TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 26th December 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நம்தபா பறக்கும் அணில் சார்ந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. அந்தமான் & நிக்கோபார்

  • 42 ஆண்டுகளுக்குப்பிறகு, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நம்தபா பறக்கும் அணில் (Biswamoyopterus biswasi) மீண்டும் தென்பட்டுள்ளது. இது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது. கடைசியாக 1981இல் காணப்பட்ட இந்த இனம், முற்றிலும் அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இது IUCNஆல் மிகவும் அருகிவிட்ட இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-IIஇன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

2. ‘தினை அரசி’ என்று அழைக்கப்படும், ‘ராய்மதி கியூரியா’ சார்ந்த மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. ஜார்கண்ட்

  • ஒடிஸா மாநிலத்தின் கோராபுத் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி விவசாயியான ராய்மதி கியூரியா, 30 வகையான தினைகளைப் பாதுகாத்து, நூற்றுக்கணக்கான பெண்களுக்கு அரிய தினைகளை பயிரிட பயிற்சியளித்துள்ளார். ‘சர்வதேச தினை ஆண்டு’ நினைவாக நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு அவருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. ஜி20 உச்சி மாநாட்டில் அவர், ‘தினை அரசி’ என்று அழைக்கப்பட்டார்.

3. யாருக்கு 6ஆவது இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

அ. சித்தார்த்தா தல்யா

ஆ. டுவிங்கிள் கன்னா

இ. சுக்ரிதா பால்

ஈ. அசோக் நந்தா

  • 6ஆவது இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப்பரிசு, கவிஞரும் விமர்சகருமான சுக்ரிதா பால் குமாருக்கு, அவரது “Salt & Pepper: Selected Poems” என்ற நூலுக்காக வழங்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நூல் வெளியீட்டாளர் பீட்டர் பண்டாலோவால் நிறுவப்பட்ட இந்த விருது உலக அமைதி, இலக்கியம், கலை, கல்வி மற்றும் மனித உரிமைகள் சார்ந்த படைப்பாளிகளுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. இரவீந்திரநாத் தாகூர் சமூக சாதனைக்கான இலக்கியப்பரிசானது நோபல்பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

4. 6ஆவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் நடைபெறும் நான்கு நகரங்கள் எவை?

அ. சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி

ஆ. சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சாவூர்

இ சேலம், சென்னை, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி

ஈ. தேனி, அரியலூர், நாமக்கல், பெரம்பலூர்

  • 6ஆவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2024 ஜனவரி.19 முதல் ஜனவரி.31 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் முந்தைய 5 பதிப்புகள் தில்லி, புனே, கௌகாத்தி, பஞ்சகுலா மற்றும் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றன. நடைபெறவிருக்கும் 6ஆவது பதிப்பு தமிழ்நாட்டின் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறும்.

5. பின்வரும் எண்களில் எது ‘ஹார்டி-இராமானுஜன் எண்’ அல்லது ‘மிகவும் பிரபலமான டாக்ஸிகேப் எண்’ என்று அழைக்கப்படுகிறது?

அ. 1729

ஆ. 5436

இ. 38787

ஈ. 19083

  • புகழ்பெற்ற இந்தியக்கணிதவியலாளரான ஸ்ரீனிவாச இராமானுஜனின் பிறந்தநாளன்று ஒவ்வோர் ஆண்டும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கணிதத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கிறது. உலக கணித நாள் மார்ச்.14 அன்று கொண்டாடப்படுகிறது; இந்த நாள், ‘பை (3.14) நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘1729’ என்ற எண் ‘ஹார்டி-இராமானுஜன் எண்’ என்று அறியப்படுகிறது. ஹார்டி, ஸ்ரீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, இராமானுஜன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.

6. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) உறுப்பினராக இல்லாத நாடு எது?

அ. காங்கோ

ஆ. காபோன்

இ. நைஜீரியா

ஈ. கத்தார்

  • 2023 டிச.21 அன்று, அங்கோலா தனது 16 ஆண்டுகால உறுப்புத்துவத்துக்குப்பிறகு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பிலிருந்து (OPEC) விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்நடவடிக்கை OPEC உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12ஆகக் குறைக்கும். கடந்த 1960இல் நிறுவப்பட்ட OPEC ஆனது ஈரான், ஈராக், குவைத், சௌதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய ஐந்து நிறுவன உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. தற்போது, அல்ஜீரியா, அங்கோலா, காங்கோ, எக்குவடோரியல் கினியா, காபோன், லிபியா, நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 13 உறுப்பினர்களை இது கொண்டுள்ளது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. கத்தார், கடந்த 2019இல் அதன் உறுப்புத்துவத்தை விலக்கிக்கொண்டது.

7. கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பிற்கான UNESCOஇன் ஆசிய-பசிபிக் விருதைப் பெற்றுள்ள எபிபானி தேவாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. ஹரியானா

இ. கோவா

ஈ. கேரளா

  • பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சார்ந்த மூன்று பாரம்பரிய திட்டங்கள்: அமிர்தசரஸில் உள்ள இராம்பாக் வாயில் & ராம்பார்ட்ஸ், குர்தாஸ்பூரில் உள்ள பிபால் ஹவேலி மற்றும் குருகிராமில் உள்ள எபிபானி தேவாலயம் ஆகியவை கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான UNESCO ஆசிய-பசிபிக் விருதுகளைப் பெற்றுள்ளன. கூடுதலாக, சீனாவின் ஹாங்காங்கில் உள்ள ஃபேன்லிங் கோல்ஃப் தளம்; யாங்சூவில் உள்ள டோங்குவான் கார்டன் குடியிருப்புகள்; மற்றும் இந்தியாவின் கேரளாவில் உள்ள குன்னமங்கலம் பகவதி கோயிலில் உள்ள கர்ணிகார மண்டபம் உட்பட மூன்று திட்டங்கள் சிறப்பு விருதைப் பெற்றன.

8. இந்திய திறனறிக்கை – 2024இன்படி, பணிசெய்வதற்கு மிகவும் விருப்பமான மாநிலமாக உள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. தெலுங்கானா

இ. கேரளா

ஈ. குஜராத்

  • வீபாக்ஸ் ஆனது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய திறன் அறிக்கையை வெளியிட்டது. இந்திய திறன்கள் அறிக்கை-2024இல் கூறியுள்ளபடி, இந்தியாவில் வேலைவாய்ப்பு முன்னேற்றம் கண்டுள்ளது, கருத்துக் கணிப்பு கேட்கப்பட்ட இளையோருள் 51.25 சதவீதம் பேர் தேவையான திறன்களைக் கொண்டுள்ளனர். பணிசெய்வதற்கு மிகவிருப்பமான மாநிலங்களில் கேரளா முதன்மையான தேர்வாக உள்ளது; ஒட்டுமொத்தமாக அது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

9. 2023 – தேசிய விவசாயிகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Delivering Smart Solutions for Sustainable Food Security and Resilience

ஆ. Without Farmers, No Country can Progress

இ. Accelerating Agricultural Development through Value Chain Addition

ஈ. None of them

  • தேசிய விவசாயிகள் நாளானது டிசம்பர்.23 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நாட்டின் சமூக-பொருளாதார கட்டமைப்பில் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. இது முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறது. “Delivering Smart Solutions for Sustainable Food Security & Resilience” என்பது நடப்பு 2023ஆம் ஆண்டில் வரும் தேசிய விவசாயிகள் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கரும்புலிகள் அல்லது மெலனிஸ்டிக் புலிகள், இந்தியாவில், கீழ்காணும் எந்தப் புலிகள் காப்பகத்தில் பிரத்தியேகமாக காணப்படுகின்றன?

அ. மனாஸ் புலிகள் காப்பகம்

ஆ. இராந்தம்பூர் புலிகள் காப்பகம்

இ. சிமிலிபால் புலிகள் காப்பகம்

ஈ. சுந்தரவனம் புலிகள் காப்பகம்

  • 2022ஆம் ஆண்டு அரசாங்கத் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது பத்து அரிய கரும்புலிகள் உள்ளன; அவை மெலனிஸ்டிக் புலிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒடிஸா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. மரபணு ரீதியாக வேறுபட்ட, இந்தத் தனித்துவமான புலிகள் குழு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்படி குறிப்பிட்ட பாதுகாப்பு கவனம் தேவைப்படும் இனமாக உள்ளன. இப்புலிகளின் கரு நிறம், தனித்துவம் மிக்க மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வலம்வரும் வங்காளப் புலிகளிலிருந்து வேறுபடுகிறது.

11. 2024ஆம் ஆண்டு இந்தியக்குடியரசு நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேறக்கவுள்ளவர் யார்?

அ. அப்தெல் ஃபத்தா எல்-சிசி

ஆ. ரிஷி சுனக்

இ. இம்மானுவேல் மக்ரோன்

ஈ. ஜோ பைடன்

  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஜன.26ஆம் தேதி குடியரசு நாள் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளும் 6ஆவது பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை.14 அன்று பாரிஸில் நடைபெற்ற பாஸ்டில் நாள் அல்லது பிரெஞ்சு தேசிய நாள் அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

12. அண்மையில், ‘பிரயாஸ் – PRAYAS’ திட்டத்தை அறிமுகப்படுத்திய பன்னாட்டு அமைப்பு எது?

அ. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம்

ஆ. பன்னாட்டு மீட்புக் குழு

இ. புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு

ஈ. பன்னாட்டு செலாவணி நிதியம்

  • புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பும் (IMO) இந்தியாவின் வெளியுறவு அமைச்சகமும் இணைந்து, ‘பிரயாஸ் – PRAYAS’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டம் அயல்நாட்டில் படிக்க அல்லது வேலைசெய்ய விரும்பும் திறமையான இந்திய இளையோருக்கும் நிபுணர்களுக்கும் பாதுகாப்பான & ஒழுங்கான புலம்பெயர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

13. 2023ஆம் ஆண்டுக்கான, ‘தேசிய ஆற்றல் பாதுகாப்பு’ விருதை பெற்றுள்ள அமைப்பு எது?

அ. NTPC லிட்

ஆ. TATA பவர் சோலார்

இ. கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிட்

ஈ. ஹேவெல்ஸ் இந்தியா லிட்

  • கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிட் ஆனது 2023ஆம் ஆண்டுக்கான தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றது. அந்த நிறுவனத்தின் வணிகத்தலைவர் சச்சின் பாரதி விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாளின் (டிசம்பர்.14) ஒருபகுதியாக, 2023 – தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதுகளை எரிசக்தித் திறன் பணியகம் ஏற்பாடு செய்திருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. துபையுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம்: முதன்முறையாக ரூபாய் (₹) மூலம் பரிவர்த்தனை.

ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கு முதன்முறையாக ரூபாய் (₹) மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது. உலகின் மூன்றாவது பெரிய எரிபொருள் நுகர்வோரான இந்தியாவின் நாணயத்தை உலக அளவில் எடுத்துச்செல்ல இது உதவும்.

பல்லாண்டுகளாக கச்சா எண்ணெய் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச நாணயமான அமெரிக்க டாலர் ($) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்லைதாண்டிய ரூபாய் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 18 நாடுகளுடன் ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள 12க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியது.

2. J.N.1 கரோனா: புதிய உருமாற்றமும் புரிதல்களும்.

உருமாற்றம்…

‘SARS COVID வைரஸ்’ எனப்படும் கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக்கூடியது. அதில் ஆல்ஃபா வகை கரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. ஆனால், ஓமைக்ரானைப் பொருத்தவரை நூற்றுக்குகும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் தீநுண்மியின் வெளிப்புற புரதத்தில் (ஸ்பைக் புரோட்டீன்) நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஒமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரஸிலிருந்து உருமாற்றமடைந்துள்ளது இந்த J.N.1 நுண்மி.

பூஸ்டர் தடுப்பூசி அவசியமா?

கரோனா தடுப்பூசியானது, முதல் அலையின்போது பரவிய தொற்றுக்கு எதிராக நோயெஎதிர்ப்பாற்றலை உருவாக்க பயன்பட்டது. அதன்பின், நூற்றுக்கணக்கான உருமாற்றங்கள் நிகழ்ந்து மூன்று அலைகளாக கரோனா பரவியதால் அந்தத்தடுப்பூசி J.N.1 வகைக்கு பலனளிக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், ஏற்கெனவே 2 தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு J.N.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஜப்பான் விண்கலம்.

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஜப்பானால் அனுப்பப்பட்டுள்ள, ‘SLIM’ விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம், ‘நிலவின் ஸ்னைப்பர் (தொலைவிலிருந்து துல்லியமாக சுடுபவர்)’ என்று அழைக்கப்படுகிறது. இந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin