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளுள் அடங்கும். இவ்வைரஸ் நேரடி மற்றும் மறைமுக தொடர்புமூலம் பரவுகிறது; பன்றி இறைச்சிசார் பொருட்களில் நீண்டகாலம் இது வாழ்கிறது. துணை-சகாரா ஆப்பிரிக்காவைச் சார்ந்த இது, 2020இல் இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. எந்தச் சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இந்த நோயின் பரவலைத் தடுக்கும் ஒரே வழியாக பாதிக்கப்பட்ட விலங்குகளை முற்றாக கொன்றொழிப்பதே உள்ளது.
9. Innovations for Defence Excellence (iDEX) என்பது எந்த அமைச்சகத்தின் முதன்மை முன்னெடுப்பாகும்?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. தகவல் தொடர்பு அமைச்சகம்
இ. பாதுகாப்பு அமைச்சகம்
ஈ. புவி அறிவியல் அமைச்சகம்
- அண்மையில், ஒரு சிறிய செயற்கைக்கோளுக்காக Innovations for Defense Excellence (iDEX)இன்கீழ் 350ஆவது ஒப்பந்தம் SpacePixxel டெக்னாலஜிஸ் லிட் உடன் கையெழுத்திடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை முயற்சியான iDEX, MSME-கள், புத்தொழில்கள் மற்றும் R&D நிறுவனங்களை ஈடுபடுத்துவதன்மூலம் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் தன்னம்பிக்கை & புதுமைகளை ஊக்குவிக்கிறது. பாதுகாப்புப் புத்தாக்க நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிற இது, நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்மூலம் புதுமையாளர்களை ஆதரிக்கிறது.
10. எந்தப் பாலைவனத்தில் ALMA தொலைநோக்கி அமைந்துள்ளது?
அ. கலகாரி பாலைவனம்
ஆ. அட்டகாமா பாலைவனம்
இ. சகாரா பாலைவனம்
ஈ. கோபி பாலைவனம்
- Atacama Large Millimeter/submillimeter Array (ALMA) தொலைநோக்கியைப் பயன்படுத்திய வானியலாளர்கள் இருமய விண்மீன் அமைப்புகளைச் சுற்றி கோள் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளனர்; அங்கு இரண்டு விண்மீன்கள் ஒரு பொதுவான பொருண்மை மையத்தைச் சுற்றி வருகின்றன. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் 66 ஆண்டெனாக்களுடன் உள்ள ALMA, மில்லிமீட்டர் மற்றும் சப்மில்லிமீட்டர் அலைநீளங்களில் உள்ள வான்பொருட்களை ஆராய்வதோடு தொலைதூர விண்மீன் திரள்கள் & விண்மீன்களைக் கண்காணிக்க தூசி மேகங்களை ஊடுருவுகிறது. பன்னாட்டு கூட்டாண்மைமூலம் இயக்கப்படும், ‘ALMA’ மங்கலான ரேடியோ சமிக்ஞைகளை அசாதாரண உணர்திறனுடன் கண்டறிகிறது.
11. சாலிகுண்டம் பௌத்த பாரம்பரிய தளம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. ஆந்திர பிரதேசம்
ஆ. பீகார்
இ. கர்நாடகா
ஈ. இராஜஸ்தான்
- ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளத்தின் பண்டைய வரலாற்றை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீட்டெடுத்து வருகின்றனர். தண்டபுரி மற்றும் சாலிகுண்டம், கற்கால குகைகள் மற்றும் பழங்கால திருக்கோவில்கள் போன்ற முக்கிய பௌத்த தலங்களுக்கு பெயர் பெற்ற ஸ்ரீகாகுளம் ஒரு காலத்தில் கலிங்க வம்சத்தின் ஒருபகுதியாக இருந்தது; பின்னர் கஜபதி அரசர்கள், கீழைச்சாளுக்கியர்கள், காகதியர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டது. அரசவல்லியில் உள்ள ஸ்ரீ சூரியநாராயண சுவாமி திருக்கோவில் மற்றும் வம்சதாரா ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் திருக்கோவில் ஆகியவை அங்குள்ள முக்கிய தலங்களாகும்.
12. HOPEX என்பது என்பது கீழ்க்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
அ. இந்தியா மற்றும் ஜப்பான்
ஆ. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
இ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
ஈ. இந்தியா மற்றும் எகிப்து
- ‘HOPEX’ என்பது இந்திய வான்படை (IAF) மற்றும் எகிப்திய விமானப்படை இடையே இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சியாகும். எகிப்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், ரபேல் போர்விமானங்கள், C-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானங்கள், IL-78 பீரங்கிகள் போன்ற இந்திய இராணுவ திறன்கள் பங்கேற்றன.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 75,000 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: ICF புதிய சாதனை.
பெரம்பூர் ICF தொழிற்சாலை தொடங்கி 68 ஆண்டுகளில் 75,000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்து உள்ளது. சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) 1955ஆம் ஆண்டு முதல் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
2. ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதலமைச்சர் அறிவிப்பு.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சியில் நூலகம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
`1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்டம்
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் `1,185 கோடியில் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் தொடர்ச்சியாக பட்டப்படிப்பை முடித்த வேலைதேடும் இளையோர்க்கு அவர்களின் பட்டப்படிப்பு, தனித்திறன்கள் மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு, ‘திறன் தமிழ்நாடு – நிறைப்பள்ளிகள்’ என்ற மாபெரும் திட்டம் `100 கோடியில் தொடங்கப்படவுள்ளது. பயிற்சியின் முடிவில் பணியிடப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின்மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறந்த 1,000 மாணாக்கரை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன்பயிற்சி அளித்து, உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர, ‘சிகரம் தொடு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.