TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th June 2024

1. ‘புஷ்பக்’ என்னும் மறுபயன்பாட்டு ஏவுகலத்தின் (RLV LEX-03) தரையிறங்கு சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட விண்வெளி நிறுவனம் ஏது?

அ. ISRO

ஆ. NASA

இ. JAXA

ஈ. CNSA

  • ISRO தனது ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு ஏவுகலத்தை (RLV LEX-03) மூன்றாவது முறையாக சவாலான சூழ் நிலையில் சோதனை செய்து வெற்றியடைந்தது. இந்த ஏவுகலம் முந்தைய ஏவுகலத்திலிருந்த பாகங்களை மீண்டும் பயன்படுத்தியதோடு துல்லியமான தரையிறங்கலுக்காக மேம்பட்ட உணரிகளைப் பயன்படுத்தியது. செலவைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ள இது, விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு ஒரு விமானத்தைப்போல மீண்டும் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ‘17 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2024’இல், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?

அ. 11

ஆ. 12

இ. 13

ஈ. 14

  • ஜூன்.22-24 வரை ஜோர்டானின் அம்மானில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2024இல் இந்திய மல்யுத்த வீரர்கள் 11 பதக்கங்களை (4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றனர். அவர்கள் ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் ​​மற்றும் ஆடவர் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஒரு வடிவத்திற்கு 10 எடை பிரிவுகளில் போட்டியிட்டனர். தற்போது நடைபெற்று வரும் U-23 சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடைபெற்றது. 2023 – சாம்பியன்ஷிப் போட்டிகள் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்தது.

3. அண்மையில், 64ஆவது பன்னாட்டு சர்க்கரை அமைப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. பெய்ஜிங், சீனா

ஆ. பாரிஸ், பிரான்ஸ்

இ. புது தில்லி, இந்தியா

ஈ. லண்டன், இங்கிலாந்து

  • 64ஆவது பன்னாட்டு சர்க்கரை அமைப்பு கவுன்சில் கூட்டம் 2024 ஜூன்.25 அன்று புது தில்லியில் தொடங்கியது. இக்கூட்டத்தை கவுன்சிலின் தற்போதைய தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா நடத்தியது. 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜூன்.27 வரை சர்க்கரைத் தொழிற்துறை மற்றும் உயிரி எரிபொருள் விவகாரங்களைப்பற்றி விவாதிப்பார்கள். கடந்தாண்டு லண்டனில் நடந்த கூட்டத்தில் தலைமைப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரும் உலகளவில் மிகப்பெரிய நுகர்வோராகவும் உள்ளது. உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் 20%உம் நுகர்வில் 15%உம் இந்தியா பங்களிக்கிறது.

4. அண்மையில், தேசிய STOP வயிற்றுப்போக்கு பிரச்சாரம் – 2024ஐ தொடங்கிய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் J P நட்டா, புது தில்லியில் தொடக்கிவைத்தார். வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதை முற்றிலும் தடுப்பதே இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதன்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ORS கரைசல் வழங்கப்படவுள்ளது. ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற திட்டங்கள், வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க பெருமளவு உதவியிருப்பதாக அப்போது தெரிவித்தார்.

5. அண்மையில், எந்த மாநில அரசு தேசிய கல்விக்கொள்கையின்கீழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரதம மந்திரி சிறப்புக் கல்லூரியை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேசத்தில், பிரதம மந்திரி சிறப்புக் கல்லூரி திட்டம் ஜூலை.01ஆம் தேதி அனைத்து 55 மாவட்டங்களிலும் தொடங்கப்படும். அம்மாநில முதலமைச்சர் Dr மோகன் யாதவ், புதிய டிரோன் கொள்கையை அறிவித்து, விமானப் போக்குவரத்து, விவசாயம் மற்றும் AI வேலைவாய்ப்புகளுக்கான கற்பித்தலை மேம்படுத்துவதை வலியுறுத்தினார். ஒவ்வொரு கல்லூரியும் பாரம்பரிய இந்திய அறிவு மையத்தை நிறுவும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்க, அனைத்து அரசு, அரசு சாரா மற்றும் உதவி பெறும் கல்லூரிகளிலும் கல்வித்தோட்டங்கள் உருவாக்கப்படும்.

6. இந்தியாவின் எந்தப்பகுதியில், கலுபர் போர் நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ளது?

அ. பெங்களூரு

ஆ. லடாக்

இ. சண்டிகர்

ஈ. புது தில்லி

  • ஜூலை.26 அன்று கார்கில் வெற்றி நாளின் 25ஆவது ஆண்டு விழாவையொட்டி, லடாக்கில், இந்திய இராணுவம், கார்கில் போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சுற்றுலாப்பயணிகளுக்காக கலுபர் போர் நினைவகத்தை திறந்து வைத்தது. லடாக் ஆரிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம் கேப்டன் மனோஜ் பாண்டே போன்றோரின் துணிச்சலைப் போற்றுகிறது. உள்ளூர் மக்களும் இப்போரில் முக்கிய பங்கு வகித்தனர். கார்கிலுக்கு முந்தைய வெற்றி நாள் கொண்டாட்டங்களில் பிரிக் OP யாதவ் (ஓய்வு) தலைமையிலான, “போர்க்களத்திற்கான மலையேற்றம்” அடங்கும்.

7. “ஒரு வாரம் ஒரு கருப்பொருள்” என்ற பிரச்சாரத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. நிதி

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இ. வேளாண்மை

ஈ. சுகாதார பராமரிப்பு

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR), இந்தியாவில் உள்ள அதன் 37 ஆய்வகங்களில் 2024 ஜூன்.24 முதல் “ஒரு வாரம் ஒரு கருப்பொருள்” பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் Dr ஜிதேந்திர சிங், இந்தப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தார்.
  • CSIR ஆய்வக முன்னெடுப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இம்முயற்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, MSME-கள், புத்தொழில்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை மேம்படுத்துவதன்மூலம் புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் குடிமக்களுக்கு நன்மையளிக்கிறது.

8. ‘ஈட்டி – Javelin’ என்பது என்ன வகையான ஏவுகணை அமைப்பாகும்?

அ. ஆள்-எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை

ஆ. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

இ. சீர்வேக ஏவுகணை

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • இந்தியாவும் அமெரிக்காவும் தனது ராணுவ தேவைகளுக்காக இந்தியாவில் அமெரிக்க ஜாவ்லின் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. ஜாவ்லின் என்பது ரேதியோன் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆள்-எடுத்துச்செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். கவச வாகனங்கள் மற்றும் பதுங்குக்குழிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற பிற இலக்குகளை வீழ்த்த வடிவமைக்கப்பட்டுள்ள இது, 2500 மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதை தோள்பட்டை அல்லது வாகனத்தில் வைத்து இயக்கலாம்.

9. அண்மையில் எந்த மாநிலத்தில், ‘Didymocarpus janakiae’ என்ற ஒரு புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டது?

அ. சிக்கிம்

ஆ. அஸ்ஸாம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. கேரளா

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் 2,300 மீ உயரத்தில், ‘Didymocarpus janakiae’ என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூத்த இந்திய தாவரவியலாளரான E K ஜானகியம்மாளின் நினைவாக பெயரிடப்பட்ட இந்த இனம், Didymocarpus இனத்தைச் சேர்ந்தது; இது ஆப்பிரிக்க வயலட் குடும்பத்தின் (Gesneriaceae) ஒருபகுதியாகும். அழகிய வாழ்விடங்களில் காணப்படும் இது, சுற்றுச்சூழல் அமைப்பின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த இனத்தில் 111 இனங்கள் உள்ளன, அவற்றில் 27 இந்தியாவில் காணப்படுகிறது.

10. பண்டைய நகரமான தாம்லுக் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. மேற்கு வங்காளம்

இ. பீகார்

ஈ. ஒடிசா

  • மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள தாம்லுக், ‘தாமிரலிப்தா’ அல்லது ‘தாமிரலிப்தி’ என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டையகால நகரமாகும். இது ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சுஹ்மா இராச்சியத்தின் தலைநகரமாகவும் பின்னர் பால பேரரசாகவும் செயல்பட்டது. சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் பண்டைய நகரமான சந்திரகேதுகரின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்றைய, தாம்லுக் அதன் வெற்றிலை உற்பத்தி & ஏற்றுமதிக்கு புகழ்பெற்றதாக விளங்குகிறது.

11. அண்மையில், “பூரி பதாய் தேஷ் கி பலாய்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கிய அரசு-சாரா அமைப்பு எது?

அ. ஸ்மைல் அறக்கட்டளை

ஆ. சைல்ட் ரைட்ஸ் & யூ (CRY)

இ. கூஞ்ச்

ஈ. ஹெல்ப் ஏஜ் இந்தியா

  • நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை அதிகரிக்க, “பூரி பதாய் தேஷ் கி பலாய்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை சைல்ட் ரைட்ஸ் & யூ (CRY) தொடக்கியுள்ளது. இந்தியாவில், பெண்களின் கல்வியறிவு விகிதம் ஆண்களைவிட பின்தங்கியுள்ளது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் முன்னரே பள்ளியிலிருந்து நின்றுவிடும் வழக்கம் கணிசமாக உள்ளது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறப் பெண்களின் கல்வி அறிவு 26% உயர்ந்துள்ளது. ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மேல்நிலைகளில் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களைவிட அதிகமாகவே உள்ளது. இந்த முன்முயற்சியானது கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் கல்விமூலம் பெண்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. அண்மையில், மாநில அமைச்சர்கள் தங்கள் சொந்த வருமான வரியைச் செலுத்துவதற்கு பொறுப்பாவார்கள் என அறிவித்த மாநில அரசு எது?

அ. பீகார்

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. மத்திய பிரதேசம்

  • ஜூன்.25 அன்று, மத்திய பிரதேச அமைச்சரவை மாநில அமைச்சர்கள் தங்கள் சொந்த வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்று முடிவுசெய்து, இந்த வரிகளை உள்ளடக்கிய 1972 விதியை மாற்றியது. முதலமைச்சர் மோகன் யாதவ், அமைச்சர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளுக்குச் செலுத்தப்படும் வருமான வரிக்கான மாநிலத்தின் நிதிப் பொறுப்பு முடிவுக்கு வருவதை வலியுறுத்தி, இம்முடிவை அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கடலுார் குடிகாடில் 61 ஏக்கர் அலையாத்தி காடுகள்: புதிதாக உருவாக்குகிறது வனத்துறை.

கடலுார் மாவட்டத்தின் குடிகாடு பகுதியில், தமிழ்நாடு பசுமை இயக்கப் பணிகள் வாயிலாக, 61 ஏக்கர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள் உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. கடற் கரை ஓரங்களில், மணலும் நீரும்கலந்த சேறுபோன்ற பகுதியில், குறிப்பிட்ட சில வகை மரங்கள் நன்கு வளரும். இந்த மரங்கள் மணலில் வேர்பரப்பி, இறுகப்பிடிக்கும் தன்மைகொண்டவை. இதனால், இவ்வகை அலையாத்தி மரங்கள் இருக்கும் பகுதிகளில், கடலரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்; சுனாமிபோன்ற பேரிடர்கள் ஏற்படும் போதும் பாதிப்பு தடுக்கப்படும். இங்கு, சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், நரிக்கண்டல், சிறுகண்டல், தில்லை, ஆட்டுமுள்ளி, உமிரி போன்ற வகை மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2. இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானார் ஓம் பிர்லா.

நாடாளுமன்ற 18ஆவது மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்புமூலம் தேர்வுசெய்யப்பட்டார். இதன்மூலம் மக்களவைத் தலைவராக தொடர்ந்து 2ஆவது முறையாக தேர்வான ஐந்தாவது நபர் என்ற பெருமை ஓம் பிர்லாவுக்கு கிடைத்தது. இதுவரை M A ஐயங்கார், G S தில்லான், பல்ராம் ஜாக்கர், G M C பாலயோகி ஆகியோர் தொடர்ந்து இருமுறை மக்களவைத் தலைவராக பணியாற்றியுள்ளனர். இவர்களில் காங்கிரஸைச் சேர்ந்த பல்ராம் ஜாக்கர் மட்டுமே இரு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்தவர்.

18ஆவது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன்.24ஆம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!