Tnpsc Current Affairs in Tamil – 27th December 2023
1. தலே மற்றும் நசீர் சீர்வேக ஏவுகணைகள் சார்ந்த நாடு எது?
அ. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆ. துருக்கி
இ. ஈரான்
ஈ. ஈராக்
- ஈரானிய கடற்படை அண்மையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு அதிநவீன சீர்வேக ஏவுகணைகளைத் தனது ஆயுதக் களஞ்சியத்தில் சேர்த்தது. ஈரான் தனது பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதன் ஒருபகுதியாக, அதன் கடற்படைப் படைகளில் முறையே 1000 கிமீ மற்றும் 100 கிமீ தூரம் வரை செல்லும் அதிநவீன தலே மற்றும் நசீர் ஏவுகணைகளைச் சேர்ப்பதாக அறிவித்தது.
2. அண்மையில், Smart Lander for Investigating the Moon (SLIM) ஆய்வுக்கலத்தை விண்ணில் ஏவிய நாடு எது?
அ. அமெரிக்கா
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. ஜப்பான்
- SLIM (Smart Lander for Investigating the Moon) என்பது ஒரு சிறிய ஜப்பானிய ஆய்வுக்கலமாகும். இது நிலவின் மேற் பரப்பில் துல்லியமாக தரையிறங்குவதற்கான சோதனை முயற்சியாக ஜப்பான் விண்வெளி ஆய்வுநிறுவனத்தால் (JAXA) விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆய்வுக்கலங்களை மெதுவாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பானை உருவாக்கும் முயற்சி இதுவாகும்.
3. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் புலிகள் இறப்பில் முன்னிலை வகித்த மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. மத்திய பிரதேசம்
இ. மகாராஷ்டிரா
ஈ. பீகார்
- இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியா, 2023 ஜனவரி.01 முதல் டிசம்பர்.25 வரை 204 புலிகளை இழந்துள்ளது. இது ஒரு தசாப்தத்தில் காணப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தியாவுக்குள், இந்த ஆண்டு 52 புலிகள் இறப்புடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 45 இறப்புகளுடன் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2018ஆம் ஆண்டில் 2,967ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 3,167ஆக அதிகரித்தது.
4. சமீபத்தில் தொடங்கப்பட்ட, ‘My iGOT’ & ‘VIKAS’ ஆகியவை அரசாங்கத்தின் கீழ்காணும் எந்த முன்னெடுப்புடன் தொடர்புடையவை?
அ. டிஜிட்டல் இந்தியா
ஆ. திறன் இந்தியா திட்டம்
இ கர்மயோகி திட்டம்
ஈ. ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)
- மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், புது தில்லியில் வைத்து கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பைத் தொடக்கிவைத்தார். My iGOT, கலப்பு நிரல்கள், VIKAS ஆகியவை கர்மயோகி தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய அம்சங்கள் ஆகும். கலப்புத் திட்டங்கள் இணையமற்ற முறை மற்றும் இணையவழி முறை கற்றல்கூறுகளை ஒருங்கிணைக்கிறது. VIKAS என்பது இடைநிலை அரசூழியர்களிடையே செயல்பாட்டு, நடத்தை மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான ஒரு கலவையான பாடமுறையாகும். இந்நீட்டிப்பு அரசு ஊழியர்களை மிகவும் புதுமையானவர்களாகவும், முற்போக்கானவர்களாகவும், தொழில்நுட்பம் சார்ந்தவர்களாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
5. அண்மையில், NALSAஇன் புதிய நிர்வாகத் தலைவராக குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர் யார்?
அ. நீதியரசர் சஞ்சீவ் கண்ணா
ஆ. நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல்
இ. நீதியரசர் D Y சந்திரசூட்
ஈ. நீதியரசர் உதய் உமேஷ் லலித்
- தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) புதிய நிர்வாகத் தலைவராக உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ் கண்ணாவை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். மரபின்படி, இந்திய உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக இந்தப் பதவியை வகிக்கிறார். இவருக்கு முன் ஓய்வுற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் இந்தப் பதவியில் இருந்தார்; அவர் டிசம்பர்.25 அன்று ஓய்வுபெற்றார்.
6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, BRI 1335-0417 என்றால் என்ன?
அ. காந்த விண்மீன்
ஆ. விண்மீன் பேரடை
இ. கருந்துளை
ஈ. புறக்கோள்
- BRI 1335-0417 என்பது பூமியிலிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு விண்மீன் பேரடையாகும். இந்த விண்மீன் பேரடை தனது தொடக்கநிலை உருவாக்கச் செயல்பாடுகளில் தற்போது உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் விண்மீன்கள், வாயு மற்றும் தூசி ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் சுழலும் வட்டை ஒரு குளத்தில் கல்லை வீசும்போது உருவாகும் சிற்றலைகளுடன் ஒப்பிடுகிறார்கள். இதுபற்றிய ஆய்வு, தொடக்ககால அண்ட உருவாக்கத்தை இயக்கும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. சமீபத்தில் கௌகாத்தியில் நடைபெற்ற 2023 – தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
அ. ஜூவாலா குட்டா
ஆ. அஸ்வினி பொன்னப்பா
இ. அன்மோல் கர்ப்
ஈ. உன்னடி ஹுத்தா
- கௌகாத்தியில் நடைபெற்ற 2023 – யோனெக்ஸ்-சன்ரைஸ் 85ஆவது சீனியர் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான ஒற்றையர் பட்டத்தை அன்மோல் கர்ப் வென்றுள்ளார்.
8. அண்மையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) R21/Matrix-M என்ற தடுப்பூசியை கீழ்காணும் எந்த நோயைத் தடுப்பதற்காக முன்-தகுதியுடையதாக்கியுள்ளது?
அ. மலேரியா
ஆ. தட்டம்மை
இ. மூளைக்காய்ச்சல்
ஈ. குரங்கம்மைநோய்
- உலக சுகாதார நிறுவனம் R21/Matrix-M என்ற மலேரியா தடுப்பூசியை முன்தகுதியுடையதாக்கி, பரந்த உலகளாவிய அணுகலுக்கு உட்படுத்தியது. 2023 அக்டோபரில், நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியைப் பயன்படுத்த WHO பரிந்துரைத்தது. இம்முன்தகுதியானது UNICEFஆல் கொள்முதல் செய்வதற்கும் தடுப்பூசி கூட்டணியான காவியிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கும் உதவுகிறது. 2022 ஜூலையில் RTS, S/AS01 என்ற தடுப்பூசி முன்தகுதி நிலையைப் பெற்றபிறகு, WHOஇடமிருந்து முன்தகுதிபெற்ற இரண்டாவது மலேரியா தடுப்பூசி இதுவாகும். இப்புதிய தடுப்பூசி சிறார்களிடையே மலேரியாவைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
9. டிச.25 அன்று பிறந்தநாள் கண்ட, ‘பண்டித’ மதன்மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட செய்தித்தாள் எது?
அ. ஆனந்தபஜார் பத்திரிகை
ஆ. டைனிக் ஹிந்துஸ்தான்
இ. தி லீடர்
ஈ. டெய்லி ஹெரால்ட்
- மதன் மோகன் மாளவியா (1861-1946) ஓர் இந்திய அறிஞர், கல்வி சீர்திருத்தவாதி மற்றும் அரசியல்வாதி, சுதந்திர இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர். அவர் இந்திய தேசிய காங்கிரஸில் நான்கு முறை தலைவராக இருந்தார். அகில பாரத ஹிந்து மகாசபையை அவர் நிறுவினார். ‘பண்டிதர்’ மற்றும் ‘மஹாமனா’ என்று அழைக்கப்படும் மதன்மோகன் மாளவியா, ஆசியாவின் மிகப்பெரிய உண்டு உறைவிட பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை கடந்த 1916ஆம் ஆண்டில் இணைந்து நிறுவினார். அவர் 1919 முதல் 1938 வரை அதன் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் நிறுவனரான அவர் 1919இல் தி லீடர் செய்தித்தாளையும் நிறுவினார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் (1924-1946) தலைவராகவும் அவர் இருந்தார். அவர் 1936இல் இந்துஸ்தான் டைனிக்கைத் தொடங்கினார். மாளவியாவுக்கு 2014இல் அவரது மறைவுக்குப்பின், ‘பாரத இரத்னா’ வழங்கப்பட்டது.
10. COVID-19 தொற்றுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட mRNA தடுப்பூசியின் பெயரென்ன?
அ. VIRASHIELD
ஆ. OMIVAC
இ. GEMCOVAC
ஈ. COVIGUARD
- இந்திய உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ், நாட்டின் முதல் ஓமிக்ரான் திரிபை அழிக்கும் திறனுடைய mRNA COVID-19 தடுப்பூசியை, ‘GEMCOVAC’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. XBB மற்றும் JN.1 போன்ற புதிய திரிபுகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ஓமிக்ரான் திரிபை இலக்காகக் கொண்ட தனது முதல் உள்நாட்டு mRNA தடுப்பூசியான ‘GEMCOVAC’க்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
11. இந்தியாவும் ரஷ்யாவும் அதன் எதிர்கால மின் உற்பத்தி அலகுகளை, எந்த அணுமின் உற்பத்தி நிலையத்தில் நிர்மாணிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன?
அ. கைகா அணுமின் நிலையம்
ஆ. கூடங்குளம் அணுமின் நிலையம்
இ. கல்பாக்கம் அணுமின் நிலையம்
ஈ. நரோரா அணுமின் நிலையம்
- தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் மின் உற்பத்தில் அலகுகள் நிர்மாணிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரின் மாஸ்கோ பயணத்தின்போது இப்புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த அணுசக்தி திட்டம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தேவனஹள்ளி பாரம்பரிய இரயில்நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. கோவா
ஆ. கர்நாடகா
இ. மகாராஷ்டிரா
ஈ. ஆந்திர பிரதேசம்
- கர்நாடகாவின் நூற்றாண்டுகால பழைமைவாய்ந்த பெங்களூரு-சிக்கபள்ளாப்பூர்-கோலார் இலகு இரக தொடருந்து பிரிவில் உள்ள தொட்டஜாலா, தேவனஹள்ளி, அவதிஹள்ளி மற்றும் நந்தி ஹால்ட் போன்ற நிலையங்கள் மறு சீரமைப்புசெய்து புணரமைப்பதற்காக பாரம்பரிய தளங்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 1900களின் முற்பகுதியில் செயல்பாட்டுக்கு வந்த இந்த நிலையங்கள் கட்டடக்கலை வரலாற்றைக் காட்சிப்படுத்துகின்றன. இதன் மறுசீரமைப்பு, சுற்றுலாவில் இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை முன்னிலைப்படுத்தும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சிறந்த பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு சமூகநலத்துறை சார்பில் விருது, `1 இலட்சம் பரிசு மற்றும் பாராட்டுப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
2. கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷியாவுக்கான ஐந்துநாள் அரசுமுறை பயணத்தின்போது அணுமின் நிலையம், மருந்துகள், மருந்தியல் பொருள்கள், மருத்துவக் கருவிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இருநாடுகளுகளுக்கு இடையே கையொப்பமாகின. அப்போது, கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிர்கால அணுஉலைகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் கடந்த 2002ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1,000 MW திறன்கொண்ட முதலாவது அணுஉலை 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையம் 2027ஆம் ஆண்டில் முழு அளவிலான மின்னுற்பத்தி திறனுடன் செயல்படத் தொடங்கும் என ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
3. எண்ம அடிப்படையில் பயிர் அளவீட்டுப் பணி: நாளை முதல் தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
பயிர்களை எண்ம அடிப்படையில் அளவிட்டு கணக்கீடு செய்யும் பணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அக்ரிஸ்டாக்’ என்ற பெயரிலான இந்தப் பணியின் மூலமாக வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் பயன்பெற முடியும். பயிர் அளவீடுகள் குறித்த தரவுகள் கையில் இருக்கும் பட்சத்தில், அது விவசாயிகள் எளிதில் கடன் பெறவும், தரமான இடுபொருள்களை பெறவும் வழி ஏற்படும். இதனால், விவசாயிகள் விளைவிக்கும் பொருள்கள் வேகமாக சந்தைகளை அடைவதற்கு வகைசெய்யப்படும்.
4. 19-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடந்த 2004 டிசம்பர்.26ஆம் தேதியன்று ஆழிப்பேரலை (எ) சுனாமி தாக்கியது. இதன் 19-ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் 2023 டிச.26 அன்று அனுசரிக்கப்பட்டது.