Tnpsc Current Affairs in Tamil – 27th March 2024
1. ஹைட்டியிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்காக அண்மையில் இந்தியாவால் தொடங்கப்பட்ட நடவடிக்கையின் பெயர் என்ன?
அ. ஆபரேஷன் மேகதூதம்
ஆ. ஆபரேஷன் சக்தி
இ. ஆபரேஷன் ராகத்
ஈ. ஆபரேஷன் இந்திராவதி
- இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹைட்டியில் சிக்கித்தவிக்கும் இந்திய மக்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் இந்திராவதி’ தொடங்கப்பட்டுள்ளதாக X தளத்தில் அறிவித்தார். இந்த ஆபரேஷன் மூலம் இந்திய மக்கள் 12 பேர் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹைட்டியில் சுமார் 75 – 90 இந்தியர்கள் வசிக்கின்றனர்; அதில் 60 பேர் நாடு திரும்புவதற்கு பதிவுசெய்துள்ளனர்.
2. ‘ஆர்டர் ஆஃப் தி டுருக் கியால்போ’ விருது என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மிகவுயரிய குடிமக்கள் விருதாகும்?
அ. பூடான்
ஆ. நேபாளம்
இ. மியான்மர்
ஈ. வங்காளதேசம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி, பூடானின் மிகவுயரிய விருதான, ‘ஆர்டர் ஆஃப் தி டுருக் கியால்போ’ விருதைப் பெற்ற முதல் பூடானியர் அல்லாதவர் என்ற வரலாற்றைப் படைத்தார். திம்புவிற்கு 2 நாள் அரசுமுறை பயணமாகச் சென்றபோது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சு இம்மதிப்புமிக்க விருதை இந்தியப்பிரதமருக்கு அளித்தார். இந்த வாழ்நாள் சாதனை விருது பூடானால் வழங்கப்படும் விருதுகளிலேயே மிகவுயரியதாகும். மோடி உட்பட நான்கு நபர்கள் மட்டுமே அவ்விருதை நிறுவியதில் இருந்து பெற்றுள்ளனர்.
3. IMT முத்தரப்புப் பயிற்சியானது பின்வரும் எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப்படுகிறது?
அ. இந்தியா, மலேசியா மற்றும் துருக்கி
ஆ. இந்தியா, மொசாம்பிக் மற்றும் தான்சானியா
இ. ஈரான், மியான்மர் மற்றும் தாய்லாந்து
ஈ. அயர்லாந்து, மால்டா மற்றும் துர்க்மெனிஸ்தான்
- INS திர், சுஜாதா ஆகியவை இந்தியா, மொசாம்பிக் தான்சானியா முத்தரப்பு கடற்பயிற்சியில் பங்கேற்கிறது. இப்பயிற்சி மார்ச்.21 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. அக்.22இல் நடத்தப்பட்ட முதலாவது முத்தரப்பு பயிற்சியின்போது இந்திய கடற்படைக் கப்பல் தர்காஷ் பங்கேற்றது. தற்போதைய பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மார்ச்.21 முதல் 24 வரை திட்டமிடப்பட்ட துறைமுக கட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படை கப்பல்களான திர், சுஜாதா ஆகியவை சான்சிபார் (தான்சானியா) மற்றும் மாபுடோ (மொசாம்பிக்) துறைமுகங்களில் அந்தந்த கடற்படைகளுடன் பயிற்சியில் ஈடுபடும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, பறிமுதல் நடைமுறைகள், படகு கையாளுதல், துப்பாக்கிச் சூடும் பயிற்சி ஆகியவை மார்ச்.24 முதல் 27 வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
4. அண்மையில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் கையா விண்வெளி தொலைநோக்கிமூலம் விண்வெளியில் காணப்படும் எந்த இரண்டு விண்மீன் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
அ. ஆதித்யா மற்றும் விக்ரம்
ஆ. அஜய் மற்றும் புஷ்ப்
இ. சிவம் மற்றும் சக்தி
ஈ. துருவ் மற்றும் கங்கா
- ஐரோப்பிய விண்வெளி முகமையின் கையா தொலைநோக்கி, சிவம் மற்றும் சக்தி ஆகிய பழங்கால விண்மீன் ஓட்டங்களைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண்மீன்களின் தோற்றம் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்கிறது. பன்னீராண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்தக்கட்டமைப்புகள், பால்வெளி உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சக்தி விண்மீன்கள் விண்மீன் மையத்திலிருந்து சிவத்தைப் போல் அல்லாமல் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த கையா (Gaia), பத்தாண்டிற்கும் மேலான தரவைப் பகுப்பாய்வுசெய்து, விண்மீன்களின் நிலைகள், தூரங்கள் மற்றும் வேகத்தை அளவிடுவதன்மூலம் பால்வீதியை வரைபடமாக்குகிறது.
5. ISRO ஆனது அண்மையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தரையிறங்கு வாகனத்திற்கான (RLV) LEX 02 என்ற தரையிறங்கு பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த RLVஇன் பெயர் என்ன?
அ. ரிஷபம்
ஆ. ஆகாஷ்
இ புஷ்பகம்
ஈ. கதாயுதம்
- ISROஇன், ‘புஷ்பகம்’ என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய தரையிறங்கு வாகனத்திற்கான (Reusable Landing Vehicle – RLV) LEX 02 என்ற தரையிறங்கு பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையானது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய, ‘Reusable Launch Vehicle – Technology Demonstration (RLV–TD)’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். தோற்றத்தில் விண்வெளி விமானத்தைப் போன்றிருக்கும் RLV, விண்வெளிக்குச் செல்வதற்கான செலவுகுறைந்த அணுகலை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6. ANAGRANINF திட்டத்துடன் தொடர்புடையது எது?
அ. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்குதல்
ஆ. புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்குதல்
இ. நக்சல் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்தி
ஈ. கிராமப்புறங்களில் நோய் பரவலை ஆய்வு செய்வது
- தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமானது ‘ANAGRANINF’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் இனக் கீற்று ஏற்காத பாக்டீரியாவால் (gram-negative bacteria) ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டு முயற்சியில் இந்திய மற்றும் ஸ்பானிய நிறுவனங்கள் முக்கியமான இனக்கீற்று ஏற்காத பாக்டீரியா நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய ஈயக்கலவையை உருவாக்கும் நோக்கத்துடன் இணைந்து ஈடுபட்டுள்ளன. நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன்மிக்க நோய்த்தொற்றுகளைச் சமாளிப்பதற்கான WHOஇன் அளவுகோல்களுடன் இத் திட்டம் இணைந்துபோகிறது.
7. அண்மையில், ‘நியோஸ்டாண்ட்’ என்ற பெயரில் மின்சாரத்தின்மூலம் தானாகவே எழுந்து நிற்க வைக்கக்கூடிய சக்கர நாற்காலியை உருவாக்கிய நிறுவனம் எது?
அ. ஐஐடி மெட்ராஸ்
ஆ. ஐஐடி கரக்பூர்
இ. ஐஐடி ரூர்க்கி
ஈ. ஐஐடி தில்லி
- இந்தியாவின் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியதாகக் கருதப்படும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் எழுந்து நிற்கவைக்கக்கூடிய சக்கர நாற்காலியான, ‘நியோஸ்டாண்ட்’ஐ IIT மெட்ராஸ் அறிமுகஞ்செய்துள்ளது. புனர்வாழ்வு ஆராய்ச்சிக்கான TTK மையத்தின்கீழ் அதன் வளர்ச்சிக்கு பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்தியாவின் முதல் கைமுறையாக எழுந்து நிற்கவைக்கக்கூடிய சக்கர நாற்காலியான, ‘அரைஸ்’ மற்றும் முதல் மோட்டார் பொருத்தப்பட்ட, ‘நியோபோல்ட்’ ஆகியவற்றின் திட்டங்களையும் அவர்தான் வழிநடத்தினார்.
8. அண்மையில், பின்வரும் எந்த நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-I மத்திய பொதுத்துறை நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டது?
அ. பாரத் பெட்ரோலியம்
ஆ. NTPC லிட்
இ. GRID-இந்தியா
ஈ. இந்தியன் ஆயில் நிறுவனம்
- இந்தியாவின் மின்துறையில் ஒரு முக்கியமான நிறுவனமாக விளங்கும் GRID-INDIA, 2024 மார்ச்சில் மின்துறை அமைச்சகத்தால் மினிரத்னா வகை-I CPSE அந்தஸ்தைப் பெற்றது. இந்திய மின்சார கட்டமைப்பின் சுமூகமான செயல்பாட்டை உறுதிசெய்தல், பிராந்தியங்களுக்குள்ளும் நாடுகடந்த அளவிலும் மின் பரிமாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் திறமையான மின் பரிமாற்றம் ஆகியவை இதன் பொறுப்புகளுள் அடங்கும்.
9. அண்மையில், எந்தெந்த பயிர்களை அதன் விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின்கீழ் சேர்க்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது?
அ. பருத்தி மற்றும் காபி
ஆ. கோதுமை மற்றும் அரிசி
இ. சணல் மற்றும் தேநீர்
ஈ. பருப்பு மற்றும் பார்லி
- அரசாங்கம் சமீபத்தில் கோதுமை மற்றும் அரிசியையும் விலை நிலைப்படுத்தும் நிதியத்தில் சேர்த்துள்ளது. 2014-15 இல் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறையின்கீழ் நிறுவப்பட்ட இது, 2016இல் DOCA-க்கு மாற்றப்பட்டது. PSFMCஆல் நிர்வகிக்கப்படுகிற இது, மாநில அரசுகள் & மத்திய நிறுவனங்களின் முன்மொழிவுகளை ஒழுங்குபடுத்துகிறது. SFAC அதை மத்திய நிதிய மூலதனமாக பராமரிக்கிறது. இந்நிதியமானது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் விலைகளை விநியோகம் செய்வது / கொள்முதல் செய்வதன்மூலம் அவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. சமீபத்தில், பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் (IPHE) 41ஆவது வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை
ஆ. புது தில்லி
இ. ஹைதராபாத்
ஈ. பெங்களூரு
- பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கலங்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் நாற்பத்து ஓராவது வழிகாட்டுதல் குழுக்கூட்டம் மார்ச்.18-22 வரை புது தில்லியில் நடைபெற்றது. 2003இல் நிறுவப்பட்ட IPHE, 23 உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தை உள்ளடக்கியதாகும். உலகளவில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கல தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இதன் வழிநடத்தல் குழுக்கூட்டங்கள், உறுப்புநாடுகள், பங்குதாரர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான தளமாகச் செயல்படுகின்றன.
11. 2024 – WTT ஃபீடர் பெய்ரூட் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான பட்டத்தை வென்றவர் யார்?
அ. மௌமா தாஸ்
ஆ. G சத்தியன்
இ. சரத் கமல்
ஈ. மானவ் தக்கர்
- 2024 – WTT ஃபீடர் பெய்ரூட் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் G சத்தியன், சகநாட்டவரான மானவ் விகாஷ் தக்கரை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் தியா சிதலே மற்றும் மனுஷ் ஷா ஜோடி சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்து, இந்தியாவின் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. G சத்தியனின் இந்த வெற்றி, WTT ஃபீடர் தொடரில் இந்தியாவின் முதல் ஒற்றையர் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
12. அண்மையில், பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்த அமைச்சகம் எது?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
ஆ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இ. தகவல் தொடர்பு அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- வெளிநாட்டு இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின் விளம்பரங்களைத் தவிர்க்குமாறு சமூக ஊடக நிர்வாகத்தினரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விளம்பரங்கள் நுகர்வோர்மீது, குறிப்பாக இளைஞர்கள்மீது இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் கூறியுள்ளது. இதுபோன்ற விளம்பரத்தின் மூலம் இந்திய பார்வையாளர்களை இலக்காகக் கொள்ளவேண்டாம் என்று ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்களுக்கு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
- இதை மீறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் விதிகளின்கீழ் சமூக ஊடக இடுகைகள் / கணக்குகளை அகற்றுவது அல்லது முடக்குவது மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்கீழ் தண்டனை நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அவ்வமைச்சகம் எச்சரித்துள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. அடல் ஓய்வூதியத் திட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயது பூர்த்தியடைந்தபிறகு ஓய்வூதியம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 18-40 வயது வரையிலான இந்தியக் குடிகள் இத்திட்டத்தில் இணைந்து மாதத்தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம். அதன்பின் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகைக்கேற்ப குறைந்த பட்சமாக `1,000, `2,000, `3,000, `4,000, `5,000 வரை மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
2. விண்வெளி கழிவுகளின்றி செயல்படுத்தப்பட்ட PSLV ஆய்வுத்திட்டம்: ISRO தகவல்.
‘எக்ஸ்போசாட்’ திட்டத்தின்கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட்ட PSLV இராக்கெட்டின் இறுதிநிலை ஆய்வுக்கருவிகள் அனைத்தும் அவற்றின் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தததை அடுத்து பூமிக்கு மீண்டும் திருப்பிக்கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத்திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருந்துளை, ஊடுகதிர் (X-கதிர்) தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக, ‘எக்ஸ்போசாட்’ என்னும் செயற்கைக்கோளை PSLV C-58 இராக்கெட்மூலம் கடந்த ஜனவரி.01ஆம் தேதி விண்ணில் செலுத்தியது ISRO.